திருமங்கையின் மடல்

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

எஸ் ஜெயலட்சுமி


முன்னுரை

மடல் என்றால் பொதுவாக இதழ் என்று பொருள். சங்க இலக்கியங்ளில் மடலுக்கு பனங்கருக்கு, பனை மடல், வாழைமடல் என்ற பொருளும் சொல்லப் பட்டிருக்கிறது, என்றாலும் சிறப்பாக அது பனை மடலையே குறிக்கும்இலக்கியத்தில் மடல் என்பது அகப் பொருள் துறைகளுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. தன்னை விரும்பிய தலைவியை அடைய முடியாத நிலையில் ‘மடல் ஊர்ந்தாவது அவளைப் பெறுவேன் என்று தலைவன் சொல்வதாக இத்துறை அமையும்.

தலைவன் மடலூர்தல்:

தலைவன் மடலூறத் துணிந்தவுடன் பனைமடல்களால் குதிரை வடிவம் செய்து அதன் மேலேறி பித்தனைப் போல் ஊர் நடுவே செல்வான். ஊர் அறியும்படி தன் காதலை வெளிப் படுத்த வேண்டும் என்பதே இவன் நோக்கம். அவன் மடலேறுவதைக் கண்டு ஊரார் இரக்கம் கொள்வார்கள். சான்றோர் அவனுக்கு ஆதரவு தருவார்கள். அதனால் பெண்ணின் பெற்றோரும் தங்கள் பெண்ணை அவனுக்கு மணமுடிக்க முன் வருவார்கள். இவ்வாறு காதலியை அடைவதற்காகத் தன்னை வருத்திக் கொள்ளும் தலைவன் நிலையை மடல் ஊர்தல் அல்லது மடல் மா ஏறல் என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும்.

ஆனால் அம்மடல் ஏற்றம் பெண்களுக்கு உரியதன்று, என்று தொல்காப்பியம் கூறுகிறது.

’’எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்

பொற்புடை நெறிமை இன்மையான்’’

மரபு மாறிய மடல்:

தலைவியை அடையத் தலைவன் மடலேறலாம் என்ற இலக்கிய மரபை மீறி திருமங்கை ஆழ்வார் மடல்கள் இயற்றி யுள்ளார். திருமால் மேல் காதல் கொண்ட தலைவி தன் காதலை வெளிப்படுத்தி மடலூரப் போவதாகச் சொல்கிறாள். ஆனால் அவள் மடலூர்ந்ததாகத் தெரியவில்லை. திருமங்கை ஆழ்வார் இயற்றியுள்ள ‘சிறிய திருமடலை’ அடியொற்றி இந்த ஓரங்க நாடகம் எழுதப் பட்டுள்ளது.

இடம்: ஆற்றங்கரை. திருமங்கையும் தோழியும் சந்திக்கிறார்கள்

தோழி: ‘’திருமங்கை, நான் ஊருக்குச் சென்று 15 நாட்கள் கூட ஆக

வில்லை. அதற்குள் உனக்கு என்னவாயிற்று? இப்படி

இளைத்து, மெலிந்து, பொலிவிழந்து விட்டாயே! உன் முக

அழகும் ஒளியும் எங்கே போனது? கை வளையல்களும்

நழுவுகிறதே! உடம்பு சரியில்லையா?

திருமங்கை: உடம்பா மனசா எது வென்றே சொல்லத் தெரியவில்லை.

தோழி: எவ்வளவு நாட்களாக இப்படி? என்னதான் நடந்தது என்று

புரியும்படி சொல்லேன்.

திருமங்கை: இரு, யோசித்துச் சொல்கிறேன்.(யோசிக்கிறாள்)

ஆ….நினவு வந்து விட்டது.

மங்கையின் நோய்.

’’அன்றொரு நாள் நான் பந்தாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது தெருவிலே செங்கண்மால் என்பவன், யாவரும் கண்டு மகிழும்படி குடக் கூத்தாடிக் கொண்டிருந்தான். இதைக் கண்ட என் அன்னை

யும், என் தோழிகளும், ‘’குடக் கூத்துக்காண வா’’என்று என்னையும் அழைத்துச் சென்றார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். அவனைக் கண்டேன்! அதுதான் வினையானது! என் நிறமும், என் வளையல் களும் காணாமல் போய் விட்டன! அவன்பின் போய் விட்டதோ? என்

தாயும், தோழிகளும் என்னை எவ்வளவோ தேற்றினார்கள். ஆனாலும் என்னால் முன் போல் ஆக முடியவில்லை. பித்துப் பிடித்தவள் போல் ஆகிவிட்டேன்.

