நாராயண குரு எனும் இயக்கம்-2

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

ஜெயமோகன்


நடராஜகுரு

====

நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது.

நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டுசென்றது.

ஒரு சமூகசீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல ஆரம்பித்த காலகட்டத்தில் நடராஜ குரு செயல்பட்டார். ஏராளமான கல்வி , சமூக நிறுவனங்களைக் கொண்ட பெரும் அமைப்பாக அது ஆனபோது நிர்வாகசீர்கேடுகள் உருவாயின. அதற்குள் கேரள சமூகத்தில் பணமும் செல்வாக்கும் மிக்க சமூகமாக கிவிட்ட ஈழவர்கள் நாராயணகுருவின் அமைப்பை அரசியல் இயக்கமாகக்கி அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முய்னறனர். ஈழவ சமூகத்தில் பெரும் செல்வந்தர்கள் பலர்உருவாகி வந்தபோது மாற்றுச் சமூகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கும் முதலாளித்துவ அணுகுமுறையும் சிலரிடம் உருவாயிற்று. மூன்றாவதாக குறிப்பிடவேண்டியது, சமூகப்படி நிலைகளில் மிக வேகமாக ஏறிய ஈழவர்களில் ஒருச்சாரார் உயர்சாதிமனநிலைகளை அடைந்து அவற்றை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர் என்பது .

நாராயணகுரு மெல்ல ஈழவ சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட ஒரு சமூகத்தலைவராக பொதுவாக அறியப்படலானார். ஈழவ சமூகமும் அப்படி அவரை அடையாளப்படுத்தி சொந்தம் கொண்டாட ஆர்வம் காட்டியது. நாராயணகுருவின் தத்துவ தரிசனங்கள் பொதுவாக மறக்கப்பட்டன. அவை நுட்பமான மொழியில் தத்துவநூல்களாக அமைந்திருந்தன. ஆகவே அனைத்து மக்களுக்கும் சென்று சேரவில்லை.

இந்திய தத்துவ விவாதத்தளத்தில் அவற்றை முன்வைத்து பேச எஸ் என் டி பி ஆர்வம் காட்டவும் இல்லை. இந்நிலையில்தான் நடராஜ குரு நாராயணகுருவின் தத்துவார்த்த தளத்தை ஆராயவும் இந்திய அளவிலும் உலக அளவிலும் எடுத்துச்செல்லவும் நாராயணகுருகுலம் என்ற அமைப்பை உருவாக்கி தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார். அவரது உழைப்பின் விளைவாகவே நாராயணகுரு சிந்தனைத்தளத்தில் நாம் இன்று காணும் முக்கியத்துவத்தை அடைந்தார்.

எஸ் என் டி பி அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்புவின் சிறிய மகன் டாக்டர் நடராஜன் .பிற்காலத்தில் அவர் நடராஜ குரு எனஅறியப்படலானார். 1895ல் பிறந்தார். அவரை தன் பணிக்கு அளிக்கும்படி நாராயண குருவே கோரியதாக கூறப்படுகிறது. செல்வந்த குடும்பத்தில் பிறந்த நடராஜ குரு நிலவியலில் பட்டமேற்படிப்பினை முடித்தவர் . மேற்கத்திய தத்துவம் கற்க ஃப்ரான்ஸ் போகும்படி அவரை நாராயணகுரு கேட்டுக் கொண்டார். சார்போன் பல்கலையில் உலகப்புகழ்பெற்ற தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக அவர் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார் .கல்வியியல் குறித்த அவரது ஆய்வு யுனெஸ்கோ அமைப்பினால் உலக கல்வி முன்வரைவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1930 ல் ஜெனிவா தேசிய கல்லூரியில் உயர்பெளதிக சிரியராக ஐந்து வருடம் பணியாற்றினார்.

[ International Fellowship School in Geneva, Switzerland]

ஊர் திரும்பிய குரு நாராயணகுருவின் சீடராக இருந்து கீழைத்தத்துவத்தை கற்றார்.நாராயணகுருவின் தத்துவ நூல்கள் பலவும் நடராஜ குருவுக்கு கற்பிக்கும்பொருட்டு கூறப்பட்டு நடராஜ குருவால் எழுதியெடுக்கப்பட்டவை என்றுகூறப்படுகிறது . மூன்று வருடம் சென்னையில் அத்துவித அசிரமம் எனும் அமைப்பின் கீழ் தலித்துக்கள் மத்தியில் பணியாற்றினார். பின்பு பிச்சையேற்கும் வாழ்க்கை மேற்கொண்டு பாரதம் முழுக்க ண்டியாக றுவருடம் அலைந்து திரிந்தார் . நாராயணகுரு ஸ்தாபித்த வற்கலை உயர்நிலைப்பள்ளியில் தலைமை சிரியராக பணியாற்றினார் . எஸ் என் டி பி அமைப்பு ஒரு ஈழவ சாதி அமைப்பாக மாறுவதையும் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதையும் எதிர்த்து கடுமையாக குரல்கொடுத்து அவ்வமைப்பை விட்டு முழுமையாக வெளியேறினார் . அதன் பிறகு

பலவருடங்கள் பாரதம்முழுக்க அலைந்து திரிந்தார் .அமைப்புகளில் நம்பிக்கை இருக்கவில்லை. தனியாக வாழ்வதற்காக 1023ல் ஊட்டி ஃபெர்ன் ஹில் பகுதியில் ஒரு தேயிலை தொழிற்சாலையிருந்த பகுதியை தானமாக பெற்று அதில் தன்கையாலேயே மண்ணாலும் தகரத்தாலும் கட்டப்பட்ட குடிசையில் நாராயணகுருகுலத்தைத் துவங்கினார் . நாராயணகுருவின் மரணம் வரை அங்கு தன்னந்தனிமையிலேயே படித்தும் தியானம் செய்தும் வாழ்ந்தார் . அவர் வாழ்ந்தபகுதி பிறருக்கு தெரிந்திருக்கவில்லை .

1928ல் நாராயணகுரு சமாதியான போது அவரது பிராதனசீடர் குமாரனாசான் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார், சகோதரன் அய்யப்பன் , டி கெ மாதவன் போன்ற பலர் எஸ் என் டி பி அமைப்பை விட்டு விலகிவிட்டிருந்தார்கள் .அவ்வமைப்பு அன்று ஈழவ சாதியினரான ஓடு, கயிறு தொழில்முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு சாதி அமைப்பாக மாற்றப்பட்டது. புலையர்கள் வெளியேற்றப்பட்டனர். சபா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது . ஆகவே நாராயணகுருவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு தேவை என உணர்ந்த நடராஜ குரு தீவிரமற்ற நடைமுறை விதிகளுடன் கூடிய நாராயணகுருகுலம் எனும் அமைப்பை நிறுவினார் .அதன் தலைமையகமும் வற்கலாவில்தான் அமைந்திருந்தது .சார்போனில் நடராஜ குருவின் சக மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் அவரது முக்கிய மாணவரனதும் நடவடிக்கைகள் விரிவடைந்தன. நடராஜ குரு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார் .நடராஜ குருவே நாராயணகுருவின் செய்தியை உலகம் முழுக்கக் கொண்டு சென்றவர்.

நடராஜ குரு ஆங்கிலத்திலும் குறைவாக ஃபிரெஞ்சிலும் மட்டும்தான் எழுதினார். அவருக்கு மலையாளம் ஆழமாகத் தெரிந்திருக்கவில்லை. The world of Guru ,One Hundred Verses of the

Self Instruction , Autobiography of an absolutist , Wisdom , Man Woman Dialectics முதலிய இருபது நூல்கள் அவரால் எழுதப்பட்டுள்ளன. நாராயணகுரு முன்வைத்த தூய வேதாந்தத்தை மேற்கத்திய தத்துவ மொழியில் விளக்கியவர் நடராஜகுரு. நடராஜ குருவின் பங்களிப்பை இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று நாராயணகுருவின் சிந்தனைகளை நவீன மேலைத்தத்துவ தர்க்கமுறைகளைப் பயன்படுத்தி விளக்கியதும் நாராயணகுருவின் நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும். இரண்டு நாராயணகுரு முன்வைத்த அத்துவித நோக்கை தூய முதல்முழுமைவாதமாக [Absolutism] வளர்த்தெடுத்தமை. இதற்காக நடராஜ குரு ஐரோப்பா முழுக்க பலமுறை பயணம் செய்தார். பற்பலநாடுகளில் நாராயணகுருகுலத்தின் கிளைகளை அமைத்தார்.அவரது மாணவர்களில் பிற்பாடுஇந்திய சமூக ஆன்மீக வாழ்வில் மிக முக்கியமானவர்களாக கருதப்பட்ட பலர் உள்ளனர்.1973 ல் மரணமடைந்தார்.அவரது சமாதி வற்கலாவில் உள்ளது .

நடராஜ குருவின் பங்களிப்பை விரிவான இந்திய தத்துவ விவாதப்புலத்தில் வைத்தே புரிந்துகொள்ளவேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து மெய்ஞான மரபானது பற்பல அறிஞர்களால் மீட்டெடுக்கப்பட்டதன் மூலம் இந்து மறுமலர்ச்சி ஒன்று உருவானது என நாம் அறிவோம். ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், ராமகிருஷ்ண மடம், பிரம்ம ஞான சபை, அரவிந்த சிரமம் போன்றவை இதன் விளைவாக உருவான அமைப்புகள். இவை எல்லாமே மதசீர்திருத்த, சமூக சீர்திருத்த நோக்கம் கொண்ட அமைப்புகள். இவற்றின் விளைவாகவே மெல்ல இந்தியதேசிய மறுமலர்ச்சி உருவாயிற்று.

இந்தியா முழுக்கப் பரவிக்கிடந்த விரிவான, உள்சிக்கல்கள் மிகுந்த ஞானமரபில் இருந்துமுக்கியமான சில மையக் கூறுகளை அடையாளம்கண்டு மீட்டு, அவற்றை அடிப்படை ஓட்டமாக வைத்துக்கொண்டு , பிறவற்றை அம்மையத்தில் தொடுத்து இந்துமதத்தை மேலைமதங்களைப்போன்ற ஓரு நவீன அமைப்பாக ஆக்கிவிடுவதற்கான யத்தனம் இவற்றில் பொதுவாக காணப்படுகிறது. இதற்கான அடிப்படைக் காரணம் அன்றைய இந்திய சமூகத்தில் இருந்த ஒற்றுமையின்மையே. பொதுவான பண்பாட்டு அமைப்புகளின் அடிப்படையில் வலிமையான ஒரு சமூகமாக இந்தியாவை க்கும் நோக்கம் இவற்றுக்கு இருந்தது.

ஆகவே இவ்வியக்கங்கள் பொதுவாக இந்து ஞான மரபின் இரு மையங்களை முக்கியப்படுத்தின.ஆரியசமாஜம் , அரவிந்த சிரமம் போன்றவை வேதஞானத்தை அடிப்படையாகக் கொண்டன. பிரம்மசமாஜம், ராமகிருஷ்ண மடம் போன்றவை வேதாந்த மரபை அடிப்படையாகக் கொண்டன. இம்மையங்களில் வந்து இணையக்கூடியவையாக பிற இந்து ஞானக்கூறுகளை அவை உருவகம் செய்தன. சிறந்த உதாரணம் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது இந்து தத்துவ ஞானம் [7] என்ற உலகப்புகழ்பெற்ற நூல் இந்து ஞானமரபை ன்மீக மையம் கொண்டதாக உருவகித்து பிற தரிசனங்களையெல்லாம் அதில் கொண்டு சென்றுசேர்க்கிறது. டாக்டர் ராதாகிருஷ்ணனில் மையம்கொண்ட இப்போகே இந்திய சிந்தனை அரங்கில் பொதுவாக இன்றுவரை மேலோங்கியுள்ளது. ‘நம் சிந்தனைமரபு ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது ‘ என்ற வரியை ஏறத்தாழ எல்லா ஆசிரியர்களிடமும் சாதாரணமாகக் காண முடியும்.

இத்தகைய ஒற்றைப்படை நோக்கை நடராஜ குரு ஏற்கவில்லை. சிந்தனையின் பலதள முரணியக்கம்

குறித்து அவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது. பல்வேறு சிந்தனைப்போக்குகள் மோதி முயங்கி

முன்செல்லும் ஒரு பேரொழுக்காக இந்திய ஞான மரபை அவர் உருவகித்தார். இக்காரணத்தால் அவர் சமகாலத்தைய இந்துஞானமரபுச் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்களிடம் மோத நேர்ந்தது. நடராஜ க்ரு இந்திய சிந்தனைமரபை தத்துவ விவாதப் பரப்பாகக் காண முயல்கிறார். மீபொருண்மை[Metaphysics ] மரபை அத்தத்துவத்தின் ஒரு வெளிப்பாடாகக் கொள்கிறார். இந்துஞான மரபை ன்மீகமான உண்மைகள் அடங்கிய பாரம்பரியச் செல்வமாக காணும் நோக்கையும் மத மீட்பு நோக்கையும் அவர் நிராகரிக்கிறார்.

