தினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

சொதப்பப்பா


பிரதமரின் தலைக்கு மேல் சிம்மாசனம் போட்டால்தான் நான் பிரதமர் கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்வேன் – ஜெயலலிதா அதிரடி

தமிழ்நாட்டில் விமானநிலையக் கட்டிடம் திறப்புவிழாவில் கலந்து கொள்ளாமல் பகிஷ்காரம் செய்த ஜெயலலிதா இன்று அதிரடியாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘பிரதமரின் பக்கத்திலேயே எனக்கு இடம் கொடுப்பதாக கூறினாலும் அதை தமிழக மக்களின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் கருத்தில் கொண்டு மறுத்துவிட்டேன். நான் பிரதமரின் தலைக்கு மேல் ஒரு சிம்மாசனம் வைத்தால்தான் நான் அங்கு உட்கார்ந்து எல்லோரையும் ஆசீர்வதிப்பேன் என்று கூறிக்கொள்கிறேன் ‘ என்று அறிக்கை இருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதை, தன்மானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கையை ஆதரிப்பதாக வேறுவழியின்றி கலைஞர் மு கருணாநிதி கூறியதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

ரேஷன் கடைகள் எல்லாம் மூடப்படும் – ஜெயலலிதா அறிவிப்பு.

‘தன்னுடைய புரட்சிகரமான அரசு புரட்சிகரமான அறிக்கைகள் மூலமே எல்லாவற்றையும் செய்துவருவதால், தமிழ் நாட்டில் வாழும் எல்லோரையும் பணக்காரர்கள் என்று அறிவிக்க இருக்கிறது ‘ என்று அம்மா குடிமகள் செல்வி டாக்டர் புரட்சித்தலைவி ஜே. ஜெயலலிதா தெரிவித்தார்.

எல்லோரும் பணக்காரர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதால் இனி ரேஷன் கடைகள் தேவையில்லை என்றும், அவை மூடப்பட்டுவிடும் என்றும் அதிமுக பிரதிநிதிகளின் பரத்த கரவொலிக்கு நடுவே தெரிவித்தார். ரேஷன் அரிசி , கோதுமை , ரவா, பாமாயில் போன்ற பொருட்களை இனிமேல் குடிமகள் சந்தையில் வாங்கிக் கொள்ளலாம் என்று முதல்வர் தெரிவித்தார். உழவர் சந்தை இனி குடிமகள் சந்தை என்று அழைக்கப் படும் என்றும் , அநியாய விலைக்கு அ தி மு க ஆட்களை வைத்து திறந்த குடிமகள் சந்தையிலே எல்லாப் பொருட்களும் இனிமேல் கிடைக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார். குடிமகள்களைப் பற்றிக் கவலைப் படாமல் உழவர் சந்தை திறந்த கருணாநிதியின் ஆணவப் போக்கைக் கண்டித்து சூடான உரையாற்றினார் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை ஆட்சேபித்து சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய எதிர்கட்சியினரை வேட்டி பிடித்து இழுத்து அதிமுகவினர் ரகளை செய்ததாகவும், வேட்டி பிடித்து இழுத்ததை அவைக்குறிப்பிலிருந்து நீக்க அவைத்தலைவர் காளிமுத்து உத்தரவிட்டதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர் வேட்டியை நீக்க முயற்சி செய்த போது, அவைத்தலைவர், வேட்டியைப் பற்றிய குறிப்பை மட்டும் நீக்கினால் போதும் என்று தெரிவித்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

ஜெயலலிதா தொடங்கி வைக்கும் பெருங்குடிமகனே – பெருங்குடிமகளே – இசை நிகழ்ச்சி இன்று சென்னையில் ஆரம்பம்.

ரேஷன் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு பொழுது போக்கு மட்டும் இருந்தால் போதும் என்று நன்கு அறிந்த தமிழ்நாட்டு அரசாங்கம் இன்று ‘பெருங்குடிமகளே – பெருங்குடிமகனே ‘ நாட்டிய நாடகத்தை ஆரம்பித்துவைக்கிறது.

இதில் அனைத்து சினிமா கலைஞர்களும், நாடக நடிகர்களும் கட்டாயம் கலந்து கொண்டு, பெருங்குடிமகனே பெருங்குடிமகளே என்று ஒருவரை ஒருவர் பார்த்து பாடி ஆட வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பாரதிராஜா இதனை வரவேற்று பஸ் ஒன்றில் எல்லா நடிக நடிகைகளையும் ஏற்றிக் கொண்டு வருவதாய் வாக்குறுதி அளித்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

*****

திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில் இடிக்கப் படும்: முதல்வர் உத்தரவு

ராணி மேரி கல்லூரிக்கு வெகுகாலம் முன்னாலேயே கட்டப்பட்டதால் , பழுதடைந்த பார்த்தசாரதி கோயிலை இடித்து, அரசு ஊழியர்களுக்கான காண்டான் கட்டப் படும் என்று முதல்வர் இன்று அறிவித்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு ஊழியர்கள் தம்முடைய இருக்கைகளைக் காட்டிலும் காண்டானில் தான் மிக அதிக நேரம் செலவு செய்கிறார்கள் என்பதால், அவர்களுக்குரிய வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டியது அரசின் கடமை என்று ஜெயலலிதா குறிப்பிட்டதாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

என் ஜி ஓ சங்கம் இதை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று முடிவு செய்யாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. காண்டான் புதிதாய் வந்தால் நல்லது தான், ஆனால் பார்த்தசாரதி கோயிலுக்குப் போகும் எங்களின் மனைவி, மகள் போன்ற குடிமகள்கள் கோபித்துக் கொள்வார்களே என்று சங்க நிர்வாகிகள் தயங்குவதாக

பார்த்தசாரதி கோயிலை இடிப்பதில் தவறேதும் இல்லை என்று ஞாநி தெரிவித்ததாய் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. பெரியார் வழி நின்று மூடப்பழக்கங்களைச் சாடும் எனக்கு பார்த்தசாரதி கோயில் இடிப்பது பெரிய விஷயமாய்த் தெரியவில்லை என்று ஞாநி தீம்தரிகிடவில் கட்டுரை எழுதியிருப்பதாகவும் சில நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

கோயிலை இடிக்கக் கூடாது என்று சொல்லவில்லை கொடியவர்களால் இடிக்கப் படக் கூடாது என்று தான் சொல்கிறேன் என்று கருணாநிதியின் அறிக்கை தெரிவித்தது என சில நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லா கோவில்களிலும் அன்னதானம் போட்ட அம்மா என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று, பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் இந்த ஆதரவை திமுகவுடனான உறவு முறிவாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், அதிமுகவுடன் பாஜக உறவு கொள்ளப்போகிறது என்றும் புரிந்து கொள்ளக்கூடாது என்று பாஜக தலைவர்கள் தெரிவித்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

வழக்கம்போல குடுமிப்பிடி சண்டையில் இருந்த சோபா, இளங்கோவன் மற்றும் வாசன் அவர்களது டவுஸர், வேட்டி போன்றவைகளை தேடி எடுத்துக்கொடுக்கும் முக்கிய வேலையில் காங்கிரஸ் தொண்டர்கள் இருந்ததால், அவர்களிடம் கருத்து கேட்க இயலவில்லை என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

**

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா