நினைவுகளின் தடத்தில் – 15

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

வெங்கட் சாமிநாதன்



கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கியதெல்லாம் நினைவிலிருந்து அழிந்து விட்டது. பின் வருடங்களில் நான் அதே ரயில் வண்டியில் ஓரிருமுறை பயணம் செய்திருப்பதால் அது மாலை நாலரை மணி சுமாருக்கு கும்பகோணம் வந்து சேர்ந்திருக்கும். அங்கிருந்து உடையாளுருக்குப் போவதென்பது அந்நாட்களில் ஒரு சிரம சாத்தியமான காரியம். கும்பகோணத்திலிருந்து அரசிலாற்றைத் தாண்டி வயல் வரப்புகளின் வழியே நடந்தால் இன்னம் இரண்டு ஆறுகளை, முடிகொண்டான், குடமுருட்டி என்னும் இரண்டு ஆறுகளைத் தாண்டி சுமார் ஐந்தரை மைல் தூரத்தில் இருந்தது உடையாளூர். குடும்பத்தோடு செல்கிறவர்கள், ஆறு மைல் தூரத்தில் இருக்கும் வலங்கிமான் என்னும் ஒரு சிற்றூருக்குப் போகவேண்டும். அது ரைட் ஆனரபிள் என்று சொல்லப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்த்ரிகளின் பிறந்த ஊர். அவர் பெயரின் வி. என்ற எழுத்து வலங்கிமான் என்ற ஊரைத்தான் குறிக்கும். அங்கு போக இந்நாட்களில் பஸ் வசதி உண்டு. அப்போது நான் பேசிக்கொண்டிருக்கும் 1940-களில் பஸ் வசதி இருந்ததா என்பது நினைவில் இல்லை. நாங்கள் கும்பகோணத்திலிருந்து வலங்கிமானுக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்தோமா என்பதும் நினைவில் இன்று பதிந்திருக்கவில்லை. எனக்கு அடுத்து மிகத் தெளிவாக நினைவில் ஓடும் காட்சி, வலங்கிமான் ஊரின் பிரதான சாலையின் மத்தியில் மாட்டு குதிரை வண்டிகள் நிறுத்தியிருக்கும் இடத்தில் என் அப்பா வண்டிக்காரர் சிலருடன் பெரிதாக சத்தம் போட்டுக்கொண்டு இருந்தது தான். அப்பா மிகவும் கோபக்காரர், சுலபத்தில் அவர் பேரம் பேசாது ஒரு காசு கொடுத்துவிட மாட்டார் என்பதை நான் பின்னாட்களில் தெரிந்து கொள்வதற்கான முதல் அனுபவக் காட்சி, அன்று வலங்கிமான் மாட்டு வண்டிக்காரர்களோடு அவர் சண்டையே போடுவதாகத் தோற்றம் தந்த அவரது கடுமையான பேரத்திற்கான சத்தம் தான்.

வலங்கிமான் குதிரை என்பது அந்தப் பக்கத்தில் எல்லோர் வாயும் பேசும் கேலிப் பேச்சு. வலங்கிமான குதிரை நோஞ்சலாகத்தான் இருக்கும். சாதாரணமாக நாம் காணும் குதிரையின் கம்பீரமான தலை நிமிர்ந்த தோற்றத்தில் நான் என்றும் பின்னாட்களில் கூட கண்டதில்லை. வண்டியில் பூட்டப்பட்டு ஓடும் குதிரை கூட நிமிர்ந்த தோற்றத்தில் இராது. கழுதையைப் போல குனிந்த தலையுடன் தான் அது ஓடும். ஓடுமா வண்டியை இழுக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம். “வலங்கிமான் குதிரையாட்டமா, கிழக்கே போகணும்னா மேக்கே பாத்துன்னாடா வண்டியை ஓட்டணும்?” என்ற பேச்சை நான் பின் நாட்களில், உடையாளுரில் இரண்டு வருடங்கள் (ஜூன், 1948 – ஆகஸ்ட், 1949) தங்கி கும்பகோணத்தில் படித்த காலத்தில், எல்லோரும் கேலி பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் அன்று நான் அங்கு அந்த புகழ்பெற்ற வலங்கிமான் குதிரை வண்டி எதனையும் பார்த்த தாக நினைவில் இல்லை. வலங்கிமானிலிருந்து உடையாளுருக்கு வண்டி அமர்த்திப் போகும் அவசியமும் எனக்கு இருந்ததில்லை. எல்லாம் நடை தான். கும்பகோணம் ரயில் நிலயத்திலிருந்து ஊடையாளுருக்கும், உடையாளூரிலிருந்து கும்பகோணம் ரயில் நிலயத்திற்கும் வயல் வரப்புகள் வழியே நடந்து சென்று தான் பழக்கம். அது தான் சுலபமும், சீக்கிரம் நிறைவேறும் ஒன்றும், செலவில்லாது நடந்துவிடும் காரியமும் ஆகும். ஒரு முறை என் பாட்டியை கிராமத்திலிருந்து காலை மூன்று மணிக்கு, வரப்புகளின் வழியே நடத்தி அழைத்துச் சென்றேன். அது ஒரு கதை. பின்னால் சொல்வேன். மணி என்ன என்று பார்ப்பதற்கு அன்று கிராமத்தில் யார் வீட்டிலும் கடிகாரம் இல்லை. “வெளுத்துண்டு வரமாதிரி இருக்குடா, நீ பாட்டியை அழைச்சிண்டு கிளம்பு” என்று அப்பா சொல்லி விட்டார். பாட்டியை நிதானமாக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு நானும் பாட்டியும் போய்ச் சேர்ந்த போது மணி காலை ஐந்து. ஒன்றே கால் மணி நேரம் முன்னதாக. பிறகு அந்த இருட்டில் பாட்டியை அழைத்துக்கொண்டு எப்படி போய்ச் சேர்ந்தேன் என்பதை நினைத்து பயந்து போவேன், அதை நினைத்துப் பார்த்த போதெல்லாம்.

இரண்டு மாட்டு வண்டிகளில் தான் அன்று நாங்கள் ஊருக்குப் பயணமானோம். வண்டி கிளம்பும் போது நன்றாக் இருட்டி விட்டது. வலங்கிமானிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கொஞ்ச தூரம் வந்து பின் தேனாம் படுகை என்று வழிகாட்டி மரம் காட்டும் கப்பி ரோடில் மூன்று மைல் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செல்ல வேண்டும். அது கப்பி ரோடும் இல்லை. வண்டிச் சக்கரம் பதிந்து ஆழமான சுவடிட்ட மண் ரோடில் தான் வண்டி போகும்.

இருட்டி விட்டது. இரண்டு மாட்டு வண்டிகளில் நாங்கள். வண்டிபாதையும் இருட்டில் தான் மூழ்கியிருந்தது. இரண்டு வண்டிகளின் அடியில் மண்ணெணெய் ஹரிகேன் விளக்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. அந்த ஹரிகேன் விளக்கு வெளிச்சத்தில் தான் வண்டித் தடம் தெரிந்தது. அது தான் வண்டிக்காரனுக்கு வழி காட்டியது. மாடுகளை ஒட்டும் சத்தம். ஆங்காங்கே மின்மினிப் பூச்சிகள் தெரிந்தது. இரவு நேரத்தில் மரம் சூழ்ந்த இடங்களில், வயல் வெளிகளில் கேட்கும் இரவுப் பூச்சிகளின் சப்தம். தவளைகளின் ‘க்ரோக், க்ரோக்’ ‘கொஞ்சம் முன்னாலேயே கிளம்பியிருக்கலாம். இருட்டிடுத்து’ என்று மாமா சொல்ல, அப்பா, ‘ இவன்களோட மன்னாடறதிலேயேன்னா பாதி பொழுது போயிடறது. இவங்களை விட்டா வேறே கதியெல்லேன்னு இவங்களுக்கு நெனப்பு” என்று அலுத்துக் கொள்ள, வண்டிக்காரன், “சாமி, இப்படியே பேசினா எப்படிங்க சாமி நாங்க பொழைக்கறது, கும்பகோணமா, நீடாமங்கலமா நீங்க போறீங்க. திரும்பச்சே சவாரி கிடைக்கும்கிறதுக்கு. உடையாளுருக்கு அதுவும் இந்த இருட்டிலே கூப்பிடறீங்க. குழந்தை குட்டிகளோட குடும்பமா போறிங்க. நீங்களே சொல்லுங்க. வேறே யாராச்சும் வந்தாங்களா? உடையாளுருக்கு போனா, அங்கே என்ன சவாரி கிடைக்கும் எங்களுக்கு. வெத்து வண்டியாத்தானே நாங்க திரும்பணும். நாங்க திரும்பவேண்டாமா? இதெல்லாம் நெனைச்சுப் பாக்க மாட்டறிங்களே. இந்த நேரத்திலே வரதே பெரிசுங்க. சும்மா திரும்பறதுக்கு ரெட்டைச் சத்தம் கொடுக்கணும் நீங்க. என்னமோ மனம் போன போக்கிலே பேசீட் டுப் போறீங்க. உங்களே யாரு கேக்கறத்துக்கு இருக்காங்க?” என்று இரண்டு பேரும் மாறி மாறி பேசிக்கொண்டு வந்தார்கள். அப்பாவால், ‘சரி, சரி, நீ பேசீட்டே இன்னம் லேட் பண்ணாதே என்று தான் சொல்ல முடிந்தது.

