தொலைந்த கிராமம்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

கு முனியசாமி


மண் சுவர்
அகத்தி மரவிட்டம்
கொல்லம் ஓட்டுக் கூறை
கிழக்கு பார்த்த வாசல்
இடப்பக்கத் திண்ணையில்
அப்பாவின் அப்பா
கீழே கோழிக் கூண்டு
வலப்பக்கம் அடுப்பங்கரை
அண்டா குண்டா
பாணை பண்டம்
விறகு அடுப்பு
மேலே புகை போக்கி

முன்அறை நிலையின் மேல்
முருகன் கோவனத்தில்
இடப்பக்கம் அண்ணன்
வலப்பக்கம் நினைவில்லை
அடுத்த அறை மச்சு வீடு
ஒருபக்கம் சாக்கு மூட்டைகள்
மறுமக்கம் பருத்தி குவியல்

பின்புறம் மாட்டுத் தொழுவம்
இரண்டு காளைகள்
பத்து ஆடுகள்
ஒரு ஆட்டுக்கல்
இரு குழுதாடி
புண்ணாக்கு தண்ணி

இன்னும் பின்னே
ஒரு வேப்ப மரம்
ஒரு புளியமரம்
வைக்கோல் படப்பு
கயிற்று கட்டில்
சுற்றி முள்வேலி

வடக்கு பார்த்து
மாமா வீடு
அண்ண னுக்காக
வளர்ந்து வரும்
அழகு மயில் கோமதி
அருகில் ஒரு புறாக் கூண்டு

அதையும் தாண்டி
ஒருச்று கிடங்கு
மழைக் காலத்தில்
தவளை கத்தும்

இன்னும் போனால் ஓடை
இருகரையும் கருவேலி
திறந்தவெளிக் கழிப்பிடம்
மகளிர்க்கு மட்டும்
சொல்லாத நியதி
ஐப்பசி வந்தால்
தண்ணீர் போகும்
அழுக்குகளும் சேர்ந்து போகும்

வடக்கு எல்லையில்
கிழக்கு நோக்கி பிள்ளையார்
வலப்பக்கம் தம்பி முருகன்
அதர்க்கடுத்து முத்து மாரி
வடக்கு பார்த்து காளி
அதர்க்கும் வடக்கே ஊரணி

கிழக்கே ஆரம்பப் பள்ளீ
ஒரே டீச்சர்
பெயர் உண்டுவளர்ந்தாள்
உண்மைப் பெயர் தெரியவில்லை
முன்னால் கொடிக்கம்பம்
பின்னால் சிறு தோட்டம்
ஒரு முருங்கை மரம்
ஒரு வாகை மரம்

தெற்கு எல்லையில்
சோளக் காடு
இன்னும் போனால்
மிளகாய் தோட்டம்
நடுவில் கிணறு
வற்றாத ஊற்று

கரிசல் காட்டில்
கம்புப் பயிர்
காதலர் ஒதுங்க
மஞ்சள் அத்தி புதர்
கன்னிமார் கோயில்
கருப்பன் என்கிற
காவல் தெய்வம்
குதிரை மேலே
அதிரும் தோற்றம்
குலையும் நடுங்கும்
கோபப் பார்வை

ஊரின் நடுவில் சாவடி
ஒருபக்கம்
சிறுசுகளின் குதுகூலம்
மறுபக்கம்
பெறுசுகளுக்கு தாயக் கட்டம்
மாலை நேரத்தில்
ஊர் பஞ்சாயத்து

நாராயணசாமி நாயிடு
மாமா முறை
நகை ஆசாரி
சித்தப்பா முறை
கோயில் பூசாரி
அண்ணன் முறை
மாமா மகள் பத்மா மீது
சின்ன வயதில் ஒரு ஜில்லு
சாவு என்றாலும்
சடங்கு என்றாலும்
சாதி கடந்த
வெள்ளந்தி மனிதர்கள்

இன்று
எதுவுமே இல்லை
பாதி மனிதர்கள் பரலோகத்தில்
மீதி இங்கும் அங்கும் எங்கும்
போன இடம் தெரியவில்லை
நினைவுகள்
கருப்பு வெள்ளை படமாய்
எனது கிராமம்
தொலைந்து போனது

Series Navigation

கு முனியசாமி

கு முனியசாமி