சுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

சி. ஜெயபாரதன், கனடா


விண்வெளியில் கண்கவரும் விடிவெள்ளி

இத்தாலிய வானியல் மேதைகள் காலிலியோ, காஸ்ஸினி ஆகியோர் உள்ளத்தைக் கவர்ந்தது, சுக்கிரன் (வெள்ளி). சூரிய குடும்பத்தில், சூரியனுக்கும், சந்திரனுக்கும் அடுத்தபடி விண்ணில் ஒப்பற்ற ஒளியுடன் சுடர் விட்டு மின்னுவது சுக்கிரன் [Venus]. வெள்ளி என்று தமிழகத்தில் அழைக்கப் பட்டு வெள்ளிக் கிழமைக் கிரகமாகவும் அது கருதப் படுகிறது. ரோமானியர் தங்கள் ‘காதல் எழில் தேவதையின் ‘ [Goddess of Love & Beauty] நினைவாகக் சுக்கிரனை ‘வீனஸ் ‘ என்று பெயர் சூட்டிப் போற்றினர். மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே பாபிலோனிய வானியியல் வல்லுநர்கள், தகுந்த தொலை நோக்கிக் கருவிகள் தோன்றாத காலத்திலே, சுக்கிரனைப் பற்றி அறிந்து பதிவு செய்துள்ளார்கள். மேலும் சைனா, இந்தியா, எகிப்து, கிரேக்க, மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளின் பூர்வீக நாகரீகங்களின் புராண இதிகாச ஏடுகளிலும், வானியல் நூல்களிலும் சுக்கிரனைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது.

கி.பி.1610 இல் காலிலியோ முதலில் தான் அமைத்த தொலை நோக்கியில், வெள்ளியின் நகர்ச்சியைப் பின் தொடர்ந்து பல மாதங்களாய் ஆராய்ச்சி செய்து வந்தார். அப்போதுதான் அவர் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறை நிகழ்ச்சியை முதன் முதலில் கண்டு பிடித்து, வானியல் சரித்திரத்திலே ஒரு புரட்சியை உண்டாக்கினார். சூரிய மண்டலக் கோள்கள் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்ற கிரேக்க வானியல் மேதை டாலமியின் [Ptolemy] கோட்பாட்டு பிழையானது என்று நிரூபித்துக் காட்டினார். போலந்தின் வானியல் மேதை காபர்னிகஸ் [Copernicus] கூறியபடி, சூரிய மண்டலக் கிரகங்கள் யாவும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்ற வானியல் நியதியே மெய்யானது என்பதற்கு முதல் கண்கூடான உதாரணமாக காலிலியோவின் கண்டு பிடிப்பு அமைந்து விட்டது! இப் புதிய நியதியைப் பறைசாற்றியதற்கு அவர் குற்றம் சாட்டப் பட்டு, விசாரணைக் குள்ளாகி சிறைப்பட்டார்!

மேலும் தொலை நோக்கியில் காலிலியோ காணும் போது, பிறைவெள்ளி [Crescent Phase] பெரியதாகவும், முழுவட்ட மற்ற குறைவெள்ளி [Gibbous Phase] சிறிய தாகவும் இருக்கக் கண்டார். அதற்குக் காரணம் சுக்கிரன் மிக நெருங்கி பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நகரும் போது, பெரியதாய்ப் பிறை வடிவிலும், தூரத்தில் சூரியனுக்கு அப்பால் நகரும் போது சிறியதாய் முழுமையற்ற வடிவிலும் தெரிகிறது.

1761 இல் ரஷ்யா வானியல் விஞ்ஞானி மிக்கேல் லொமொனொசாவ் [Mikhail Lomonosov] வெள்ளியில் வாயு மண்டலம் இருப்பதை முதன் முதலில் கண்டு பிடித்தார். அமெரிக்க வானியல் நிபுணர்கள் வில்லியம் ரைட், ஃபிராங்க் ராஸ் 1928 இல் புற ஊதா நிழற்படங்கள் [Ultraviolet Photographs] மூலம் சுக்கிரனில் இருக்கும் அடுக்கான மேக மூட்டத்தைத் தெளிவாகக் கண்டார்கள். 1932 இல் அமெரிக்காவின் வால்டர் ஆடம்ஸ், தியோடர் டன்ஹாம் இருவரும் சுக்கிர வாயு மண்டலத்தின் கீழ்ச்செந் நிறப்பட்டை [Infrared Spectrum] முடிவுகளை ஆராய்ந்ததில், முக்கியமாக கரியமில வாயு [Carbon dioxide] கலந்த சூழகம் [Atmosphere] சுற்றி இருப்பதை அறிந்தார்கள்.

