தாண்டவராயன்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இருட்டைக் கிழித்துக்கொண்டு உச்சத்தில் அந்தக் குரல். சிலேட்டில் அழுந்தப்பதித்து ஆணியை இழுப்பதையொத்த அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தான் இவன். எதிரே அழுத்தமான சாம்பல்நிறச் சுவரின் அடக்கமான ரேடிய ஒளிவட்டத்துக்குள் தெரிவித்த நேரம் இரவு 1.30.

இஸாபெல் சற்றுத் தள்ளி ஆழ்ந்த நித்திரையிலிருக்கிறாள். இடதுகையைத் தோள்நோக்கி 45 டிகிரி வளைத்து தலைக்குக் கொடுத்தும் வலது கை உடலுக்கிணையாக நீண்டுங் கிடக்கிறது. அவளுக்குப் பிடித்த சென்சுவல் லேன்ழரி மெல்லிய இரவாடையில் இடுப்பைமட்டுமே ஒளித்து, டயட்டிலிருப்பதன் காரணமாகக் கூடுதலாகவே இளைத்து, சேனல் பர்ஃப்யுமின் திகட்டும் மணத்துடன், எப்போதும்போல ‘எட்டு மணிக்கு முன்னால் எழுந்திருக்கமாட்டேன் ‘ என்கின்ற சுகமான நித்திரை.

இருவரும் கடந்த ஐந்து வருடங்களாகச் பாரீஸில் சேர்ந்து வாழ்கின்றார்கள். சேர்ந்து வாழ்வதென்றால் ? இவனுடையச் சம்பிரதாயமான தாலி, மெட்டி அடையாளமின்றி, அவளுடைய சம்பிரதாயமான மோதிர அணிவித்தலின்றி, அரசு எதிர்பார்க்கும் சாட்சிகளுடனான ஒப்பந்தமுமின்றி ஒர் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் அல்லது ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து, அவரவர் உடமை, அவரவர் உரிமை என்கின்ற இலட்சுமண கோடுகளுடன், பிரிவு என்ற கதவினைத் திறந்தே வைத்து வாழ்வது. ஆக, இந்தியாவிற் பாண்டிச்சேரியைச் சேர்ந்த தாண்டவராயப்பிள்ளை பேரனும் வெங்கட்ராம்பிள்ளை அலமேலு அம்மாள் தம்பதிகளின் மூத்தபுதல்வன் கோபாலகிருஷ்ணனும் பிரான்சு நாட்டின் பொர்தோவைச் சேர்ந்த ழான் பிரான்சிஸ், சிமொன் தம்பதிகளின் இரண்டாவது குமாரத்தி இஸாபெல்லும் சேர்ந்து வாழ்கின்றார்கள்.

பொதுவாகவே எல்லாச் சேர்ந்துவாழ்தலுக்குமான பிள்ளையார் சுழியே இவர்கள் சந்திப்புக்கும் போடப்பட்டது. அப்போது, ஆயத்த ஆடைகளுக்குப் பிரசித்தமான உலகெங்கும் கிளைகள் பரப்பியிருந்த பிரெஞ்சு நிறுவனத்தின் விளம்பரத் துறையில் உதவி நிர்வாகியாகத் தேர்வு செய்யப்பட்டு, பாரீஸின் கிழக்குப் புறநகர்களில் ஒன்றான ‘எவ்ரி ‘ க்கு அனுப்பப்பட்டிருந்தான். முதலிரண்டு நாட்கள், வேறு வழியில்லாத்தால் அவசரத்துக்காக்க ஒரு பிரெஞ்சு நண்பன் வீட்டில் தங்க முடிந்தது.

முதல் நாள் வேலை முடித்து தனது நிர்வாகியிடம், தனது குடியிருப்புப் பிரச்சனையைக் குறித்துப் பேசலாம் எண்று சென்றபோதுதான் கிட்டத் தட்ட இவனின் நிலையிலேயே இருந்த அவளின் அறிமுகம். அதனைத் தொடர்ந்து, ‘இவன் ‘ என்கின்ற பஞ்சும் ‘அவள் ‘ என்கின்ற நெருப்பும் அனைத்து வசதிகளுடன் கூடிய இரு அறைகள் கொண்ட ஒர் அப்பார்ட்மெண்டில் தற்காலிகமாகப் தங்கநேரிட்டது இப்படித்தான்.

நான்கு மாதங்கள்வரை ஈர்ப்புகள் ஏதுமின்றி: காலையில் கெல்லக்சை விழுங்குவது, பாரீஸ் புறநகர் இரயிலான எர்.ஏ.எர்.பிடித்து அலுவலகம் செல்வது, மதிய உணவினை அலுவலகத்தின் எதிரேயிருக்கும் துருக்கியன் ரெஸ்டாரெண்டில் கெபாப் ஆகவோ, சேண்ட்விச் ஆகவோ வயிற்றில் திணித்து, கோக்கிட்டு நிரப்புவது, மாலை இருவரும் தங்கள் இருப்பிடம் திரும்பியவுடன் ஒருவர் பின் ஒருவராக குளியல் எடுத்து, ‘நைஸ் பீபிளை ‘ அவளும், பிடித்த ‘ஃபுட் பாலை ‘ இவனும் அவரவர் சேனல்களிற் பார்த்து, இரவில் தூக்கத்தை மட்டுமே கவனத்திற் கொண்டு தனித்தனியே படுத்து எழுந்தவர்கள்.

முரண்பாடாக ஒரு நாள் காலை இவனுடைய படுக்கையில் அவள். இரவு, கழிப்பறைக்குச் சென்று வந்தவள் அவளது அறையை அடையாளம் கொள்ளத் தவறிவிட்டதாக திரும்பச் திரும்பச் சொன்னாள். என்ன ஆச்சரியம் இரண்டு நாட்களுக்குப் பிறகு இவனுக்கும், அவனுடைய அறைக்குச் செல்லும் வழி தவறிவிட்டது. அடுத்துவந்த நாட்களில் இளமையையும் வயதையும் மதித்து, படுக்கையைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பிறகு சில குறைந்த பட்ச விதிகளோடு சேர்ந்தே இருப்பதென அவர்கள் தீர்மானித்தது, ‘நாள் தள்ளிப்போன ‘ செய்தியைக் ஓர் அதிகாலை உறவுக்குப் பிறகு அவனுடைய காதைச் செல்லமாகக் கடித்து, அவள் முணு முணுத்தபோது..

அவனுக்கு வேர்த்தது. இவ்வளவு சீக்கிரம் தங்கள் உறவு அங்கீகரிக்கபடுமென நினைக்கவில்லை. ஏதோ குற்றம் செய்துவிட்ட உணர்வு.

‘ஷெரீ, என்னை மன்னிச்சுடு. எம்மேல தவறு இருக்குது. பாதுகாப்புடன் இருந்திருக்கணும். ‘ -இவன்.

‘இல்லை. நான் அப்படி நினைக்கலை. ஏன்னா, நானும் எந்தப் பாதுகாப்பையும் எடுத்துக்கலை. சொல்லப்போனா, இதில் என் விருப்பமும் இருந்திருக்கிறது. காரணம் தெரியலை. குழந்தைக்கு ஆசைபட்ட என் மனமாகக் கூட இருக்கலாம்.. இந்தக் ‘குழந்தை ‘க்குப் பின்னால் எவ்வளவு விஷயங்கள் இருக்குது தெரியுமா ? ‘ -அவள்.

ஒவ்வொரு முறையும் இப்படித்தான். அவளுக்கு ஏதாவது ஒரு விஷயம் கிடைத்துவிடும். இவனை அரிச்சுவடி மாணவனாய் நிறுத்திவிட்டு, ஒரு நேர்க்கோட்டில், தேவைப்பட்ட இடங்களில் நிறுத்தி, அதீத ஆர்வத்துடன் தன் ஞானத்தை வெளிப்படுத்துவாள். அந்தத் தகவல்களைவிட, அவற்றின் தன்மைக்கேற்ப அவளது விழிகளும், உதடுகளும், கன்னக் குழியும் விளையாடும்- காட்டும் வர்ண ஜாலத்திற்காகவே, கைகட்டி வாய் புதைத்திருக்கிறான்.

