நம்பிக்கை

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


:-
*******************

திரையரங்கோ., கோயிலோ.,
முன்னேற்பாடுகளுடன்
பெரும்பாடாய்.,
திட்டமிட்டேதான் நடக்கிறது….
சந்திக்கச் செல்வதற்கான முஸ்தீபும்.,
பழகிப்போன இதே போன்றதான
ஏமாற்றமும்…

விருந்து மண்டபமோ.,
பிறந்தநாள் விழாவோ.,
புகைப்படச் சிரிப்புக்களில்
இல்லாத தன்னை உணர்ந்து.,
கரைந்து போவதாய்க் கனக்கிறது…

கல்யாணக் கூடமோ.,
சாலையோரப் பூங்காவோ.,
கழுத்து வலிக்க கண்ணை
நெருடிக்கொண்டே இருக்கிறது.,
வாயிற்கதவுகளும்.,
விளக்குக் கம்பங்களும்..

தேடுதலின் முடிவில்
கல் இடறிக் கட்டை விரல்
ரத்தம் அறிவிக்கிறது..
ஏதோ ஒன்றைத் தேடுதலில்
தன்னைத் தொலைத்தது..

இற்று விழும் போதெல்லாம்
சுற்றி வரச் செய்கிறது..
சுற்றும் பூமியைப் போல
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..

Series Navigation