ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


நெருங்காது நீங்காது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு !

முன்னுரை: யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன ! முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்புகளை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும். செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும். அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும். ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

(கட்டுரை ஆசிரியர்)

அணு உலைகளில் ஏற்படக் கூடிய அபாயங்கள்

அணு உலைகளில், அணுமின் உலைகளில், அணுக்கழிவு சுத்தீகரிப்புச் சாலைகளில் ஏற்படக் கூடிய மாபெரும் விபத்துக்கள் என்ன ? அணு உலை இயங்கும் போது மீறும் தொடரியக்கத்தில் [Super Critical Reaction] வெடிப்பது ! அடுத்து கதிரியக்கப் பிளவுத் துணுக்குகளும், [Fission Fragments] திரவக் கழிவுகளும், வாயுக் கழிவுகளும் கோட்டை அரணிலிருந்து [Containment Structure] எப்படியோ கசிந்து சூழ்வெளியில் பரவிக் கதிரியக்கத்தை மக்கள் மீதும், தளங்கள் மீதும் பொழிவது.

இதுவரையில் கோர விளைவுகளை இரண்டு அணுமின் உலைகள் நிகழ்த்தி இருக்கின்றன. முதலில் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்து (1979). அடுத்தது சோவித் ரஷ்யாவின் செர்நோபில் அணுமின் நிலைய விபத்து (1986). அமெரிக்க அணுமின் உலையில் வெப்பத் தணிப்பு நீரிழப்பு விபத்து [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்து அணு உலை எரிக்கோல்கள் உருகின. ஆனால் கதிரியக்கத் துணுக்குகளும், திரவ, வாயுக் கழிவுகளும் கோட்டை அரணில் சேமிப்பாகி வெளியே கசியவில்லை. ஆனால் செர்நோபில் அணு உலையில் வெப்ப ஆற்றல் மிகையாகி இருமுறை வெடிப்புக்கள் விளைந்து கோட்டை அரண் இல்லாததால் கதிரியக்கத் துணுக்குகள், திரவ, வாயுக் கசிவுகள் சூழ்வெளியில் பரவின. உலகெங்கும் பல நாடுகளில் மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அணு உலைகளில் சிறிய, சிறிய விபத்துக்களும் நேர்ந்துள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக 32 நாடுகளில் இயங்கி வரும் 435 அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக பராமரித்து வந்த அனுபவங்களை 12,700 அணு-உலை-ஆண்டுகள் [Reactor-years] என்னும் எண்ணிக்கையில் IAEA காட்டுகிறது. யந்திரப் புரட்சி (தொழிற் புரட்சி) ஏற்பட்ட பிறகு எந்த ஒரு தொழிற் துறையும் அணுவியல் துறை உலைகள் போல் உலகெங்கும் தொடர்ந்து கண்காணிக்கப் படவில்லை. அந்த சிறந்த கண்காணிப்பை 1957 இல் முதலில் துவங்கியது அகில நாட்டு அணுசக்திப் பேரவை எனப்படும் IAEA. அடுத்து அணுமின் நிலைய இயக்கங்கள், இயக்கத் திறன்கள், பராமரிப்புகள், திறனாய்வுகள், குழு ஆய்வுகள், அபாய விளைவுகள் போன்றவற்றை அடிக்கடி அணு உலை இயக்க உலகக் கூட்டுறவு [World Association of Nuclear Operations (WANO)] நிறுவகம் மேற்பார்வை செய்கிறது.

மூர்க்கர்கள் தாக்காதபடி மேலை நாடுகளில் அணுமின் உலைப் பாதுகாப்பு அமைப்புகள் மிகுதியாக உள்ளன. அப்படிச் சிலர் தாக்கினாலும் விளையும் அபாயங்கள் சிறிதளவுதான் என்று அறியப்படுகிறது. இயற்கை நிகழ்ச்சியில் பேரளவு ஆற்றல் கொண்ட பூகம்பத்தின் போது அணுமின் உலைக் கட்டுமானங்கள், சாதனங்கள் நிலநடுக்க ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ளும் உறுதி படைத்தவையாக அமைக்கப் படுகின்றன.

அணு உலை இயக்கங்களால் நேர்ந்த மரண விபத்துகள்

செர்நோபில் கோர உயிரிழப்பு, மற்றும் அதன் கதிரியக்கப் பொழிவால் விளைந்த நோய், மரண விபத்தைத் தவிர உலக நாடுகளில் இயங்கும் வேறு எந்த அணுமின் நிலையங்களில் கதிரியக்கத்தால் மனிதர் யாரும் இறக்க வில்லை. அணு ஆராய்ச்சி உலைகளில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தவறுதலாக யுரேனிய அல்லது புளுடோனிய எருக்களைக் கையாண்டதால் கதிரியக்கம் பெற்று ஒரு சிலர் சில தினங்களில் உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது. ஜப்பானில் யுரேனியச் செறிவுச் சாலை ஒன்றில் ஏற்பட்ட கதிரியக்க விபத்தில் இருவர் மாண்டனர். மேலும் இரண்டு அணுமின் நிலையங்களில் [ஜெர்மனியில் குன்றிமிங்கன் அணுமின் உலை, ஜப்பானில் மிஹாமா அணுமின் உலை] பராமரிப்பு செய்யும் போது கதிரியக்கம் இல்லாத நீராவி பேரளவில் கசிந்து நான்கு பேர் மரித்தார் என்பது அறியப் படுகிறது.

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் கண்காணிப்பு

1957 இல் ஆஸ்டிரியா வியன்னாவில் தோன்றிய அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் சில விதி முறைகள்,

அணுக்கருவியல் பாதுக்காப்பின் கீழ் அணுக்கருப் பண்டப் பயன்பாடு, அணு ஆயுத எருக் கண்காணிப்பு ஆகிய இரண்டும் சேர்க்கப் பட்டுள்ளன.

அணுக்கருவியல் பாதுகாப்பு [Nuclear Safety]: அனுமதி பெற்ற அணு உலைக் கூடங்களிலிருந்து மனிதர் தூண்டாத விபத்துகளால் விளையும் கதிரியக்க வெளியேற்றத்தையும், அதன் தீங்குகளையும் பற்றியது.

அணுக்கருப் பண்டப் பயன்பாடு [Nuclear Security]: அணுவியல் எரு மற்றும் ஏனைய கதிர்வீசும் பண்டங்களைப் பயன்படுத்துதல் பற்றியது. அன்னியர் அல்லது புறத்தே உள்ளவர் அணுவியல் பொருட்களை களவு செய்வதைக் கண்காணித்தல் பற்றியது.

அணு ஆயுத எருக் கண்காணிப்பு [Nuclear Safeguards]: உலக நாடுகளில் அணு ஆயுத ஆக்கத்தையும் பெருக்கத்தையும் தடுப்பது பற்றியது.

அகில நாட்டு அணுசக்திப் பேரவை உலக நாடுகளில் அணுக்கருப் பண்டங்கள் சேமிப்பு, பாதுகாப்பு, பயன்பாடு, தீய்ந்த எருக்கள் கைவச இருப்பு [Spent Fuel Storage], புதைப்பு பற்றிய வினைகளில் தணிக்கை ஆற்றல் உரிமை [Auditor of World Nuclear Safety] பெற்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் கண்காணிப்பு செய்ய அகில நாட்டு அணுசக்திப் பேரவைப் பிரதிநிதி ஒருவர் அமைக்கப் படுவார்.

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits:

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)
4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo
5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants.
11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 21, 2007

Series Navigation

ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா நகரை நரகமாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
மட்ட மாக்கப் பட்டது !
திட்ட மின்றி
மூட நிபுணர்கள் அணு உலையைச்
சூடாக்கிச்
சோதனையில் வெடித்து
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார்,
மேலும் மரிப்பார், மரிப்பார் !
நாடு, நகரம்,
வீடு, வீதி, வயல்கள் எல்லாம்
மூடின கதிர் வீச்சுகள் !
கட்டாயமாய்ப் பல்லாயிரம் பேர்,
கைப்பையுடன்
புலம்கடத்தப் பட்டார் !
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மனிதத் தவறு !
மன்னிக்க முடியாத தவறு !
மாபெரும் தவறு !
ரஷ்யக் கரடிகள் முதன்முதல்
அரங்கேற்றிய அணுயுகப்
பிரளயம் !


(செர்நோபில் விபத்தின் 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவாக எழுதப்பட்டது)

++++++

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சி தளத்தட்டின் மீது அமர்ந்திருப்பதை முதலில் கண்டுபிடிக்காமல் போனது எங்களுக்கு ஓர் இழப்புதான். ஆயினும் அந்த தவறு எந்த விதத்திலும் ஓர் அபாயப் பேரிழப்பாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை.”

