சு.மு.அகமது கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

சு.மு.அகமது


சு.மு.அகமது கவிதைகள்

1.
உங்கள் தூரிகைகளுக்கான மசி
இப்போது தான் குடுவையில் நிரப்பப்படுகிறது
கடலளவு எண்ணங்களில்
கடுகளவேனும் தீர்ந்திடுமென்ற நம்பிக்கை

யாரோ யாருக்காயோ வென்றெடுத்ததாய் அது
நம் செயல்களை நிர்ணயிக்கும்

கொடுஞ்செயல்களின் ஆகிருதி
தரவுகளில் புனைவாய் பதியப்பட்டு

எழுச்சியின் பேருரை எங்கும் வியாபிக்க
விதர்த்துப் போகும் நிலைக்களன்கள்
நீங்கா நினைவுகளூடே
புதுப்பதியனாய் துளிர்த்தெழ
இன்னும் நிரம்பாமலேயே வழிந்தோடுகிறது
எதிர்பார்ப்புக்களின் அலையோசை

கானல் நீர்ப்பரப்பின் மீது தத்தளிக்கிறது
நமது உரிமைக்கான பட்டாணைகள்.

– சு.மு.அகமது

2. வெறுமை
——————-
மேகங்களிலிருந்து தான் அது
கிடைக்குமென்றெண்ணி வாளாவிருந்துவிட்டோம்

அஷ்ட கோணலாகி புரியாத புதிர் போல்
பரவி படர்ந்த போதும்
பரவசத்தால் புளங்காகிதம் நமக்கு

ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் மட்டுமே
முதலீட்டாய் கொண்டமர்ந்து விழைகிறோம்
விடியலை முடக்கிப் போட

பொங்கும் பிரவாகம் ஊற்றுக்கண்ணாய்
பீறிடும் பொழுதுகளில் மட்டுமே
நம்மால் விளங்கிக் கொள்ளூம் சுயம்

எல்லா கடிவாளங்களூம்
இளகிப் போகும் அரிய காலத்தில்
வெற்றாய் விரிந்திடும் வானம்
நிறமிலியாய் தன்னை பறைசாற்றிக்கொண்டு

நம் கண்களில் தான் கசடு
‘நீல’மென்று நீளமாய் முழங்கும்
நமது யதார்த்தங்கள்
எங்கும் வெறுமையென்பது புரியாமல்

– சு.மு.அகமது
musthaqsyedahmed@gmail.com

Series Navigation

சு.மு.அகமது கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

சு.மு.அகமது


என் வீட்டுத்தோட்டத்தில் கூட
இளைப்பாற உனக்கு இடமில்லை
அந்தரங்கத்தில் ஊடுறுவும் தோழா…

எல்லைக்கோடுகள் தாண்டி தேனுறிஞ்ச
பூக்களில்லை என்றாலும்
மகரந்தம் சுமந்த வண்டுகளுண்டு

காற்றில் அசையும் நுனிப்புல் கூட
ஆடுகளுக்கில்லை-அவை
பானமாய் அங்காடிகளில்
அந்நியச் செலவாணியாய்

————————————

தேனீக்கு திகட்டுமோ தேன்?
திகட்டாத’தேன்’?

————————————

கரும்பலகையில் துவங்குகிறது
கணிதப் பயணம்
எனக்கும் உனக்குமான
காதலும் கூட

————————————

சாலையில் சிதறிக்கிடந்த வெயில்
முகத்தில் அறைந்தது
அனலாய்
————————————-

சாலை வெய்யிலுக்கு
என் நிழல் பிடித்தது
குடை

————————————-

உருகும் தார் கண்டு
உருகினேன்
என் நடை தடைப்பட்டது

—————————————

சூரியனையும் சுடும்
சாலையின் துருத்தின
கற்கள்

—————————————–

சூரியனின் பிம்பம்
கானல் நீர்
குடுவையில்

—————————————–

‘பாவா’ என்றது
பாட்டியின் குரலாய்
கொடுத்த ஒரு ரூபாயோடு
என் நினைவுகளும் சிறையுண்டது
சுருக்குப்பையில்


musu_7@sancharnet.co

Series Navigation