நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

பத்ரி சேஷாத்ரி


போன வாரம் இந்திய விமானப் படை சென்னைக் கடற்கரையில் போர்ச் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மறைந்த வழக்கறிஞர் மற்றும் வரித்துறை நிபுணர் நானி பால்கிவாலா நினைவாக மற்றுமொரு வழக்கறிஞர், முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி, கடற்கரைக்கு வெகு அருகில் இருந்த அரங்கம் ஒன்றில் ‘நீதித்துறையில் சீர்திருத்தம் ‘ பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

மத்தியத் தட்டு மக்கள் அரசியல் கட்சிகளின் மீதுள்ள நம்பிக்கையைக் காற்றில் பறக்க விட்டு அதிக நாட்கள் ஆகி விட்டது. இப்பொழுது அவர்கள் நம்பிக்கையெல்லாம் நீதிமன்றங்களின் மேல்தான். நீதிமன்றத்தின் ஒவ்வொரு தீர்ப்பினையும் கை கொட்டி ஆரவாரிக்கும் இவர்கள் ராம் ஜேத்மலானி சொல்வதை சற்றே செவி கூர்ந்து கேட்க வேண்டும்.

அவரது பல கருத்துக்களில் ஒன்றே ஒன்றை மட்டும்தான் நான் இங்கே விரிவு படுத்த எண்ணியுள்ளேன்.

* நீதிமன்றங்கள் அதிகமான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டன. தரம் வாய்ந்த நீதிபதிகள் இப்பொழுது இல்லை.

* நீதிமன்றங்கள் தேவையற்ற பிரசங்கங்களைச் செய்வதோடு மட்டுமில்லாமல், அரசுக்குத் தேவையில்லாத, அவசியமில்லாத அறிவுரைகளைத் தருகிறார்கள்.

கடைசியாக வெளுவந்துள்ள ஒரு சில நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் நீதிபதிகளின் ‘அறிவுரைகளைப் ‘ பற்றி சிறிது பார்ப்போம்.

1. ஏர் இந்தியாவில் பெண்கள் 50 வயதுக்கு மேல் விமானப் பணிப்பெண்களாக இருக்கக் கூடாது என்று நிர்வாகம் தீர்மானம் செய்தது. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பெண்கள் வழக்குத் தொடுத்து வென்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்து, ஏர் இந்தியா நிர்வாகத்துக்குச் சாதகமான தீர்ப்பைச் சொல்லியுள்ளது. உலகெங்கிலும் தனியார்கள் நடத்தும் விமானச் சேவையில் கூட இல்லாத பெண்களுக்கு எதிரான இந்த நிலைமை, இந்திய அரசாங்கம் நடத்தும் ஒரு விமான நிறுவனத்தில் நடக்கிறது. அதை நாட்டின் உச்ச நீதிமன்றம் மகிழ்வோடு கட்டிக் காக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அழகாயில்லையாம், அதனால் அவர்கள் விமானப் பணிப் பெண்களாக இருக்கக் கூடாதாம். ஆனால் தொந்தியும், தொப்பையும், வழுக்கையுமான கிழ ஆண்கள் 58 வயது வரை பறக்கும் விமானத்தில் பணியாளராக இருக்கலாமாம்.

ஏர் இந்தியா மனமுவந்து 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்களை தரையில் வேலைக்கு வைத்துக் கொள்ள சம்மதிக்கிறார்களாம். என்ன ? ஒரு சின்ன வித்தியாசம். கீழே கிடைக்கும் சம்பளம், மேலே பறப்பதில் கிடைப்பதைவிட நான்கில் ஒரு பங்குதான்.

2. தமிழக அரசு ஊழியர்கள் லட்சம் பேருக்கு மேல் மிக அவசரமாகக் கொண்டுவந்த சட்டம் மூலம் நீக்கப்படுகின்றனர். நீதிமன்றத்துக்கு ஓடுகின்றனர். கீழே உள்ள நீதிமன்றம் அரசைக் குறை கூற, வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் சென்று பின்னர் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்கின்றது. அங்கு அரசு ஊழியர்கள் கேட்பதெல்லாம் இந்த டெஸ்மா அவசரச்சட்டம் நியாயமானதா என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்பதே. உச்ச நீதிமன்றம் அந்தக் கேள்விக்கான பதிலைத் தரவில்லை. அதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் செய்வதற்கான எந்தவொரு உரிமையும் இல்லை என்று பிரசங்கம் செய்கிறது. அதன்பிறகு பெரிய மனசு வைத்து எப்படியாவது எல்லா ஊழியர்களையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அரசிடம் சமரசம் பேசுகின்றனர் நீதிபதிகள். பின்னர் அரசு ஒப்புக் கொள்ள, அவர்களைப் பாராட்டுகிறது நீதிமன்றம். வழக்கறிஞர் கே.எம்.விஜயன் இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை சுட்டி இதோ: http://www.thisaigal.com/sep03/uniessay-2.html

3. செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் விட்டு விட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இப்பொழுதே பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று அரசுக்கு அறிவுரை கூறுகிறார். உடனே ஆளும் கட்சி பாரதீய ஜனதா முதல் தமிழக முதல்வர் வரை அவரை ஆதரிக்கிறார்கள். இந்த அறிவுரை தேவையற்றது என்பதைத் தவிரவும், அவசரப்பட்டு பொதுச் சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தொல்லைகளைப் பற்றி சிறிது கூட யோசிக்காமல் சொல்லப்பட்டது என்றும் புரிய வருகிறது. ஏற்கனவே எறிந்து கொண்டிருக்கும் மதவாதத் தீயில் ஒரு தலைமை நீதிபதியா எண்ணெய் ஊற்ற வேண்டும் ? இவரை யாராவது கேட்டார்களா ? தனது சொந்தக் கருத்து என்றால் அதைத் தனியாகத் தெரிவிக்கக் கூடாதா ? அதுவும் அன்றி பாராளுமன்றத்திற்கு எப்பொழுது தேவை என்று தோன்றுகிறதோ அப்பொழுது அவர்கள் தீர்மானித்து, எப்படிச் செய்வது என்று முடிவு எடுத்து செய்து விட்டுப் போகிறார்கள் ?

முன்னாள் நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ண ஐயர் பொதுச் சிவில் சட்டம் பற்றி எழுதியுள்ள கட்டுரை சுட்டி இதோ. http://www.hindu.com/2003/09/06/stories/2003090600831000.htm. ராம் ஜேத்மலானியும் இந்த பொதுச் சிவில் சட்ட முன்மொழிவைக் கடுமையாக எதிர்த்தார்.

4. இப்பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் ‘கிடா வெட்டல் தடை ‘ எதிர்ப்பான பொது நல வழக்கு. வழக்கின் நடுவே உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஏன் மக்கள் ‘சைவ முறையில் ‘ வழிபாடு நடத்தக் கூடாது என்று ஒரு கேள்வி கேட்கிறார். இது தேவையா ? ஒரு இந்துவிடம் போய் நீ நாளை முதல் ஏன் உருவ வழிபாடு செய்வதை நிறுத்தி விட்டு முஸ்லிம்கள் மாதிரி அருவத்தை வழிபடக் கூடாது என்று கேட்க இவருக்குத் தைரியம் வருமா ? காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழிபாட்டு முறையை மாற்றியமைக்குமாறு சொல்லும் போது எவ்வளவு கவனத்தோடு கேள்விகள் கேட்க வேண்டும் ?

அடுத்து ஓர் அரசு இனிமேல் அனைவரும் மாமிச உணவு சாப்பிடக் கூடாது என்று (ஒரு பேச்சுக்கு) ஆணை பிறப்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ‘ஏன் நீங்கள் மரக்கறி உணவை இனிமேல் சாப்பிடக் கூடாது ? ‘ என்று கேள்வி கேட்பாரா ?

இந்தக் குளறுபடிகள் ஏன் நடக்கிறது ?

பெண்களுக்கு எதிரான தீர்ப்பு, பெரும்பாண்மை அரசு ஊழியர்களுக்கு எதிரான தீர்ப்பு, சிறுபான்மை மதப்பிரிவினர் பற்றி, பழங்குடியினர் மற்றும் வேறு பல வழக்கங்களைப் பின்பற்றுவர்களுக்கு எதிரான தீர்ப்பு, கருத்து என்று ஏன் மிக உயர்ந்த நீதிமன்றங்களிலிருந்து வந்து கொண்டிருக்கிறது ?

உயர், உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளில் எத்தனை பேர் பெண்கள் ? எத்தனை பேர் தலித்துகள் ? எத்தனை பேர் கிறித்துவ, இஸ்லாம் மதத்தினர் ? எத்தனை பேர் சீக்கியர்கள் ? எத்தனை பேர் மலைவாழ்ப் பழங்குடியினர் ? எத்தனை பேர் அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா ஆகிய இடங்களிலிருந்து வந்தவர்கள் ?

இப்பொழுதிருக்கும் நீதிபதிகளுக்கு மலைவாழ் பழங்குடியினர் எவ்வாறு திருமணம் செய்து கொள்கிறார்கள், எவ்வாறு வழிபாடு செய்கிறார்கள் என்றெல்லாம் தெரியுமா ?

இந்தப் பெரும்பான்மை வாதத்தை எப்படி ஒழிப்பது ? இதற்கும் பதில் ராம் ஜேத்மலானியிடமிருந்து வருகிறது.

‘நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க ‘தேசிய நீதிக் கமிஷன் ‘ ஒன்று தேவை. இந்தக் கமிஷனில் உறுப்பினர்களாக ஆளும் கட்சி, முக்கிய எதிர்க் கட்சி நியமிக்கும் ஆட்களோடு, பார் கவுன்சில், நீதித்துறை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும். அத்துடன் நீதிபதிகளை நியமிக்கும் போது தகுதியோடு சமூகத்தில் உள்ள எல்லாப் பிரிவினருக்கும் தகுந்த இடங்கள் கிடைக்க வேண்டும், முக்கியமாகப் பெண்கள், தலித்துகள், மதச் சிறுபான்மையினர். ‘

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% சதவிகித இடம் கிடைக்கப் பாடுபட்டால் மட்டும் போதாது, நீதிமன்றங்களில் 50% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தலித்துகளுக்கும், மதச் சிறுபான்மையினருக்கும் நிறைய இடங்கள் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதாவது முட்டாள்தனமான தீர்ப்புகளும், தேவையற்ற கருத்துகளும் நீதிமன்றங்களிலிருந்து வருவது குறையும்.

***

bseshadri@yahoo.co.uk

Series Navigation