சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

தண்ணீர் இன்றேல் வாழ்தளம் நரகமே!

நீர்மயம், நீர்மயம் எப்புறமே! இருந்தும்

ஓர்துளி நீரில்லை, நீரில்லை உட்கொளவே!

உப்புநீர், உப்புநீர் உலகெங்கும் உப்புநீர்!

உப்பினை நீக்கின் உட்கொளும் குடிநீர்!

முப்புறம் அலைகடல் சூழ்ந்தது தென்புறம்!

முப்பெரும் நதிவளம் பெற்றது வடபுறம்!

உப்பினை நீக்கும் நிலையங்கள் தென்புறம்!

குப்பைநீர் அடக்கும் கூடங்கள் வடபுறம்! [பாரத தேசம்]

தீருமா சென்னையின் தாகம் ?

2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் [14] சுட்டிக் காட்டுகிறார்! குடிநீர்ப் பஞ்சம் படமெடுத்தாடும் சென்னை நகரில் அரசாங்க அதிகாரிகள் 220 ஆண்டுகளாக பல்வேறு நீர்த்தேக்க முறைகளையும், நீரனுப்பு வழிகளையும் கைக்கொண்டு முயன்று வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் ஜோதி! … இவ்வளவு திட்டங்கள் தீட்டப்பட்டும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டும் இன்றளவும் சென்னையின் குடிநீர்ப் பிரச்சனை தீராமலே இருந்து வருகிறது என்றும் ஜோதி வருந்துகிறார். சென்னைப் நீர்ப்பஞ்சத்தைத் தீர்க்கத் தற்போது இந்தியாவின் கைவசம் இருக்கும் ஒரே ஒரு வழி, கடல் வெள்ளத்தில் கனல்சக்தி மூலம் உப்பை நீக்கிச் சுவை நீராக்கும் முறை ஒன்றுதான்! பரிதிக்கனல் வெப்பத்தைப் பயன்படுத்தியோ, கனல் மின்சார நிலையம் அல்லது அணு மின்சார நிலையத்தின் டர்பைன் வெளிக்கழிவு வெப்பத்தை உபயோகித்தோ, கடல்நீரைக் குடிநீராக்கும் மாபெரும் உப்புநீக்கி நிலையங்கள் இரண்டு அல்லது மூன்று சென்னையின் நீண்ட கடற்கரையில் உடனே நிறுவப்பட வேண்டும்.

2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, ‘பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப்படும், கல்பாக்கத்தின் உப்புநீக்கிப் பெருநிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும் ‘. மாண்புமிகு மத்திய நிதித்துறை மந்திரி பி. சிதம்பரம் சென்னையில் நிறுவ அறிவித்த 1000 கோடி ரூபாய்ச் செலவில் தினம் 300 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் உப்புநீக்கி நிலையத்தையும் பாம்பே பாபா அணுசக்தி ஆய்வு மையமே டிசைன் செய்து கட்டப் போகிறது என்றும் டாக்டர் ககோட்கர் அறிவித்திருக்கிறார்.

இப்பணியில் பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே தீவிர முயற்சிகள் எதுவும் செய்யாமல், சென்னை மாநில அரசும், பாரத மத்திய அரசும் காலத்தைக் கடத்தியது வருந்தத் தக்கதே! அவ்விதம் ஆழ்ந்து ஈடுபட்டு உப்புநீக்கி நிலையங்கள் இப்போது இயங்கிக் கொண்டிருந்தால், 2003 ஆண்டில் ஜோதி கூறியதுபோல் நீர்ப் பஞ்சம் காலெடுத்து வைத்திருக்காது! கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்களின் இயக்கத்தால்தான், சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் பேரளவு தீரும் என்பது இந்தக் கட்டுரையாளரின் உறுதியான நம்பிக்கை. ஜனத்தொகை விரைவில் பெருகிவரும் சென்னைக்கும், கடல் சூழ்ந்த தென்னக நகரங்களுக்கும் எதிர்காலத்தில் தொடர்ந்து நீர்வளத்தை அளிக்கக் கூடிய, நிரூபிக்கப்பட்ட ஒரே ஒரு பொறித்துறை உப்புநீக்கி நிலையங்களே! சென்னையின் தாகம் என்ன, தென்னகத்தின் நீர்வளம் செழிக்கக் கண்முன்பு விரிந்து கிடக்கும் கடல் வெள்ளத்தைக் குடிநீராக மாற்றாமல், ஏன் இத்துணை ஆண்டுகள் அரசாங்கம் தூங்கிக் கொண்டிருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது!

நீர்ப் பற்றாக்குறை பற்றி கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்

2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்தார், ஜனாதிபதி மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம். அந்த விழாத் துவக்கவுரையில் ஜனாதிபதி கூறியது: ‘இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! பல உலக நாடுகள் இப்போது போரில் மூழ்கியும், பயமூட்டும் மூர்க்கர் படையை ஒழிப்பதிலும் காலத்தை விரையமாக்கி வருகின்றன. இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்கனலைப் பயன்படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPC, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்புநீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும் ‘.

‘இன்றுள்ள [2004] உலக ஜனத்தொகை 6 பில்லியனில் 3 பில்லியன் மக்கள் கட்டுப்பாடுள்ள அல்லது பற்றியும் பற்றாத நீர் வசதியுடன் வாழ்கின்றனர்! உலக மக்கள் தொகையில் 33% போதிய சுகாதாரப் புழக்க நீரின்றியும், 17% மாசுக்கள் மண்டிய நீரைப் பயன்படுத்தியும் வருகிறார்! 2025 ஆண்டுக்குள் ஜனப்பெருக்கு 8 பில்லியனாக ஏறி, அவர்களில் ஒரு பில்லியனுக்கு மட்டுமே போதிய நீர் வசதி இருக்கப் போகிறது! இரண்டு பில்லியனுக்கு மாசு மறுவற்ற நீர் வசதி வாய்க்கப் போவதிலை! ஐந்து பில்லியன் மக்களுக்குச் சுகாதார நலனுக்குப் பயன்படும் புழக்கநீர் கிடைக்கப் போவதில்லை! இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு வழிகளைக் காண நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும் ‘.

நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

ஜனாதிபதி மேலும் கூறியது: ‘நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள்ப் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர். கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 7500 இப்போது இயங்கி வருகின்றன!

பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது. அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன ‘.

‘எரிவாயு, எரி ஆயில் போன்ற இயல்வள எருக்கள் [Fossil Fuels] இல்லாத இந்தியா மலிவான வழியில் கடல்நீரைப் புதுநீராக்க அணுக்கரு வெப்பசக்தியைப் பயன்படுத்தலாம். அணுமின் நிலையங்களில் டர்பைனில் [Turbine] மின்சக்தி அளித்தபின் வெளியாகும் தணிவழுத்த நீராவியின் [Low Pressure Steam] வெப்ப சக்தி நீராவிக் குளிர்கலனில் [Steam Condenser] வீணாகிறது. அந்த வெப்பத்தைப் பயன்படுத்தி கடல்நீரைக் குடிநீராக்கினால், மலிவாகத் தொடர்ந்து புதுநீர் உண்டாக்கலாம். இந்தியாவில் அணுசக்தித் துறையகம் [DAE], விஞ்ஞானத் தொழிற்துறை ஆய்வுக்குழு [CSIR], பல்கலைக் கழகங்கள் ஆகியவை உப்புநீக்கிக் துறை நுணுக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பல்வேறு நிலையங்களை நிறுவகம் செய்துள்ளன ‘.

உப்புநீக்கி நிலையங்கள் இயங்கும் உலக நாடுகள்

2400 ஆண்டுகளுக்கு முன்பே [கி.மு.350] கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் கடல்நீரைச் சுவைநீராக்க முயன்றதாக வரலாறுகளில் அறியப்படுகின்றது. கிரேக்க கப்பல் மாலுமிகள் கனலாவி யாக்கும் முறை [Evaporative Process] ஒன்றைப் பயன்படுத்திக் கடல்நீரில் உப்பை நீக்கிக் குடிநீராக்கி உபயோகித்து வந்திருக்கிறார்கள். 1957 இல் மையக் கிழக்கு நாடான குவெய்த்தில் முதல் உப்பு நீக்கித் துறையகம் கட்டப் பட்டது. 1965 இல் உப்புநீக்கி நிலையம் இஸ்ரேலில் நிறுவப்பட்டது! 2000 ஆண்டில் உலக நாடுகள் 6 பில்லியன் காலன் புதுநீரைக் கடலிலிருந்து நாளொன்றுக்கு உற்பத்தி செய்து வந்ததாக அறியப்படுகிறது. இப்போது [2004] சுமார் 7500 உப்புநீக்கி நிலையங்கள் உலகில் இயங்கிக் குடிநீரும், புழக்கநீரும் மக்களுக்குப் பரிமாறி வருகின்றன. அவற்றில் 60% நிலையங்கள் மேற்காசிய நாடுகளில் நிறுவகம் ஆனவை! சூரிய மண்டலத்தில் நீர் அண்டமாக உருவெடுத்த ஒரே ஒரு கோளம், நாம் வாழும் பூகோளம்! பூமண்டலம் 70% கடல் வெள்ளமும், 30% தளப் பகுதியும் சூழ்ந்தது. உலக ஜனத்தொகையில் 40% மக்கள் கடற்கரைகளிலோ அல்லது கரைக்கு அண்டையிலோ வாழ்ந்து வருகிறார்கள். உலகெங்கும் விரிந்து பரவிய கடல்களில் சராசரி உப்பு அளவு 34.5 கிராம்/கிலோ கிராம் [Salinity: 34.5 gram/kg of Seawater].

1957 ஆண்டு முதல் மையக் கிழக்கு அரேபிய நாடுகள் குடிநீர் மிக மிகக் குன்றிப் போனதால், கடல்நீரைப் புதுநீராக்கும் பணியில் விரைந்தன. முக்கியமாக செளதி அரேபியா, குவெய்த், குவெடார், ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ், ஓமான்வேர் ஆகிய எரி ஆயில், எரிவாயு செழித்த நாடுகள் கனல் வெப்ப மூலமும், அனல்மின்சார நிலைய நீராவி மூலமும் உப்புநீக்கும் முறைகளைக் கையாண்டு கடல்நீரைப் புழக்கநீராகவும், குடிநீராகவும் மாற்றின. அந்த நாடுகளில் 1483 உப்புநீக்கி நிலையங்கள் [உலக எண்ணிக்கையில் 60%] தினம் 15.8 மில்லியன் லிட்டர் புதுநீர் பரிமாறி இயங்கிக் கொண்டிருக்கின்றன. முதலிலே கட்டப்பட்ட உப்புநீக்கி நிலையங்களின் புதுநீர் 5-10 மடங்கு விலை ஏறினாலும், போகப் போக பொறிநுணுக்கம் மேம்பாடாகி, விலை குறைந்தது. எரிவாயு, எரி ஆயிலைப் பயன்படுத்தி ஒரே நிலையத்தில் மின்சக்தியும், உப்புநீக்கமும் செய்த போது, புதுநீரின் விலை சரிந்தது! குவெய்த் முதன் முதல் 1957 இல் கட்டிய உப்புநீக்கி நிலையம் தினம் 8.5 மில்லியன் லிட்டர் தயாரிக்கத் துவங்கி 1987 இல் மிகவும் விரிவடைந்து தினம் 500 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்தது. இரண்டாவது குவெடார் 2000 ஆண்டில் 417 மில்லியன் லிட்டர் தினம் தயாரிக்கும் அசுர உப்புநீக்கித் துறையகங்களை நிறுவகம் செய்தது. செளதி அரேபியாவின் முதல் உப்புநீக்கி 1970 இல் இயங்க ஆரம்பித்தது. 1980 ஆண்டுக்குள் 30 உப்புநீக்கி நிலையங்கள் தினம் 6 மில்லியன் லிட்டர் [572 மில்லியன் காலன்] புதுநீரைப் பரிமாறின.

அல் ஜூபைல் என்னும் இடத்தில் நாளொன்றுக்கு 2.75 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் உலகிலே பெரிய உப்புநீக்கி நிலையம் உருவாகி உள்ளது. அல் ஜூபைல்-ரியாத் நீரனுப்பும் 5 அடி விட்டமும் 280 மைல் நீளமான பைப் தொடர், தினமும் 830 மில்லியன் லிட்டர் புதுநீரைப் பறிமாறும் உலகிலே பெரிய அமைப்பாகக் கருதப்படுகிறது. செளதி அரேபியாவில் 1985 இல் கட்டப்பட்ட 24 நிலையங்கள் 3630 MWe மின்சக்தி ஆற்றலும், 480 மில்லியன் காலன் உப்புநீக்கிய புதுநீரும் தினமும் பரிமாறி வருகின்றன! மையக் கிழக்கு நாடுகளில் இயங்கும் இந்த நிலையங்களில் பணி செய்வோர் பலர் இந்திய நிபுணராயினும், சென்னை மாநில அரசும், பாரத மத்திய அரசாங்கமும் கடந்த 20 அல்லது 25 ஆண்டுகளாகக் கடல்நீரைக் குடிநீராக்கும் எளிய முறையைக் காப்பி யடிக்காது, கடைப்பிடிக்காது சென்னையில் நீர்ப்பஞ்சம் வரும்வரைக் காத்திருந்தது, மன்னிக்க முடியாத மாபெரும் தவறே!

2000 ஆண்டில் அமெரிக்காவில் 1200 உப்புநீக்கி நிலையங்கள் டெக்ஸஸ், பிளாரிடா, அட்லாண்டா, காலிஃபோர்னியா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளில் இயங்கி வந்ததாக அறியப்படுகின்றது. கரீபியன் கடல் பிதேசமான டிரினிடாட், டொபாகோவில் [Trinidad, Tobago] மார்ச் 2002 இல், ஜப்பான் கம்பெனி டிசைன் செய்த உப்புநீக்கி நிலையம் ஒன்று நிறுவகமானது. அதற்கு உபயோகமாகும் மீள்தடுப்புச் சுத்தீகரிப்புச் சாதனத்தில் பயன்படும் பாலியமைடு தகடு [Polyamide Membrane] சிறப்பானது. அதன் மூலம் 100 லிட்டர் கடல்நீரில் புதுநீர் 60 லிட்டர் கிடைக்கிறது! உலகத்தில் உள்ள பெரிய உப்புநீக்கி நிலையத்தில் இதுவே முதலாவதாகக் கருதப்படுகிறது. நாளொன்றுக்கு 136,000 டன் புதுநீர் உற்பத்தி செய்து, 400,000 பேருக்கு நீர்வசதி அளித்து வருகிறது! நாற்புறமும் கடல் சூழ்ந்த ஜப்பான் தேசத்தில் ஓகிநாவா என்னும் இடத்தில் 1997 இல் கட்டப்பட்டுள்ள உப்புநீக்கி நிலையம் 40 மில்லியன் லிட்டர் புதுநீரை நாளொன்றுக்குத் தயாரிக்கிறது. அந்த நிலைய உற்பத்தி 2003 அக்டோபரில் 150% ஆகப் பெருக்கப்பட்டது.

இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்புநீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனியிழந்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப்படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன்படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.

கல்பாக்க உப்புநீக்கி நிலைய இயக்கத்தில் கால தாமதம்

‘தீருமா சென்னையின் தாகம் ? ‘ என்னும் கட்டுரையில் சென்னை அரசாங்க அதிகாரிகள் கடந்த 220 ஆண்டுகளாக பல்வேறு நீர்த்தேக்க முறைகளையும், நீரனுப்பு வழிகளையும் கைக்கொண்டு முயன்று வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் கட்டுரையாளர், கோ. ஜோதி! ‘சென்னையின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க தற்போது கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் பேசப்பட்டு வருகிறது. இதற்கான செலவீனங்கள் மிகவும் அதிகமானது. இது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை ‘, என்னும் கருத்தைத் தெரிவித்திருந்தார். குடிநீர்ப் பற்றாக்குறை பரவி மக்கள் பணம் கொடுத்து வாங்கும் நிலைகூட மாறி, பணம் கொடுத்தாலும் வாங்க நீரில்லை என்னும் பஞ்ச நிலை வரும் வரை அரசாங்கம், குடிநீர் அளிக்க வேறு வழிகளைத் தேடாது விழித்துக் கொண்டு நிற்கலாமா ? குடிநீர் உற்பத்தியைத் தொடர்ந்து பரிமாற உதவும் எந்த நிதிச் செலவு முறையையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அதை நிறுவகம் செய்ய முற்பட வேண்டும். உப்புநீக்கி நிலையங்களைச் சிக்கன முறையில் உருவாக்கி, குடிநீர் உற்பத்தி செய்யப் புதுவகைச் சாதனங்களும், பொறிநுணுக்க முறைகளும் உலகில் கண்டுபிடிக்கப்பட்டு புதுநீர் மில்லியன் காலன் கணக்கில் தயாரிக்கப்படுகிறது! பாபா அணுசக்தி ஆய்வு மையம் 1970 ஆண்டு முதலே உப்புநீக்கி பொறிநுணுக்க ஆய்வுப் பணிகளை ஆரம்பித்தாலும், முப்பத்தி நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் சென்னைக்கு முழுப்பலன் கிடைக்க வில்லை! மாறி மாறிவரும் சென்னை அரசாங்கம் நீர்வள வளர்ச்சித் திட்டங்களுக்கு முதன்மை இடமளித்து, முழு மூச்சுடன் முயற்சி செய்யாததால், தேவையான சமயத்தில் உப்புநீக்கி நிலையங்கள் நிறுவகம் ஆகாமல், திட்டங்களின் முன்னேற்றம் இப்போது நத்தை வேகத்தில் நகர்ந்து வருகிறது!

இந்தியாவில் உருவாகும் உப்புநீக்கி நிலையங்கள்

உலகம் தோன்றிய நாள்முதல் படைக்கப்பட்ட கடல்நீர், சுவைநீர், சூழ்மண்டலத்தில் பரவிய ஆவிநீர் அனைத்தின் கொள்ளளவு, இன்றுவரை மாறாத நிலையில்தான் உள்ளது! இயற்கை ஆக்கிய தூயநீர் வளம், இப்போது ஓரளவுக் கறைபட்டுப் போயுள்ளதே தவிர, நீர்வளக் கொள்ளளவு நிலையாக இருந்தே வருகிறது. மனிதரோ, யந்திரங்களோ கடந்த நூற்றாண்டில் இரசாயன முறைகளில் உண்டாக்கிய நீரின் கொள்ளளவு, இயற்கை படைத்த நீரோடு ஒப்பிட்டால் மிக மிகச் சிறிய அளவே! உலக நீர் வெள்ளத்தில் 97% கடல்நீர்! சுவைநீரின் கொள்ளளவு 3%! கடல் நீரைப் பல்லாயிரம் ஆண்டுகளாக நீடிக்க வைத்திருப்பவை அதில் கலக்கப் பட்டுள்ள பேரளவு உப்பு, அடுத்து நீரில் கரைந்துள்ள வாயு (பிராணவாயு) என்று நாம் ஒருவாறு ஊகிக்கலாம்! அடுத்து பரிதிக்கனல் சக்தியும் அனுதினமும் கடல்நீரைச் சுத்தீகரித்து வருகிறது.

முப்புறம் கடல் சூழ்ந்த தென்னிந்தியாவின் கடற்கரை சுமார் 4900 மைல் தூரம் நீண்டு செல்கிறது! அந்த நீட்சியில் ‘தனித்துவ நிதிச்சிக்கன அரங்கு ‘ [Exclusive Economic Zone (EEZ)] 810,000 சதுர மைல் பரப்பளவில் உள்ளது. இந்தியக் கடல்சக்தி ஆற்றல் எதிர்பார்ப்பு அளவு [Potential Ocean Power]: 180,000 MW கடல் கனல்சக்தி மாற்றம் [Ocean Thermal Energy Conversion (OTEC)], 40,000 MW அலைசக்தி [Wave Energy], அலைமட்ட சக்தி 8000 MW [Tidal Energy]. பாபா அணுசக்தி ஆய்வு மையம் துணிவாக எடுத்துக் கொண்டிருக்கும் உப்புநீக்கித் துறை நுணுக்கம் ‘மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையைச் ‘ [Reverse Osmosis Technology (ROT)] சார்ந்தது. அம்முறையைப் பின்பற்றிக் கட்டப்பட்டு இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள், இப்போது பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் ஒன்றும், ராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தில் ஷீல்கன் கிராமத்தில் ஒன்றும், ஜோத்பூரில் பாரத படைத்துறையுடன் இணைந்து கட்டிய ஒன்றும், கல்பாக்கத்தில் ஒன்றும் சிறப்பாக இயங்கி வருகின்றன. கல்பாக்க உப்புநீக்கி நிலையம் ‘மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு (RO) ‘, ‘பல்லடுக்கு நீராவி ‘ [Multistage Flash (MSF)] எனப்படும் ‘இரட்டை நுணுக்க முறையைப் ‘ [Hybrid Technology (ROT+MSF)] பின்பற்றுவது. மீள்தடுப்புச் சுத்தீகரிப்பில் உற்பத்தி யாகும் புதுநீரில், இம்மி அளவு உப்பு இருப்பினும், குடிநீருக்குப் பயன்பட உகந்ததே. ஆனால் அதைத் தொழிற்சாலைகள் உபயோகிக்க வேண்டுமாயின், அந்நீர் இரசாயன சுத்தீகரிப்புக் கலன்களில் [Water Treatment Plant] உலோகக் கழிவுகள் அகற்றப்பட்டு ‘கனியிழந்த தூயநீராக ‘ [Demineralised Water] மாற்றப்பட வேண்டும். அப்பணியைப் பல்லடுக்கு நீராவி (MSF) நுணுக்கமுறை செய்கிறது.

கல்பாக்கத்தில் இரட்டை முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்புநீக்கியில் வெளிவரும் புதுநீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளளவாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது. பாபா அணுசக்தி ஆய்வு மையம் தற்போது கடற்கரைப் பிரதேசங்களில் நகர்ந்து செல்லக் கூடிய ஓர் ‘உப்புநீக்கிக் கட்டுமரக்கல மிதப்பியைத் ‘ [Morbile Desalination Plant Barge] தயாரித்து வருகிறது.

அமெரிக்காவில் குடிநீர்த் தட்டுப்பாடு, பற்றாக்குறை

அமெரிக்காவில் இப்போது [2004] டெக்ஸஸ், பிளாரிடா, அட்லாண்டா, காலிஃபோர்னியா ஆகிய நான்கு மாநிலங்கள் கடல்நீரில் உப்புநீக்கிப் புதுநீர் உற்பத்தி செய்யும் முறைகளில் இறங்கியுள்ளன. அமெரிக்காவில் சுமார் 1200 சிறிய உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு நகராட்சிக் குடிநீராகப் பயன்படுகிறது. டெக்ஸஸ் மாநிலத்தின் ஜனத்தொகை 20 மில்லியனிலிருந்து, 40 மில்லியனாக 2050 இல் பெருகும் என்று மதிப்பிடப்படுகிறது. அந்த சமயத்தில் படிப்படியாக 900 நகரங்களில் நீர்வளப் பற்றாக்குறைத் தொடர்ந்து போதிய நீரின்றி மக்கள் பாதிக்கப்படுவர் என்று எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளது! டெக்ஸஸ் மாநிலத்தின் ஆளுநர் ரிக் பெர்ரி [Governor Rick Perry] கடற்கரைப் பகுதிகளில் உப்புநீக்கி நிலையங்கள் பல நிறுவ ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

காலிஃபோர்னியாவின் பெருகும் மக்கள் தொகை [37 மில்லியன் ? (2004)] ஆண்டுக்கு 600,000 வீதம் ஏறிக்கொண்டு போவதால் நீர்ப் பற்றாக்குறை நகர மக்களைப் பயமுறுத்திக் கொண்டு வருகிறது! கடந்த 13 வருடங்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் ஸான் டியாகோ, மற்ற காலிஃபோர்னியாப் பகுதிகளும் கடும் நீர்ப்பஞ்சத்தில் உழன்றன. ஸான் டியாகோவுக்கு 95% நீர்ப் பரிமாற்றம் வெளி மாநிலங்களிலிருந்து விரைந்து கொண்டு வரப்பட்டது! மூன்றில் ஒரு பங்கு நீர்ப் பரிமாற்றம் முதலில் குறைக்கப்பட்டுப் பின்னால் அது பாதிக் குறைப்பாக அதிகமானது! 1990 ஆம் ஆண்டில்தான் காலிஃபோர்னியாவின் கடற்கரைப் பகுதிகளில் முதன் முதல் கடல்நீரில் உப்புநீக்கி புதுநீர் தயாரிக்கும் முறை தலைகாட்டி, ஸான்டா பார்பராவில் கடல்நீர் சுத்தீகரிப்பு நிலையம் ஒன்று இயங்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகளாய் மாபெரும் உப்புநீக்கி நிலையங்கள் மாநில மெங்கும் முளைத்தெழுந்தன!

இப்போது ஸான் டியாகோ நீர்த் துறையகம் [San Diego County Water Authority] நாளொன்றுக்கு 536 மில்லியன் காலன் புதுநீர் விற்கும் ஒரு பெரும் நிறுவகமாக உள்ளது. எதிர்கால மதிப்பீட்டின்படி காலிஃபோர்னியாவின் நீர்த் தேவைக்குத் தினம் 45-125 மில்லியன் காலன் வீதம் 2020 ஆம் ஆண்டில் கடல்நீரே 6%-15% கொள்ளளவு புதுநீரைப் பரிமாறப் போகிறது! 2004 இல் அமெரிக்காவின் டெக்ஸஸ், காலிஃபோர்னியா, ஹவாயி, பிளாரிடா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 அரசாங்க காங்கிரஸ் உறுப்பினர்கள் [ரிப்பபிளிக்கன், டெமாகிராட்ஸ்], ‘எரிசக்தி உதவி உப்புநீக்கும் சட்டம் ‘ [Desalination Energy Assistance Act of 2004] ஒன்றை எழுதி அரசவையில் அறிமுகம் செய்தனர். அதன் விதியின்படி, எரிசக்தித் துறையகம் [Dept of Energy] மெய்யாகப் புதுநீர் உற்பத்தி செய்யும் உப்புநீக்கி நிலையங்களுக்கு எரிசக்தி உதவிநிதி அளிக்க வேண்டும். உப்புநீக்கி நிலையங்களுக்கு எரிசக்திச் செலவே 30% ஆகிறது!

கடல்நீரில் குடிநீர் ஆக்குவதில் ஏற்படும் நிதிச் செலவுகள்

உப்புநீக்கி நிலையங்களைத் திட்டமிட்டுக் கட்டி முடிக்க 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே காலம் எடுக்கிறது. நிதிமுடை மதிப்பீடு [Calculated Investment] 1 கியூபிக் மீடர் கடல்நீரில் உப்புநீக்க 4-5 டாலர் ஆகிறது. புதுநீர் விற்பனைச் சேர்த்துக் கொண்டால், 1 கியூபிக் மீடர் கடல்நீரில் உப்புநீக்க 0.70-1.00 டாலராகக் குறைகிறது. 2000 ஆண்டு நிதி மதிப்பின்படி, கட்டிட யந்திரச் சாதனங்களுக்கு ஆகும் செலவு, 1 கியூபிக் மீடர் கடல்நீரில் உப்புநீக்க 800-1000 டாலர். 1 கியூபிக் மீடர் புதுநீரின் அடக்க விலை 0.8-1.0 டாலர்.

1970 இல் கடல்நீர் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறை விருத்தியானது. உப்பையும், குப்பையும் வடிகட்ட கடல்நீர் பேரழுத்தத்தில் ஓர் இறுகிய தகட்டின் [Tight Membrane] மூலம் செலுத்தப்பட்டது. 1970 இல் ஒரு கியூபிக் மீடர் குடிநீர் தயாரிக்க 9 யூனிட் [9 kwh/cubicmeter] விரையமானது, 1980 இல் வினைகள் மேம்பாடாகி 6 யூனிட் செலவானது. 1985 இல் டெள கெமிகல் கம்பெனி ஃபில்ம்டெக் [Filmtec Dow Chemical Co] புதிய தகடு நுணுக்கங்களை விருத்தி செய்து, செலவை 4 யூனிட்டாகக் குறைத்தது. மேலும் கடல்நீரைக் கையாள செராமிக் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு, ஒரு கியூபிக் மீடர் குடிநீரின் விலை 1998 இல் ஒரு டாலருக்குக் கீழ் வந்தது!

2003 இல் உலக நீர்வளப் பேரவையின் எச்சரிப்புகள்

2000 ஆண்டில் உலக ஜனத்தொகை 6 பில்லியனாக இருந்தது 2025 ஆம் ஆண்டில் 8 பில்லியனாக ஏறும் என்றும் அந்த எண்ணிக்கையில் 3.5 பில்லியன் மக்கள் நீர்ப் பற்றாக்குறையில் பாதிக்கப் படுவார் என்று ஊகிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பேரவை [United Nation] 2003 ஆண்டை ‘அகிலதேசப் புதுநீர்வள ஆண்டாகக் ‘ [International Year of Freshwater] கொண்டாடியது. சுமார் 8000 பேர் பங்கெடுக்கும் இந்த மூன்றாவது உலக நீர்வளப் பேரவை [The Third World Water Forum] ஜப்பானில் மார்ச் 21-23, 2003 ஆண்டு மூன்று நகர்களில் நடந்தது. பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டு அவற்றுக்குத் தீர்வு முறைகளை ஆராய்ந்து அறிந்து கொள்வதே இந்தப் பேரவைக் கூட்டங்களின் முக்கிய நோக்கம். பேரவையின் அறிவுரை இதுதான்: உலக நாடுகள் அனைத்திலும் இப்போது நீர்ப் பற்றாக்குறையும், நீர்வளச் சீர்கேடுகளும் தலைதூக்கி விட்டன! நீர்வளப் பிரச்சனைகளை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பூகோள ரீதியாகப் போராடித் தீர்க்க வேண்டும்! பசிபிக் ஆசியா, மையக் கிழக்கு, ஆஃபிரிக்கா, ஐரோப்பா, மத்தியதரைக் கடல் நாடுகள் என்று ஐந்து பெரும் பிரிவில் உரையாடல்கள் நிகழ்ந்தன. அவற்றில் குறிப்பாக நீர்வளம் சம்பந்தப்பட்ட 120 உலக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். நீர்வள மூல அமைப்புகள், நீர்வளப் பரிமாற்றங்கள், சிக்கன வழியில் நீர்ப் பயன்பாடுகள், கழிவுநீர்ச் சுத்தீகரிப்புகள், உப்புநீக்கி முறைகள், நீர்வள மீள்பயன்பாடு, நீர்வளத்தில் கலக்கும் மாசுக்கள், துர்நீர்வளச் சுத்தீகரிப்புகள், குடிநீர்ப் பாதுகாப்புகள், உடல்நலச் சுகாதார முறைகள், மழைநீர் வெள்ளப் பாதுகாப்புகள் போன்றவை ஆராயப்பட்டன.

பாரதத்தில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப் பஞ்சத்தைக் குறைக்க ஜீவ நதிகள் செத்த நதிகளுடன் சேர்க்கப் பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஓடும் நதிகளின் நீரை, அண்டை மாநிலத்தில் ஓடாத நதிகளுக்குப் பங்கீடு செய்ய அரசாங்கங்கள் முன்வர வேண்டும். கடற்கரைப் பகுதிகளில் உப்புநீக்கி துறையகங்கள் அணுமின்சக்தி நிலையங்களுடனும், அனல் மின்சக்தி நிலையங்களுடன் கூடவே கட்டப்பட வேண்டும். இந்த இமாலயத் திட்டங்கள் நிறைவேற மத்திய அரசும், மாநில அரசுகளும் மெய்வருந்திப் பணிபுரிய வேண்டும்.

தகவல்கள்

1. Dr. Anil Kakodkar, Indian Atomic Energy Commission Chairman Visits Kalpakkam Desalination Plant, News from The Hindu [July 14, 2004]

2. Desalination -A Promise for the Future By: Dr. S. Kathiroli, Director National Institute of Ocean Technology (NIOT), Chennai [August 21, 2004]

3. Advances in Nuclear Desalination By: B.M. Misra, Desalination Division, Bhabha Atomic Research Centre (BARC), Bombay, India.

4. Technological Innovations in Desalination By: P.K. Tiwari and B.M. Misra (BARC), India [Jan-Feb 2002]

5. A Scheme for Large Scale Desalination of Seawater by Solar Energy By: Anil Rajvansi, Director Nimbkar Agricultural Research Institute (NARI), Phaltan, Maharashtra India [1980]

6. Death Centenary of J.R.D. Tata ‘The Hindu ‘ Daily News [July 23, 2004]

7. Simple Maintenance-Free Seawater Desalination System, Japan [2001]

8. Desalination by Reverse Osmosis Process TEAM Ltd -Information from India

9. Cross Flow Membrane Technology -A Report

10 Solar Powered Desalination, Various Other Types of Process.

11 United States Seek New Water Resources [August 5, 2004]

12 A Brief Review of Reverse Osmosis Membrane Technology By: Michael E. Williams Ph.D., P.E. [2003]

13. Desalination: The Challenges & Opportunities for New Water Supply By: Bernie Rhinerson Chairman, San Diego Water Authority & US Desalination Coalition [April 11, 2004]

14. தீருமா சென்னையின் தாகம் ? ஆசிரியர் கோ. ஜோதி திண்ணை அகிலவலைக் கோப்பு [2004

ஜூலை 15] http://www.thinnai.com/pl0715047.html

15. Inaugural Address By Dr. Abdul Kalam at the Indian Nuclear Society, Kalpakkam [Dec 17, 2003]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா