தருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

மலர்மன்னன்


நம்முடைய ஞானாசிரியன் கண்ணபிரான் தனது கீதோபதேசத்தில் பல்வேறு தத்துவ சாரங்களையும் மிகவும் தீர்மானமாகக் கூறுகிறான். இவையே நமது ஹிந்து சமயத்தின் ஆதார சுருதிகளாக இருப்பதால்தான் பகவத் கீதையை ஹிந்து சமயத்தினர் அனைவருக்கும் ஏற்ற பொது நூலாகக் கொள்கிறோம்.

ஹிந்து சமயக் கோட்பாட்டிற்கே ஆணி வேராக அமைந்துள்ள தருமம், கருமம் என்ற, ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள, ஏன் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த இரட்டைக் கோட்பாட்டை கீதையில் மிகத் தெளிவாகப் பேசிவிடுகிறான், ஸ்ரீ கிருஷ்ணன்.

இது புரியாத சிலருக்கு கீதையில் கண்ணன் சொல்லும் வர்ணாசிரம தருமம் மனிதர்களைப் பிரித்துப் பேசுவதாகவும் அவர்களிடையே ஏதோ ஏற்றத் தாழ்வைக் கற்பிப்பதுபோலவும் தோற்றமளிக்கிறது. அவரவர் தமது இயல்பிற்கும், ஈடுபாட்டிற்கும் ஆற்றலின் எல்லைக்கும் ஏற்பத் தேர்ந்துகொள்ளும், அல்லது தானாகவே அமைந்துவிடும் வாழ்க்கைமுறையை ஒழுங்கு பிசகாமல் பின்பற்றுவதைத்தான் ஒருவருக்குரிய தருமம் என்று சொல்கிறோம். வர்ணாசிரம தர்மப்படிப் பிறப்பால் அன்றி விருப்பாலும் இயல்பாலும் தான் ஏற்றுகொண்ட சமூகக் கடமை, நான்குவகை ஆசிரம தர்மங்களான ப்ரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகியவற்றை ஒழுங்கு பிசகாமல் கடைப்பிடிப்பதைத்தான் அவரவருக்குரிய தர்மத்தை அவரவரும் முறை பிசகாமல் கடைப்பிடித்தால் தனிநபரின் குடும்ப வாழ்க்கையும் சமூக இயக்கமும் ஒழுங்காக இருக்கும் என்று நம் ஞானாசிரியன் நமக்குச் சொல்லித் தருகிறான்.

வாழ்க்கையின் தொடக்கத்தில் அமையும் பிரம்மசரிய தர்மத்தின்போது அதற்குரிய கர்மமான கல்வி கேள்விகளில் ஒழுங்கு தவறாமல் முனைப்புடன் ஈடுபடாவிடில் பிற்கால வாழ்க்கையில் அதன் பாதிப்பு பிரதிபலிக்கும். பிரம்மசரிய தர்மத்தை நாம் எந்த அளவுக்கு ஒழுங்கு பிசகாமல் கடைப்பிடிக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் நமது பிற்கால வாழ்க்கை முழுவதன் போக்கும் அமையும்.

பிரம்மசரியம் எனில் வெறும் காமத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதுதான் என்று பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். அது அப்படியல்ல. அந்த வயதில் காம உணர்வு பிரதானமான கவன ஈர்ப்பாகத் தொடங்குவதால் அதை அடக்கி வைத்திருத்தலே பிரம்மசரியம் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. ஆனால், புலன்களின் மூலம் பெறும் இன்பங்கள் அனைத்தின் மீதான நாட்டத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதுதான் பிரம்மசரிய தர்மம். இவ்வாறு பிரம்மசரிய தர்மத்தைக் கடைப்பிடித்தால்தான் அந்த தர்மத்திற்குரிய கருமமான கல்வி கேள்விகளைச் சரியாக மேற்கொள்ள முடியும். அடுத்து வருகின்ற இல்லறமாகிய கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய தர்மங்களையும் ஒழுங்கு பிசகாமல் கடைப்பிடித்து அவற்றுக்குரிய கர்மங்களையும் சரியாகச் செய்து முடிக்க இயலும்.

குரு பத்தினி சமைத்துப் போடுவது எதுவாக இருப்பினும் எவ்விதப் பிரக்ஞையும் இன்றி அதைச் சாப்பிட்டு வந்த குருகுல வாச சீடன், என்றைக்குச் சாப்பிடும்போது ஒரு பதார்த்தத்தில் உப்பு குறைவாக இருக்கிறது என்று சொன்னானோ அப்போதே இவனுக்கு பிரம்மசரிய ஆசிரமம் முடிவடைந்துவிட்டதென்று குரு பத்தினி சொன்னதாகக்கூட ஒரு கதை உண்டு.

கிருஹஸ்தம் என்கிற தர்மத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் விவரிக்கத் தேவையில்லை. இரண்டு தனி நபர்கள், அதிலும் இருவேறு பாலினத்தவர்கள் ஒன்று சேர்ந்து வாழும்போது இருவருக்குமிடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் எழுவது மிகவும் இயற்கை. ஆனால் இதில் கவுரவப் பிரச்சினை நுழைந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பம் என்கிற இருவருக்குமான பொது அமைப்பு சம்பந்தப்பட்ட விஷயம் எதுவாக இருப்பினும் அதை இருவருமாகச் சேர்ந்தே விவாதித்து, முடிவு எடுக்க வேண்டும். எனது கருத்தின்படியான முடிவுதான் எடுக்கப்பட வேண்டும் என்கிற பிடிவாதம் இருவருக்குமே கூடாது. ஒருவரது கருத்திற்கு ஏற்ப முடிவை எடுப்பதற்கு இசைவாக அடுத்தவர் தனது கருத்தை விட்டுக் கொடுக்கிறபோது, அதன் பின் விளைவுக்கு எவருடைய கருத்தின்படி எடுத்த முடிவு காரணமாக இருந்ததோ அந்தக் கருத்தைத் தெரிவித்தவர்தான் பொறுப்பேற்க வேண்டும். பின் விளைவு குடுமப நலனுக்கு பாதகமாக இருப்பின் அதற்குப் பரிகாரம் காண வேண்டிய தார்மிகக் கடமையும் அவரையே சாரும். சாதகமான விளைவு எனில் அதற்காக அவர் தனது தலையில் மகுடம் சூட்டிக்கொண்டு மமதை கொள்ளாமல் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும். தனது கருத்தை விட்டுக் கொடுத்தவரை அவ்வாறு விட்டுக்கொடுத்தமைக்காகப் பாராட்டவும் வேண்டும்.

என்னதான் மிகவும் அந்நியோன்னியமான கணவன்-மனைவி உறவு என்றாலும் தனி நபர்கள் என்ற முறையில் அவரவருக்கும் ஓர் அந்தரங்கம் இருக்கவே செய்யும். ஒருவரது அந்தரங்க வட்டத்திற்குள் அனுமதியின்றி மற்றவர் பிரவேசித்தல் தகாது. அதேபோல் ஒருவர் தனது விருப்பு வெறுப்புகளை மற்றவர் மீது திணிக்கவும் கூடாது. ஒருவரது சொந்த விருப்பு வெறுப்புகளை மற்றவர் மதித்து அதில் குறுக்கிடாது இருத்தல் அவசியம்.

கிருஹஸ்த தர்மத்தின் அடிப்படையை மட்டும் என் ஆசான் ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னவாறு தெரிவித்தேன். கிருஹஸ்த தர்மத்தின் நடைமுறைகள் எல்லாம் இதிலேயே அடங்கிவிடுகின்றன. கணவன் – மனைவி எனப்படுவோர் கிருஹஸ்தம் என்கிற ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அது செலாவணியில் இருக்க வேண்டும் என்றால் சரியாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும். அதன் எந்தப் பக்கமாவது தேய்ந்தோ அடிபட்டோ போனால் முழு நாணயமே செல்லுபடியாகாமல் போய்விடும்.

கிருஹஸ்த தர்மத்திற்குரிய கருமம் இன்னதென்று விவரிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன். முக்கியமாக வருங்கால சமுதாயத்தின் தேவைக்காக ஆரோக்கியமான, அறிவுள்ள, ஒழுக்கமான சந்ததிகளைத் தோற்றுவித்துத் தருவது இந்த தர்மத்திற்கு இன்றியமையாத கர்மமாகும். இந்தக் கர்மத்தை இன்பமாகவும் முழு ஆர்வத்துடனும் மற்றவரின் மகிழ்வில் கூடுதல் மகிழ்வு காண்பதாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மஹா மாயை வேறெதிலும் இல்லாத நாட்டத்தை இந்தக் கருமத்தில் வைத்தாள். இயல்பான காம உணர்வும் இயற்கைக்கு முரணான காம இச்சையும் வெவ்வேறானவை. முன்னது பரஸ்பர அனுமதி, அனுசரிப்புடன் கர்மத்தில் ஈடுபடச் செய்வது. பின்னதோ, தனது விருப்பத்தை மட்டும் கருத்தில்கொண்டு வலுக்கட்டாயமாக இறங்குவது. இது தர்மத்திற்கு முரணான கர்மம்.

வானப் பிரஸ்தம் என்கிற தர்மம், குடும்பப் பொறுப்புகள எல்லாவற்றையும் சந்ததியாரிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டு, அவர்களுடனே அல்லது அவர்களுக்கு அருகாமையால் இருந்துகொண்டு அவர்கள் செயல்படும் பாங்கை கவனித்துக்கொண்டு மட்டுமே இருப்பது. சந்ததியினர் அவர்களாக அணுகி ஆலோசனை கேட்டாலன்றி ஆலோசனை ஏதும் வழங்காமலிருப்பது. சந்ததியினரின் குடும்ப நிர்வாக நடைமுறையில் ஏதேனும் சீரழிவு கண்ணுக்குத் தெரிந்தால் அவர்களைத் தனியாக அழைத்துப் பின் விளைவுகளை மிகவும் மென்மையாக எச்சரித்து, சரியான பாதையை மனம் நோகாத வகையில் எடுத்துக் கூறுவது. அதன் பின் ஞாபகமாக, எங்களுக்குத் தோன்றியதைச் சொன்னோம். உங்களுக்குத் தெரியாததில்லை. நீங்களாகவே ஆற அமரச் சிந்தித்து முடிவு செய்யுங்கள் என்று கூறிவிடுதல். மேலும் சந்ததியாரின் நலனுக்கு இயன்றவரை அனுசரணையாக இருப்பது. மற்ற நேரங்களில் இறையுணர்வை மேம்படுத்திக் கொள்வது. வானப்பிரஸ்த தர்மத்துடன் அதற்குரிய கர்மமும் இணைந்தே அமைந்துவிடுகிறது.

சந்நியாச தர்மம் என்பது, தனதும் தனது சந்ததியாரதுமான குடும்ப நலன் தொடர்பான உலகாயத ஈடுபாட்டை முற்றிலும் துறந்து, ஆன்மிக நாட்டத்துடன் சமூகம் அனைத்திற்கும் பொதுவான நலனில் மட்டுமே கவனம் செலுத்துவது. ஆன்மிக ஆற்றலைப் பெருக்கிக் கொண்டு அதனைச் சமூக நலனுக்குப் பயன்படுத்துவது.

இவ்வாறான வாழ்க்கைமுறையில் எந்தக் கருத்தில் பாவ புண்ணியங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன?

நாம் பிறக்கும்போதே பாவச் சுமையுடன் பிறக்கிறோம் என்றும் ஓர் அடிமையைப் போல ஆண்டவனுக்கு அடிபணிந்துவிட்டால் பாவ மன்னிப்புக் கிட்டி, அந்தச் சுமையை இறக்கி வைத்துவிடலாம் என்றும் மிகவும் எளிமையான சூத்திரம் எதுவும் நமது ஹிந்து சமயக் கோட்பாட்டில் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பக்திப் பெருக்கில் பிரலாபிக்கப் படுவதையெல்லாம் பிரமாணங்களாகக் கொள்ளக் கூடாது. அதுபோல் புராணக் கதைகளையும் முன்னெச்சரிக்கைக்கான படிப்பினைகளுக்காக என்றுதான் கொள்ள வேண்டுமேயன்றி, அவற்றையும் பிரமாணங்களாக எடுத்துக்கொள்ளலாகாது.

நம்முடைய ஞானாசிரியன் கண்ணபிரான் தனது கீதோபதேசத்தில் மிகவும் தெளிவாகவே இதைப்பற்றி எச்சரிக்கிறான்.

எவரது பாவ புண்ணியங்களையும் பரமாத்மா ஏற்பதில்லை. எனினும், உண்மையாகிய இந்த ஞானத்தை அஞ்ஞானமாகிய மாயை மறைப்பதால் ஆன்மாக்கள் மோக மாயையில் தமது பாவ புண்ணியங்களில் பரமாத்மாவை சம்பந்தப்படுத்தி மயங்கி உழல்கின்றன என்று கீதையின் ஐந்தாவது அத்தியாயத்தில் பதினைந்தாவது வாக்கில் அவன் அறிவுறுத்துகிறான். இதில் பாவம் என்பதைத் தீய செயல் என்றும் புண்ணியம் எனபதை நற் செயல் என்றும் கொள்ள வேண்டும்.

எது தீச்செயல், அதாவது பாவம், எது நற்செயல், அதாவது புண்ணியம் என்பதை எவ்வாறு நிர்ணயம் செய்வது?

எவரொருவர் தனது சுய நலத்தையே முற்றிலும் கருத்தில் கொண்டு, அதனால் பிறருக்கு பாதகம் விளையுமே என்கிற கவலையின்றி, தனது சுய நலனுக்காகப் பிறர் நலனுக்கு பாதகம் விளைவிக்கவும் தயங்காமல் மேற்கொள்ளத் துணியும் செயல் எதுவாயினும் அது தவிர்க்கப்பட வேண்டிய பாவம்.

பிறருக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமலும், பிறர் நலனுக்கு முரண்படாமலும் தனது நலன் கருதி மேற்கொள்ளும் செயல்களும், பிறர் நலன் கருதித் தனது நலனையும் விட்டுக்கொடுத்து மேற்கொள்ளும் செயல் எதுவாயினும் அதுவும் பாராட்டுக்குரிய புண்ணியம்.

மேலும், தனக்கு என்ன பலன் கிட்டும் என்று எடை போடாமல் உரிய கடமையைச் செய்துகொண்டு போவது புண்ணியம். அவ்வாறின்றித் தனது சுய நலன் கருதி ஒரு கடமையைச் செய்யாமல் இருப்பதும் அதற்குப் புறம்பான செயலைச் செய்வதும் பாவம்.

இந்த அடிப்படையில் ஒருவருக்கு அவர் மேற்கொள்ளும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பப் பலன் கிட்டும். இவ்வாறான பலன் அந்தப் பாவ புண்ணியச் செயல்களால் விளைவதேயன்றி பரமாத்மாவினால் அருளப்படுவதல்ல.

எனில், இறையருளை வேண்டுவதெல்லாம் எதற்காக? மேற்கொள்கின்ற செயல்கள் யாவும் புண்ணியமாய் அமையுமாறு நல்ல புத்தியைக் கொடு, பாவ காரியத்தில் ஆசை கொள்கிற கெடுமதி தோன்றாமல் பார்த்துக்கொள் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான். இவ்வாறு இறையருளை வேண்டிப் பெற்றுவிட்டால் செய்வன யாவும் புண்ணியமாகவே அமைந்து அவற்றுக்கு ஏற்றாற்போல் பலன்களும் நன்மையாகவே இருக்கும்.

கீதையின் ஐந்தாவது அத்தியாயம் கர்ம காண்டத்தைச் சேர்ந்தது. இதில் கர்ம யோகம், கர்ம சந்நியாச யோகம் ஆகியவை குறித்துக் கண்ணபிரான் நமக்குச் சொல்லித் தருகிறான்.

கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் ஆகிய மூன்று மார்க்கங்களை ஸ்ரீ கிருஷ்ணன் கீதோபதேசம் செய்து, நமது இயல்பிற்கும் விருப்பத்திற்கும் இந்த மூன்றினுள் எது உகந்ததாகத் தோன்றுகிறதோ அதைத் தேர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறான். எதற்காக? ஆன்மாவுக்கு முற்றிலும் இயல்பான, நிரந்தர நிலையான ஆனந்தப் பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருப்பதற்காகத்தான்!

விதியை அறிதலோடு தொடர்புடைய தர்மம், கர்மம், பாவ புண்ணியம் ஆகியவை பற்றியும் எழுது, ஆன்மிகம் தொடர்பாக நீ எழுதுகிற விதம் இளம் தலைமுறையினரான எமக்கு ஏற்புடையதாக உள்ளது என்று மேலும் மின்னஞ்சல்கள் வந்தமையால் இவ்வளவும் எழுத நேர்ந்தது.

தினமும் அதி காலை அல்லது இரவு படுக்கப் போகும் முன் பகவத் கீதையைச் சிறிது சிறிதாகப் படித்து மேலோட்டமான கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இவ்வளவுதானே என்று இருந்துவிடாமல் படித்ததை உள்ளுக்குள் அசைபோட்டவாறு இருந்தால் போதும். எவரிடமும் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. வாழ்க்கையும் சிக்கலின்றிச் செல்லும்.

நான் கீதையைக் கண்மூடித்தனமாகப் பாராயணம் செய்யச் சொல்லவில்லை. ஆனால் சிறு பிராயத்திலிருந்தே பொருள் புரிகிறதோ இல்லையோ படித்து மனனம் செய்யப் பழகிவிட்டால் உரிய வயதில் படித்ததன் பொருள் உணர்ந்து வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள இயலும். ஆகவேதான் பெரியவர்கள் இளங் குருத்து வயதில் உள்ளவர்களிடம் பொருளை விளக்காமல் வெறுமே படித்து மனப் பாடம் செய்யச் சொல்கிறார்கள். வாழ்க்கையைத் தொடங்கும் உரிய காலத்தில் அவர்களுக்குப் பொருள் தானே விளங்கும் என்பதை அவர்கள் அறிவார்கள்.
பசுமரத்தில்தான் ஆணி எளிதாகப் பதியும்.

++++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்