சுப்ரபாரதிமணியன் கவிதைகள்

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

சுப்ரபாரதிமணியன்


1.

புறாக்கள் இந்தபக்கம் பறந்து
ரொம்ப நாட்களாகிவிட்டன.
காக்கை கூட தென்படுவதில்லை
கழுதை என்பது ஒரு பிராணியா.
மகள் கேட்டாள்.
வீட்டிற்கு செல்வது துயரமானது
வெளியில் அலைந்து திரிவது இன்னமும்.
அடையாளம் காணமுடியாதபடி
சாயம் அரிித்துவிட்டது முகத்தை.
முகத்தில் மரணம் சரியாக முத்திரை குத்தியிருக்கிறது
என் கண்களின் உயிர் அற்ற ஒளியை வாங்கி
குருடாக்கிகொண்டவர்கள்
பயந்தபடி விலகி போகிறார்கள்.
நினைவுகளை தழுவியபடி
நண்பர்கள் கடந்து போகிறார்கள்.
மரணம் எதேச்சையானது என்று நழுவுகிறார்கள்
மரணத்தின்மூலம் யாவருக்கும் துணுக்குறச் செய்கிறவை.
சுற்றிலும்
சமாதிகளின் மீதான
வெட்டுப்படாத செடிகளின்
பச்சையம்.

2.

முன்பிருந்த நகரத்துத் தெருக்களில்
நாய்களும் கழுதைகளும்
தென்பட்டதில்லை.
வாகன இரைச்சல் தலைக்குள் புகுந்த
யானையின் ஆட்டமாய்.
நாயின் குறைப்பைக் கேட்கக்கூட
வலிமையான வீடுகளுக்குதான் போகவேண்டும்.
தெருக்களில் என்னோடு கை கோர்க்க ஆளில்லாவிட்டாலும்
இணை செல்ல நாயாவது அகப்படாதா என அலைந்ததுண்டு.
வாகனம் அரைத்த மாவாய் வீதிகளில்
உயிர்களை அவ்வப்போது கண்டதுண்டு

இந்த ஊருக்கு வந்த புதிதில்
நாய்களும், கழுதைகளும் தெருவில் நடமாடும் காட்சி
மகிழ்ச்சி தந்தது
ஆனால் விரையும் வாகனங்களின்
இரைச்சல் இல்லாமலில்லை
மிரளும் சிறு மிருகங்களாய் மனிதர்கள்
சட்சட்டென வாகனங்கள் அறைந்து
எலும்புகள் குவிந்து
மலமும் ரத்தமுமென
உருத்தெரியாமல்.
நாய்களையும்,பூனைகளையும் கழுதைகளைகளையும் காண்பது
சமீபமாய் போயிற்று
இன்னும் நாய்களும், கழுதைகளும் விரைந்து பறக்கும் சேவலும்
தெருவோடு காட்சி என்பது ஆறுதல்தான்
வாகனம் அறைய அவை காத்திருக்கின்றன என்றாலும்.

சுப்ரபாரதிமணியன்
srimukhi@sancharnet.in

Series Navigation