‘ஆமாம் கோபால், ஒவ்வொரு குழந்தையும் புதிர். இந்தக் குழந்தைக்குப் பின்னே, பெற்றோரின் வரலாறு: அதாவது உன்னுடைய வரலாறு, என்னுடைய வரலாறு,. அந்த வரலாறு சம்பந்தப்பட்ட நம்மிருவரின் கலாச்சாரங்கள், நம்மிருவரின் மொழிகள், நம்மிருவரின் இனம், நம்பிருவரின் மதம்… பிறகு குழந்தையோட வரலாறு…

‘குழந்தையோட.. வரலாறு ?.. ?.. ‘

‘ம்.. இருக்குதே. ஆணா பெண்ணா ? எத்தனையாவது குழந்தை ? பிறக்கும் நாள் மற்றும் நேரம், ஆயுள் இப்படி…. ‘

‘போதும்மா.. என் மூைளைக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகம் ‘

‘இல்லை முடிச்சுடறேன். ஆனா இவ்வளவு காரணிகளிருப்பினும் இந்தக் குழந்தை நாளைக்கு, இப்படித்தானிருக்கும்ணு உங்களால சொல்ல முடியுமா ? பிறந்தபிறகு இன்னொரு வரலாறிருக்குதே! அதற்காகத்தான் குழந்தைகளே ஒரு புதிர்ன்னு சொன்னேன். – அப்பாவைப் போல பிள்ளைன்னு பழமொழி இருக்கு ‘ அப்படி நம்ம குழந்தையும் ஆயிடுமோ என்கிற பயம் ‘ ‘.

‘ஏன் எனக்கு என்ன குறைச்சல் ? என்று முகத்தைச் சுளித்துப் பொய்க் கோபம் காட்டியவன், ‘ எங்க ஊரிலேயும் தாயைபோலப் பிள்ளை நூலைப்போல சேலைன்னும் சொல்லுவம். விடு. எனக்கும்ந்தான் உன்னைப்போல குழந்தை இருந்திடுமோண்ணு பயமிருக்குது. ‘ என்று கிண்டலடித்துவிட்டு, அவள் மூக்கைச் செல்லமாகத் திருகினான்.

‘ஆமாம். உனக்கு என்ன குறைச்சல் ?. உன் அடையாளத்துலதான் குறைச்சல். உன்னுடைய இந்திய அடையாளம் குழைந்தைக்குள் விழாம பார்த்துக்கணும். ‘ அவளும் பதிலை இயல்பாகவே வைத்தாள். மெல்ல, கண்ணி வெடியைத் தூக்கி அவன் கையில் கொடுத்தாள்.

முதன் முறையாக அவளிடம் இவனறியாத இன்னொரு பக்கம். அதனைப் படிக்க விருப்பமில்லை, புரட்டமட்டுமே முடிந்தது. அவசரமாகப் புரட்டினான். ‘குழந்தை பிறக்கட்டும் பிறகு தீர்மானிப்போம். இப்போது நேரத்துக்கு வேலைக்குப் போகணும் ‘ என்று பிரச்சினையைத் திசைமாற்றினான்.

அந்த உரையாடலின் தீவிரத்தை அப்போதைக்கு உணரவில்லை. சுத்தமாக மறந்திருந்தான். அவள் அப்படி நினைக்கவில்லை என்பதை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் பின்காலையில் அறிய நேர்ந்தது. இந்திய உணவுகளில் ‘சீஸ் நான் ‘, ‘பலக் பனீர் ‘ அவளது ஆதீத விருப்பம். காலை பதினோரு மணிக்குச் சமயலைக்குச் சென்று ஏப்ரனைக் கட்டிக் கொண்டு, இந்திய மளிகைப் பொருட்களைத் தேடினால் சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் இந்தியக் கடைகளுக்குச் சென்று தவறாமல் வாங்கி வருகின்ற எந்தப் பொருளுமில்லை. கடந்த பத்து நிமிடங்களாக தேடிக்கொண்டிருக்கிறான். இவன் தேடுவதைப் அலட்சியம் செய்தவளாக, அவள் துணிகள் துவைக்கும் எந்திரத்தில் அழுக்குத் துணிகளை தேடிப்பிடித்து திணித்துக் கொண்டிருந்தாள். கோபம் வந்தது. ஏப்ரனை அவிழ்த்து எறிந்துவிட்டு, அவள் எதிரில் போய் நின்றான்.

‘இஸாபெல்..! என்ன ஆச்சு உனக்கு ? போன மாதந்தானெ இந்தியக் கடைகளுக்குச் சென்று நிறைய மளிகைப் பொருட்கள் வாங்கிவந்தேன். இப்படி திடுமென்று மாயமா மறையும்னு நான் நினைக்கல. ‘ கேட்டுவிட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

‘கோபால். இங்கே பாரு. எதுக்கு இப்படிச் சத்தம் போடற ? மாயமா மறையும்னு நீ நினைக்கல இல்ல. பின்ன எதுக்காக இந்தக் கேள்வி ? ‘

‘எனக்குத் தெரிஞ்சாகணும். காரணம் தெரிஞ்சாகணும் ‘ கூச்சலிட்டான்.

‘எனக்குப் பிடிக்கலை. காரணம் சொல்ல எனக்குத் தெரியலை. போதுமா ? ‘

முதன் முறையாக வீழ்த்தியிருந்தாள். இவனுக்குப் பேச முடியலை. ‘ச் சே ‘ என்று ஒரு வார்த்தையில் மனதைக் கொட்டிவிட்டு, அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான். மாலை ஆறுமணிக்கு அறைக்குள் நுழைந்து அவன் மார்பில் முகம் புதைத்து வெகு நேரமழுதாள். தொடர்ந்து பண்டமாற்றுச் செய்துகொண்ட உஷ்ணமுத்தங்கள் இருவரையும் அமைதிப் படுத்தின.

இரண்டொரு வாரங்கள் எந்தப் பிரச்சினையுமின்றி வழக்கம்போலக் கடந்தன. அதற்குப்பிறகு வந்த வார இறுதிகூட இவனுக்காக ‘தேவதாஸ் ‘ இந்தித் திரைப்படம், அவளுக்காக இத்தாலிய உணவு விடுதியில் சிக்கன் ரவியோலியும், ஆல்மண்ட் பிரெட் என இருவருக்கும் நன்றாகவே போயிற்று. பிறகு யார் கண்பட்டதோ ? எதிரெதிர் திசைகளில் தெரிந்தே பயணித்தார்கள்.

பிறக்கப் போகும் குழந்தை ஆண் என்று அறியவந்தபோது, அவள் போக்கில் கூடுதலாக மாறுதல். வயிற்றில் குழந்தை வளர வளர மீண்டும் வேதாளம். ஆரம்பத்தில் இவனை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு குழந்தை மருத்துவரிடம் சென்று வந்தவள், தனியாகவே செல்ல ஆரம்பித்தாள். அவள் திரும்பிவந்ததும், ஆர்வ விசாரிப்புக்காக இவன் நெருங்கும்போது, அவள் பதிலில் அலட்சியம்

