தினேசுவரி கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

தினேசுவரி


1. உன் மரணங்களும் என் இருத்தல்களும்….

என் வார்த்தைகளில்
தினம் நிகழும்
உன் மரணங்கள்
எனக்கு
பழக்கமாகிவிட்டது……

என் இருத்தல்கள்
உன் மரணத்தால்
நிகழ்வதாக நீ
கருதினால்
இப்பொழுதே
மீண்டும் நீ
இறந்து
விடலாம்…

என் இருத்தல்
பறிக்கப்படும் போது
உன் இருத்தல்கள்
அங்கீகரிக்கப்படலாம்
என் மரணத்தில்….

அது நடந்தேரும்
என் பல
மரணங்களுக்குப்
பிறகு……..

2. எது நான்…………எது நீ…?

சொற்களில்
நான் ஒளிந்துக்
கொண்டுள்ளதாக
நீ சொல்லும்
அனுமானங்களும்…

என் சிரிப்புக்குப்
பின்னால்
மட்டுமே
என் உலகமும்
வியாபித்துள்ளதையும்….

பல வண்ணங்களில்
என் ஆசைகளின்
சாயங்கள்
வெளுப்பதாகவும்…

சில பகல்களில்
நான்
நட்சத்திரமாகவும்…..

என்னை
நன்றாக அடையாளங்கண்டு
கொண்டாய்…

நீ யார்
என்பதை
மறந்து…..
3. இழப்பு

அந்த மழையில்
நான்
கரைந்ததற்காக
நீ கண்ணீர்
சிந்தும்
வேளையில்
என் இருத்தல்
மண்ணாகி விட்டது….

மீண்டும்
ஒரு இருத்தலில்
முடிந்தால்
கரைவதற்கு
முன்பே
வாழ்ந்து விடுவோம்….

– தினேசுவரி, மலேசியா

salthana82@yahoo.com.my

Series Navigation

தினேசுவரி,மலேசியா

தினேசுவரி,மலேசியா