ஞாயிற்றைக் கைம்மறைப்போர்

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


கதிரவனையே மறைக்கும் சக்தி பூச்சிக்கு உண்டெனில், சற்று வியப்பாகத்தான் இருக்கும். எனவே, அதைப்பற்றி சற்று விரிவாகவே பார்ப்போம்.

லோகஸ்ட் (Locust) எனப்படும் பூச்சியைப்பற்றி, திரு.ஆசாரகீனன் அவர்கள் ‘ ‘கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள் ‘ ‘ என்ற பகுதியில் கொஞ்சம் போல குறிப்பிட்டிருந்தார். இந்த லோகஸ்ட்தான் நமது இவ்வார கட்டுரையின் கதாநாயகன்.

லோகஸ்ட் எனப்படும் பூச்சிகள் வெட்டுக்கிளிகள் இனத்தைச் சேர்ந்தவை. இவையும் Orthoptera என்ற வரிசையைச் சேர்ந்ததுதான். பார்ப்பதற்கு வெட்டுக்கிளிகளைப் போலவே இருந்தாலும், இரண்டுக்கும் ஓர் அடிப்படை வேற்றுமை உண்டு. அதாவது, வெட்டுக்கிளிகள் எப்போதும் தனித்தே இருக்கும் / இயங்கும். ஆனால் லோகஸ்ட் பொதுவாக கூட்டமாகத்தான் இருக்கும் / இயங்கும். சில சமயங்களில் மட்டுமே தனித்து இருக்கும் / இயங்கும். தனித்து இருக்கும் சமயங்களில் ஒன்றுமே தொியாததைப் போல வெகு சாந்தமாய் நடந்துகொள்ளும். கூட்டமாக இருந்தால், இவரைப் போன்ற வில்லன் பூச்சிகளில் யாருமே இல்லை. ஆனால் வெட்டுக்கிளிகள் எப்போதும் ஒன்று போலவே இருக்கும்.

லோகஸ்ட்களில் உலகம் முழுதும் சுமார் 11 இனங்கள் உள்ளன. இந்தியாவில் பாம்பே லோகஸ்ட் (Bombay locust), இடம்பெயரும் லோகஸ்ட் (Migratory locust) மற்றும் பாலைவன லோகஸ்ட் (Desert locust) என மூன்று வகை உள்ளன. ஆனால் இவற்றுள் உலகம் முழுவதுமே வில்லனாகச் சித்தரிக்கப்படுவது பாலைவன லோகஸ்ட்தான் !!!

பாலைவன லோகஸ்ட்களின் இராஜ்யம் கிட்டத்தட்ட 3 கோடி சதுர கிலோமீட்டரில் 60 நாடுகளில் பரவிக்கிடக்கிறது. கிழக்கே இந்தியாவிலிருந்து மேற்கே ஆப்பிரிக்கா வரை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சோவியத் இரசியாவின் தென்பகுதி, அரேபியா என, கிட்டத்தட்ட பூமியின் மொத்தப் பரப்பளவில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவன லோகஸ்ட்களின் ஆதிக்கப்பிடியில்தான் இருக்கிறது. உலக மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையில் இவர்தான் வில்லன் !!

நான் முன்பே குறிப்பிட்டதைப் போல, பாலைவன லோகஸ்ட்களின் வாழ்க்கையில் இரண்டு வகைகள் உண்டு. முதல்வகை, யாருடனும் ஒட்டாமல், தனித்து வாழ்ந்து மடிவது. இந்த வாழ்க்கையில் ஒன்றும் சுவாரசியம் இல்லை. இந்த வாழ்க்கை நிலையில் லோகஸ்ட், அதற்குரிய வீரியம் எதுவுமின்றி, ஒரு சாதாரண வெட்டுக்கிளி போல வாழ்ந்து மறையும். நிறம்கூட, வெட்டுக்கிளிகளைப் போல பழுப்பாகவே இருக்கும்.

இரண்டாவது வகை, கூட்டமாக வாழ்வது. ஒரு கூட்டம் எனப்படுவது ஒரு சதுர கிலோமீட்டர் முதல் பல சதுர கிலோமீட்டர் வரை இருக்கும். ஒரு சதுர கிலோமீட்டர் கூட்டத்தில் சுமார் 40 மில்லியன் முதல் 80 மில்லியன் லோகஸ்ட்கள் வரை இருக்கும். இளம்குஞ்சுகள் இளஞ்சிவப்பு நிறத்திலும், முழு லோகஸ்ட்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இந்த லோகஸ்ட்கள் மணிக்கு 16 முதல் 19 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கவல்லன. ஒரு நாளைக்கு சுமார் 130 கிலோமீட்டர் கூட பறக்கும். 1988 இல் ஒரு லோகஸ்ட் கூட்டம், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியன் வரையிலான சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவை பத்தே நாட்களில் பறந்து கடந்துவிட்டது. பொதுவாக, இந்த லோகஸ்ட்கள் பகல் பொழுதிலேயே பறக்கும். ஒரு கூட்டத்தின் அளவு பல சதுர கிலோமீட்டருக்கு இருப்பதால், ஏதேனும் நகரின் மேலே பறக்கும்போது, கதிரவனையே மறைத்து, அந்த நகரையே இருளில் தள்ளிவிடும்.

இந்த லோகஸ்ட்களுக்குப் பசி எடுத்து விட்டால், இன்னும் அபாயம் !! பசுமையாக இருக்கும் எந்த இலை தழையையும் தின்று தீர்த்துவிடும். ஒரு சராசரி லோகஸ்ட் கூட்டத்தின் ஒரு சிறு பகுதி (சுமார் 1 டன் எடையுள்ள லோகஸ்ட்கள்) சுமார் 10 யானைகளின் அல்லது 25 ஒட்டகங்களின் அல்லது 2500 மனிதர்களின் உணவிற்குச் சமமான உணவைத் தின்று தீர்த்துவிடும். எனவே, ஓரிடத்தில் ஒரு லோகஸ்ட் கூட்டம் தங்கிச் சென்றால், அந்த இடம் வெறுமையாக, ஒரு போர் முடிந்த இடம் போல இருக்கும். ஓய்வுக்காக ஏதேனும் மரங்களில் மொத்தக் கூட்டமும் உட்கார்ந்தால், மரக்கிளைகள் எல்லாம் லோகஸ்ட்களின் எடையைத் தாங்காமல் ஒடிந்துவிடும்.

சரி, இந்த லோகஸ்ட்கள் எப்படி இனப்பெருக்கம் செய்யும் தொியுமா ? கலவியை முடித்தபின் பெண்லோகஸ்ட்கள், முட்டைகளைக் குவியல் குவியலாக பூமி மட்டத்திற்குக் கீழே சுமார்15 செ.மீ ஆழத்தில் புதைத்துவிடும். பொதுவாக முட்டைகள் சிறு சிறு முட்டைக் கூடுகளிலேயே (Eggpods) இருக்கும். பின்னாி முட்டையில் இருந்து சுமார் 4 வாரங்களுக்குப் பிறகு, சிறு சிறு இளம்குஞ்சுகள் வெளியில் வரும். அதற்குப் பிறகு படிப்படியாக இந்த இளம்குஞ்சுகள் வளர்ந்து சுமார் 35 நாட்களில் முழுமையான லோகஸ்டாக உருமாறும். பொதுவாக லோகஸ்ட்கள் இனப்பெருக்கம் செய்ய மழை அவசியம். தென்கிழக்கு அரேபியா, தெற்கு ஈரான் மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில், குளிர்காலத்திலும், வசந்தகாலத்திலும் மழை பெய்யும். அப்போது இந்த பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும். இங்கிருந்து கிளம்பும் லோகஸ்ட் கூட்டம், கிழக்கே பறந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்குக் கோடைகாலத்தில் வரும். இங்கு நன்கு உண்டு, களித்து, அடுத்த இனப்பெருக்கத்தை ஆரம்பித்துவிடும். அதற்கு வசதியாக, இந்த பகுதிகளில் கோடைகாலத்திலும் அதற்குப் பின்னும் மழை பெய்யும். ஆக இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் தொடரும்.

அது சரி, குட்டி போட்டு பால் கொடுக்கும் பூச்சி கூட இருக்கிறதே!!!

அதைப்பற்றி தொிந்து கொள்ள வேண்டுமா ? …. அடுத்த வாரம்!!

—-

amrasca@yahoo.com

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்