சென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

சின்னக்கருப்பன்


**

பரிசோதனை

கவலை தரக்கூடிய சில விஷயங்களை பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் படிக்கும்போது அவற்றைப் பற்றிய பொதுக்கருத்துக்களையும் விவாதங்களையும் எழுப்புவது அவசியம் என்று தோன்றுகிறது.

அப்படிப்பட்ட ஒரு செய்தி, இந்தியாவின் மருத்துவத்துறை தவறான விஷயங்களுக்காகவும் வெளிநாடுகளிலிருந்து அவுட் சோர்ஸிங் பண்ணுவது.

மேற்கத்திய நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மருந்து சரியாக வேலை செய்கிறதா என்று அறிய, அந்த வியாதி உடையவர்களை மருந்து கம்பெனிகள் அணுகி, இந்த மருந்தை பரிசோதனை செய்ய ஒப்புக்கொள்வீர்களா என்று கேட்டு, சில வேளைகளில் ஒரு குறிப்பிட்ட நஷ்ட ஈட்டுத்தொகையுடனும் பரிசோதனை செய்கிறார்கள். இப்போது இந்த வேலையையும் இந்தியாவுக்கு மேலை நாட்டு மருந்து நிறுவனங்கள் அனுப்புவதாக இந்துஸ்தான் டைம்ஸில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியாவின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கும், வறுமையும், ஆபத்தான பல பரிசோதனைகளுக்கு இந்திய மக்களை உபயோகப்படுத்திவிடும். (நான் மேலைநாட்டு எதிர்ப்பாளன் என்று ஏற்கெனவே பலர் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டி வருகிறார்கள். அப்படியெல்லாம் நான் இல்லை. இந்திய மக்களது வாழ்க்கையும் வளமையும் எனக்கு முக்கியமாகப் படுவதால், அவர்கள் அறியாமல் பாதிக்கப்படகூடிய விஷயங்களைப் பற்றி பேசவேண்டியவனாக இருக்கிறேன்)

ஏற்கெனவே, ஏராளமான இப்படிப்பட்ட பரிசோதனைகள் நடப்பதாகவும், சுமார் 70 மில்லியன் டாலர் இதில் இந்தியாவுக்கு வந்திருக்கிறது என்றும் அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.

நம் நாட்டு மருத்துவர்கள் ஒழுக்கமானவர்கள் தாம், நேர்மையானவர்கள்தாம், தொழில் சுத்தி கொண்டவர்கள்தாம். ஆனால், இந்திய மக்களுக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்தான பரிசோதனைகளைச் செய்து அழிவை உருவாக்கிவிடமாட்டார்கள் என்று நம்புவோம்.

http://www.hindustantimes.com/news/181_546861,0008.htm

***

சோதனை

குஜராத்தில் 10 வழக்குக்களை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் குஜராத் அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறது.

வெட்கம் மானம் சூடு சொரணை என்று ஒரு வரிசை தமிழ்நாட்டில் சொல்வார்கள். இப்படிப்பட்ட ஒரு கேள்விக்குப் பின்னரும் அந்த வழக்குக்களை குஜராத் அரசாங்கம் நடத்துவது கேவலம்.

தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்கு எதிராக தமிழ்நாட்டு அரசாங்க வக்கீலே பேசுவது போன்ற அபத்தம் குஜராத்தில் இல்லை என்பது உண்மைதான்.

குஜராத் கலவரத்தில் கொலைகள் புரிந்த மக்கள் மீது குஜராத் அரசு வழக்குத் தொடுக்கிறது. இங்கே நேரடியாக குஜராத் முதலமைச்சரோ அல்லது போலீஸ் அதிகாரிகளோ வழக்குக்களில் குற்றம்சாட்டப்படவில்லை. இந்த வழக்குக்களை குஜராத்தை விட்டு வெளியே அனுப்புவது குஜராத் அரசாங்கம் தன்னைத்தானே நம்பவில்லை என்று காட்டும் என்று சொல்லி குஜராத் அரசு மறுக்கிறது.

