நமது அகில உலகக் கலாசார சமுதாயம்

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

வி எஸ் நைபால்


நவம்பர் 5, 1990 நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து

11 வருடங்களுக்கு முன்பு, ஈரான் இந்தோனேஷியா, மலேசியா பாகிஸ்தான் போன்ற அரபு அல்லாத இஸ்லாமிய தேசங்களில் இருக்கும் முஸ்லீம்களை எது கோபத்துக்கு உந்தியது என்பதைப் புரிந்து கொள்ள பல மாதங்கள் பிரயாணம் செய்வதற்கு முன்னர் வரைக்கும் உலக சமுதாயம் பற்றி எனக்கு ஒரு அபிப்ராயமும் கிடையாது. முஸ்லீம் கோபம் அப்போதுதான் சற்று தெரிய ஆரம்பித்திருந்தது. எனது சமூகத்தின் மக்களைப் போன்ற மக்களின் உள்ளே பிரயாணம் செய்வது போலத்தான் இருக்கும் எனக் கருதியிருந்தேன். இந்தியர்களில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்கள். எங்கள் இருவருக்கும் ஒரே போன்ற 19ஆம் நூற்றாண்டு காலனியாதிக்கத்தின் கீழான வரலாறு உண்டு. ஆனால் என் அனுபவம் நான் எதிர்பார்த்தது போல இருக்கவில்லை.

ஒரே வரலாறு இருப்பினும், நான் வேறு வழியில் பிரயாணம் செய்திருந்தேன். உள்ளுணர்வு சார்ந்த, சடங்கு நிறைந்த இந்து பின்னணியில் ஆரம்பித்து, எதிர்கால வாய்ப்பே இல்லாத டிரினிடாட் தேச காலனியாதிக்கத்தின் கீழ் வளர்ந்தேன். நான் பல அறிவுப் படிகளின் வழியேயும், பல சுய அறிவுப் படிகளின் வழியேயும் வந்தேன். எனக்கு கேள்வி கேட்பதற்கும், அறிவு சேர்த்துக்கொள்ளும் உபாயங்களும் அளிக்கப்பட்டிருந்தன. என் தலையில் ஐந்து அல்லது ஆறு வித்தியாசமான கலாச்சார கருத்துருவங்களை எடுத்து செல்ல முடியும். மத நம்பிக்கையின் காரணமாக, அராபியரல்லாத இந்த முஸ்லீம் மக்கள் அவர்களது கலாச்சார அறிவும், வரலாற்று அறிவும், பிரக்ஞையும் தங்களது மத நம்பிக்கையால் அழிக்கப்பட்டு இருப்பதை நான் இந்த காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த மக்களின் உள்ளே பிரயாணம் செய்தபோது உணர்ந்தேன். அதே நேரத்தில் உலகத்தின் இன்னொரு பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த என்னுள், என்னுடைய அத்தனை கலாச்சார, வரலாற்று அறிவும் பிரக்ஞையும் வளர்க்கப்பட்டிருந்ததையும் உணர்ந்தேன்.

என் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு – ஈரானில் ஷா இன்னமும் ஆட்சியில் இருந்தார் — அமெரிக்காவில் ஒரு சிறிய நாவல் வெளியாயிற்று. நஹீத் ரோச்லின் எழுதிய ‘ வெளிநாட்டுக் காரி ‘ . அரசியலற்ற , உரத்த குரலில் அல்லாத ஒரு முறையில் , ஓர் ஈரான் இளம்பெண் வரப்போகிற வெறித்தனத்திற்குக் கட்டியம் கூறுவது போல் இருந்தது. இதன் மையப் பாத்திரம் ஓர் ஈரான் பெண்மணி. பாஸ்டனில் உயிரியல் ஆய்வு செய்பவள். அமெரிக்கனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வசதியாய் இருப்பவள்.

ஆனால் விடுமுறைக்காக டெஹரான் போகும்போது தான் எங்கோ தொலைந்து போன உணர்வைப் பெறுகிறாள். தன் அமெரிக்க நாட்கள் பற்றி யோசிக்கிறாள். தெளிவாய் யோசிக்க முடியவில்லை. வெறுமையான காலமாக அந்த நாட்களை உணர்கிறாள். அங்கு அவள் தன் கட்டுப் பாட்டில் வாழ்க்கை இருந்திருக்க வில்லை என்பது போன்ற உணர்வைப் பெறுகிறாள். மூடப்பட்ட ஈரான் சமூகத்திற்கு – நம்பிக்கை எல்லாவற்றிலும் வெளிப்படுகிற ஒரு சமூகத்திற்கு, ஆன்மாவிற்கோ , விருப்பத்திற்கோ, மன வெளிப்பாட்டிற்கோ இம்மியளவும் விட்டுத் தராதபடி நம்பிக்கை நிரம்பி வழிகிற ஒரு சமூகத்திற்கு — வெளியே செல்ல அவள் தயாராய் இருக்க வில்லை என்று நமக்குப் புலப்படுகிறது.

தன் வேதனையினால் அவள் மருத்துவ மனைக்குப் போகிறாள். அவளுடைய கஷ்டம் மருத்துவருக்குப் புரிகிறது. மெல்லிய, மோகனக் குரலில் மருத்துவர் சொல்கிறார்: ‘ உனக்கு மேல் நாட்டு வியாதி. ‘ அந்த உயிரியல் ஆய்வாளி ஒரு முடிவுக்கு வருகிறாள். பாஸ்டனி அவள் வாழ்ந்த அறிவு பூர்வமான ஆனால் அர்த்தமற்ற வேலையை விட்டு விட்டு ஈரானில் தங்கி, முகத்திரை அணிந்து வாழ்க்கை நடத்த முடிவு செய்கிறாள். அந்தத் துறவு மிகவும் திருப்தி அளிப்பதொன்று. ஆனால் இந்த முடிவில் ஒரு பெரும் அறிவியக்கக் குறைபாடு உள்லது . இந்த முடிவின் ஊகம் என்னவென்றால், வெளியுலகில் மருந்துகளை ஆய்ந்து, கண்டுபிடித்து, மருத்துவச் சாதனங்களைத் தயாரிக்கிறவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களால் ஈரானிய மருத்துவ மனை தொடர்ந்து நடக்கும்.

என்னுடைய இஸ்லாமியப் பயணங்களின் போது, 1979ல், மக்களின் அணுகுமுறையில் அவர்கள் உணராமலேயே ஒரு முரண்பாடு இருக்கக் கண்டேன். டெஹரானின் ஒரு பத்திரிகை ஆசிரியர் என் நினைவுக்கு வருகிறார். இஸ்லாமியப் புரட்சியின் நடுவில் அதற்கு ஆதரவு தந்து இயங்கிய இந்தப் பத்திரிகை மிகப் பாராட்டப் பட்டதுதேழு மாதங்கள் கழித்து நான் மீண்டும் டெஹரான் சென்ற போது அந்தப் பத்திரிகையின் இதயம் இழந்து போன ஒரு நிலையில் இருந்தது. மிகப் பரபரப்பாய்ப் பணியாற்றிய முக்கிய அறைகள் வெறிச்சோடி இருந்தன. இரண்டே பேரைத் தவிர மற்றவர்கள் காணாமற் போய் விட்டார்கள். அமெரிக்க தூதுவரகம் சிறையாகி இருந்தது. பொருளாதாரச் சிக்கல். வெளிநாட்டுக் கம்பெனிகள் மூடப் பட்டு விட்டன. விளம்பரங்கள் அருகி விட்டன. பத்திரிகை ஆசிரியர் என்ன செய்வதென்று அறியாமல் இருந்தார். ஒவ்வொரு இதழும் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அமெரிக்கத் தூதுவரகப் பணியாளர்கள் பிணைக் கைதி ஆன மாதிரி, ஒரு விதத்தில் அந்தப் பத்திரிகை ஆசிரியரும் பிணைக்கைதி ஆகிவிட்டிருந்தார்.

