தனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

ஜான் ஷ்வார்ட்ஸ்


அக்டோபர் 4 – கலிஃபோர்னியா ஓஜாவேயிலிருந்து ஒரு ராக்கெட் இன்று விண்வெளிப்பயணம் மேற்கொண்டது. இதை வடிவமைத்துப் பறந்ததற்காக 10 மில்லியன் டாலர் பரிசும் வென்றது.

பர்ட் ரடன் என்பவர் வடிவமைத்த ஸ்பேஸ்ஷிப் -1 என்ற இந்த ராக்கெட்டிற்கு பண முதலீடு செய்தவர் பால் ஜி ஆலன். இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவர். இந்த ராக்கெட் பூமியிலிருந்து 368,000 அடி ( 69.7 மைல்கள் உயரத்தில் பறந்தது. இதே கப்பல் முன்பு பறந்த உயரமான 337,600 அடியை ,இப்போது அதே ராக்கெட் முறியடித்தது.

மொஹாவே ஏரோஸ்பேஸ் வெஞ்சர்ஸ் என்ற கம்பெனி – ரடன் மற்றும் ஆலனுக்குச் சொந்தமானது – அன்சாரி எக்ஸ் பரிசான 10 மில்லியன் டாலரை வென்றது. சோவியத் யூனியன் ஏவிய துணைக்கோள் ஸ்புட்னிக் ஏவப்பட்டு சரியா 47 வது ஆண்டுவிழாவன்று இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணத்தில் இது ஒரு புதிய யுகத்தினை அறிவிக்கிறது.

விண்வெளிப்பயணத்தின் புதிய பரிணாமமாக இந்த ராக்கெட் பயணம் உள்ளது என்று பீட்டர் டயமண்ட்ஸ் தெரிவித்தார். இவர் இந்தப் பரிசினை அறிவித்தவர்.

ரடன் , அமெரிக்க அரசு நிறுவனமான நாசாவினைத் தொட்டுக்காட்டி சொன்னது : ‘ அந்த மற்ற விண்வெளி ஏஜன்சி. ‘ ‘ நாங்கள் மனிதனை விண்வெளிக்குக் கொண்டுசெல்வோம். 100 மடங்கு பாதுகாப்பாக ‘ என்றார். அரசாங்க அதிகார வர்க்கத்திலிருந்து மீட்டெடுத்து விண்வெளிப் பயணத்தை தனியார் கைகளில் ஒப்புவிக்கும் கனவு இதனால் நிறைவேறும் என்றார்.

தாய்க்கப்பலினால் காலை ஏழு மணியளவில் 50,000 அடி வரை கொண்டுசெல்லப்பட்ட இந்த ராக்கெட் திங்கட்கிழமை காலை 7:49க்கு தாய்க்கப்பலிலிருந்து பிரிந்தது. இதன் பைலட் பிரயன் பின்னீ ரப்பரும், நைட்ரஸ் ஆக்சைட் (சிரிப்பு வாயு ) கலந்த கலவையினால் மோட்டரை எரியூட்டிக் கிளப்பினார். தன் விண்வெளிப்பயணத்தை முடித்துக் கொண்ட ஸ்பேஸ்ஷிப்-1 8.13க்கு மீண்டும் பூமியை வந்தடைந்தது.

1963-ல் எக்ஸ்-15 என்ற விண்வெளிக்கலம் அடைந்த 354,000 அடி சாதனையை இந்த ராக்கெட் முறியடித்தது.

பின்னீ 51 வயதான முன்னாள் கடற்படை பைலட். ஓர் அமெரிக்கக் கொடியைப் பிடித்துக் கொண்டு கீழிறங்கினார். ‘ இதெல்லாம் சாத்தியாமாகக் கூடிய நாட்டில் நாம் வசிக்கிறோம் என்பதற்குக் கடவுளுக்கு நன்றி ‘ என்றார்.

முன்னால் மேற்கொண்ட இரண்டு பயணங்களில், ஸ்பேஸ்ஷிப்-1 மிகுந்த உயரத்தை எட்டும்போது, உருளும் வாய்ப்பு உள்ளது என்று கண்டறிந்தனர். புதன்கிழமை மெல்வில் என்ற பைலட் ஓட்டிச் சென்ற போது 29 முறை இந்த ராக்கெட் உருண்டது. ரடன் மற்றும் குழுவினர் அந்த பயணத்தின் பதிவுகளை ஆய்ந்து, உருளுவதைத் தடுக்க வழிமுறைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வழிமுறைகளை தரையில் விண்வெளிப்பயணத்தைப் பிரதி செய்யும் மாதிரிகளில் முயன்று பார்த்து பரிசோதித்தனர். இந்த வழிமுறைகளின் மூலமாக, மிக நேரிடைப் பாதையில் ராக்கெட் பயணம் செய்து வெற்றி பெற்றது.

இந்தப் பயணத்திற்குப் பின்பு , கர்னல் ரிக் சீர்ஃப்ராஸ் – ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் – விண்வெளிப்பயணம் வெற்றி கரமானது என்று சான்றிதழ் வழங்கி பரிசு வழங்கினார்.

இந்த பரிசுப்பணம் இன்சூரன்ஸ் பாலிசியினால் அளிக்கப்படும். அதாவது இன்சூரன்ஸ் கம்பெனி இது முடியாத செயல் என்று ‘பந்தயம் ‘ கட்டி, இது முடித்துக் காட்டிவிட்டால் பரிசு வழங்க ஒத்துக் கொள்ளும். அப்படிப்பட்ட பாலிசியின் இன்சூரன்ஸ் கட்டணம் அனுஷே அன்சாரி என்ற பெண்மணி இயக்குநராய் உள்ள எக்ஸ் பரிசு ஃபவுண்டேஷன் செலுத்தியது.

பத்து மில்லியன் டாலர் பரிசு ஆலன், இந்த முயற்சிக்குச் செலவிட்ட தொகையில் பாதிதான். இந்தப் பணத்தில் பாதியை ரடனுக்கு வழங்கவிருப்பதாய் ஆலன் தெரிவித்தார். ரடன் தன் கம்பெனியின் பணியாளர்களுக்கு வழங்குவார். மூன்று வருடங்களில் இரண்டு விமானங்களை வடிவமைத்து பறந்த சாதனையைக் கொண்டாடுவார்கள்.

வர்த்தக ரீதியான விண்வெளிப்பயணம் தொடங்கும் சாத்தியத்தை இது உருவாக்கியிருக்கிறது. ரிச்சர்ட் ப்ரான்சன் (வர்ஜின் விமானக் கம்பெனி) 190,000 டாலருக்கு ஒருவர் இந்த ராக்கெட்டில் பயணம் செய்யலாம் என்றார். 2007-க்குள் இந்த ராக்கெட் வ்டைவமைக்கப்பட்டு வர்த்தக ரீதியாய்த் தயாராய் இருக்கும் என்று தெரிவித்தார்.

ஒரு பைலட்டும் ஐந்து பயணிகளும் இருக்குமாறு ராக்கெட் வடிவமைக்க பிரான்சன் கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பறக்குமாறு ராக்கெட் செய்யப் படும் என்றார். ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து 5000 பேர் இந்த பயணத்தில் அக்கரை காட்டியுள்ளனர். ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் என்ற இன்னொரு கம்பெனி ஒருஅவருக்கு 100,000 டாலர் கட்டணத்தில் விண்வெளிப்பயணம் மேற்கொள்ள எண்ணி 100 வாடிக்கையாளர்களிடம் 10,000 டாலர் டெபாசிட் பெற்றுள்ளது.

ஸ்பேஸ்ஷிப்-1 இல் இன்னும் சில பயணங்கள் மேற்கொண்ட பின்பு ஸ்மித்சானியன் விண்வெளி மியூசியத்திற்கு இந்தக் கலம் வழங்கப்படும் என்று ரடன் தெரிவித்தார்.

இந்தக் கம்பெனியுடன் போட்டியிட்டு ராக்கெட் தயார் செய்ய முயன்று கொண்டிருக்கும் ஜெஃப் க்ரீசன் சொன்னார் : ‘ முதல்வராய் இருப்பது பெரிய விஷயம் தான். ஆனால் பின்னாளில் அவர்களே முன்னணியில் இருப்பார்கள் என்று உத்தரவாதம் இல்லை ‘

பொதுவாக அதிகம் பேசாத ஆலன், மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். ‘ தொழில் நுட்பம் எனக்குப் பழகின விஷயம் என்றாலும், இது மிக அபாரமான சாதனை ‘ என்றார்.

—-

Series Navigation

ஜான் ஷ்வார்ட்ஸ்

ஜான் ஷ்வார்ட்ஸ்