நடராஜ குருவின் மாணவரான நித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் வரும் ஒரு நிகழ்ச்சி உதாரணமாகச் சுட்டத்தக்கது. இதை எனக்களித்த பேட்டியிலும் நித்யா சொல்கிறார். [8 ]கொல்லம் கல்லூரியில் தத்துவ சிரியராக இருந்த நித்ய சைதன்ய யதி அக்கல்லூரிக்கு வருகைதந்த நடராஜகுருவுடன் காரில் ஏறும்போது அக்குளில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பகவத்கீதி உரைநூலை

வைத்திருக்கிறார். அதை வாங்கி தலைப்பைப் பார்த்த நடராஜகுரு நூலை காரிலிருந்து தூக்கி வீசிவிட்டார். காரை நிறுத்தச்சொன்ன நித்யா இறங்கி ஓடி நூலை எடுத்துக் கொண்டு நடராஜ குருவிடம் சண்டை போடுகிறார். நடராஜ குரு அதந் முதல்வரியைப் படிக்கச் சொல்கிறார். அதில் பகவத் கீதை இந்துக்களின் முக்கியமான மதநூல் என்று சொல்லப்பட்டுள்ளது. ‘ ‘ முத்தத்துவம் [பிரஸ்தானத்ரயம் என்றால் என்னென்ன ? ‘ என்று நடராஜகுரு கேட்க ‘ உபநிடதங்கள், பகவத்கீதை,

பிரம்மசூத்திரம் ‘ என்று நித்யா பதில் சொல்கிறார்.

‘ ‘நீயே சொன்னாய் இவை தத்துவ நூல்கள் என . பல ஆயிரம் வருடங்களாக அவை தத்துவ நூல்களாகவே பயிலப்பட்டன. எப்போது யார் அவற்றை மதநூல்களாக க்கினார்கள் ? எந்த தைரியத்தில் இவர் இப்படி எழுதுகிறார் ? தத்துவநூல் ஏற்றும் மறுத்தும் விளக்கியும் விவாதிக்கப்படவேண்டியது.

ஆராயப்படவேண்டியது. மதநூல் நம்பிக்கையின் அடிப்படையில் நிலைநிற்பது, ஆராய்ச்சிக்கு உரியதல்ல. வேதங்கள் மதநூல்கள் . பகவத் கீதையை மதநூலாக்குவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட விஷயம்

கட்டியெழுப்பபடுகிறது. அது ஆபத்தனாது ‘ ‘ என்கிறார் நடராஜ குரு. ‘ ‘ எனக்கு நூல்களை மதிக்கத்

தெரியாமல் இல்லை. ஆனால் உள்நோக்கம் கொண்ட நூல்கள் மிக ஆபத்தானவை ‘ ‘ என்கிறார். குருவின் இக்கூற்றில் உள்ள கட்டளையை ஏற்று தான் தன் அறிவியக்கத்தை அமைத்துக் கொண்டதாக நித்யா எழுதுகிறார்.

நடராஜகுரு பகவத்கீதைக்கு எழுதிய உரை மிக முக்கியமான தத்துவநூலாக முக்கிய ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பகவத்கீதையை தத்துவக் கோணத்தில் விளக்கி எழுதப்பட்ட

பெரும்பாலும் எல்லா நூல்களிலும் இந்நூலின் பாதிப்பு வெளிப்படையாக தெரிகிறது என்று நித்ய

சைதன்ய யதி எழுதியிருக்கிறார். தத்துவ தளத்தில் நடராஜகுரு செய்தது என்ன என்ற வினாவுக்கு

மூன்று தளங்களிலாக பதில் சொல்லலாம். 1] இந்திய ஞானமரபை ஒற்றைபடையாகவும் மதம் சார்ந்தும் விளக்க முயன்ற முயற்சிகளை எதிர்த்து நாராயணகுருவால் முன்வைக்கப்பட்ட உரையாடல்தன்மைகொண்ட தத்துவார்த்த அணுகுமுறையை வலியுறுத்தினார் 2] நாராயணகுருவால் முன்வைக்கப்பட்ட செயலூக்கம் கொண்ட புதிய அத்துவிதநோக்கை மேலைநாட்டு கருத்துமுதல்வாத நோக்குகளுடன் இணைத்து விரிவாக விளக்கினார். 3] ஹெகல், காண்ட், குரோச்சே , ஹென்றிபெர்க்சன் ஆகிய மேல்நாட்டு சிந்தனையாளர்களின் கருத்துக்களுடன் நாராயண குருவின் சிந்தனைகளை இணைத்து உரையாடியதன் வழியாக தனக்குரிய முதல்முழுமைவாத தத்துவ நோக்கு ஒன்றை உருவாக்கினார். இதன் மூலம் வலுவான ஒரு கீழைமேலைச் சிந்தனைச் சந்திப்பை உருவாக்கினார். அனேகமாக இந்திய சிந்தனையில் அரவிந்தருக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட முக்கியமான சிந்தனைப் பாய்ச்சல் இதுவே..

நித்ய சைதன்ய யதி

====

பந்தளம் பணிக்கர்கள் என புகழ் பெற்ற நிலப்பிரபுக்களின் குடும்பத்தில் 1923ல் பிறந்தவர் நித்யசைதன்ய யதி . கேரளத்தில் உள்ள ஒருசில ஈழவ நிலப்பிரபுக் குடும்பங்களில் ஒன்று அது . அவரது தந்தை பந்தளம் ராகவப்பணிக்கர் அக்காலத்தைய முக்கியமான கவிஞர். தாய்வழி தாத்தா பெரிய பாலிமொழி அறிஞர். பெளத்த மதம் சார்ந்த பல செப்பேடுகள் அவரதுகுடும்பத்திலிருந்து கிடைத்துள்ளன. முதல் பெயர் ஜெயச்சந்திரன். பள்ளி படிப்பை முடித்துவிட்டு நாடோடியாக அலைந்தார். பிறகு மீண்டுவந்து கொல்லம் கல்லூரியில் தத்துவம் எம் .ஏ படித்து அங்கேயே ஆசிரியராக வேலைபார்த்தார். அப்போதுதான் நடராஜகுருவின் தொடர்பு ஏற்பட்டது .

துறவு பூண்ட குரு பிச்சை எடுத்தபடி பாரதம்முழுக்கஅலைந்து திரிந்தார். காந்தியின் சபர்மதி சிரமத்திலும் ரமணரின் ஆசிரமத்திலும் தங்கி அவர்களை நெருங்கி அறிந்தார் . சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவப்பேராசிரியராக பணியாற்றினார். 1952ல் டாக்டர் ராதாகிருஷ்ணனுடனான ஒரு மோதலுக்கு பிறகு அப்பதவியை துறந்தார். நடராஜகுருவின் நேரடி சீடரானது அக்காலத்தில்தான் .குருவும் சீடரும் கடும் வறுமையில் தனிமையில் பலவருடங்களை ஊட்டியில் செலவிட்டார்கள்.1956ல் நடராஜகுரு உலகப்பயணத்துக்கு போனபோது நித்ய சைதன்ய யதி பம்பாய் சென்று விழியிழந்தோர் உளவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார் .ஜவகர் லால் நேருவின் ஆணைப்படி மாற்று உளவியல் ஆய்வு மையம் துவக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக தலைவராக இருந்தார்.

1969ல் நித்ய சைதன்ய யதி ஸ்திரேலியாவுக்கு ஒரு மாலுமியால் அழைத்து செல்லப்பட்டு திட்டமிடப்படாத ஓர் உலகப்பயணத்தை துவங்கினார். அப்பயணத்தில் அமெரிக்கா வந்து அங்கு போர்ட்லண்ட் , சிகாகோ உள்ளிட்ட பல பல்கலைகழகங்களில் கீழைத்தத்துவம் மற்றும் மாற்று உளவியல் துறைகளில் பேராசிரியராக பணியாற்றினார். இங்கிலாந்திலும் ஃப்ரான்ஸிலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். ரஸ்ஸல் , கார்ல் பாப்பர் , போன்றவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார். 1984ல் பாரதம் திரும்பி ஊட்டி ஃபெர்ன் ஹில் குருகுலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார். 1999 ல் மரணமடைந்தார். அவரது சமாதி ஊட்டியிலேயே உள்ளது .

நித்ய சைதன்ய யதி மலையாளத்தின் மிகப் புகழ்பெற்ற ,பரபரப்பாக விற்கப்படும் நூலாசிரியர். கேரளம் உலகை ஈ எம் எஸ் மற்றும் யதி கண்கள் வழியாகவே காண்கிறது என்று ஒருமுறை புகழ் பெற்றநூலாசிரியயையான கமலாதாஸ் குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் எண்பதும் மலையாளத்தில் கிட்டத்தட்டநூற்று இருபது நூல்களை எழுதியுள்ளார். எண்ணற்ற எளிய அறிமுக நூல்களை எழுதி அறிவியல் தத்துவக்கண்ணோட்டத்தை கேரளத்தில் வேரூன்றசெய்த பெரும் ஆசிரியர் அவர். அவரது நூல்களில் முக்கியமானவை நாராயணகுருவின் நூல்களுக்கு நவீன அறிவியல் தத்துவ நோக்கில் அவர் எழுதிய உரைகளாகும் .

தமிழில் அவரது விரிவான பேட்டி காலச்சுவடு சிற்றிதழில் வெளிவந்துள்ளது .சொல் புதிது சிற்றிதழ் அவரது கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது . ‘ஈசோவாஸ்ய உபநிடதம் ‘ என்ற நூல் வெளிவந்துள்ளது. தமிழினி வெளியீடாக மேலும் இருநூல்கள் வரவுள்ளன.

நடராஜகுருவின் பங்களிப்பிலிருந்து சற்று மாறுபட்டது நித்ய சைதன்ய யதியின் பங்களிப்பு .இப்படிச்சொல்லலாம். நாராயணகுருவின் சிந்தனை வெளியுலகம் நோக்கி நடராஜகுரு வழியாகச் சென்றது. அங்கே அது பலவிதங்களில் வளர்ந்த பிறகு நித்ய சைதன்ய யதி வழியாக மீண்டும் கேரளத்துகே திரும்பி வந்தது. நாராயணகுருவும் நடராஜகுருவும் உருவாக்கிய புதிய அத்துவித நோக்கையும் முதல்முழுமைவாத நோக்கையும் நவீன இலக்கியக் கோட்பாடுகளிலும் அறிவியல்கோட்பாடுகளிலும் செயல்படுத்திக் கட்டியவர் என்று நித்ய சைதன்ய யதியைச் சொல்லலாம். முதல் இரு ஆசிரியர்களிடம் ஒப்பிட்டால் நித்ய சைதன்ய யதி கலை இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் . கவிதை, ஓவியம், இசை மூன்றிலும் அவரது ஆர்வமும் பயிற்சியும் விரிவானது. ஆகவே அவரது எழுத்துக்களில் தத்துவநோக்கைவிட கலைநோக்கு மெலெழுந்து காணப்பட்டது.

இந்தியச்சூழலில் இயல்பாக ஒரு எதிரெதிர் நிலைகள் உருவாகி வலுவாக இருப்பதைநாம் காணலாம். கலை இலக்கிய தளங்களில் இது மேலும் துல்லியமாக வெளிப்படுகிறது. பொதுவாக உள்ள நிலை மேலைச்சிந்தனைகளையும் அழகியல்நோக்குகளையும் அப்படியே ஏற்று அவற்றை பிரதிபலிப்பதே சிறந்த செயல்பாடு என்று நம்புதல். இதற்கு எதிராக உள்ளது அனைத்துமே மரபில் உள்ளன என்றும் மரபை பயின்று செயல்படுத்தலே போதும் என்றும் நம்புதல். இரு எல்லைகள், இருவகைத் தேக்க நிலைகள் இவை. தமிழிலும் இவற்றை நாம் தெளிவாகக் காணலாம். அறுபது எழுபதுகளில் கேரள சிந்தனைத்தளத்தில் இந்த இருமுனைகளும் மிக உச்சம்கொண்டு காணப்பட்டன. மார்க்ஸியமும், பிறகு புது மார்க்ஸியமும்[ஐரோப்பிய மார்க்ஸியம்] , அதன் பின் இருத்தலியமும் மீள மீள பேசப்பட்டு எழுதப்பட்டு மிதமிஞ்சிப்போய் சட்டென்று ஒரு சலிப்பு உருவாகி பெருந்தேக்கம் ஏற்பட்டது.

அதைப்போல மறுபக்கம் மரபார்ந்த சிந்தனைத்தளத்தில் குட்டிகிருஷ்ண மாரார் போன்ற பெரும் பண்டிதர்கள் மறைந்து அவர்கள் உருவாக்கிய அலைகளும் ஓய்ந்து தொடர்ந்து ஒரு தேக்கம் உருவாகியது. இத்தேக்கத்தை இந்துதேசிய அரசியல் பயன்படுத்திக் கொண்டு வெரூன்ற ஆரம்பித்தது. மரபார்ந்த ஞானத்தை பயின்று ஆராய்ந்த குட்டிகிருஷ்ண மாராரின் இடத்தில் மரபை வழிபடக்கூடிய , மரபின் படிமங்களை அரசியல் நோக்குடன் தொகுப்பதையே நோக்கமாகக் கொண்ட பி. பரமேஸ்வரன் போன்றவர்கள் உருவானார்கள். இந்துஞானமரபு என்பது இந்துமதவாதமாக மாறியது. வகுப்புவாத வெறுப்பும் குடியேறியது. இத்தனைக்கும் கேரளவரலாற்றில் ஆகப்பெரிய இந்துஞானமரபுப் பேரறிஞர்கள் வெட்டம் மாணி [ புராணக் கலைக்களஞ்சியம்] ராவ்பகதூர் செறியான் [ இந்து தர்ம சர்வஸ்வம்] போன்ற சிரியன் கிறித்தவர்கள் ஆவர்.

இவ்விரு தேக்கநிலைகளுக்கும் எதிரான அலையாக எழுந்ததே நித்யா உருவாக்கிய அறிவியக்கம் எனலாம். மரபின் மீதான ஆழமான ஞானம் அதை மேலைநாட்டு நவீனச்சிந்தனைகள் மூலம் தொடர்ந்துமறுபரிசீலனை செய்யும் திறந்த மனம், அறிவியல்நோக்கு, எந்த தத்துவக் கோட்பாட்டு விவாதத்தையும் கவித்துவம் மூலமே நிகழ்த்தும் மொழிநடை, மூர்க்கமான நம்பிக்கைக்குப் பதிலாக தன்னைத்தானே திருப்பித் திருப்பிப் போட்டு எள்ளிநகையாடிச்செல்லும் ஆன்மீகமான அங்கதம் ஆகியவையே நித்ய சைதன்ய யதியின் சிறப்பியல்புகள். நித்யசைதன்ய யதி நாராயணகுருவின் தரிசனமாலாவுக்கு எழுதிய விரிவான உரை அவரது அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த உதாரணம். மேலை உளவியல் கோட்பாடுகளையும் இந்திய யோக மரபில் உள்ள உளவியல் அறிதல்களையும் இணைத்துக் கொண்டு தர்சனமாலாவை புரிந்துகொள்ள முயலும் நூல் அது.

பகவத்கீதை, பிரகதாரண்யக உபநிடதம், பதஞ்சலி யோக சூத்திரம் போன்றவற்றுக்கு நித்ய சைதன்ய யதி எழுதிய பெரிய ஆழமான உரைகள் மரபை வழிபடும் நோக்கு சற்றும் இல்லாத சமநிலை கொண்ட ஆய்வுகள். அரியபேருண்மைகள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன அவற்றைக் கற்றுத் தேறுவது மட்டுமே நம் கடமை என்ற நோக்கு ஒருபோதும் அவரிடம் இல்லை. அவர் அவற்றை பரிசீலனையே செய்கிறார். அவற்றை ஒருசில அர்த்த தளங்கள் நோக்கி குறுக்கும் போக்குகளை நிராகரிக்கிறார். இந்து மெய்ஞானத்தை உயர்குடிகளுக்குள் நிறுத்திக் கொள்ள செய்யப்பட்ட விரிவான முயற்சியையும், அதை மதக் கோட்பாடுகளாக சுருக்க நிகழும் யத்தனங்களையும் பெரும் அறிவுச்சதியுடன் எதிர்கொண்டு முறியடிக்கும் ஆக்கங்கள் அவை. இந்திய மெய்ஞானம் சார்ந்து நிகழ்ந்துவரும் விவாதங்களை கவனிப்பவர்கள் அவற்றின் பெரும்பாதிப்பை காணலாம்.

நித்ய சைதன்ய யதியின் அணுகுமுறை சமநிலை கொண்ட நடுப்பாதை. கண்மூடித்தனமான மேலைச்சார்பு, மரபு எதிர்ப்பு ஆகியவற்றுக்கு அவர் எந்த அளவுக்கு எதிரானவரோ அதேயளவுக்கு மரபு வழிபாடு ,மதவாத அரசியல் ஆகியவற்றுக்கும் எதிரானவர். ஆனால் நாராயணகுருவின் மரபை ஒட்டியவர் என்பதால் ஒருபோதும் எதிர்மறைக் அக்ருத்துக்களைச் சொல்லி விவாதங்களில் ஈடுபடும் இயல்பு அவரிடம் இல்லை-விதிவிலக்காக இந்திய அரசியலில் மதவாதம் தலையெடுத்தபோது மட்டும் ஒரு சிறு பிரசுரம் அளவுக்கு எதிராக எழுதியுள்ளார். ஆக்கபூர்வமான படைப்புகளை தொடர்ந்து முன்வைப்பதே அவரது வழிமுறையாகும். நூறு வருடம் முன்பு மனித சமத்துவம் மற்றும் முழுமையான ஆன்மிக விடுதலையின் குரலாக நாராயணகுருவின் தத்துவம் எழுந்தது. பின்பு உலகசிந்தனையை நோக்கி முழுமைவாதத்தை முன்வைப்பதாக அது நடராஜ குருவால் விரிவாக்கம் செய்யப்பட்டது . நித்ய சைதன்ய யதியின் காலத்தில் இந்திய மரபைச் சார்ந்து உலகசிந்தனையை எதிர்கொள்வதற்கான காய்தல் உவத்தல் அற்ற நோக்குநிலையாக அது வளர்ச்சி பெற்றது.

இந்திய சிந்தனையில் இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று தலைமுறை வளர்ச்சி பெற்ற சிந்தனைப்பள்ளி இதுவே. பலகோணங்களில் பல தளங்களில் செயல்படும் முக்கியமான பலர் இவ்வியக்கத்தின் மூலம் உருவாகிவந்துள்லனர். சமீபகாலமாக இயற்கைமருத்துவம் மூலிகை வேளாண்மை சார்ந்து நித்ய சைதன்ய யதியின் மாணவர்கள் பலர் முக்கியமான ஆய்வுகலைச் செய்துள்ளனர். நடராஜகுருவின் மாணவர்களான முனிநாராயணபிரசாத், சுவாமி வினய சைதன்யா இருவரும் இன்று இந்திய அளவில் கவனிக்கப்படுபவர்கள்.

சுவாமி தன்மயா [ டாக்டர் தம்பான்] மாற்று மருத்துவத்தளத்தில் செயல்பட்டு வருகிறார்.

இவ்வியக்கத்தின் அறிவார்ந்த வல்லமை நூற்றாண்டுக்குப் பிறகும் வளர்ந்துதான் வருகிறது.

நாராயணகுருவின் தத்துவம்

====

தமிழ்ச் சூழலில் நாராயணகுருவின் செய்தியை புரிந்துகொள்ள சிரமங்கள் உள்ளன. இங்கே ஓர் எதிர்மறையான சிந்தனைப்போக்கு மிக வலுவாக வேரூன்றியுள்ளது. மரபையே நிராகரிக்கும் போக்காக அது மாறியுள்ளது . மேலும் மிக எளிமைப்படுத்தபட்ட ஒரு இரட்டைஎதிர்மை [binary opposition] கற்பிதம் செய்யப்பட்டுள்ளது . ஆரிய X திராவிட வாதம் , உயர் சாதி X கீழ்சாதி வாதம் , ஆதிக்கப்போக்கு X அடிமைப்படுத்தப்பட்ட போக்கு என்றெல்லாம் அப்பிரிவினை தொடர்ந்து செய்யப்படுகிறது . அந்த இரட்டைஎதிர்மைத்தன்மை தமிழ்ப்பண்பாட்டாய்வில் வெள்ளையர்களால் [உதாரணமாக கால்டுவெல்] அக்கால மேற்கத்திய சிந்தனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது . அது அன்றைய மேற்கத்திய சிந்தனையின் சாரமாக காணப்பட்டமையால் அவ்வாறு உருவாக்கப்பட்டமை இயல்பானதேயாகும் . அப்போக்கு மார்க்ஸியத்துடனும் ஒத்துப்போனதனால் அது வலுவாக நம் சிந்தனையில் வேரூன்றி அதுவே ஒரே சிந்தனைமுறை என கருதப் படுகிறது .நாராயணகுருவை புரிந்துகொள்ள மிகுந்த தடையாக அமைவது அதுவே. உண்மையில் நாராயண குருவின் பிரதான சீடர்கள் சிலர் கூட அவ்வடிப்படையில் நாராயணகுருவை மறுத்தனர் . முக்கியமாக சகோதரன் அய்யப்பன்.

நாராயணகுருவின் சிந்தனைகளில் முற்றாக இல்லாதது இரட்டைஎதிர்மைப் பார்வை என்பதைக் காணலாம். அவர் எதிர்நிலை , எதிர்ப்புச் செயல்பாடு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவர் . அமைதியான ஆக்கச் செயல்பாடுகளை மட்டுமே நம்பியவர். அவரது நெருங்கிய நண்பரும் ன்மீகத் துணைவருமான சட்டம்பி ஸ்வாமிகளுடன் ஒப்பிட்டு இதைப் பார்க்கலாம். சட்டம்பி ஸ்வாமிகள் நாயர் சாதியைச்சேர்ந்தவர். ஆனால் அவரது அணுகுமுறை சாதிமுறை , மதமூடநம்பிக்கைகள், பிராமணத்திரிபுகள் மற்றும் மோசடித்தனமான மதமாற்ற முயற்சிகள் ஆகியவற்றை கடுமையாகத் தாக்கிப் புடைப்பதாக இருந்தது. கேரளச்சூழலில் பிராமணர் X பிராமணரல்லாதார் என்ற இரட்டை எதிர்மையை உருவாக்கியவர் அவரே. ஆனால் நாராயணகுரு அந்த தீவிரப் போக்குகள் எதையுமே கைக்கொள்ளவில்லை. அவரது அணுகுமுறை முற்றிலும் நேர்நிலை கொண்டதாக, முழுக்க முழுக்க சாத்விகமானதாக இருந்தது. சத்யாக்ரகம் போன்ற அகிம்சைப் போராட்டங்களைக்கூட நாராயணகுரு ஏற்கவில்லை. காரணம் அவை எதிர்நிலை எடுக்கின்றன, எதிர்தரப்புடன் மோதி அதை தார்மீகக் கட்டாயத்துக்கு உள்ளாக்குகின்றன என்று அவர் எண்ணினார்.

நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதே ஒரே செயல்பாடாக இருக்க முடியும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. ஓர் அமைப்பை அல்லது கோட்பாட்டை எதிர்ப்பது என்பது அதற்கு மாற்றாக நம்மை நாம் உருவாக்கிக் கொள்வதன் மூலமே நிகழமுடியும் என்று குரு எண்ணினார். நாம் எதிர்க்கும் அமைப்பில் அல்லது கோட்பாட்டில் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தையும் நாம் உள்வாங்கிக் கொண்டு அதைத் தாண்டிச்செல்வதன் வழியாகவே அவ்வளர்ச்சி சாத்தியமாகும். இதுவே நாராயணகுருவின் வழிமுறை. ஆகவே நாராயணகுரு முன்வைத்ததை ‘ உள்வாங்கல் கோட்பாடு ‘ அல்லது ‘ஒருங்கிணைப்புக் கோட்பாடு ‘ என்று சொல்லலாம். அதை அவர் அரசியல் சமூகச்செயல்பாடுகளுக்காக நடைமுறைவிவேகமாக மாற்றி முன்வைத்தார். கூடவே உயர்தத்துவ விவாதத்துக்கான முன்வரைவாகவும் சுட்டிக் காட்டினார். இவ்விரு தளங்களிலும் நாராயணகுருவை நாம் அறியவேண்டியுள்ளது.

நம்மிடையேயுள்ள தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துஞான அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளினாலேயே நிராகரிக்கப்பட்டவர்கள் , வரலாறு துவங்கும் காலம் முதலே அவர்கள் முழுமையாக ஒடுக்கப்பட்டிருந்தார்கள் என்ற சித்திரத்தை கிறித்தவப் போதகர்களும் வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள். அவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட எந்த மக்களும் எவ்வகையிலும் சாதிக் கொடுமையில் இருந்து விடுபடவில்லை என்ற அப்பட்டமான உண்மை கண்முன் உள்ளபோதிலும் கூட அவர்கள் இதை இன்றும் உருவாக்கி வருகிறார்கள். அவர்களுக்கு சாதி அல்ல இலக்கு , இந்து மத அமைப்பு தான். பாரத மரபு முழுமையாகவே அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதுதான் என்று காட்டுவதில் அவர்களுக்கு உள்நோக்கம் இருந்தது .அதை ஏற்றுக்கொண்டவர் அல்ல நாராயணகுரு .

புலையர், ஈழவர் போன்ற சாதியினரை குரு ‘ தோற்கடிக்கப்பட்ட ‘ மக்களாகவே கண்டார் . பழைய காலத்தில் அவர்களுக்கு சிறப்பான கடந்தகாலம் ஒன்றிருந்தமைக்கான தடையங்கள் அப்போதும் எஞ்சியிருந்தன. நித்ய சைதன்ய யதியின் குடும்பம் மற்றும் மூர்க்கோத்து குடும்பம் முதலிய வரலாற்றுக்கு தப்பி பிழைத்த ஈழவ பிரபு குலங்கள் அதற்கு சான்றுகள். அக்குடும்பங்களில் பெளத்த மதம் ,பாலி மொழி முதலியவற்றை சார்ந்த புராதனமான செப்பேடுகள் மற்றும் குல அடையாளங்கள்இருந்தன. கேரள சாதியமைப்பில் பெளத்த மதம் வீழ்ந்த பிறகு ஒரு மறு அடுக்கு உருவானதாகவும் அதில்இன்றைய ஈழவ புலைய சாதியினர் பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் ஆய்வாளர் இன்று விரிவான ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவியுள்ளார்கள்.

தமிழக தலித் சிந்தனையாளராகிய அயோத்தி தாச பண்டிதரும் நாராயண குருவின் கருத்தையே

அப்படியே பிரதிபலிக்கிறார் என்பதைக் காணலாம். பெளத்த மதம் ஒழிக்கப்பட்டபோதுதான் பறையர்

தாழ்த்தப்பட்ட மக்களாக ஆனார்கள் என்பது அவரது கருத்து. பறையர்களுக்கு உயர்ந்த கல்வி கலாச்சார மரபு ஒன்று இருந்தது . அதன் தடையங்கள் அயோத்தி தாசர் காலத்தில் கூட மிக வலுவாகவே இருந்தன. மார்க்கலிங்க பண்டாரம் போன்ற பல முக்கிய பறையர் குலப் பேரறிஞர்களை

அயோத்திதாசர் குறிப்பிடுகிறார் . அவர்களிடம் பண்டைய தமிழ் பேரிலக்கியங்களின் சுவடிகள்

பல பேணப்பட்டிருந்தன. திருக்குறளை எல்லிஸ் துரைக்கு அச்சுக்கு கொடுத்ததே பண்டிதரின் தந்தை கந்தப்பர் தான். தாழ்த்தப்பட்டவர்கள் சூழ்நிலையால் தாழ்த்தப்பட்டவர்களல்ல, எப்போதுமே அப்படி இருந்தவர்கள் தான் என்று இன்று வாதிடுபவர்கள் பெரும்பாலும் கிறித்த போதகர்களின் குரலை சுயநல நோக்குடன் எதிரொலிப்பவர்களாக உள்ளனர். அசலான தலித் சிந்தனையாளர்கள் தங்கள் குலத்தின் பழைய வரலாற்று பின்புலம் குறித்த தெளிவான புரிதல்களும் தாரங்களும் கொண்டவர்களாக உள்ளனர். பிறிதொரு ஆதாரம் சமீபகாலமாக குருசாமி சித்தர் மள்ளர் களைப்பற்றி எழுதும் நூல்கள். விரிவான மேலும் விவாதத்துக்கு உரிய தலைப்பிது.

எக்காரணத்தால் சமூக அமைப்பில் தோற்கடிக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டார்களோ அக்காரணங்களை வென்று தோற்கடித்தவர்களுக்கு மேலாக ஆவதே நாராயணகுரு அளித்த செய்தி. வேதம் உனக்கு மறுக்கப்பட்டால் வேதத்தை பிராமணர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வேத விற்பன்னராக நீ ஆகு என்றார் அவர் . நமது மரபுசெல்வங்கள் குறிப்பாக உபநிடதங்கள் எவருடைய தனிச்சொத்துமல்ல என்பது அவருடைய கருத்து. அவை விளக்கங்கள் மூலம் அவ்வாறு கையகப்படுத்தப்பட்டன. அவற்றை அனைவரும் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டியுள்ளது . கறாரான விமரிசனங்கள் கொண்ட விரிவான ஆழமான உரைகள் மூலம் நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் அப்பேரிலக்கியங்களை ‘விடுவிப்பதை ‘ காணலாம். மத அடையாளத்திலிருந்து முக்கிய நூல்களை அகற்றி அவற்றை தத்துவ , செவ்விலக்கிய ஆக்கங்களாக காண்பது இந்த குரு மரபின் பாணியாகும். இந்துஞானமரபின் அனைத்து சிறப்புக் கூறுகளையும் உள்வாங்கி செரித்துக் கொண்டு அதன் எதிர்மறை அம்சங்களை முற்றாக விலக்கி முன்செல்லும் ஒரு முறையை அவர் வகுத்தளித்தார். இதுவே குரு முன்வைத்த நடைமுறைத்தளமாகும்.

நாராயண குரு தூய அத்துவிதி . இவ்வாறு சொல்லும்போது ஏற்படும் சிக்கல்கள் பல உண்டு.

முக்கியமாக தமிழ்ச்சூழலில் இவற்றைப் பற்றி மிகக் கவனமாகவே பேசவேண்டியுள்ளது. இங்கே

இந்துஞான மரபின் எந்த ஒரு கூறைப்பற்றியும் ஒருவரியாவது பேசுவதுகூட அப்பட்டமான பிற்போக்கு அல்லது மதநோக்கு என்று காட்டும்விதமாக பொதுவான சிந்தனைத்தளம் மோசமாகத் திருகப்பட்டுள்ளது.ஆகவே பெரும்பாலானவர்களுக்கு எதுவும் தெரியாது, தெரியாதவை குறித்த வெறுப்போ மிக அதிகம்.அத்துவிதம் என்றதுமே சரசரவென முடிவுகளை நோக்கி பாய ரம்பித்துவிடுவார்கள். இந்தியச் சூழலில் வேதாந்தம் , அத்துவிதம் , பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுப்பிறவி எடுத்த அத்துவிதம் ஆகியவற்றை தெளிவாகப் பிரித்துக் கொள்ளவேண்டியுள்ளது.

ரிக்வேதத்தின் பத்தாம் மண்டிலத்தில் உள்ள பிரம்மதரிசனங்களில் இருந்து தொடங்கி உபநிடதங்களில் வளர்ச்சி பெற்றி பாதராயணரால் பிரம்மசூத்திரம் மூலம் தொகுக்கப்பட்டதே வேதாந்தமாகும் . இது பிரம்மத்தின் முதல்முழுமைத்தன்மையை முன்வைத்து பிரபஞ்சத்தை பிரம்மத்தின்அலகிலா ஆட்டமாகக் காண்கிறது. பிறகு பெளத்த தரிசனங்களுடன் வேதாந்தம் உரையாடியதன் மூலம் யோகாசார பெளத்ததில் வெறுவெளிவாதம் [ சூன்யவாதம்] அறிவகவாதம் [விக்ஞானவாத] போன்ற கோட்பாடுகள் உருவாயின. இவற்றை உள்ளிழுத்துக் கொண்டு வேதாந்தம் மறுபிறப்பு கொண்டதே சங்கரரின் அத்துவிதமாகும் . வேதாந்தத்தில் இல்லாததும் சங்கரரில் இருப்பதுமான முக்கியமான கூறு முழுமையான மாயாவதம் எனலாம். இதைத் தொடர்ந்து உருவான ராமானுஜரின் விசிட்டாத்வைதம், மத்வரின் துவிதம் போன்றவை பிற்கால வேதாந்தங்கள் எனப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கியபோது இந்துஞானமரபை மறு ஆக்கம் செய்ய எழுந்த ஞானிகள் பலரும் அத்துவிதத்தையே முக்கியமான கோட்பாடாகக் கொண்டார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் , விவேகானந்தர் , நாராயணகுரு ஆகியோர் நேரடியாகவே அத்துவிதக் கோட்பாடாக தங்கள் ஞானத்தை அறிவித்துக் கொண்டவர்கள். ராஜாராம் மோகன் ராய், அரவிந்தர் ஆகியோரிடம்

மேலோங்கியிருப்பது அத்துவிதமே. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய அய்யாவைகுண்டர், சுபானந்தகுரு, பிரம்மானந்த சிவயோகி, சுவாமி சகஜானந்தா போன்றவர்கள் அத்துவிதத்தையே தங்கள் கோட்பாடாகக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.. சங்கரரின் அத்துவிதம் பெளத்தத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்பது இதற்கு சமூகவியல் ரீதியான ஒரு காரணத்தை அளிக்கிறது. இவ்வாறு மறுமலர்ச்சி அடைந்த அத்துவிதம் சங்கரரின் அத்துவிதத்திலிருந்து பலவகையான முக்கியமான மாற்றங்கள் கொண்டது . இந்த அத்துவிதங்களை பொதுவாக புதிய அத்துவிதம் எனலாம்.

நாராயணகுரு முன்வைப்பது புதிய அத்துவிதமாகும். உபநிடதங்களை உள்ளடக்கிக் கொண்ட பெளத்தமாகவே நாராயண குருவின் அத்துவிதம் அமைந்தது . அத்துவிதத்தை வைதிகச்சடங்குகள் பக்கமாக நகர்த்தி அதன் சாராம்சமான ஒருமைத்தரிசனத்தை அழித்த சங்கர மடங்களுடன் நாமிதை பிணைத்துக் கொள்ளக்கூடாது .ஏற்கனவே காஞ்சி சங்கராச்சாரியாரும் நாராயண குருவும் எடுத்த நிலைபாடுகளில் உள்ள வித்தியாசத்தை கண்டோம். அவ்விருவருமே சங்கரர் பெயரையே சொல்கிறார்கள் . நாராயண குரு தன்னை பெளத்தர் என்று சொல்லிக் கொள்ள தயங்கியதுமில்லை. தூய அறிவே நாராயணகுரு முன்வைத்த அத்துவிதம் . எளிய மக்களுக்கு கடவுள் தேவை என்று கருதிய நாராயணகுரு தன் சீடர்களுக்கு அறிவார்த்தம் ஒன்றையே உபதேசித்தார் .நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் கோவில்களுக்குச் சென்றவர்களோ ஏதேனும் இறைவழிபாட்டை எப்போதாவது நடத்தியவர்களும் அல்லர் .

நாராயணகுருவின் அத்துவித நோக்கு குறித்து மிகவிரிவான அளவில் பேசவேண்டியுள்ளது. அதற்கும்

சங்கர அத்துவிதத்துக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாட்டை மட்டும் குறிப்பிடலாம். சங்கரரின் மாயாவாதத்தை நாராயணகுரு உயர்தளத்து தரிசனமாக மட்டுமே ஏற்கிறார். அதாவது பத்துவகையான மெய்மைத்தரிசனநிலைகளில் ஒன்றாக . நடைமுறையில் உலகியல் வாழ்க்கையை மாயை என்று அவர் நிராகரிக்கவில்லை. பரமார்த்திகம் போலவே அதுவும் முக்கியமே என்று எண்ணினார். மேலான ஆன்மீகம் சிறந்த உலகவாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறதோ அதைப்போலவே பரமார்த்திக வாழ்வுக்கு மேலான உலகியல் வாழ்வு வழியாக அமைகிறது என்று எண்ணியவர் அவர்.

சங்கரரின் கோட்பாடுகளிலிருந்து நாராயணகுரு பெற்றுக் கொண்டது இரண்டு அடிப்படைகளை. காண்பதும் அறிவதும் எல்லாம் ஒன்றே என்ற மகத்தான ஒருமைத்தரிசனம் . இதை அவர் சமத்துவதரிசனமாக , பேதமின்மைநோக்காக விரித்துக் கொண்டார். இரண்டு அறிவதெல்லாம் அறிவையே , தூய அறிவொன்றே பிரம்மமும் பிரம்மத்தை நோக்கிய பாதையுமாகும் என்ற மெய்ஞானம். தூய அறிவு என்பது வாழ்க்கையை விலக்கி அடையும் மர்மமான ஒன்றல்ல என்றும் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் ஈடுபட்டு கடந்துசென்று அறிதலே என்றும் அவர் அதை விளக்கிக் கொண்டார். இதுவே நாராயண குருவின் தரிசனமாகும். அவர் கூறிய அத்துவிதம் தர்க்கபுத்தியை ,பேதமின்மையை, பிரபஞ்சத்துடன் முழுமையான லயத்தை , கருணை நிரம்பிய சமத்துவத்தை வலியுறுத்திய பெரும் தரிசனம் என்று மட்டும் சொல்லலாம்.

நாராயணகுருவின் தத்துவ ஆய்வுமுறையை குறிப்பாகச் சொல்லவேண்டியுள்ளது. தத்துவம் என்பது உலகை ஒரு குறிப்பிட்ட வகையாக விளக்கும் முறைமை. ஆகவே மாற்று விளக்கங்களுடன் அது மோதுவதை நாம் தவிர்க்க இயலாது. தத்துவம் என்பது வேர்ப்பரப்பு , அதிலிருந்தே அரசியல் சமூகவியல் அறவியல் ஒழுக்கவியல் அடிப்படைகள் உருவாகி வருகின்றன. ஆகவே தத்துவ மோதல் மிக்க விசையுடன் பலவிதமான உள்ளோட்டங்களுடன் நடப்பதையும் தவிர்க்கமுடியாது. ஆனால் தத்துவ விவாதங்களை நடத்துவதில் நாராயண குரு காட்டிய வழி மாறுபட்டது. தத்துவத்தை முழுமுற்றான உண்மை ஒன்றுக்கான ஒருங்கிணைந்த தேடலாக அவர் காண்கிறார். ஆகவே தத்துவத்தின் மாறுபட்ட தரப்புகளை ஒன்றையொன்று நிரப்பும்தன்மை கொண்டவையாக அணுகுகிறார். ஒவ்வொரு தத்துவமும் அதுவரையான ஒட்டு மொத்த தத்துவ அமைப்பில் உள்ள ஒரு குறையை ஈடுகட்டும்பொருட்டு உருவானது என்ற நோக்கு அவருடையது . இதை அவர் ஒருங்கிணைப்பு நோக்கு [சமன்வயம்] என்ற சொல்லால் சுட்டினார். ஆதலால்தான் வாழ்ந்த காலகட்டத்தில் நாராயணகுரு எந்த தத்துவ மோதல்களிலும் ஈடுபடவில்லை . ஆனால் அதுவரையிலான தத்துவநோக்குகளை கூர்ந்து அவதானித்த பேரறிஞர் அவர். தமிழ் மலையாலம் சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழ்ந்த புலமையுடையவர். அன்று வரையிலான தத்துவ அமைப்பில் அவர் அவதானித்த போதாமைகளை நிரப்பும்பொருட்டு மட்டுமே அவர் தன் நூல்களை எழுதினார்.

