‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்

0 minutes, 8 seconds Read
This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

ஞாநி


குறிப்பு:

கண்ணகி சிலை விவகாரம் தொடர்பான என் கட்டுரையை திண்ணையில் வெளியிட்டிருந்தீர்கள். அதே கட்டுரை சற்ரே சுருக்கப்பட்டு, ஜூனியர் விகடன் இதழிலும் வெளியிடப்பட்டது. அதைக் கண்டித்து ‘நந்தன் வழி ‘ இதழில் அதன் நிறுவனர் ஆசிரியர் நா. அருணாசலம் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இதோ:

பார்ப்பன வெறியர்கள் எல்லாரும் இப்போது பகுத்தறிவு பேசுகிறார்கள்…..

ரயிலில் தன்னை அவமதித்த ஒரு பட்டாளத்தானைச் செருப்பால் அடித்துப் பெண்ணி பெருமைய நிலை நாட்டினாள் ஒரு கேரளத்துப் பெண். கண்ணகியோ ஆணாதிக்கத்துக்கு அடிமையாகிப் போன ஒரு கோழை. அவளை எப்படித் தமிழ்ப் பெண்ணிற்கு எடுத்துக் காட்டாகப் புது யுகம் ஏற்கும் ‘ என்று விகடனில் வினவுகிறார் ‘ஞாநி ‘யார்.

கண்ணகி கோவலனைச் செருப்பால் அடித்திருக்க வேண்டும். சீதை ராமனைச் செருப்பால் அடித்திருக்க வேண்டும்.செருப்பால் அடிப்பவளே சிறந்த பெண்மணி. ஆடிட்டர் ராஜசேகரனைச் செருப்பால் அடித்த ஜெயலலிதாவே மாதர் குல மாணிக்கம் என்பது ‘ஞாநி ‘யார் வாதம்.

தனது மதிப்பு மரியாதைக்காக கேரளத்துப் பெண் போராடிக்கொண்டிருந்தபோது, பெண்ணுரிமை பேசும் ஞாநியார், தன் கண் எதிரே கேவலமாக நடந்துகொண்டவனைத் தட்டிக் கேட்க முடியாதது ஏன் ? அந்தப் பெண்ணின் சார்பாகப் போராடதது ஏன் ?

ஒரு பெண் கண் எதிரே இழிவு செய்யப்படும்போது இவர் ஒரு பார்வையாளர். கை கால் விளங்காத பாரிச நோயாளி. கண்ணகி சிலை விவகாரத்திலோ இவர் ஒரு பெண்ணுரிமைப் போராளி. பகுத்தறிவுப் புரட்சியாளர்.

தங்கள் வாதத்திறமை அனைத்தையும் அக்கிரகாரத்து அறிவுஜீவிகள் ஜெயல்லிதாவை நியாயப்படுத்துவதற்காகவே பயன்படுத்துகிறார்கள். இப்போது அவர்களுக்குப் பகுத்தறிவு தேவைப் படுகிறது. பெரியார் தேவைப் படுகிறார்.

கண்ணகி தனது கணவனின் வேசித்தனத்தைக் கண்டிக்காதது ஏன் ? தந்து சுயமரியாதைக்காகப் போராடாதது ஏன் ? என்று பெரியார் கேட்கலாம். ஞாநி கேட்கலாமா ? சோ கேட்கலாமா ? இந்து கேட்கலாமா ?

கண்ணகி போராடவில்லை என்பதால்தான் கண்ணகி சார்பாகப் பெரியார் போராடினார். பெரியாருக்குப் பின்னால் ஒளிய நினைக்கும் பார்ப்பனக் குஞ்சுகள் இப்போதாவது கண்ணகிக்காகப் போராடவேண்டாமா ?

பெண்ணுரிமை, பகுத்தறிவு, பெரியார் என்பதெல்லாம் இவர்களின் ஒப்பனைக்குத் தகுந்த வசனங்கள் என்பது நமக்குத்தெரியாததல்ல.

வைதீகப் பார்ப்பானை விட லெளகீகப் பர்ப்பான் ஆபத்தானவன் என்று சும்மா சொல்லிவிடவில்லை பெரியார்.

சூத்திர வேடமிடும் பார்ப்பனர்களிடமும், பார்ப்பன வேடமிடும் சூத்திரர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் எமக்குக் கற்றுத்தந்த பாடம்; பகுத்தறிவு; பயனுள்ள அரசியல் தத்துவம்.

வீரமணி, சோ, ஞாநி, பன்னீர் என்று பேராசிரியர்கள் பலர் புதிய புதிய விளக்கங்களால் தமிழகத்தை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கையில், மானமும் அறிவும் பெற்ற தமிழர்கள் தங்கள் இனத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் ஓர் இழிவான தாக்குதலாகவே கண்ணகி சிலை விவகாரத்தைக் கருதுகிறார்கள்….


மேற்கண்ட நந்தன் கட்டுரைக்கு என் பதிலை அந்த இதழுக்கு அனுப்பினேன். அவர்கள் அதை வெளியிடவில்லை. தொடர்ந்து அடுத்த இதழிலும், மேற்கண்ட தொனியிலேயே என்னை இழிவுபடுத்தி எழுதி வருகிறார்கள். இந்தச் சூழலில், அவர்கள் வெளியிடாத என் பதிலை கீழே தருகிறேன்.


நந்தன்வழி நிறுவனர் ஆசிரியர் நா. அருணாசலத்துக்கு,

ஜூனியர் விகடன் இதழில் வெளியான ‘ கண்ணகியும் திருவனந்தபுரம் மெயிலில் வந்த சேர நாட்டு இளம்பெண்ணும் ‘ என்ற என் கட்டுரையைப் பற்றி நீங்கள் நந்தன் வழியில் எழுதியதைக் கண்டேன்.

கண்ணகி பற்றி என்னுடன் கருத்து மாறுபாடு கொள்ள உங்களுக்கும், தங்களுடன் கருத்து மாறுபாடு கொள்ள எனக்கும், நம்முடன் மாறுபாடு கொள்ள மக்களுக்கும் முழு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் மாறுபாட்டை விவாதிக்கும் தொனியில் அமையவில்லை.

நீங்கள் சொல்லியிருப்பது போல பெரியார் எனக்கு புதிதாகத் தேவைப்படுபவர் அல்ல. நான் ஒன்றும் முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்கு ஏற்ப வேனிலாகவும் வெயிலாகவும், புயலாகவும் புழுதியாகவும் மாறி மாறி வாரி இறைக்கிற எழுத்துவேசி அல்ல. நீங்கள் வள்ளலாகவும் அய்யாவாகவும் நந்தன்வழி பத்திரிகை அதிபராகவும் புதிய அவதாரங்கள் எடுத்து பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்குப் பல்ல்லாண்டுகள் முன்பிலிருந்தே , நான் பத்திரிகையாளனாக பல முறை பெரியாரின் கருத்துக்களை ஆதரித்து வலியுறுத்தி எழுதி வந்திருப்பவன். வாழ்க்கையில் கடைப்பிடித்தும் வருபவன். நாத்திகனாக,சமய, சாதி சடங்குகளை நிராகரித்த சாதி மறுப்பாளனாக வாழ்ந்துவருபவன்.

1987ல் இந்திய அமைதிப்படை ஈழத்துக்குச் சென்ற்போது நீங்கள் எங்கே என்னவாக இருந்தீர்களோ, எனக்குத் தெரியாது. அப்போது நான் மறைந்த அறிஞர்கள் சாலையார், சாலினியார், இயக்குநர்வி.சி.குகநாதன், கவிஞர் மு.மேத்தா ஆகியோரோடு ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினனாக மனிதச் சங்கிலிப் போராட்ட ஏற்பாடுகளிலும் போராட்டத்திலும் ஈடுபட்டவன். 1981ல் ‘எதிரொலி ‘ ஏட்டில் பணியாற்றியபோது என் நண்பர் சின்னக் குத்தூசியுடன் இணைந்து காஞ்சி சங்கர மடத் தலைவரின் பிற்போக்கான கருத்துக்களை அவருடைய நேர் காணலின் வாயிலாக அம்பலப்படுத்தியவன்.அந்த விவகாரத்தில், நீங்கள் என்னை யாருடன் சேர்த்துப் பட்டியலிடப் பார்க்கிறீர்களோ, அந்த ‘துக்ளக் ‘ஆசிரியர் ‘சோ ‘வுடன் முரண்பட்டு நின்றவன். அண்ணாவின் ‘ சிவாஜிகண்ட் இந்து ராஜ்யம் அல்லது சந்திரமோகன் ‘ என்ற வரலாற்று முக்கியத்துவம் உள்ள நாடகத்தை தமிழ் நவீன நாடக இயக்கங்களிலேயே எங்கள் குழு ஒன்றுதான் சென்னை சபாவுக்குள்ளே சென்று அரங்கேற்றியது. அதிலே காக பட்டரை இன்றைய சங்கர மடத் தலைவராக உருவகித்து நடித்துக் காட்டியவன் நான். மண்டல் கமிஷனை ஆதரித்து, தோழர் வழக்கறிஞர் சந்துருவுடன் மேடைகளில் பேசியது தவிர, சிறு நூலொன்றும் எழுதியவன் நான். இதையெல்லாம் எப்போதும் விளம்பரம் செய்துகொள்ள நான் விரும்பியதில்லை. ஏனென்றால் இவையெல்லாம் எது சரி என்று நான் நம்புகின்றேனோ அதனால் செய்தவை. இப்போது கூட உங்கள் அறியாமையைத் தெளிவிக்கவே சொல்ல நேர்ந்தது.

என் போன்றோர் பிழைப்புக்காக பகுத்தறிவு, பெரியார் பக்கம் வந்தவர்கள் அல்ல. நாங்கள் பிறந்த சாதியின் கோளாறுகளையும், மொத்தமான சாதி அமைப்பின் கொடூரத்தையும் உணர்ந்து அதற்குக் காரணமான மதத்தையும் சேர்த்து நிராகரித்தவர்கள். அதற்கான ஞான வெளிச்சத்தை எனக்குத் தந்த பாரதியும் மார்க்சும் பெரியாரும் எல்லா சாதிகளிலும் உள்ள உங்களைப் போன்ற கொள்கை வியாபாரிகளை அடையாளம் கண்டு கொள்ளவும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

நான் வைதீகப் பார்ப்பானும் அல்ல; லெளகீகப் பார்ப்பானும் அல்ல. உங்களைப் போல சூத்திர உடலில் வலம் வரும் புதிய பார்ப்பானும் அல்ல. பார்ப்பனப் பெண்ணை இரண்டாவது தாரமாக்கிக் கொண்டு,சங்கர மடத்தலைவரை வீட்டுக்கு வரவழைத்து பாத பூஜை செய்த ஓட்டல் அதிபரின் பல-தார, பலகாரச் சுவையைப் போற்றியது உங்கள் இதழ். இன்று நீங்கள் எந்தக் கண்ணகிச் சிலைக்காகப் போராடுகிறீர்களோ, அந்த சிலைக்கு மாடலாக, தன் படத்தில் நடித்த ‘தமிழ்ப் பெண் ‘ விஜயகுமாரியை நிராகரித்துவிட்டு, தன்னுடைய பார்ப்பன சிநேகிதி கல்பனாவை ஏன் கலைஞர் கருணாநிதி தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வியை எழுப்பும் துணிச்சல் இல்லாத கோழை நீங்கள். எனவே உங்களுக்குத்தான் பெரியார் பெயரைச் சொல்லும் அருகதை இல்லை. பெரியார் பெயரையும் கருத்துக்களையும் சொல்லவும் பரப்பவும் உங்களை விடவும் என் போன்றோர்க்கு அதிகமான உரிமை உண்டு. பெரியாரைக் கூட பிராண்ட் ஆக்கி நாங்கள் மட்டுமே பேசுவோம் என்று நீங்கள் சொல்லுவது வியாபார புத்தி.

கண்ணகி மட்டுமல்ல, சீதையும், நளாயினியும், கண்ணகியின் கற்பு, பண்பாடு பற்றி உருகுகிற இன்றைய அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் பலரின் முதல் மனைவிகளும் என் தந்தையின் முதல் மனைவியும் கூட அவரவர் செருப்புகளை தம் கணவன்களுக்கெதிராகப் பயன்படுத்தியிருந்தால் அது ஒன்றும் குற்றமாகிவிடாது என்பதுதான் பெரியார் எனக்குக் கற்றுத் தந்த பார்வை.

