திராவிடக்கனவுகள்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

புதியமாதவி, மும்பை


எங்கள் தமிழமுதே
எண்ணத்தின் போர்வாளே-உன்
திராவிடக் கனவெல்லாம்
கனவாகிப் போனதினால்
காவிரி நதிகூட -இன்று
மணலாகிப் போனதுவோ ?

தமிழ் தேசியத்தை
தாங்கிப் பிடித்தவனே-தேசிய
ஓட்டுச் சந்தையில் -எங்கள்
வீட்டை விற்றதினால்
கண்ணகி சிலைக்கூட -இன்று
காணாமல் போனதுவோ ?

உன்கவிதைப் படித்துவிட்டு
தன்கவிதை தந்தவர்கள்
வெள்ளித்திரை உலகில்
வீணாகிப் போனதினால்
கல்விக் கூடங்கள் -தமிழ்
கண்ணிழந்து போனதுவோ ?

உன் புறநானுறெல்லாம்
புழுதிப்பட்டுப் போனதினால்
அகநானுறே இன்று
அதிரடிப் படையாகட்டும்!
புறப்படட்டும் போர்ப்படை -தமிழ்
போர்முரசு கொட்டட்டும்!

அரபிக்கடல் அஞ்சட்டும்!
வங்கக்கடல் வாழ்த்தட்டும்!-இனி
இந்துப் பெருங்கடல்
இடம்மாறிப் போகட்டும்!
இமயம் எழுந்துவந்து -திரு
வள்ளுவன்தாள் பணியட்டும்!

இது நடக்கட்டும்!-அதுவரை
இமைகள் மூடாதே!
எழுதியது போதும் -பூவே
எடுத்துவிடு போர்வாளை!
பாவேந்தன் கனவல்ல!-அவன்
பாடல்களும் கனவல்ல!!!

***
puthiyamaadhavi@hotmail.com

புதியமாதவி,
மும்பை 400 042

Series Navigation