வெள்ளியைச் சுற்றி அடர்த்தியான மேக மந்தைகள் சூழ்ந்துள்ளதால் பூகோளத்திலிருந்து தீவிரமான ஆராய்ச்சிகள் எதுவும் பூதத் தொலை நோக்கி [Giant Telescope] மூலம் செய்ய முடியாது. வெள்ளியின் கோளத்தைப் பற்றி அறிந்த விபரங்கள் பல, விண்வெளிக் கப்பல்களின் ஆய்வுச்சிமிழ்கள் மேக மூட்டத்தை ஊடுருவிச் சென்று, கதிரலைக் கும்பா [Radar] மூலம் கண்டு பிடித்துப் பூமிக்கு அனுப்பியவை!

வெள்ளியை நோக்கி ரஷ்யாவின் வெனரா விண்வெளிக் கப்பல்கள்

விண்வெளிப் படையெடுப்பில் சந்திரனில் கால்வைக்கப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போதே, பூமியின் அண்டைக் கோளங்களான சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகியவற்றின் மண்டலங்களை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் முற்பட்டார்கள். ரஷ்யா மனிதரற்றக் கோளாய்வு [Unmanned Planetary Probes] முயற்சியில் வெனரா-2, ஆய்வுச்சிமிழை, 1965 ஆண்டில் வெள்ளிக் கிரகத்திற்கு ஏவி, அதன் ஆய்வுச்சிமிழ் 1966 பிப்ரவரியில் 25,000 மைல் சுக்கிரனுக்கு அருகில் பறந்து சென்றது. அடுத்து வெனரா-3 வெள்ளியின் தளத்தில் தடுமாறி இறங்கி நொறுங்கி வீழ்ந்து, அடுத்த அண்ட கோளத்தைத் தொட்ட, உலகின் முதல் ஆய்வுச்சிமிழ் எனப் பெயர் பெற்றது!

வெள்ளிக் கிரகத்தைச் சுற்றித் தளத்தில் இறங்கிய ரஷ்யாவின் முதல் சில தளச்சிமிழ்கள், அபரிமிதமான வாயு அழுத்தத்தில் நொறுங்கிப் போயின. தளச்சிமிழ் ராக்கெட்கள் சில சூடான மேகத் திரட்சியின் ஊடே நுழைவதற்கு முன்பே, குளிரில் சில்லிட்டுப் போயின! அமில மேகம் ராக்கெட் மேல்தள உலோகங்களைத் தாக்கி உருக்கி விடாதவாறு, கவச உறைகள் அணியப் படவேண்டும். சுக்கிரனில் இறங்கிய ரஷ்யாவின் முதல் இரண்டு வெனரா தளச்சிமிழ்கள் முடமாகிப் போனதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்! பிறகு ரஷ்யா ஏவிய மிக உறுதியான தள ஆய்வுச்சிமிழ்களும், ஓரிரு மணி நேரங்கள்தான் பூமிக்குச் செய்தி அனுப்பின!

1967 ஆம் ஆண்டு ரஷ்யா அனுப்பிய வெனரா-4 ‘வெள்ளி ஆய்வுச்சிமிழ் ‘ [Venus Probe] வெற்றிகரமாக சுக்கிர தளத்தில் வந்திறங்கியது. சுக்கிர மண்டலத்தின் அழுத்தமும், வெக்கையும் [Atmospheric pressure, temperature] மிகுந்து இருந்த போதிலும், ஆய்வுச்சிமிழ் அவற்றில் சிதைந்து போகாமல் பிழைத்து, விஞ்ஞான விபரங்களைப் பூமிக்கு அனுப்பியது, மாபெரும் ரஷ்ய சாதனையே. மே மாதம் 1969 இல் ரஷ்யா விண்வெளிக் கப்பல்கள் ‘வெனராவைத் ‘ [Venera-5,6] தொடர்ந்து ஏவி, வெள்ளி மண்டலத்தை நெருங்கிப் பறந்து, அவற்றின் தள ஆய்வுச்சிமிழ்கள் [Lander Probes] தரையில் இறங்கின. வெனரா-7 [1970] சுக்கிர தளத்தில் முக்கியமாக யுரேனியம், தோரியம் போன்ற நீள்-ஆயுள் ஏகமூலங்கள் [Long-lived Isotopes] தோன்றி இருப்பதைக் கண்டு பிடித்தன. 1972 ஜூலை 22 ஆம் தேதி ரஷ்யா அனுப்பிய வெனரா-8 இன் தள ஆய்வுச்சிமிழ் வெள்ளியின் தரையில் இறங்கினாலும், கடும் வெப்ப, வாயு அழுத்தத்தில் பழுதாகிப் படம் அனுப்ப முடியாமல் போனது! ஆனால் மற்ற தகவல்களை எப்படியோ அனுப்பி விட்டது.

