தன்நோய்க்குத் தானே மருந்து!

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

அகரம்.அமுதா


மாலைப் பொழுது மலர்கள் மலர்ந்தாடும்
சோலை நடுவினிலே துள்ளும் கலைமான்தன்
உள்ளத் துறைபிணையை ஒட்டி உறவாடும்
தள்ளி மயில்கள் தகதகக்கும் தோகையினைப்
பூத்தாட விட்டுப் புயலை வரவேற்கக்
கூத்தாடி நிற்கும் குழலொலியைத் தன்குரலில்
ஏற்றிக் குயில்கூவும் எங்கோ இருந்தபடி
சேற்றில் கயல்தேடிச் சென்றிருந்த நாரைகள்
கூட்டை அடைந்துவிடும் கொள்கையால் சிறகடித்துக்
காட்டைக் களைத்துவிடுங் காற்றைப் பெருக்கிவரும்
அங்கோர் அணில்கிளையில் ஆடும் அருங்கனியைத்
தங்கையில் தாங்கித் தனதுபசி ஆறும்
கதிரும் கலைத்துக் கனிந்தப் பழம்போல்
உதிரும் வானும் உதிரத்தைக் கக்கிவிடும்
அந்தப்பொன் அந்தியிலே அங்கோர் மரக்கிளையில்
வந்துக்குந் திக்கொண்ட வண்ணப் பசுங்கிளிதன்
பெட்டை வரவைப் பெரிதும் எதிர்பார்த்துக்
கட்டைபோல் ஆடாது கண்ணிமையும் மூடாது
எண்ணப் பறவையது எங்கெங்கோ சென்றுவர
வண்ணப் பறவையிது வாடி மிகநொந்துச்
சின்னநுனி மூக்கின் சிவப்பழகுப் பெண்கிளியை
முன்னம் அருகிருந்து முத்தமிட்டக் காட்சிகளும்
கன்னங்கள் என்கின்ற கண்ணாடிக் கோப்பையிலே
தென்னங்கள் ஊற்றித் தினங்குடித்தக் காட்சிகளும்
கண்ணின்முன் தோன்றக் கருத்தில் கடுங்காமம்
புண்ணில்வேல் பாயுதல்போல் போந்து துயர்செய்ய
தேறாது நெஞ்சமெனத் தேர்ந்த பெருங்கிளியின்
மாறாத மோகமதை மாற்றி விடாய்தீர்க்க
வந்த பெடைகண்டு வாரி அணைத்துமுத்தம்
தந்துத் தழுவித் தனதேக்கம் தீருமட்டும்
நோக்கும் பெடைதந்த நோய்க்கப் பெடையேநோய்
தீர்க்கும் மருந்தாம் தெரி!


agramamutha08@gmail.com

Series Navigation