சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -3

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

சீதாலட்சுமி


படைப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் திறன் வேண்டும். எனக்குப் படிக்கும் ஆர்வம் வளர்ந்ததுவும் ஒரு கதையே
பாரதி இல்லத்தில் பிறந்தது ஆர்வம்
சிறுமியாய்  இருக்கும் பொழுது மாலை நேரங்களில் எங்கள் தெருவில் இருக்கும் சாம்பு மாமாவிடம் போய் உட்கார்ந்து கொள்வேன். அவர் பாரதி பாடல்களை எனக்குப் பாடக் கற்றுத் தருவார். அதுவும் பாரதி எப்படி பாடினாரோ அதே ராகங்களில், அதே பாணியில் சொல்லித் தருவார். பாட்டின் அர்த்தங்களையும் விளக்குவார். அப்பொழுது சுதந்திரம் பெறாத காலம். எனவே எங்கள் பாட்டுக்களில் வேகம் அதிகம் இருக்கும்.
கையில் ஒரு  நோட்டுப் புத்தகம் எடுத்துச்  செல்வேன். அவர் சொல்லும் பாட்டுக்களை  எழுதிக் கொள்வேன். அவர் முழுப் பெயர்  திரு. சாம்பசிவ அய்யர். பாரதியின் தாய்மாமன். படிக்கும்  ஆர்வத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டவர் அந்த மாமா தான். ஆர்வம் பிறந்த இடம் பாரதி பிறந்த இல்லம். 
கல்கியின் சந்திப்பு ஆசைக்கு வித்திட்டது
பாரதிக்கு நினைவு மண்டபம் கட்டும் விஷயமாக எட்டயபுரத்திற்கு ராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும் வந்திருந்தனர். அரண்மனை விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தனர். என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் மும்முறை சிறைக்குச் சென்றவர். எனவே எட்டயபுரத்திற்கு வரும் தலைவர்கள் அரண்மனையில் தங்கினால் போய்ப் பார்ப்பார். மேலும் எங்கள் ஊர் ராஜா, வரும் விருந்தினர்களைக் கவனிக்கச் சிலருக்குப் பொறுப்பு கொடுத்து வைத்திருந்தார். அவர்களில் அப்பாவும் ஒருவர். அவர் போகும் இடங்களுக்கு என்னையும் கூட்டிச் சென்று அவர்களை நமஸ்காரம் செய்யச் சொல்லுவார். அன்றும் வழக்கம் போல் ராஜாஜி அவர்களையும் கல்கி அவர்களையும் நமஸ்காரம் செய்தேன். திரும்பி வரும் பொழுது இருவரைப் பற்றியும் அப்பா நிறைய பேசினார். அந்த வயதில் மனத்தில் பதிந்தது கல்கி கதை எழுதுகின்றவர் என்பதுதான். அதன் பின்னர் அப்பா வாங்கிப் போடும் விகடன், கல்கியைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த வயதிலேயே கல்கியின் வரலாற்றுக் கதைகளை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன் 
 
கற்பனைத் தேரில் ஏற்றி விட்டவன் பாரதி
பாரதி திருமணமான பிறகு எட்டயபுரம் வந்த பொழுதுதான் பிறந்த இல்லத்திற் கருகில் உள்ள வீட்டில் கொஞ்ச காலம் குடியிருந்தார். அதே வீட்டில் நாங்களும் குடியிருந்தோம். என்னைக் கற்பனையில் மிதக்கப் பழக்கிய வீடு. அவன் தொட்ட இடமெல்லாம் நான் தொட்டு மகிழ்ந்தேன்
மாடியென்ற ஓர்  சின்ன அறை. கற்பனையில் பாரதியுடன் அரட்டை.. கொல்லைப் புறமும் சின்னதுதான். அதனால்தான் காணி நிலம்  வேண்டினானோ? அவன் நினைவுகள் என்னைத் தாலாட்டின.
ஏழு வயதில்  எனக்குக் கிடைத்த விளையாட்டுத் தோழன் பாரதி 
இலக்கியமும் வரலாறும் என்னைப் பிடித்துக் கொண்டன
நான் படித்த பள்ளியும் பாரதி படித்த பள்ளி. எங்கள் ஆசிரியர்களும் பாரதியைப் பற்றி அதிகமாகப் பேசுவார்கள். அந்தக் காலத்துச் சூழ்நிலையில் இருந்த சுதந்திர தாகம் அப்படி பேச வைத்தது.
துரைராஜ்  என்று ஓர் ஆசிரியர். என்  அப்பாவுக்குச் செல்லப் பிள்ளையானார். காரணம் அவர் நிறைய புத்தகங்கள் படிப்பார்.
என் தந்தை எனக்கு வரலாற்றுப் புத்தகங்கள் கொடுத்தால் என் ஆசிரியர் இலக்கியப் புத்தகங்கள் கொடுத்தார். 
புதுமைப்பித்தனிடம் அழைத்துச் சென்றவர் சிதம்பர  ரகுநாதன்
முத்து  என்று இன்னொரு ஆசிரியர்  வந்தார். திரு. பாஸ்கரத் தொண்டைமான், மற்றும் தொ. மு. சி. ரகுநாதன் ஆகிய இருவரும் இவருக்குத் தாய்மாமன்களாவார். வாத்தியார் துரைராஜின் தங்கையை  முத்து மணந்தார். அதனால் நெல்லைக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. பெரியவரை ஒரு முறை பார்த்திருக்கின்றேன். ஆனால் ரகுநாதன் அவர்களைப் பல முறைப் பார்க்க முடிந்தது. பழகவும் முடிந்தது. அவருடைய எழுத்துவன்மை அப்பொழுது எனக்குத் தெரியாது. நான் ஒரு பள்ளி மாணவி.  
பாரதியைப் பற்றி  நிறைய கேள்விகள் கேட்பார். கல்கி கதை படிப்பதைச் சொன்னேன் அப்பொழுது அவர் எனக்குச் சில பத்திரிகைகள், புத்தகங்களைக்  கொடுத்து நான் படிக்க வேண்டும் என்று சொன்னார்.
வாழ்க்கையில்  அறிந்து கொள்ள வேண்டியன இருக்கும் புத்தகங்கள் என்றார். அத்தனையும் புதுமைபித்தன் எழுதியவைகள். எட்டயபுரம் சென்று அவைகளைப் படித்தேன். ஆனாலும் அப்பொழுது எனக்கு கதைபடிக்கப் பிடித்தது. புத்தகங்களைப் பத்திரமாக வைத்திருந்தேன். 
ஜெயகாந்தன்  வருகை
படித்து முடித்து களப் பணிக்குச் சென்றவுடன் திடீரென்று பெரிய மனுஷியாகி விட்டதைப் போன்று உணர்ந்தேன். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பணி. சமுதாயத்துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். புதுமைப் பித்தனை மீண்டும் படிக்க ஆரம்பிக்கவும். ஜெயகாந்தனின் எழுத்துக்களும் உடன் புகுந்தன. ஏனோ அவர்கள் இருவரும் எனக்கு உறவுகளாய் உணர்ந்தேன். அப்பொழுது ஒருவர் உயிருடன் இல்லை. இன்னொருவரின் முகம் பார்த்த தில்லை
நான் செல்லும் மூலை முடுக்குகளுக்குக்கூட என் சிந்தனையுடன் அவர்கள் எழுத்துக்களும் தொடர்ந்தன 
வியப்பளித்த தி.ஜ ரா
நான் வேலைக்குப் போன இடத்தில் சோம மகாதேவன் என்ற ஓரு எழுத்தாளரும் பணியாற்றிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியவர். எல்லாம் கிராமீயக் கதைகள். அவருக்கு நாடக உலகத்திலும் பயிற்சி உண்டு. அக்காலத்தில் இத்தகைய திறனுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைகள் தரப்பட்டன.. அவர் என் படிக்கும் ஆர்வம் பார்த்து இன்னொரு பெயரைக் கூறிப் படிக்கச் சொன்னார். தி.ஜானகிராமன் அவர்களின் எழுத்தைப் படிக்க ஆரம்பித்தது அப்பொழுதுதான். அவர் எழுத்து எனக்கு பிரமிப்பைக் கொடுத்தது. இவர்கள் எல்லாம் மனிதர்களுக்குள் புகுந்து, உணர்ந்து பார்த்து வந்து எழுதுகின்றார்களோ என்ற வியப்பு. இவர்களால் எனக்குள் ஓர் ஆசை உதித்தது. நானும் ஒரு நாள் மனித மனங்களைபற்றி எழுத வேண்டும் என்பதே  
நானும் எழுத்தாளர் குடும்பத்தில் ஒருத்தியானது
இன்னொரு எழுத்தாளரும் அங்கு வேலை பார்க்க வந்து சேர்ந்தார். அவர் பெயர் ருத்ர.துளசிதாஸ். இன்று 47 புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். அவர் என்னை எழுதத் தூண்டியது மட்டுமன்றி என்னை எழுத வைத்து, என் கதையைப் பத்திரிகைக்கும் அனுப்பினார். மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. இன்னொரு எழுத்தாளரையும் கண்டு பிடித்தார்.
ஓ.எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரிலும் அருள் சுடர் என்ற பெயரிலும் பல கதைகள் வெளி வந்திருக்கின்றன. விகடனில்  என்னுடைய ஒரு கதை  முத்திரை பெற்றதென்றால் அவருடைய பல கதைகளுக்கு முத்திரை கிடைத்தன. அவர் மகள் பெயருக்கு பூரணி என்று பெயர் வைத்தார். அப்பொழுது எங்கள் நண்பர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர் வெளிவந்து கொண்டிருந்தது.. நாங்கள் தேனாறு என்ற கையெழுத்துப் பத்திரிகையும் நடத்திவந்தோம். நாங்களும் மதுரையில் இருக்கும் நா.பார்த்தசாரதி உட்பட சில எழுத்தாளர்களும் சேர்ந்து ஒரு சிறுகதைப் புத்தகம் வெளியிட்டோம். 
நட்புக்கு இலக்கணமாய் வந்தார்கள் மணியனும் சாவியும்
வளர்ச்சிப் பணிகளைப் பார்க்க விகடன் ஒரு பத்திரிகையாளரை அனுப்பி யிருந்தது. அவர்தான் மணியன். அவரைக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது.. அன்று ஆரம்பித்த நட்பு அவர் சாகும் வரை நீடித்தது. என் குடும்பத்தில் ஓர் அங்கமானார்.. மணியன் விகடனில் வேலை பார்க்கும் பொழுது அவருக்கு மிகவும் பிடித்தமானவர் ஜெயகாந்தன். இருவரும் கடற்கரைக்குச் சென்று உட்கார்ந்து பேசுவார்கள் என்று மணியன் கூறியிருக்கின்றார். விகடன் அலுவலகம் சென்ற பொழுது சாவியும் அறிமுகம் ஆனார். அவர் நட்புக்குரிய  நல்ல மனிதர். அவரும் எனக்கு நெருங்கிய நண்பரானார். சாவியும்  மணியனும் இரு வேறு திசைகளில்  திரும்பிய பொழுதும் என்னுடன் கொண்ட நட்பை மட்டும் மாற்றவில்லை.  
இந்தத் தொடரின் நாயகன் ஜெயகாந்தனை மட்டும் பார்க்க பல வருடங்களாயின. 1970ல் தான் பார்க்க முடிந்தது. ஆனால் அவர் படைப்புகள் 60க்கு முன்னால் என்னிடம் வந்துவிட்டன. புத்தகங்களும் அவைகளின் படைப்பாளிகளும் எனக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை.  பிரபலமான எழுத்தாளர் ஒருவரை ஓர் மூதாட்டி தன் நண்பர் என்று கூறுவதை நம்புவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இப்பொழுது கதை சொல்லி விட்டதால் நம்பிக்கை பிறந்திருக்கும். என் வாழ்க்கைப் பயணத்தில் சக பயணிகள் பலர் பத்திரிகை உலகைச் சேர்ந்தவர்கள்.அவர்களில் முதன்மை யானவர்கள் மூவர். ஜெயகாந்தன், மணியன், சாவியுமாவார்கள். 
ஜெயகாந்தனின்  சில கதைகள் உருவானதைப் பற்றிப்  நாங்கள் பேசி யிருக்கின்றோம். பொதுவாக அவர் கதைகளைவிட என் அனுபவங்களைப் பற்றி அதிகம் பேசினோம். அரசியலும் பேசுவதுண்டு. என் அனுபவங்கள் ஒன்றுக்கு அவர் கூறிய கருத்துக்களைப் பார்க்கலாம் 
மோகமுள்ளின் அவதாரங்கள்
தி.ஜ.ராவின் கதைகள் எனக்குள் தங்கி என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. மோக முள்ளில் பாலுவின் மன நிலையை யதார்த்தமாகக் கொண்டு சென்றிருந்தார். அப்படியும் இருக்க முடியுமா என்று எனக்குள் தவித்த கேள்விக்கு வேறு ரூபத்தில் ஒருவரைப் பார்க்க நேரிட்டது.
அவர் பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்னர் நாற்பது வயதான பெண்மணி ஒருத்தி புதிய விளையாட்டை அவருக்கு அறிமுகப் படுத்தினாள். அவருக்கு அது பிடித்திருந்தது. அந்த விளையாட்டிற்கு யார் கூப்பிட்டாலும் மகிழ்வுடன் பங்கு கொண்டார். நாட்கள் செல்லச் செல்ல வட்டம் குறுகியது. அந்த வட்டமும் புள்ளி வடிவாகி, அவரைத் தேடி வருகின்றவர்களை விடுத்து அவர் விரும்புகின்றவர்களுடன் விளையாட்டைத் தொடர்ந்தார். அந்த பட்டியலும் குறுகி, சிறுத்து மறைந்தும் போனது. ஜே .கே யுடன்  இந்த மன நிலைபற்றிப் பேச்சு வந்தது. “தவறு என்று திருந்திவிட்டானோ ?” என்று கேட்டேன். அவர்  பதில் முதலில் வியப்பைக் கொடுத்தாலும் அதன் யதார்த்தம் பின்னர்  புரிந்தது.  “எப்பொழுதும் சரி, தப்பு என்று  நினைத்திருக்க மாட்டான். யதார்த்தமாகக்  கிடைப்பதை அனுபவித்து வந்திருக்கின்றான். காலம் மாற மாற ரசனைகளும் ஈர்ப்புகளும் மாறுவது இயற்கை. அதற்கேற்ப அவன் செயல்களும் மாறி வந்திருக்கின்றன.” 
இது எல்லோருக்கும்  பொருந்துமா? 
அப்படிச் சொல்ல முடியாது. சிலர்  வாழும் சூழலில் தங்களுக்கென்று ஒழுக்க விதிகளை வகுத்துக் கொண்டு இது சரி, இது தவறு என்று தங்களை மாற்றிக் கொள்பவர்களும் உண்டு. .  
இப்படியும்  ஓர் மனிதன்
இப்படிப்  பேசிக்கொண்டு வரும் பொழுதே எனக்கு ஒருவனின் நினைவு வந்தது. அவன் பெயர் பெரிய கருப்பன். மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவன். ஓர் செல்வந்தரின் அடியாள். எஜமான் காட்டுகின்ற ஆளின் கையை, காலை வெட்டி ஜெயிலுக்குப் போகின்றவன். அவன் சிறைக்குப் போயிருக்கும் காலத்தில் அவன் தாய்க்கு ஜீவனத்திற்குப் பணம் கொடுத்து விடுவார். எனவே கருப்பனுக்கு அது ஓர் வேலை. பாவ புண்ணியம் பற்றி அவனுக்குத் தெரியாது. அவனைப் பெற்றவளும் மகனின் வேலையாகத்தான் நினைத்தாள். சிறையிலிருந்து வரும் பொழுது முதலில் என் வீட்டிற்குத் தான் வருவான். அவனுக்கு நான், அவன் அன்பான அக்கா. அவன் செய்வது  தவறு என்று நான் தான் சொல்லிக் கொண்டு வந்தேன் பழகிப் போச்சு  அக்கா. பாவ  புண்ணியம்லாம் நேக்குத் தெரியாது. எஜமான் சொல்றதைச் செய்வேன்.  
அவன் ஒரு  அம்பு. அவ்வளவுதான் இத்தகைய அடியாட்களைக் கொத்தடிமை  என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. மனிதர்கள் இப்படியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.. அதுதான் உண்மை 
அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போக விட்டு அவனுடன் தொடர்பில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து அவன் என்னைத் தேடி கோயமுத்தூருக்கு வந்தான். அப்பொழுது நான் கர்ப்பிணி. அவனைப் பார்க்கவும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது 
எப்படி கண்டு  பிடிச்சு வந்தே? எங்கே இருக்கே? கல்யாணம் ஆச்சா? 
நீங்க எங்கே  போனாலும் உங்களைப் பத்தி  நான் விசாரிச்சுக்கிட்டு வந்தேன். நீங்க போனப்புறம் நீங்க சொன்னது என்னை உறுத்திக்கிட்டே இருந்தது. இதே ஊரில் இருந்தா எங்க எஜமான் சொல்றதைக் கேட்டுத்தான் ஆகணும். நான் ஊரை விட்டே போய்ட்டேன். நான் இருக்கற லட்சணத்துக்கு கல்யாணம் எதுக்கு ? அக்கா, இப்போ கூலி வேலை செய்து பிழைக்கறேன். நீங்க புள்ளே உண்டாயிருக்கர விஷயம் கேள்விப்பட்டேன். பழனி கோயிலுக்குப் போய் நம்ம முருகன் சாமியை உங்களுக்காக வேண்டிக்கிட்டு பிரசாதம் கொண்டாந்திருக்கேன். இந்தாங்க. 
அவன் பேச்சு என்னை நெகிழ வைத்தது. அவன் கைகளில் பிரசாதம்.
அந்தக் கைகளில் முகம் புதைத்து அழுதேன். குழந்தை மனமும் பாசமும் என்னை உருக்கி விட்டது. அந்தக் கைகள் பலரை வெட்டிய கைகள். ஆனால் எனக்கு? என் மீது பாசம் கொண்ட ஒரு குழந்தையின் கைகளா ? அல்லது  பரிவு காட்டும் தாயின் கரங்களா ? அந்தக் கைகள் உணர்த்திய அன்பு  என்னை  மெய் சிலிர்க்க வைத்தது. 
சில நேரங்களில் சில மனிதர்கள்
இது கதையல்ல
இதுதான் நிஜம் 
தொடரும் 

Series Navigation

சீதாலட்சுமி

சீதாலட்சுமி