நியூயார்க் நகரில் இந்திய இலக்கிய மாநாடு

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

ஆசாரகீனன்


செப்டம்பர் 25, 26, 27 தேதிகளில் நியூயார்க் நகரில் இந்திய இலக்கியம் பற்றிய மாநாடு நடக்க இருக்கிறது. ‘பாரம்பரியமும், நவீனத்துவமும் அதற்கு அப்பாலும் ‘ என்ற கருத்தோட்டத்தில் நடக்க இருக்கும் இந்த மாநாட்டை இந்தியப் பிரதமரும் கவிஞருமான( ?) வாஜ்பாய் தொடங்கி வைக்கிறார். வெளி விவகாரத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சிறப்பு விருந்தினர். உருது, காஷ்மீரி உட்பட பல இந்திய மொழிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டை சாஹித்ய அக்காதெமியின் உதவியுடன் அமெரிக்க பாரதிய வித்யா பவன் ஏற்பாடு செய்துள்ளது. மலையாளத்தின் சார்பில் ஜாம்பவான்களான எம்.டி. வாசுதேவன் நாயரும், சாகித்ய அக்காதெமியின் செயலாளர் சச்சிதானந்தமும் கலந்து கொள்கிறார்கள். தமிழின் சார்பில் கலந்து கொள்பவர்களுள் ஒருவர் முனைவர் ஆர். பாலசந்திரன். மற்றொருவர் திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து. முதல் நாள் நடக்க இருக்கும் கவியரங்கில் கவிதை படிக்க இருக்கிறார் வைரமுத்து.

திரு. கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது தமிழக அரசு சார்பில் நடந்த பொங்கல் விழா கவியரங்கத்தில் ‘உன் பேனா குனிகிறதென்றால் எம் இனம் நிமிர்கிறது என்று பொருள் ‘ என்று கவிதை படித்தவர் வைரமுத்து. வாஜ்பாயின் இந்திக் கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டபோது தமிழர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக தில்லிக்குச் சென்று பிரதமரை தமிழுக்கு வரவேற்று பேருவகை அடைந்தார். நியூயார்க் கவியரங்கத்தில் என்ன சொல்லப்போகிறார் என்று பார்க்கவேண்டும்.

மாநாட்டின் பிற அமர்வுகள் சுவாரசியமாகவும், தீவிரத் தன்மை கொண்டதாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது பற்றிய விவரங்களுக்கு:

http://www.bhavanus.com/literature.htm

http://www.bhavanus.com/lit_program.htm

இந்த மாநாட்டின் போது சாஹித்ய அக்காதெமி மற்றும் தேசிய புத்தக நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஒரு புத்தகக் கண்காட்சியும் நடக்க இருக்கிறது. தரமான இந்திய மொழிப் புத்தகங்கள் விற்பனைக்கு வருகின்றன. நியூயார்க் நகரிலும், பக்கத்து ஊர்களிலும் வசிக்கும் தமிழ், இந்திய இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வு இது.

– ஆசாரகீனன்

aacharakeen@yahoo.com

Series Navigation

author

ஆசாரகீனன்

ஆசாரகீனன்

Similar Posts