ஜடாயு எதிர்வினைக்கு நன்றி

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

புதியமாதவி, மும்பை



மதிப்பிற்குரிய ஜடாயு அவர்கள் என் கருத்துக்கு எழுதியிருக்கும் எதிர்வினைக்கு மிக்க நன்றி.

ஜடாயு:
———–

>புதியமாதவி ஆதியிலிருந்தே திராவிட என்ற சொல் இனத்தைக் குறிப்பதாக எழுதுகிறார்.. இது முற்றிலும் தவறு. அது ஒரு *மொழியையும்*, *பிரதேசத்தையும்* மட்டுமே குறிக்கும் சொல்லாகவே சம்ஸ்கிருத இலக்கியம் முழுமையும் பயன்படுத்தப் பட்டு வந்தது, கால்டுவெல் காலம் வரை.” >

மிகவும் சரி. அப்படியே ஏற்றுக்கொள்வதில் எதுவும் சிக்கலில்லை!

ஜடாயு:
————–

>கர்நாடகாஸ்²ச தைலங்கா³: த்³ரவிடா³: மஹராஷ்ட்ரகா​: |

கு³ர்ஜராஸ்²சேதி பஞ்சைவ த்³ரவிடா³: விந்த்⁴யத³க்ஷிணே ||

என்று தென்னிந்திய மக்களைக் குறிக்க திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறது. //
என்று புதியமாதவி எழுதுகிறார். இந்த சுலோகம் “தென்னிந்திய மக்களை” பொதுவாகக் குறிக்கவில்லை. “பஞ்ச திராவிடர்” என்று அழைக்கப் பட்ட ஐந்து தென்னிந்திய பிராமணர் குழுக்களைக் குறிக்கிறது. இவர்கள் விந்தியத்திற்குத் தெற்கே வசிப்பவர்கள். >

இந்த இடத்தில் மட்டும் மிகவும் சரியாக திராவிட என்ற சொல் 5 தென்னிந்திய பிராமணர் குழுக்களைக்
குறிப்பதாக ஏற்றுக்கொண்டிருப்பதற்கும் ….மிக மிக நன்றி.

இப்போது எனக்குச் சில சந்தேகங்கள் அய்யா:

தென்னிந்தியாவில் தமிழர்களை அவர்களே விரும்பாத, அடையாளமாக்காத, திராவிடர் என்ற அடையாளத்துடன்
ஒரு கருத்துருவாக்கம் வருகிறது. அக்கருத்து பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
தமிழ் திராவிட மொழிக்குடும்பத்தில் தலையாய இடம் பெற்றது இருக்கட்டும்.
தமிழர்கள் திராவிடர்களாக்கப்பட்ட போது …. இந்த தென்னிந்திய பிராமணர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்?
தென்னிந்திய பிராமணர்களுக்குத் தங்கள் அடையாளம் பறிபோனதில் ஒரு கலகமே வெடித்திருக்க வேண்டாமோ?
ஏன் அப்படி எல்லாம் எதுவுமே நடக்கவில்லை?
எனக்கு இந்த இடத்தில் தான் அய்யா ஏகப்பட்ட சந்தேகங்கள் வந்து தொலைக்கிறது.

* தங்களுக்கான அடையாளத்தை இழக்கும் தருணத்தில் தென்னிந்திய பிராமணர்கள் கள்ளமவுனம்
சாதித்தது ஏன்?

பிராமணர்கள் என்றாலே ஆரியர்கள். திராவிட கருத்துருவாக்கம் பிராமணர்களுக்கு வழங்கிய
கொடை இதுதான். கால்டுவெல், திராவிட மொழிக்குடும்பம் இத்தியாதி எல்லாம் வருவதற்கு முன்பே
வட இந்திய மனுவும் வேதங்களும் சகலமும் ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் பெற்று பிராமணர்கள் எல்லோரும்
ஆரியர்களாகி சமஸ்கிருதம் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தின் அறிவு பீடத்தில் அமர்ந்துவிடுகிறது.
அதுவும் வெள்ளையர்களே தலையில் வைத்துக் கொண்டாடும் ஓர் அறிவுபீடம்.
அதனால் தானோ என்னவோ இந்தச் சுண்டைக்காய் திராவிட அடையாளம் ஒழிந்து போனதில்
தென்னிந்திய பிராமணர்களுக்கு வருத்தமோ இழப்போ இல்லை. ஆரியமாகி உலக அரங்கில்
உயர்ந்த பீடம் கிடைக்கும் போது யாருக்குத்தான் இழக்க மனம் வரும்?

>பிரிட்டிஷார் வர்ண சாதிப் பாகுபாடுகளை எங்ஙனம் திரித்தனர் என்பது பற்றிய தவறுதலான பார்வை…
என்று நீங்கள் சொல்வதின் உங்கள் பக்கத்தை என்னால் சரியாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
ராம் ஸ்வரூப்பின் கட்டுரையை உங்கள் மொழியாக்கத்தில் வாசித்தேன்.
உங்கள் மொழியாக்கம் மிகச்சிறப்பாக உள்ளது.

Annihilation of caste – பாபாசாகிப் அம்பேத்கரின் கட்டுரை நீங்கள் வாசித்திருக்க கூடும்.
இல்லை என்றால் கட்டாயம் வாசிக்கவும்.

நன்றி.

Series Navigation