அப்படித்தான் அன்றைக்கு, வற்வேற்பறையிலிருந்த தஞ்சாவூர் ஓவியத்தைக் கழட்டிக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் பாரீஸில் நடந்த இந்தியக் கண்காட்சியொன்றில் அதனை வாங்கிவந்தவள் அவள். இவன் முதலில் பொறுமையாகத்தான் பார்த்துத் கொண்டிருந்தான். ஆனால் கழட்டியவள், இவன் நிற்கின்ற திசைநோக்கி அந்தப் படத்தினை விட்டெறிந்துச் சீண்ட, காத்திருந்த கோபம் தன் குணத்தைக் காட்டிவிட்டது. அறைந்துவிட்டான். அவள் போட்டக் கூச்சலில் எட்டிப் பார்த்த வெள்ளைத் தலைகள் இவனை அருவருப்பாய்ப் பார்த்தன. பக்கத்து அப்பார்ட்மெண்டிலிருந்த கிழவி போலிஸுக்கு போன் செய்துவிட, அவர்கள் வேலைமெனக்கெட்டு வந்து எச்சரித்துவிட்டுப் போனார்கள்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவர்களுக்கிடையே பொதுவான களத்திலிருந்த விருப்பு வெறுப்புகள், இப்போதெல்லாம அவரவர் எல்லைக்குள் நின்று கொண்டன.

இருவருக்கும் பிடித்திருந்த சைனீஸ் உணவுகள் இப்போது இருவருக்குமே பிடிப்பதில்லை. பதிலாக, அவள் பிரெஞ்சு உணவு விடுதிகளிலும், இவன் இந்திய உணவு விடுதிகளிலும் முற்கரண்டிடையும் கத்தியையும் பிடிக்கின்றார்கள். முன்பெல்லாம் வீட்டிலிருக்கும் நேரங்களில், ஸ்டாரியோவில் ‘ஆந்த்ரே ரியோவின் ‘ வயலின் மென்மைக்கும், ‘ஜானி ஹாலிடே ‘ பாட்டுக்கும் அணைத்துக் கிடந்தவர்கள் ‘செலின் டியோன் ‘ ‘ஜேசுதாஸ் ‘ என பிரிந்து கிடந்தார்கள்.

இவனைப் பிடிக்கவில்லை என்று நேரடியாகச் சொல்லியிருக்கலாம். ‘எதற்காக ‘என்னுடைய ‘ அடையாளத்தின் மீது குறிவைக்கிறாள் ? முடியுமா ? என்னை, என் பிரதியை வயிற்றில் சுமந்துகொண்டு ? நான் இல்லை என்றால் எப்படி ? ‘. நினைக்க நினைக்க ஆத்திரம். இவனுக்கும் அவளுக்குமான யுத்தகளத்தில் நிராயுதபாணியாக நிறுத்தியிருக்கிறாள். முதன் முறையாக அழுதான். ‘விடமாட்டேன். ஜெயித்துக் காட்டுகிறேன் ‘. மனதுக்குள் சபதமிட்டுக்கொண்டான்.

பிரான்சுக்குப் புறப்படும்போது, தாண்டவராயப்பிள்ளை – அவனது தாத்தா, ஒட்டுத் திண்ணையிலிருந்து எழுந்திருக்காமலேயே கேட்டார்.

‘ஏண்டா தம்பி வெளிநாட்டுக்கெல்லாம் போயே ஆகணுமா ? அப்படி என்ன பெரிசா வாரிக் கொடுத்திட போறான். என்னவோ வெளிநாடு, வெளிநாடுண்ணு அலையறீங்க ? இங்கேயே ‘தஸ் புஸ் ‘ னு பேசிக்கிட்டு நம்ம மண்ண பாதி மறந்தாச்சு. அங்க போய் சுத்தமா இந்த மண்ணை, எங்களை மறக்கணும். அதுக்குத்தான் இப்படி… முருகேசனை உனக்குத் தெரியாது, உங்கப்பனுக்குத் தெரியும் என் சினேகிதன். வயல் வரப்புலே ஒண்ணாக் கிடப்போம். கூத்துப் பார்க்க ஏழு கல்லு, கழுவெளியில நடப்போம். நல்லது கெட்டதை சேர்ந்தே பார்த்திருக்கோம். செஞ்சிருக்கோம். திடார்ணு பிழைக்கப் போறேன்னு சொல்லிட்டு ஆந்திரா பக்கம் போனவந்தான். அப்புறம் நான் பாக்கலை. எப்படிடா ? இந்த மண்ணையும் மனுஷங்களையும் மறந்துட்டு போகமுடியுது. போ.!. அடுத்த முறை வரும்போது நான் இருப்பேனோ இல்லையோ. மகராசனா போயிட்டு வா ‘. துண்டின் முனையை கண்களில் ஒற்றி, முகத்தைத் திருப்பிகொண்டார். அம்மாவும் கண்களை கசக்க ஆரம்பித்துவிட்டாள்

‘ அப்பா. என்ன பேசறீங்க ? உங்களால அவன் அம்மாவும் கண்ணைக் கசக்க ஆரம்பிச்சுட்டா. இப்பெல்லாம் எல்லா நாடும் பக்கத்துலத்தான் ‘ எனத் தாத்தாவை அடக்கிய அப்பாவும் அவர் பங்குக்குக் கண்களைக் கசக்கியது, இன்றைக்கும் ஞாபகத்திலிருக்கிறது.

‘தாத்தா சொன்னது உண்மையா ? இழப்புகளுக்கு பழகிக் கொண்டோமா ? தேவைகள் அளிப்பிருக்கும் இடத்தை நோக்கிப் பயணிப்பதில் தவறில்லாமலிருகலாம். ஆனால், மண்ணிமிருந்து விடுபட்டு, மண்ணிற்குத் திரும்புவது உயிருக்கு நியதியென்றால். அது மனிதத்திற்கும் பொருந்தாதா ? பறவைகள் கூட மாலையானால் சொந்தக் கூட்டிற்குத் திரும்பும் போது, எனக்கென்ன வந்தது ? எங்கே ஒடினாலும் திரும்பவும் நம் அடையாளத்துக்கே வருவேன். ‘ சொல்லிக் கொண்டான்.

மறுபடியும் கீறிச்சிட்ட அந்தக் குரல். அவனை மட்டுமே தேடி வந்து கேட்கும் அபயக் குரல். அவனது அடையாளக் குரல். அவள் வயிற்றைத் தடவி அமைதிப் படுத்துகிறான். இஸாபெல்லின் நிறைமாத வயிற்றில் குனிந்து, அந்தக் குரலுக்கு ஆறுதலாக முணகுகிறான். ‘பயப்படாத நானிருக்கன் ‘.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளுக்குப் பிரசவவலி ஏற்பட, ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவமனையிற் சேர்த்து, பிரசவத்தின் போது உடனிருந்தான். எடை கூடிய குழந்தை, மிகச் சிரமப்பட்டாள். அதிர்ஷ்ட்ட வசமாகச் சிசரியன் தவிர்க்கப்பட்டது. தலை வெளிவந்த ஐந்தாவது நிமிடம் சுகப் பிரசவம். இஸபெல்லின் கைககளை மெல்லப் பற்றி, குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.பிரசவக் களைப்பில் உடனடியாகத் தூங்கி போனாள்.

செவிலித்தாய், குழந்தையை நெருங்கி சற்றே தடித்த ஆனால் மிருதுவான துண்டினால் குழ்ந்தை மீதிருந்த கழிவுகளை அகற்றினாள். காது மற்றும் பிற பகுதிகளிலிருந்து கிருமிகள் பற்றியறியவும், வேண்டுமெனில் கிருமிநாசினி உபயோகிக்கவும் சோதனைக்குக் கொஞ்சமாக கழிவுகளை எடுத்துக் கொண்டாள். தொப்புட்கொடியில் இரண்டு செ.மீ விட்டு மருத்துவ குறடிட்டாள். குழந்தையின் எடை, உயரம், மற்றும் தலையின் சுற்றளவு எடுத்து முடித்தாள். வலது கையில், எண்ணிட்டப் பட்டையைக் கட்டி, குழந்தைக்கான கட்டிலிலிட்டாள். இறுதியாகப் பதிவேட்டில் குழந்தை பிறந்த நேரத்தை எழுதி முடித்து பெயரினை கேட்டபோது, இவன் சொன்னான்:

‘தாண்டவராயன் ‘.

நன்றி: ‘பதிவுகள் ‘ இணைய இதழ்

****

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா