ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கி இந்திய ஜனாதிபதி ஆற்றிய உரை

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

பி.கே. சிவகுமார்


(முன்குறிப்பு: 2002-ஆம் ஆண்டுக்கான 38-ஆம் ஞானபீட விருது திரு. த. ஜெயகாந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது (27-09-2005) மாண்புமிகு குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் ஆற்றிய உரை. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் இவ்வுரையைத் தமிழ்ப்படுத்த ஜெயகாந்தனின் பதிப்பகங்களில் ஒன்றான கவிதா பதிப்பகம் இவ்வுரையைச் சிறுபிரசுரமாக – விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் வெளியிட்டிருக்கிறது. குடியரசுத் தலைவருக்கும், பாரதிய ஞானபீடத்துக்கும், சிற்பி பாலசுப்ரமணியத்துக்கும் கவிதா பதிப்பகத்துக்கும் நன்றிகள் சொல்லி, அவ்வுரையை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். குடியரசுத் தலைவரின் ஆங்கில உரையை http://presidentofindia.nic.in/scripts/sllatest1.jsp ?id=602 என்ற முகவரியில் காணலாம். ஞானபீட விருது வழங்கும் விழாவின் 9 புகைப்படங்களை இவ்வுரையின் இறுதியில் காணலாம். இப்புகைப்படங்கள் குடியரசுத் தலைவரின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. குடியரசுத் தலைவருக்கும் அவர் இணையதள நிர்வாகிகளுக்கும் மீண்டும் என் நன்றிகள். இனி, குடியரசுத் தலைவரின் உரைக்குள். – பி.கே. சிவகுமார்)

சிந்தனையாளர்களும் சமுதாய இயக்கமும்:

இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான 38-ஆம் ஞானபீட விருதினை வழங்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்வுறுகிறேன். இத்தருணத்தில் பாரதிய ஞானபீடத்தின் தலைவர், அறங்காவலர்கள், தலைசிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன். இந்திய நாட்டின் பன்னிரண்டு மொழிகளில் இலக்கிய வளத்தைப் பெருக்கி வளர்த்திருக்கும் பல சிந்தனையாளர்களைக் கடந்த நாற்பதாண்டு காலமாக பாரதிய ஞானபீடம் கெளரவித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் தலைசிறந்த இந்திய இலக்கியத்தை பாரதிய ஞானபீடம் தெரிவு செய்கிறது. பரிசு பெறும் படைப்பாளிகளின் நூல்களை ஆசிரியரின் உள்ளத்தை உணர்ந்து, இலட்சிய நோக்கோடு செயல்படும் மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் இலக்கிய மாண்பை மற்றவர்கள் உணரவும் ஏற்கவும் வாய்ப்பு ஏற்படும். இந்த ஆண்டின் சிறப்புக்குரிய விருதினைப் பெறும் திரு. ஜெயகாந்தனுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் உரைநடை இலக்கியத்தில் அவர் தனிச்சிறப்பான இடம் பெற்றவர். கடந்த ஐம்பதாண்டுகளாகத் தம் சிறுகதைகளாலும், குறுநாவல்களாலும், நாவல்களாலும், கட்டுரைகளாலும் மிகச் சிறப்பாகத் தமிழ்மொழியின் வளத்தைப் பெருக்கி வருபவர். 2002-ஆம் ஆண்டுக்குரிய ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதும் உருவாகிய ஒருமனதான பாராட்டு ஒன்றே போதும். தமிழ் இலக்கிய உலகில் திரு. ஜெயகாந்தன் பெற்றிருக்கும் நிகரற்ற உயர்வை எடுத்துக் காட்ட. இன்று – உங்களிடையே ‘சிந்தனையாளர்களும் சமுதாய இயக்கமும் ‘ குறித்துச் சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

மிசோராமில் என் அனுபவம்:

சில நாட்கள் முன்பு வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அசாம், மேகாலயா, மிசோராம் ஆகிய பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன். அப்போது வடகிழக்கு மாநில மொழிகள் சார்ந்த பல இலக்கியவாதிகளையும், சிந்தனையாளர்களையும் நான் சந்தித்தேன். அவர்கள் இலக்கியப் படைப்புகளையும் தந்திருக்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். மிசோராமில் தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் இசைநாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். அது போன்றே சிக்கிமில் நேபாளி, பூட்டியா, லெப்ச்சா என்ற மூன்று பிரிவினரின் ஒருங்கிணைந்த கலைப் படையலையும் நான் கண்டேன். ஆற்றலும், அழகும் இசைந்திருந்த இசை, நாட்டியங்கள் ஒன்றுபட்ட மனங்களைச் சித்தரித்தது கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். அதுவும் சமுதாயத்தில் நிலவும் வேற்றுமைகளை முன்வைப்பது பொது இயல்பாக இருக்க, பன்முகப் பண்பாடுகள் ஒருமுகமாக இணைத்து வைக்கப்பட்டதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி.

அந்த நிகழ்வுகளில் மிக உன்னதமான ஓர் அனுபவம் மிசோராமில் ஏற்பட்டது. மிசோராமின் தலைநகரான ஐசாலிலிருந்து மாலை 4.00 மணிக்கு மேல் பொதுவாக விமானப் போக்குவரத்து நடைபெறுவது கிடையாது. ஆனால் எனக்கு ஐசாலில் இரவு 9.00 மணிவரை பணி இருந்தது. அன்றிரவே தில்லி திரும்ப வேண்டிய அவசியமும் இருந்தது. எனவே, நம் விமானப்படையினர் அந்த இரவு நேரத்தில், விமானம் புறப்படுவதற்குத் தேவையான குறைந்தபட்ச ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தனர். விமான நிலையத்துக்கு என் குழுவினருடன் நான் வந்து சேர்ந்தேன். மாநில ஆளுநர், முதலமைச்சர், மற்ற அரசு அலுவலர் ஆகியோரும் வந்து சேர்ந்தனர். அப்போது அங்கே சூழ்ந்திருந்த இருட்டில், விமானத்தில் எரியும் விளக்கு வெளிச்சத்தை மட்டுமே உதவியாகக் கொண்டு ஓர் அரிய காட்சி நிகழ்வதை நான் கண்டேன். விமானத்தின் அருகில், பாதுகாப்பான தூரத்தில் இசைக் கருவிகளோடு ஒரு பாடகர் குழு காத்திருந்தது. என்னைக் கண்டவுடன், அவர்கள் மிசோராமின் கவிஞர் ரோகுங்கா இயற்றித் தந்திருந்த ஒரு மிக இனிய, அழகிய பிரிவுபசாரப் பாடலைப் பாடத் தொடங்கினார்கள். அந்தப் பாடலுக்குப் ‘பிரிவின் உலகம் ‘ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அதன் பொருள்:

‘கனத்து விம்மும் இதயத்தோடு

….பிரிகிறோம் நாம் இப்போது

நாம் வாழும் உலகத்தில் ‘பிரிவு ‘ என்பதை

….தெய்வப் பிதாவோ விதித்து விட்டார்

ஆனால் இதனினும் சிறந்த உலகில்

….நிச்சயம் வாழவே படைக்கப்பட்டுள்ளோம்

வேதனைப் பிரிவுகள் ஏதுமில்லாத

….அழியா நகரொன்றில் வாழ்வோம் நாம் ‘

இந்தியாவின் எல்லையற்ற வாழ்வின் அழகிலும், பாடலின் உணர்ச்சி ததும்பும் இசையிலும், நம் பன்முகக் கலாசாரத்திலும், அவை ஒன்றுபடும் இந்தப் பெரிய நாட்டின் உள்ளத்தொருமையிலும் நான் நெகிழ்ந்து போனேன். பாரதிய ஞானபீடம் இந்த உண்மையை நெருங்கியுணர்ந்து, நம் அரசியல் அமைப்பின் 8-ஆவது பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் சாதனை நிகழ்த்திய எழுத்தாளர்களை மதித்துப் போற்றுவது எனக்கு மகிழ்வூட்டுகிறது. 8-ஆவது பிரிவில் சேர்க்கப்படாத மொழிகளின் சிறந்த இலக்கியங்களைக் கெளரவிக்க முடிந்தால் தனிப்பட்ட முறையில் இன்னும் மகிழ்வேன். வளர்ச்சியடைந்த இந்தியா என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்காது. இந்தியக் கலை, இலக்கியம், மனித நேயம், மாண்புமிக்க சிந்தனைகள் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் ஐயாயிரம் ஆண்டின் வளமான பாரம்பரியம் அனைத்தின் ஒன்றுபட்ட வளர்ச்சியையும் அது குறிக்கும்.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்:

ஜெயகாந்தனுடைய ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ‘ என்ற நாவலை நான் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இந்த நூலை நான் முழுமையாகப் படித்திருக்கிறேன். எத்தனை பாத்திரங்கள். எத்தனை நிகழ்வுகள். சில இடங்களில் துயரத்தின் கண்ணீர். சில இடங்களில் இனிமை! இந்த நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ஹென்றி, துரைக்கண்ணு ஆகியோரின் உன்னதமான பண்புகள் இன்னும் என் நினைவில் உள்ளன. கடல்களும், நதிகளும் மட்டுமல்ல – ஒவ்வொரு துளி நீரும் தன்னளவில் முழுமையானது என்று ஜெயகாந்தன் அந்நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். கண்டங்களும், நாடுகளும் மட்டுமே உலகமாகி விடுவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஒரு உலகம்தான். உலகம் முழுவதும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறு அணுக்களின் அமைப்பாக நிலவுகிறது என்பதும், அதனால் ஒவ்வொரு அணுவும் முழு உலகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதும் இதன் பொருள். இந்த இடத்தில் பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதியார் எழுதிய சரஸ்வதி வணக்கப் பாடல் என் நினைக்கு வருகிறது. அந்தக் கவிதை இது.

‘இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென

….இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்

இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென

….வானூலார் இயம்புகின்றார்

இடையின்றித் தொழிழ்புரிதல் உலகினிடைப்

….பொருட்கெல்லாம் இயற்கையாயின்

இடையின்றிக் கலைமகளே நினதருளில்

….எனதுள்ளம் இயங்கொணாதோ ? ‘

இதன் பொருள் இயற்பியலாளர் அணுக்காள் ஓயாது இயங்கும் என்கின்றனர். வானியலார் ஒவ்வொரு கிரகமும், அதன் நட்சத்திரங்களும் பால்வீதியும் நிரந்தரச் சுழற்சியில் உள்ளன என்கின்றனர். நிரந்தர இயக்கமே உலகனைத்துமுள்ள பொருள்களின் தன்மையெனில், அன்னை சரசுவதியே! என் மனமும் சுறுசுறுப்பாய் என்றும் இயங்க அருள் தா!

ஜெயகாந்தன் பாரதியைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டவர்.

ஒரு தனிமனிதன் என்ற அணுத்திரளில் ஜெயகாந்தன் உலகத்தைக் காண்கிறார். மகாகவியோ அணுவுக்குள் தொடரும் நிரந்தரப் பரிமாணத்தைத் தனிமனிதன் பிரதிபலிக்க வேண்டும் என்கிறார். அதாவது ஒரு கணத்திலிருந்து மறுகணத்துக்கு வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி என்பது பொருள்.

ஆசிரியர்களின் ஆசிரியர்:

‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் ‘ என்ற கட்டுரைத் தொகுதியின் முன்னுரையில் பேசப்பட்டுள்ள ஜெயகாந்தனின் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் என் இதயம் கவர்ந்தது.

‘தியாகமும் ஞானமும் படைத்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களும், சோஷலிஸச் சித்தாந்திகளும் ஒன்றுபட்டு ஒரு புதிய உலகத்தை வார்க்க வேண்டிய தருணம் இன்னும் வாய்க்கவில்லையா என்றெல்லாம் ஏங்கித் தவிப்பதே ஓர் இலக்கிய இதயம். இந்த ஏக்கத்தின் பரிபாஷைப்புலம்பலே எனது கதைகள். எனவேதான், எந்தத் துறையில் என்னைப் பிரஷ்டனாகக் கருதினாலும், இலக்கியச் சந்நிதானத்தில், ஆதிசங்கரருக்கு வாய்த்த சண்டாளன் மாதிரி நானே குருவாகி நிற்பேன். இது என் விருப்பமன்று; விதி. ‘

எத்தனை அழகான, உருக்கமான அறிவிப்பு! இதனைப் படித்தபோது என் கண்களில் கண்ணீர் பொங்கியது. ஏனெனில், எங்கும் நம்பிக்கை வறட்சியையும், விதி வலிது என்ற மனப்பாங்கும் நிரம்பி இருப்பதைக் காண்கிறேன். ஆனால், நம்பிக்கை அவற்றை அறைகூவலிட்டு எதிர்கொள்கிறது. இப்படித்தான் இலக்கியம் நம்மை மேன்மைப்படுத்துகிறது. ஜெயகாந்தன் இவ்வகையில் சமுதாயத்தின் மனச்சாட்சிக் காவலர் என்ற தகுதிக்குரியவர் என்பதில் ஐயமில்லை.

தன்னையும் கடந்து செல்லுதல்:

ஜெயகாந்தன் குறிப்பிட்டிருப்பதைப் போல அவருடைய எழுத்துக்களின் மொத்தக் குறிக்கோளும் காலத்தின் தேவைக்கேற்ற வளர்ச்சியை அடையும் பொருட்டு சமுதாயத்தை எழுச்சி கொள்ள வைப்பதுதான். கடந்த காலத்தில் தேக்கத்தில் ஆழ்ந்துவிட்ட நம் தேசம், அதன் பிடியிலிருந்து உதறி எழுந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இது எவ்வளவு பொருத்தமான இலட்சியம் என்பதை நாம் காண முடியும். இன்னொரு இடத்தில் ஜெயகாந்தன் கூறுகிறார்.

‘இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது; உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி. நீங்களே உங்களைக் கடந்து செல்வதற்கு உதவி செய்வது இலக்கியத்தின் வெற்றி. அதற்கு இன்னொரு பெயர் வளர்ச்சி. ‘

தனிமனிதனுக்கும், எழுத்தாளனுக்கும், மனித குலத்துக்கும் விடுக்கப்பட்ட அழகான செய்தி இது. தன் மக்களாலும், உயிரினப் பன்மையாலும், இயற்கை வளத்தாலும் ஒரு நாடு செல்வமுடையதாக அமைகிறது. ஆனால், ஒரு நாட்டின் மகுடமான பெருமை, காலத்தைக் கடந்து செல்லவும், மாற்றங்களைச் சமுதாயம் ஏற்கவும் செய்கிற அதன் சிந்தனையாளர்களாலேயே உண்டாகிறது. சமுதாய மாற்றத்தை விளைவிக்கிற அத்தகைய சிந்தனையாளர்களில் ஒருவர் நம் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன் – என் நினைவுகள்:

என் இளம் வயதில் விடுமுறைக் காலங்களில் என் நண்பர்களோடு, குறிப்பாக இராமநாத சாஸ்திரிகளோடு இராமேசுவரத்தில் ஜெயகாந்தன் சிறுகதைகளைப் படித்த இனிய நினைவுகள் இன்னும் என்னிடம் உண்டு. என்னுடைய தந்தையாரின் நண்பரும், வேதவிற்பன்னரும், இராமேசுவரம் கோயில் புரோகிதருமாக இருந்த பட்சி இலட்சுமண சாஸ்திரிகளின் மகன் இராமநாத சாஸ்திரி. நாங்கள் தொடக்கப் பள்ளிக்கால வகுப்புத் தோழர்கள். 1968-இல் நான் விடுமுறையில் ஊருக்குப் போனபோது கடலைப் பார்த்து அமைந்த என் வீட்டுத் திண்ணையில் சந்தித்தோம். அப்போது 1968-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரை நான் அவருக்குப் பரிசாக அளித்தேன். அப்போது படித்த ‘அக்ரஹாரத்தில் பூனை ‘ என்ற கதை என் ஞாபகத்தில் உள்ளது. இரட்டைப் பண்பு கொண்ட ஒரு இளைஞனைப் பற்றியது அந்தக் கதை. வெளியே அமைதியானவன் போல் தோற்றமளித்தாலும் உள்ளே குறும்புக் குணமும், பயங்கர இயல்பும் அவனிடம் இருந்தன. பூச்சிகளையும், விலங்குகளையும் துன்புறுத்தும் வெறி அவனுக்கு இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் வீடுகளுக்குள் புகுந்து ஒரு பூனை தொல்லை கொடுத்து வந்தது. அந்தப் பூனையை ஒழிக்க அந்தச் சிறுவன் பொறுப்பேற்றுக் கொண்டான். அதனைத் துன்புறுத்தும் பொருட்டு – ஒரு சாக்குப் பையில் தூக்கிப் போட்டுக் கொண்டான். ஆனால், அவன் மனம் மாறுகிறது. பூனையைத் துன்புறுத்த வேண்டாமென்று ஒரு கசாப்புக் கடைக்காரர் சொன்னதை அவன் கேட்டுக் கொள்கிறான். அவர் அறிவுரை அவனுக்குப் புதிய வெளிச்சமாகிறது. அவன் சிந்தனைப் போக்கில் மாறுதல் ஏற்படுகிறது. எத்தனை அழகான மாறுதல்! அந்த மாறுதல் நம் மனங்களிலும் வந்து நுழைந்து விடுகிறது.

கவிஞர் ஜெயகாந்தன்:

ஜெயகாந்தன் கவிதையும் எழுதுகிறார். அவருடைய திரைப்படங்களுக்கு அவரே பாடல்கள் எழுதியுள்ளதாகவும் அறிகிறேன். அண்மையில் அவருடைய வெண்பா ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அவர் கூறுகிறார்.

‘பட்டேன் பலதுயரம் பாரிலுள்ளோ ரால்வெறுக்கப்

பட்டேன், படுகின்றேன், பட்டிடுவேன் – பட்டாலும்

நாட்டுக் குழைக்குமெனை நாடேவெறுத்திட நான்

வீட்டுக்கும் வேண்டா தவன் ‘

ஜெயகாந்தனின் இன்னொரு பரிமாணத்தை இப்பாடல் காட்டுகிறது. பெரும்பான்மையோர் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து அவர் கவலைப்படுவதில்லை அல்லது தன் வாசகர்கள் அவர் என்ன கூறவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களோ அதுகுறித்தும் கவலைப்படவில்லை. எழுத்தாளனுக்கு அவனுக்கே உரிய பணி இருக்கிறது. இது அவருடைய சிந்தனைச் சுதந்திரத்தைக் காட்டுகிறது. கவி மனத்தின் அகத்தைப் புலப்படுத்துகிறது. சமுதாய மாற்றம் இனி உருவாக வேண்டுமே என்ற எண்ணத்தை முன்வைக்கிறது.

வாழ்வின் எதார்த்தம் நோக்கி:

புகழ்பெற்ற அவருடைய முன்னுரைகளில் ஒன்றில் இந்திய மனத்தின் நாடி பிடித்துப் பார்க்கிறார். பொதுவாக நம் மனம் மென்மையானது. வாழ்வில் நல்ல செய்திகளையே நாம் பெரிதும் கேட்க விரும்புகிறோம். அதானால்தான் போலும், நாம் இராமாயணக் கதை சொல்லும்போது சீதா கல்யாணம் அல்லது பட்டாபிஷேகத்தில் அதனை முடித்து வைக்கின்றோம். இராமன் சரயு நதியில் மூழ்கி இறந்தது குறித்தோ, சீதையைப் பூமி விழுங்கியது குறித்தோ மக்கள் கேட்க விரும்புவதில்லை. ஆனால், வாழ்க்கையோ நன்மையும், தீமையும், இன்பமும், துன்பமும், ஏற்றமும், இறக்கமும் கொண்டதாகவே இருக்கிறது. ஒன்றின் மதிப்பு மற்றொன்று இல்லாமல் தெளிவாவதில்லை. ஒரு படைப்பாளன் கூரிய பார்வையால் பாத்திரங்களின் பண்புகளை ஈவிரக்கமின்றி ஆராய வேண்டுமென்றும், இதுகுறித்து உணர்ச்சி வசப்படலாகாது என்றும் ஜெயகாந்தன் கூறுகிறார். எனவே, வாசகர்கள் ஒரு நாவல் அல்லது நாடகத்தில் வரும் பாத்திரத்தின் மீது அதீதப் பரிவோ, வெறுப்போ கொள்வது இலக்கியத்தில் புலப்படுத்தப்படும் வாழ்க்கையை அவர்கள் புரிந்துகொள்ள மறுப்பதன் அடையாளமே ஆகும்.

அறிவுக் களஞ்சியம்:

வாசகர்களின் மனங்களில் ஒரு பொறியைப் பற்ற வைப்பதே திறமையான படைப்பாளன் சமுதாயத்துக்கு அளிக்கும் கொடை. ஏறத்தாழ இரண்டாயிரம் பக்கங்கள் அமைந்த சிறுகதைத் தொகுதிகளைக் கவிதா பப்ளிகேஷன் வெளிக் கொனர்ந்திருக்கிறது. வர்த்தமானன் பதிப்பகம் அவருடைய நாவல்களை ஐந்து தொகுதிகளாக அளித்திருக்கிறது. குறுநாவல்கள் மீனாட்சி பதிப்பகத்தால் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவையனைத்தும் வாசகர்களுக்கு நல்ல துணைவர்களாக இருக்கும். நல்ல நூல்களின் மதிப்பைக் குறித்து இங்கே சிறிது சொல்ல விரும்புகிறேன்.

நூல்கள் நம் துணைவர்கள்:

ஒரு நல்ல புத்தகத்தை அறிந்து கொள்வதும், உரிமை கொள்வதும் வாழ்வின் இனிய வரமாகும். புத்தகம் உங்கள் நிரந்தர நண்பனாகி விடுகிறது. சிலசமயம் நமக்கு முன்னே பிறந்த புத்தகங்கள், நம் காலத்திலும் நமக்கு வழிகாட்டி, நமக்கு அடுத்த தலைமுறைகளையும் வாழ்விக்க வல்லவை. 1950-களில் சென்னை மூர் மார்க்கெட் பழைய புத்தகக் கடையில் ‘The Light from many lamps ‘ என்ற புத்தகத்தை நான் வாங்கினேன். ஒரு கட்டுரைப் போட்டியில் பரிசாக மு. வரதராசனாரின் ‘திருக்குறள் – தெளிவுரை ‘ எனக்குக் கிடைத்தது. இந்த இரண்டு நூல்களும் என் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டன. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அவை என் தோழர்கள். பலமுறை கட்டமைப்புச் செய்யும் அளவுக்கு அவை படித்துப் படித்துப் பழையதாகி விட்டன. எப்பொழுதாவது எனக்குச் சிக்கல்கள் எழுந்தால், இந்த நூல்கள் தந்த மகத்தான மனங்களின் அனுபவங்களால் என் கண்ணீர் துடைக்கப்படுகிறது. மகிழ்ச்சி நம்மை இன்பத்தில் மூழ்கடிக்கிற போதோ, அவை நம் மனதை மெலிதாய் வருடி நம்மைச் சமநிலைக்குக் கொண்டு வருகின்றன. அடிப்படையில் புத்தகங்கள் அமரத்துவம் வாய்ந்தவை. நிச்சயமாக ஜெயகாந்தனைப் போன்ற இந்திய எழுத்தாளர்களின் நூல்கள் உலகின் கவனத்தைக் கவர வல்லவை.

(நிறைவாக) வெற்றி கொள்ள முடியாத ஆன்மா:

நமது பூமி என்ற கிரகத்தில் எத்தனையோ நாகரிகங்கள் எழுந்தன. ஆனால் அவற்றுள் மாற்றங்களை அடையாளம் காணும் உயர் சிந்தனைத் திறனும், எதிர்காலத்தை அறியும் பார்வைத் திறனும், செயல்திறம் மிக்க நாகரிகத்தை வளர்க்கும் திறனும் கொண்ட சில நாகரிகங்களே உயிர் வாழ்கின்றன. இந்த ஆற்றலை வழங்குபவை இலக்கியம், கவிதை, தர்க்கம் ஆகியவைதான். எடுத்துக்காட்டாக பண்டைய தத்துவ ஞானிகளும் சரி, பிற்காலத்தில் வந்த அறிவியல் தொழில்நுட்ப அறிஞர்கள், பொருளாதர மேதைகள், சமூக இயலாளர்கள் ஆயினும் சரி, நம் நாகரிகத்தை ஒன்றுபட்டு வளர்த்துள்ளனர். நம் இந்திய நாகரிகம் பண்பாட்டுப் பன்முகத் தன்மையைச் சீரிய மாற்றங்களோடு காத்து வந்திருக்கிறது. இதனால்தான் பண்பாட்டுப் பன்மை, மொழிப் பன்மை, சமயப் பன்மை கொண்ட ஒருமைப்பாட்டையும், கோடிக்கணக்கான மக்களையும் கொண்டதாக நம் சமூகம் வளர்ந்திருக்கிறது. நமது மாபெரும் தீர்க்கதரிசிகளால் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், திருக்குறள், கபீர்வாணி, நாராயணீயம் போன்ற செவ்வியல் படைப்புகளையும் நம் நாடு நீண்ட மரபுச் செல்வமாகப் பெற்றிருக்கிறது. அத்தகைய மரபின் தகுதி மிக்க புதிய படைப்பாளிகளைப் பல மொழிகளிலும் அடையாளம் கண்டு ஞானபீடம் அந்த இலக்கிய மேன்மைகளைக் கெளரவிக்கிறது. ஞானபீடம் பரிசு தந்து கெளரவிக்கும் ஜெயகாந்தன் படைப்புகளையும், நம் நாட்டின் பிற படைப்புகளையும் நான் போற்றுகிறேன். இலக்கிய வளம் பெருக அளிக்கப்படும் இப்பரிசு ஓர் உன்னத அடையாளமாக ஓங்கி நிற்கிறது.

சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் நிரம்பிய நம் நாட்டின் இலக்கிய வளம் நம் இளைஞர்களிடையே ஒளிமிகுந்த தலைவர்களை உருவாக்கும் என நான் நம்புகிறேன். விசால மனமும், மனிதகுலம் பற்றிய சிந்தனையும், எந்த அவநம்பிக்கையையும், பலவீனத்தையும் வெற்றி கொள்ளும் ஆன்ம பலத்தையும் இளம் தலைமுறைக்குத் தம் எழுத்துக்களால படைப்பாளிகள் வழங்க முடியும். இது படைப்பாளிகளின் கடமை மட்டுமல்ல, மனித குலத்தைச் சோதனைகளிலிருந்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் புனித வாய்ப்பாகும்.

இன்று திரு. த. ஜெயகாந்தன் அவர்களுக்கு 2002-ஆம் ஆண்டி பாரதிய ஞானபீட விருதினை அளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். தன் கூரிய பார்வையால் இன்று நம் சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் மாற்றங்களை அடையாளம் காணவும், வளர்ச்சியை நோக்கிய நம் இளைஞர்களின் சிந்தனைப் போக்கில் ஒரு வேகத்தை உருவாக்கவும், அவர் பணி தொடருமாக! வளரும் பாரதத்துக்கு அது விலைமதிக்க முடியாத பங்களிப்பாக இருக்கும்.

அனைவருக்கும் இறையருள் சித்திக்குமாக.

ஜெயகாந்தன் அவர்களின் ஏற்புரை:

வணக்கத்துக்குரிய இந்திய ஜனாதிபதி அவர்களே, மரியாதைக்குரிய ஞானபீடத் தலைவர் அவர்களே, அன்பிற்குரிய அனைத்திந்திய சகோதர எழுத்தாளர்களே, பெருமைமிகு இவ்விழாவினைச் சிறப்பிக்க வந்துள்ள இலக்கிய அபிமானிகளே, நண்பர்களே, உங்கள் அனைவரையும் நன்றிப் பெருக்குடன் வணங்குகிறேன்.

இந்திய இலக்கியங்களைக் கெளரவிக்கும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதினை இவ்வாண்டு தமிழ் மொழிக்கும் அதன் சார்பில் எனக்கும் வழங்கியுள்ள ஞானபீட நிறுவனத்திற்கும், தேர்வுக் குழுவினருக்கும் தமிழ் மொழியின் சார்பில் நன்றி கூறி, இப்பெருமையையும் விருதினையும் பணிவுடன் ஏற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்றுமுள்ள தென்தமிழ் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ள இந்த ஆண்டில், இந்தியக் குடியரசின் தலைவராக வீற்றிருக்கும் ஒரு தமிழரின் திருக்கரத்தால் இவ்விருதினைப் பெறுவது எனது மகிழ்ச்சியை மும்மடங்கு ஆக்குகிறது.

இந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சான்றோருக்கும் சக எழுத்தாளர்களுக்கும் பத்திரிகைக்காரர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் எனது வாசகப் பெருமக்களுக்கும் என்றென்றும் எனது நன்றி உரித்தாகுக!

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திருநாடு!

வந்தே மாதரம்…!

நன்றி: இந்தியக் குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ. அப்துல் கலாம், பாரதிய ஞானபீடம், கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், கவிதா பப்ளிகேஷன்.

ஞானபீட விருது புகைப்படங்கள்:

இப்புகைப்படங்கள் அனைத்தும் இந்தியக் குடியரசுத் தலைவரின் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. குடியரசுத் தலைவருக்கும் அவர் இணையதள நிர்வாகிகளுக்கும் இதற்காக என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1. ஞானபீட விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பேசுகிறார்.

2. கூட்டத்தின் ஒரு பகுதி

3. குடியரசுத் தலைவரும் ஜெயகாந்தனும்

4. குடியரசுத் தலைவரும் ஜெயகாந்தனும் ஞானபீடக் குழுவினரும்

5. குடியரசுத் தலைவரும் ஜெயகாந்தனும் ஞானபீடக் குழுவினரும்

6. குடியரசுத் தலைவரும் ஜெயகாந்தனும்

7. கூட்டத்தின் ஒரு பகுதி.

8. கூட்டத்தின் ஒரு பகுதி.

9. கூட்டத்தின் ஒரு பகுதி.

நன்றி: இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் அவரின் இணையதளத்துக்கும்

Visit http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்