நல்லாமல் நன்றியெது ?

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

இராம.கி.


0 O 0

[வறண்டு கிடக்கும் சிவகங்கைச் சீமையில் இருந்து வேளாண்மைக்குப் புலம்பெயர்வது இன்று நேற்றல்ல; பல தலைமுறைகளாக நடக்கின்ற பழக்கம் தான்; ஒரு காலத்தில் பர்மா (இந்தச் சீமையும் புதுக்கோட்டைச் சீமையும் பர்மாவின் அரிசி விளைப்பைத் தூக்கி நிறுத்தியது ஒரு காலம்.); பிறகு தஞ்சைத் தரணி; இப்பொழுது எல்லாம் பிறண்டு போயிற்று; வறண்டு போயிற்று. கூலிக்கும் குத்தகைக்கும் போன மக்கள், காவிரியும் பொய்த்தபின், இனிச் சிவகங்கைக்குத் திரும்பவேண்டியது தானே ? இவர்களைப் போய் நன்றித் திருவிழவாம் பொங்கலைக் கொண்டாடச் சொன்னால், அது விவரம் கெட்ட தனமாக இல்லையா ? நல்லது நடந்தால் தானே நன்றி சொல்ல முடியும் ?

இருந்தாலும் அவன் நம்பிக்கை இழக்கவில்லை; நாலு தலை முறைக்கும் அப்புறம், தன் தாய், தன் அப்பன் பட்ட பாட்டிற்கும் அப்புறம், தங்கள் குலதெய்வம் தன் கொடிவழியைக் காப்பாறும் என்று அவன் நாளைக் கடத்துகிறான்.]

(நண்பர் திரு. கோ.திருநாவுக்கரசு தமிழலுக மின் மடற் குழுவில் ஒருபொழுது இட்ட மின்னஞ்சல், இந்தப் பாவின் உள்ளடக்கத்திற்கு ஒரு பொறியாக அமைந்தது. அவருக்கு நன்றி)

0 O 0

மூலத்தில் பாட்டன் முதுபாட்டன் எல்லோரும்
நாலைஞ்சு மாதங்கள் நாடுவிட்டு நாடுபோயி
ஏலேசாக் கப்பலெடுத் தேகியதும், பர்மாவில்
வேளாமை செய்ஞ்சு விளைபெற்ற தோர்காலம்!

மாந்தளையும், மோல்மீனும், மைநாங்கும், நத்தலினும்,
ஈந்தட்டா, பாசியனும், (இ)ரங்கோனும், கம்பாரும்,
சேர்ந்திருந்தார் ஊரெங்கும்; செய்வினையாக் கண்ணுபட்டு,
ஓய்ந்ததெலாம் போராலே; உள்ளூரு சேர்ந்தாக;

கொண்டுவந்த காசெல்லாம் கூடாகிப் போய்ச்சேர,
கண்டுமுதல் காண வழியொன்று வேண்டாமோ ?
அண்டியவர் எத்தனைநாள் ஆடுவது ? உள்ளூரில்
மண்டிக் கிடந்திருந்த செம்புழுதி மண்திருத்தி,

முள்ளுக் கருவேலி மொய்ங்களையைக் கொத்திவிட்டு,
தொள்ளி உழுதும் தொலையாத சிவகங்கைப்
பள்ளும், பரப்பும், பழனங்கள் விட்டெறிந்து,
வெள்ளை மனசோட, வேகாத வெய்யிலிலே,

வீடுசொந்தம் போக்கி, விதிச்சதிது என்றுசொல்லி,
காடு துறந்து, களம்பார்த்து, நீள்நடந்து,
நாடுவிட்டு, மண்ணுவிட்டு, நாயா அலைஞ்சிருந்து,
பாடுபட்டு வெள்ளாமை பார்ப்பமின்னு நாடிவந்தோம்,

அந்நாள் அறந்தாங்கி அண்டைநிலம் தாண்டிவந்து
தஞ்சைத் தரணியிலே; தாள்பார்த்துக் குத்தகைக்கு;
சொன்னதுதான் மேல்வாரம்; சொலிகதிரை ஈர்க்கும்வரை
தென்னைக் கூடாரம்; தேய்ஞ்ச பிழைப்பாச்சு;

அன்று தொடர்ந்தகதை ஆண்டும் நடைபழகி
சென்று குழுவாகக் செய்கூலிக் குத்தகைக்கும்
குன்றிக் குனிஞ்சிருந்து, கொல்லையெலாம் பாடுபட்டு,
இன்றோடு நாலாச்சு, எங்கள் தலைமுறைக்கு;

சோறுசொகம் இல்லாம, சோகம் குறையாம,
தாறுமறு வாழ்க்கைத் தடங்கூட மாறவில்லை;
மாறாக் கடன்கப்பி மாய்ஞ்சிருந்து போகுமட்டும்;
நீறாகிச் சுண்ணாம்பா நீர்த்ததுதான் மிச்சகதை;

ஆரழுதா ? அத்தனைக்கும் ஆற்றாக் கருக்கொடியில்
வேரறுந்து நான்பொறக்க வேர்த்தாளே எங்காத்தா ?
மாருக்குப் பாலுவத்தி மத்தவுக பால்கொடுத்து
சீருக்குப் பிள்ளை, செகத்தில் வளர்த்தெடுத்தா!

கால்நடந்து, சோர்வடைஞ்சு, கண்டபடி வேலைசெய்ஞ்சு,
தோல்சுருங்கிக் கூனடைஞ்சு, தோற்றாரே எங்கப்பா!
வேளை வரும்போது, வெத்துவேட்டா ஆனபின்னால்,
பாழடைஞ்சு போன பழங்கதையில் நல்லதெது ?

அட்டாலும் ஆசை யாரைத்தான் ஒட்டாது ?
தட்டாமல் இந்தாண்டு தாராளக் குத்தகையில்,
கொட்டி முழக்கிக் கொழுதாகச் சேர்த்துருக்கி
வெற்றியெங் காலம் விளையுமெனக் காத்திருந்தேன்;

பொங்கல் வரும்போது போய்விடும்,நான் பட்டதெலாம்;
எங்கள் கடன்தீரும்; எம்பொண்ணு கல்யாணம்
குங்குமம் மஞ்சளொடு கூடிவரும்; வாழ்வெல்லாம்
தங்கும் மகிழ்ச்சியதைத் தாருமெனக் காத்திருந்தேன்;

தெக்கணத்துப் போனகதிர்த் தேய்ந்தொடுங்கி உத்தரத்தின்
பக்கம் திரும்புவதால் பாரெங்கும் கொண்டாட,
சொக்கும் சுடரோன் சுறவத்துள் ஒன்றியபின்
எக்கிவரும் நேரமிது; எல்லோரும் கூடிநின்னு

வக்கணையாத் தேன்கரும்பு; வள்ளிக் கிழங்கு;மஞ்சள்;
பக்கில் பனங்கிழங்கு: பானைப் புதுச்சோறு:
செக்கப் பறங்கி; செழும்புடலை; வாழை;இஞ்சி;
சக்கரையில் பொங்கலிடச் சாமிவரம் கேட்டிருந்தேன்!

கேட்டதெலாம் வாய்ச்சிருமோ ? கேடெதென்னு தோணலியே!
சேற்றோடு சாலுழுது, சீர்சம்பாச் நெல்விதைச்சு,
நாற்றை நலம்பார்த்து, நட்டு,மணிப் பால்பிடிக்க,
நீட்டி வரப்புயர, நீரிறைக்கக் காத்திருந்தா,

பொக்கும் மழையுமில்லை; பொன்னிகிளை வாய்க்காலின்
பக்கத்தில் நீர்வரவுப் பாய்ச்சலில்லை; ஏமாந்தோம்;
வக்கில்லா மக்களுக்கு வாழும்வகை போயிருச்சே ?
மக்கள் மனங்கலங்கி மாயிறப்போல் ஆயிருச்சே!

செல்லச் சிவகங்கைச் சீமைப் பரப்பெல்லாம்,
கல்லை குளங்குட்டை கம்மாய்கள் வத்தியதால்,
தொல்லாறு காவிரிதான் தோதுபடும் என்று சொல்லி,
எல்லோரும் இங்கிணைஞ்சு, ஏருழவு செய்யவந்தா,

காவிரிலே நீரில்லை, கன்னடத்தான் வழிமறிச்சு;
தீவிளிக்குப் பொங்கல்வரை தீரலையே சிக்கலெலாம்;
தாவுக் குறுவையொடு தாளடியும் போயிருச்சு;
நாவிளிச்சு யார்கேப்பா ? நல்லதெது ? நன்றியெது ?

எல்லென்ற சூரியனே எங்கும் நிறைஞ்சொளிர,
நெல்லென்ற கூலம் நிறமஞ்சள் காரணந்தான்!
நெல்லறுத்துக் கூடிவச்சு, நெல்லாகிப் போனதெலாம்
நல்லாகும்;, நலமென்று, நாலுபேரு சொல்லுவாக

நல்லுதலே நன்றாகும்; நன்றாகிச் சேர்ந்தோங்கச்
சொல்லுவது ‘நன்றி ‘ியென; சொல்லாழம் யாரறிவா ?
பொல்லாத நேரமிது! போக்கறுத்து ஓலமிடத்
தொல்லை நிறையவிட்டு, தோளயர்க்கும் காலமிது!

நன்றித் திருவிழவோ ? யாருக்கு நன்றிசொல்ல ?
கன்றி நிலந்தட்டி கட்டி வெடிச்சிருச்சு;
முந்தி முளைச்சதெலாம் மொட்டையெனச் சூம்பிடுச்சு;
கன்றுகளும் மாடுகளும் காய்ஞ்சே ஒடுங்கிருச்சு;

இன்னமுமே பாடுபட்டு எப்பப் பயிருவர ?
முன்னாலே முச்சூடாச் சம்பா முழுகிருச்சே ?
இந்நாள் தினமலரை ஏந்திப் படிச்சீரா ?
தன்னிலைமை தாங்காம தற்கொலைக்குப் போனகதை;

வீரைய்யன் கேணிவெட்டி வேய்ந்தரையை மூட்டியதும்,
சூரைக் கடன்சூழ சோர்ந்துபோயி மாய்ஞ்சகதை;
தூறுகட்டித் தொங்கி தொடருவது சண்முகமாம்;
ஏருகட்டிப் பாடுபட எங்கே வழியிருக்கு ?

வெள்ளாமை நீரடைச்சு வெட்கமே இல்லாம
தள்ளிநின்னு, கஞ்சிதரத் தொட்டி; உணவளிப்பாம்;
பொல்லாத வேளைக்கு பொய்ப்பேச்சா நன்றிசொல்லி
அள்ளி முடிஞ்சதுபோல் ஆலுவதோ நாங்கலெலாம் ?

பட்டிருந்த காலில் படுமென்று பாட்டிசொலும்;
தொட்டகதை எல்லாமே தொய்ஞ்சழிஞ்சு சம்பாவில்,
எட்டியினி நன்றிசொல யாரிருக்கா, தொட்டியத்தான்
வட்டத் துணையொன்றே வாழ்வெல்லாம் காக்கணுமாம்!

*வாளுக்கு வேலி வணங்கித் தொழுதிருந்த
ஆளத்தி! அய்யன்! அவன்சேவு கப்பெருமாள்!
பாளைக் குடத்துப் பதினெண் படிக்கருப்பன்!
தாளை வணங்கித் தலைதாழ்த்தி வேண்டிருப்போம்!

* வாளுக்கு வேலி சிவகங்கைப் பக்கத்தில் மருது பாண்டியர் காலத்தில் இருந்த மாவீரன். அவன் கதையைக் கலைஞரின் ‘தென்பாண்டிச் சிங்கம் ‘ புதினத்தில் அருமையாகச் சொல்லியிருப்பார். வெள்ளையர்களால் பின்னப்பட்ட அவன் இறுதி, கத்தப்பட்டு என்ற சிற்றூரில், இந்த அய்யனார் கோவிலுக்கு முன்னரே நடந்தது. சிவகங்கைப் பக்கத்து மக்கள் பலருக்கும் கத்தப்பட்டு சேவுகப்பெருமாள் அய்யனாரே குலதெய்வம். தொட்டியக் கருப்பனும், பதினெட்டாம் படிக் கருப்பனும் அங்குள்ள காவல் தெய்வங்கள்.

***
poo@giasmd01.vsnl.net.in

Series Navigation