இந்த ஒருங்கிணைப்புப் பார்வையை இன்று நாம் சாதாரணமாக தவறாகவோ குறைத்தோ மதிப்பிட்டுவிடுவோம். இன்று மத அரசியல் சார்ந்து எல்லா தரப்புகளையும் ஒற்றை அமைப்பாக மாற்றும் நோக்குடன் செய்யப்படும் சமரசம் போன்றதுதான் அது என்று சிலர் எண்ணக்கூடும். அப்படியல்ல, நாராயண குரு தத்துவ வேறுபாடுகளை மிக மிக முக்கியமாக கருதியவர். ‘அரியும் அரனும் ஒன்று ‘என்பதுபோன்ற எளிய சமரசநோக்கு அல்ல அவருடையது . நவீன தத்துவ மொழியில் சொல்லவெண்டுமானால் நாராயணகுரு தத்துவத்தை ஒரு பெரும் உரையாடலாக , நவீனக் கலைச்சொல்லால் சுட்டவேண்டுமென்றால் சொற்களனாகக் [Discourse ] கண்டார். உரையாடலின் எல்லா தரப்புமே முக்கியம்தான். உரையாடலின் இயக்கசக்தி அத்தரப்புகளின் மோதல் மூலம் உருவாவது. ஒவ்வொரு தத்துவமும் விரிவான சொற்களனில் எந்த இடத்தை நிரப்புகிறது என்று அவர் பார்த்தார். அது தத்துவ மொழியாடல் முறை எனலாம். [ Dialogic Philosophy ]

கேரள அறிவியக்கத்தில் நாராயணகுருவின் பங்களிப்பு மிக விரிவானது . அவரது மாணவர்கள்

வரலாறு தத்துவம் போன்ற பல தளங்களில் முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்கள். நாராயண குருவின் முக்கிய மாணவரான நாராயணகுருவின் வழிமுறை எதையும் நிராகரிப்பது அல்ல. அவர் அனைத்தையும் கற்று உள்ளடக்கி தனக்கென ஒரு நோக்கை உருவாக்கிக் கொள்வதை வலியுறுத்தியவர். பொதுவாக நிராகரிப்பது மிக எளிது. வெறுப்பு என்ற ஆயுதம் மட்டுமே அதற்குப் போதும். ஆனால் ஏற்பு மிக கடுமையான உழைப்பைக் கோரிநிற்பது. நாராயண குரு அனைத்தையுமே அறியும்படி அறைகூவினார். அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள சொன்னார். சுரண்டப்பட்ட மக்களுக்கு சுரண்டுபவர்களின் ஞானம் எதற்கு என்ற வினா அன்றும் சிலரால் எழுப்பபட்டது . ஞானம் மானுடகுலத்துக்கு உரியது என்றும் அதை நிராகரிப்பதன் மூலமல்ல வென்று மேலெடுப்பதன்மூலமே முன்னேற்றம் சாத்தியம் என்றும் நாராயண குரு சொன்னார் . ஒரு சமூகத்தின் அறிவார்ந்த வெற்றியே அதன் சமூக அதிகாரம் என்றார். ‘அறிவுக்கு குறுக்குவழிகள் இல்லை ‘ என்ற அவரது உபதேசம் முக்கியமானது. தன்னை பின்பற்றியவர்களிடம் வேதங்கள் உபநிடதங்கள் இந்திய தத்துவங்கள் சம்ஸ்கிருத மலையாள காவியங்கள் தமிழிலக்கிய மரபு அனைத்துமே அவர்கள் பாரம்பரியம் என்றுதான் நாராயனகுரு சொன்னார் .அவற்றை கற்று தெரிவு செய்து மறு ஆக்கம் செய்து முன்னெடுத்துச்செல்லும் சவாலை விடுத்தார். அதை அவர்கள் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர் . அவ்வகையில் பார்த்தால் நாராயணகுருவின் இயக்கம் நிரூபிக்கப்பட்ட வழிமுறை ஒன்றை இந்தியாவுக்கு அளிக்கிறது.

====

====

முக்கிய நூல்கள்

1. சாதியமைப்பும் கேரள வரலாறும். பி கெ பாலகிருஷ்ணன். சுருக்கமான தமிழாக்கம் ஜெயமோகன்

. காலச்சுவடு 13

2. கேரள தலித்போராளி அய்யன்காளி . நிர்மால்யா. தமிழினி சென்னை.

3. தென்குமரியின் கதை. டாக்டர் அ.கா.பெருமாள். தமிழினி சென்னை

4. கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி – இ எம் எஸ் நம்பூதிரிப்பாட் . [மலையாளம்]

5] ‘நாராயணகுரு தொகைநூல் ‘ -பி.கெ.பாலகிருஷ்ணன் [மலையாளம்]

6] பாரதியார் கட்டுரைகள். தொகைநூல். தேசிய புத்தக நிறுவன வெளியீடு

7] இந்திய தத்துவ ஞானம் . டாக்டர் ராதாகிருஷ்ணன். அண்ணமலைப் பல்கலைகழக வெளியீடு

8] மந்திரம் இசை மெளனம். நித்ய சைதன்ய யதியுடன் ஓர் உரையாடல். காலச்சுவடு 17

[Presented at Refresher Training Course for Teachers at Tanjore

Tamil University On 13-3 -04]

Series Navigation

நாராயண குரு எனும் இயக்கம் -1

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

ஜெயமோகன்


நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி ‘ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள் .சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள் . ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது .நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல எட்டடிக்கு மேலே விலகிநிற்கவில்லை என்றாலே தீட்டு ஆகிவிடும். ஈழவர் புலையருக்கு எட்டடி தள்ளி நிற்க வேண்டும். ஆகவே பொதுப்பாதைகளில் நடமாடுவது , பொது இடங்களுக்கு வருவது போன்ற சமூகச் செயல்பாடுகளெல்லாமே சமூகத்தில் ஏறத்தாழ அனைவருக்குமே மறுக்கப்பட்டன.

சாலைகளும் சந்தைகளும் இல்லாத நிலையில் உற்பத்தியும் வணிகமும் குன்றி கேரளசமூகம் வறுமையின் இருளில் மூழ்கிக் கிடந்தது. அக்கால கேரளசமூகத்தின் பிற்பட்ட சித்திரத்தை வார்ட் அன்ட் கானர், பிரான்சிஸ் புக்கானன் , பர்போஸா ஆகியோரின் குறிப்புகளை ஆதாரமாகக் காட்டி தன்னுடைய சாதியமைப்பும் கேரள சமூகமும் என்ற நூலில் வரலாற்றாசிரியரான பி கெ பாலகிருஷ்ணன் விரிவாக நிறுவுகிறார். [ 1 ] இந்நூலின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இவ்வாசிரியரால் காலச்சுவடு இதழில் வெளியிடப்பட்டுள்லது. தமிழில் அக்கால கேரளச் சமூகத்தின் சித்திரத்தை அளிக்க உதவக்கூடிய இரு முக்கிய நூல்கள் நிர்மால்யா எழுதிய ‘கேரள தலித் போராளி அய்யன்காளி ‘மற்றும் அ.கா.பெருமாள் எழுதிய ‘தென்குமரியின் கதை ‘.

தீண்டாமை உச்சத்தில் இருந்தாலும்கூட நேரடியான அப்பட்டமான சுரண்டல் தடையின்றி நிகழ்ந்தது .கேரளத்தில் அன்று இருவகையான அடிமைமுறைகள் இருந்தன. ஒன்று ஒருமனிதன் முற்றாகவே பிறிதொருவனுக்கு அடிமையாக இருப்பது, அவனால் விற்று வாங்கப்படுவது. இன்னொன்று மற்ற காலங்களில் சுதந்திர மனிதனாக வாழ்ந்து தேவை ஏற்படும்போது மட்டும் நிலப்பிரபுக்களுக்கும் ஆலயங்களுக்கும் மன்னர்களுக்கும் இலவச உழைப்பு [ ஊழியம்] அளிப்பது. உண்மையில் இரண்டாம் வகை அடிமைமுறையே மேலும் கொடுமையானது.. இதில் அடிமை உழைப்பு உண்டு, அடிமைக்கு எந்த உரிமையாளரும் பொறுப்பேற்றுக் கொள்வது இல்லை. புலையர் பெரும்பாலும் முதல்வகை அடிமைகள். ஈழவர் இரண்டாம்வகை அடிமைகள்.

அத்தகைய சூழலில்தான் நாராயணகுரு பிறந்தார் . அவரது பேரியக்கமே கேரளத்தை ஒரு நவீன சமூகமாக ஆக்கியது

நாராயணகுரு

====

நாராயணகுரு1854ல் திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பழஞ்ஞி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை மாடன் ஆசான், தாய் குட்டியம்மா. மிகச் சிறு வயதிலேயே வறுமையில் வாடினாலும் அவருக்கு கல்வி கற்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரம் சாலைத் தெருவில் வாழ்ந்த தைக்காடு அய்யாவு என்ற தமிழரின் தொடர்பு கிடைத்தது .அவர் ஒரு அடிமுறை ஆசான், யோக ஆசிரியர் மற்றும் வேதாந்தி. பிரிட்டிஷ் ரெசிடென்சியில் சூபரிண்டண்டாக வேலைபார்த்தார். அவருக்கு சாலைதெருவில் ஒரு கடை இருந்தது. அங்கு அமர்ந்து தமிழை ஆழ்ந்து கற்கவும் திருமந்திரம் போன்ற நூல்களை அவரிடம் பாடம்கேட்கவும் குருவால் முடிந்தது .

தன் இருபத்துமூன்றாவது வயதில் துறவறம் பூண்ட குரு பிறகு முப்பது வயதுவரை எங்கிருந்தார் என்பது தெரியவிலை. குமரிமாவட்டத்தில் மருத்துவாழ் மலையில் அவர் சிலகாலம் வாழ்ந்தது தெரியவந்துள்ளது . அவரை ஒரு வாலிபயோகியாக பார்த்த சிலரது பதிவுகள் பிற்காலத்தில் கிடைத்துள்ளன. தீண்டப்படாத சாதியினருக்கு கல்வி மறுக்கப்பட்ட அக்காலத்தில் குரு வேதங்களையும் உபநிடதங்களையும் தரிசனங்களையும் ஆழ்ந்து கற்றது வியப்புக்குரிய செய்தியே. பாரதத்தில் சாதிக்கு அதீதமாக தடைகளற்ற ஞானம் புழங்கிய ஓர் உலகம் , துறவு பூண்டு அலைந்த அன்னியர்களின் உலகம் அன்றிருந்தது என்பதற்கான ஆதாரம் அது. ரிஷிமூலம் கேட்கப்படாத ஒரு சமூக அமைப்பும் அன்றிருந்ததுபோலும்.

1888 ல் திருவனந்தபுரம் அருகேயுள்ள அருவிக்கரை என்ற சிற்றூருக்கு திரும்பி வந்த நாராயணகுரு அங்கே ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்து சிவலிங்கமாக பதிட்டை [ பிரதிஷ்டை ] செய்தார். ஈழவனுக்கு பிரதிஷ்டை உரிமைஉண்டா என்றவினாவுக்கு ‘நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிவன் அல்ல ‘ என்று பதில் சொன்னார் [பாரதி உட்பட பலர் பதிவு செய்தது போல ‘நான் நிறுவியது ஈழவ சிவன் ‘ என்றல்ல] அந்த கோயில் வாசலில் ‘சாதி மத பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது ‘ என்று எழுதி வைத்தார்.

அன்றைய கேரளக் கலாச்சார உலகில் பெரும்புரட்சியாக அது கருதப்பட்டது . அவ்விபரத்தைக் கேள்விப்பட்டு மைசூரில் டாக்டராக வேலைபார்த்துவந்த டாக்டர் பல்பு குருவை காணவந்தார். அவரது உண்மைப்பெயர் பத்மநாபன்.ஆனால் தீண்டப்படாத மக்கள் கடவுள்பெயர் சூட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்கேற்ப அப்பெயர் ‘ஜன்மி ‘ யால் [நில உடைமையாளர்] மாற்றப்பட்டது .அவர் பி ஏ படிப்பை ஒரு பாதிரியாரின் உதவியுடன் முடித்தபோது கேரள மன்னர் அரசு அவருக்கு வேலை அளிக்க மறுத்தது .மைசூருக்கு சென்று அவர் மருத்துவப்பயிற்சி பெற்று உயர்பதவிக்கு வந்தார் .கேரளத்தில் புழுக்களைவிட தாழ்ந்தவர்களாக வாழ்ந்த மக்களுக்கு ஏதாவது செய்யவிரும்பினார். அவ்வாறாக கேரள கலாசார வாழ்வை மாற்றியமைத்த பேரியக்கமான எஸ். என் .டி . பி [ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா] 1903 ல் திருவனந்தபுரத்தை மையமாக்கி அருவிப்புறத்தில் நிறுவப்பட்டது .1928 ல் குரு தனக்கு பின்பு தன் பணிகளை செய்யும் அமைப்பாக ஒரு சன்யாசி மடத்தை உருவாக்கினார்.தர்ம சங்கம் என்ற அவ்வமைப்பு வற்கலை என்ற ஊரில் சிவகிரி என்ற மலைமீது துவங்கப்பட்டது.

நாராயண குருவின் அணுகுமுறை மிக மிக நேரிடையானது . எதிர்மறை மனநிலைக்கு அதில் சற்றும் இடமில்லை. எண்பது வயது வரை வாழ்ந்த அவர், மிகக் கொந்தளிப்பான பல சூழல்களை சந்தித்த அவர், தன் வாழ்நாள் முழுக்க எதைப்பற்றியும் எதிர்மறையாக எதுவுமே சொன்னதில்லை . எவரையுமே கண்டித்ததில்லை . நாயர்கள் தங்களைத் தீண்டப்படாதவர்களாக நடத்துகிறார்கள் என்று குமுறிய ஈழவ இளைஞர்களிடம் அதை தடுக்க ஒரே வழி புலையர்களை நாம் அணைத்து சேர்த்துக் கொள்வதே என்று அவர் உபதேசித்தார். இது குருவின் போக்கு என்ன என்பதை காட்டும் உதாரண சம்பவமாகும்.அவர் பொதுவாக உபதேசம் செய்வதில்லை .பேருரைகள் ஆற்றும் வழக்கமே இல்லை . தனிப்பட்டமுறையில் பேசும்போது நகைச்சுவை மிக்க சில வரிகள் மட்டுமே சொல்வார். முக்கியமான சமயங்களில் அவர் சொல்ல சில வரிகளைபிறர் எழுதியெடுத்து அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள்.

தீண்டாமை முதலிய கொடுமைகள் ஒழிய நாராயணகுரு உருவாக்கிய வழிமுறை என்ன ? அதை ‘தீண்டாமைக்கு அதீதமானவர்களாக தங்களை கல்வி செல்வம் ஆன்மீகம் ஆகிய தளங்களில் மேம்படுத்திக் கொள்ளுதல் , ஆதிக்க சக்திகளை விட கல்வி , செல்வம், ஆன்மீக வல்லமை மிக்கவர்களாதல் ‘ – என சுருக்கமாக வகுத்துக் கூறலாம். எஸ் என் டி பி யின் ஆரம்பகால செயல்பாடுகள் இரூ தளங்களில் தீவிரம் கொண்டன.

நாராயணகுரு முதலில் உருவாகிய மாற்றம் அனைவரும் கூடும் பொது இடங்களாக கோயில்களை அமைத்தல் என்பதை கேரளச்சூழலில் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் மக்கள் அனைவரும் சாதாரணமாகக் கூடும் பொது இடம் என்பது கேரள சமூக அமைப்பில் அன்றுவரை இல்லாத ஒன்றாகும். ஈழவர்களும் பிற சாதியினரும் தங்கள் குல வழிபாட்டு முறையையே அன்று கொண்டிருந்தார்கள் . கடவுள்கள் பெரும்பாலும் அந்தந்த குடும்பத்துக்கு சொந்தமானவை . நாராயணகுரு அவரே நேரில் சென்று அந்தச் சிறுதெய்வங்களை பிடுங்கி அகற்றினார் . சிறுதெய்வ வழிபாட்டை முழுக்க ஒழித்துக்கட்டி அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும்படி ஆலயங்களை அமைத்து அங்கே சிவன் விஷ்ணு தேவி போன்ற பெருந்தெய்வங்களை நிறுவினார். தெற்குக் கேரளத்தில் கூர்க்கஞ்சேரி , பெரிங்கோட்டுகரை , வடக்கே தலைச்சேரி கண்ணனூர் , கோழிக்கோடு, ஆலுவா கர்நாடகாவில் மங்களூர் தமிழ் நாட்டில் நாகர்கோவில், ஈழத்தில் கொழும்பு முதலிய ஊர்களில் அவர் நிறுவியமுக்கியமான கோவில்கள் உள்ளன.

தற்காலப் பார்வையில் அவர் நாட்டார்க் கடவுள்களை அகற்றிவிட்டு பிராமணியப் பெருந்தெய்வங்களை நிறுவினார் என்பது வேறுமாதிரி படக்கூடும். ஆனால் அதற்கு அன்றிருந்த நோக்கங்களும் அதன் விளைவுகளும் மாறுபட்டவை. நாயர்கள் கூட கருவறைக்கு அருகே போக முடியாத சமூகச்சூழலில் குரு அந்தப் பதிட்டைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .ஆலயப்பிரவேசம் மறுக்கப்பட்ட மக்களுக்கு , அதற்கு தங்களுக்கு தகுதியில்லை என்று நம்பிய மக்களுக்கு அது அளித்த தன்னம்பிக்கை சாதாரணமல்ல . அவ்வாலயங்களில் பூஜைகளையும் அன்றைய தீண்டப்படாத மக்களே செய்தனர். மலையாளத்திலும் அழகிய சம்ஸ்கிருதத்திலும் குரு அக்கோவில்களுக்கு பூஜைமந்திரங்களை உருவாக்கி அளித்தார் .அவற்றில் தெய்வ தசகம், சுப்ரமண்ய சதகம் , காளீநாடகம் , சாரதா தேவி துதி முதலியவை மிக உக்கிரமான கவித்துவம் கொண்டவை [ காளீநாடகம் சமீபத்தில் சுவாமி வினய சைதன்யாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியன் லிட்டரேச்சர் இதழில் வெளிவந்து பாரத அறிவுஜீவிகள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது ]. இவ்வாறாக அவ்வாலயங்கள் சமூகப்பொது இடங்களாக மாறின .

குலதெய்வங்களை இல்லாமல்செய்ததில் நாராயணகுருவிற்கு இன்னொரு நோக்கமும் இருந்திருக்கலாம். குலதெய்வங்கள் என்பவை ஒருவகையில் குலச்சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கைமுறையும் உலகநோக்கும் அவற்றிலும் ஊடுருவி இருந்தன. உதாரணமாக கள் , மாமிசம் ஆகியவற்றை படைத்து உண்டு குடித்து களிப்பதே இவ்வழிபாட்டின் முக்கியமான கூறு. இதன்மூலம் உருவாகும் பூசல்கள் வழிபாட்டின் பகுதியாக கணிக்கபப்ட்டன. இதனாலேயே பெண்களும் குழந்தைகளும் இவற்றில் பங்குகொள்வதுமில்லை. சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை பதிட்டை செய்ததுவழியாக நாராயணகுரு அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கிறார். வன்முறைமேலோங்கிய பலிகொள்ளும் தெய்வங்களின் இடத்தில் கல்விக்கடவுள் சரஸ்வதி வருவது முக்கியமான மாற்றமே. குடிகளியாட்டம் ஆகியவற்றாலான வழிபாட்டுக்குப் பதிலாக பிரார்த்தனையும் அறிவார்ந்த தத்துவ விவாதங்களும் கொண்ட வழிபாட்டு முறை உருவானது. அதாவது வழிபாடு ஒரு நவீன சமூகக்கூட்டுச் செயல்பாடாக மாற்றப்பட்டது.

உண்மையில் ஈழவர்களின் மதம் பெளத்தமாகவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தது. பெளத்தம் அழிந்தபிறகே அவர்கள் சிறுதெய்வ வழிபாட்டுக்கு மீண்டார்கள். நாராயணகுருவின் இயக்கம் பெளத்த வழிபாட்டுமுறையை மீண்டும் கொண்டுவந்தது என்று சொல்வதே சிறப்பு. நாராயண குரு தன்னை பெளத்தன் என்று சொல்லியதுண்டு. அவர் முன்வைத்த அத்வைதம் யோகாசார பெளத்தத்தின் பிறிதொருவடிவமே. நாராயணகுருவை நவபுத்தன் என்று சொல்பவர்கள் உண்டு.

குலதெய்வ ஒழிப்பின் முக்கியமான இன்னொரு தளம் தமிழகத்தில் பரவலாக கவனிக்கப்படவில்லை , கேரளத்தில் பி.கெ.பாலகிருஷ்ணன் போன்றோர் இதைப் பேசியுள்ளனர். உலக அளவில் பார்த்தால் தெய்வ உருவகங்கள் மூன்று வகைப்படும். 1. செயல்தளத் தெய்வங்கள் 2. முழுமுதல் தெய்வம் 4. தத்துவார்த்த தெய்வம். செயல்தளத்தெய்வங்கள் தொல்பழங்காலப் பழங்குடி வாழ்க்கையிலிருந்து முளைத்து நாட்டார் பண்பாட்டில் வேரூன்றி வளர்பவை. பழங்குடிமனம் தன் செயல்பாடுகல் மூலம் கண்டடைந்த ஆழமான இறையனுபவங்களின் வெளிப்பாடுகள் அவை. ஆகவே இவை எண்ணற்றவை, ஒழுங்கற்றவை. இவை மிகக் குறுகிய எல்லைக்கு உட்பட்டவை. ஒரு குறிப்பிட்ட செயலுக்கு , ஒரு குறிப்பிட்ட குலத்துக்கு , ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு என வரையறுக்கப் பட்டவை இவை. வரப்புக்கு ஒருதெய்வம் வாய்க்காலுக்கு வேறு தெய்வம் என்று இவை காணப்படுகின்றன.

செயல்தளத்தெய்வங்களில் சில காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து உருவானவையே பெருந்தெய்வங்கள் எனலாம் . பெருமதங்களின் உருவாக்கங்கள் இவை. பெருமதங்கள் தெய்வங்களை ஒன்றோடொன்று இணைத்தும் , சடங்குகளை மறுவிளக்கம் அளித்து தொகுத்தும், தெய்வங்களை முழுமைப்படுத்தியபடியே சென்று ‘முழுமுதல் தெய்வம் ‘ என்ற கருத்தை அடைகின்றன. இதன் போக்கில் தத்துவமும் புரானங்களும் உருவாகிப் பெருகுகின்றன. சிறுதெய்வம் மானுட வாழ்க்கைக்குள் வாழ்க்கையின் ஒருபகுதியாக இருக்கையில் முழுமுதல் தெய்வம் உலகுக்கு அப்பால் நின்று உலகை இயக்குவதாக உள்ளது. அது பிரபஞ்சத்தின் உறுப்பு அல்ல, பிரபஞ்சத்தின் மூல காரணமாகவும் பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டு சக்தியாகவும் உள்ளது. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கிறது அது.

மனித மத வரலாற்றில் சிறுதெய்வங்களில் இருந்து முழுமுதல்தெய்வம் நோக்கிய நகர்வு மிக முக்கியமான ஒரு பாய்ச்சல் ஆகும். இன்றும்கூட சமூகப் படிநிலைகளில் கீழ்த்தளத்தில் நிற்கும் இனக்குழுக்களே சிறுதெய்வ வழிபாட்டில் அதிகமாக ஈடுபட்டுள்ளன. படிநிலை மேலே செல்லச் செல்ல முழுமுதல் தெய்வ வழிபாடு காணப்படுகிறது. இது ஒரு முக்கியமான உண்மையைக் காட்டுகிறது. ஒரு சமூகம் முழுமுதல்தெய்வத்தை அடையும்போது அதன் வாழ்க்கைமுறையில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் பல உருவாகின்றன. அவை அச்சமூகத்தை பொருளியல்சார்ந்தும் கலாச்சாரம் சார்ந்தும் முன்னகரச்செய்கின்றன. அவை என்ன என்பதை விரிவாகப் பேசமுடியும். குறிப்பாகச் சொல்லவேண்டியது இதுதான். சிறுதெய்வங்களை வழிபடும் சமூகங்கள் தங்கள் இனக்குழு அடையாளத்துக்குள் கட்டுப்பட்டு தங்களுக்குள் சுருண்டுகொள்ளும் தன்மை கொண்டுள்ளன. நம்பிக்கைகள் சார்ந்தே அவற்றின் வழிபாடு இருப்பதனால் அவை காலத்துக்கு ஏற்ப அவை மாறுவது இல்லை. முழுமுதல் தெய்வத்தை அடையும் சமூகங்கள் தத்துவார்த்தமாக வழிபாட்டை விளக்க ஆரம்பிப்பதனால் மாற்றங்களை உள்வாங்க ஆரம்பிக்கின்றன. முக்கியமாக சமானமான பிற இனக்குழுக்களுடன் அவை இணையவோ ஒருங்கிணைந்து செயல்படவோ முடிகிறது. அதாவது ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பிரிவதற்குரிய மனநிலை விலகி ஒருங்கிணைவதற்கான மனநிலை உருவாகிறது.

இந்தியச் சூழலில் முழுமுதல் பெருந்தெய்வங்களை அளிக்கும் மதங்கள் ஐந்து. சைவம், வைணவம், சாக்தேயம், கிறித்தவம், இஸ்லாம். தென்தமிழ்நாட்டில் கிறித்தவ மதம் சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமுதல்தெய்வத்தை அளித்து அவர்களின் பொருளியல் சமூக வாழ்வில் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்கியது என்பது சமீப காலவரலாறு. சைவமும், வைணவமும் ,சாக்தமும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் , குறிப்பாக பக்தி இயக்க காலகட்டத்தில் , அப்பணியைச் செய்தன. பக்தி இயக்கமே இந்தியக் கலாச்சாரம் என நாம் காணும் பொதுவான கூறுகளில் பெரும்பாலானவற்றை உருவாக்கியது. நம்மாழ்வார் தொடங்கி ராமானுஜர் வரை, நாயன்மார் காலம் தொடங்கி சித்தர்களின் காலம் வரை பக்தி இயக்கத்தின் பணி முழுமுதல்தெய்வம் என்ற கருத்தை உருவாக்கி எளிய மக்களிடையே கொண்டுசெல்வதாகவே இருந்தது.