அவருக்கு இரண்டு மகன்கள் பல்கலைக் கழகப் படிப்பு மேற்கொள்ளும் வயதில் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். ஒருவன் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தான். இன்னொருவன் அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பித்திருந்தான். இடையில் தூதுவரகத்தில் பிணைக் கைதிப் பிரசினை. இது எனக்கு வியப்பளித்த செய்தி : இஸ்லாமியப் புரட்சியின் பெரும் ஆதரவாளரான இவருக்கு தன் மகன்கள் அமெரிக்கா போவது மிக முக்கியமான விஷயமாய் இருந்தது. எனக்கு ஏற்பட்ட வியப்புப் பற்றி அந்த ஆசிரியரிடம் தெரிவித்தேன். விசாவிற்குக் காத்திருக்கும் மகனை விசேஷமாய்க் குறிப்பிட்ட அவர் சொன்னார் : ‘ அவனுடைய எதிர்காலமாயிற்றே ‘

உணர்வு பூர்வமான திருப்தி ஒரு பக்கம். எதிர்காலம் பற்றிய கவலை இன்னொரு பக்கம். எல்லோரையும் போலவே ஆசிரியரும் பிளவுண்ட மனத்தினராய் இருந்தார்.

கிழக்கிந்தியா பற்றிய ஜோசப் கான்ராடின் கதை ஒன்று : 1890ல் எழுதப் பட்டது.

உள்ளூர் ராஜா அல்லது சிற்றரசன் . கொலைகள் புரிபவன். முஸ்லிம் (இது வெளிப்படையாக்ச் சொல்லப் படவில்லை.) தன் மந்திராலோசகனை இழந்த பிறகு ஏதோ ஒரு சிக்கல் அவனுக்கு. ஓர் இரவு நீந்தி ஆங்கிலேய வர்த்தகக் கப்பலை அடைகிறான். உலகின் அடுத்த முனையிலிருந்து வந்த , பெரும் சக்திகளைக் கொண்டதாய் அவன் எண்ணும் அந்தக் கடலோடிகளை அணுகுகிறான். ஏதாவது தாயத்து அல்லது மந்திரத் தகடு கிடைக்குமா என்று கேட்கிறான். கடலோடிகளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவர்களில் ஒருவன் விக்டோரியா மகாராணி பதவியேற்ற ஆண்டுவிழாவுக்கு வெளியிடப்பட்ட ஒரு நாணயத்தை எடுத்துக் கொடுக்கிறான். ராஜாவிற்கு ஏக சந்தோஷம். இதை ஒரு நகைச்சுவைக் கதையாய் கான்ராட் எழுதவில்லை. இரண்டு பேருக்குமே தத்துவப் பிரசினைகளைத் தாங்கிய ஒரு கதை இது. அவர் கண்ட உண்மை எனக்குப் புரிகிறது. இந்தக் கதை எழுதப் பட்டு கடந்த 100 வருடங்களில், உலகின் செல்வம் பன் மடங்காகியுள்ளது. ஆற்றல்கள் வளர்ந்துள்ளன. கல்வி பரவியுள்ளது. விளிம்பு நிலையில் உள்ள மக்களின் (கான்ராடின் வார்த்தை தான்) தத்துவார்த்தக் கேவல்கள், கலவரங்கள் பெருகியுள்ளன. புரட்சிகர ஆசிரியரின் இருமனப் போக்காகட்டும், கதையில் வந்த ஆய்வுப் பெண்மணியின் துறவாகட்டும், இரண்டுமே அகில உலகக் கலாசாரத்திற்கு செலுத்தப் பட்ட பாராட்டஞ்சலி தான் – வெளிப்படையாய்க் கூறப் படாவிட்டாலும் கூட. வெறும் மந்திரத் தாயத்தை மட்டுமே அகில உலகக் கலாசாரத்திலிருந்து பெற முடியாது. – பேரார்வம் , தாழாத முயற்சி , தனித்தன்மை போன்ற கடினமான விஷயங்களையும் அதனிலிருந்து பெற வேண்டும்.