டோஷியாகி ஸகாயி [Head Engineering Group Tokyo Electric’s Nuclear Plants]

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் நிலநடுக்கத்தின் போது பாதுகாப்பாக நிறுத்தமாகி, யந்திரச் சாதனங்களும், கட்டடங்களும் பெருத்த சிதைவுகள் அடையாது அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டன. ஆனால் அதன் கீழ் வெகு ஆழத்தில் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தட்டிருந்தது எப்படி நிபுணர்களுக்குத் தெரியாமல் போனது ?”

மிஸியோ இஷிகாவா [President Japan Nuclear Technology Institute]

“நிலநடுக்க விளைவுகளை IAEA குழுவினர் உளவ ஜப்பானிய அணுவியற்துறை அதிகாரிகள் வெளிப்படையாக, முழு ஒத்துழைப்பளிப்பதை வரவேற்கிறேன். ஜப்பானிய நிபுணர்களின் நிலநடுக்க விளைவு ஆய்வுகளும் IAEA குழுவினர் புரியும் தனிப்பட்ட உளவுகளும் விபத்தால் நேர்ந்த நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் [Positive & Negative Lessons] கற்றுக் கொள்ள உதவும். அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களின் இயக்கக் கட்டுப்பாடுகளுக்கும் பராமரிப்புக்கும் ஏற்றதாகும்.”

மொகமது எல்பராடி [Mohamed ElBaradei, IAEA Director General]

முன்னுரை: ஜப்பானிலும் மற்ற உலக நாடுகளிலும் உள்ள அணு உலைகள் நிலநடுக்க அதிர்ச்சி ஆட்டங்களைத் தாங்கி நடுக்கம் மீறினால் அணு உலைகள் தானாகவே நிறுத்தம் அடையுமாறு டிசைன் செய்யப்படுகின்றன. நிலநடுக்கம் எப்போது வருமோ என்று அஞ்சிய நிலையில் விழிப்பாக இருக்கும் ஜப்பானில் 55 அணுமின் நிலையங்கள் இப்போது இயங்கி வருகின்றன. 1995 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரும் (7.3 ரிக்டர்) கோப்-ஒஸாகா நிலநடுக்கத்தில் கூட [Kobe-Osaka Earthquake] அருகில் இருந்த அணுமின் நிலையங்களுக்குப் பாதிப்புகள் நேரவில்லை. 2004, 2005, 2007 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் “தளத்துடிப்பு வேக வீதம்” [Ground Acceleration] மிகையாக இருந்ததால், அணு உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன ! 1999 இல் டெய்வான் நிலநடுக்கத்தில் அருகிலிருந்த மூன்று அணுமின் உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன. 2007 ஜூலை 17 ஆம் தேதி வடமேற்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நிலையம் பாதுகாப்பாக நிறுத்தமாகிப் பெரிய பாதிப்புகள் நேரா விட்டாலும், உலகப் பெரும் காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தளத்தட்டின் (Active Seismic Fault) மீது அமர்ந்துள்ளது என்று முதன்முதல் நிபுணர்கள் கண்டுபிடித்தது குறிப்பிடத் தக்க ஓர் அதிசயமாகும் !

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜலை 16 ஆம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்கமைய மாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது. அதன் விளைவால் இதுவரை 11 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது. 150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட ஆடினவாம் ! நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது !

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது. வெளியே உள்ள டிரான்ஸ்•பார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஒரு இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது. அவரது முக்கியக் கண்டுபிடிப்பு: காஷிவாஸாகி அணுமின்சக்தி யூனிட்டுகள் செய்யப்பட்ட டிசைன் வரை அளவு (6.5 ரிக்டர்) விபத்து அளவைவிடக் (6.8 ரிக்டர்) குறைவானது. ஆயுனும் தீவிரப் பழுதுகள், பிளவுகள் ஏற்படாததற்குக் காரணம், எல்லா டிசைன் வரைமுறைகளும் 10% மிகையாக வைக்கப்பட்டுள்ளன. அதாவது மெய்யான டிசைன் நிலநடுக்க வரை அளவு: (6.3 +6.3 X 10/100 = 6.3+0.63 =6.93). ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.