பக்தி இயக்கம் தேய்ந்து மறைந்தபோது அந்த பணியும் நின்றது. சாதி அமைப்பு மேலும் கெட்டிப்பட்டது. பக்தி இயக்க நாயகர்களான ராமானுஜர், மத்வர் , பசவர் போன்றோரால் உருவாக்கப்ப சாதிமறுப்புச் சமூகக் குழுக்கள்கூட புதிய சாதிகளாக மாறின. எளிய மக்களுக்கு முழுமுதல்தெய்வங்களை வழிபடும் உரிமை மறுக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் சமூக அரசியல் சக்தியாக திரள்வதும் தடுக்கப்பட்டது. நாராயணகுரு ஒருவகையில் துஞ்சத்து எழுத்தச்சனின் அடுத்த கட்டம் ஆவார். பக்தி இயக்கத்தின் சமூக அரசியல் மாற்றத்தின் குரலை கேரளத்துக் கொண்டுவந்தவர் எழுத்தச்சன். எளிய நாட்டார் வாய்மொழி சந்தத்தில் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எழுதி முழுமுதல்தெய்வத்தை கேரள மண்ணில் நிறுவியவர் அவர். மலையாளமொழி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி, கேரள தேசியத்தின் விதை, கேரள எளிய மக்களின் முதல் பிரதிநிதி ,கேரள சமூகத்தின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர் எழுத்தச்சனே என்று இ எம் எஸ் நம்பூதிரிப்பாட் குறிப்பிடுவது இதனாலேயே. [4]

எழுத்தச்சன் உருவாக்கிய மாற்றம் உறைந்துபோய் மறைந்துவிட்ட நிலையில் அதை புத்துயிர்பெறச்செய்தவர் நாராயணகுரு. கேரள மறுமலர்ச்சியின் நாயகனாக அவரை இ எம் எஸ் நம்பூதிரிப்பாட் காண்பதன் காரணமும் இதுவே. ஒருவகையில் எழுத்தச்சன் தொடங்கி வைத்ததை நாராயணகுரு முழுமை செய்தார். எளியமக்களுக்கு முழுமுதல்தெய்வத்தை அவர் அளித்தது அத்தகைய மாபெரும் சமூகப் புரட்சி ஒன்றின் தொடக்கம் ஆக அமைந்தது . நாராயண குருவைப் பொறுத்தவரை ஒரு தெய்வம் என்பது மனித சமத்துவநோக்கின் முதல்படியே. 1921 ல் ஆலுவாயில் சகோதரன் அய்யப்பனின் முயற்சியால் கூட்டப்பட்ட உலக சகோதரத்துவ மாநாட்டில் குரு வெளியிட்ட ‘ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்கு ‘ என்ற வரி அவரது மையமான உபதேசமாக கொள்ளப்படுகிறது . அம்மாநாடே கேரளத்தில் மனித சமத்துவத்துக்கான செய்தியை மக்கள் மத்தியில் ஆழப்பதித்தது . மாப்பிளாகலவரங்கள் என்றபேரில் பெரும் மதக்கலவரங்கள் கேரளத்தில் எழுந்தகாலகட்டம் இது என்பதை நாம் நினைவு கூரவேண்டும்.

தெய்வ உருவகங்களில் மூன்றாவது , உச்சமானது தத்துவார்த்த தெய்வம் ஆகும். ரிக்வேதத்தில் ‘பிரம்மம் ‘ என்ற கருத்துர்வமாக நாம் தூய தத்துவார்த்த தெய்வ உருவகத்தைக் காண்கிறோம். பொதுவாக கீழை மதங்களிலேயே தத்துவார்த்த தெய்வ உருவகங்கள் உள்ளன. கன்பூஷியமதம், யோகாசார பெளத்தம், ஜென் பெளத்தம், அத்வைதம் ஆகியவற்றின் இறை உருவகம் தூய தத்துவக் கருத்துநிலையாக உள்ளது. முழுமுதல்தெய்வம் என்ற கருத்தே தத்துவார்த்த உருவகம்தான். ஆனால் அது திட்டவட்டமானதும் கூட . தத்துவார்த்தத் தெய்வ உருவகம் மிக அருவமானது. சாதாரணமான பார்வையில் அதை தெய்வம் என்றே சொல்ல முடியாது. பிரபஞ்சம் குறித்த ஒருவகை புரிதல் மட்டும்தான் அது. முழுமுதல்தெய்வம் என்ற உருவகத்தின் அடுத்தபடி, மேலும் நுண்மையான தளம், தத்துவார்த்த தெய்வம் அல்லது கருத்துருக் கடவுள் என்பதே.

நாராயணகுரு முழுமுதல் தெய்வத்தை அளித்து அடுத்தபடியாக தத்துவார்த்தமான தெய்வத்தை முன்வைத்தார். நீண்டகால அடிபப்டையில் மிக நுட்பமாக இதை குரு நிகழ்த்தினார் எனலாம். அவர் நிர்மாணித்த கோயில்கள் இதற்கு சிறந்த உதாரணமாகின்றன. முதலில் சிவலிங்கத்தையும் பிறகு சுப்ரமணியர், ஜகன்னாதர் போன்ற கடவுள்களையும் பதிட்டை செய்த குரு அடுத்த கட்டத்தில் விளக்கையும் பிறகு ‘சத்யம் தர்மம் தயை ‘ என்ற சொற்களையும் கருவறைதெய்வமாக பதிட்டை செய்தார் .இறுதியில் சேர்த்தலை களவங்கோடு கோவிலில் மூலவராக நிலைக்கண்ணாடியை நிறுவியபிறகு மேலும் கோயில்கள் வேண்டாம் கல்விச்சாலைகளே போதும் என்று சொல்லிவிட்டார். அவர் அருவிக்கரையில் கோயிலை நிறுவியபோதே சொன்ன கருத்துதான் இது . ஆனால் அதன் பிறகு பல படிகளிறங்கி வந்து கோயில்கள் நிறுவி மீண்டும் அரை நூற்றாண்டுக்கு பிறகு துவங்கிய தளத்துக்கே வந்து சேர்ந்தார். மக்களை அங்கு கொண்டு சேர்ப்பதே அவரது நோக்கம் என்று ஊகிக்கலாம் . தன் ‘நாராயணகுரு தொகைநூல் ‘ லில் பி.கெ.பாலகிருஷ்ணன் [5 ] இவற்றை விரிவாக விளக்கியுள்ளார்.

இந்தக் கோணத்தில் பார்த்தால் நாராயணகுருவின் முக்கியமான சிறப்புக் கூறான நடைமுறை விவேகம் தெரியும். இந்திய சமூகவிடுதலைக்காகப் போரிட்டவர்கள் அனைவருமே எளிய மக்களுக்கு அவர்களுடைய பழங்குடிக் குலதெய்வங்களைதவிர்த்து முழுமுதல் தெய்வங்களை நோக்கி செல்ல வழிகாட்டியுள்ளனர். அய்யா வைகுண்டர் போன்றவர்கள் சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வங்களை முன்வைத்தனர். சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ண இயக்கம், டாக்டர் அம்பேத்காரின் புதிய பெளத்த இயக்கம், வள்ளலாரின் அருட்பெரும்ஜோதி இயக்கம் ஆகியவை தூய கருத்துருக் கடவுள்களை முன்வைத்தன. முந்தையது நவீனக் கல்விபெற்ற ஒருசாராருக்கு உவப்பாக இருக்காது. பிந்தைந்தை எளியமக்களால் எளிதாகப் பின்தொடர முடியாதது. நாராயண குரு நடுவேயுள்ள பாதையை தெரிவு செய்து முதல் தளத்தில் தொடங்கி இரண்டாம் தளம் நோக்கி செல்கிறார்.

நாராயணகுருவின் அடுத்த முக்கியமான பணி கல்வித்துறையில்தான் என்று சொல்லலாம். தற்காலத்தில் கூட கேரளத்தில் மிக அதிகமாக கல்வி நிறுவனங்களை நடத்துவது நாராயணகுரு துவக்கிய பேரியக்கமே. பள்ளிகளும் கல்லூரிகளும் துவங்குவதும் படிக்கும் உரிமைக்காக போராடுவதும் அவ்வியக்கத்தின் ஆரம்பகால பணிகளில் முக்கியமானதாக இருந்தது .ஈழவ சமூகமே படிப்புமிக்க சமூகமாக மாறியது . பொதுவாக கேரளத்தின் கல்விநிலை புரட்சிகரமாக மாறியது . தற்காலத்தில் நமது தேசத்தில் முழு எழுத்தறிவுள்ள ஒரே மாநிலமாக அது உள்ளதற்கு காரணமும் நாராயணகுருவின் அறிவியக்கமே . மலையாளிகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்வதும் , அவர்கள் செல்வத்துக்கு முதலீட்டாக உள்ளதும் அவர்களுடைய கல்வியே.

நாராயணகுரு அறிவின் அதிகாரத்தை உய்த்துணர்ந்த சமூக சீர்திருத்தவாதி. மீண்டும் மீண்டும் ஆங்கிலக்கல்வியை குரு பெரிதும் வலியுறுத்தினார். தன் முக்கிய மாணவரான நடராஜ குருவை ஐரோப்பாவுக்கு அனுப்பி மேலைதத்துவத்தில் ஆழ்ந்த பயிற்சிபெற அவர் ஏற்பாடு செய்தது குறிப்பாகக் கவனிக்கத்தக்கது. ஆங்கிலம் அதிகாரத்தின் மொழியாக இருப்பது மேலும் பலகாலம் தொடரும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தை உலகை அறியும் ஊடகமாக அதன் மூலம் தாங்கள் வாழும் எல்லைகளை மீறிச்செல்லும் வாகனமாக குரு எண்ணினார். நவீனகாலகட்டத்தின் அறிவின் மொழி அது என்பது அவரது எண்ணமாக இருந்தது

ஆனால் சம்ஸ்கிருதத்தின் முக்கியத்துவம் குறித்த தெளிவான புரிதல் அவருக்கு இருந்தது. நாராயணகுருவுக்கு சம்ஸ்கிருததுடன் இருந்த உறவு குறித்து விரிவாக விவாதிக்கவேண்டும். பொதுவாக ஈழவ சமூகத்தில் சிறிய எண்ணிக்கையிலான சிலருக்கு சம்ஸ்கிருத அறிவு இருந்தது. அவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தைக் கற்கும்பொருட்டு குலவழக்கமாக அதைக் கற்றவர்கள். ஆனால் மதநூல்களிலோ தர்மநூல்களிலோ அவர்களுக்குப் பயிற்சி இருக்கவில்லை. நாராயண குரு ஆங்கிலக் கல்வியை அனைவரும் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தாழ்த்தபப்ட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அறிவார்ந்த தளங்களில் செயல்படும் முக்கியமானவர்கள் சம்ஸ்கிருத ஞானம் அடையவேண்டும் என்று எண்ணினார். சம்ஸ்கிருத ஞானம் என்னும்போது குரு உத்தேசித்தது மதநூல்களிலும் தர்மநூல்களிலும் பெறும் ஆழமான பயிற்சியையையே .

காரணம் இந்திய சமூகத்தில் சம்ஸ்கிருதத்துக்கு உள்ள இடம் குறித்த தெளிவான ஒரு புரிதல் அவருக்கு இருந்தது. மதஞானமும் தர்மஞானமும் சம்ஸ்கிருதத்தில் அமைந்ததும் சம்ஸ்கிருதம் பாரதம் முழுமைக்குமான பொது ஊடகமாக அமைந்ததும் நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட நிகழ்வுகள். ஆகவே சம்ஸ்கிருதத்தை மறுப்பது வரலாற்றை மறுப்பதுதான். நாராயணகுருவின் வழிமுறை எதிர்ப்பதும் புறக்கணிப்பதும் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லவேண்டும். கற்பதும் வென்றெடுப்பதும் ஆதிக்கம் பெறுவதுமே அவரது வழிமுறைகள். புறக்கணிப்பதன் மூலம் மத அதிகாரம் அதை ஏற்கனவே கையில் வைத்திருப்பவர்களிடமே தங்கிவிடவே வழிவகுக்கிறோம் என்பதே அவரது கருத்து. சம்ஸ்கிருதத்திலும் வேதவேதாந்தங்களிலும் தர்மநூல்களிலும் ஈழவர்கள் முதன்மை பெறுமளவுக்குப் பயிற்சி பெறவேண்டும் என்பதே நாராயணகுருவின் எண்ணமாக இருந்தது.

நாராயணகுருவின் காலம் முதல் தொடங்கி இன்றுவரை சம்ஸ்கிருதக் கல்வி ஈழவ சமூகத்தின் முக்கியமான கூறாக இருந்துவந்துள்ளது. அதன் மூலம் குரு உத்தேசித்த மதஞானத்தையும் மத அதிகாரத்தையும் அச்சமூகம் அடையவும் செய்தது. பிற பகுதிகளில் பிற்பட்ட சமூகங்கள் பொருளியல் அடிப்படையில் ஆதிக்கம் பெற்றும் பெறமுடியாத மத, கலாச்சார அதிகாரத்தை ஈழவ சமூகம் அடைந்தது இதனாலேயே எனலாம். மேலும் சம்ஸ்கிருதக் கல்வி பொதுவாக இலக்கியதளச்செயல்பாடுகளிலும் ஈழவசமூகத்தில் முக்கியமான தூண்டுதலாகவும் வலிமையாகவும் அமைந்து வருவதும் கண்கூடு. நாராயணகுரு உருவாக்கிய இந்த சம்ஸ்கிருதக் கல்வி ஆர்வத்தை பாரதியார் [6] தன் கட்டுரைகளில் மிகுந்த ஆர்வத்துடன் எழுதியுள்ளார் .

சமூக அதிகாரத்தில் செல்வத்தின் இடம் குறித்து நாராயணகுருவுக்கு இருந்த புரிதல் முக்க்கியமாகக் குறிப்பிடத்தக்கது. தன் சேவைக்காலத்தில் முப்பதுவருடம் குரு தொழில் அபிவிருத்தி குறித்து மீண்டும் மீண்டும் பேசியுள்ளார். ஈழவ சமூகத்தில் விரல்விட்டு எண்ணத்தக்க சில குடும்பங்கள் பெருநில உடைமை காரணமாக செல்வ வளத்துடன் இருந்தன. ஐதீகம் சார்ந்த காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டன. இக்குடும்பங்கள் எல்லாமே பெளத்தமதப் பின்னணியும் கொண்டவை. பாலி மொழி ஏடுகள் பல இவர்கள் வீடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. ஈழவர்கள் பெளத்தர்களாக இருந்து பெளத்தம் வீழ்ச்சி அடைந்தபோது நிலம் இழந்து தீண்டப்படாதவர்களாக ஆகியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இவை. இக்கும்பங்களை தொழில்துறையில் இறங்க நாராயணகுரு வற்புறுத்தினார். கேரளத்தின் கயிறு ஓடு தொழில்கள் உருவாக அவரே காரணம் .

ஆனால் நிகழ்காலத்தில் நின்று பார்க்கும்போது கேரள அறிவுத்துறையில் குரு உருவாக்கிய மாற்றமே மிக முக்கியமான பங்களிப்பு என்று படுகிறது . கேரள பொதுவுடைமை அரசியல் நாராயணகுருவில் துவங்குகிறது என ஈ. எம். எஸ் எழுதினார்.[ ‘நாராயணகுரு தொகைநூல் ‘ -பி.கெ.பாலகிருஷ்ணன்] மூன்றுதலைமுறைகளாக நாராயணகுருவை தொடர்ந்து அறிஞர்கள் பல துறைகளிலும் உருவானபடியேயிருந்தார்கள். நாராயணகுருவின் நேரடி சீடர்கள் என மூவரை முக்கியமாக சொல்லலாம். மகாகவி குமாரன் ஆசான் நாராயணகுருவின் முதல் சீடர்.மிகச் சிறு வயதிலேயே எஸ் என் டி பி இயக்கத்தின் செயலராகி நெடுங்காலம் பணியாற்றியவர். பாரதி தமிழுக்கு யாரோ அந்த அந்த நிலைதான் அவருக்கு மலையாளத்தில் .நவீனக் கவிதை , இதழியல் இரண்டுமே ஆசானிலிருந்து தொடங்கியவை . அவரது ‘கருணை ‘ ‘சண்டால பிட்சுகி ‘ ‘துரவஸ்தை ‘ முதலிய குறுங்காவியங்கள் கேரள இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு களம் அமைத்தவை. ஆசானின் நடை நேரடியானதும் உணர்ச்சிகரமானதுமாகும். அது எழுப்பிய அலை மிகப்பெரியது. எழுதப்பட்ட காலம் முதல் இன்றுவை நாலணா ஒரு ரூபாய் பிரசுரங்களாக அவரது கவிதைகள் லட்சக்கணக்கில் விற்கப்படுகின்றன என்பதை குறிப்பாக சொல்லவேண்டும்.

நாராயணகுருவின் அணுக்கத்தொண்டரும் அடிப்படைக் கருத்துக்களில் அவரை நிராகரித்தவருமான சகோதரன் அய்யப்பன் அடுத்த முக்கியச் சீடர் . கேரளத்தில் நாத்திக சிந்தனையை நிறுவிய முன்னோடி அவரே. புலையர்களை அணிதிரட்டி ஆரம்பகட்ட கிளர்ச்சிகளை நடத்தியவர் அய்யப்பன். அக்காரணத்தாலேயே ‘புலையன் ‘ அய்யப்பன் என்று அறியப்பட்டவர். மூன்றாமவர் நடராஜ குரு.

கேரளத்தின் முக்கியமான மூன்று நாளிதழ்களின் ஸ்தாபகரும் ,வரலாற்றாசிரியருமான சி வி குஞ்ஞிராமன் நாராயணகுருவின் முக்கியமான சீடர்களில் ஒருவர் அவரது மகன்தான் மார்க்சிய தத்துவ வரலாற்றாசிரியரான கெ. தாமோதரன். கேரள சுதந்திரப்போராட்டத்தின் முதல்கட்டதலைவர்களில் ஒருவரான டி கெ மாதவன் நாராயணகுருவின் நேரடி சீடர்தான். அவரால் நடத்தப்பட்டது தான் வைக்கம் போராட்டம் . அப்போராட்டத்தில் ஈ வே ராவின் பங்கேற்றார். [ தமிழக வழக்கப்படி அது மிகைப்படுத்தப்பட்டு அவர் ‘வைக்கம் வீரராக ‘ ஆக்கப்பட்டதெல்லாம் மிகவும் பிற்பாடுதான்.] குறிப்பிட்ட பட்டியலில் கேரளத்தின் ஆன்மீக கலாச்சார அறிவுத்துறை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஏறத்தாழ தொண்ணூறு சதவீதம் பேரை சேர்த்துச் சொல்லிவிட முடியும். கேரள பண்பாட்டுவரலாற்றில் ஆழமான பங்களிப்பை ஆற்றிய கேரள கெளமுதி இதழ் குழுமம் நாராயணகுருவின் மாணவரான சி வி குஞ்சுராமனால் உருவாக்கப்பட்டதாகும். இதில் எழுதி உருவான படைப்பாளிகளின் ஒரு வரிசையையே இங்கே பட்டியலிட முடியும். இவ்விதழ்மூலம் கேரள சிந்தனையில் உருவான பொதுவான பாதிப்பும் முக்கியமானது. இவ்வரிசையில் முக்கியமாக சொல்லப்படவேண்டிய படைப்பாளி பி.கெ பாலகிருஷ்ணன். வரலாற்றாசிரியர், இதழாசிரியர் , நாவலாசிரியர், திறனாய்வாளர் ஆகிய தளங்களில் கேரள சிந்தனையின டிபப்டைகளை செதுக்கிய மேதை அவர்.

காந்தி 1925 ல் நாராயண குருவை வந்து சந்தித்திருக்கிறார். சாமியார்கள் மீது நம்பிக்கை இல்லாதவரும் பொதுவாக எவரையுமே சந்திக்காதவருமான காந்தி நாராயண குருவை ஒரு அவதார புருஷர் என்றே குறிப்பிட்டிருக்கிறார் . அச்சந்திப்புக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி [காஞ்சிபெரியவர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்] காந்தியை கேரளத்தில் பாலக்காடில் வைத்து சந்தித்து தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஆலயப்பிரவேச போராட்டம் ஆகியவற்றிலிருந்து பின்வாங்குமாறு காந்தியிடம் கோரிக்கை வைத்தார். ஹிந்து சாஸ்திரங்கள் அவற்றை அனுமதிகாது என்றும் அச்செயல்கள் ஹிந்துதர்மத்தை படிப்படியாக அழித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார் . காந்திக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது . குறிப்பாக ஹிந்து உயர்சாதி மக்களின் ஆதரவு தன் போராட்டங்களுக்கு கிடைக்காமலாகிவிட வாய்ப்புண்டு என்றும் அவர் உணர்ந்திருக்கலாம்.

நாராயணகுருவை அவர் அரைமனதாகவே சந்திக்க வந்தார் .ஆனால் அச்சந்திப்பு அவரை நாராயணகுருவின் முன் பணிந்து கற்க வைத்தது .அவர்களுடைய பேச்சு விபரம் அதிகார பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் வெகுநாட்களாக தன் மனத்தில் இருந்த ஐயங்கள் பல அன்றுதான் முழுமையாக நீங்கின என்று காந்தி அன்று திருவனந்தபுரத்தில் நடந்த பிரார்த்தனை வகுப்பில் குறிப்பிட்டார் . அச்சமயம் கூடவேயிருந்தவர்களில் ஒருவரான மூர்க்கோத்து குமாரன் என்பவரும் ஆசானும் சொன்ன குறிப்புகளின் படி காந்தி வர்ணாசிரம தர்மத்துக்கு சஸ்திர ஆதாரம் உண்டா என்று கேட்டதாகவும் ஹிந்து சாஸ்திரங்களில் மாறக்கூடிய நீதி சாஸ்திரங்கள் மட்டுமே அதை போதிக்கின்றன என்றும் அடிப்படை அறங்களை போதிக்கும் நூல்கள் எதிலுமே சாதிக்கு இடமில்லை என்று உறுதியாக கூறமுடியுமென்றும் நாராயணகுரு சொன்னதாக தெரிகிறது. காந்திக்கு வர்ணாசிரம தர்மம் ஏதோ ஒரு வகையில் தேவையானது என்று எண்ணம் இருந்தது .நாராயணகுரு அதை மறுத்தார். காந்தி அதை பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டார் .

காந்தியின் அரசியல் செயல்திட்டங்களில் முக்கியமான இரண்டு நாராயணகுருவின் இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்று அவர் ஏற்றுக் கொண்டவை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஹரிஜன இயக்கம் , மது ஒழிப்பு இயக்கம் ஆகியவையே அவை .1923ல் கன்யாகுமரி வந்த தாகூரும் நாராயணகுருவை சந்த்தித்து அவர் பாரத தேசத்தில் தோன்றிய மாகரிஷிக்களில் ஒருவர் , ஒரு பரமஹம்சர் என்றுகருத்து தெரிவித்தார். ஆனால் வாழ்ந்த காலத்தில் நாராயணகுருவின் புகழ் தென்னிந்தியாவில்கூட கேரளத்துக்கு வெளியே அதிகமாகப் பரவவில்லை.

நாராயணகுரு தன் 74 வது வயதில் 1928ல் கேரளத்தில் வற்கலை என்ற ஊரில் அவர் உருவாக்கிய சிவகிரி மடத்தில் காலமானார். அங்கே அவரது சமாதி உள்ளது . அவர் இறக்கும்போது அவர் தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கம் ஏறத்தாழ அதன் சாதனைகளை முடித்துக் கொண்டு அரசியல் இயக்கமாக ஆகி பேரங்களில் இறங்க ஆரம்பித்திருந்தது. நாராயணகுரு கடைசிக்காலத்தில் எஸ்.என்.டி.பி இயக்கத்தை முழுக்கவே நிராகரிக்கும் மனநிலையில் இருந்தார். அமைப்புசார்ந்த செயல்பாடுகளின் எதிர்விளைவுகளை அவர் காணந்நேர்ந்தது. கடைசி பதினைந்து வருடங்களில் நாராயணகுரு தத்துவ முக்கியத்துவம் கொண்ட தன் நூல்களை இயற்றினார். ஏற்கனவே பொதுமக்களின் வழிபாட்டுக்காகவும் தன் தத்துவங்களை அவர்களுக்கு எளியமுறையில் கொண்டுசேர்க்கவும் நாராயணகுரு துதிகவிதைகள் மற்றும் வேண்டுதல் பாடல்களை எழுதியிருந்தாலும் இறுதிக்காலகட்டத்தில்தான் அவரது முக்கிய நூல்கள் உருவாயின. இவை நடராஜ க்ருவின் வேண்டுதலுக்கு இணங்கி உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன. இறப்புக்குப் பின்னர் நாராயணகுருவின் இயக்கம் இந்த நூல்களில் இருந்து மீண்டும் புதிதாக முளைத்தெழுந்தது.

நாராயணகுரு மலையாளம் , சம்ஸ்கிருதம் , தமிழ் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ ஐம்பது நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தர்சன மாலா, ஆத்மோபதேச சதகம் ஆகிய நூல்கள் தத்துவார்த்தமாக முக்கியமானவை. தமிழ்ப் பாடல்கள்பெரிதும் திருமந்திரம் சித்தர் பாடல்கள் ஆகியவற்றின் சாயல் கொண்டவை. குருவுக்கு வெண்பா மிகவும் கைவருகிறது . திருக்குறளை குரு மொழிபெயர்த்திருக்கிறார் . நாராயணகுருவின் தத்துவ நோக்கு அவரது மாணவர்களால் பிற்பாடு இந்தியமொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் பரவலாகக் கொண்டுசெல்லப்பட்டது. அது இந்திய அறிவுத்தளத்தில் முக்கியமான ஓர் இயக்கமாக ஆயிற்று.

[ தொடர்ச்சி அடுத்த இதழில் ]

நூல்கள்

1. சாதியமைப்பும் கேரள வரலாறும். பி கெ பாலகிருஷ்ணன். சுருக்கமான தமிழாக்கம் ஜெயமோகன் . காலச்சுவடு 13

2. கேரள தலித்போராளி அய்யன்காளி . நிர்மால்யா. தமிழினி சென்னை.

3. தென்குமரியின் கதை. டாக்டர் அ.கா.பெருமாள். தமிழினி சென்னை

4. கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி – இ எம் எஸ் நம்பூதிரிப்பாட் . [மலையாளம்]

5] ‘நாராயணகுரு தொகைநூல் ‘ -பி.கெ.பாலகிருஷ்ணன் [மலையாளம்]

6] பாரதியார் கட்டுரைகள். தொகைநூல்

Series Navigation