This entry is in the series 20100815_Issue

ஹேமா(சுவிஸ்)


***********************
நீண்ட நாட்கள் அல்ல அல்ல
நீண்ட காலங்களுக்கு பின்
உன் ஸ்பரிசம்.
அலுவலாய் இருந்த என்னை
அணைத்து
முடி தள்ளி….
முத்தம் தந்து
எப்படி முடிகிறது உன்னால்
தனிமை தைரியம் ?

முகம் பார்த்துச்
சிரித்த கண்ணில்
மீண்டும் ஒன்று.

திரும்பவும்….
பயந்தாங்கோழிக்கு
எப்படி இத்தனை
தைரியம் தனியாக ?

யார் சொன்னார்
நான் தனித்தேனென்று.
முன்பைவிட எப்போதும்
நீ என்றும் பிரியாமல்.

அலுவல்…அம்மாவீடு
என்றுகூட அகலாமல்
என் மூச்சின் முகவரியே
உன்னோடு.
என்ன கேள்வி இது
போடா தள்ளி
காலையிலேயே கலாட்டா
செய்தபடி நீ இங்கு.

காற்றோடு நீ
கண்மணிக்குள் நீ
தனிமையாய் நான் இல்லை.

நீ இல்லை என்று
என் ஞாபகத்தில்
எப்போதுமே இருந்ததில்லை
என் மரணம் வரை
உனக்கும் இல்லை அது!!!

Series Navigation