தேறுக தேறும் பொருள்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

பி.ஏ.ஷேக் தாவூத்


பேசாப் பொருட்களை பேசத் துணிதல் முக்கியமன்று. பேசப்படுகின்ற பொருள் அகத்தூய்மையுடன் அறத்தை சார்ந்து நின்று விருப்பு வெறுப்புக்களற்று பேசப்படுகின்றதா என்பதே முக்கியம். ஜூலை 24, 2009 திண்ணையில் வஹ்ஹாபிக்குச் சில கேள்விகளையும் நேசகுமாருக்குச் சில விளக்கங்களையும் அளித்துள்ள சகோதரர் முகமது அமீன் அவர்களின் கடிதமும், அதைத் தொடர்ந்த நண்பர்கள் மலர்மன்னன் மற்றும் பழனி அவர்களின் கடிதங்களின் சாராம்சத்தினாலேயே இங்கு எதிர்வினையாற்ற வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.

நண்பர் மலர்மன்னன், காட்டுமிராண்டி அரபிகளின் வாழ்க்கையில் இறை வழிபாட்டினைச் செப்பனிடுவதற்காக மட்டுமே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள் என்ற அரியதோர் உண்மையை இஸ்லாம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு அமீன் அவர்களின் கடிதத்திலிருந்து கண்டுபிடித்திருக்கிறார். ஒருவேளை அமீனை இஸ்லாத்தின் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பட்டியலில் உள்ளவர் என்று மலர்மன்னன் நினைத்து அவரின் கடிதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறாரோ என்னவோ. தூய்மையான இஸ்லாத்தில் இந்த மாதிரியான பட்டியல்கள் எல்லாம் கிடையாது. அமீன் நம்பும் (இஸ்லாம் அனுமதிக்காத) சூபியிசத்தில் வேண்டுமானால் இத்தகைய பட்டியல்கள் இஸ்லாமிய மகான்கள் அல்லது இறைநேசர்கள் என்ற ரீதியில் இருக்கலாம். இவை இங்கு பேசுபொருளும் அல்ல. முஹம்மது நபி(ஸல்) பற்றியோ அல்லது இஸ்லாத்தைப் பற்றியோ மலர்மன்னன் விமர்சனம் செய்வதாகயிருந்தால் திருக்குர்ஆனிலிருந்தோ அல்லது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களிருந்தோ மேற்கோள் காட்டினால் மட்டுமே அவற்றில் நியாயமிருக்கும். அத்தகைய மேற்கோள்களுக்கு எம்மால் முடிந்த அளவிற்கு விளக்கமும் அளிக்கமுடியும்.

இஸ்லாம் வன்முறையால் பரவியது என்ற கூற்றை எடுத்தாளும் மலர்மன்னன் போன்ற பல நபர்களின் பிரச்சனை என்னவெனில் ஒரு வினாவை தொடுப்பதற்கு முன்னரே அதற்கான விடையைத் தெரிவு செய்துவிடுவதுதான். ஒரு வினா தொடுக்கப்பட்டால் அதற்கான விடைகள் இந்த உலகத்தின் உண்மையான வரலாறுகளில் எங்கேயாவது இருக்கிறதா என்ற எத்தகைய தேடுதலுமின்றி “நானே கேள்வி நானே பதில்” என்ற பாணியில் கருத்து சொல்வது கேட்கப்பட்ட வினாவுக்கான சரியான பதிலாக இருக்காது. இது கருத்தியல் தர்மமும் கூட கிடையாது. இஸ்லாம் வன்முறையால் பரவவில்லை. அப்படி பரவ வேண்டிய தேவையும் அதற்கு இல்லை. இஸ்லாம் எந்த வன்முறையை கொண்டு இன்று அமெரிக்க தேசத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது என்பதை குற்றம் சாட்டும் நண்பர் மலர்மன்னன் விளக்க வேண்டும்.

நண்பர் பழனி, நீங்கள் வகைப்படுத்தும் மிதவாதி, அடிப்படைவாதி மற்றும் முற்போக்குவாதி என்ற பட்டங்களுக்கெல்லாம் எவை அளவீடுகள் என்பதையும் எந்த அடிப்படையில் அந்த பட்டங்களை மற்றவர்களுக்கு நீங்கள் சூட்டுகிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்கினால் நானும் பயனுறுவேன். நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் தப்பான கற்பிதங்களுக்கு முற்றிலும் தலையாட்டுபவர் முற்போக்குவாதி என்றும், கொஞ்சம் உடன்படுபவர் மிதவாதி என்றும், அனைத்தையும் மறுப்பவர் அடிப்படைவாதி என்றும் பெயர் சூட்டுவீர்களோ? சகோதரர் வஹ்ஹாபி லேபிள் ஓட்டுகிறார் என்று சொல்லிவிட்டு அந்த லேபிள் ஓட்டும் வேலையை நீங்களும் செய்கின்றீர்களே நண்பரே. அன்றைக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தவர்கள் மூட நம்பிக்கையின் மொத்த உருவமாகத் திகழ்ந்தனர் என்பதை அமீனின் கடிதத்தின் மூலமல்ல ஹதீஸ் நூல்களை படிப்பதன் மூலமும் தாராளாமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இவன்தான் படிக்க வேண்டும், இன்ன சாதிதான் தொட வேண்டும் என்று எந்த தடையுமில்லை திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் நூல்களுக்கு. அப்படிப்பட்ட மக்களை எவ்வாறு பண்படுத்தி, சகோதர பாசத்தை இஸ்லாம் கொண்டு வந்தது என்பதையும் அதை படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எக்காலத்திலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அத்தகைய மூட நம்பிக்கைகளில் விழுந்தது இல்லை என்பதையும் நீங்கள் அதிலிருந்து அறிந்து கொள்ளலாம். தாரளாமாக நீங்கள் ஆய்வும் செய்யலாம். உங்கள் கடிதத்தில் இருந்த நகைச்சுவையையும் ரசித்தே படித்தேன். (“நேசகுமாருக்கும் பதில் சொல்லும் துணிவையும் கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது”). நண்பர் பழனி அவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு: இந்த கடிதத்தை எழுதும் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ எந்த ஒரு முல்லாவும் எம்மை தம்முடைய பிடியில் வைக்கவில்லை, வைத்திருக்கவும் இயலாது. ஏனெனில் இஸ்லாத்தின் பெயரில் அவர்கள் செய்யும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத புரோகிதத்தையும் நாம் கண்டித்துக் கொண்டிருப்பதால்.

– பி.ஏ.ஷேக் தாவூத்

pasdawood@gmail.com

Series Navigation

பி.ஏ.ஷேக் தாவூத்

பி.ஏ.ஷேக் தாவூத்