இந்த அகில உலகக் கலாசாரம் பல்லாண்டுகாலமாகக் கட்டப் பட்டு வருகிறது. அகில உலகத் தன்மையும் முன்பு இல்லை. இவ்வளவு கவர்ச்சிகரமாகவும் முன்பு இல்லை. ஐரோப்பிய விரிவாக்கம் இதற்குள் முன்னூறு வருடங்களாக இனவாதத்தை ஏற்றிவைத்துள்ளது. அதன் வேதனை இப்போதும் உண்டு.

இனவாதத்தின் கடைசி நாட்களில் நான் ட்ரினிடாடில் வளர்ந்திருந்தேன். யுத்த முடிவிற்குப் பின்பு நடந்த் பாரதூரமான மாற்றங்கள் பற்றியும்,உலகின் மற்ற பகுதிகளை இணைத்துக்கொள்ள நடக்கும் முயற்சிகள் பற்றியும் எல்லாவிதமான கருத்தோட்டங்களையும் உள்ளிணைக்க நடக்கும் முயற்சிகள் பற்றியும் அறியும் போது எனக்கு மிகுந்த உவகை ஏற்படுகிறது.

நான் ட்ரினிடாடிலிருந்து இங்கிலாந்திற்கு வந்தேன். விளிம்பிலிருந்து மையத்திற்கு. தினமும் இதைக் கண்ணுறுவோரைக் காட்டிலும் என்னால் அதைப் புதிதாக அணுக முடிகிறது. அப்படிப் பெற்ற உணர்வு – மகிழ்ச்சியைத் தேடி அடைவது பற்றியது. என் வாழ்நாள் முழுக்க இதனை உணர்ந்திருப்பினும், இந்தப் பேச்சிற்காக ஆயத்தமுற்ற தருணத்தில் மீண்டும் இதனை உணர்ந்தேன்.

பழக்கமான வார்த்தைகளை, ‘ஆமாம் அதற்கென்ன ‘ என்று உதாசீனமாக எடுத்துக்கொள்வது எளிதானது. தவறாகப் புரிந்து கொள்வதும் சுலபமானது. கலாச்சார சமுதாயத்துக்கு விளிம்பில் இருப்பவர்களுக்கும், வெளியே இருப்பவர்களுக்கும், ‘மகிழ்ச்சியை நோக்கிய முயற்சி ‘ என்பது ஒரு சமுதாயத்தின் இதயத்தில் இருக்கிறது என்பது தான் அவர்களை ஈர்க்கும் விஷயம். இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும், நூற்றாண்டில் ஆரம்பத்தில் மோசமான வரலாறு இருந்திருக்கிறது என்பதை தாண்டியும், இந்த கருத்துருவாக்கம் ஒரு முதிர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதைச் சிந்திப்பதில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இது ஒரு வளைந்து கொடுக்கும் கருத்துருவாக்கம். இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். இது ஒரு சமூகத்தைக் குறிக்கிறது. இது ஒரு விழிப்புணர்வு பெற்ற உயிரைக் குறிக்கிறது. என்னுடைய பெற்றோரின் இந்து பெற்றோர் இந்த கருத்துருவத்தைப் புரிந்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை. இதில் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. ஒரு தனிமனிதன், அவனது பொறுப்புணர்வு, அவனது தேர்வு, அறிவுஜீவியின் வாழ்க்கை, அவன் செய்யும் வேலை, அதில் உச்சத் திறமை, சாதனை எல்லாமே. இது ஒரு மகத்தான மனித கருத்துருவாக்கம். இது ஒரு நிலைப்பட்ட சமூகமாக குறுக்கிவிட முடியாது. இது ஒரு வெறித்தனத்தை உருவாக்காது. ஆனால், இது இருக்கிறது என்பது தெரிகிறது. இதனால், மற்ற நிலைப்பட்ட இறுகிய அமைப்புகள் இறுதியில் தூசாகித்தான் போகும்.

***

வி எஸ் நைபால் பல நாவல்களையும், பிரயாண கட்டுரை தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரை, மன்ஹாட்டன் நிறுவனத்தில், செய்த வால்டர் பி ரிஸ்டன் பேச்சிலிருந்து மறுஎழுத்தாக்கம் செய்யப்பட்டது.

இந்த வருட இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.

***

Series Navigation

வி எஸ் நைபால்

வி எஸ் நைபால்