தமிழ்நாட்டுப்பாடநூல் கழகம் 1996 இல் வெளியிட்ட சமூக அறிவியல் (ஒன்பதாம் வகுப்பு) பாடநூல்

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


சிறுவர்களுக்கான பாடநூல்கள் அவர்களது உள்ளங்களில் அறிதலுக்கான தாகத்தை ஏற்படுத்த வேண்டும். வெறும் தகவல்கள் அளிப்பது மட்டுமல்ல, என்றும் தணியாத அறிவுத்தாகத்தையும் ஏற்படுத்த வேண்டும். ஒரு பத்து வயது சிறுமி அல்லது பதினான்கு வயது சிறுவனை எடுத்துக்கொண்டு அந்த இளம் மனதில் அறிவுத்தாகத்தை விதைப்பதற்கான ஒரு சாதனமாக கல்வி கருதப்பட வேண்டும். தகவல்களை அவர்கள் மனதில் புகுத்துவதற்கும் மேலாக ாபிரபஞ்சத்தின் இரகசியங்களை தைரியமாக தேடும் வேட்கைா எனும் அக்கினி குஞ்சினை அவர்கள் மனதில் ஏற்ற வேண்டும். நாளும் அவர்களது வட்டம் விரிவடைய, தேடல் ஆழமடைய பாடநூல்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. இந்த எண்ணவோட்டத்துடன் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான, சமூக அறிவியல் பாடநூலின் வரலாறுப்பகுதி ஆராயப்படுகிறது.

இந்நூல் 1996 இல் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. மறு பதிப்பு 2001 இல்.87 பக்கங்கள் கொண்ட இந்நூலின் வரலாற்றுப் பகுதி கற்காலம் முதல் தற்கால ஐரோப்பா வரையிலான உலக வரலாற்றினை மாணவ மாணவியருக்கு கற்பிக்கிறது. பதினான்கு வயது மாணவர்களுக்கான பாடநூல் இது. மானுடஇனத்தின் பரிணாம தோற்றத்துடன் இந்நூல் தொடங்குகிறது. இது உண்மையிலேயே மிக நல்ல அறிகுறி. (1980களின் தொடக்கத்தில் பரிணாமத்தை குறித்து 10 ஆம் வகுப்புக்கு மேல்தான் அறிய முடியும், அல்லது 12 ஆம் வகுப்பின் இறுதியில்.) இந்த நல்ல தொடக்கத்தை துரதிர்ஷ்டவசமாக பல தவறான

கருத்துக்களால் நிரப்பி அதன் அழகினை மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்துவிடுகிறது இப்பாடநூல்.

உதாரணமாக:

ாடார்வின் எனும் அறிவியலறிஞர் குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான் என்கிறார்.ா(பக்.2)

டார்வின் அவ்வாறு கூறவில்லை. பரிணாம அறிவியல் குறித்த பாமரத்தனமான வாசகம் இது. சில முட்டாள்தனமான மத வெறியர்கள் பரிணாமத்திற்கு எதிராக எழுப்பும் கேள்விகளில் உள்ள வாசகம் இது. மனிதன் மற்றும் குரங்குகளுக்கு பற்பல கோடி வருடங்களுக்கு முன்னர் ஒரு பொது மூதாதை இருந்ததாகவே தொல்மானுடவியல் ஆய்வுகளும் சரி டார்வினியமும் சரி நமக்கு கற்றுத்தருகிறது.

இதுவே ‘மனிதர்கள் மற்ற விலங்குகளுக்கும் இருக்கும் உறவினை டார்வின் நிரூபித்தார். நாம் குரங்குகளிலிருந்து வந்தோமா ? அல்லது குரங்குகளுக்கும் நமக்கும் ஒரு பொதுவான முன்னோர் இருந்தார்களா ? ‘ என்கிற ரீதியில் இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

ாஆதி மனிதன் ஹோமோ செப்பியன்ஸ் என வழங்கப்பட்டான்.ா (பக். 2)

மாணவர்களுக்கு குழப்பத்தை உருவாக்கும் வாசகம். இது குறித்து இக்கட்டுரையாளன் இரு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் பேசிய போது கிடைத்தவை,

சிறுவன்: ‘பழைய காலத்தில காட்டுமிராண்டிய ஹோமோ செப்பியன்ஸ்ன்னு சொல்லுவாங்கன்னு எங்க டாச்சர் சொன்னாங்க. ‘

கட்டுரையாளன்: ‘யார் அப்படி சொல்லுவாங்க ? அந்த காலத்திலேயா ? இல்லை இப்பவா ?

சிறுவன்: ாதெரியலையே. இல்லை…. இப்ப நாம அந்த காலத்து காட்டுமிராண்டிய ஹோமோ செப்பியன்ஸ் ன்னு சொல்லுவோம்ா.

ஹோமோ செப்பியன்ஸ் என்பது இன்றைக்கும் பண்டைக்குமான மானுட இனத்திற்கான உயிரியல் பெயர்.

ாஜெர்மனியின் நியண்டர்தால் மனிதன் குரங்குகளைப் போன்றே காணப்பட்டான்.ா (பக். 2)

நியண்டர்தால் மனிதன் ஜெர்மனியில் மாத்திரம் அல்லவே. அங்கு முதன்முதலாக கண்டறியப்பட்டதால் நியண்டர்தால் மனிதன் என அழைக்கப்படும் இவன் மானுடத்தன்மை கொண்டவனே. ஒரு நியண்டர்தால் மனிதனின் படமும் ஒரு நவீன மனிதனின் படமும் வித்தியாசங்களுடன் காட்டப்பட்டிருந்தால் சிறுவர்களுக்கு இன்னமும் ஆர்வமூட்டுவதாக இருந்திருக்கும்.

கற்கால மனிதனின் காலம் இடம் பற்றிய செய்திகளைக் காட்டும் அட்டவணையில்

பில்ட்டெளன் மனிதன் இடம் பெற்றிருக்கிறான். (பக் 7.)

மிகவும் வருத்தமளிக்கும் விஷயமிது. பில்ட்டெளன் மனிதன் ஒரு போலி என்பது ஐம்பது வருடங்களாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. நம் பாடநூல்கள் எவ்வளவு பின்தங்கி உள்ளன என்பதற்கான வேதனையான எடுத்துக்காட்டு இது. தயவு செய்து பாடநூல் அதிகாரிகள் இத்தவற்றினை திருத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஆற்றங்கரை நாகரிகங்களில் சிந்து சமவெளி நாகரிகம்:

ாபொதுவாக இந்நாகரிகம் ஆரியர்கள் அல்லாத, ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே இருந்த ஓரினத்தவரால் ஏற்படுத்தப்பட்ட நாகரிகமாகும்.ா (பக். 13)

தவறு. இனம் என்றால் என்ன என்று அறியாத சிறார்களிடம் இது எப்படி போய் சேருமென எண்ணிப்பாருங்கள். இனம் என்பதே ஒரு தவறான கட்டுமானம் என்பதல்லவா இன்றைய அறிவியல் நிலைபாடு ?

ாஅன்னை எனும் பெண் தெய்வத்தையும் லிங்கத்தையும் வழிபட்டனர்….யோக நிலையில் உள்ள சிவனுக்கு பசுபதி எனும் பெயர் சூட்டி வழிபட்டனர்.ா (பக். 17)

அன்னை வழிபாடு இருந்தது என நாம் ஊகிக்கிறோம். அன்னை என ஒரு பெண் தெய்வத்துக்கு பெயர் சூட்டி அவர்கள் வழிபட்டனரா என்பதனை நாம் அறிய முடியாது. பசுபதியும் அவ்வாறே. இதற்கான படங்கள் மிகவும் அவலட்சணமாக வெளியிட்டோரின் அலட்சியத்தை காட்டுபவையாக உள்ளன.

வேதகாலம் குறித்து:

ாமொழி ஒற்றுமையினடிப்படையில் ஆரியர்கள் மத்திய ஆசியாவை சேர்ந்தவர்கள் என்ற கருத்து மாக்ஸ்முல்லர் என்பவரால் வலியுறுத்தப்படுகிறது. இக்கருத்தே பலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாய் உள்ளது. ‘ (பக். 30)

ஏதும் விளக்கம் தேவையில்லை. உண்மையில் மாக்ஸ்முல்லரே இக்கருத்தினை தன் இறுதிக்காலத்தில் மறுத்துவிட்டார். இன்றைய ஆய்வாளர்களில் எவரும் இக்கருத்தை ஏற்பதில்லை.

ாமறுபிறவி, ஊழ்வினை கர்மா பற்றிய மூடநம்பிக்கைகள் மலிந்து காணப்பட்டன. ‘ (பக். 34)

உண்மையில் வேதகாலத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. மூடநம்பிக்கைகள் எந்த சமுதாயத்திலும் என்றும் இருப்பது போல இருந்திருக்கலாமே தவிர அச்சமுதாயத்தில் மலிந்து காணப்பட்டதாக கருத வேத இலக்கியத்தில் இடமில்லை. மாறாக சடங்குகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரண்டுமே வேத இலக்கியத்தில் இடம் பெறுவதால் அங்கு கருத்து சுதந்திரம் நிலவியதாவது மாணவர்களுக்கு காட்டப்பட்டிருக்கலாம். சில மிக அடிப்படையான பாரத பண்புகள் வேதத்திலிருந்தே நமக்கு கிடைத்துள்ளன. மதிப்பிற்குரிய நம் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தனது நூல்களில் அனைத்து பண்பாடுகளிலிருந்தும் நல்லவற்றை ஏற்றுக் கொள்ளும் தன்மை எப்படி நமது வேத பாரம்பரியத்திலிருந்து வந்ததென நிறுவுகிறார். குறைந்த பட்சம் அதனையாவது நம் பாட நூல் வெளிக்கொணரலாம்.

யூத கிறிஸ்தவ சமயங்கள்:

‘மோசஸ் என்பவர் யூதர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து எகிப்திலிருந்து பாலஸ்தீனத்த்ாற்கு கூட்டி வந்தார். ‘ (பக். 63)

யூத மதகுருக்களே இந்நிகழ்ச்சி வரலாற்று நிகழ்ச்சியல்ல என கூறும் அளவுக்கு அகழ்வாய்வுகள் இந்நிகழ்ச்சி நடக்கவில்லை என நிரூபித்துள்ளன.

‘இயேசு கிறிஸ்து ஜெருசலம் அருகிலுள்ள பெத்லகேம் என்னும் கிராமத்தில் கி.பி. 6 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் பிறந்தார். ‘ (பக். 64)

மத நம்பிக்கை இங்கு வரலாறாக தரப்படுகிறது.

‘சிலுவையிலறையப்பட்ட மூன்றாம் நாள் இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்தார். ‘ (பக். 65)

‘உயிர்த்தெழுந்த பிறகு இயேசு தன் சீடர்களுக்கும், ஏனைய பிற மக்களுக்கும் நாற்பது நாட்களுக்கு காட்சி தந்து பின்னர் சொர்க்கலோகம் புகுந்தார். ‘ (பக். 65)

மறுபிறவி, ஊழ்வினை கர்மா ஆகியவற்றை மூடநம்பிக்கைகள் என கூறிய அதே நூல்தான் இங்கு அதீத நிகழ்ச்சிகள் குறித்த மத நம்பிக்கைகளை வரலாற்றுச் செய்தியாக தருகிறது.

இஸ்லாமிய சமயம் குறித்து:

‘ஒழுக்கமான வாழ்க்கை நெறிகளையும் சகோதரத்துவத்தையும் கருணையையும் போதிக்கும் இச்சமயம் ஒரு உன்னதமான மனிதாபிமானச் சமயமாகும். ‘ (பக். 73)

குழந்தைகளுக்கு இஸ்லாமை குறித்து ஒரு மதச்சார்பற்ற அரசின் பாடநூல் ஏற்படுத்தும் இச்சித்திரம் ஒரு விதத்தில் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனலாம். குறிப்பாக வேத காலம் குறித்து இந்நூல் கொடுக்கும் சித்திரத்துடன் காண்கையில் இது இன்னமும் தெளிவாக விளங்கும்.

மேலும் இந்நூலில் உள்ள சில முக்கிய தலைப்புகள்:

அ) ரோம் உலகிற்கு அளித்த நன்கொடை (பக். 56)

ஆ) கிறிஸ்தவ சமயம் உலக நாகரிகத்திற்கு அளித்த நன்கொடைகள் (பக்.66)

இ) இஸ்லாம் உலகத்திற்கு அளித்த நன்கொடை (பக்.74)

இந்நூலில் இல்லாத சில முக்கியமற்ற தலைப்புகள்:

அ) பாரதம் உலகிற்கு அளித்த நன்கொடைகள்

ஆ) வேத உபநிடதங்கள் உலகிற்கு அளித்த நன்கொடைகள்

இ) புத்தம் உலகிற்கு அளித்த நன்கொடைகள்

உலக அறிவியல் மற்றும் தத்துவ ஞான மரபுகளுக்கு பாரதம் அளித்த நன்ெகொடைகள் ஒருவேளை நம் குழந்தைகள் பயிலத்தகாதவை, பாசிஸ தன்மையுடையவை என இப்பாட நூல் ஆசிரியர்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஸ்வாமி விவேகானந்தர், மகாகவி பாரதி, ஸ்ரீ அரவிந்தர், வில் டூரண்ட், மார்க் ட்வைன், எமர்சன், கார்ல் சாகன், அர்னால்ட் டாயின் பீ போன்றவர்கள் பாரதம் உலகிற்கு அளித்த நன்கொடை குறித்த கருத்துகள் நம் அனைத்து மாணவர்களுக்கும் போய்விடக்கூடாது என்பதில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் கொண்ட அக்கறையில் ஒரு சிறிதளவாவது இப்பாடநூலின் தரத்தில் காட்டியிருக்கலாம்.

ஒரு பாடநூல் எவ்விதம் நம் இளைய சமுதாயத்தினருக்கு அறிவியல் ஆர்வத்தை அழிக்கும் தன்மையோடு, நம் நாகரிகம் பண்பாடு மதிப்பிடுகள் ஆகியவற்றை பற்றிய கீழான எண்ணத்தையும், தவறான சித்திரத்தையும் வழங்குகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்நூல். நம் நாட்டில் கல்வி அறிவு அளிக்கும் ஆலயங்களாக விளங்கும் அரசு பள்ளிகளில் நூலகங்களின் நிலை குறித்து கூறவேண்டியதில்லை.இந்நிலையில் நம் மாணவர்களுக்கு கிடைக்கும் அரிய வரப்பிரசாதமான பாடநூல்கள் எவ்வளவு அக்கறையுடன் உருவாக்கப்படவேண்டும் ? நம் பாடநூல் தயாரிப்பாளர்களுக்கு மற்றும் அரசியல் வாதிகளுக்கு இக்கட்டுரையாளனின் தாழ்மையான வேண்டுகோள், ‘தயவு செய்து அடுத்த தலைமுறையினரினை உருவாக்கும் பொறுப்பு உங்கள் கைகளில் உள்ளதென்று செயல்படுங்கள். மெறிகுலேஷன் பள்ளிகளிலும் வெளிநாடுகளிலும் படிக்க வாய்ப்பிருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இத்தகைய தவறான தகவல்களை மோசமான தரத்தை கொண்ட பாடநூல்களை நீங்கள் விரும்புவீர்களா ? எனவே தயவு செய்து தரமான பாடநூல்களை எங்கள் குழந்தைகளுக்கு தாருங்கள். ‘

***

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்