திருப்பூர் : தற்கொலை நகரம்

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

சுப்ரபாரதிமணியன்


சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும்
“ தற்கொலைக்களன் “ என்று சாய கழிவைக்குறியீடாக வைத்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சமீபத்திய செய்திகளில் திருப்பூர் நகரமே ஒரு தற்கொலைக் களன் ஆகியிருப்பதை அறிய முடிகிறது.. சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலை விகிதம் திருப்பூரில் தான் அதிகம் என்பதை புள்ளி விபரக்கணக்குகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 30 தற்கொலை முயற்சிகளும், மாத்த்திற்கு 50 தற்கொலை சாவுகளும் பதிவாகின்றன. சென்றாண்டில் 495 தற்கொலை சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வாண்டின் முதல் ஆறு மாதத்தில் 350 பேர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கின்றனர்..இவர்களில் 20 வயது முதல் 40 வயதிற்குற்பட்டவரே அதிகம். அதிலும் ஆண்கள் அதிகம்.
( முகூர்த்த நாட்களில் திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நடைபெறும் திருமணங்கள்- தன்னிச்சையாக நாலைந்து யுவதிகளும், யுவன்களும் வந்து ஒரு திருமணத்தை நடத்துகிறார்கள். -, மற்றும் திருப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் நடைபெறும் இளம் வயதினரின் காதல் திருமணங்கள் ஆகியவற்றுக்கும் இந்த தற்கொலை விகித்த்திற்கும் வெகு சம்பந்தம் உண்டு. இதைத் தவிர சர்ச் நடவடிக்கைகள் தனி கவனம் பெறுகின்றன. மத மாற்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றசாட்டிலும் திருமண பந்தங்கள் அமைந்திருக்கின்றன. )
10லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரமாகி விட்டது திருப்பூர். இதில் பாதிக்கு மேல் வெளியூர்களில் இருந்து வந்த தொழிலாளர்களும், வந்து போகும் மக்களும் அடங்குவர். வெளியூர் என்பது வெளி மாவட்டங்கள் என்ற 5 வருடம் முன்பு இருந்த நிலை மாறி ஒரிசா, பீகார் போன்ற வேலை வாய்ப்பு மிகவும் குறைந்த மாநிலங்களும் இதில் அடக்கம். நேபாளம் சார்ந்த தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள் இங்கு சிலது உண்டு.
திருப்பூர் வேலை வாய்ப்புகளுக்கான ஒரு சொர்க்கம் என்று நம்பி இங்கு
படையெடுக்கிறார்கள். வேலைவாய்ப்பும் அதிக சம்பளமும் என்பது உண்மைதான். ஆனால் அடிப்படை ஆதாரங்களுக்கான செலவு என்பது இந்த அதிகப்படியான சம்பளத்தை விட குறைவாகத்தான் இருக்கிறது. வீட்டு வாடகையும், தண்ணீர் போன்றவைகளுக்காக செலவழிக்கப்படும் தொகையும் அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் நல்ல காற்றோட்டத்துடனும், ஓரளவு தண்ணீர் வசதியுடனும் வாழ்ந்தவர்கள் இங்கு புறாக்கூடு, குருவிக்கூடு வீடுகளில் வாழும் நிலை. பொதுக்கழிப்பறை கூட அதிகம் இல்லாத தெருக்கள் குப்பையால் நிரம்பி வழிகின்றன. பாலீதின் பொருட்களின் உபயோகம் அபரிமிதமாக இருக்கிறது. சாலை விரிவாக்கங்களால் மரங்கள் பிரதான சாலைகளில் அருகி விட்டன . அதனால் 5டிகிரி வெப்பம் அதிகரித்தே மிக வெப்பமான நகரமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு
.
பல சமயங்களில் வேலை நிரந்தரமின்மையும், வேலை வாய்ப்பின்மையும் பணத்தட்டுப்பாடுகளை உருவாக்குகிறது.
இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியமும், அதற்கான வட்டியும் அவர்களை மீளச் செய்வதில்லை. ஊரில் இருப்பவர்கள் சொர்க்கபுரிக்குச் சென்றிருக்கும் தங்களின் குடுமப நபரின் வருமான சேமிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் போது க்டன் வாங்குவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இந்த கடனிலிருந்து மீளவது சிரம்மாகி விடுகிறது. அதிகப்படியான உழைப்பை எதிர்பார்க்கிற நகரம் இது. எட்டு மணி நேர உழைப்பு என்பது இங்கு அமுலாக்கப்படுவதில்லை. குறைந்த்து 10 மணி நேர சிப்ப்ட் என்பதே நடைமுறையில் உள்ளது. அதிக நேரத்திற்கான இரட்டிப்பு சம்பளம் என்பது 10 மணி நேரத்தைத் தாண்டும் போது தான் சாத்தியமாகிறது. அதிக நேர உழைப்பு என்பது மனித உடலை இயந்திரமாக்கி , வயதையும், நோய்களையும் கூட்டி விடுகிறது. பனியன் கம்பனியில் வேலை செய்கிறவன் 40 வயதிற்கு மேல் வேலை செய்ய உடல் ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெற்றிருப்பதில்லை. கடன் தொல்லை போன்றவற்றிலிருந்து விடுபட தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகளை வாங்குவதிலும் தன் சேபிப்பை செலவிடுகிறான். ஒற்றை பெற்றோர் முறையிலான
.
தொழிலாளியாய் ஆண் இங்கு வந்து வேலை செய்து வருமானம் ஈட்டும் போது பெண் ஊரில் இருந்து கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளையும், வருமானமில்லாத நிலத்தயும் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது ஆண் ஊரில் இருந்து கொண்டு பெண்ணை வேலைக்கு அனுப்புவதும் பெருமளவில் நடக்கிறது. ஊரில் கணவன் சிறு விவாசாய நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து கொண்டிருப்பான். குடும்பத்தை தாயுமானவனாக இருந்து காத்துக் கொண்டிருப்பான். பெண் இங்கு வந்து சம்பாதித்து மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்து கொண்டிருப்பாள். ஒற்றைப் பெற்றோர் முறையிலான இவ்வகைத் தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி வேலை செய்யும் போது சுதந்திரமாய உணர்கிறார்கள். ஜாதி உணர்வை புறம் தள்ளி விட்டு இயல்பாய் இருக்கிறார்கள். அதிக நேரம் குறிப்பாய் இரவிலும் தொழிற்சாலையில் இருக்கும் கட்டாயத்தால் வேற்று பாலியல் தொழிலாளர்களுடனான பேச்சும், பழக்கமும் , தொடர்பும் பாலியல் தொடர்புகளாக மலர்கின்றன. .
. தொழிற்சாலை சூழலில் தனிமைப்பட்டு போயிருக்கிற தொழிலாளிக்கு பாலியல் தொடர்பு சகஜமும், இயல்புமாகிறது.. இது ஆரம்பத்தில் ஆறுதல் தந்தாலும் உளவியில் ரீதியான சிக்கல்களை ஆரம்பம் முதலே தந்து விடுகிறது. இந்த சிக்கல் தொடர்கதையாகி குற்ற நடவடிகைகளுக்கும், கொலைகளுக்கும் வழி வகுக்கின்றன. திருப்பூரில் குற்ற நடவடிக்கைகளும்,
கொலை விகிதங்களும் மிகவும் அதிகமாக இருக்கின்றன.
வெளியில் இருந்து வரும் தொழிலாளி தன்னை தொழிலாளியாக கருதுவதில்லை, அதற்க்கான உரிமைகளையும் கோருபவனாக இல்லை. மழை பெய்தால் ஊருக்குப் போய் விவசாயம் செய்யலாம் என்ற கனவில் பலர் இருக்கிறார்கள். அல்லது ஊரில் தாங்கள் பார்த்த வேலைக்கு தடங்கல் இல்லை என்றுத் தெரிகிற போது வெளியேறுப்வர்களும் இருக்கிறார்கள். அதிகப்படியான நேர உழைப்பால் அசதி மற்றும் ஓய்வின்மை அவனை வெளியேறத்துடிக்கிறவனாக்க்குகிறது.தொழிற்சாலையில் பிரச்சினை என்று வருகிற போது தொழிந்சங்கங்களை அணுகுவதை விட தொழிற்சாலையின் நிர்வாகிகளையோ, புரோக்கர்களையோ அணுகி தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வது ஏதுவாக இருக்கிறது. வாரம் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் 4 ஞாயிற்றுக் கிழமைகள் வேலை இருக்கும். மீதமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மதுவும், மூன்றாம் தரப்படங்களும் அவனுக்கு ஆறுதல் தருகின்றன. தொழ்ழிற்சங்கத்தினர் அவனை அணுகுவது கூட சிரமமாக இருக்கிறது. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ந்ல்ல பூங்காக்களோ ( இருக்கு ஒரே பூங்கா மாசடைந்த நொய்யலின் ஓரம் சாயக்கழிவு துர்நார்றங்களை வீசிக்கொண்டிருப்பதாக இருக்கிறது. பெயர் பிருந்தாவன். பெயரில் என்ன இருக்கிறது. ) இல்லை. மாவட்டம் என்று ஆகிவிட்டாஅலும் மாவட்ட்திற்கான மையநூலகமோ இல்லை. மிகக் குறைந்த கொசுக்கடி நூலகங்களே உள்ளன. அதிகப்படியான மதுபானக் கடைகளும்,( 100) அதிக பெட்ரோல் பங்குகளும் உள்ள நகரம். குடிநீருக்காக கால்கடுக்க குடும்பப் பெண்கள் நிற்கவேண்டிய நிலை. மூன்று குடிநீர் திட்டங்கள் நிறைவேறி விட்டன. அதிலும் பிரைவேட் ப்ப்ளிக் பார்ட்னர் திட்டம் என்று ஆசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பவானி தண்ணீர் திட்டம் ஒரு வகையில் தோல்வியே. குடிநீருக்காக மக்கள் பணம் தருவதை கட்டயமாக்கும் திட்டம் இது.இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின் திருப்பூர் மக்கள் தொகை இருபது லட்சத்தை தாண்டும் என்ற புள்ளிவிபரத்தை முன் வைத்து செயல்படும் திட்டங்கள் தேவையாக இருக்கின்றன. சாயத்தால் நொய்யல் ஆற்றையும் , மண்ணையும் மாசுபடுத்தி விட்டோம். அதை சுத்தம் செய்யலாம் வாருங்கள் என்று ஏற்றுமதியாளர்கள் பெரிய பெரிய பேனர்கள போட்டு தங்கள் குற்ற உணர்வை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள் சமீபத்தில். நொய்யலை சுத்தம் செய்கிறோம் என்று நகரத்தின் மையத்தில் சிறிய பகுதியை சுத்தம் செய்திருக்கிறார்கள் வளம் என்ற ஏர்றுமதியாளர்கள் சங்கத்து உறுப்பினர்கள். 1000 அங்கீகரிக்கப்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இதற்காக எரியூட்டப்படும் மரங்களும், அவற்றின் சாம்பலும் ,துண்டு பனியன்களை வீட்டு உபயோகத்திற்காக எரியூட்டப்படும் கழிவும், சாயக்கழிவும் பெரும் அபாயங்களாக மாறி உள்ளன. தினசரி இங்கு விற்கப்படும் கொசுவர்த்தி நிவாரணி சுருளும் , திரவ புட்டியின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் விற்கப்படுவதில்லை.சாயப்பட்டறைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு முறையில் நிவர்ர்த்தி செய்ய 30 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.200 நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் வைத்துள்ளன. அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உப்பின் அளவு அபரிமிதமாக இருப்பதால் பெரும் சுற்று சூழல் பாதிப்பு எற்படுகிறது.சாயக்கழிவுகளை கடலில் கலக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட போது கலைஞருக்கு நன்றி தெரிவித்து பேனர்களும், தட்டிகளும் நகரம் முழுவதும் காணப்பட்டன. சாதாரண தொழிலாளி திருப்பூருக்கு சாயப்பிரச்சினையிலிருந்து விடிவு வந்து விட்டதென்று கலைஞரைப் புகழ்ந்து நெகிழ்ந்து போய் கிடந்தான். சுற்றுச் சூழல் பாதிப்பும் , சுற்று சூழல் அமைப்புகளின் எதிர்ப்பும் மீறி அது நிறைவேறப்போவதில்லை.தொழிற்சங்கவாதிகளும் , அரசியல் தலைவர்களும் ஏற்றுமதியாளர்களாகவும், பனியன் வியாபாரிகளாகவும் உள்ள சூழல் எந்த சுற்றுச் சூழல் சார்ந்த நம்பிக்கைக்கும் இடம் தருவதில்லை. தொழிற்சங்க்க கல்வியோ, அரசியல் கல்வியோ தொழிலாளிக்குத் . தர முடியாத நிலையில் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. வெளிநாட்டு ஆர்டர்கள் வருவதும் போவதுமான ஊரில் வேலை பல சமயங்களில் நிரந்தரமில்லாத்தாகி விடுகிறது. இது தரும் பாதுகாப்பின்மை அவனை பயத்திற்குள்ளாக்கி விடுகிறது. அவன் நிரந்தர தொழிலாளியாக இல்லாமல் பீஸ் ரேட் செய்கிறவனாக , காண்டிராக்ட் ஊழியனாக மாறிய நிரந்தரத்தன்மை இங்கு அவனை பாதுகாப்பில்லாதவனாக்கி விடுகிறது. குடும்பத்தினருடன் அவன் இருக்கும் நேரம் குறைவாகவே இருக்கிறது. குடும்பத்திலும் அந்நியனாகவே இருக்கிறான்.
சமூக மனிதனாக அவன் நடமாடுவதாற்கான சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறைந்து விட்டது. கலாச்சாரத்தளத்தில் அவனின் செயல்பாடு முடக்கப்பட்டு விட்டது முந்தின தலை முறை படிப்பறிவை நிராகரித்துவிட்டு குழந்தைத்தொழிலாளியாக வளர்ந்ததின் பலனை திருப்பூரின் இன்றைய கேளிக்கை நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சார குடும்ப அமைப்புகளும், குற்ற நடவடிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. இதிலிருந்து மீண்டு அவன் சக மனிதனாகவோ, சக் தொழிலாளியாகவோ சமூகத்தில் தன்னைப் பிணைத்துக் கொளவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. இந்த .சூழல்கள் அவனை சோர்வுள்ளவனாக, மனரீதியாக பாதிப்படைந்துள்ளவனாக அவனை மாற்றி விட்டது. இதுவே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது. அந்நிய செலவாணி தரும் டாலர் சிட்டி என்ற அடைமொழி மாறி தற்கொலை நகரம் என்றாகி விட்டது. வணிக நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சாரமும் கலாச்சார அந்நியமாக்கலும் இதைத்தவிர வேறு எதையும் ஒரு தொழில் நகரத்தில் வாழும் மனிதனுக்குத் தந்து விடாது. திருப்பூரின் தொழில் வளர்ச்சி தந்திருக்கும் நிரந்த போனஸ் இது.
சுப்ரபாரதிமணியன் , subrabharathi@gmail.com

Series Navigation