அகில நாட்டு அணுசக்திப் பேரவைக் குழுவினர் செய்த உளவுகள்

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பேரதிபர் மொகமது எல்பராடி ஜப்பானிய அணுவியற் துறை அதிகாரிகளின் வெளிப்படையான ஒத்துழைப்பை வரவேற்று, “ஜப்பானியரின் உளவு ஆய்வுகளும் IAEA குழுவின் தனிப்பட்ட உளவுகளும் நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவும். அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களுக்கும் உகந்ததாகும், என்று எடுத்துக் கூறினார்.

பேரவைக் குழுவினர் மூன்று நாட்கள் தங்கி ஏழு அணுமின் நிலையங்களின் சிக்கலான கட்டட அமைப்புகளையும், ஏதுவான அணு உலைச் சாதனங்களையும் சோதித்துப் பிளவுகள், பழுதுகள் ஏற்பட்டுள்ளனவா என்று உளவு செய்தார்கள். விபத்து நேர்ந்த நாளன்று அணுமின் உலை ஆட்சி அறை அரங்கில் [Control Room Panels] பதிவான அனைத்து பதிவுக் கருவிகளின் பதிவுகளையும், அணுமின் உலைச் சாதனங்கள் இயக்கங்களையும் ஆழ்ந்து நோக்கினார். அவரது முதல் உளவு முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.:

1. அணுமின் நிலையக் கருவிகள், சாதனங்கள் நிலநடுக்கத்தின் போது, டிசைன் வரையறையை மீறாமல் திட்டமிட்டபடிப் பாதுகாப்பாய் இயங்கியுள்ளன.

2. ஜப்பானிய நிலைய இயக்குநர் கைப் பதிவுகளின் அறிக்கைப்படி சிறிதளவுக் கதிரியக்க நீரே கசிந்து கடலில் கலந்தது என்பதற்குப் பேரவைக் குழுவினர் ஒப்புதல் அளித்துள்ளார். அச்சிறிய அளவுக் கசிவுக் கதிரியக்கத் திரவக் கழிவு பொதுநலச் சூழ்வெளிப் பாதுகாப்பு எல்லையைத் [Limits for Public Health & Environmental Safety] தாண்ட வில்லை என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தால் உண்டான கட்டடப் பிளவுகள் எதுவும் அணு உலைப் பாதுக்காப்புக்கு அரணுக்கோ அல்லது சாதன ஏற்பாடுகளுக்கோ நேரவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

3. நிலநடுக்க சமயத்தில் நிறுத்தமான அணுமின் நிலையச் சாதனங்கள், பம்ப்புகள், கொதிகலன்கள் சிலவற்றில் பழுதுகள், பிளவுகள் ஏற்பட்டுள்ளனவா என்று கதிரியக்கத் தளங்களில் உடனே சோதிக்கப்பட முடியாது. திட்டமிட்டுப் பணிபுரியும் அணுமின் நிலையப் பராமரிப்புத் தருணங்களில்தான் அவற்றை உளவு செய்ய முடியும். பேரவைக் குழுவினர் கூற்றுப்படி இன்னும் அணு உலைச் சாதனங்கள், அழுத்தக் கலன்கள், எரிக்கோல்கள் அடுத்த உலை நிறுத்த வேளைகளில்தான் உளவு செய்யப்பட வேண்டும்.

4. நிலநடுக்க அதிர்ச்சியால் உண்டான உலைக்கலச் சாதன அழுத்தங்கள் [Physical Stresses of Pressure Vessel & other Components] சில நிலையங்களின் பாதுகாப்பான இயக்க ஆயுட் காலத்தைக் குறைக்கலாம். அதாவது அவ்வித அழுத்தமான சாதனங்கள், எதிர்பார்த்த காலத்துக்கு முன்பே மாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.

5. குறிப்பிடத் தக்க ஒரு கண்டுபிடிப் என்ன வென்றால் 2007 ஜூலை 17 ஆம் தேதி நேர்ந்த நிலநடுக்கம் (6.8 ரிக்டர்) பாதுகாப்புக்காக எஞ்சினியர்கள் முதலில் செய்த அணுமின் நிலைய டிசைன் அளவை விட (6.3 ரிக்டர்) 0.5 ரிக்டர் மிஞ்சி விட்டது ! ஆயினும் பெரும்பான்மையான அணுமின் உலைகளின் பாதுகாப்பு டிசைன் வரையறை எப்போதும் 10% மிகையாக வைத்துக் கட்டப்படுவதால் (6.3 + 0.63 = 6.93), நிலையத்தில் பேரளவுச் சிதைவுகளோ, பிளவுகளோ உண்டாக வில்லை என்று முடிவு செய்யப் பட்டிருக்கிறது.

6. அணுமின் நிலையச் சொந்த நிறுவனமான டோக்கியோ மின்சார வாரியம் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பே “நிலநடுக்கத் தீங்கு மீளாய்வு” (Seismic Hazard Re-evaluation) செய்து 2006 செப்டம்பரில் அதன் அறிக்கையை ஜப்பான் அணுத்துறைப் பாதுகாப்பு தலையகத்துக்கு [Japan Nuclear Safety Commission (JNSC)] அனுப்பியுள்ளது. 2007 ஜூலையில் நேர்ந்த நிலநடுக்கத்தின் விளைவுகளும் எடுத்தாளப்பட்டு இப்போது டிசைன் மேம்பாடு செய்யப்படும்.

7. ஜப்பான் நிலநடுக்க விளைவுகள் IAEA மூலமாக அனைத்துலக உறுப்பின நாடுகளுக்கும் பரப்பப் படுகின்றன. அதுபோல் மற்ற நாடுகளின் அணு உலை விபத்துகள், இயக்க விபரங்களை ஜப்பான் அணுத்துறை நிறுவனங்களுக்கு IAEA அனுப்பி வருகிறது.

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits:

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)
4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo
5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants.

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 21, 2007

Series Navigation

ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் ! (ஜூலை 17, 2007)

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


அருகாது அகலாது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு

Fig. 1
Earthquake near Nuclear Plant

முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுகள் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, சோவியத் ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! அணு ஆயுதங்கள் வெடித்து, ஜப்பானில் இறந்தவர் எண்ணிக்கை 300,000 பேரைத் தாண்டி விட்டது! அங்கு காயம் உற்றோர், கதிரடி பெற்றோர், சந்ததி ஊனமுற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா! செர்நோபிள் விபத்தில் உடனே இறந்தவர் 31 நபராயினும், மிகையானக் கதிரடியில் பாதிக்கப் பட்டவர் 600,000 மேல் என்றும் பின்னால் அவர்களில் மரணம் அடைந்தவர் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் ஏறிக்கொண்டு போவதாயும் அறியப் படுகிறது! அண்டை ஊர்களில் பொழிந்த கதிர்த் தீண்டலால், சுமார் 135,000 மக்கள் வேறு ஊர்களில் குடியேற ராணுவப் பஸ்களில் தூக்கிச் செல்லப் பட்டனர்! பல வருடங்கள் கழித்துக் கதிர் ஐயோடினில் [Radioiodine] பாதிக்கப்பட்ட 1800 குழந்தைகள் தைராய்டு புற்றுநோயில் தாக்கப் பட்டதாகவும், அந்தக் குழுவில் பத்துக் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இப்போது அறியப் படுகிறது!

Fig. 1A
Location Map of Japan Earthquake

உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவு மிகையாக விளைவிக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை விபத்து கருதப் படுகிறது! செர்நோபில் நிலையத்தில் சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டிக் கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும், மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம் செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர் என்று அறிய வருகிறது! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள் கட்டாயமாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். ஆனால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத் துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர் பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப் பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது!

Fig. 1B
Kashiwaziki Nuclear Plant

ஆனால் சமீபத்தில் 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அதனால் தூண்டப்பட்ட காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையத் [Kashiwazaki- Kariwa Nuclear Power Plant] தீவிபத்தும், கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் சேர்ந்ததும், மற்ற விபத்துக்களோடு ஓப்பு நோக்கினால் மிகச் சிறிய விளைவு என்றுதான் அகில உலக அணுசக்திப் பேரவை (IAEA) முடிவு செய்கிறது !

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜலை 16 ஆம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்கமைய மாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது. அதன் விளைவால் இதுவரை 9 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது. 150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட ஆடினவாம் ! நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது !

Fig. 1C
Japan Earthquake Regions

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது. வெளியே உள்ள டிரான்ஸ்·பார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஒரு இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது. அவரது ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். அந்த அறிக்கை அகில வலைகளில் வெளியானதும் நான் எனது தொடர்க் கட்டுரையில் எழுதுகிறேன்.


Fig. 1D
Seismic Sensors

நிலநடுக்கங்கள் அடிக்கடி குலுக்கும் ஜப்பான் தேசம்

உலக நாடுகளிலே ஜப்பான் தேசம் ஒன்றுதான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையற்ற கடற்தளம் மீது ஒட்டியும் ஒட்டாத தீவுகளாய்ப் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து வருகிறது. ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எழும் நிலநடுக்க நாட்டில் ஜப்பானியர் மிக விரைவாய்ச் செல்லும் இரயிலில் அனுதினம் பயணம் செய்து கொண்டு, நிலநடுக்கச் சிதைவுகளைச் சகித்திக் கொண்டு வாழ்கிறார். புல்லெட் டிரெயின் எனப்படும் வேக வாகனங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் தானே நின்று விடுகின்றன. ஜப்பானில் 30% பங்கு மின்சார ஆற்றல் பரிமாறிவரும் 55 அணுமின் நிலையங்கள் நிலநடுக்கத்தால் பேரழிவுகள் நேராதவாறு பாதுகாப்பாக நிறுத்தமாகி, நிலைமை சரியான பிறகு இயங்கின்றன. அதே நைகாடா பகுதியில் 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் உண்டான 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 65 பேர் மரித்தனர். இதுவரை நிகழ்ந்த நிலநடுக்கத்திலே மிகப் பெரும் நடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் 1995 ஆண்டில் கோப் நகரப் பகுதியில் [Kobe City] நேர்ந்தது. அந்தக் கோர நடுக்கத்தில் 6400 பேர் உயிரிழந்தனர் !

Fig. 2
Reactor Automatic Shutdown

காஷிவாஸாகி அணுமின் நிலையத்தில் நேர்ந்த விளைவுகள்:

டோகியோ மின்சார வாரியம் [Tokyo Electric Power Company (TEPCO)] மேற்பார்வை செய்து நடத்தி வரும் காஷிவாஸாகி அணுமின் நிலையம் ஏழு தனி உலைகளைக் கொண்ட உலகத்திலே மிகப் பெரிய நிலையம் அது ! அது ஜப்பானின் வடமேற்குப் பகுதியில் நைகாடா நகருக்கு அருகில் 4.2 சதுர கி.மீடர் பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த ஏழு அணுமின் யூனிட்டுகளும் கொதிநீர் அணு உலைகள் [Boiling Water Reactors] ஆகும். அவை அனைத்தும் இயங்கினால் மொத்தம் 8212 MWe மின்சார ஆற்றல் பரிமாறத் தகுதியுள்ளது. அந்த தளத்தில் ஏழு அணு உலைகள் உள்ளதோடு ஓர் அணுவியல் பயிற்சிக் கூடம், பொதுநபர் அணுசக்தித் தகவல் கூடம் மற்றும் தணிவு நிலை கதிரியக்கக் கழிவுச் சேமிப்புக் கிடங்கு [Low Level Radioactive Waste Storage Facility] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் சிறப்பாக கொதிநீர் உலை இயக்குநர் பயிற்சிக்காக இரண்டு போலி அணுமின் உலை அரங்குகள் [Simulators in BWR Operator Training Centre] அங்கே நிறுவகமாகி யுள்ளன.


Fig. 3
Boiling Water Reactor
Schematic

நிலநடுக்கமான அன்றைய தினத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் உலைகள் யாவும் சுய இயக்கு நிலநடுக்க உணர்வுக் கருவிகள் மூலம் [Seismic Sensors] நுகரப்பட்டு உடனே நிறுத்தம் ஆயின. அதாவது அந்த நிலையத்திலிருந்து வெளியாகும் மின்சாரப் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டு நிலையங்கள் யாவும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உலோக உராய்வால் ஒரு மின்னழுத்த மாற்றியில் [Electric Transformer] தீப்பற்றியது. அதன் மூலம் மின்சாரப் பரிமாற்றம் முன்பே நிறுத்தமானதால் தீங்குகள் எதுவும் நிகழாமல் புகை மட்டும் மூண்டு பரபரப்பான டெலிவிஷன் காட்சியாக உலகைக் கவர்ந்தது. ஜப்பான் தீயணைப்புப் படையினர் உடனே தீயை அணைத்துப் பரவாமல் தடுத்தனர்.

(தொடரும்)

***********************
தகவல்:

Picture Credits:

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)
4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo
5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 16, 2007

Series Navigation