ஆனால், மக்கள் மனத்தில், (இந்திய மக்கள், குஜராத் மக்கள் மட்டுமல்ல), குஜராத் அரசாங்கமும் குற்றவாளிக்கூண்டில் நிற்கிறது. இந்த வழக்குகளில், ஏதேனும் ஒரு சாட்சி, குஜராத்தின் அதிகார வர்க்கத்தில், அரசியல்வாதிகள் வர்க்கத்தில் இருப்பவர் ஒருவரை குற்றம் சாட்ட முடியும். அதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வெளிப்படையான உண்மை, குஜராத்திலேயே நடக்கும் இந்த வழக்குகளில் அமுக்கப்பட்டுவிடலாம்.

இந்த வழக்குக்கள் அனைத்தையும் இன்னொரு மாநிலத்துக்கு அனுப்புவதுதான் குஜராத் அரசுக்கு சரியான விஷயம். அங்கு கிடைக்கும் நீதியை ஒப்புக்கொண்டு குற்றம் புரிந்தவர்களை தண்டிப்பதுதான், குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் நீதி.

***

பரிபோல வேகம்

புத்தம்புது பளபளப்பாக இந்தியா

உஜாலாவுக்கு மாறிவிட்ட பலரைப் போல பாஜகவுக்கு மாறிவிட்ட பலரை சந்திக்கிறேன். அதில் பெரும்பான்மையானோர், புதியதாக கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து நல்ல வேலையில் இருப்பவர்கள். கணிசமாக இவர்களது எண்ணிக்கை அதிகரித்திருப்பது, இவர்களது நட்புக்குழாம் விரிவாக சென்னையில் இருப்பதிலிருந்து தெரிகிறது. பல நண்பர்கள் அமெரிக்கா ஐரோப்பா என்று இருக்கிறார்கள். இவர்கள்கூட இந்தியன் என்ற பாஸ்போர்ட்டை விட்டுவிடாமல் பல நாடுகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று பேசுபவர்களாக இருக்கிறார்கள்.

என்னுடன் பணி புரியும் பலர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிறந்த கிராமத்துக்குச் சென்றுவருகிறார்கள். வயதான அப்பா அம்மாவுக்கு கார் வாங்கித் தந்திருக்கிறார்கள். அப்படி ஒருமுறை என் நண்பனுடன் அவனது கிராமத்துக்குச் சென்று அவனது தாய் தந்தையருடன் பேசிக்கொண்டிருந்தேன். திராவிட முன்னேற்றக்கழகத்தை சார்ந்த அப்பா. எம்ஜியாருக்கு ஓட்டுப்போட்டதை என்னிடம் சொன்ன அவன் அம்மா. காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த வயதான தாத்தா. நான் ஒருதடவை காந்தியை என் கண்ணாலப் பாத்தேன் என்று சொன்ன பாட்டி.

இந்த தேர்தல்ல யாருக்கு ஓட்டுப் போடுவீங்க என்று கேட்டேன் அவனது தாயாரிடம். ஜெயலலிதாவுக்குத்தான் என்று சொன்னார். அவ புத்தி கெட்டவ அவளுக்கெல்லாம் ஓட்டு கொடுத்ததே தப்பு என்று தன் மனைவியைச் சொன்னார் அவனது தந்தையார். சென்னைக்குத்திரும்பிக்கொண்டிருந்தபோது, பாஜக நின்னிச்சின்னா அதுக்குப் போடலாம். ஆனா எங்க ஊர்லயே ரெண்டுபேர்தான் பாஜக என்று சொன்னான் என் நண்பன். ஒன்னு நீ, இன்னொன்னு யார் என்றேன். என் மனைவி என்றான்.

தமிழ்நாட்டு அரசியல் அது தனி. இதில் ஜாதியை வைத்து அரசியல் நடத்தப்படுவதுதான் ஆச்சரியமானது. எங்கோ சிலர் ஜாதிக்காக ஓட்டுப்போடுகிறார்கள். எனக்குத்தான் அவர்கள் கண்ணில் படவில்லையா என்று தெரியவில்லை.

***

பரி வியாபாரம்

ஜாதி அரசியல் என்றதும் பாமக ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

மத்தியில் அரசாளும் தேசிய முன்னணி, திருச்சி லோக்கல் பாஸஞ்சர் வண்டி மாதிரி என்று காட்டியிருக்கிறார்கள். ஜெயலலிதாவுடன் கூட்டு என்றதும், தேசிய முன்னணியிலிருந்து விலகினார்கள். தேர்தலில் நின்றார்கள். போண்டி ஆனார்கள். (அல்லது ஆக்கப்பட்டார்கள்). சரி சரி முன்னைக்கு இருந்த மந்திரி பதவியாவது இருக்கட்டும் என்று பாஜகவிடம் ஓடினார்கள். மந்திரி பதவி பெற்று ஓட்டினார்கள். இன்னொரு தேர்தல் வருகிறது. இப்போது காங்கிரஸ் திமுக கூட்டணி என்றதும் ஓக்கே டாட்டா பைபை சொல்லிவிட்டு மந்திரி பதவியை விட்டு விலகி திமுக கூட்டணியில் பேரம் பேசி இட ஒதுக்கீடு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு நடுவில், பாஜக தலைவர் பிரமோத் மகஜன் மும்பையில் பேசும்போது தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டு இருந்தாலும் இருக்கும் என்று சொன்னதற்கு திமுக தலைவர் அது உண்மையில்லை; இனி தேசிய ஜனநாயக முன்னணியோடு சேரமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். (என்ன பந்தயம் ?)

ஜெயலலிதா +(காக்கவைத்து பின்னர் சேர்ந்த பாஜக) கூட்டணிக்கு எதிராக எல்லா அரசியல் கட்சிகளையும் இணைத்து ‘மதச்சார்பற்ற கூட்டணி ‘ அமைப்பார் தலைவர் கலைஞர் என்று நினைத்தேன். தப்புக்கணக்குப் போட்டுவிட்டேன். விடுதலை சிறுத்தைகள் திருமாவளவனும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள். (பாமகவின் கோரிக்கையாக இருக்கலாம்) இருப்பினும் இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியே நின்றால், சுத்தமாக போண்டிதான் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. குறைந்தது இந்த இரண்டு கட்சிகளுமாவது கூட்டுச் சேர்ந்து நிற்கலாம். இதற்கு நடுவில், ஜெயலலிதா கட்சி பாஜகவுடன் கூட்டுச் சேரவில்லை என்றால், ஜெயலலிதா கட்சியுடன் கூட்டுச் சேர ஆட்சேபணை இல்லை என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

ஜாதி வெறி அரசியல் நடத்தும் பாமக இருக்கும் திமுக கூட்டணி சரி, ஆனால் மத வெறி அரசியல் நடத்தும் பாஜக கூட்டணி வேண்டாம், அதைவிட தீவிரமான மதவெறி அரசியல் நடத்தும் அதிமுக சரி என்கிறார் திருமாவளவன். (பாமக இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.)

திருமாவளவனின் இந்த கொள்கைப் பிடிப்பைப் பாராட்டமுடியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், கொள்கையளவில், பாஜகவை விட மோசமான கட்சி அதிமுக. அராஜகம் விளையும் இடம் அது. இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்யாத பாஜக வேண்டாம், ஆனால், அராஜக ஆட்சி நடத்தும், ஜனநாயக நெறிமுறைகளை காற்றில் பறக்கவிடும் அதிமுக மேல் என்றால் திருமாவளவன் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. ஆனால், வளர்ந்து வரும் பாஜக ஆதரவை உதறிவிட்டு, இன்றைய தேதியில், திமுக அமைத்திருக்கும் கூட்டணியைப் பொறுத்து பார்க்கும் போது, அதிமுகவாலும் 10 இடங்களுக்கு மேல் பெற முடியாது. வேறு வழியின்றி இன்று அதிமுக பாஜகவை கூட்டணியில் சேர்த்துத்தான் ஆகவேண்டும். தலைவர் டாக்டர் கலைஞரைப் பாருங்கள். கூட்டணிக்கு ஏற்றவாறு அதே கொள்கையை அழகாக விவரிக்கக்கூடியவர். இந்த கொள்கையை விவரிக்கும் பிரச்னை எல்லாம் இல்லாதவர் புரட்சித்தலைவி டாக்டர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

இருப்பினும் அரசியல் கட்சி நடத்தும் திருமாவளவனையும், கிருஷ்ணசாமியையும் விட எனக்கு அதிகம் தெரியாது என்பது உண்மைதானே. குறைந்தது இவர்கள் இரண்டு பேராவது கூட்டணி அமைக்க வேண்டும் என்று அப்பாவியாக விரும்புகிறேன். அதில் எனக்குத் தெரியாத என்ன பிரச்னைகளோ ?

மேலும், இந்த அரசியலில் இந்த இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு, இவர்களுக்கு குரல் இல்லாமல் ஆக்கி, அரசியலிலிருந்து ஒதுக்கும் வேலைகளே இவை என புரிந்து கொண்டு, அதிமுகவாக இருந்தாலும் சரி திமுகவாக இருந்தாலும் சரி அல்லது பாஜகவாக இருந்தாலும் சரி, ஏதோ ஒரு கூட்டணியில் சேர்ந்து எம் பி பதவிகளை பெறுவதே முக்கியம் அல்லாமல், ஓரங்கட்டப்பட்டுவிடுவதல்ல என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அப்படி இவர்களை ஓரங்கட்டுபவர்கள் இவர்களது விரோதிகளே என புரிந்து கொண்டு, அவர்களை அம்பலப்படுத்தவும் இவர்கள் தயங்கக்கூடாது. திருமாவளவனுக்கு கலைஞர் மீது கண்மூடித்தனமான பாசம் இருந்தும், திராவிட இயக்க வழித்தோன்றலாகவே தன் கொள்கையை அமைத்துக்கொண்டிருந்தும், அவரால் ஒரு சில எம்பி சீட்டுக்களைக் கூட பெற முடியவில்லை என்பதையும் அவர் புரிந்து கொள்ளவேண்டும். அதிகாரப்பூர்வ திமுக அமைப்புக்குத் தலைவணங்க வைப்பதும், கண்மூடித்தனமான சொல்பேச்சுக் கேட்க வைப்பதுமே ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் கலைஞரின் வேலையாக இருக்கலாம். ஆனால், தலித் மக்களின் நன்மையை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள (குறைந்தது அப்படி சொல்லிவருகிற) இந்தக் கட்சிகள் தங்கள் மக்களின் நன்மைக்கு முக்கியமாக அரசியல் அதிகாரத்தை எந்தக் கூட்டணியில் சேர்ந்தாவது பங்கீடு என்றாலும் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்த இரண்டு கட்சிகள் அறுதிப்பெரும்பான்மை பெற்று தமிழ்நாட்டிலோ அல்லது மத்தியிலோ ஆட்சிக்கு வரபோவதில்லை என்பது வெளிப்படையான விஷயம். ஆகவே ஆதாயங்களை அதிகரித்துக்கொள்வதே, சரியான வழிமுறையாக இருக்கும். அதிகாரப்பங்கீட்டில் பங்கு பெறுவதே சரியானதொன்றாக இருக்கும்.

Politics makes estranged bedfellows.- Goodman Ace

***

வேதனை

நான் சோனியாவுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று எழுதினேன். அதன் கூடவே, சோனியா பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் கூட்டணிக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்றும் கோரினேன். இந்த நேரத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கூட்டணி அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு எடுத்து தாங்கள் வெற்றி பெற்றால் சோனியாவே பிரதமர் என்று கூறியிருக்கிறார்கள். தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களும் சோனியாவே தமது கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று தெளிவாக தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அந்தக் கூட்டணியை நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

***

சாதனை

பெருமதிப்புக்குரிய அண்ணா ஹஜாரே அவர்களது முந்தைய உண்ணாவிரதத்தின் போது, மகாராஷ்டிர அரசாங்கம், மக்களுக்கு அரசாங்க விஷயங்களை அறிந்து கொள்ள உரிமை கொடுக்கவேண்டும் (Right to Information) என்பதை வலியுறுத்தியபோது, அரசாங்கத்தின் முக்கிய பதவியில் இருந்த காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர்கள் அவரிடம் வந்து, அதற்காக ஒரு சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று உறுதி மொழி அளித்தார்கள்.

இதுவரை அதனை நோக்கி எந்தவிதமான செயல்பாடும் நடக்கவில்லை என்பதால் மீண்டும் அண்ணா ஹஜாரே அவர்கள் மெளனவிரதம் பூண்டு மீண்டும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். இந்த கோரிக்கையை அரசியல்படுத்தும் முயற்சியில் வழக்கம்போல மகாராஷ்டிர அமைச்சர்கள், அவரது போராட்டம் காங்கிரசுக்கு எதிரானது, அவர் மத்திய அரசுக்கு எதிராக போராடி மகாராஷ்ட்ரத்துக்கு நிறைய பணம் கொடுக்கச் சொல்லவேண்டும் என்று பேசியிருக்கிறார்கள்.

மாநிலங்களுக்கு என்ன அரசாங்க ரகசியம் என்ற பாதுகாப்பு வேண்டியிருக்கிறது என்று தெரியவில்லை. மத்திய அரசாங்கத்தில் அதுவும், ராணுவ அமைச்சகம் தவிர வேறொன்றுக்கும் இப்படிப்பட்ட அரசாங்க ரகசிய பாதுகாப்பு தேவையில்லை. அதனை ஏன் இந்த மாநில அரசுகள் மக்களுக்கான உரிமைகளை மறுக்கவேண்டும் என்று புரியவில்லை. (புரிகிறது… புரிகிறது)

பெருமதிப்புக்குரிய அண்ணா ஹஜாரேயின் போராட்டம் வெற்றியடைய வேண்டும், அந்த போராட்டத்தின் விளைவு மஹாராஷ்டிரம் மட்டுமல்ல தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

***

நாசம்

மஹாராஷ்டிரத்தில் நடந்த இன்னொரு விஷயமும் பேசப்படவேண்டும்.

பண்டார்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் என்ற வரலாற்று ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த ஜேம்ஸ் லைன் என்பவருடைய புத்தகத்தில் (Shivaji: Hindu King In Islamic India ) யின் தந்தை ஷாஹாஜி அல்ல, யாரோ ஒருவர் என்பது போன்ற கிசுகிசுக்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் பிராம்மணர்கள் பரப்புபவை என்ற கருத்து கொண்ட மராட்டிய பிராம்மணரல்லாதவர் இயக்கம் (சிறு இயக்கம்) மராத்தா சேவா சங்கம் என்ற அமைப்பின் மூலம் திடாரென்று உருவாக்கப்பட்ட சாம்பாஜி பிரிகேட் என்ற கும்பல் இந்த ஆராய்ச்சி மையத்தை நாசம் செய்திருக்கிறது. மராத்தாக்களுக்கும் மராட்டிய பிராம்மணர்களுக்குமான பகை பேஷ்வா காலத்திய பழசு என்றாலும், இதன் இன்றைய விளைவு மராத்தாக்களின் தலைவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் சரத் பவாருக்கும், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கும் ஆதரவை உருவாக்கும் முயற்சியே என்பது தெளிவு. மராத்தா சேவா சங்கத்தின் தலைவர் இதுபோல இன்னொரு முறை நடந்தால் அங்கும் தனது மராத்தா தொண்டர்கள் அழிவுவேலை செய்வார்கள் என்று அறிக்கை விட்டும், இவர் ஆளும்கட்சி தலைவர்களுக்கு நெருங்கிய நண்பராக இருப்பதால் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார். இவ்வாறு புத்தகசாலைகளையும், ஆராய்ச்சி மையங்களையும் நாசம் செய்வது ஜனநாயக வழிமுறை அல்ல என்று கருத்து கூறிய வாஜ்பாயி தவிர மற்றவர்கள், முக்கியமாக ஆளும்கட்சியைச் சார்ந்த சரத்பவார் மற்றும் முதலமைச்சர் ஷிண்டே போன்றோர் அந்த புத்தகத்தை தடை செய்தது மட்டுமல்லாமல், அவ்வாறு தடை செய்தது சரி என்றும் பேசி வருகிறார்கள். (வாஜ்பாயி பிராம்மணர் அதனால்தான் அந்தப் புத்தகத்தை தடை செய்தது தவறு என்று பேசினார் என்றும் மகாராஷ்டிரத்தில் பிரச்சாரம் நடப்பதாகக் கேள்வி)

நாம் வளரவேண்டியது நிறைய இருக்கிறது

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்