ஆடிட்டரிடம் ஜெயலலிதா செருப்பைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆடிட்டர்களைப் பற்றி வியாபாரிகளே அறிவார்கள். சுய லாபத்துக்காக ஆடிட்டர்களை அடிக்கிற கையும் அணைக்கிற கையும் அவர்களுடையதுதான்.

ரயிலில் சேர நாட்டுப் பெண்ணிடம் பட்டாளத்தான் முறைகேடாக நடந்துகொண்ட போது, பெண்ணுரிமை பேசுகிற நான் என்ன செய்துகொண்டிருந்தேன், சும்மா இருந்தேனா, வேடிக்கை பார்த்தேனா என்று கிண்டலடிக்கிறீர்கள். கைகால் விளங்காத பாரிச நோயாளியாக நான் ஆகிவிட்டிருக்கக்கூடாதா என்ற உங்கள் ஆசை அபிலாஷைகளைச் சொல்லியிருக்கிறீர்கள். மூளையில் பாரிசம் ஏற்பட்டவர்களுக்கு அப்படித்தான் தோன்றும்.

‘அந்தப் பெண் யாருடைய உதவியையும் கோரவும் இல்லை; வந்த உதவிகளை நிராகரிக்கவும் இல்லை ‘ என்று என் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். அவளுக்கு வந்த உதவிகளில் என்னுடையதும் அடங்கும். அவள் காவல் துறைக்கு எழுதிய புகார் மனுவில் இருக்கும் இரண்டு சாட்சிகளில் நானும் ஒருவன். என் கட்டுரை அந்தப் பெண்ணின் வீரம் பற்றியும், கண்ணகியின் கோழைத் தனம் பற்றியுமே தவிர, என்னைப் பற்றிய பிரதாபங்களை எழுதுவதற்கல்ல. உங்கள் பத்திரிகையில், உங்கள் படத்தையே போட்டுக் கொண்டு, உங்களை நீங்களே வள்ளல் என்றும் அய்யா என்றும் எழுதிக் கொள்ளும், எழுதவைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவராதலால் அதையே எல்லாரிடமும் எதிர்பார்க்கிறீர்கள் போலும்.

ஜூனியர் விகடனில் வெளியான என் கட்டுரையில் ‘ கண்ணகி சிலையை அகற்றியவர்கள் மூட நம்பிக்கையாளர்கள், வேள்வி யாகப் பிரியர்கள், அராஜக அரசியல் செய்கிறவர்கள் என்பதனாலேயே கண்ணகி சிலை என்பது முற்போக்கான விஷயமாகிவிடாது ‘ என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னும், என்னை நீங்கள் ஜெயலலிதா ஆதரவாளனாக முத்திரை குத்தப் பார்ப்பது உங்களைத்தான் அடையாளம் காட்டுகிறது.

தமிழுக்கும் தமிழருக்கும் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. முடிந்தால் உங்கள் செல்வத்தையும் நேரத்தையும், உங்களுக்காக உழைக்கும் எழுத்தாளர்களையும் பகுத்தறிவு மலர் வெளியிடுவது, தமிழிசையைப் பரப்புவது, போன்ற உருப்படியான பணிகளுக்குச் செலவிடுங்கள். அது இயலாவிட்டால், நல்லது செய்தலாற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின். கண்ணகி போன்ற மனு தர்மத்தின் தமிழ் வடிவத்தைத் தொடர்ந்து பரப்பி தமிழ்ப் பெண்களை மேலும் நூறாண்டுகளுக்கு ஆண்களின் கொத்தடிமைகளாக வைக்க முயன்றால் வரலாறு உங்களை மன்னிக்காது.

இந்தக் கடிதத்தைத் துளியும் சிதைக்காமல் அப்படியே வெளியிடுமாறு கோருகிறேன்.

ஞாநி

5-1-2002


இன்றைய தமிழ்ச் சூழலில் மாறுபட்ட கருத்துக்களை தீவிரமாக,அதே சமயம் கண்ணியமாக விவாதிப்பதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது என்பது வருத்தத்துக்குரியது என்ற என் கவலையை எண்ணற்ற தமிழ் ஆர்வலர்கள் பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஞாநி

26-1-2002

Series Navigation

author

ஞாநி

ஞாநி

Similar Posts