வெனரா-9,-10 [1975] முதன் முதல் வெள்ளிக் கோள் தளப் படங்களை நெருங்கி எடுத்து பூமிக்கு அனுப்பின. அவற்றில் சில பகுதிகளில் கூரிய பெரும் பாறைகளும், மற்ற பகுதிகளில் பொடித் தூசியும் தென்பட்டன. ரஷ்யா ஏவிய வெனரா-11,-12 [1978] சுக்கிரனின் கீழ்த்தள சூழகத்தில் [Lower Atmosphere] இருந்த ரசாயனக் கூட்டுறுப்புக்களின் [Chemical Components] பரிமாணங்களைக் [Measurements] கணித்தன. வெனரா-13,-14 [1981] சுக்கிரனில் அலுமினியம், மெக்னீஷியம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மாங்கனிஸ், டிடேனியம், சிலிகான் உலோகங்கள் இருப்பதைக் காமாக்கதிர் நிறப்பட்டை மானிகள் [Gamma Ray Spectrometers] எடுத்துக் காட்டின. வெனரா-15,-16 [1983] விண்வெளிக் கப்பல்கள் வெள்ளியை ஒட்டிச் சென்று, தள ஆய்வுச் சிமிழ்களை வெற்றிகரமாக இறக்கி விஞ்ஞான விளக்கங்களை பூமிக்கு அனுப்பின.

வெள்ளியை நோக்கி அமெரிக்காவின் விண்வெளிக் கப்பல்கள்

1960 மார்ச் 11 இல் முதன் முதல் அமெரிக்கா அனுப்பிய 95 பவுண்டு எடையுள்ள பயனீயர்-5 ஆய்வுச்சிமிழ் தவறு எதுவும் நிகழாது, சுக்கிரனை நெருங்கிப் பறந்து அண்டவெளியின் அகிலக் கதிர், காந்தத் தளவியல் திரட்சிகளைக் [Cosmic Ray, Magnetic-field Intensities] கணித்துப் பூமிக்கு அனுப்பியது. 1962 இல் முதல் அமெரிக்க ஏவிய விண்வெளிக் கப்பல் மாரினர்-2, அடுத்து ஏவிய மாரினர்-5 [1967] சுக்கிரனை ஒட்டிப் பயணம் செய்தன. பயனீயர்-6 [1965] சூரிய சுற்றுவீதியில் [Solar Orbit] ஏவப் பட்டுப் பூமிக்கும், சுக்கிரனுக்கும் இடைப்பட்ட விண்வெளிச் சூழ்நிலையை அறிய அனுப்பப் பட்டது. அமெரிக்கா பெருத்த செலவில் மாரினர் [Mariner-10], பயனீயர் [Pioneer-6,-12,-13], மாகெல்லன் [Magellan] ஆகிய நான்கு விண்வெளிக் கப்பல்களை 1973-1989 ஆண்டுகளில் வெள்ளிக் கிரகத்திற்கு அனுப்பியது.

1974 பிப்ரவரி 5 ஆம் தேதி அமெரிக்கா முதன் முதல் புதன் கோளைக் குறிவைத்து ஏவிய மாரினர்-10 பூமியிலிருந்து 94 நாட்கள் பயணம் செய்து, சுக்கிரனுக்கு 3600 மைல் அருகில் பறந்து 3000 படங்களை எடுத்து அனுப்பியது. பயனீயர் வீனஸ்-1, -2 [1978] [Pioneer Venus-1,-2] இரண்டும் தனித்தனியாக வீதிச்சிமிழ் [Orbiter] ஒன்றையும், சூழ்மண்டல ஆய்வுச்சிமிழ்கள் [Atmospheric Probes] ஐந்தையும் ஏந்திக் கொண்டுச் சுக்கிர தளவரைவுப் [Mapping Venus] பணிக்கும், மேக மூட்டத்தின் ஆராய்ச்சிக்கும் அனுப்பப் பட்டன. 250 மைல் உயரத்திலிருந்தே அடர்த்தியான மேகப் போர்வை சுக்கிரனைச் சூழ்ந்துள்ளதால், வீதிச்சிமிழ் [Orbiter] காமிரா தளத்தைப் படமெடுக்க முடியாது. ஒளிபுக முடியாத மேக மண்டலத்தை ஊடுருவித், தள ஆய்வு செய்து படமெடுக்கக் கதிரலைக் கும்பா [Radar] பயன்பட்டது.

1989 மே மாதம் 4 ஆம் தேதி, முதன் முதலாக அமெரிக்கா புதிய முறையில் விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] மீதிருந்து, அதிகச் செலவில் மாகெல்லன் [Magellan] ஆய்வுச்சிமிழை ஏவியது. அது 15 மாதங்கள் அண்ட வெளியில் பயணம் செய்து, சுக்கிரனை 1990 ஆகஸ்டு 10 ஆம் தேதி அண்டி பல படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

சுக்கிரனைப் பற்றி அறிந்த தளவியல் விளக்கங்கள்

பூமிக்கு நெருங்கி குன்றிய தூரம் 25 மில்லியன் மைல் இடையே உள்ளது, சுக்கிரன். அளவற்ற ஓளிவீச்சை உண்டாக்குவது, அடுக்கடுக்காய் அடர்த்தியான அதன் வெண்ணிற மேக மண்டலத்தின் மீது பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியே. பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சுக்கிரன் சிலசமயம், ‘விடிவெள்ளியாகக் ‘ [Phosphorus] காலையில் மூன்று மணி நேரமும், அந்தி வெள்ளி அல்லது ‘முடிவெள்ளியாக ‘ [Hesperus] மூன்று மணி நேரம் மாலையிலும் தென்படுகிறது. அதாவது, சூரியனுக்குக் கிழக்கில் 48 டிகிரி கோணத்தை மிஞ்சியும், மேற்கில் 48 டிகிரி கோணத்தை மிஞ்சியும், வெள்ளி பூலோக மாந்தருக்குத் தெரிவதில்லை!

பூமியின் சந்திரன் 27 நாட்களில் வடிவம் மாறி வருவது போல், சுக்கிரனுக்கும் வளர்பிறை, தேய்பிறை மாறி மாறி, ‘மீளும் காலம் ‘ [Synodic Period] 17 மாதங்களுக்கு ஒருமுறை வருகிறது. பூமியிலிருந்து தொலை நோக்கியில் பார்க்கும் போது, பிறைவெள்ளி [Crescent Phase] பெரியதாகவும், முழுமை குன்றிய குறைவெள்ளி [Gibbous Phase] சிறியதாகவும் தெரிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சுக்கிரன் நகரும் போது பிறை வடிவில் பெரிதாகவும், சூரியனுக்கும் பூமிக்கும் அப்பால் சுக்கிரன் நகரும் போது சிறிதாய் முழு வட்டமற்ற குறைவெள்ளியாகத் தென்படுகிறது. பூமி, சூரியன் நேர் கோட்டில், சுற்றி வரும் சுக்கிரன் இரண்டுக்கும் இடையே ‘குறுக்கீடு ‘ [Venus Transit] செய்வது ஓர் அரிய சம்பவம். இரட்டை எட்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து நிகழும் அந்த அரிய முக்கோள்களின் [பூமி, சுக்கிரன், சூரியன்] சந்திப்பு, மீண்டும் நிகழ ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆகலாம். அப்போது சுக்கிரன் ஒரு கரும் புள்ளியாய்க் காணப்பட, சுற்றிலும் சூரிய ஒளி பின்புறத்தில் சிதறி வட்டமாய்த் தெரிகிறது. சென்ற வெள்ளிக் குறுக்கீடு 1882 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அடுத்து வரப் போகும் சுக்கிரக் குறுக்கீடு 2004 ஜூன் 8 ஆம் தேதி என்று எதிர்பார்க்கப் படுகிறது!

சுக்கிரனின் தள அழுத்தம் 100 பூவழுத்தம் [Earth atmosphere] என்றும், தள உஷ்ணம் 462 டிகிரி C என்றும் வெனரா-6 இன் தளச்சிமிழ் முதலில் பூமிக்கு அனுப்பியது. [1 பூவழுத்தம்=14.7 psi. வெள்ளியின் தள அழுத்தம் 100×14.7= சுமார் 1500 psi]. வாயு மண்டலத்தைச் சோதித்ததில் கரியின் ஆக்ஸைடு [Carbon dioxide] 97%, நைட்ரஜன் 2%, மற்ற முடவாயுக்கள் [Inert Gases] 1%, பிராண வாயு 0.4%, ஆவிநீர் [Water Vapour] 0.4%. சுக்கிர மண்டலத்தில் நிலப்பகுதியைத் தவிர வேறு நீர்ப்பகுதி எதுவும் கிடையாது. உயிரினங்கள் வாழும் பூமியில் முக்கியமாக இருப்பவை, நைட்ரஜன் 78%, பிராண வாயு 21% ஆவிநீர் 2%. நீர்க்கடல் மூன்றில் இரண்டு பகுதி; நிலப்பாகம் மூன்றில் ஒரு பகுதி. ஆகவே சுக்கிர மண்டலத்தில் உயிரினம் எதுவும் உண்டாகவோ அல்லது வளரவோ எந்த வசதியும் இல்லை!

சுக்கிர தளத்தில் 65% தாழ்ந்த மடக்குச் சம வெளிகள். 25% பீடப் பிரதேசங்கள் [Highlands]. குறிப்பாக இரண்டு மாபெரும் பீடங்கள், ஒன்று வெள்ளியின் மத்திம ரேகைக்கு [Equtor] அருகில், அஃப்ரோடைட் [Aphrodite], அடுத்து வடக்கே இஸ்டார் [Ishtar] தள ஆய்வுப் படங்களில் காணப் பட்டன. அடுத்துள்ள மாக்ஸ்வெல் மலைத்தொடரின் [Maxwell Mountains] சிகரம், இமய மலையின் எவரெஸ்ட் உச்சியை விட உயர்ந்ததாக இருக்கிறது. மற்றும் 3000 அடி ஆழம் கொண்ட பாதாள வட்டக்குழிகள் [Craters], 1400 மைல் நீளம், 175 மைல் அகண்ட பள்ளத்தாக்கு, சதா தீப்பிழம்பைக் கக்கிக் கொண்டிருக்கும் இரண்டு மாபெரும் எரிமலைகள் சுக்கிரனில் காணப் பட்டன! அத்துடன் கண்களைக் குருடாக்கும் தொடர் மின்னலும், காதுகளைச் செவிடாக்கும் பேரிடியும் அடிக்கடி வெள்ளி மண்டலத்தில் காணும் வான வேடிக்கைகள்!

சுக்கிரன் பூமியின் இரட்டைச் சகோதரி [Twin Sister] எனக் கருதப் படுகிறது. பூமியின் விட்டம் 7900 மைல் என்றால் சுக்கிர கோளத்தின் விட்டம் 7500 மைல். பூமியின் பளு 1 என்று வைத்துக் கொண்டால், சுக்கிரனின் பளு 0.814. அதாவது பூமியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பண்டம், சுக்கிரனில் குறைந்து 88 பவுண்டு ஆக விருக்கும். புவி ஈர்ப்பு 1 என வைத்துக் கொண்டால், சுக்கிரனின் ஈர்ப்பு 0.91. பூமியின் திணிவு [Density] 5.5 gm/cc, சுக்கிரனின் திணிவு 5.2 gm/cc. சுக்கிரன் ஏறக் குறைய முழு வட்ட வீதியில் [Circular Orbit] சூரியனைச் சுற்றி வருகிறது. வினாடிக்கு 18 மைல் வேகத்தில் சுற்றும் பூமியை விட சற்று கூடுதலாக வினாடிக்கு 21 மைல் வேகத்தில் சூரியனச் சுற்றுகிறது. சுக்கிர மண்டலத்தில் காந்த தளம், பூமியில் உள்ளது போல் இல்லை.

சுக்கிரன் சூரியனை ஒரு முறைச் சுற்றி வரும் காலம் 225 நாட்கள். பூமி சூரியனச் சுற்றி வரும் காலம் 365 நாட்கள். தன்னைத் தானே பூமி 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதைப் போல் வேகமாய்ச் சுற்றாது, மெதுவாகச் சுக்கிரன் தன்னைச் சுற்றிக் கொள்ள 243 நாட்கள் ஆகின்றன. சுக்கிரனின் சுய சுழற்சியும் [Spin], அதன் சுழல்வீதிக் காலமும் [Orbital Periods] பூமியின் சுழல்வீதியுடன் சீரிணைப்பில் இயங்கி [Synchronized] பூமிக்கு அருகில் நகரும் போது சுக்கிரன் எப்போதும் ஒரே முகத்தைக் காட்டி வருகிறது.

வெக்கையின் சிகரமான சுக்கிரன் ஓர் கொதி உலைக் கோளம்!

சூரிய மண்டலக் கிரகங்களில், சுக்கிரன்தான் மிக்கச் சூடான கோளம்! சுக்கிரனின் மேக மண்டலம் 250 மைல் உயரத்திலிருந்தே ஆரம்பித்துக் கீழே 20 மைல் உயரம் வரைத் தொடர்கிறது. அடுக்கடுக்காய் மிக்க அடர்த்தியாகச் சூழ்ந்துள்ள அந்த மேகத் திரட்சியை ஊடுருவிச் சூரிய ஒளி நுழைய முடியாது, தரையிலிருந்து மேல் நோக்கினால், சூரியன் தென்படாது, வெறும் மந்தார வெளிச்சம் மட்டும் தெரியும். சூரிய வெப்பம் மேகப் பந்தலைச் சூடேற்றி, சுக்கிர மண்டலம் மூடப் பட்ட வீடுபோல் [Green House Effect], மீறிய உஷ்ணத்தில் பூமியைப் போல் 300,000 மடங்கு கொதிப்படைகிறது. அந்தக் கொதிநிலை உஷ்ணத்தில் சுக்கிரனின் மேல்தளம், உருகி இறுகிப் போன எரிபாறையாய் காணப் படுகிறது. சுக்கிர தளத்திலிருந்து சூரியனை எப்போதும் கண்டு கொள்ள முடியாது. அங்கே மழை பெய்வதே இல்லை. மேகத் திரட்சியில் தென்படும் ஈரத் துளிகள் நீர்த் துளிகள் அல்ல. அத்துளிகள் யாவும் கொல்லும் தீவிரக் கந்தகாமிலம் [Deadly Sulphuric acid]. நமது கண்களுக்குத் தெரிகின்ற, மின்னும் மேக மூட்டத்தில் கந்தகாமிலத் துளிகள்தான் மிகவும் கலந்துள்ளன! எப்போதும் பூத எரிமலைகள் பல இயங்கித் தீக்குழம்பு ஆறாக ஓடுவதை மாகெல்லன் விண்வெளிக் கப்பல் எடுத்த படங்கள் காட்டுகின்றன. எரிமலைக் குழம்பில் எழும் கந்தக ஆக்ஸைடு [Sulfur dioxide] தான் அதிக அளவு வாயு மண்டலத்தில் கலந்திருக்கிறது.

வெள்ளியின் வானம் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருக்க, தரையில் தீப்பிடிக்கும் தணல் அலைகள் தவழ்கின்றன! கீழ்த்தள மட்டத்தில் மெதுவான [2-11 mph] வேகத்தில் அடிக்கிறது, காற்று. ஆனால் மேலே மேக மண்டலத்தில் அடிக்கும் காற்று, சூறாவளிப் பேய்க் காற்றாக 225 mph வேகத்தில் வீசுகிறது! அந்தச் சூழ்நிலைகளில் இறங்கும் எந்த தள ஆய்வுச் சிமிழும் நீண்ட காலம் நீடித்து சுக்கிரனில் பணி புரிய முடியாது!

மின்னுவ தெல்லாம் பொன்னல்ல!

சுடரொளிச் சுக்கிரன், உயிரினம் எதுவும் தாங்க முடியாத தணலும், நடமிட இயலாத வாயு அழுத்தமும், சுவாசித்தால் மரணம் உண்டாக்கும் விஷக் காற்றும் மண்டிய நரக லோகமாய், இயற்கையில் அமைந்து விட்டது! காதல் தேவதை [Goddess of Love] யாகவும், எழில் அணங்காகவும் [Goddess of Beauty] புராண காவிய இதிகாசங்களில் போற்றிப் புகழப்படும் வீனஸ் [Venus] சுக்கிரனை யாரும் காதலிக்க முடியுமா ?

**************************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா