நவீனப்பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசார் (இந்துமதமும்) இந்துத்துவமும் (மீண்டும் திரும்பும் குதிரை அரசியல்)

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

நா.இரா.குழலினி


கட்டுரையினுள் புகுவதற்கு முன் சிறு தகவலாய் பகிர்ந்து கொள்வோமே

(சின்னக்கருப்பன் என்கிறவர் எழுதிய ‘பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ? ‘ என்கிற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. திண்ணை இணைய தளத்தில் நான் எழுதத் துவங்கிய பின், வாசித்த கட்டுரைகளிலேயே மிகவும் விசமத்தன்மை வாய்த்ததும் மிகத் தேர்ந்த செய் நேர்த்தியுடனும் கட்டமைக்கப்பட்டதுமான கட்டுரை இதுதான். தேர்ந்த தச்சரின் இழைப்புளியைப் போன்ற திறனுடனும் தேர்ந்த நெசவாளரின் ஊடும் பாவும் பின்னிப் பிணையும் தறியமைப்பின் செய்நேர்த்தியும் கொண்டதான உழைப்பு கட்டுரையில் தெரிகிறது. ஆனால் இவ்வளவு தெளுவான உழைப்பு இந்துத்துவ பாசிசத்திற்குத் துணை போகிறதே என்பதுதான் எனது வருத்தம்.

சிலந்தியின் வலையைப் பார்த்திருக்கிறீர்களா ? ஏன் கட்டிய சிலந்தி மட்டும் அந்த வலையினுள் மாட்டுவதேயில்லை என்று கேட்டிருக்கிறீர்களா யாரேனும். ஏன் மாட்டாதென்றால் வலையினுள் எது ஒட்டும் இழை எது ஒட்டாத இழை என்று கட்டிய சிலந்தி மட்டுமே அறியும் அதனால்தான் அது ஒருபோதும் தன் வலையில் தானே மாட்டிக் கொள்ளாது. இந்தக் கட்டுரையை விமர்சிக்க முயற்சிப்பவர் சற்றுத் தவறினாலும் ஆணாதிக்கச் சிந்தனையுடையவர் அல்லது மேற்கத்திய அடிமை மோகம் கொண்டவர் என்று கட்டுரையாளரால் கெக்கலிக்க முடியும் வகையிலான தந்திர வலைப்பின்னல் கட்டுரை முழுவதும் ஊடாடுகிறது. எல்லா இடங்களிலும் அவர் தப்பிச் செல்வதற்கான இரகசிய வழிகளை கட்டுரை நெடுகிலும் வடிவமைத்திருக்கிறார். ஏறக்குறைய ஜெயமோகன் அவர்களின் தேர்ந்தெடுத்த உத்தி அது. அதனாலேயே ஒரு வேளை இது திரு.ஜெயமோகன் அவர்களின் பன்முகப் பணிகளில் ஒன்றோ என துவக்கத்திலிருந்தே ஒரு சந்தேகமும் இருக்கிறது எனக்கு. யாராக இருந்தாலும் என்ன நாம் எதிர்வினையாடுவோம்.)

வெயில் உறுத்தும் மதிய வேளையின் உணவிற்கு முன் எவ்வித முன் தயாரிப்பும் இன்றி சிறிது நேரம் கையிலிருக்கும் ரிமோட்டிற்கு வலிக்கும் வரை அழுத்தி தொலைக்காட்சியின் சானல்களுக்குள் இலக்கின்றி தாவிக்கொண்டிருப்பது எனக்கு எப்போதுமான வழக்கம். எப்போதாவது வந்து போகும் சில அபூர்வ தருணங்கள் அந்த ஒளி பரப்பில் கவனம் கொள்ள வைக்கும். அன்று 16/3/2004 மதியம் 1 மணிக்கு மேல் இடையூடான வரிசையற்ற தாவல் பயணத்தில் நேசனல் ஜியாக்ரபிக் சேனலின் ‘இடங்களும் மக்களும் ‘ என்கிற மதிய நிகழ்ச்சியில் மறைந்துள்ள பாலினம் என்ற தலைப்பு கோடிட்டு மறைந்தது. தலைப்பின் கவர்திறத்தால் சற்று பார்க்கலாமே எனக் காத்திருந்த போது நிறைய கேள்விகளை எழுப்பியது நிகழ்ச்சி. எப்படி அழைப்பது ஆணும் பெண்ணுமான இரு பாலினம் தவிர்த்த ஒரு உயிரியை என்ற கேள்வி தொல்காப்பியர் காலத்திலிருந்தே தொன்மையானது. அது என அஃறிணையாகவும் அவன் என ஆண்பாலாகவும் அழைக்கலாம் என பதில் சொல்லிப் போனார் அவர். விஜயா வந்தான் என்ற சொல்லாட்சியை ஏறிட்டுப் பாருங்கள். பெண்ணாகவோ ஆணாகவோ நின்று இந்த சொல்லாட்சியை எதிர்கொள்ளும்போதே இதழ்க்கடையோரம் மெலிதான ஒரு சிரிப்பு கன்னங்களில் கோடு காட்டிவிட்டு ஓடும் நிறைய நபர்களுக்கு. நாம்தான் எத்தனை பெயர் வைத்திருக்கிறோம் அவர்களுக்கு. பேடி பெட்டை அரவானி அலி ஒன்பது அஜக்கு பொண்டுகன் பாலிலி சிகண்டி ரெண்டுங்கெட்டான் நடுவாந்திரம் நபும்சகன் ?ிஜ்ரி இனனும் எத்தனையோ. வட்டார வழக்குச் சொற்களில் எத்தனையோ பெயர்கள். ஆனால் எப்போதும் அவர்கள் ஒரு ஆண்பால் விளிப்புடன் தங்களை மற்றவர்கள் அழைப்பதை விரும்புதில்லை. அவர்களை அந்த நிகழ்ச்சி இரண்டாம் வகைப் பெண்கள் (Second Type Women) என அழைத்தது. இன்னும் சிறப்பாக ஒரு பெண்ணாய் அவளை உணரச் செய்வதற்கு ஏற்ற வகையில் நாம் மாற்றுப் பெயர்களைக் கூட சிந்திக்கலாம். தாய்லாந்தின் டூம் என்கிற ஒருவரின் பேட்டியுடன் துவங்கியது நிகழ்ச்சி. கிக் பாக்சிங் விளையாட்டுப் பயிற்சியாளரான அவர் விளையாட்டு வீராங்கனையாக விளங்ிகிய போது விளையாட்டுத் துவங்குவதற்கு முன் வெறும் உள்ளாடையுடன் எடை போடச் செல்லும் போது எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தன் பேட்டியில் சொன்னார். ஆணாகத் தன்னைப் பலர் கருதிக்கொண்டிருந்த போது பெண்ணாகத் தன்னைத் தானே உணர்ந்து கொள்ளத்துவங்கிய சூழலில் தான் எதிர்கொண்ட உடல் மனச்சிக்கல்களை வரிசையிட்டார். அடுத்து கொரியாவின் ஆசிரியையான கெவேலிலி தான் எதிர் கொள்ளும் சிக்கல்கள் குறித்து விவாதித்தார். தன் மாணவர்களின் பெற்றோர்கள் தம் மகனை தான் மயக்கி விடுவேனோ என்கிற அச்சத்துடன் தம்மை அணுகுவது குறித்து அவரின் பேட்டி தொடர்ந்தது. வெளித் தோற்றத்தைப் பார்க்காதீர்கள் உள்ளிருக்கும் மனசு படும் ரணம் தெரியுமா உங்களுக்கு என்ற எதிர்க் கேள்வி அவருடையது. இப்படியே பல்வேறு நாடுகளின் இரண்டாம் வகைப் பெண்களைப் பற்றி நிகழ்ச்சி தொடர்ந்தது. கேபரே ஆடும் பெண் மேடையில் நாட்டிய நாடகம் ஆடும் பெண் என வாழ்வின் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் பெண்களைப் பற்றிய சித்தரிப்புகளுடன் இந்தியா நோக்கி நிகழ்ச்சி நகர்ந்தது.

மும்பையில் சிக்கல் மிகுந்த தெருக்களுக்கூடாக தொடர்ந்தது நிகழ்ச்சி. புதிதாகக் குழந்தை பிறந்த வீட்டை தேடிக் கண்டுபிடித்து கூட்டமாகச் சென்று அந்தக் குழந்தையை எடுத்து கைகளை முன்பக்கவாக்கில் தட்டியவாறே பாட்டுப் பாடி இறுதியில் காசு பெற்றுச் சென்றனர். வீட்டுக்குள் வந்து சென்று விட்டோம் என்பதற்கு அடையாளமாக ஒரு கரித்துண்டில் வீட்டு நுழைவாயில் அருகே சுவற்றில் ஒரு பெரிய வட்டமும் உள்ளே ஒரு சிறிய வட்டமும் பின் ஆங்கில எழுத்து Q க்குப் போடுவதைப் போன்ற ஒரு சுழிப்பும் உள்வட்டத்திலிருந்து இழுத்துப் போட்டு விட்டு மொத்தமாக இறங்கிச் சென்றனர். வாகனங்கள் பீரிட்டு விரையும் நாற்சந்திகளில் வீதிகளில் கடைகளில் தெருக்களில் வரிசையாகக் கைதட்டியபடியே காசு வாங்கிச் சேர்த்துக் கொண்டு விரையும் அவர்களைப் பார்த்த போது அவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் பீரிடலுடனும் இருப்பதாகவே பட்டது. ஆனால் அவர்களின் வீட்டில் ஒவ்வொருவருடனான பேட்டியில் அவர்களின் சிக்கல்களை அவர்களின் ஈரம் பனிக்கும் கண்களூடாகவும் எப்போதும் அழுவதற்குத் தயாராவதற்கு முன்னான விடைத்த நாசிகளூடாகவும் அவர்களின் ரணத்தை அவர்கள் பதிவு செய்தனர். அடுத்து மும்பையின் அருகிருக்கும் சதெளன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இரண்டாம் வகைப் பெண்ணான சப்னம் மெளலியின் பேட்டி. முழுவதும் பேசுவதற்குள் கன்னங்களின் வழியே இழிந்திறங்கும் சாரையெனக் கரையும் கண்ணீர். முழுவதும் அழும் போதான உடைபட்ட திக்கல் நிறைந்த குரலில் சிறுசிறு விசும்பல்களுடன் அவரின் விவரிப்பு என் மனதை முழுமையும் வெறுமையாக்கியது. என்னையும் மீறி என் கண்கள் பனித்துப் போயின. பொதுவாகவே உலகம் முழுவதுமான இரண்டாம் வகைப் பெண்களின் பேட்டியின் போது இந்த நிலை அவர்களின் முன்னெப்போதான பாவத்தின் விளைவு என்ற குற்ற உணர்ச்சி அவர்களின் உள்ளுணர்வில் ஊடாடி இருப்பது தெரிகிறது. தமக்கான குழந்தை இல்லை என்கிற வருத்தம் தெரிகிறது அவர்களில் பலர் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கின்றனர். பெரும்பாலும் பல்வேறு மொழிகளை அறிந்து வைத்துள்ள இவர்கள் எந்த சாதி மத வேறுபாடும் இன்றி குழுவாகவே வாழ்கின்றனர். பெண்களுக்கான எந்தவித கலவி உச்சம் பெறும் உடலுறுப்பு இன்றியும் கலவி இன்பம் பெறும் வாய்ப்பில்லாத உடலமைப்புப் பெற்றுமுள்ள அவர்கள் பெரும்பாலும் ஆண்களைக் கவர நினைத்துச் செய்யும் செயல்கள் பெண் ஆணைக் கவருவதற்கானவள் என்ற சமூக ஆணாதிக்கக் கருதுகோளின் விளைவென்றே நான் யோசிக்கிறேன். இது குறித்த நீண்ட சமூக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

சட்ட மன்ற உறுப்பினர் சப்னம் மெளலி தனது பேட்டியின் போது சொன்ன ஒரு விசயம் என் கவனத்தை ஈர்த்தது. அவரின் நிலையைப் பற்றிச் சொல்லும்போது கூறுகிறார் கிராமத்தில் புதிதாக யானையைப் பார்த்தால் மொத்த கிராமமுமே கூடிவிடும் யானையைப் பார்த்தீர்களா என ஒவ்வொருவரும் விசாரித்துக் கொண்டு கூடி விடுவார்கள் அதைப் போலத்தான் எங்களின் நிலைமையும். என்றாவது ஒருநாள் ஒரு சக உயிரியைப் போல எங்களைக் கருதியிருக்கிறீர்களா ? மக்கள்தான் என்றில்லை சட்ட மன்றத்திலே கூட அனைவரும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்களின் மட்டுமீறிய ஏளன அலட்சியத்திற்கு நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கும் போது நான் என் வகையில் எதிர்வினை செய்கிறேன் மொழியாலும் உடல் மொழியாலும், அவர்களால் அதைத் தாங்கவே முடிவதில்லை இப்போதெல்லாம் அப்படி அவர்கள் நடக்கத் துணிவதில்லை. மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள். ஏன் என்னை மேன்மேலும் உங்கள் உலகின் ஒழுங்கிற்கேற்ப குத்திச் சாய்க்க விரும்புகிறீர்கள் என் வாழ்க்கை என் உலகம் இதில் அத்து மீறி நுழைந்து கலவரப் படுத்த நினைப்பவர்களை எப்படி எதிர் கொள்வதென்பது எனக்குத் தெரியும் என்று கூறி முடிக்கும் போது அவரிடம் கண்ணீர் இல்லை மாறாக ஒரு அழுத்தம் நிறைந்த நுண்ணிய கவனிப்புடனான பார்வை இருந்தது.

இதைப் பார்த்தவுடன் எனக்கு என் வாழ்வின் பள்ளிக்குச் சென்ற வயதிலான சம்பவம் நினைவுக்கு வந்தது. காலையில் டாக்கடைக்குச் சென்று தேனீர் வாங்கிவருவது எப்போதும் சிறுவயதில் என்னுடைய வேலை. 50 பைசா பார்சல் டாயை தூக்குவாளியில் வாங்கி விட்டு அப்பா தனியாகத் தரும் 5 காசுக்கு தேன் மிட்டாய் வாங்கித் தின்னும் ரகசிய ருசிக்காவே நான் அந்த வேலையை எப்போதும் ஒத்துக் கொண்டிருக்கிறேன். பல்விளக்காத அந்த அதிகாலைத் தின்பண்டம் இப்போதும் நாநுனியில் ஒரு இனிப்பைத் தடவிச் செல்லும். டாக்கடையும் சைக்கிள் கடையும் பெட்டிக் கடையும் இணைந்து இருக்கும் அந்தக் கடையில் ஓரமாய் நின்றால் தூக்கி ஊற்றப்படும் டாயைப் பெற்றுக் கொண்டு திரும்பும் போது அன்று அந்த சம்பவம் நடந்தது. அன்றைக்கு அந்த அதிகாலையில் பெரிய கொலுசு அணிவதால் தெறிக்கும் ஓசையுடன் அந்த இரண்டாம் வகைப் பெண் கடையைக் கடந்து சென்றார். அதிகாலையில் அவர் அணிந்திருந்த அதிகப்படியான பூவாசம் தெருவெங்கும் விரைந்து பரவியது. கடையைக் கடக்கும் போது டா குடித்துக் கொண்டிருந்த ஒரு நபர் ஏய் என்னா கவனிப்பே இல்ல என்று கூறியவுடன் ஒட்டு மொத்தச் சிரிப்பொலி எக்காளம் கைதட்டல் ஏளனம் என்று அனைவரும் அதில் கலந்து கொண்டனர். ஒரே வினாடி அந்தப் பெண் நின்றார் அனல் கக்கும் விழிகளுடன் ஒரே ஒரு பார்வை தன் பாவாடை முனையைக் குனிந்து கைகளில் பற்றி தன் முகத்துக்கு மேலே பாவாடையைத் தூக்கி ஒரு நொடி நொடித்து என்னடா மயிருகளா எனத்துவங்கி கடும் கெட்ட வார்த்தைகளாலான நீடித்த வசவு இருக்கிறதே அப்படி ஒரு தொடர் கெட்ட வார்த்தை மழையை நான் இது வரை கேட்டதில்லை. மொத்தப் பகுதியும் உறைந்து போனது. சுதாரித்தெழுந்த ஒரு சிலர் அந்தப் பெண்ணை அடிக்கச் செல்கையில் திருப்பி அடிப்பதற்கோ அன்றித் தற்காத்துக் கொள்வதற்கோ எதுவும் செய்யாமல் முழு அடியையும் வாங்கிக் கொண்டு சிறிது தூரம் சென்ற பின் தன் எஞ்சியிருந்த சக்தியனைத்தையும் திரட்டிக் காறித் தரை நோக்கி உமிழ்ந்தார் தூவென. பிறகு ஏதொன்றும் நிகழாதது போல தொடர்ந்து நடந்து சென்றார். இம்முறை அவர் தலையிலிருந்த பூ தெருவெங்கும் உதிர்ந்து கிடந்தது, நின்றிருந்த ஒவ்வொருவரையும் பார்த்த ஒரு ஏளனச் சிரிப்புடன். என் நினைவடுக்குகளில் எப்போதும் அதிர்ச்சியுடன் நினைவிருக்கும் ஒரு உடல் மொழி அரசியல் காட்சி அது.

நவீன சமூகத்தில் வீடு மதம் அரசு போன்ற நிறுவனங்களின் கட்டுமானம் அவற்றின் வன்முறை அவை முன்வைக்கும் கலாச்சாரம் அறநெறிகள் விழுமியங்கள் எப்போதும் உடல் இன்பத்தை உடல் மொழியை இன்ப நுகர்வை ஒரு அதிகாரத்துடன் வன்முறையுடன் வடிவமைக்கின்றன. இவற்றின் வாயிலாக ஒடுக்கப்பட்டதே மனித உடல். ஒருவர் தன் உடலை தன்னிச்சையாகவோ விழைவாகவோ வேட்கையாகவோ இயக்கிட முடியாது, உடல் மொழி மீது நிறுவனங்களின் அதிகாரம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதிலும் பெண்களை இந்த நிறுவனங்கள் ஆணாதிக்கக் கருத்தாடல் வாயிலாக உடல் ரீதியாக மிகவும் ஒடுக்கி வைத்திருக்கிறது. சூழலின் ஒட்டுமொத்த கவன ஈர்ப்பை அல்லது பெருகும் வலியின் வீறிடலை பெண்கள் தங்களது பாலியல் வீரியத்தின் வழியாக வெளிப்படுத்த முடியும். பாலியல் நுகர்வு வேட்கையும் தன்னிச்சையான உடல் மொழியும் மட்டுமே நிறுவனங்களுக்கெதிரான கலகக் குரல், எதிர் வினையின் இயங்கு தளம் அதிர்ச்சி மதிப்பீடுகளின் வாயிலான கலாச்சாரத்தின் வன்முறை மீதான எதிர்நிலை என்று பின்நவீனத்துவ பெண்ணியச் சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன்.

இந்தக் கருதுகோளின் மீது எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு தலித் பெண் சாதியப் படிநிலையாலும் ஆணாதிக்கத்தாலும் ஒரே நேரத்தில் நசுக்கப் படுகிறாள். கிராமப்புறங்களில் பாலியல் வன்முறை என்பதை எப்போதும் எதிர்கொள்ளும் அவலத்துடனிருக்கிறாள். அதீத உடலுழைப்பு தேவைப்படும் விதமாக வீட்டிலும் சமூகத் தளங்களிலும் பணியிடங்களிலும் பொருளாதார நிலையில் ஒடுக்கப் பட்டவளாக இருக்கிறாள். எனவே இந்தியச் சூழலில் எங்களின் நிலை வேறு எங்களின் தீர்வுகள் வேறு என்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஜனநாயகத்தளத்தில் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலும் தனக்கேயான தனித்தன்மையானவை ஒரே படித்தானவை அல்ல என்பதால் இது அவர்கள் குரல் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதையொட்டியே மாலதி அவர்களின் கட்டுரை ‘நாச்சியார் திருமொழி ‘ ஆண்டாள் படைப்பிலக்கியத்தின் மீதான மறுவாசிப்பாகச் செல்கிறது என்று நான் புரிந்து கொள்கிறேன்.

இதனடிப்படையிலேயே தற்போதைய பெண் கவிஞர்களின் உடல் மொழி அரசியலை முன்வைத்த படைப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படைப்புகளை ஆபாசம் வக்கிரம் என விமர்சித்த பழநிபாரதியின் பேட்டி மேலும் சூழலைச் சூடாக்கியது. கவிஞர் மாலதி மைத்ரி பழநிபாரதியின் மேல் வழக்குத் தொடுக்கும் வரை சென்றிருக்கிறார். பழநிபாரதி சிநேகன் அப்துல் ரகுமான் போன்றோர் விமர்சித்த அனைத்திலும் வெளிப்படுவது அவர்களின் கலாச்சார அதிர்ச்சிதான். கவிஞர் பிரம்மராஜன் இது குறித்துக் கூறுகையில் இவை கவிதையல்ல வெறும் பொறுக்குகள் ஆண்டாள் முன்வைத்தாளே அது கவித்துவம் வாய்ந்தது உலகத் தரம் வாய்ந்த எத்தனையோ படைப்புகள் உலக மொழிகளில் சிறப்பாக வெளிவந்துள்ள நிலையில் இவை தமிழ்ச் சூழலின் கவிதை வளர்ச்சிப் போக்கில் கருதக் கூடியவையல்ல என்பதாகக் கூறினார். எனவே பெண்ணிய நோக்கில் இது ஒரு துவக்கம் இன்னும் இவை மேலும் தொடரும் பின் வேறு வடிவமடையும.ி வளரும் அன்றி சிதையும். ஆனால் பொதுப்புத்தியில் ஏற்படும் கலாச்சார அதிர்ச்சியால், விளையும் பதற்றத்தால் பழநிபாரதி சிநேகன் அப்துல் ரகுமான் போன்றோரின் உதறல்களை காரணமாகக் காட்டிக் கொண்டு பெண்ணியத்தை வெகு நேர்த்தியாக தன் முன்னே ஒரு பெரும் தடுப்பாக நிறுத்திக் கொண்டு தாம் ஒட்டு மொத்தமாக எதிரியாகக் கருதும் அனைத்துச் சிந்தனை வழிமுறைகளின் மீதும் தன் கவச வண்டிகளை வைத்து மோதுகிறார் திரு சின்னக்கருப்பன். ஈராக்கின் மீதான படையெடுப்பிற்கு அமெரிக்கா சொன்ன காரணத்தைப் போல மேலாண்மை வல்லாதிக்க காரணங்கள்.

திரு சின்னக்கருப்பன்ி கட்டுரையில் முதல் இழையை அப்படியே கீழே தருகிறேன்.

‘எனக்கு சமய இலக்கியங்களில், வைணவ இலக்கியங்களில் இ பா அளவிற்கு ஆழ்ந்த பயிற்சி இல்லை. ஆனால், தீவைத்துக் கொளுத்த முடியாமல் தான் தெய்வமாக்கி விட்டார்கள் என்று இ பா எழுதியிருப்பது கண்டு என்னால் திடுக்கிடாமல் இருக்க முடியவில்லை. இந்து மதக் கலாசாரம் அல்லாத வேறு எந்த மதக்கலாசாரத்தில் அக்கமா தேவியும், மீராவும், ஆண்டாளும் கவிஞர்களாகவும் , தெய்வங்களாகவும் அங்கீகாரம் பெறுவது இருக்கட்டும், குறைந்தபட்சமாக மனிதப் பிறவிகளாகவாவது அங்கீகாரம் பெற்றிருக்கிறார்கள் ? இஸ்லாத்திலும், கிரிஸ்துவத்திலும், இத்தனை பெண்பாற் கவிஞர்கள் இருந்திருக்கிறார்களா ? இது போன்ற பாடல்களை எழுதியிருக்கிறார்களா ? அப்படிப் பாடிய பாடல்கள் மக்களால் போற்றப்பட்டு தினந்தோறும் பாடப்பட்டிருக்கின்றனவா ?திருக்குறளில் காமத்துப்பால் சமதையான வாழ்வியல் அங்கீகாரத்துடன் விளங்குகிறது. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் காதல் கொப்பளிக்கிறது. ‘

இவருடைய வாதத்தின்படி சிலப்பதிகாரமும் அக்கமா தேவியும் மீராவும் ஆண்டாளும் திருக்குறளும் இந்துமதக் கலாச்சாரத்தின் அங்கங்களாக்கி விடுகிறார். சரி அய்யா இந்துமதம் எனத் தாங்கள் கூறும் மதத்தின் கொடூரத்தைப் பற்றிப் பேசுவோமா என நாம் கேட்டால் உடனடியாக கீழே வேறுவிதமான தற்காப்பு நகர்வை தேர்ந்தெடுக்கிறார். இந்து மதத்தின் மீது ஆயிரம் விமர்சனங்களை வைக்கலாம், ஆனால் prudish என்ற விமர்சனம் வைக்க முடியாது என்ற தேர்ந்த நழுவல் வாதத்தை முன்வைக்கிறார்.

அடுத்து திராவிட இயக்கங்கள் மீதும் இடது சாரி இயக்கங்கள் மீதும் உடனடியாக விமர்சனம் என்கிற பெயரில் அப்பட்டமான விஷத்தை ஏற்றுகிறார் அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

‘கடந்த நூற்றாண்டில் Prudishiness -க்கு இலக்கணம் வகுத்த ஒரு இயக்கம் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. அது பகுத்தறிவு என்ற பெயரில் கலை ரசனையையும், ஒரு ஜனசமூகத்தின் கற்பனை வளத்தில் பொங்கியெழுந்த கதைகளையும் புராணக் குப்பைகள் என்று சமூகவியல் அறிவில்லாமல் தூற்றிய பெரியாரின் இயக்கம். கம்பரசம் என்று கம்பனின் ஆகச்சிறந்த கவிதைகளை வடிகட்டி விட்டு- அப்படி சிறந்த கவிதைகளிலும் சிருங்கார ரசத்தினை ஆபாசம் என்று சுட்டிய – அண்ணாவின் இயக்கம். இந்திரா பார்த்தசாரதி பழனிபாரதிகளின் மீது தொடுக்கும் விமர்சனம் நியாயமாக இந்த ரசனை கெட்ட மஞ்சள்கண்ணாடி போட்ட பகுத்தறிவு இயக்கத்தின் மீது வைக்கப் பட்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இந்த விமர்சனம் மதத்தின் மீது – இந்து மதத்தின் மீது – பாய்கிறது. அவ்வாறு இந்துமதம் என்றாலே விஷம் என்று பிரச்சாரம் செய்வதை முற்போக்கு பணியாக ஏற்றுக்கொண்ட இடதுசாரி அறிவுஜீவிகள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள இயலும். இந்திரா பார்த்தசாரதி சொல்லும்போதுதான் எனக்கு ஆச்சரியம் வருகிறது. ‘

மேலும் தன் கட்டுரையின் இடையில் கூறும் போது இந்திய மத அறவியல்கள் என்று பன்மையில் குறிப்பிட்டுவிட்டு உனடடியாக இந்துமத பாலுறவு உளவியல் என்று இந்து மதத்தின் டைனோசார் தோற்றத்தை காட்ட முயற்சிக்கிறார். சிற்றின்பம் பேரின்பம் என்ற இந்துத்துவ மாரீச வேடம் புனைந்து, யாரேனும் தன்னை இந்துத்துவ வெறியர் என்று கூறிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களைப் பற்றியும் ஒரு விமர்சனம் போன்ற ஒன்றை போகிற போக்கில் வைத்து விடுகிறார திரு சின்னக்கருப்பன்ி. அந்தப் பகுதியையும் அப்படியே கீழே தருகிறேன்.

‘யமுனா ராஜேந்திரன் திரைப்படத்தில் பாலியற் சித்தரிப்பு பற்றிய சிறப்பான கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனால், மேற்கத்திய வரலாற்றின் மூலமாக உற்பத்தியான மேல்நாட்டு எழுத்தாளர்கள் எழுதியதை அடியொற்றி இந்திய வரலாற்றையும் இந்திய மத அறவியல்களையும் பார்ப்பதன் அபத்தத்தை தொடர்ந்து செய்கிறார் யமுனா ராஜேந்திரன். அவரது கட்டுரையில் ‘ இவ்வகையில்தான் சுதந்திரமான பாலியல்புக்குத் தடையாக இருக்கும் மதம்சார் அறவியல்களை ஒரு படைப்பாளி கேள்விக்கு உட்படுத்துகிறான் ‘. ஐரோப்பாவிலிருந்து ஈரான் வரைக்கும் இருந்த இஸ்லாமிய மற்றும் கிரிஸ்தவ வரலாற்றில் எவ்வாறு பாலுறவு அரசியல் நடந்திருக்கிறது என்பதை விலாவாரியாக எழுதிய யமுனா ராஜேந்திரன் வெகு விரைவில் இந்திய வரலாற்றைப் பற்றி எழுதாமல் காலனியாதிக்கத்துப் பின்னர் நடந்திருக்கும் வரலாற்றுக்கு வந்துவிடுகிறார். கண்ணன் மீது காதல் கொண்டு தன்னை ஒரு பெண்ணாக உருவகித்துப் பாடிய இந்துமத ஆண் கவிஞர்களும், பாலுறவை வெளிப்படையாகப் பாடிய சங்கப் பெண்பாற் புலவர்களும், நைடதமும், கொக்கோகமும், ஆண்-ஆண், பெண்-பெண் உறவுகளை காட்டும் கோவில் சித்திரங்கள் சிற்பங்களும் வழமையாக இருட்டடிப்புச் செய்யப்பட்டு, இந்து மத உளவியல் ஒரு செமிட்டிய உளவியலாக மாற்றப்படுகிறது யமுனா ராஜேந்திரன் பார்வையில். காலனியாதிக்கம் இருந்தபோது, செமிட்டிய பாலுறவு உளவியலின் படி இந்து மதப் பாலுறவு உளவியல் இல்லை என்ற காரணத்தால் மிஷனரிகளிலிருந்து, பெரியார் , திராவிட கழகம், அண்ணா, கருணாநிதி, என்று இன்றும் தொடர்ந்து இந்துமத பாரம்பரியம் கேவலப்படுத்தப்படுகிறது ஒரு புறம். மறுபுறம், இன்று, காலனியாதிக்கம் செய்த மேற்கு நாடுகளில், அளவுக்கு மீறி கட்டுப்படுத்தப்பட்ட பாலுறவு உறவுகள் வெடித்து, இன்னொரு திசையில் பயணம் செய்யும்போது, அதே வண்ணத்தில்தான் இந்திய பாலுறவு பற்றிய உளவியலும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பின் கீழ் புது அறிவுஜீவி முழக்கம் இன்று கேட்கிறது. அதன் விளைவே, யமுனா ராஜேந்திரன், அ.மார்க்ஸ் போன்றோரின் சமப்பாலுறவு அங்கீகாரக் கோரல். இரண்டுக்கும் வித்தியாசமில்லை. இரண்டும், இந்தியாவின் பாரம்பரியம், இந்தியாவின் இன்றைய தேவை, இந்திய வரலாற்றில் பாலுறவு உளவியல் எவ்வாறு இருந்திருக்கிறது, இந்து தத்துவ புரிதல்களில் பாலுறவின் இடம் என்ன, சிற்றின்பம் விலக்கப்படாமல் பேரின்பத்தின் ஞாபகமூட்டும் விஷயமாக அது தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது என்ற ஒரு அறிவும் இல்லாமல், மேற்கின் அறிவே அறிவு என்று அடிப்படையில் எழுந்தவை. அதை விட சரியான வார்த்தை, அடிமை மோகம். இன்று சினேகிதர்களும், அறிவுமதிகளும் முகம் சுளிப்பது, காலனியாதிக்கத்தின் விளைவாக நமக்குள் தோன்றிய ‘இந்து பாரம்பரிய பாலுறவு சிந்தனை கேவலம் ‘ என்ற உணர்வின் வெளிப்பாடு. அது பாலுறவு பற்றியே பேசக்கூடாது, எழுதக்கூடாது என்ற கலாச்சாரத்தை நம்முள் தோற்றுவித்திருக்கிறது. அதுவே பாலுறவைக் காட்டி வியாபாரம் செய்யும் ஆனந்தவிகடன், குமுதம், பாலகுமாரன், ஜெயராஜ், சரோஜாதேவியாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் இந்துத்வ வாதிகள் என்று தங்களைக் கோரிக்கொள்பவர்களும், தங்களை ‘டாஸண்ட் ‘ ஆக காட்டிக்கொள்ள, மேற்கத்திய பாலுறவு புரூடிஸத்தின் அடிமைகளாகவே இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ‘

முதலில் திராவிட இயக்கங்களின் மீது திரு சின்னக்கருப்பன் காட்டத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முயல்வோம். அன்றைக்கான தேசிய இயக்கமான காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த ஆதிக்கச் சாதிய சிந்தனை முறையும் பார்ப்பனத் தலைமையை ஒப்புக் கொள்ள வைக்கும் செயல்களுக்கும் எதிராகவே பார்ப்பனல்லாதோர் இயக்கமும் பின்னர் நீதிக்கட்சியும் திராவிடர் கழகமும் தோன்றின. வெகு தீவிரமாக சமூக நீதிக்கும் தீண்டாமை ஒழிப்பிற்கும் பெண் விடுதலைக்குமான கருதுகோள்களை முன்வைத்து தமது இயங்கு தளத்தில் இயங்கினர். பெரியார் தீவிர கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் புராண இதிகாச வேத மறுப்பிற்கும் இந்து மத எதிர்ப்பிற்கும் பெரியார் கூறும் காரணங்களை பெரியாரின் உரை வாயிலாகவே கேட்போம்

‘சாதியை மதத்திலிருந்து பிரித்துக் கல்ல வேண்டும். இப்படிப் பிரிப்பதற்கு முடியாதவரையில் சாதியும் மதமும் ஒன்றோடொன்று இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால் அந்த இரண்டையும் வீழ்த்தியேயாக வேண்டும். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் சாதியையும், மதத்தையும் பிணைத்துப் பின்னிக் கொண்டிருக்கும்படி இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால், சாதியை அழிக்கத் தலைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறதே என்று பயப்படாமல் சாதி மரத்தையும் மத மரத்தையும் சேர்த்து நெருப்புவைத்துச் சாம்பலாக்க வேண்டியது தடுக்கமுடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. அதாவது, மதமானது வேதம், புராணம் என்பவைகளுடன் கட்டிப்பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், இந்த வேதம், புராணங்களிலிருந்து மதத்தைப் பிரிக்கவேண்டும். இதிலும் பிரிக்கமுடியாதபடி கட்டு பலமாக இருந்தால், இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்கவேண்டியதுதான். ஆனால் இந்த வேதம், கடவுளுடன் சேர்த்துக் கட்டிவைக்கப்பட்டிருக்கிறது. இதிலும் பிரிக்கமுடியாத பிணைப்பு இருந்தால் அந்தக் கடவுள் என்பதன் தலையிலும் கை வைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. வேதத்தை இழுத்தால் கடவுளுக்கும் அசைவுதான் கொடுக்கும். இதில்தான் பெருத்த சங்கடப்படக்கூடும். கடவுளை அசைப்பதா என்று பயப்படக்கூடாது. எனவே சாதி, மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்தான் ஆகவேண்டும். இவற்றில் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்துவராது. இப்படி நாம் சாதி வித்தியாசத்தை ஒழிக்க முற்படுகையில் மதமென்பதும் ஒழிந்துபோகுமே யென்றால் அந்த மதம் நமக்கு வேண்டாம். அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தைப் பொசுக்கும்போது வேதமும் பொசுங்கிப் போவதாயிருந்தால் அந்த வேதம் என்பதும் இப்போதே வெந்துபோகட்டும். வேதத்தை ஒட்டும்போது கடவுளும் ஓடிவிடுவாரென்றால் அந்தக் கடவுள் என்பதும் இந்த நிமிஷத்திலேயே ஓடிவிடட்டும் அப்பேர்ப்பட்ட கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம்.