அந்த இருட்டில் வண்டிச்சக்கரத்தின் உருளல், இரவுப் பூச்சிகள் எழுப்பும் சத்தம், வண்டியினுள் பேச்சுக் குரல் எல்லாம் ஏதோ ஒரு புதிய உலகத்திற்கு, பழக்கப்படாத, உலகத்தில் பயணம் செய்து கொண்டிருப்பதான உணர்வு இப்போது அதை நினைக்கும் போது தோன்றுகிறது. ஒரு முறை, பாபுராஜபுரத்திலிருந்து, இல்லை, உமையாள் புரத்திலிருந்தா? – நினைவில் இல்லை சரியாக, காலையில் நான்கு மணிக்கு இப்படித்தான் மாட்டு வண்டியில் கிளமபி கும்பகோணம் வந்தோம். வழியெல்லாம் இருட்டுத் தான். அப்போது மின் விளக்குகள் சாலையில் இருந்ததில்லை. எங்காவது வழியில் ஒரு பிள்ளையார் கோவிலில் எண்ணைய் விளக்கொன்று மங்கலாகத் தெரியலாம். வண்டியின் அடியில் ஹரிகேன் விளக்கு ஒன்று அசைந்தாடிக்கொண்டு வழி காட்டிக்கொண்டிருந்தது. அது என்ன வழிகாட்டிக்கொண்டிருந்திருக்கும் என்பதை என்னால் இப்போது கற்பனை கூட செய்து கொள்ள முடியவில்லை. வீட்டை விட்டு வண்டி கிளம்பியதிலிருந்து, அது கொஞ்சம் நீளமான இரட்டை மாட்டு வண்டி, குடும்பம் பூராவுமே அதில் நெருங்கி அடைத்திருந்தோம், வண்டி வீட்டை விட்டு கிளம்பியதிலிருந்து, காலை நான்கு மணி என்பதையும் ஞாபகப் படுத்திக்கொள்ளவேண்டும், நாங்கள் தங்கியிருந்த வீட்டின் வாசலிலேயே காணப்பட்ட நாயொன்று, அது தெரு நாய் தான், வீட்டு வளர்ப்பு நாயல்ல, அக்கிரகாரங்களில் யாரும் நாய் வளர்க்கமாட்டார்கள். அது எப்போதும் அந்தத் தெருவில் ஏதோ ஒரு வீட்டின் முன் படுத்துக் கிடக்கும், அதன் தெரு அலைச்சல் முடிந்த பின். எந்த வீட்டிலிருந்தாவது யாரவது மிச்சம் மிகுதியை வந்து வெளியே போட்டால் ஒடி வந்து தின்னும். அந்த நாய் தான் விடியும் முன் நாலு மணிக்குக் கிளம்பிய வண்டியின் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பாவமாக இருந்தது. அதற்குக் கூட விஸ்வாசமும், பிரியாமை உணர்வும் இவ்வளவு தூரம் வருத்துவதாக இருக்குமென்று நாங்கள் நினைத்ததில்லை. ” அது கொஞ்ச தூரம் வந்துட்டுப் போயிடுமுங்க. இல்லைன்னா, நான் திரும்பிப் போகும்போது என்னோட திரும்பிடும். நீங்க கவலைப் படாதீங்க,” என்று வண்டிக்காரன் சொன்னது நினைவிலிருக்கிறது.

தூரத்தில் மஞ்சள் ஒளி ஒன்று சின்னதாக மின்னியது. “ஊரு வந்தாச்சு. அதோ மஞ்சளா தெரியறதே, அது தான் தெரு விளக்கு. தெருக்கோடி பிள்ளையார் கோயிலை ஒட்டி இருக்கும். இந்த இருட்டிலே அது தான் அடையாளம்” என்றார் அப்பா. வண்டி ஊருக்குக் கிட்ட நெருங்கியதும் விளக்குக் கம்பம் தெளிவாகத் தெரிந்தது. ஊர் எல்லையில் இருந்த பிள்ளையார் கோயிலும் விளக்குக் கம்பமும் மேடிட்ட இடத்தில் இருந்தன. அந்த மேட்டில் வண்டி ஏற கொஞசம் கஷ்டப்படத் தான் செய்தது. அந்த ஒரு விளக்கைத் தவிர ஊரில் வேறு தெரு விளக்குகள் இல்லை. ஒவ்வொரு வீட்டின் பிறையிலும் வைக்கப்பட்டிருந்த எண்ணைய் விளக்கை வைத்துத் தான் வீடுகளை அடையாளம் காண முடிந்தது. வீடுகளின் முன் ஒரு சிலர் நின்று கொண்டிருந்தவர்கள், ஒவ்வொருவராக விசாரிக்கத் தொடங்கினார்கள். “பிள்ளையாண்டானை அழைச்சிண்டு வந்தாச்சா? ஏன் இத்தனை நாழி?’ என்று ஒவ்வொரு வீட்டின் வாசலிலிருந்தும் ஒவ்வொரு குரலில்.

வெங்கட் சாமிநாதன்/1.1.08


vswaminathan.venkat@gmail.com

Series Navigation