நாகூர் ரூமி கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

நாகூர் ரூமி


வெட்டுக்கிளிகள்
———————-
நிலவிலிருந்து பார்த்தபோது
நிர்வாணக் கண்களுக்கே தெரிந்ததாம்
சீனப் பெருஞ்சுவர்

நீளமான குச்சி கொண்டு
கிச்சுகிச்சு மூட்டி உசுப்பி விட்டு
வெட்டுக்கிளிகளை
சண்டையிட வைத்து
சந்தோஷிக்கிறது
பெருஞ்சுவர்ப் பாரம்பரியம்
இன்று.
———————–
முத்தங்கள் முடிவதில்லை
———————————
(09-10-2003)

முத்தம் மாதிரியே இல்லை
நாம் பரிமாறிக்கொண்ட
முதல் முத்தம்

கடைசியில் கற்பழிக்க வேண்டியதாயிற்று
உன் இதழ்களை
அந்த முதல் கணம் இன்னும்
பதிவாகவே இல்லை
எனினும்
உன் முத்தக்கடலில் மூச்சுத் திணறியபோது
உணர்ந்து கொண்டேன்
முத்தங்களுக்கு எதிரானதல்ல உன் இதழ்கள் என

இதழ் உண்டியல்
எவ்வளவுதான் சிறியதாயினும்
விழுந்துகொண்டேதான் இருக்கின்றன
முத்தக்காசுகள்
வற்றுவதே இல்லை
முத்த பக்தி.

என் இதழ்கள் எப்போதும்
பேராசை பிடித்தவை
உன் இதழ்களைப் போலவே
ஆனாலும் ஒரு வித்தியாசம்
எனது பேராசைகள்
வாசல் வழியாக நுழைகின்றன
உனது பேராசைகள்
கொல்லைப்புரத்தில் காத்திருக்கின்றன

முத்தம் கொடுத்தால்
குழந்தை உண்டாயிடுமா ?
நீ கேட்டபோதுதான் காரணம் புரிந்தது
உன் கோபத்துக்கும் மெளனத்துக்கும்
முத்தங்கள் யாவும்
காதலின் குழந்தைகள்தானே கண்ணே!

முத்தம்
கோபம்
மெளனம்
மறுபடி முத்தம்

இந்த வரிசைக்கிரமம்தான் உனது எனில்
எனக்கு ஆட்சேபனை இல்லை!
உனது வரிசைதான் எனது வரிசை!

முத்தம் ஒரு மாயம் கண்ணே!
அதைத் தருபவன் தரும்போதே பெறுகிறான்!
பெறுபவள் பெறும்போதே தருகிறாள்!

முத்தம் கொடுத்தால் ஆயுள் குறையுமாம்!
அறிந்தவர் சொல்கிறார்!
அவர் அறியாத ஒன்றைச் சொல்கிறேன் நான் :
முத்தமில்லாத ஆயுள்தான் எதற்கு ?

இந்த வாழ்வே எனக்கு
இறைவன் கொடுத்த முத்தம்!
இறப்பின் இதழ்களில் நன்றிக்கடனாக
நான் தருவேன்
பதில் முத்தம்!

முத்தம் ஒரு கேள்வி அல்ல
முத்தம் ஒரு வேள்வி
அது சப்தமல்ல
சந்தம்
இதழ்கள் இணைந்து பிரிவது
இணைபிரியா உறவுக்கு!

உதிர்ந்து விழும் பூக்களும் இலைகளும்
பூமிக்கான முத்தங்கள்
மொட்டுக்கள் மலரும்போது அது
பருவம் தரும் முத்தம்
நறுமணம் கமழும்போது அது
காற்று தரும் முத்தம்

நீ பேசும்போது கிடைக்கும் கரவொலிகள்
கைகள் தரும் முத்தம்
நீ எழுதும்போது வரும் பாராட்டெல்லாம்
வார்த்தை தரும் முத்தம்
நீ இசைக்கும்போது பொங்கும் மகிழ்ச்சியெல்லாம்
இதயம் தரும் முத்தம்

வண்டுகளின் முத்தங்களைப் போன்றதல்ல
குண்டுகளின் முத்தம்
அசோகரும் அலெக்சாண்டரும் கொடுத்ததெல்லாம்
வாட்களின் முத்தம்
அமெரிக்காவின் ஆண்குறியில் பட்ட காயம்
பிறன்மனைவிழைதலுக்கு எதிரான முத்தம்

அரிஸ்டாட்டில் அளித்தது
தத்துவ முத்தம்
இயேசு கொடுத்ததோ
அன்பின் முத்தம்
கிருஷ்ணன் கொடுத்ததோ
காக்கும் முத்தம்
முஹம்மது முகிழ்த்ததோ
முழு உண்மையின் முத்தம்

முத்தங்கள் மறையலாம்
அதன் சப்தங்கள் மாறலாம்
எனினும் முடிவதேயில்லை
இந்த முத்தங்கள் மட்டும்..

***
ruminagore@yahoo.com

Series Navigation

author

நாகூர் ரூமி

நாகூர் ரூமி

Similar Posts