நியாயமாகவும் மதக் கட்டுப்பாட்டின்படி, சாஸ்திரக் கட்டளைஸ்படி, கடவுள் பக்திப்படி நாம் முன்னேறுவதற்கு எப்படி எப்படி அடங்கி ஒடுங்கிப் பொறுமை காட்டி நடக்க வேண்டுமோ, அவ்வாறெல்லாம் இதுவரை நடந்து காட்டியாகிவிட்டது. சாந்தமாகவும், அமைதியாகவும் மத வேதக் கடவுளுக்குக் கட்டுப்பட்டு எவ்வளவு பிரயத்தனங்கள் செய்ய வேண்டுமோ அவ்வளவு பிரயத்தனங்களும் செய்து பார்த்து விட்டோம். பொறுமைக்கும் சாந்தத்துக்கும் அளவுண்டு பிரயத்தனங்களும் செய்து பார்த்துவிட்டோம். அந்த அளவு இப்போ தாண்டிப்போய்விட்டது. இனி மதம், வேதம், கடவுள் என்று பார்த்துக் கொண்டிருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

நந்தனுக்கு மோக்ஷம் கொடுத்ததாகவும், பாணனை ஆழ்வாராக்கியதாகவும் கூறும் புராணங்களைக குற்றங்கூறாதீர்கள் என்கிறார்கள். வாஸ்தவம், இதோ வாயைப் பொத்திக் கொண்டோம்! நந்தனுக்கு மோக்ஷம் கொடுத்தது உண்மையானால் அந்த நந்தனுடைய பேரனை ஏன் உள்ளே விடக் கூடாதென்கிறார்கள் ? பாணனை ஆழ்வாராக்கியது வாஸ்தவமானால் பாணனின் பேரன் கோயிலுக்குள் போவதை ஏன் தடுக்கிறார்கள் ? நந்தனுக்கு ஒரு கல்லும் பாணனுக்கு ஒரு கல்லும் நட்டு, அவற்றின் பேரால் பொங்கல் அபிஷேகம் செய்து, காசு சம்பாதிக்கப் பிரயத்தனப்படுகிறார்களே ஒழிய அவர்கள் பேரைச் சொல்லி வேறு என்ன செய்கிறார்கள் ? நந்தன் போனபோது நாம் ஏன் போகக்கூடாது என்றால், நீங்கள் சொல்லுகிற நந்தன் வேறு நபர் என்று சொல்லி, ‘அந்த நந்தன் உள்ளே வருவதற்கு முன் நெருப்பில் குளித்து வந்தான். நீங்களும் அப்படி வாருங்கள் ‘ என்கிறார்கள். நாம் உள்ளே போக வேண்டுமானால் இவர்கள் சொல்லுகிற பிரகாரம் முதலில் நெருப்பில் குளித்துச் சாம்பலாக்கவேண்டும்; அதற்குமேல்தான் போகமுடியும்.ஆகவே, சாதி வித்தியாசத்தையே அழித்தாக வேண்டும். சாதி வித்தியாசத்தைப் போக்குவதற்கு எல்லாவிதமான தியாகத்தையும் செய்வதற்கு முன்வரவேண்டும். ‘

(திருச்சியில், 29-09-1929-ல் சொற்பொழிவு- ‘திராவிடன் ‘ தினசரி – 05-10-1929)

‘இந்து மதம் என்பதில் பெண்களுக்கு என்றென்றும் விடுதலையோ, சுதந்திரமோ எத்துறையிலும் அளிக்கப்படவே இல்லை என்பதைப் பெண்கள் நன்றாக உணர வேண்டும். பிறவியில் உயர்வு தாழ்வு அழிய வேண்டும் என்றால், எப்படி கடவுளாலேயே மக்களுக்குப் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது என்ற இந்து மதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்க வேண்டியது அவசியமோ, அதுபோலவே பெண்கள் உண்மைச் சுதந்திரம் பெற வேண்டுமானால் ‘ஆண்மையும் ‘ , ‘பெண்மையும் ‘ கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாக உள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும் ‘

(பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நூலில் இருந்து)

‘அபிப்ராய பேதத்தைப் பற்றிய விசயத்தில் அவர் எவ்வளவு இணங்கி வருவதானாலும் நாம் நமது கொள்கையைலோ, அபிப்ராயத்தைலோ ஒரு சிறிதளவு கூட விட்டுக்கொடுக்கவோ திரு.வேதாச்சலத்தினுடையவோ அன்றி வேறு யாருடையவோ நட்பைக் கருதினாகிலும் கடுகளவு மாற்றிக் கொள்ளவோ நாம் சிறிதும் தயாராக இல்லை. ஏனெனில் ஆயிரக்கணக்கான வருசங்களாய் நமது நாட்டில் தோன்றிய சீர்திருத்தக்காரர்களின் உழைப்புகள் பலன் தராததற்குக் காரணமே இவ்விட்டுக் கொடுக்கும் தன்மையும் தாட்சண்யமும் ராஜதந்திரச் செய்கையும்தான் என்பது நமது முடிவு ‘

(2/9/28 தேதியிட்ட குடிஅரசு இதழில் மறைமலை அடிகளுடனான சிக்கல்களுக்கு பெரியார் எழுதிய தலையங்கத்திலிருந்து)

ஆனால் திமுக பெரியாரின் தத்துவப் பார்வையிலிருந்து விலகியதும் குறைந்த சமரசங்களைத் துவங்கியதும்தான்திராவிட இயக்கங்களின் போக்கில் இன்றைக்கு திமுக அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் ஆதிக்கச் சாதியத்திற்கு துணை இயங்கும் போக்கும் சாதிய விடுதலையை நினைத்துப் பார்க்காததும் தேவைப்பட்டால் ஆதிக்கச் சாதியத்தின் பக்கம் நின்று சாதிய விடுதலையை முன்னெடுப்பவர்களை ஒடுக்குவதுமான போக்கும், இந்துத்துவ சக்திகளுடன் நாற்காலிகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டிய அவலமும் நிகழ்ந்தது.

பெண்ணியக் கருத்துகளுக்கு எதிராக இருப்பதாலேயே சிலப்பதிகாரத்தை பெரியார் ஏற்றுக் கொள்ள மறுத்ததும் பின்பு திருக்குறளை ஏற்றுக் கொள்ள மறுத்ததும் நிகழ்ந்தது. இதுதான மற்றெல்லாவற்றையும் விட ஆகச் சிறந்த ஆகப் பெரிய என்று நிறுவ முயலும் எதையும் மறுத்தே அவர் தன் கலகக் குரலைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் திமுக கற்பு நெறியில் வைதீகக் கருதுகோளான சீதைக்கு மாற்றாக கண்ணகியை முன்னிருத்தியதும் தமிழ்க் கலாச்சார வடிவமைப்பை முன்வைத்ததுமான இயக்கப் போக்கினைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. அந்தத் தத்துவப் பின்புலத்தில்தான் கலை இலக்கிய வடிவங்களின் பாமர வடிவமான திரைப்படங்களின் காட்சியமைப்பைப் பார்க்க வேண்டும். இங்கிலீசு படிச்சாலும் இந்தத் தமிழ் நாட்டுல என்பன போன்ற திரைப்படப் பாடல்கள் இந்தப் பின்புலத்தில் இருந்துதான் வந்தன. இந்தப் போக்குகளையும் சேர்த்தே பெரியார் மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் சமூகவியல் நோக்கில் திராவிட இயக்கங்களின் பங்கினை அவை ஏற்படுத்திய கலாச்சார மதிப்பு குறித்த மாற்றங்களை அவை ஏற்படுத்திய சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை எந்த சமூகவியல் ஆய்வாளரும் புறந்தள்ள முடியாது என்பது அசைக்க முடியாத உண்மை. எனவே சகோதரர் சின்னக் கருப்பன் கூறுவது போன்ற புரூடிசப் போக்கு யாருக்கு இருந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இவர் பிரமாதமாக முன்னிலைப்படுத்தும், வலியுறுத்திக்கூறும் இந்து மதத்திலா அல்லது திராவிட இயக்கங்களிலா ?

அடுத்த முகமூடியை சின்னக் கருப்பன் தேர்ந்தெடுப்பது செமிட்டிய உளவியல் முறை என்ற அவரின் பயன்பாட்டில் வெளிப்படுகிறது. திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை தமிழும் கன்னடமும் மலையாளமும் தெலுங்கும் ஏனைய மொழிகளும் அதேபோல செமிட்டிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை ?ீப்ரூ மொழியும் அரபி மொழியும் எனவே அரபி மொழி சார்ந்தது இஸ்லாம் மதம் ?ீப்ரூ மொழி சார்ந்தது கிறித்துவ மதம். இந்த செமிட்டிய உளவியல் என்ற குறியீட்டின் மூலம் அவர் தேர்ந்தெடுப்பது கிறித்துவ இஸ்லாமிய எதிர்ப்பை அதை நேரடியாகச் சொன்னால் இந்துத்துவ பாசிச முகம் வெளிவந்துவிடுமே என்பதற்காக செமிட்டிய உளவியல் என்ற முகமூடியை அணிந்து கொள்கிறார்.

அடுத்து இடதுசாரிகளின் மீதான தாக்குதல். இடது சாரி சிந்தனையின் மீது இவர்கள் விழுந்து பிடுங்குவதற்கு நமக்கு பெரிய விளக்கம் தேவையில்லை. இவர்களின் குருஜி ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் கோல்வல்கர் காலத்திலிருந்தே இந்த வேலையை இவர்கள் துவங்கிவிட்டார்கள். கம்யூனிச பூதத்தை வரவிடாமல் தடுப்பதற்கு நீங்கள் எங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றுவதுதான் மிக எளிதான சிறந்த வழி என்று காங்கிரஸ் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியவர்தான் கோல்வல்கர் (பார்க்க வல்லபபாய் பட்டேல் கடிதத் தொகுப்பு நூல்). பாசிச எதிர்ப்பை முன்னிருத்தும் எந்த மனிதரையும் இயக்கத்தையும் சிந்தனையையும் முழு முதல் எதிரியாகக் கருதுவதே பாசிச இயக்கங்களின் பொதுப்பண்பு

இப்போது நாம் அந்த ஆதாரக் கேள்விக்கு வந்துவிடுவோம். எதை திரு சின்னக் கருப்பன் நமது இந்து மதம் என்ற பெருமிதப் பிளிறலுடன் கூறுகிறார் ? அவர் கூறுவது போல அனைத்திற்குமான தீர்வை தன்னுள்ளே வைத்திருக்கும் அனைத்து சிந்தனை மரபுகளையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் யாவற்றுக்குமான சர்வரோக நிவாரணி என இவர் முன்னிருத்தும் அந்த டைனோசார் இந்துமதம் அல்லது இந்துத்துவம் அல்லது இந்துத் தத்துவம் எது ?

ரிக்வேதத்தில் உள்ளதும் அகழ்வாராய்ச்சி தடயங்களும் பல வகைகளில் வேறுபட்டு இருக்கின்றன. ரிக் வேதத்தில் குறிப்பிடுகிற வாழ்வு முறையோடு முற்றிலும் மாறுபட்ட வாழ்வு முறையைக் கொண்ட பூர்வகுடிகள் அங்கே வாழ்ந்தனர். ரிக்வேதம் ஓதிய பூர்வகுடிகள், ஆடுமாடு மேய்த்து திரிந்து வாழ்ந்த கூட்டம், நிரந்தர குடியிருப்பு இல்லாதவர்கள், சிந்து சமவெளி பூர்வகுடிகளோ விவசாயத்தை மையமாகக் கொண்டு நிரந்தர குடியிருப்புகளில் வாழ்ந்தவர்கள். சிந்து வெளியில் குடியிருந்தோர் சிலை வழிபாடு, லிங்க வழிபாடு, தேவி வழிபாடு ஆகிய பழக்கம் உள்ளவர்கள். பாம்பு, மரம், மிருகங்களை தெய்வங்களாக கருதினர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால், ரிக் வேதத்தில் சிலை வழிபாடு பற்றி குறிப்புகள் இல்லை. பாம்பு, மரம், மிருகங்கள் தெய்வங்களாக குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக, ரிக்வேதமும், இரான் நாட்டு புராதன மத நூலான அவஸேிதா என்ற குறிப்பேடும் பல அம்சங்களில் ஒன்றுபடுகின்றன.

இரண்டிலும் வருகிற தெய்வங்களின் எண்ணிக்கை 33. இரண்டிலும் இயற்கையின் அம்சங்களான நீர், காற்று, ஆகாசம், பூமி ஆகியவை தெய்வங்களாக வருகின்றன. மித்ரா என்ற பெயருள்ள தெய்வம் ரிக்வேதத்திலும் வருகிறது. அவஸேிதானிலும் உள்ளது. இரண்டிலும் அக்னியும், சோமபானமும் யாகப்பொருட்களாக குறிப்பிடப்படுகின்றன.புரோகிதர்கள் இரண்டிலும் செல்வாக்குள்ளவர்களாக இருக்கின்றனர். ரிக்வேதத்திலும், அவஸ்தானிலும் சோமபான தயாரிப்பு ஒன்றுபோல் உள்ளது. அது பிரமைகளை உருவாக்கும் போதை சாறாகும். மலை உச்சிகளில் காணப்படும் இலையில்லா தாவரத்தின் தண்டை நசுக்கி, ஆட்டு ரோமத்தாலான ஜல்லடையில் வடிகட்டி, ஜாடிகளில் சேகரிக்கப்படும் சாறாகும். யாக நேரத்தில் தெய்வங்களை வணங்க வருகிறவர்களுக்கு புரோகிதர் பாலோ, தேனோ கலந்து கொடுப்பார். ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி ரிக்வேதத்தில் குறிப்பிடப்படும் தாவரம் இந்திய சமவெளியில் விளையாத தாவரமாகும். ஆப்கானிஸ்தான் மலை உச்சிகளில் காணப்படும் அமெனிட்டா மாஸ்கோரியா என்ற இலையில்லா காளான் இது என்கின்றனர். வேறு சிலர் கிழக்கு இந்தியப்பகுதிகளில் காணப்படும் ‘சர்க்காஸ்டோ அசிடியம் ‘ என்ற இலையில்லா தாவரமென்கின்றனர். ரிக்வேதம் ஓதியவர்கள் சோமபான தயாரிப்பிற்கு ஆப்கன், மலை உச்சி தாவரமே பயன்படுத்தினர் என்ற முடிவே சரியானது.ரிக்வேதத்தில் கோவில் பற்றி எந்தக் குறிப்புமில்லை. தெய்வத்தை வணங்க யாகம் செய்தனர். இதனை பரந்தவெளியிலும், தங்குமிடத்திலும் செய்தனர். அவர்கள் தீ வளர்த்து ே ?ாமம் உண்டாக்கி உணங்கினர்.

சிந்து சமவெளியில் அகழ்வாராய்ச்சி தடயங்களில் காணப்படும் எழுத்தை இன்றுவரை ஆராய்ச்சியாளர்களால் படித்தறிய முடியவில்லை. ரிக்வேதத்தின் பல பாசுரங்கள் இந்திரனின் சாதனைகளை புகழ்ந்து கூறும் புனைகதைகளே. இந்திரன் சோமபானம் அருந்தியவுடன் அளவிலா ஆற்றலைப் பெற்றான். வானத்தையும் சுற்றிநெளுயும் விருந்திரன் என்ற பாம்மை வெட்டி வீழ்த்தினான் என்று ஒரு பாசுரம் கூறுகிறது. இன்னொரு பாசுரம் இந்திரன் சோமபானம் அருந்தியவுடன் பூமியையும் நீரையும் பிரித்து சூரியனை எழச்செய்தான் என்கிறது. இப்பாசுரங்களின் கற்பனைகளை கழித்து, அதற்கான எதார்த்த அடிப்படைகளை நோக்கி ரிக்வேதம் ஓதிய ஆதிவாசிகளும், சிந்து சமவெளியின் பூர்வகுடிகளும் மோதியிருப்பார்கள் என்ற முடிவிற்கே வரலாற்று ஆசிரியர்கள் வருகிறார்கள். இதற்கு ரிக்வேதத்தில் பல சான்றுகள் உள்ளன. அதில் ரிக்வேதத்தின் முதல்பாகம் 32 ஆவது பாசுரத்தின் முதலிரண்டு பத்தியில் வருகிற விஷயங்கள் இந்த மோதலை குறிக்கிறது என்பதற்கு உதாரணமாக பாசுரத்தின் தமிழாக்கத்தினை இங்கே பார்க்கலாம்.

இந்திரனின் வீரமிகு செயல்களை

பறைசாற்றுகிறேன் கேளுங்கள்

இடியை சுழற்றுபவன் முதலில் செய்த வேலை அந்த

பாம்பை வெட்டியது தான்!

டலிஸ்த்தர் அவனுக்காகவே வழங்கிய வஜ்ராயுதத்தால்

பாம்பை வெட்டி கால்வாய் திறந்தான்.

மலையைச் சுற்றிக்கிடந்த பாம்பு வெட்டுண்டது.

மாட்டு மந்தைகள் சரிந்து விழுவது போல்

நீர் வீழ்ந்து கடலை அடைந்தது. (ரிக்வேதம் 132-1-2)

இதுபோல் இன்னும் பல இடங்களில் வருண பகவானை இந்திரன் விடுவித்த கதைவருகிறது. பாம்பை வென்ற கதை வருகிறது. பாம்பு சிந்து சமவெளி பூர்வகுடிமக்களின் தெய்வம். அதனால்தான் நாகலாந்து நாகர்கோயில் நாக்புரி போன்ற ஊரின் பெயர்களும் நாகர்கள் என்றே அழைக்கப்பட்ட மக்கள் தொகுதியும் இங்கே இருக்கின்றன. ஆரிய வேதமோ, பாம்பை விரோதியாக கருதுகிறது. சிந்து சமவெளி பூர்வகுடியினர், விவசாயத்திற்காக உருவாக்கிய குளஉகளையே வர்ணபகவானை கைது செய்து வைத்துள்ள இடமாக, ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே வந்த ஆதிவாசிகள் கருதி உடைத்திருக்கின்றனர் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வருண பகவானை இந்திரன் விடுவிக்கும் கதை பல இடங்களில் வருகிறது. நான்கு வேதங்களையும், சிந்து சமவெளி புதைபொருள் தடயங்களையும் வைத்து வரலாற்று ஆசிரியர்கள் என்ன முடிவிற்கு வரமுடியும் ? வெளியே இருந்து வந்த ஆரியர்களின் யாகம், பலி போன்ற வழிபாடும் பூர்வகுடிமக்களின் சிலை வைத்து வணங்கும் முறையும் பிற்காலத்தில் கலந்தன.

ரிக்வேதம், யஜூர்வேதம், சாம வேதம் இம்மூன்று வேதங்களும் ஆரியர்கள், அல்லாத குடிகள் ஆகிய இருவருக்குமிடையே மோதல்கள் நடந்த காலத்தில் ஓதப்பட்டிருக்க வேண்டும். நான்காவது வேதமான அதர்வண வேதம் எல்லோரும் கலந்து குழப்பமான நிலையில் உருவானதாக இருக்கவேண்டும் என்கின்றனர். ரிக்வேதத்திற்கும் மற்ற வேதங்களுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை விநோதமாக உள்ளது. ரிக்வேதத்தில் இந்திரனே முதல் கடவுள். 33 கடவுள்களுக்கும் வாகனங்கள் கிடையாது. கடவுள்கள் அவதாரமெடுப்பது இரானில் உள்ள பழைய மதத்தின் மரபாகும். யஜூர் வேதத்தில் விஷ்ணு முதல் தெய்வம். அதர்வண வேதத்திலோ ருத்திரன் முதல் தெய்வமாகிறான். பின்னாளில் புராணங்களில் எல்லா தெய்வங்களுக்கும் பறவை, மிருகங்கள் வாகனமாகிவிடுகின்றன. மூன்று கடவுள்கள் பின்னர் இரண்டாக சுருங்குகின்றன. பிரம்மா பதவியை இழக்கிறார். விஷ்ணுவும் சிவனும் மோதும் குலங்களின் தெய்வங்களாகி விடுகின்றனர்.

ஆனால் இவற்றை மறுத்து 1999-ல் டாக்டர் நட்வர்ஜா மற்றும் ராஜாராம் ஆகியோர் இணைந்து ?ரப்பா அகழ்வாய்வில் கிடைத்த படிமங்களில் குதிரை வடிவம் இருந்தது எனவும் ?ரப்பாவில் உள்ள குறியீடுகளுக்கு விளக்கமளித்தால் அவை வேதத்தில் உள்ளவற்றையே தெரிவிக்கின்றன எனவும்The Deciphered Indus Script எனும் தமது நூலில் தெரிவித்தனர். உலக அளவில் உள்ள அகழ்வாய்வாளர்கள் அவர்களின் பொய்மையைத் தோலுரித்துக் காட்டிய பின்னும் ஏற்றுக்கொள்ள மறுத்து மிஷினரிகள் மார்க்சியர்கள் இடதுசாரிகள் இந்திய முஸ்லிம்கள் ஏனைய மேலை அறிவுசார் நபர்கள் செய்யும் சதி என்றும் தேசியத்திற்கும் ஏகபோகத்திற்குமான தர்ம யுத்தம் எனவும் கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது. அவர்களைப் போன்றே திரு.சின்னக்கருப்பனும் ஒரு பட்டியலைக் கீழ்வருமாறு இடுகிறார். ‘மிஷனரிகளிலிருந்து, பெரியார் , திராவிட கழகம், அண்ணா, கருணாநிதி, என்று இன்றும் தொடர்ந்து இந்துமத பாரம்பரியம் கேவலப்படுத்தப்படுகிறது ஒரு புறம். ‘

உலகெங்கிலும் பொதுவாக எந்தத் தொல்குடி மதங்களிலும் அடிப்படையாக விளங்குவது தாய்த் தெய்வ வழிபாட்டு முறைகள். அதற்கு உதாரணமாக சில தகவல்களை நான் வழங்கமுடியும். குழந்தைப் பிறப்பை வழங்கவியன்ற தாயைக் குறித்த வகைகாண இயலாத அச்சம் அவர்களுக்கு தாயைத் தெய்வமாக வணங்கும் போக்கினை வழங்கியிருக்கிறது. ?ரப்பா மொகஞ்சதரோ அகழ்வாய்வில் இருக்கும் எண்ணற்ற பெண் தெய்வங்களின் சுதைமண் சிற்பங்கள் அவற்றுக்குச் சான்று. தலைகீழாய் நிற்கும் பெண்ணிடமிருந்து அவள் பிறப்புறுப்பிலிலிருந்து தாவரம் வளர்வதைப் போன்ற சிற்பங்கள் அவளை உருவாக்கத்தின் கடவுளாக நம்பப்பட்டதன் அடையாளமே. மொசபடோனிய நாகரிகம் முன்வைக்கும் பெண்தெய்வம் நிடபா மொத்த பூமியின் தாய்க்கடவுளாக அனைத்து உயிர்வாழ்வின் ஆதாரமாக அடையாளம் காட்டப்படுகிறாள். பின்னாட்களில் அவளே நின்டு எனவும் நின்மக் எனவும் வழங்கப்படுகிறாள். எகிப்தில் டெப்னுட் எனும் பெண் தெய்வம் ஈரத்தின் அடையாளமாகவும் சூரியனின் இணைக்கடவுளாகவும் வழங்கப்படுகிறாள். சுமேரிய நாகரிகத்தில் இஸ்தார் எனும் பெண்தெய்வம், சிரியாவின் எல்யான் மற்றும் அஸ்தார்தே எனும் பெண்தெய்வங்கள் முறையே பூமித்தாயாகவும் வளமைக் கடவுளாகவும் முன்னிருத்தப் படுகின்றன. ஜப்பானில் சூரியன் பெண்தெய்வமாக முன்னிருத்தப்படுகிறது.

வேதத்தில் முன்னிருத்தப்படும் எந்த சிந்தனைப் போக்கும் பெண்ணின் பெரும் தலைமையை ஒத்துக் கொண்ட விசயமாக இல்லை என்பதே உண்மை. ஆனால் ஆண் மைய நாயக வழித் தொடர்பையே நாம் காணமுடிகிறது. தாய்வழிச் சமூகம் கரைந்து தந்தைவழிச் சமூகமாக மனித குலம் மாறும் நிலையின் வெளிப்பாடே இது. வைதீக சிந்தனை இங்கே கலந்திடும் போது இங்கிருந்த சாங்கிய தத்துவ மரபுடன் வைதீக வேத மரபு கலந்தூடும் போது சாங்கியத்தை உள்வாங்கி அழித்து அதன் சமயத்தளத்தின் வெளிப்பாடான சாக்தம் எனும் சக்தி வழிபாட்டை உள்வாங்கியபின்புதான் ஆதிபராசக்தி போன்ற கதையாடல்கள் நிறுவப்படுகின்றன. அதனால்தான் சாங்கியச் சிந்தனை மரபை வைதீகத்தின், வேதாந்தத்தின் பிரதான மல்லன்(முக்கிய எதிரி) என்று முன்னிருத்துகிறார் ஆதிசங்கரர். ஆரிய வைதீக, புரோகித மரபுக்கு வெளியேயான பெருந்திரள் மக்களிடமிருந்து வந்தது சாங்கியம் என்பார் சிம்மர் என்ற மேலை அறிஞர். சாங்கியம்- புத்தருக்கும் முந்தியது, புத்தரின் ஆசிரியர்களான ஆலாற காலமர், சர்காராம புத்தர், மக்கலிகோசா ஆகியோர் சாங்கியரே. ஆனால் இன்றைக்கான அவர்களின் சிந்தனைப் போக்கை நாம் அறிந்து கொள்ள முடிவது அவர்களின் மீதான வேதாந்திகளின் விமர்சனங்களில் இருந்து மட்டுமே. இங்கே இருந்த ஆசிவகம் சார்வாகம் தாந்தரீகம் போன்ற சிந்தனைப்போக்குகளை முழுவதுமாக அழித்தொழித்ததில் அனைத்துப் பங்கும் வைதீக வேதாந்தத்திற்கே உண்டு. பின்னாட்களில் எழுந்த சமணம் பெளத்தம் போன்றவையும் அழித்தொழிக்கப்பட்டதும் வேதாந்தத்தின் முக்கியப் பணி. வைதீக வேதாந்தத்தை எதிர்த்துப் பீறிட்ட வெகுமக்களின் உணர்வுகளை உடனடியாக எதிர்கொள்வதற்கு மாறாக அவற்றை உள்வாங்கிக் கொண்டு அந்த எதிர்ப்புகளையும் தனது ஒரு பகுதியாக நிறுவுவது மாத்திரமே வைதீக வேதாந்தம் தனது முக்கியச் செயலாகக் கொண்டிருக்கிறது. சரி அன்பரே வேதம் கேட்ட சூத்திரன் சம்புகன் காதில் ஊற்றப்பட்ட காய்ச்சிய ஈயத்தின் வலிக்கு நீங்கள் என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள். கட்டை விரலை இழந்த ஏகலைவனின் குரலை நீங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் போகிறீர்கள்.

இந்துமதம் என்கிற பெயரில் இந்துத்துவத்தை நிலைநாட்ட முயலும் அவருக்கு வேதகாலப் பெண்ணின் நிலைக்கும் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்தின் போதான பெண்ணின் நிலையைப் பற்றியும் மனுதர்மத்தின் பின்னான பெண்ணின் நிலைக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா ? பெண்ணை படிப்படியாக அடிமைப்படுத்தப்படும் போக்கினை நாம் இந்த மூன்றின் வாயிலாகவே தெரிந்து கொள்ளமுடியும். இன்றைக்கு இந்து என்று இவரால் முன்னிருத்தப் படும் பெயரும் ‘செமிட்டிய உளவியல் போக்கினைக் ‘ கொண்டிருக்கும் பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசால் சூட்டப்பட்டது என்பது இவருக்குத் தெரியுமோ இல்லையோ காஞ்சி சங்கரமட சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு நன்றாகத் தெரியும் அதனால்தான் தன் தெய்வத்தின் குரல் நூலில் அவர், நாம் ஆங்கிலேயனுக்கு நன்றி சொல்ல வேண்டும் அவன் மாத்திரம் இல்லை என்றால் இங்கே ஒரு பொதுப் பெயரால் யாராலும் நம்மை ஒன்றிணைத்திருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அவருக்கும் அடிமை மோகம் தான் என்று சொல்லிவிடுவாரா சின்னக்கருப்பன் ?

பக்தி இயக்கம் என்பதே வெகுமக்களின் இயக்கமாக வைதீக வேதாந்த மரபிற்கு எதிர்வினையாகத் தோன்றியதுதான். அதனால்தான் ‘தேவமொழியான ‘ சமஸ்கிருதத்திற்கு மாற்றாக அந்தந்தப் பகுதியின் வெகுமக்கள் மொழியிலேயே அது நடந்தது. நீங்கள் பக்தி இயக்கத்தின் பெண்கள் அனைவரையும் வாசித்துப் பாருங்கள் உங்களுக்கு அதிலுள்ள போக்கு புரியும். கன்னடப் பகுதியில் வந்த வீரசைவ மரபான லிங்காயத் எனப்படும் பிரிவினரான அக்கமாதேவி உடையேதும் அணியாத திகம்பரியாய் பசவரை நோக்கிய பயணத்தில் நாம் அதைப் புரிந்து கொள்ள முடியும். பெண்ணென்றால் திருமணம் மாத்திரமே என்ற நிலையைக் கடவுளைக் காதலித்து மறுத்த ஆண்டாளைப் புரிந்து கொள்ள முடியும். ஆண்டாளின் திருப்பாவைக்கு எதிராக இங்கே சைவம் ஆண்களால் பாடப்பட்ட திருவெம்பாவையை முன்வைத்ததை நினைவில் கொள்ளுங்கள். விதவையானதால் தலை மழித்துக் கொள்ள வேண்டும் எனற ஆதிக்கத்தை நிராகரித்து திருப்பதி வெங்கடேசனை வரித்துப் பாடத்துவங்கிய ஆந்திராவின் வெங்கமாம்பா பக்தி இயக்கப் பெண். இராஜபுத்திரர்களில் கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு மாறாக மீரா உயிருடன் இருந்து கண்ணன் குறித்துப் பாடித்திருந்ததை நாம் நினைவிருத்திக் கொள்ள வேண்டும். கணவனின் சந்தேகம் என்பதையும் புனிதவதி காரைக்கால் அம்மையாராக மாறுவதையும் தொடர்புபடுத்த வேண்டியதும் முக்கியம். பக்தி இயக்கப் பெண்கள் யாரும் தம்மை இந்து எனச் சொல்லியது இல்லை என்பதே உண்மை. மாறாக அவர்கள் தங்களை வைணவராகவும் சைவராகவும் பதிவு செய்திருக்கின்றனர் என்பதுதான் நிகழ்ந்தது. ஆனால் இந்தியாவின் இந்து மதத்தின் நீண்ட நெடும் பயணத்தில் ஒரேயொரு தலித் பெண்ணை அவளின் தனி அடையாளங்களுடன் உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா ? இந்துமதம் யாரையேனும் கொளுத்தியிருக்கிறதா என்று கேட்கிறார் திரு.சின்னக்கருப்பன். வெறும் கொளுத்தல் மட்டுமா ? ‘பாசிப்பல் மாசுமெய்யர் ‘ ‘ஊத்தை வாயர் ‘ ‘மந்தி போல் திரியும் அந்தகர்கள் ‘ என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதை தேவாரத்தில் காணலாம். சமணர்களையும் சாக்கியர்களையும் ‘கூடு மேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளோனே ‘ என்று தொண்டரிப்பொடியாழ்வர் வேண்டியதையும் சாக்கியப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுள்ளம் வேண்டுவதாக சம்மந்தர் பாடியதும் இவர்கள் பாடியதை சேர சோழ பாண்டிய மன்னர்கள் துணைகொண்டு இவர்கள் நிறைவேற்றியதையும் நாம் காணலாம். எட்டாயிரம் சமணர்களைக் கழுவேற்றியது தமிழகத்தின் மதுரையில்தான். சமணர்கள் என்ற பன்மைச் சொல் சமணப் பெண் துறவியரையும் சேர்த்ததுதான் என்பதை எப்படி விளங்க மறுக்கிறார். ஒரு உதாரணம் இது. இன்னும் எத்தனையோ சம்பவங்களை புள்ளிவிவரங்களை என்னால் தரமுடியும். இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு என்ற இந்துமதத் துறவியான சுவாமி தர்மதீர்த்தரின் நூலை வாசித்துப் பாருங்கள் உங்களுக்கே நிறையத் தெரியும்.

இனத்தூய்மை பேணல் என்பதில் துவங்கியதுதான் பெண்ணை அவளின் இயங்கு தளத்தை முற்றாகக் கவிழ்த்த அடக்கி வைக்கும் சிறைக்கூடம். இங்கேயிருந்த இனத்தூய்மை பேணல் என்பதில் துவங்கியதுதான் சாதிய அடுக்குமானமும் தீண்டாமையும் தீட்டும். இதில் எப்படி ஒரு பெருமிதத்தைக் காண்கிறார் திரு.சின்னக்கருப்பன். உடன்கட்டை ஏறுதலும் தேவதாசி முறையும் விதவைக்கோலமும் சிறு குழந்தைத் திருமணத்தையும் எப்படி மறந்து மறுத்து ஒருவரால் இந்துமத பாலியல் உளவியல் சிந்தனை மரபு என்பதன் வாயிலான இந்துத்துவப் பிளிறலை முன்வைக்க முடிகிறது என்பதை மீண்டும் சிந்தித்துப் பார்க்கிறேன். அவரின் கட்டுரை வாயிலாக எனக்குக் காட்சிக்கு வருவதெல்லாம் ?ிட்லரின் ஸ்வஸ்திகா கொடியும் அதன் முன்னான அணிவகுப்பும்தான். பொதுவாக எந்த மதமும் அமைப்பும் பெண்ணை இரண்டாம் உயிரியாகவே நடத்துகிறது. அது உலகின் எந்த மதமாயினும் சரி. ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவள் பெண். அனைத்துவிதமான சூழலிலும் முழு அடிமையாக நிலைநிறுத்தப்பட்டு, நடத்தப்படுபவள் பெண் என்ற அடிப்படை உண்மையிலிருந்து அவர் இனித் தன் பிளிறல்களைத் தொடர்வது குறித்து சிந்திக்கட்டும்.

அன்புடன்

நா.இரா.குழலினி

kuzhalini@rediffmail.com

Series Navigation