தமிழவன் கவிதைகள்-பதினொன்று

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

தமிழவன்


எழுகிறது
கவிதை நாட்டம் இன்றும்.

பின்பக்கம் கண்ணாடியில்
ஏற முயலும் சிறுகுருவியின் கால்பிராண்டல்
திரும்பிப் பார்க்காத என்மனதில்.

இப்போது தெரிகிறது
காலம் மாறியது.

பூக்கள் மலர்ந்திருப்பதும்
இலைகளில் தளிர்வந்து போய்விட்டதும்
வெயில் சுள்ளென்றெரிப்பதும்.

அது ஒரு விடுமுறை நாள்
உறைந்திருக்கிறது நகரம்.

முன்பு பனியில் மூடிய
கிளை என் அறையின் முன்
ஆடுகிறது இன்று
பட்டுப்பரப்புடைய இலைவெற்றுடம்புடன்.

எதிர்பார்ப்புடன் வந்து போய்விட்டது
பறவையும்.

நிமிர்ந்து
வானம் பார்க்கும் நீண்டமரத்தின்
நுனிஅசைவில் தெரிகிறது
நான் மறந்துபோன
சிறுவயது புளிய மரத்தின் ஒருகிளையில்
எதற்கெடுத்தாலும் தனியாய் ஆடும்
கயிறறுந்த வெறும் ஊஞ்சல்.

காலம் மாறினும்.

வெயில் வரக் குருவி
குறுக்கே பறக்கும்.
—-

Series Navigation