இதைக் கண்டு வருந்திய என் தாய் அடியார் களின் பாததூளியை எனக்குக் காப்பாக என் நெற்றியில் பூசினாள். சாத்தனுக்கும் வேண்டிக் கொண்டாள்.ஆனால் ஒன்றும் பயனில்லை. என் மன நோயும் தீரவில்லை. என் பழைய அழகும் வரவில்லை. இதையெல்லாம் பார்த்த அக்கம் பக்கமுள்ள சில வயது முதிர்ந்த பெண்கள், குறி கேட்டுப் பார்க்கலாமே. இந்நோய்க்குக் காரணம்

என்னவென்று தெரிந்து கொள்ளலாமே என்று யோசனை சொன்னார்கள்.

கட்டுவிச்சியின் குறி:

சொல்லி வைத்தது போல் ஒரு கட்டுவிச்சியும் (குறி சொல்பவள்) வந்தாள் அவளை அழைத்து என் நோய் பற்றிச் சொன்னார்கள். அவள் ஆவேசத்தோடு முறத்திலிருந்து ஒருபிடி நெல்லை எடுத்து வீசினாள். பின் தன் கையை முகர்ந்து பார்த்தாள். பின் ‘’பேராயிரமுடையான்’’ என்றாள்

’’காரார் திருமேனி காட்டினாள்—கையதுவும்

சீரார் வலம்புரியே என்றாள், திருத்துழாய்

தாரார் நறுமாலை கட்டுரைத்தாள்.

பின் என் அன்னையிடம்

’’நீரேதும் அஞ்சல்மின்! நும் மகளை இந் நோய்செய்தான்

ஆரானும் அல்லன், அவனை நான் அறிந்தேன்’’

உனக்கும் தெரியும்படி சொல்கிறேன்’’ என்று கூறத் தொடங்கினாள்.

அவன் பெருமை:

இந்த உலகம் யாரால் அளக்கப் பட்டது?

இலங்கை மா நகரம் யாரால் வீழ்ந்தது? ஏழு நாட்களாக விடாமல் பெய்த மழையிலிருந்து யார் காப்பாற்றினார்? அமுதம் வேண்டி கடல் யாரால் கடையப் பட்டது? இதையெல்லாம் செய்தவன் எவனோ அவன்தான்.

தாமோதரன்;

ஊரிலுள்ள ஆநிரைகளை எல்லாம் மேய்த்து

உலகத்தை உண்டு உமிழ்ந்த பின்னும், ஆயர்பாடியில்

‘’ஏரார் இடை நோவ எத்தனையோ நேரமாய்சீரார் தயிர் கடைந்து’ எடுத்த வெண்ணையை இவனுக்குத் தெரியாமல்

வேறோர் பாத்திரத்தில் வைத்து உயரேயிருந்த உறியில் வைத்தனைக் கண்டு அவள் (யசோதை) போகும் வரை பொய்யுறக்கம் உறங்கி விட்டுப் பின் எழுந்து,

தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி

ஆராத வெண்னை விழுங்கினான் (அதுவும்

போதாதென்று)

மோரார் குடமும் உருட்டி விட்டான்’’

பின் ஒன்றும் அறியாதவன் போல் முன்பிருந்த இடத்தில் வந்து படுத்துக் கொண்டான். வெளியே சென்றவள் (யசோதை) திரும்பி வந்து பார்த்தபோது தான் வைத்த எதையும் காணாமல் திகைத்தாள். பின் கண்டு பிடித்து விட்டாள். இவனைத் தவிர வேறு யார் இதைச் செய்திருக்க முடியும்? நீ தானே செய்தாய்? நீ தானே வெண் ணையை விழுங்கினாய்?’’ என்று நீண்ட கயிற்றால் ஊரார் காண உரலோடு கட்டினாள். பழங்கயிற்றால் அடித்தாள் (கயிற்றால் கட்டியதால் வயிற்றில் தழும்புடன், தாமோதரனானான்) அவன் தான் இவன்.

காளிங்க நர்த்தனன்:

அது மட்டுமா? தடாகத்து நீரை நஞ்சாக

மாற்றிக் கொண்டிருந்த, எமனைப் போல் உயிர்களைக் கவர்ந்து கொண்டிருந்த, ஓராயிரம் தலைகளை உடைய காளிங்கன் மேல் பாய்ந்து தன் அழகிய சிற்றடிகளால் அவன் தலையிலே நாட்டிய மாடினான்.

’’நீரார் நெடுங்கயத்தைச் சென்றலைக்க நின்றுரப்பி

ஓராயிரம் பண வெங்கோவியல் நாகத்தை

வாராயெனக்கு’’ என்று மற்றதன் மத்தகத்துச்

சீரார் திருவடியால் பாய்ந்தான்,’’

அவனே தான் இவன்.

தசமுக சம்ஹாரன்.

சீதாப் பிராட்டியைப் போலவே தன்னை அழகு படுத்திக் கொண்டு வந்த சூர்ப்பனகையைக் காது, மூக்கு இரண் டையும் வாளால் அரிந்து அவளுடைய மூத்த சகோதரனான இராவணனின் பத்துத் தலைகளையும் அறுத்து வெற்றி கொண்ட செங்கண் மாலே தான் இவன், இன்னும் கேள் இவன் வைபவத்தை

நரசிம்மன்

தன் பெயரையே எல்லோரும் உச்சரிக்க

வேண்டும் நாராயணன் பெயரைச் சொல்லக் கூடது என்று உத்தர விட்டு அந்த நாராயணன் எங்கிருக்கிறான்? இந்தத் தூணில் இருக் கிறானா? என்று கேட்டு அளந்த தூணைத் தட்டினானே, அந்த

‘’பொன் பெயரோன் ஆகத்தைக்கூரார்ந்த வள்ளுகிரால்

கீண்டு- குடல் மாலை சீரார் திருமார்பின் மேல் கட்டி,

செங்குருதி சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள்

கொட்டி ஆரா எழுந்தானே அரியுருவாய்’’

அந்த நரசிங்கனே தான். அது மட்டுமா? வாமனனாய் வந்து மூவடி மண் வேண்டும் தருவாய் என்று வேண்டிக் கையில் நீரேற்று தான மாகப் பெற்று உலகோடு மாவலியையும் அளந்தானே அவன் தான் கடல் கடைந்தவன்

’ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்

காரார் வரை நட்டு நாகம் கயிறாகப்

பேராமல் தாங்கிக் கடைந்தான்’

வடவரையை மத்தாகி வாசுகியை

நாணாக்கி(கயிறாக்கி) கடல் வயிறு கலங்கும் படி கடைந்தான். அந்த மலை சாயாமல் இருப்பதற்காக ஆமையாகவும் தாங்கி னானே, அந்தக் கூர்மாவதாரனே தான் இவன்.

ஆனைக்கருள் புரிந்தவன்

எம்பெருமானுக்காக பூப்பறிக்க

கஜேந்திரன் சென்ற பொழுது முதலைவாயில் அகப்பட துதிக்கை

யில் தாமரை மலரைப் பற்றியபடி

’’நாராயணா! மணிவண்ணா! நாகசயனா!

என் துயர் தீர்க்க வாராய்’’

என்று கதறி ஓலமிட கருட வாகனனாய் விரைந்து சென்று சீற்றத்தோடு அம் முதலையை இரு கூறாக்கி அந்த ஆனையின் துன்பம் தீர்த்தானே அவன் தான். பேராயிரம் உடையவனே உன் பெண்ணை இந்தக் காதல் நோய் செய்தவன்’’ என்று சொன்னாள்.

தாயின் சமாதானம்

இதைக்கேட்ட என் தாய் ஒருவாறு

theetheeRuthதேறுதல் அடைந்தாள். நல்ல வேளை இவன் தான் காரணமா?

நான் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன். எந்த தெய்வக் குற்றமோ, என்ன நடக்குமோ? என்று அஞ்சினேன். இந்த நோய்க்குக் காரணமானவன் பேராயிரமுடையவன் தான் என்றால், அவன் என் பெண் விரும்பும் திருத்துழாய் மாலை தாராமல் இருப்பானா? நிச்சயம் தருவான். இவள்தான் அவனுக்கே அடிமை ஆகி விட்டாளே’’ என்று தோழியரிடம் சொல்லிக் கொஞ்சம் தெளிவடைந்தாள்.

மங்கையின் தவிப்பு.

ஆனால் நானோ? அவனைக் கண்டது

முதல் உருமாறி பிதற்றித் திரிகிறேன், அவன் நாமங்களைச் சொல்லி. குளிர்ந்த இந்த வாடைக் காற்றும் என் உடலை வருத்து கிறது. என்னை மோகமடையச் செய்கிறது. இந்தப் பெண்கள்

எல்லோரும் என்னைப் பழிப்பார்களோ என்று அஞ்சி ஒன்றும் செய்யா மலிருந்தேன். என் நெஞ்சிடம்

’’வாராய் மட நெஞ்சே! வந்து மணிவண்ணன்

சீரார் திருத்துழாய்மாலை நமக்கருளித் தாரான்,

தரும் என்ற இரண்டத்தனில் ஒன்றதனை

ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்

ஆராயுமேலும் பணி கேட்டு அ(து) அன்றெனினும்

பேராதொழியாதே போந்திடு நீ என்றேற்குக்

காரார் கடல் வண்ணன் பின்போன நெஞ்சமும்

வாராமே என்னை மறந்ததுதான்.

‘’ஏ மனமே! அவனிடம் அன்பு

செலுத்திக் காத்திருந்தது போதும். இனிமேலும் காத்திருக்க வேண் டாம். நீ சென்று, அவன் நமக்கு அருள் செய்து திருத்துழாய் மாலை யைத் தருவானா மாட்டானா என்பதைக் கேட்டு வா. யாராவது நமக்குக் கெடுதல் செய்பவர்கள் அவனிடம் சென்று இதைப் பற்றி

ஏதாவது சொன்னாலும் அவன் அதைக் கேட்டு ஆராய முற்பட்டா லும் அதையும் வந்து சொல்வாய். ஒரு வேளை ஒன்றுமே சொல்லா விட்டாலும் அங்கு தங்காமல் இங்கே வந்து விடு.’’என்று சொல்லி அனுப்பினேன்.ஆனால் கடல்வண்னன் பின்போன நெஞ்ச மும்என்னிடம் திரும்பி வராமல் என்னை மறந்து விட்டு அங்கேயே தங்கி விட்டது.

தலைவியின் நிலை

அதனால் நான் ஊரார் பரிகசிக்கும்

நிலைமைக்கு ஆளானேன். என்னிடம் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை. என் ஆவி நெருப்பில் பட்ட மெழுகாய் உருகு கிறது. ஊரிலுள்ள எல்லோரும் உறங்கினாலும் என் கண்கள் மட்டும் மூடுவதேயில்லை. நானோ அவன் நாமங்களான கேசவா, மாதவா. கோவிந்தா என்ற நாமங்களையே பிதற்றித் திரிகிறேன். காதல் வயப்பட்டவர்கள் எந்தப் பழிச் சொல்லையும் பொருட் படுத்த மாட்டார்கள். காமம் உடையவர்கள் எவருமே உலகோர் சொல்லும் அபவாதத்தைக் கேட்க மாட்டார்கள். நான் சொல்லப் போகும் பெண்ணை உங்களுக் கெல்லாம் நன்றாகத் தெரியும்

தோழி: யாரவள்?

திருமங்கை: அவள்தான் வாசவதத்தை.

தோழி: அவளைப் பற்றி இப்போ என்ன?

திருமங்கை: அவள் தன் தோழியர்கள் எல்லோரையும் விட்டு விட்டு வத்சராயர் பின்னால் பெரிய தெருவில் சென்றாள். அவன் காலில் இட்ட விலங்கோடு நடக்க, இந்த வாசவதத்தையும் அவனைப் பின் தொடர்ந்து சென்றாளே. ஊரார் அவளை இகழ்ந்தார்களா? இல்லையே.

தோழி: ஆமாம் இகழவில்லை.

திருமங்கை அதனால் நானும் அவளைப் போலவே செய்யப் போகிறேன். என் தலைவனைக் காணும் வரை திருவேங்கடம், திருக்கோவலூர், திருஊரகம், திருப்பேரகம், திருவாலி, திருத்தண் கால், திருநின்ற ஊர், திருப்புலியூர், சோலைகள் சூழ்ந்த திரு வரங்கம், திருக்கண்ணமங்கை, திருவிண்ணகர், திருக்கண்ணபுரம், திருச்சேறை, திருவழுந்தூர், திருக்குடந்தை, திருக்கடிகை, கடல் மல்லை, திருவிடவெந்தை, திருநீர்மலை,திருமாலிருஞ்சோலை, திருமோகூர், பதரிகாசிரமம், வடமதுரை வரை செல்வேன். இப்படி ஒரு இடமும் விடாமல் சென்று அந்தத் தாமரைக் கண்ணனை, தேன்துழாய்த்தாரானை, அவனுடைய பேராயிரங்களையும் பெரிய பெரிய தெருக்களில் பிதற்றித் திரிவேன்.’’

தோழி: ’’நீ இப்படித் திரிந்தால் ஊர் என்ன சொல்லும்?

திருமங்கை: ’’ஊர் என்ன சொன்னால் என்ன? ஊரார் என்னை இகழ்ந்தாலும் நான் கவலைப் படாமல் மடலூர்வேன்.’’

தோழி: ’’மடலூர்வாயா?’’

திருமங்கை: ’’ஆமாம். அன்று ஓங்கி உலகளந்தானே, அந்த உத்தமன் என்னை ஆட்கொள்ளும் வரை நான் திருநறையூரில் உலகத் தவர் அறியும் படி மடலூர்வேன்.’’

தோழி: ‘’திருமங்கை, நீ மடலூறும் நிலைமைக்கு உன்னை

அந்தத் தாமரைக் கண்ணன் ஆளாக்க மாட்டான். நீ

விரைவிலேயே அவனை அடைவாய் இது நிச்சயம்.

நேரமாகி விட்டது. அன்னை தேடுவார்கள். வா

போகலாம்.

(இருவரும் போகிறார்கள்.)

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி