தரிசானாலும் தாயெனக்கு!

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

நாக.இளங்கோவன்


கையேந்தி நின்றதில்லை காசேதும் பெற்றதில்லை
கைகூப்பி வந்தவரை கைதூக்கி விட்டமண்ணே!
உன்வயிற்றில் விளைகின்ற ஒப்பற்ற முத்தையெலாம்
என்குதிரில் கொட்டிவைத்த என்வயலே புவித்தாயே!

கதிரறுத்துக் கட்டையிலே, கீழிறைந்த நெல்பொறுக்கி,
குதித்தாடிக் கூத்தாடிக் கூட்டுக்குள் போகையிலே,
கண்ணாலே கண்டதெலாம் பொன்னான நெல்மணியே;
உன்னாலே நான்வளர்ந்தேன், ஓய்வெடுப்பாய் என்நிலமே! (1)

சாமிகிட்டப் போகையிலும் போட்டதில்லை காலணியை;
பூமியுன்னைத் தொடுங்காலும் போட்டதில்லை காலணியை;
உனைப்பணிந்து ஊன்றிவைத்த ஒவ்வோரு நாத்துக்கும்
உனைமறந்து ஊட்டுவியே உகப்பான எம்பாட்டால்;

கணியுலகில் கழனிக்குக் கழிநீரும் கிட்டவில்லை
குனிந்திங்கு கூவுகின்ற குள்ளரோட பூமியிலே!;
ஊழ்பிடித்த உலகத்தின் ஓலங்கள் உறங்கும்வரை
யாழ்இசைப்பேன் ஓய்வெடுப்பாய், என்மடியில் கண்வளர்வாய்! (2)

அடித்துக் குவித்தகளம் ஆதவனின் கண்பட்டு
வெடித்து வாய்பிளந்து வீணாகப் போகுதென்று,
தாய்வீட்டுச் சீதனமாய்த் தந்தனுப்ப நெல்லின்றி
வாய்விட்டு அழுகிறியே, வாடிவிட்ட என்கழனி!;

ஆடியிலே காவேரி ஓடிவந்து சேர்ந்திட்டால்
அய்ப்பசிக்கே கதிரறுத்துக் களமெல்லாம் குவித்திடுவேன்;
நாலாறு மாசமாக நாதியின்றிப் போனதாயே,
ஓராறும் போகட்டும், ஊங்காமல் கண்ணுறங்கு! (3)

ஏர்முகத்தைத் தான்சுமந்து ஏராலே கோதிவிட்டு
வேர்ஓடும் பாதையெல்லாம் காற்றோட வைத்தகாளை
போய்முடிஞ்ச அறுப்புக்குப் போரடிச்ச கையோடு
போய்ச்சேர்ந்த இடம்தேடி பதைபதைச்சுத் தேடுறியே!

கோதிவிட்ட காளையிங்கே மேயுதற்கும் வாராமல்
சேதியின்றி சென்றதனை சொல்லிநீ அழுகிறியோ ?
உழவனுக்கு வறுமையின்னா காளைகளும் நெல்லாகும்;
அழவேண்டாம் கண்ணுறங்கு, அப்படியே என்மடியில்! (4)

வெள்ளாமை இல்லாமல், வெண்சோறும் இல்லாமல்
பொல்லாத பூமியிலே போக்கிடமும் இல்லாதார்,
இல்லாத உனைத்தேடி ஈட்டியதோ எலிக்கறிதான்!
சொல்லேதும் ஆடாமல் சோகமுறும் என்தாயே!;

பரப்பைச் சொல்லுகிற, பாதையெலாம் பச்சைநிற
வரப்பை வகுந்துவிட்டு வாய்க்காலை மூடிவிட
பாதையை மறந்துவிட்ட பித்தாயிப் பெண்போலே
கோதை தவிக்கிறியே, கொஞ்சமெனுங் கண்ணுறங்கு! (5)

தண்ணீரே கிடைக்காமல் தரிசாகிப் போனதினால்
கண்ணீரும் காய்ஞ்சுவிட்ட கழனியம்மை உனக்காக,
கனகவிச யனைத்தான் கட்டியிங்கு வந்ததைப்போல்
கங்கையவள் கைபிடிச்சுக் கரகரன்னு இழுத்துவாரேன்;

ஈசனிடம் கேட்டிருக்கேன் ஈசுவரி பார்த்திருந்தா;
ஆசையுடன் முடியவிழ்த்து அனுப்பிடுவான் தென்னாடு;
கண்ணுறங்கு அதுவரைக்கும், கண்ணுறங்கு என்மடியில்;
உன்கனவில் நான்வருவேன் கங்கையுடன் கைபின்னி!. (6)

அன்புடன்
நாக.இளங்கோவன்
மார்ச்-2004

elangov@md2.vsnl.net.in

Series Navigation