ஜெயமோகன்
சு.ரா. திண்ணையில் எழுதிய கடிதம் கண்டேன். அவருடைய சகஜ பாவனையை மீறி உள்ளிருந்து கிளம்பும் இலக்கற்ற கோபம் சங்கடம் அளிக்கிறது . அச்சில் அவருடனான விவாதத்தை மரியாதை கருதி தவிர்ப்பதையே இதுவரை செய்துவந்துள்ளேன் . இது எல்லா கேள்விகளுக்குமான சுயவிளக்கத்துக்கான தருணம் என்று படுகிறது .
சு.ரா நீண்டகாலமாக கடைப்பிடித்துவந்த சமநிலையை சமீப கால எழுத்துக்களில் இழந்துவிட்டிருக்கிறார். [ உதாரணம் தீரா நதி கட்டுரைகள் ] அவரது இடம் முக்கியத்துவம் அநீதியாக மறுக்கப்பட்டு வருவதாக [ அவரது சமீபத்திய நாவல் மீதான சூழலின் எதிர்வினைக்குப் பிறகு ]அவருக்கு ஏற்பட்டுள்ள மனப்பிம்பமே அதற்கு காரணம் என ஊகிக்கிறேன். அவருடைய இன்றைய இலக்கியச் சுற்றம் இலக்கியத்தை விட வம்புகளை அறிந்த ராஜநாயகங்கள்தான் என்பது இதற்கு வழிவகுத்திருக்கலாம் .
சு.ராவுடன் திடார் மோதலா ?
சு.ரா மீது ஒரு திடார் மோதல் போக்கை நான் கொண்டிருப்பதாக் ஒரு சித்திரம் உருவாகியுள்ளது .நான் அன்றும் இன்றும் சு.ரா வின் ஆளுமை குறித்த அபரிமிதமான மரியாதையும் , அதேசமயம் அவரது எழுத்துமுறை மீது கடுமையான விமரிசனமும் கொண்டவன். தமிழ்ச் சூழலில் இன்று தேவதேவன், பிரேம் ,எஸ். ராமகிருஷ்ணன் ,சி .மோகன்,நான் , என குறிப்பிடத்தக்கவர்கள் பலரும் சுந்தர ராமசாமியின் எழுத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களே .இவர்களில் எவருமே சு.ரா வின் இலக்கியப் பங்களிப்பு , இலக்கிய ஆளுமை என்ற தளத்தில் அவரது முக்கியத்துவம் ஆகியவை குறித்து குறைத்து மதிப்பிடக்கூடியவர்களோ , மரியாதைக்குறைவாக ஏதும் சொல்லிவிடக்கூடியவர்களோ அல்ல.
சு.ராவின் எழுத்துமுறை மீதான எனது விமரிசனத்தை 1986 ல் நான் அவருக்கு ஜெ.ஜெ.சில குறிப்புகள் பற்றி எழுதிய முதல் கடிதத்திலேயே சொல்லியிருக்கிறேன் .இது குறித்து விரிவான நேரடி விவாதங்களை அவருடன் நடத்தும் சுதந்திரத்தை [பழைய] சு.ரா எனக்கு அளித்துள்ளார் . அவருடன் விவாதித்தே என் கோணம் வளர்ந்தது .அவரது படைப்பை பற்றி எப்போதெல்லாம் எழுதினேனோ அப்போதெல்லாமே இவ்விமரிசனத்தையே நான் சொல்லியும் வந்துள்ளேன் . இவையெல்லாம் இன்றும் அச்சில் கிடைப்பவை .
சு. ராவின் எழுத்தும் நானும்
சு.ராவின் எழுத்து மிகவும் பிரக்ஞை பூர்வமானது. தொழில் நுட்பக் கச்சிதத்தை முதல் இலக்காகக் கொண்டது. நிதரிசனம் சார்ந்த உண்மையே ஒரே உண்மை என வலியுறுத்த முற்படுவது .ஆகவே அதனால் மன ஆழங்களுக்கோ அல்லது வரலாற்றின் ஆழங்களுக்கோ செல்ல முடிவதில்லை .அது எப்போதுமே ‘நான் ‘ ல் மையம் கொள்கிறது .தனது கருத்து தனது கோணம் ஆகியவற்றை மட்டும் முன்வைக்கிறது .ஆகவே அதில் மோதல்கள் , உள்முரண்கள் இல்லை . ஆகவே அவை எளிய பகடி என்பதற்குமேல் உக்கிரமும் கொள்வதில்லை . எளிய சிந்தனைகள் , விமரிசனங்கள் ,மற்றும் நினைவு கூர்தல் ஆகியவை கலந்து உருவாக்கப்படுவது அது .
சு. ராவின் எழுத்தில் எப்போதும் உள்ள சுயப் பிரக்ஞை தன்னை பற்றிய ஒரு சித்திரத்தை கட்டியெழுப்புவதில் கவனமாக உள்ளது . அது ஒருவகை ஜெண்டில்மேன் எழுத்து . அந்த பாவனை எழுத்தில் சாத்தியமாகவேண்டிய நேர்மையான உக்கிரத்துக்கு நேர் எதிரானதாக உள்ளது .நேர்பேச்சில் மிகுந்த தீவிரத்துடன் ஆழமான அறச்சார்புடன் வெளிப்பட்ட அந்தக்கால சு.ரா எழுத்தில் தன்னை துளிகூட காட்டியதேயில்லை .எழுத அமர்ந்ததுமே அவர் மிக மிக ஜாக்கிரதையாகிவிடுகிறார் . பழங்கால ஆட்கள் ஃபோட்டோவுக்கு போஸ் அளிப்பதுபோல தசைகளை இறுக்கி விடைப்பாக உட்கார்ந்து விடுகிறார் .அதை மறைத்துக்கொள்ள செயற்கையானதும் பெரியமனிதத்தனமானதுமான ஒரு நகைச்சுவையைக் கையாள்கிறார் .
நான் இலக்காக்கிய எழுத்து எழுதும் கணத்தில் எழுதுபவனை மீறி உருவாவது .நமது அனைத்து அந்தரங்கங்களும் நம்மை அறியாமலே வெளியாகும் ஒருவகை சுய அவிழ்ப்பு அது . நம்மிடமிருந்து வெளிப்படும் மொழிவடிவமான கனவு . அவ்வெளிப்பாடு தடையின்றி நிகழ தேவையான அளவுக்குதான் மொழித்தொழில்நுட்பம் நமக்கு தேவை .சு.ரா பிரேக்கிலிருந்து காலை எடுப்பதில்லை ,நான் விபத்தாகி மண்டை உடைந்தாலும் அக்ஸிலேட்டரை விட்டு அழுத்தத்தை குறைப்பதில்லை .எழுத்தில் எச்சரிக்கையும் , அச்சமும் இம்மிகூட இருக்கக் கூடாத விஷயங்கள் என்ற பி .கெ. பாலகிருஷ்ணனின் கருத்தே எனக்கு ஏற்புடையதாக உள்ளது.
நான் என் நாவல்களை நிகழ்த்திய பிறகே இந்த கோணத்தில் எனக்கு இருந்த எண்ணங்கள் உறுதிப்பட்டு கருத்துக்களாயின .ஏற்கனவே இவற்றை சொல்லியிருந்தாலும்கூட இப்போது அவ்வப்போது குறிப்பிடுகிறேன் .ஆனால் இன்னமும் பலவகை தயக்கங்கள் உள்ளன.சு.ராவின் கருத்துக்களை முன்வைத்து விவாதத்தை துவக்க முடியாது .நேர்பேச்சில் மிக கறாரான கருத்துக்களை அவர் சொல்வார், அச்சில் அவை மொண்ணையான சொற்றொடர்களாக மாறியிருக்கும்.
மரபின்மீதான முழுமையான அறியாமை , அதன் விளைவான உதாசீனம், அதேசமயம் மேற்கு தன் மரபில் இருந்து உருவாக்கிய கருத்துக்கள் மற்றும் வடிவங்கள் மீது விமரிசனமற்ற மோகம் ஆகியவற்றுக்கு தமிழில் மிக உச்ச கட்ட முன்னுதாரணம் சு .ரா தான் என்பது பலமுறை அவரிடமும் நான் சொன்ன கருத்து . மரபை ஒட்டுமொத்தமாக விமரிசித்த அவருக்கு [மரபின் பின்பாரம் .சு ராவின் பிரபல சொற்றொடர்] மரபை இம்மிகூட தெரியாது , ஆர்வம் சற்றும் இல்லை . தத்துவத்தின் அர்த்தமின்மை பற்றி பேசிய அவருக்கு தத்துவம் மீதும் பயிற்சி இல்லை.அதேசமயம் அவர் விதந்து பேசிய அனைவருமே தங்கள் மரபை ஆழ்ந்து கற்றவர்கள்தான்
ஆகவே சு. ராவை விமரிசிப்பதும் விலகிசெல்வதும் என்னைபொறுத்தவரை எனது தேடலின் பாதை மட்டுமே. அதனால் அவர் மீதான மரியாதை குறைவதில்லை . இலக்கியம் மீதான சமரசமற்ற அணுகுமுறைக்கு என்னைபொறுத்தவரை அவரே எனக்கு முன்னுதாரணம். அவரது வடிவச்சோதனைகள்,அவரது ஆரம்பகால புனைகதைமொழி ஆகியவை என்னை உருவாக்கிய சக்திகளே.
தளையசிங்கம் விவகாரம்
முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் கொணடவர்களாயினும் சு. ராவும் மாலனும் ஒரு புள்ளியில் ஒத்துப்போவது ஆச்சரியம் தான். நாங்கள் நடத்திய மூன்றுநாள் அரங்கு, மற்றும் அதன் பதிவுகளான ஏழு கட்டுரைகளை முற்றிலும் காணமறுத்து ,அனைத்து விவாதங்களுக்கும் ஆர் .பி. ராஜநாயகத்தின் பதிவையே ஆதாரமாக கொள்கிறார்கள் .ஒன்றேகால் அரங்கில் பங்குபெற்ற ஒருவரின் அவதூறான பதிவுகளை.
என் கட்டுரையில் இரு இடங்களில் சு ராவின் கட்டுரை குறிப்பிடத்தக்கது என்று கூறி அதன் அவதானிப்புகளை விவாதிக்கிறேன். இறுதியாக இப்படி வருகிறது ‘…..இவை [தளைய சிங்கம் எழுப்பும் கேள்விகள்] நமது தத்துவக் கொள்கைகளின் சாராம்சமான மதிப்பு என்ன என்று நம்மை அறியத்தூண்டுகின்றன.இவை எழுப்பும் வினாக்கள் ஒரு சிந்திக்கும்மனதைப் பொறுத்தவரை மிக அரியவை.தமிழ் சூழலில் உள்ள சிந்தனைக்கான பயிற்சியின்மையே அப்படிப்பட்ட ஆழமான உசாவல் தளையசிங்கத்தைச் சார்ந்து உருவாகாமல் போகக் காரணம்.
இங்கு பெரும்பாலோர் அடிப்படை வினாக்களை எழுப்பிக் கொள்வதில்லலை .தளையசிங்கத்தைப்பற்றி பொருட்படுத்தி எழுதப்பட்ட ஒரே கட்டுரையான சுந்தர ராமசாமியின் கட்டுரை அதன் செயற்கைஇறுக்கம் நிரம்பிய மொழிநடையை நீவிவிட்டுப் படித்தால் மிக எளிமையாக அவரை அன்றைய பொதுவான இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சியே என்பதைக் காணலாம் . ‘ இது என் கட்டுரையில் நான் சொன்னது .
நான் எழுதியதாக[ திண்ணையை வாசித்தபிறகு ] ராஜநாயகத்தை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொண்டு சு ரா சொல்கிறார்: ‘ மு.த பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையை, ஜெயமோகன், ‘வதந்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை ‘ என்று மொத்தமாக தூக்கியெறிந்திருக்கும் நிலையில்… ‘
‘….கடுமையான ஒரு குற்றச்சாட்டு அது. மு. தளையசிங்கம் போல் மதிக்கத் தகுந்த ஒரு படைப்பாளியை, வதந்திகளின் அடிப்படையில் மதிப்பிடுவது, அந்தப் படைப்பாளிக்குத் துரோகம் இழைப்பதுடன், வாசகர்களையும் திட்டமிட்டு ஏமாற்றுவதாகும். இந்தக் கடுமையான குற்றச்சாட்டிற்கும், ஜெயமோகன், ஆதாரங்கள் எதுவும் தரவில்லை. முடிவை மட்டுமே கூறுகிறார். ‘
சு.ரா வம்புகளை ஆதாரமாகக் கொண்டு தவறான தகவல்களை அளித்தார் என்றோ, அவர் தளையசிங்கத்தின் மரணம் குறித்துச் சொன்னவை பொய் அல்லது ஆதாரமற்றவை என்றோ நான் சொல்லவில்லை . எனக்கும் சு.ராவுக்கும் இடையே உள்ள விவாதப்புள்ளியே அது அல்ல . ‘அன்றைய பொதுவான இலக்கிய வம்புகள் ‘ என்ற சொல்லாட்சி மிகத்தெளிீவாகவே அதை சொல்கிறது . தளையசிங்கத்தின் மரணம் அன்றைய வம்பு அல்ல, இன்றைய விவாதம். சு.ரா அக்கட்டுரையை எழுதிய காலகட்டத்து வம்புகளையே நான் குறிப்பிடுகிறேன். சு ரா கட்டுரைகளின் தகவல்கள் அவர் காலகட்டத்துக்கும் ,அவரளவுக்கும் முற்றிலும் நம்பகமானவையே என்றே எப்போதும் நான் கருதிவந்துள்ளேன். சு.ரா தேவையே இல்லாமல் காட்டியுள்ள இந்த பாய்ச்சலுக்கு என்ன காரணம் ?
தளைய சிங்கத்தின் மரணம் குறித்து அதிகாரபூர்வமான பதிவுகள் இல்லாத நிலையில் அனைவருமே அரைகுறை தகவல்களை ஆதாரமாக கொண்ட மனப்பதிவுகளையே சொல்லவேண்டியுள்ளது . தளையசிங்கம் புங்குடுதீவு நன்னீர் கிணறுகளில் தலித்துக்கள் நீர் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டுமென்று போராடினார் .கோபம் கொண்ட உயர்சாதியினர் காவல் துறையை ஏவி அவரை கைதுசெய்து கடுமையாக தாக்கினர் . அதன் விளைவாக நோய்வாய்பட்டு அவர் மரணமடைந்தார் இது ஈழ அரசியல் /இலக்கிய களங்களில் முக்கியமான ஒருவர் [
பெயர் சொல்லமுடியாதநிலை ] எனக்குச் சொன்னது . இதை ‘பூரணி ‘ மகாலிங்கத்திடம் கேட்டேன், அப்போது வேதசகாயகுமாரும் இருந்தார் .அது உண்மை என்று சொன்ன மகாலிங்கம் தளையசிங்கத்தின் பள்ளிக்கு அந்த காவலர் வந்து கொலை செய்துவிடுவதாக மிரட்டிய போது தானும் இருந்ததாகச் சொன்னார் . ஆதரவு ஏதுமற்ற அந்தச் சூழலில் தற்கொலைத்தனமான வேகத்துடன் தளையசிங்கம் அம்மிரட்டலை எதிர்த்து சவால்விட்டதாகவும் சொன்னார் .
இதன் அடிப்படையில் எனக்கேற்பட்ட மனப்பதிவு , சமூகம் எத்தனை ஜனநாயகம் கொண்டதாக இருப்பினும் கருத்துச் செயல்பாட்டையும் கலகத்தையும் ஓர் எல்லைவரை மட்டுமே அனுமதிக்கும் ,அதன் நரம்பில் தொட்டால் மின்சாரம் அடிக்கும் என்பது .[உதாரணமாக ,சாதிவிட்டு சாதி மணம் செய்துகொள்ளாதவரை தமிழ் நாட்டில் சாதியின் வலிமை பற்றி ஒன்றுமே தெரியாது. இதை உணர்ந்த காரியக்காரர்கள்தான் இங்கு சாதி , உபசாதி, ,கோத்திரம், உட்கோத்திரம் எதையுமே மீறாது தனிவாழ்வை அமைத்துகொண்டு அதி முற்போக்கு பேசுகிறார்கள்] .என் கட்டுரையில் வேறு ஒரு கோணத்தில் அது தன் இலட்சியங்களின் இன்றியமையாத உலகியல் தோல்வியை உணர்ந்த ஒருவர் தன் இலட்சியங்களை அடிக்கோடிடும்பொருட்டு செய்துகொண்ட தற்கொலை என்றும் சொல்லியுள்ளேன். இவற்றை தளையசிங்கத்தை பற்றிய சரித்திரக்குறிப்பாக சொல்லவில்லை, இரண்டுமே தகவல்கள் என்பதைவிட ஒரு வகை கருத்தியல் மனப்பதிவுகள், அதன் பொருட்டு சொல்லப்பட்டவை என்பதே உண்மை.
இம்மனப்பதிவு தவறானதாக இருக்கலாம் .அது ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டால் அதை ஏற்க எனக்கு தயக்கமெல்லாம் இல்லை . தளைய சிங்கம் பற்றிய எனது கருத்துக்கள் மதிப்பீடுகள் எதுவுமே இதை அடிப்படையாகக் கொண்டவை அல்ல .என் விவாதமும் இது சார்ந்தது அல்ல . ஒரு விளிம்புக்குறிப்பாக வேறு ஒரு கட்டுரையில் சொல்லப்பட்டது அது . தளையசிங்கம் பற்றிய எங்கள் விவாதத்தை முழுக்க இந்த புள்ளியில் முளையடிக்க செய்யபடும் முயற்சி உள்நோக்கம் கொண்டது . ஆகவே இனி இது பற்றிய எந்த விவாதத்திலும் நான் கலந்துகொள்வதாக இல்லை .
சு.ரா.வின் மொழிநடை
சு.ராவின் மொழிநடையைப்பற்றி பலவருடங்களாக அவரிடம் சொல்லிவந்த என்னுடைய கருத்துக்களையே என் கட்டுரையிலும் சொல்லியுள்ளேன். செறிவான மொழிநடை நவீனச் சிந்தனைகளை முன்வைக்க இன்றியமையாதது. ஆனால் செறிவு விஷயச்செறிவின் விளைவாக இயல்பாக உருவாகிவரவேண்டும் . தத்துவ , இலக்கிய விமரிசனக் கருத்துக்களை தமிழில் எழுதும்போது இன்று பல பிரச்சினைகள் உள்ளன. கலைச்சொற்களை பயன்படுத்தாவிட்டால் ஒவ்வொருமுறையும் விளக்கங்கள் தரவேண்டும். பயன்படுத்தினாலோ கட்டுரை சகஜமாக இருக்காது . இங்குள்ள சூழலில் தத்துவ , வரலாற்றுப் பின்னணி அளிக்காமல் பேச முடியாது .ஆனால் அதையெல்லாம் அளித்தால் கட்டுரை சீரான ஓட்டம் இல்லாமல் ஆகும். எளிமையான சொற்றொடர்களில் எழுதினால் அக்கருத்து ஒரு பொன்மொழி போல ஆகி , அதன் மறுதரப்பை மறுத்துவிடும். அதற்காக மறுதரப்புகளையும் சேர்த்து சொற்றொடர்களை அமைத்தால் தமிழின் எழுவாய் பயனிலை அமைப்பு கூட்டு சொற்றொடர்களை சிக்கலானதாக ஆக்கிவிடுகிறது.. மேற்படி சிக்கல்களினால் நான் உட்பட தமிழில் கட்டுரை எழுதும் பெருமபாலோர் பலவிதமான குழப்பங்களை அடைகிறோம்.
ஆனால் சு .ரா எங்குமே இம்முயற்சிகளில் ஈடுபட்டதில்லை. அவரது கட்டுரைகளில் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை ,காரணம் அவர் எந்த சித்தாந்ததையும் பற்றி பேசுவதில்லை . அவர் பின்னணிகளை விவரிப்பதேயில்லை . ஆக அவர் கட்டுரையில் இருப்பது க .நா. சு முன்வைத்த நேரடியான அபிப்பிராயங்கள் மட்டும்தான் .ஆனால் க .நா. சு அவற்றை பேச்சு மொழியில் சொல்லும்போது இவர் தத்துவ மொழியை அதற்கு பயன்படுத்துகிறார்.உதாரணமாக தளையசிங்கம்பற்றிய அவரது கட்டுரையில் சொல்லப்படும் விமரிசனங்கள் எதுவுமே சிந்தனையின் வரலாற்றை கணக்கில் கொள்வதனாலும், கருத்துக்களின் ஊடுபாவுகளை முன்வைப்பதனாலும் சிக்கலானவையாக ஆனவை அல்ல. மிக எளியவை ,ஆகவே நேரடியாக சுருக்கமாக சொல்லப்படச் சாத்தியமானவைதான் .
‘ ‘பிரச்சினைகளின் தீர்வுகளுக்கு அவனை நகர்த்தும் உண்மைகளை -அவை எந்த தளத்தை சேர்ந்த உண்மை என்றாலும் சரி -எடுத்து தன்னில் இணைத்துக் கொள்வது தவிர்க்க முடியாத விதியாக அவனிடம் தொழிற்பட வேண்டும். இவ்வாறான விதிக்கு அவன் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும்போது பிறதளங்களை விமரிசித்து ஒதுக்குவதில் மட்டுமல்ல தன்னிடம் விட்டுப்போன உண்மைகளின் துணுக்குகளேனும் பிற தளங்களில் ஒதுங்கி நிற்கின்றனவா என்பதை அவன் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவனாகவும் இருக்கிறான் .முன்விதிகளையும் அனுமானங்களையும் தத்துவ முடிவுகளையும் தாண்டி பிரச்சினைகளின் புதுமுகங்களோடு வரும் வாழ்வின்முன் அவன் தன்னை இன்றைய மனிதனாக வைத்துக் கொள்ளவேண்டுமென்றால் அவன் நிரந்தரம் சேர்த்துக் கொள்ளவேண்டியவனாகவும் இருக்கிறான்… ‘ ‘[ மு.தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் . ]
சுந்தர ராமசாமியின் கட்டுரைகள் முழுக்க இம்மாதிரி வரிகள் தொடர்ந்து வருவதை காணலாம். மேற்குறிப்பிட்ட பத்தியின் அர்த்தம் என்ன ? ‘தன்னுடைய தரப்புக்கு அப்பாலும் உண்மையின் சாத்தியங்கள் இருக்கக்கூடும் என்ற உணர்வு சிந்திப்பவனுக்கு தேவை ‘ என்பது மட்டும்தானே ? இது ஒரு இலக்கிய வாசகன் இத்தனை கூர்ந்து படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டிய கருத்தா என்ன ? சு. ராவின் கட்டுரைகள் இந்தமாதிரியான பொத்தாம்பொதுவான அனைவருக்கும் தெரிந்த விஷயங்களே மேலே காட்டியவகையான ‘ கம்பீரமான ‘ இறுக்கம் கூடிய சொல்லாட்சியுடன் முன்வைக்கப்பட்டிருக்கும் .
ஒரு தத்துவ /விமரிசனக் கட்டுரையில் வரும் வரி நமது சிந்தனையில் ஒரு சொடுக்கலை உருவாக்கும் . நாம் யோசிக்காத ஒரு விஷயத்தை அல்லது பார்க்காத கோணத்தை அது நமக்கு ஒவ்வொரு வரியிலும் காட்டிக் கொண்டிருக்கும் . அதனால் நமது மனம் அதன் ஒவ்வொரு வரியுடனும் விவாதித்தபடியே இருக்கும் . சுந்தர ராமசாமியின் மேலே சொன்ன வரியுடன் என்ன விவாதம் சாத்தியம் ? இம்மாதிரி வரிகளை நீவி நேராக்கி படித்து முடித்தால் பொதுவான கருத்துக்களை [சிந்தனை கூர்மையாக இருக்கவேண்டும்.உள்ளுணர்வுக்கு அதிலே இடம் இருக்கவேண்டும், மறுதரப்பும் முக்கியம் இத்யாதி…] தவிர இதில் இருப்பது அன்றைய சிற்றிதழ் இலக்கிய அரசியல் சார்ந்த ஒரூ நிலைபாடு மட்டுமே என்பதைக் காணலாம் .
தன் எழுத்துக்களை அவர் சொல் சொல்லாக யோசித்து , தட்டச்சு செய்யும் பெண்ணுக்கு மாற்றி மாற்றிச்சொல்லி , இயந்திரத்தனமாக உருவாக்குவதைப் பற்றி அவரிடமே கடுமையாக நான் விமரிசித்தது உண்டு. தன்னை மறந்தநிலை ஒன்று இலக்கிய ஆக்கத்தில் கைகூட வேண்டும் ,அது அந்தரங்கமாகவே இருக்கவேண்டும் என நான் சொன்னதை அவர் மறுத்து வாதாடியதும் உண்டு. அவரது எடிட்டர்கள் எம் எஸ் , சி .மோகன் ஆகியோரும் அதையே சொல்லும்போது நான் கேட்டிருக்கிறேன் . என் கோரிக்கையை ஏற்று தன் புதியநாவலை கையால் எழுதப்போவதாக அவர் எனக்கு எழுதினார் .அவரது வழக்கமான தேய்சொற்களை [க்ளீஷே.] நீண்ட பட்டியலாக போட்டு அவருக்கு மறுதபாலில் அனுப்பினேன். அவற்றை களையமுற்படுவதாக அவர் எனக்கு எழுதினார். இப்போது என் விமரிசனம் ஏதோ புதிதாக கிளம்புவது போல ஒரு பாவனையை அவரிடம் காண்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது.
எனது கட்டுரையில் நான் தளையசிங்கத்திற்கு இந்தியசிந்தனைமரபிலும் மேற்கத்திய மரபிலும் உள்ள பின்னணி குறித்தும் அதன் பாதிப்புகள் மற்றும் எல்லைகள் குறித்தும் பேசியிருக்கிறேன் . அவரது எழுத்துக்களில் உள்ள பிளவுண்ட ஆளுமை உருவாக்கும் சிக்கல்கள் குறித்தும் . இம்மாதிரி ஒரு புதியகருத்தை சொல்லமுற்படும்போதுதான் மொழி செறிவாக வேண்டிய தேவை ஏற்படுகிறது . இந்திய சிந்தனையில் ஏற்பட்ட நூறுவருட மறுமலர்ச்சிக்கால போக்குகளைப்பற்றி ஒரு பத்தியில் சொல்ல முற்பட்டால் ஏற்படும் சிக்கல் அது . என் கட்டுரையில் தளையசிங்கம் சொல்வதென்ன என்பது மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது .அத்துடன்சு.ராவின் கட்டுரையை வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம் .தளையசிங்கத்தின் ஒருசில கருத்துக்களை மட்டுமே சு. ரா பரப்பி சொல்லியிருக்கிறார் என்பது புரியும் . முரணியக்கத்தின் [டைலடிக்ஸ்] போதாமை , அறிவியலின் மெய்யியல் அடிப்படை , அகமன இயக்கமே சகஜநிலையாக ஆகும்போது இலக்கியத்தின் தேவை என்ன போன்ற முக்கியமான விஷயங்களை மு .தளையசிங்கம் பேசியிருக்கிறார் என்பதே அவருக்கு புரியவில்லை .தளையசிங்கத்தின் மையமே அதுதான். சுரா தளையசிங்கத்தை அன்றைய தமிழ் சூழலின் உருவ உள்ளடக்க விவாதம் ,ஜெயகாந்தனை என்ன செய்வது , மார்க்ஸிய எதிர்ப்பு போன்ற தளங்களுக்கு கொண்டுவந்துnவிட்டுகிறார் ,
அன்றைய வம்புகள் எவை ?
சு .ராவின் கட்டுரை வெளிவந்தது 1982ல். அன்றைய வம்புகளை எளிதில் வாசகர் இனம்காணமுடியும் சு .ராவின் கட்டுரையின் முத்தாய்ப்புடன் அதை பொருத்திப்பார்க்க முடியுமென்ற எண்ணத்திலேயே என் கட்டுரையில் அவ்வரிகள் சொல்லப்பட்டன. என் கட்டுரை சு .ராவின் கருத்துக்களை மதிப்பீடு செய்ய முயல்வதல்ல, தளைய சிங்கத்தின் மீது தத்துவார்த்தமான கவனம் ஏன் விழவில்லை என்ற கேள்விக்கான பதிலின் ஒரு சிறு பகுதியாகவே சு.ரா கட்டுரை குறிப்பிடப்பட்டது . மேலும் என் கட்டுரை விவாதத்துக்கான முன்குறிப்பு மட்டுமே. இவ்விஷயத்தை வேதசகாயகுமார் தன் கட்டுரையில் மிக விரிவாகவே பேசுகிறார் .
கட்டுரை வெளிவந்த காலகட்டத்தில் ஜெயகாந்தன் தமிழிலக்கிய விவாதங்களின் மையமாக விளங்கிவந்தார் . தீவிரமான நோக்கங்களுடன் எழுதும் ஒருவர் தன் சூழலை எந்த அளவு பாதிக்கமுடியுமென அவரது வெற்றிகாட்டியது . அன்றைய சிற்றிதழ்ச் சூழலில் இருந்து ஆற்றாமையும் பொறாமையும் கலந்த விமரிசனங்கள் , உதாசீனம் ஆகியவை எதிர்வினையாக எழுந்தன. கணிசமான விமரிசனங்கள் அவரை வெறும் கருத்துப் பிரச்சாரகர் என முத்திரை குத்தி நிராகரிக்கும் முயற்சிகளே .[இவற்றை விவாத்தித்தால் பல சிக்கலான கேள்விகள் எழுகின்ற்ன.கலைக்குள் வரும் கருத்துக்கும் மற்ற துறைகளில் உள்ள கருத்துகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது தஸ்தாயெவ்ஸ்கியையெல்லாம் கணக்கில் கொண்டு பேசவேண்டிய ஒரு முக்கியமான புள்ளி ] இன்றுகூட அவர் படைப்புகள் பற்றி சிற்றிதழ்கள் தரப்பிலிருந்து ஒர் குறிப்பிடத்தக்க விமரிசனக் கட்டுரை வரவில்லை . ஜெயகாந்தன் மீது ஆக்கபூர்வமான எதிர் விமரிசனங்களும் சில வந்தன, ஆனால் அவை முழுமையாக முன்வைக்கப்படவில்லை
எளிமைப் படுத்தும்போக்கு கொண்ட இக்கருத்துக்களும் ,உதாசீனமும் சிற்றிதழ்ச் சூழலை பொருட்படுத்தாதவரான ஜெயகாந்தனையும் புண்படுத்தியமை அவரது அக்கால முன்னுரைகளில் காணக்கிடைக்கிறது . அன்றைய அன்றாட வம்புகளில் இதுவே முதன்மையானது. இப்போதும் விமரிசனமற்ற ஒரு புறக்கணிப்பு ஜெயகாந்தன் மீது இருப்பது அரங்கின் விவாதங்களிலும் தெரிந்தது . இதில் சு. ராவின் பங்கு என்ன என்பது ரகசியமல்ல.
தன் கட்டுரை மூலம் சு. ரா தளைய சிங்கத்தை இந்த வம்புப் புதை சேற்றில் இழுத்து விட்டுவிட்டார் . தளைய சிங்கத்தின் அக்கறைகள் என்னென்ன , அவரது தேடலின் மையம் எது என்பதெல்லாம் என் கட்டுரையில் மிக விரிவாக பேசப்பட்டுள்ளது . ‘ ஜெயகாந்தனை தளையசிங்கம் போற்றுகிறார் —> காரணம் அவரது கருத்துக்கள் ஜெயகாந்தனுடன் ஒத்துப்போகின்றன—> ஆகவே தளையசிங்கம் ஒரு உள்ளடக்கவாதி ‘ என மிக சுலபமாக சு .ரா ஒரு சூத்திரத்தை உருவாக்கிவிடுகிறார் .அவரது கட்டுரையின் இறுதி மதிப்பீடாக உள்ளது இந்த கணிப்புதான். அன்றைய இீலக்கியவம்புமனநிலையில் நின்றபடி உருவாக்கப்பட்ட இந்த மிக எளிய மதிப்பீடு தளையசிங்கம் தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் மிகத் தவறாக, மிக அரைகுறையாக மதிப்பிடப்பட முக்கியமான காரணம் .
தைளைய சிங்கத்தை உள்ளடக்கவாதி என அவர் நூல்களை படித்து எவரேனும் சொல்லமுடியுமா ? ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தளையசிங்கத்தின் விமரிசனங்கள் ஏற்பும் நிராகரிப்பும் முற்றிலுமாக மொழி மற்றும் வடிவம் சார்ந்தவையாகவே உள்ளன.அடிப்படையில் மார்க்ஸிய அறத்தை விட்டு விலகாதவர் என்பதால் முற்போக்கு எழுத்தாளர்களின் உள்ளடக்கம் அவருக்கு ஏற்புடையதே . ஆனால் அவர்கள் படைப்புகளை நிராகரிக்கும் அவர் அவரால் ஏற்கமுடியாத உள்ளடக்கத்தை முன்வைக்கும் எஸ் பொன்னுத்துரை யையே முக்கியப் படுத்துகிறார் .அதைவிட முக்கியமாக மெய்யுள் தளையசிங்கத்தால் ஒரு வடிவச் சோதனையாகவே முன்வைக்கபட்டது .இது குறித்து மேலும் விரிவாக விவாதிக்கலாம் .[வேதசகாயகுமாரின் கட்டுரையில் இது குறித்த விவரிப்பு உள்ளது ] மேலும் மு தளையசிங்கம் உருவம் உள்ளடக்கம் என்ற எளிய பிரிவினையை நிராகரிக்கிறார் .அவரது தத்துவ ஆய்வுமுறையில் முரணியக்கவியலே எவ்வாறு மறுக்கப்படுகிறது என என் கட்டுரையில் விளக்கியுள்ளேன்.
ஆனால்சு.ரா உருவமா உள்ளடக்கமா என அன்று நடந்த விவாதத்தில் தளையசிங்கத்தை ஒரு தரப்பில் சேர்த்துவிட்டதன் விளைவாக அவர் மீதான விரிவான பரிசீலனையே சிற்றிதழ்சூழலில் மறுக்கப்பட்டது . சு ரா ஏன் இதை செய்தார் ?தமிழவன் முதல் பிரேம் வரையிலான புதுவிமரிசகர்கள் வரும் வரை தமிழ்ச் சூழலில் உருவ உள்ளடக்கவாதம் ஓயாது நடந்துவந்தது . இலக்கியத்தின் உடனடியான சமூகப்பயன்பாட்டை மட்டுமே வலியுறுத்திய அரசியல்வாதிகள் உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தினார்கள் . இலக்கியத்தை கலையனுபவமாக கருதியவர்கள் உருவத்தை முன்னிலைப்படுத்தினார்கள் .
இவர்களில் முந்தைய தரப்பினரே ஜெயகாந்தனை அதிகமாகப் பாராட்டி வந்தனர் .தளையசிங்கம் ஜெயகாந்தனை முக்கியப்படுத்தியதைக் கண்ட சு.ரா அம்மதிப்பீட்டின் முக்கியத்துவத்தை குறைக்கும் நோக்குடன் அவரை எளிய வடிவவாதியாக குறுக்கி சித்தரித்துவிட்டார் . அதன் மூலம் கலையை மையப்படுத்தியவர்கள் பார்வையில் அவர் தளையசிங்கத்தைய்ம் குறைத்துகாட்ட நேர்ந்தது . ஜெயகாந்தனை மட்டம்தட்ட தளையசிங்கத்தை எளிமைப்படுத்திய இச்செயலையே நான் சமகால வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடுதல் என்றேன்.
உண்மையில் இந்த இரட்டைப் பிரிவினைக்கு அப்பாற்பட்ட மூன்றாவது ஒரு தளத்தில் தன் கருத்துக்களை முன்வைத்தவர் தளையசிங்கம் என்பதை நான் என் கட்டுரையில் சொல்லியுள்ளேன். உருவ உள்ளடக்க வாதம் மட்டுமல்ல கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற பிரிவினையே பொருளற்றது என வாதிட்டவர் அவர் என்பதை சு.ராவின்இந்தச் சித்தரிப்பு முற்றாக மறைத்துவிடுகிறது.
தளையசிங்கத்தின் சிந்தனைகளின் பிளவுண்ட தன்மையை பற்றி விளக்கியுள்ளேன் . உச்ச கட்ட அகவய தரிசனங்களும் , அவற்றை எளிமைப்படுத்தி செய்யப்பட்ட அபத்தமான புரிதல்களும் கலந்துவரும் ஒரு உலகம் அவருடையது .அவருடைய ஒரு விமரிசனத்தைமட்டும் எடுத்து அவரை ஒட்டு மொத்தமாகமதிப்பிடுவது சரியல்ல. எல்லா படைப்பாளிகளைப்பற்றியும் அவர் மாறுபட்ட பல கோணத்தில் பேசியுள்ளார் . [அதை¢ வேதசகாயகுமார் குறிப்பிடுகிறார் ]
இன்று தளையசிங்கம் மீது புதிதாக கவனத்தை ஈர்க்கும்போது வேறு வழியே இல்லாமல் ஏற்கனவே அவர் இழுத்துப்போடப்பட்ட அப்புதைசேற்றிலிருந்து மீட்டாகவேண்டியுள்ளது .உருவாக்கப்பட்ட எளிமைப்படுத்தல்களை நிராகரிக்கவேண்டியுள்ளது .அது கருத்துப் பரவலின் இயல்பு .சு.ரா அதை திசை திருப்பி கொண்டுபோகிறார் .
ஒற்றை வரி விமரிசனம் பற்றி
எஸ். ராமகிருஷ்ணன் ஒரு முறை சுராவின் கவிதைகள் பற்றி நான்குவரியில் கருத்து சொல்லியிருந்தார். அதை விமரிசித்து சு.ரா மிக கிண்டலான தொனியில் இன்னும் சில சொற்களை பயன்படுத்திருக்கலாம் என்று சொன்னார்.ராமகிருஷ்ணன் பதிலுக்கு நேர்பேச்சில், ‘ ‘இவர்மட்டும் யாரைப்பற்றி ஆய்வுமுடிவுகள் செய்திருக்கிறார் ? ‘ என்று கேட்டது நினைவுள்ளது . மெளனி, கல்கி முதல் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் வரை சுந்தர ராமசாமி முற்றான கருத்துக்களை சொல்லியிருக்கிறார் . எதற்குமே காரணங்கள் , ஆய்வுகள் முன்வைக்கப்பட்டதில்லை . போகிற போக்கில் சில வரிகள் மட்டும்தான் .
நேர்மாறாக நான் சொன்ன அத்தனை முடிவுகளையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்நான் மிக விரிவாகவே விளக்கிப் பேசியுள்ளேன் . எந்த இலக்கிய கட்டுரையிலும் சூழலை விளக்கவோ ,உதாரணம் காட்டவோ அக்கட்டுரையுடன் நேரடியான தொடர்பு இல்லாத பிறரை பற்றிய குறிப்புகள் வராமலிருக்காது . அக்குறிப்புகளை மற்ற சந்தர்ப்பங்களில் விளக்குவதே செய்யச் சாத்தியமான விஷயம். என்னுடைய எல்லா அவதானிப்புகளும்மும் எனக்குரிய காரணங்கள் உள்ளன.என் இந்தக் கட்டுரையிலேயே ஆனந்தகுமாரசாமி உட்பட பலரை பற்றிய என் மதிப்பீடுகள் பல உள்ளன. அவற்றை நான் தேவைப்பட்டால் விளக்க முடியும். மாறாக சு ரா 40 வருட விமரிசனச் செயல்பாட்டில் தீர்ப்புகளை மட்டுமே உதிர்த்திருக்கிறார் .
ஜெயகாந்தனைப் பற்றிய கருத்துக்களை சு .ரா எப்படி சிற்றிதழ் சூழலில் உருவாக்கினார் என்பதை மட்டும் இதற்கு உதாரணமாக பார்க்கலாம் .ஜெயகாந்தனை விரிவாக விமரிசித்து ஒரு கட்டுரையைகூட அவர் எழுதியதில்லை .ஆனால் அவ்வப்போது உதிரியாக விமரிசனங்களை 40 வருடமாக சொல்லிவந்திருக்கிறார் . இவை மூன்றுவகை .ஒன்று :நேரடியான விமரிசனத்தை போகிறபோக்கில் நழுவ விடுவது . ‘ ‘ சத்தியத்தின் தளத்தில் புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் பிரிக்கமுடியாத கலை உறவுக்கும் தன் விருப்பங்களை புற உலகில் படியவைத்து கதைகளை ‘உருவாக்கும் ‘ ஜெயகாந்தனுக்குமுள்ள வேற்றுமையை….. .. ‘ இந்த ஒற்றைவரிமட்டுமே தளையசிங்கம் பற்றிய கட்டுரையில் உள்ளது .ஆனால் மொத்த கட்டுரைக்கும் முனை இதுதான்!
தமிழிலக்கியத்தின் திருப்புமுனையான ஒரு படைப்பாளியான ஜெயகாந்தனைப்பற்றி , அவருடைய முழு இலக்கியவாழ்க்கையைப் பற்றி , இப்படி எந்த விளக்கமும் இல்லாமல் ‘எட்டு வார்த்தைகளை ‘ மட்டும் தீர்ப்பாக சொல்லி அதன் அடிப்படையில் தளையசிங்கத்தையே குறைத்து மதிப்பிடும் சு. ரா, நாற்பது வருட இலக்கிய விமரிசன இயக்கத்தில் அவ்வரியை மேற்கொண்டு விளக்க எதுவுமே எழுத முற்படாத சு. ரா தன் படைப்பைப் பற்றி சொல்லப்படும் சிறு கருத்துகூட விரிவாக ஆதாரம்காட்டப்படவேண்டுமென எதிர்பார்ப்பது ஆச்சரியம்தான்.
இரண்டு : விகடத்தின் வடிவில் சொல்லப்படும் விமரிசனம். ‘ ‘ நான் ஏதோ எழுதி வைத்திருக்கிறேன் . நீங்கள் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் .ஹா .கி .வாலம் கவிதைகள் எழுதிவருகிறார் .வாரியார் சுவாமிகளும் ஜெயகாந்தனும் வாசகர்களுடன் உரையாடுகிறார்கள்… ‘ ‘ [லட்சியங்கள் மயக்கங்கள்…. ] இதை நாம் விமரிசிக்கவே முடியாது, வேடிக்கைக்காகச் சொன்னது என்று காட்டதேவையான எல்லா சூட்சுமங்களும் இதில் இருக்கும் .ஆனால் விளைவுகளை உருவாக்கியபடியே இருக்கும்.
மூன்று: கொள்கை விளக்கம்போல பொதுவான வரிகளை சொல்லியபடியே இருப்பது .சு ரா வின் எழுத்தில் இதுவே அதிகம். இது மறைமுக விமரிசனம். ‘ பிரச்சாரகர்களால் கலைஞன் புறக்கணிக்கப்படுவது புரிந்துகொள்ளக் கூடுவதுதான். ஆனால் பிரச்சாரகர்களை போலிகளை வர்த்தகர்களை கலைப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டிருப்பது நம் சமூகத்தின் விசேஷமான சீரழிவாகும் . ‘[புதுமைப்பித்தனின் கதைகளில் காலத்தின் கைவண்ணம்.]. ஜெயகாந்தன் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் புதுமைப்பித்தனைப்பற்றிய விமரிசனத்தின் முத்தாய்ப்பாக எழுதப்பட்ட வரி இது . புதுமைப்பித்தனுடன் ஜெயகாந்தனை ஒப்பிட்டு பிற இடங்களில் சு .ரா சொல்லும் மற்ற சொற்றொடர்கள் அனைத்துடனும் இத்தகைய ஏராளமான வரிகள் மெளனமாகச் சென்று ஒட்டிக் கொள்ளும் !
இதையே அசோகமித்திரன் ,ஜானகிராமன் உள்ளிட்ட அத்தனை படைப்பாளிகளுக்கும் சு .ரா செய்திருக்கிறார் . நான் இதை மிக வன்மையாகக் கண்டிப்பவன் , இதற்கு நேர் எதிராக என்னை உருவாக்கிக் கொண்டவன் என்பது சு. ராவுக்கு நன்றாகவே தெரியும். இலக்கியத்தின் மூலம் இங்கு எவருமே எதையுமே அடையப்போவதில்லை எனும்போது எதற்கு இந்த ‘ராஜாஜி பாணி ‘ ராஜதந்திரம் ? நம் உழைப்பையும் கவனத்தையும் ஏன் இப்படி செலவழிக்கவேண்டுமன எனக்கு புரிந்ததே இல்லை . சு ராவுக்கு நேர் எதிராக முற்றிலும் நேரடியாக, முற்றிலும் வெளிப்படையாக, முற்றிலும் சகஜமாக, என்னை வெளிப்படுத்த வேண்டுமென்றே இதுவரை நான் முயன்றும் வந்துள்ளேன் .என் பலவீனங்களும் இதனால் உருவானவையே. பல கருத்துக்களை அவசரப்பட்டு சொல்லியிருக்கிறேன்.பலவற்றை கவனமில்லாமல் சொல்லியிருக்கிறேன் .பல சந்தர்ப்பங்களில் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டும் இருக்கிறேன். அவதூறுகள் வசைகள் ஏராளமாக பெற்றிருக்கிறேன்.
சில நண்பர்கள் சு ரா போல ‘கவனமாக ‘ எழுதும்படி என்னிடம் கோரும்போது அது இலக்கிய படைப்பாளியின் பாணி அல்ல என்று நான் சொல்வதுண்டு . சமநிலையின்மை அல்லது கவனமின்மை எல்லாம் படைப்பாளியின் முக்கியமான குறைபாடுகளல்ல. ஆனால் அவன் வெளிப்படையானவனாக இல்லை என்றால் அவன் படிப்படியாக இழப்பது தன் படைப்பூக்கத்தைத்தான். என் கருத்துக்களை எப்போதுமே முடிந்தவரை விரிவாக முன்வைத்துள்ளேன். அவற்றில் என் பலவீனங்கள் உள்ளன .அவற்றில் ஒரு தத்துவஅறிஞனுக்குரிய முழுமை மற்றும் சமநிலையை காணமுடியாது போகாலாம் . ஆனால் எந்தவித தடையுமில்லாமல் ஒரு படைப்பாளி சமூக இலக்கிய தத்துவ விஷயங்களை மதிப்பிடும்போது உருவாகக் கூடியதும் , படைப்பாளி மட்டுமே சொல்லக்கூடியதுமான சில குறிப்பான அவதானிப்புகள் அவற்றில் உண்டு என்பதே என் எண்ணம்.
கடைசியாக…
மூன்று நாள் பல கோணங்களில் தளையசிங்கம் பற்றி பேசி பதிவும் செய்திருக்கிறோம். இன்றைய சூழலுக்கு முக்கியமான பல பிரச்சினைகள் வினாக்கள் எழுந்துள்ளன. அக்கூட்டம் பற்றிய அவதூறுகளை மட்டுமே எழுதியவரையும் , மையவிவாதங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களையும் மீண்டும் மீண்டும் திட்டமிட்டு முன்னிலைப்படுத்தி பேசி எங்கள் கூட்டத்தைப் பற்றிய பொதுவான மனப்பதிவை வேண்டிய அளவுக்கு சிறுமைப்படுத்திவிட்டார்கள் . எங்கள் கட்டுரையில்பேசப்பட்ட அனைத்து கருத்துக்களையும் மறையச் செய்வதில் முழுவெற்றி பெற்றும் விட்டார்கள் . இது அவர்களுக்கு ஒரு வகை வெற்றிதான் ஆனால் அறிவுச் சூழலை பொறுத்தவரை மிக அபாயகரமான முன்னுதாரணம் .
பெரியவர்களுக்கு ஒரு எளிய வேண்டுகோள் , தயவு செய்து இனியேனும் என் மூலக்கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு என்னிடம் விவாதியுங்கள் .என் கருத்துக்களை அவற்றின் தளத்திற்கு வந்து சந்தியுங்கள் .இனியாவது கொச்சைப்படுத்தாதீர்கள் . தயவு செய்து வேறு எவரேனும் அக்கருத்துக்களைப்பற்றி ஆக்கபூர்வமாக ஏதேனும் பேச இடமளியுங்கள் .
***
jeyamohanb@rediffmail.com
- மின்மினிப் பூச்சிகள்
- சித்தார்த் வெங்கடேசன் கவிதைகள்
- பல வகையான அமீபா
- அன்பும் ஆசையும் (எனக்குப் பிடித்த கதைகள் -23 -முல்க்ராஜ் ஆனந்த்தின் ‘குழந்தை மனம் ‘)
- தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
- தேவதேவன் கவிதைகள் : 2. மரம்
- சுந்தர ராமசாமிக்கு அன்புடன்
- மு.தவின் மரணம்
- வயதானவர்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள்
- பூமகளே! மன்னித்துவிடு!
- தேவதேவன் கவிதைகள் : 2. மரம்
- கோபம் எதற்கு ?
- சில முற்றுப் புள்ளிகள்
- ஆர்வம் அபூர்வம்
- நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று )
- கனவும் வாழ்வும்
- தாகம்
- மின்னுயர்த்தி
- பாபா :முந்நூறுகோடி மோசடி
- இந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா
- பங்களாதேஷின் பாகிஸ்தானிகள்: பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்
- தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19 2002 (நடிகர்கள், ராமதாஸ், குஜராத் தேர்தல்)
- ஏதோ எனக்குத் தெரிந்தது …..
- கலைகளும் கோடம்பாக்கமும்
- பிறந்த நாள் கொண்டாட்டம்
- சஞ்சிவினி மலைகள்