ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

சத்யானந்தன்



மாற்றங்கள் தேவை சமூக வாழ்க்கையில் என்னும் தீவிரத்துடன் இயங்கியோர் மிகக் குறைவானோரே. 60 ஆண்டுகளுக்கு மேலாக மானுடத்துடன் ஒரு உரையாடல் நிகழ்த்தினார் ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” (இனி ஜேகே). பீடங்கள், மதங்கள், குருமார்கள் என கீழை நாட்டு ஆன்மீக நிறுவனங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நிராகரித்தவர் ஜேகே. 1986ல் அவர் மறையும் வரை இவை தாமே அழிந்தொழியும் எனக் கூறி வந்தார். தனிமனிதன் தன்னை மற்றும் சமூகத்தை அறிவுபூர்வமான கோணத்துடன் தனித்து நின்று பூச்சுகள் இல்லா அடையாளத்துடன் காண்பது ஒன்றே ஜேகேயின் வழியில் மாற்றங்களை நோக்கிய முதல் நகர்வு. அவர் முன்வைத்த வாதங்கள் அல்லது ஒரு புதிய அடையாள முறை புரியாதவை என்று மேலோட்டமாக புறந்தள்ளப் பட்டன.

ஜேகே பற்றிய புரிதலுக்கு “Freedom from the known”
என்னும் அவரது (உரைகளின் தொகுப்பான) புத்தகம் மிகவும் பயன்படும். ஒரு தனி மனிதனையோ, ஒரு இனத்தையோ அல்லது ஒரு சித்தாந்த்தத்தையோ, நிகழ்வையோ ஒரு திறந்த மனதுடன் அணுகுவது சாத்தியமற்றதாய் இருக்கிறது. நம் மனதுள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு நிறுவப்பட்ட கண்ணோட்டம், அனுமானம், முடிவு மற்றும் சார்பு இருக்கிறது. இதனால் நாம் காண்பதும் கேட்பதும் புரிந்து கொள்வதும் ஒருவகைப் பூச்சுக் கொண்டதாக குறிப்பிட்ட நிலைப்படுத்தப் பட்டதாக (conditioned) இருக்கிறது. நிறம் பூசப்பட்ட கண்ணாடியுடன் மட்டுமன்றி தான் சுமக்கும் ஒரு நிலைப்பாட்டிற்கான பொருந்து விடையைத் தேடியே நமது அவதானிப்புகள் அமைகின்றன. ஒப்பிடலும், பகுப்பும், குறுகிய நோக்கும் கொண்ட சமூக அளவிகளுக்கு இது பொருத்தமானதே. நடுநிலையான தேடல் அன்னியமாகும்.

இவ்வாறாக நாம் அசலான எந்த சிந்தனையையும் மேற்கொள்வதிலிருந்து விலகி இருக்கிறோம். நகல் கனவுகள், லட்சியங்கள், பெருமிதங்கள் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள். முறுக்கிச் சிக்கி முனை எது என்று தெரியாத ஒரு நூற்கண்டுக்குள் சிறைப் பட்ட ஒருவர் அதன் தீர்வை எவ்வாறு தொடங்க இயலும். எங்கிருந்து தொடங்குவது? காலங்காலமாய் இது புதிராகத் தொடர்கிறது. உலகின் துயரங்கள் மனித நேயம் வரண்ட சூழல் நீள இதுவே மூல காரணம். விழிப்பு என்பது அசலான ஒரு அவதானிப்பே. அது ஆராவாராமற்றதாகவும் நிறமற்றதாகவும் தருக்கத்தின் வசதிகள் அற்றும் காணப்படுவதாகும்.

மிகவும் வியக்க வைப்பது மேலை நாட்டு மனோவியல்வாதிகள் யாரையும் ஜேகே துணைக்கு அழைக்கவில்லை. மிருக உணர்வுகளை நிர்வகித்து சமூகமாக வாழுபவனே மனிதன் என்னும் கோட்பாட்டை அவர் நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும். தேடல் என்பது மிகவும் சுயமானதும் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தரங்கமானதும் மிகவும் அவசியமானதாகும். புரட்சிகரமான சமூக மாற்றம் ஒவ்வொரு தனி மனிதனின் சிந்தனையிலிருந்து துவங்குவது.

எண்ணங்களின் தொகுப்பாகவே மனிதனை ஜேகே உருவகப்படுத்துகிறார். நிறுவப்பட்ட நகல் மதிப்பீடுகளின் மீது கட்டமைக்கப் பட்ட எண்ணங்களின் கூட்டிலிரிந்து விடு பட்ட பிறகு மட்டுமே சுய சிந்தனை அல்லது தேடல் துவங்கும். இது ஒவ்வொருவருக்கும் சாத்தியமானதே. கலப்படமில்லாத பூச்சில்லாத பார்வைக்கு ஒரு நேர்மையான ஈடுபாடும் முனைப்பும் தேவை. என்னுடையது என்று சொல்லிக் கொடுக்கப் பட்டவற்றைத் தேடுவதும் அதற்கான போட்டி மற்றும் வன்முறையில் தேறுவதும் தொடர் வெறுமையும் வலியும் மானுடம் வலிந்து கொண்ட குறுகிய வழியாகும். அவ்வழி முறைக்குத் துணையாகும் கோட்பாடுகளை, பீடங்களை, நிறுவனங்களை கொண்டாடி வருகிறோம். இதிலிருந்து விடுதலை என்பது கூட்டாக சாத்தியம் அற்றது.

1985 1986ல் சென்னை பசுமை வழிச் சாலையில் வசந்த விஹார் என்னும் இல்லத்தில் அவர் ஒலி வாங்கி கூட இல்லாமல் பேசுவதைக் கேட்டோருக்கு அவர் தான் முன் வைத்த கருத்துக்களில் எந்த அளவு ஒன்றி இருந்தார் என்பது தெரியும். நான் என்று குறிப்பிடாமல் பேச்சாளர் என்றே குறிப்பிடுவார். பறவைகளின் ஒலிக்கிடையே ஆழ்ந்த குரலில் அவரது உரையைக் கேட்பதே ஒரு ஆன்மீக நிகழ்வாய் இருந்தது. அறிவே ஜீவிதமாய் வாழ்ந்த அவர் அது அனைவருக்கும் சாத்தியம் என்றே நம்பினார். எந்தப் பீடத்தையும் கட்டமைக்காத அவரது நீண்ட பயணம் தனிமையானது. விழிப்பும் அவ்வாறானதே.

Series Navigation