ஜெயகாந்தனின் அரசியல் முரண்பாடுகள்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

சொ.சங்கரபாண்டி


சிவக்குமார் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது புரிந்து கொள்ளாமல் இருப்பது போல நடிக்கிறாரா என்று தெரியவில்லை.

ஒற்றைப் பரிமாணம் பற்றிப் பேசும் சிவக்குமார் முதலில் மீண்டும் ஒரு முறை நான் எழுதியவற்றையும், அவர் எழுதியவற்றையும் படிக்க வேண்டுகிறேன். சிறுபிள்ளை கூட புரிந்து கொள்ளுமாறு வெளிப்படையாகச் சொன்னேன். பிராமணீயம் என்பது பிராமணர் மட்டுமல்லாது, சாதியப் பிரிவில் ஏதோ ஒரு பிரிவோடு தன்னை அடையாளப் படுத்திக்கொள்பவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு கொள்கை. அப்படிப்பட்ட வருணாசிரம சிந்தனையுள்ளவராகத்தான் ஜெயகாந்தனையும், சிவக்குமாரையும் நான் பார்க்கிறேன் என்று கூறினேன்.

சிவக்குமார் இதைப் புரிந்து கொள்ளாதவராய், “பிராமணரல்லாத எனக்கு ஏன் பூணூல் மாட்ட நினைக்கிறீர்கள்” என்று அங்கலாய்க்கிறார். பூணூல் அணியும் பிராமணர் மட்டும்தான் வருணாசிரம சிந்தனையுள்ளவர்கள் என்று எண்ணும் சிவக்குமாரின் ஒற்றைப் பரிமாணம் தான் இங்கு வெளிப்படுகிறது. நீங்கள் பிராமணராயிருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, பூணூல் அணிந்தால் என்ன அல்லது அணியாவிட்டால் என்ன. மொழி, இனம் போலன்றி எந்தவித புறவேற்றுமையும் இல்லாமல் பிறப்பால் மட்டுமே ஏற்றத்தாழ்வு பாராட்டும் வருணாசிரம பிரிவுகளில் ஏதோ ஒன்றில் இன்னும் உங்களை அடையாளம் காண்கிறீர்களா என்பதே என் கேள்வி. அப்படி அடையாளம் காணுபவர்களைத்தான் சாதி பற்றிய வெளிப்படையான விவாதங்களும், விமர்சனங்களும் மனம் நோகச் செய்யும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் சாதியத்தை வலியுறுத்தும் இந்துமத நூல்களின் மீதான விமர்சனத்தைக் கூட பாரம்பரியம் என்ற பெயரில் எதிர்க்கத் தோன்றும். எதுவுமே புரியாமல், எந்தவித ஈடுபாடும் இல்லாமல் மக்கள் அறிவை மழுங்கடிக்க நடத்தப்படும் சாதியச் சடங்குகளை உயரிய தத்துவங்களாக பீற்றிக் கொள்ளத் தோன்றும்.

சாதியத்தைப் போற்றி பாதுகாக்க நினைப்பதனால்தான் ஜெயகாந்தன் போன்றவர்களுக்கு சாதிகளைப் பற்றி வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து அரசியல் நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியும், தலித்தியக்கங்களும் மட்டுமே சாதியச் சாக்கடைகளாகத் தெரிகின்றன. பாரதிய ஜனதாவும், காங்கிரஸும், திராவிடக் கட்சிகளும் கூட மறைமுகமாக ஒவ்வொரு சாதியப் பிரிவுகளின் ஆதிக்கத்தைப் பேணித்தான் வந்துள்ளன. ஆனால் அவைகளையெல்லாம் சாதியக்கட்சிகள் என்று மேல்தட்டு வர்க்கத்து அறிவாளிகள் அழைத்ததில்லை. சாதிகளைப்பற்றி வெளிப்படையாக பேசாமல் எப்படி சாதியத்தை விமர்சிக்க முடியும் அல்லது சாதிகளையும், சாதியத்தையும் ஒழிக்க முடியும்.

இனி ஜெயகாந்தனின் மற்றும் சிவக்குமாரின் அரசியல் நிலைப்பாடுகளில் தோன்றும் முரண்பாடுகளை இங்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். திண்ணை வாசகர்கள் எப்படி வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்ளட்டும். இதற்கு மேல் சிவக்குமாருடன் நடக்கும் இந்த விவாதத்தை நான் தொடரப் போவதில்லை. இதை என்னுடைய தோல்வியாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்.

* * *

1. “அண்ணத்துரையின் மரணத்துக்குக் கூடியது கும்பல். கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.” – இது ஜெயகாந்தனின் வியாக்கியானம்.

அண்ணா இறந்த உடன் ‘தலைவன் ‘ என்ற கண்முடித்தனமான, பகுத்தறிவுக்குப் புறம்பான ஒருவித பக்தியால் தி.மு.க. தொண்டர்கள் பலர் தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். ஆங்காங்கே கதவடைப்பு போன்ற சிறுசிறு வன்முறைகளில் ஈடுபட்டிருக்கலாம். ‘ஜெ ‘வின் வரைமுறைப்படி அது ஒரு கும்பல் என்பதை முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன்.

அதே சமயம், 8000 அப்பாவி சீக்கியர்களைக் கொன்று சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக இனப்படுகொலையை நடத்திய காங்கிரஸ் குண்டர்களை ‘ஜெ ‘ எப்படி அழைத்தார் ? அதற்கு சிவக்குமார் தரும் இரக்கமற்ற ஒரு வரி விளக்கம் இதோ:

“இந்திரா மரணத்திற்குப் பின்னான வன்முறை அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது. ‘ஜெ ‘வும் அதையே சொல்வார்.”

‘ஜெ ‘ சொல்வார், ‘ஜெ ‘ சொல்வார் என்று அவருக்காக சிவக்குமார் சொன்னது போதும். இருபது ஆண்டுகளாக இது பற்றி அவர் என்ன சொன்னார் என்று தெரிந்து சொன்னால் போதும். குறைந்த பட்சம் இந்திரா மறைவின் போது காங்கிரஸ் நடந்து கொண்ட விதம் கும்பலா அல்லது கூட்டமா என்று கேட்டு சொன்னால் போதும்.

2. “அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் திமுக தொடர்ந்து செய்வதற்கு அண்ணாத்துரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை அனுமதிப்பது நாகரீகமும் அல்ல, நல்லதும் அல்ல” – இது ‘ஜெ ‘வின் சபதம்.

அண்ணா இறந்தது 1969ல். தேர்தல் வந்தது 1971ல். அண்ணாவின் மறைவு 1971 தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு உதவியாக அமைந்ததாக எந்தவித ஆராய்ச்சிக் கணிப்பும் இது வரை வந்ததில்லை. பெரும்பாலான கணிப்புகளில் திமுக தோற்று பெருந்தலைவர் காமராஜர் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று இருந்ததாகவும், அரசின் தலைமைச் செயலாளர் (இராயப்பா ?) கூட அவ்வாறு கருதி நடந்ததாகவும், எதிர்பாராவிதமாக எம்.ஜி.யாரின் மேல் இருந்த அபிமானத்தினால்தான் திமுக மீண்டும் வென்றதாகவுந்தான் கட்டுரைகள் வந்தன.

ஆனால், இந்திரா மறைந்த கையோடு, அந்த அனுதாபத்தைப் பயன் படுத்திக் கொள்ள நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தினார் இராஜீவ். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது காங்கிரஸ். அதுவரை தங்களுடைய தொகுதிகளில் தோல்வியையே கண்டறியாத அனைத்து எதிர்க் கட்சித் தலைவர்களும் தோல்வியடைந்தனர். இந்திரா மறைவுக்கு சில வாரங்கள் முன்பு காங்கிரஸ் இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்து வந்து கொண்டிருந்தது என்பதும் ஆந்திராவில் இராமராவ் ஆட்சியைக் கவிழ்த்து மூக்கையுடைத்து மரணப்படுக்கைக்கே போனது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதுபோல், இராஜீவ் படுகொலை நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடந்தது. முதல் பகுதி தேர்தல் இராஜீவ் மறைவுக்கு முன் நிகழ்ந்தது. அந்தத் தொகுதிகளில் பெரும்பாலும் காங்கிரஸ் தோற்றது. பின்னால் நடந்த இரண்டு பகுதி தேர்தல்களில் அனுதாபத்தால் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. குள்ள நரித்தனமாக எப்படி அறுதிப் பெரும்பான்மை பலத்தை அடைந்தது என்பதை சற்று மறந்து விடுவோம். இந்த இரு பொதுத்தேர்தல்களிலும் காங்கிரஸ் அனுதாப அலையால் எப்படி பயன்பெற்றது என்பது Economic and Political Weekly போன்ற சமூக ஆய்வுப் பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளாக வந்துள்ளன.

ஆனால் சிவக்குமார் என்ன எழுதுகிறார் பாருங்கள்:

“ஒர் அரசியல் தலைவரின் இயல்பான மரணத்தை அரசியல் லாபங்களுக்காக, முதன் முதலில் பயன்படுத்திய கட்சி அண்ணாத்துரை அவர்களின் கட்சிதான்.” — கட்டுரை 1.

“வன்முறையை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளவில்லை” — கட்டுரை 2.

3. கலாப்ரியா கருணாநிதியுடன் மேடையில் தோன்றியபொழுது, அவர் எழுத்துக்களைப் படித்து கவிதை எழுதக் கற்றதாகப் பேசினால் அது அநாகரீகம். இந்தியாவில் மதவெறியைத் தூண்டி அப்பாவி மக்களை பலியிட்டு வரும் இந்துத்தவத்தின் ஊதுகுழலாகச் செயல்படும் சங்கராச்சாரியார் — இந்த தேசத்தை ஆண்டால் மிகச்சிறப்பாக இருக்கும் — என்று ஜெயகாந்தன் புகழ்ந்து பேசினால் அது “மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்ட சமூக நாகரீகமாகத்” தெரிகிறது சிவக்குமாருக்கு. அண்ணாவுக்கான இரங்கல் கூட்டத்தில் போய், ஜெயகாந்தன் அவரை முட்டாள், பாமரன், பிரிட்டிசாரின் கையாள் எனவும், அண்ணா எழுதியவையெல்லாம் குப்பை எனவும் எந்தவித ஆதாரங்களையும் குறிப்பிடாமல் பேசியது அறிவுப்பூர்வமான விமர்சனமாம்.

4. அண்மையில் India Abroad (IA) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறுகிறார் சங்கராச்சாரியார் (JS):

IA: It is also true that upper caste Hinduism, traditionally, has treated one entire segment of the population in a subhuman manner. What is wrong if other faiths promise them equality ?

JS: That ‘s not the case. If you are not welcome in one, place it does not mean you go to another place that is done only in politics. Everyone – upper caste, backward caste, SC/ST – is part of Hinduism. If I have not looked after you properly you don ‘t have the right to go to someone else nor does that someone else have the right to take you in. Whatever is the issue among us we will sort it out among ourselves, why is the third party interfering ?

IA: You said everyone is part of Hinduism, but is

everyone an equal part of Hinduism ? Aren ‘t say,

Brahmins always top of the totem pole ?

JS: Who is equal where ? Even in a marriage are a

husband and wife equal ? Does the wife have equal

rights ? The husband has his, the wife has hers, isn ‘t

it ? Do you give equal rights ? People don ‘t give

equal rights at home – right from the way of locking

up the money – even though they may talk about it.

Does the employer give equal share ? Where does one

get equal share, you tell me. The only place is

before God, nowhere else in life. Inducing anyone

with equal rights is cheating. See outside my door, a

thousand people come to see me everyday. As far as we

are concerned everyone comes here, everyone is equal.

சாதியப்பாகுபாடுகளையும், அவற்றின் இழிநிலையையும் இப்படி ஆதரித்துப் பலமுறை பேசி வரும் சங்கராச்சாரியாரிடம் அதைப்பற்றியோ அல்லது பாபர் மசூதி தொடர்பான அவரது பாஸிச நிலைப்பாடுகளையோ விமர்சிக்கத் திராணியில்லாத ஜெயகாந்தன், “இராமன், கிருஷ்ணன், பகவத்கீதையைக் காப்பாற்ற வேண்டுவது என்று சொல்லுவது என்ன ஆன்மீகம்” என்று பொதுப்படையாகக் கேள்வி எழுப்பிவிட்டு, சங்கராச்சாரியார் கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக அடுத்த வரியிலேயே “துறவிகள் இந்த தேசத்தை ஆண்டால் மிகச்சிறப்பாக இருக்கும்” என்று வழிவது எதற்காக ? அண்ணாவைப் பற்றி கனல் பரக்க, தான் ‘இடியோசை ‘ எழுப்பியதாகப் பெருமையாகத் தன் புத்தகத்தில் கூறும் ‘ஜெ ‘ அந்த இடியோசையில் ஒரு சின்ன பகுதியைக் கூட சங்கராச்சாரியாரை பாராட்டி மகிழ்ந்த அந்த கூட்டத்தில் ஏன் எழுப்பவில்லை.

சங்கராச்சாரியாரை சுவாமி விவேகானந்தருக்குச் சமமாக ஒப்பிட்டு ‘ஜெ ‘வின் கூற்றுக்கு விளக்கம் கொடுத்துவிட்டார் சிவக்குமார்.

* * *

எந்த அரசியல் கட்சியிலும் தன்னை அவர் இணைத்துக் கொள்ளாமலோ அல்லது அவர் கம்யூனிஸ்டுக் கட்சிகளின் பிரதிநிதியாகவோ இதைப் பேசியிருந்தால்கூட ஒருதலைப் பட்சமாக கூறியதாக எனக்குத் தோன்றியிருக்காது. ஏனெனில், இந்திய அரசியல் கட்சிகளில் ஒரளவுக்கேனும் தங்களுடைய கொள்கைகளை கம்யூனிஸ்டுகள் வைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் காந்தியக் கொள்கைகளைக் குழிதோண்டி புதைத்துவிட்டு, திராவிடக் கட்சிகளை விடக் கேவலமான அரசியல் நடத்தி வரும் நேரு குடும்பக் கம்பெனியில் தன்னை ஒட்டிக் கொண்டுள்ள நிலையில் ஜெயகாந்தனின் அரசியல் கருத்துக்கள் ஒருதலைப் பட்சமானவை, முரண்பாடானவை, நாணயமில்லதவையாகத்தான் படுகின்றன.

திரும்பத் திரும்ப அவர் திராவிட இயக்கங்களையும், தலித்திய இயக்கங்களையும் மட்டுமே கடுமையாக தூற்றி வருவதற்கும், ஐம்பது ஆண்டுகளாக இந்தியாவை பிற்பட்ட நிலையிலேயே வைத்திருந்து அப்பாவி மக்களை ஏமாற்றி வரும் காங்கிரஸை உயர்த்திப் பேசுவதற்கும் அவர் ஒன்றும் அறியாத முட்டாள் அல்லர். ஞானியின் வரைமுறைப்படி அவர் அயோக்கியருமல்லர். அவருக்கு மற்ற காங்கிரஸ் காரர்கள் போல காங்கிரஸ் கட்சியை வைத்து காரியம் சாதிக்கும் எந்தவித சுயநலமுமில்லை. அவருடைய மேல்ஜாதி மனப்பான்மையைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தோன்றவில்லை.

ஒருதலைப்பட்சமான அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றி ஜெயகாந்தனை நேரிலேயே கேட்டபொழுது அதற்கு பதில் சொல்லத் தேவையில்லை என்றார். அகில இந்திய அளவில் பிற்படுத்தப் பட்டவர்களின் இயக்கங்களையும், தலித்தியக்கங்களைப் பற்றியும் தான் இழிவாக எண்ணுவது பற்றி விவாதம் செய்ய முடியாது என்றார். அவருடைய ஆணவ மனோபாவத்தில் உணர்ந்தது என்னவோ நான் சிறு வயதிலிருந்து பழகிப் போயுள்ள உயர் சாதிக்காரர்களின் மனப்பான்மைதான். கருணாநிதியின் ஆட்சி பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், அவருடைய சாதியை இழிவாகக் குறிப்பிட்டு “நேருவின் தரமும், இராஜாஜியின் அறிவும் இருந்த காலம் எங்கே. தி.மு.க. காரன்கள் வந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டான்கள்” என்றெல்லாம் வேளாளச் சாதியினர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களும் எந்தவித விவாதமும் செய்ய முன்வந்ததில்லை. தற்பொழுதுகூட திராவிட இயக்கங்களை மட்டம் தட்டுவதற்காகத்தான் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை உயர்வாகப் பேசுகிறார்கள். காமராஜர் பற்றியும் அவர்களுக்கு நல்ல கருத்து இருக்கவில்லை. காமராஜர் வந்த பிறகு தான் நாடார்களெல்லாம் வியாபாரத்துக்குள் நுழைந்து நேர்மையெல்லாம் கெட்டுப் போய் விட்டதாகவும் பேசக் கேட்டிருக்கிறேன்.

பிராமணிய இந்து மதத்தைப் போற்றும் உயர்சாதி இந்துக்களின் அடிமனதில் முன்பு திராவிட இயக்கங்கள் மீது ஒரு அருவருப்பான எண்ணம் இருந்தது. அவர்களில் ஒரு பகுதியினர் பின்னால் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் தில்லுமுல்லு செய்து கல்வியிலும், வேலை வாய்ப்புக்களிலும் ஆதாயம் பெற்றதால் திராவிடக் கட்சிகளை ஏற்றுக் கொண்டதும் உண்டு. அவர்கள் எல்லோருமே தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியையும், தலித்தியக்கங்ளையும் அருவருப்பாகப் பேசி வருகின்றனர். ஜெயகாந்தன் போன்ற அறிஞர்கள் அவர்களைப் போல வெளிப்படையாக சாதிகளை இழிவாகக் குறிப்பிடா விட்டாலும், திராவிட மற்றும் தலித்திய கட்சிகளை அருவருப்புடன் பார்ப்பதற்கு அவரின் ஆழ்மனதில் உள்ள மேல்சாதி மனப்போக்குதான் காரணம்.

* * *

சிவக்குமார் இறுதியில் முதலைக்கண்ணீர் வேறு வடிக்கிறார், “அண்ணா பற்றிய கருத்துப்பூர்வமான வ்ிவாதமாக அமையும் என்று எதிர்பார்த்தேன்” என்று. கருணாநிதியின் எழுத்துக்கள் மீது ஜெயமோகன் வைத்த விமர்சனங்களையொட்டிய இலக்கிய சர்ச்சையை தன்னுடைய அரசியல் புத்திக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்தார் என்பதுதான் அவரே அறிந்த உண்மை. ஜெயகாந்தன் பெரியார் மற்றும் அண்ணா பற்றி சொன்னவற்றையோ, அதைச் சொல்ல அவருக்கு இருக்கும் தகுதியைப்பற்றியோ அல்லது சுமார் முப்பந்தைந்து ஆண்டுகள் கழித்து அதை தன்னுடைய அரசியல் அரிப்பைச் சொறிந்து கொள்ளுவதற்காக சிவக்குமார் மறுபதிப்பு செய்வதையோ நான் எதிர்க்கவுமில்லை, குறை கூறவுமில்லை. என்னுடைய முதல் கட்டுரையில் கூட அதை நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன். விவாதம் என்றால் சொன்ன கருத்தை மட்டுமல்லாமல் சொன்னவரையும் விமர்சிப்பது சரியான நடைமுறைதான். இது சிவக்குமாருக்குப் பிடிக்கவில்லையென்றால், ஜெயகாந்தனை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று முதலிலேயே ஒரு அடிக்குறிப்பில் வேண்டிக் கொண்டிருக்கலாம்.

ஜெயகாந்தனின் அரசியல் முரண்பாடுகளையும், அதன் உள்நோக்கமாக நான் சந்தேகிப்பதையும் இங்கு கூறும் பொழுது கூட அவரின் இலக்கியப் படைப்புக்களை மிக உன்னதமாக மதிக்கிறேன். ஜெயகாந்தனின் அரசியல் கருத்துக்களை விமர்சித்து நான் திண்ணைக்கான கட்டுரை எழுதிய அன்று கூட இங்குள்ள இலக்கியவட்டம் என்ற திருக்குறள் ஆர்வக் கூட்டத்தில் நான் அறிந்துள்ள ஜெயகாந்தனின் படைப்புக்களையும், ஜெயமோகன் திண்ணையில் எழுதிய இரு அருமையான கட்டுரைகளையும் பற்றிக் கூறி மற்றவரையும் படிக்கத் தூண்டினேன். கடந்த முறை சென்னை சென்ற பொழுது திலீப் குமாரிடமிருந்து வாங்கி வந்த புத்தகங்களைக் காண்பித்து, அவரிடமிருந்து ஜெயகாந்தன் போன்றோரின் புத்தகங்களை மொத்தமாக வருவிக்க முடிவு செய்தோம்.

அண்ணாவின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றி உண்மையிலேயே கருத்துப்பூர்வமான வ்ிவாதத்தைத் தொடர நினைத்திருந்தால், அவை பற்றிய ஜெயகாந்தன், சுந்தரராமசாமி மற்றும் க.நா.சு. கருத்துக்களைக் கூறி நாகரீகமாகத் தொடங்கியிருக்கலாம். எனக்கும் கூடத்தான் தொல்காப்பியப் பூங்கா வரை வந்த அண்ணா மற்றும் கருணாநிதியின் படைப்புக்கள் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றன. அதை விட்டு, தமிழ்நாட்டு மக்களெல்லாம் பெருமூடர்கள், சிவக்குமாரும், ஜெயகாந்தனும் மட்டும்தான் மேதைகள் என்ற அடிப்படையில் எழுதத்தொடங்கினால் கருத்துப்பூர்வமான விவாதத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். அதை அரசியல் விமர்சனமாகத்தான் கருத முடியும். அரசியல் விமர்சனங்கள் என்று வரும் பொழுது சாதி, மதம் போன்ற எல்லா அரசியல் காரணிகளும்தான் விவாதிக்கப்படும்.

sankarpost@hotmail.com

————————————

திண்ணை பக்கங்களில் ஜெயகாந்த்ன்

  • பேட்டி – 1

  • பேட்டி – 2

  • பேட்டி – 3

  • பேட்டி – பின்னுரை

  • ஜெயகாந்தன் பற்றி ஜெயமோகன்-1

  • ஜெயகாந்தன் பற்றி ஜெயமோகன்-2

    Series Navigation

  • சொ.சங்கரபாண்டி

    சொ.சங்கரபாண்டி