சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

மலர் மன்னன்


திண்ணையில் வெகுஜனப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாஸந்தி வகுஜனத் திரைப்பட நடிகை ஸ்ரீதேவியைப் பற்றி எழுதுகையில் ஸ்ரீதேவியைக் காட்டிலும் அதிகமாக மும்பை அரசியல் பற்றியும் பால் தாக்கரே தொடங்கிய சிவ சேனை குறித்தும் சில விமர்சனங்கள் வைத்திருப்பதைப் படிக்க நேர்ந்தது.

வாஸந்தி வெகுஜனப் பத்திரிகைகளின் சுவாரஸ்யத்திற்கு ஏற்ப ஸ்ரீதேவியைப் பற்றியும் ஹிந்தி திரைப் படத் தொழிலில் மும்பை தாதாக்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியது பற்றியும் எழுதுவதோடு விட்டிருந்தால் இதை எழுத வேண்டிய தூண்டுதல் எனக்கு நேர்ந்திருக்காது. இதற்காக வாஸந்திக்கு என் நன்றி.

நான் சிவ சேனையின் ஆதரவாளன் அல்ல. அதன் அமைப்பு முறையிலும், அது செயல் படும் விதங்களிலும் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் தமிழ் நாõட்டிலும் பொதுவாகத் தமிழர்கள் மத்தியிலும் சிவ சேனை பற்றி உருவாகியுள்ள பிம்பம் எந்த அளவுக்குச் சரி என்பதைச் சுட்டிக் காட்டுவது அவசியம் எனக் கருதுகிறேன். வெறும் கேள்வி ஞானத்தை வைத்துக் கொண்டும், பத்திரிகைகளைப் படித்துவிட்டும், மும்பையில் வேலை பார்த்த சில வெள்ளைக் காலர் தமிழர்களின் ஒருதலைப் பட்சமான கருத்துகளைக் கேட்டும் சிவ சேனை பற்றிப் பேச நான் முற்படவில்லை என்பதைச் சொல்வதும் இங்கு அவசியம். சிவ ஸேனை தொடங்கப் பட்ட கால கட்டத்தில் அதன் நிறுவனர் என்பதைவிட, ஃப்ரீபிரஸ் ஜர்னல் கார்ட்டூனிஸ்ட் என்ற முறையில் அதிகம் அறியப்பட்ட பால் தாக்கரேயைச் சந்தித்த பத்திரிகையாளரில் நானும் ஒருவன்.

ஹிந்துஸ்தானத்தின் பல்வேறு மாநிலங்களிலும் வசித்ததோடு, வாஸந்தியைப் போல மேல் தட்டுப் பெரிய மனிதர்கள், உயர் அதிகார வர்க்கத்தினர் மத்தியில் அல்லாமல் மிகச் சாதாரண மானவர்களிடையே மிகமிகச் சாதாரண நிலையில் வாழ்ந்த அனுபவமும் இருப்பதால் இது பற்றிப் பேச எனக்கு அருகதை இருப்பதாக நினைக்கிறேன்.

முதலில் தமிழர்கள், குறிப்பாக உட லுழைப்பு, சிறு வியாபாரம் போன்ற வழிகளில் வாழ்க்கைப் பாட்டை நடத்தும் தமிழர்கள் தமிழகத்தைவிட்டு எந்த வெளி மாநிலத்திற்குச் சென்றாலும் அங்கு கால் ஊன்றிக் கொண்டவுடன் தங்கள் மாநில அரசியல், வெகு ஜன அபிமான திரை நட்சத்திரங்களை முன்னிறுத்தி இயங்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆசியாவிலேயே பெரிய சேரி எனப் பெயர் எடுத்த மும்பை தாராவியை இந்த விஷயத்தில் ஓர் எடுத்துக் காட்டாகவே கொள்ள வேண்டும். அங்கு வசித்த மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தாம். தி மு க, அண்ணா திமுக, தி க என்று தமிழ் நாட்டின் சகல மாநிலக் கட்சிகளின் கொடிகளும் அங்கு பறந்திடக் கண்டிருக்கிறேன். உங்கள் ஊர் அக்கப் போர்களையெல்லாம் இங்கே எதற்காகக் கொண்டு வருகிகிறீர்கள் என்று மும்பையிலும் பெங்களூரிலும் எரிச்சலுடன் என்னிடம் கேட்டவர்கள் பலர். பெங்களூர் காந்தி நகர் சட்டமன்றத் தொகுதியில் தி முக வும் அண்ணா திமுக வும் வெற்றி பெற முடிகிறது; அம்மாதிரி சென்னையில் எந்தத் தொகுதியிலாவது கன்னட சலுவலி ஜயிப்பது சாத்தியமா எனக் கேட்பவர் உண்டு. அதற்குச் சரியான சமாதானம் சொன்னாலும் உங்கள் தமிழ் நாட்டில் தெலுங்கரும் கன்னடியரும் ராஜஸ்தானியரும் தமிழர்களாக உருமாறித்தானே மாநில சட்ட சபையிலும் நகராட்சி மன்ற அவைகளிலும் நுழைய முடிகிறது என பதிலடி கொடுப்பார்கள்.

குறிப்பாக மும்பை மாநகரம் மஹாராஷ்டிர மாநிலத்தின் தலை நகரம் என்ற போதிலும் அங்கு மராட்டிய அடையாளங்களைவிடப் பிற மாநிலக் கலாசாரங்களின் பிரதிபலிப்புதான் அதிகம். இதற்கும் நியாயமான சமாதனங்களைச் சொல்ல முடியும் என்றாலும் அவற்றால் மராட்டிய மக்களைத் திருப்தி செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்த
மாநிலத் தலை நகரிலாவது இம்மாதிரியான நிலைமை இருக்கிறதா என்று அவர்கள் சிறிது கோபத்துடன் கேட்கும் போது அவர்களைச் சமாதானப் படுத்துவது எளிதல்ல.

கல்கத்தாவில் பிஹாரிகள், தெலுங்கர்கள் அதிகம் எனினும் அவர்கள் அனைவரும் உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள்தாம். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் கணிசமாக இருப்பினும் வியாபார நிர்ப்பந்தம் காரணமாக வங்காள மொழியில் சரளமாகப் பேசுவதுதான் அவர்களின் வழக்கம். இங்கு குடியேறிய தமிழர்கள் பெரும்பாலும் அலுவலகங்களில் வேலை வாய்ப்புப் பெற்று வந்தவர்கள். தென் கல்கத்தாவில் குவிந்து தாம் உண்டு, தமது வேலை உண்டு, பொழுதுபோக்கிற்குத் தமிழ்ச் சங்கமும் ஞாயிறு காலைக் காட்சிக்கு சிவாஜி கணேசன் நடித்ததோ, கே பாலசந்தர் இயக்க்கியதோவான உரத்துச் சத்தமிடும் தமிழ்ப் படங்களும், ராஷ் பிஹாரி அவென்யுவில் இருக்கிற கோமள விலாஸ் பாலக்காட்டு பிராமணர் ஹோட்டலில் மாசால் தோசையும் இருக்கவே இருக்கிறது என வாழ்ந்தவர்கள். நான் சொல்வதெல்லாம் மும்பையில் சிவசேனை தோன்ற நேர்ந்த கால கட்டம் என்பதை நினைவில் வைக்கவேண்டும். ஆக, அந்தக் கால கட்டத்து மேற்கு வங்கத் தலைநகரான கல்கத்தாவுக்குத் தனது வங்காளச் சாயலை இழக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

கல்கத்தாவின் கோமள விலாஸ் ஹோட்டல் பற்றிச் சொல்கிறபோது ஒரு வேடிக்கையான சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் தமிழ் நாட்டுக்காரன்தான் என்ற போதிலும் எந்த மாநிலத்தில் வசிக்க நேரிட்டாலும் அந்த மாநிலத்து மக்களுடன் இரண்டறக் கலந்துவிட விரும்பி, அவர்கள் வசிக்கும் பகுதியில்தான் இடம் பிடிப்பேன். உணவகங்களைத் தேர்வு செய்வதும் அவ்வாறே. கோமள விலாசைத் தேடிப் போகிற வழக்கம் எனக்கு இருந்ததில்லை. ஆனால் சீக்கியர்களும் வங்காளிகளும் அந்த ஹோட்டலை மொய்ப்பார்கள். எல்லாம் இட்லி வடை சாம்பாருக்காகத்தான்! இட்லி வடையைவிட சாம்பாருக்காக என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் கோமள விலாசுக்குப் போவதே சாம்பாரைக் குடிப்பதற்காகத்தான்! ஆமாம், இரண்டு இட்லி ஒரு வடை வாங்கிக் கொண்டு மேலும் மேலும் சாம்பார் வாங்கிக் கிண்ணம் கிண்ணமாகக் குடித்துக் கொண்டிருப்பார்கள்!

சீக்கியரும் வங்காளியரும் இரண்டு இட்லி மட்டும் வாங்கிகொண்டு சாம்பாரை வாளி வாளியாகக் குடிப்பதால் கோமள விலாஸ் ஐயர் கட்டுப்படியாகாமல் திணறினார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு இனியும் தாங்காது என்றானதும், இரண்டு இட்லி ஒரு வடைக்கு ஒரேயொரு தடவை மட்டுமே சாம்பார் பரிமாறப்படும் என்று எழுதிப் போட்டார் (ண்ச்ட்ஞச்ணூ தீடிடூடூ ஞஞு ண்தணீணீடூடிஞுஞீ ணிணடூதூ ணிணஞிஞு ஞூணிணூ ணிணஞு ணீடூச்tஞு ணிஞூ டிஞீடூடி திச்ஞீச்).

அன்று சாயந்திரம் வழக்கம்போல ஒரு ப்ளேட் இட்லி வடை வாங்கிக் கொண்டு கிண்ணம் கிண்ணமாக சாமபாரை உறிஞ்சிக் குடிக்க வந்த சீக்கியரும், சண்டைப் பிரியரான வங்காளியரும் ஐயர் எழுதி வைத்திருப்பதைப் படித்ததும் கொதித்துப் போய் ஹோட்டலையே துவம்சம் செய்துவிட்டார்கள். ஒடி வந்த ஐயரிடம் உன்னுடைய உப்புச் சப்பில்லாத இட்லியைத் தின்பதற்காகவா நாங்கள் வருகிறோம்? இட்;லி வடைக்கு ஆர்டர் செய்தால்தான் சாம்பார் கிடைக்கும் என்பதால்தான் அதற்கு ஆர்டர் செய்துதொலைக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்! சாம்பாருக்கு இப்படியெல்லாம் அளவு நிர்ணயித்தால் அப்புறம் இங்கே உன் கடை இருக்காது என்று எச்சரித்தார்கள். ஐயர் முதல் வேலையாகத் தாம் எழுதி வைத்ததைத் தூக்கி எறிந்தார். வங்காளி, சீக்கியர் சாம்பார் குடித்து மகிழ்வதும் அங்கு தொடர்ந்தது. ஆக, தமிழர்கள் கலகத்தாவில் வியாபாரம் செய்து கொழித்த போதிலும் வங்காளத்தின் தடத்தை அங்கு அழிக்க இயலாது போயிற்று. சாம்பார் முக்கிய உணவாகவும் இட்லி வடை தொட்டுக் கொள்வதற்கான துணையாகவும் அங்கு விதிக்கப்பட்ட சட்டத்தை மீற முடியவில்லை.

ஹிந்துஸ்தானத்தின் மற்றொரு மாநகரமான சென்னையில், குறிப்பாக வட சென்னையிலும் தியாகராய நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் தெலுங்கர்களும் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தவர்களும் மிகுதி என்ற போதிலும் சென்னைக்குத் தனது மண் வாசனையை இழக்க வேண்டிய நிலைமை வந்ததில்லை.

ஹிந்துஸ்தானத்தின் வாணிபத் தலை நகரம் என்றும் ஹிந்தித் திரையுலகின் கேந்திரம் எனவும் ஈட்டிய பெருமைக்காக மும்பை தனது மராட்டிய அடையாளத்தை விலை கொடுக்க நேர்ந்தது என்கிற நிலைமையை ஒரு மராட்டியரின் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அப்போது நிச்சயமாகச் சிறிதளவாவது எரிச்சல் வரத்தான் செய்யும்.

கல்கத்தாவில் ஒரு வங்காளி தனது தேவைக்காக வேற்று மொழியில் பேச வேண்டிய கட்டாயம் இல்லை. அவன் பிடிவாதமாகத் தனது தாய்மொழியில்தான் பேசுவான். சென்னையில் ஒரு தமிழன் வீட்டுக்கு வெளியே பிற மொழியில்தான் பேசியாகவேண்டும் என்பதில்லை. ஆனால் மும்பை மராட்டிய மாநிலத்தின் தலை நகரமாக இருப்பினும் ஒரு மராட்டியன் வீட்டிற்கு வெளியே தனது தேவைக்கு ஒரு வேற்று மொழியைத்தான் சார்ந்திருக்க நேரிட்டு, மும்பைக்கென ஒரு பிரத்தியேக ஹிந்தியை அவன் உருவாக்க நேர்ந்திருக்கிறது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த மாநிலக் கட்சியான தி மு கவின் கொடியும், மராட்டிய மாநிலத்தில் நாதியற்றுக் கிடந்த முஸ்லிம் லீகின் கொடியும் தாராவியில் பறக்கக் கண்ட மராட்டியனுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுதான் சிவ சேனை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தாராவியில் அன்று வசித்த தமிழரில் பெரும்பாலானவர்கள் துறைமுகத் தொழிலாளர்கள். இவர்களில் அதிகம்பேர் ஏர்வாடி, கீழக்கரையிலிருந்து வந்தவர்கள் என்ற கசப்பான உண்மையை நான் சொல்லித்தான் தீரவேண்டும். ஏற்வாடி, கீழக் கரையிலிருந்து வந்து தாராவியில் குடியேறியவர்கள் அனைவருமே முகமதியர் என்பதையும் சொல்லியாக வேண்டும். துறைமுகத் தொழிலாளரில் பலர் கள்ளக் கடத்தல் என்கிற பெரிய சக்கரம் உருள்வதற்கு நெம்புகோலாய் இருப்பவர்கள். நாட்டின் பொருளாதரத்திற்கே சவாலாக இருந்துகொண்டு தமிழ் நாட்டின் வட்டார அரசியலையும் தம்மோடு கொண்டு வந்து இறக்கியவர்கள் மீது சிவ சேனையின் கோபம் பாய்ந்த போது அது தென்னாட்டவரை துவேஷித்து விரட்டும் முரடர் கூட்டம் என்கிற பெயரெடுத்தது.

தாராவியில் தாக்கப்பட்ட பெரும்பான்மைத் தமிழ் நாட்டவர் சென்னையில் வந்து இறங்கியபோது தமிழர்களை மராட்டிய வட்டார வாத சிவசேனை தாக்குவதாகச் சொன்னார்கள். அவர்களே தாராவியில் இருக்கும்போது அங்குள்ள மஸ்தான் மற்றும் பென்டி பஜார் முகமதிய ஏறுமதி இறக்குமதி வர்த்தகப் பெருமக்கள் முதலான ஆபத்பாந்தவர்களின் உதவியைப் பெற ஹிந்து மத வாத சிவசேனையானது முகமதியரான தங்களைத் தாக்குவதாகப் புகார் தெரிவித்தார்கள். சென்னையில் தமிழர்கள், மும்பையில் முகமதியர்கள்!

ஆயிரம் தடவை திரும்பத் திரும்ப மசூதி என்று சாதித்தாலும் அயோத்தியில் இருந்த பாபர் நினைவு மண்டபம் மசூதியாகிவிடாது என்பதை வாஸந்தி போன்றவர்கள் உணரவேண்டும். அங்கு முகமதியர் தொழுகை நடத்தியதாகக் கூறினாலும் 1949 ல் குழந்தை ஸ்ரீராமன் பிரதிமை ப்ரதிஷ்டை செய்யபடுவதற்குப் பல வருடங்கள் முன்பே அங்கு முகமதியர் தொழுகை நின்றுவிட்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால் 1857 ல் ஸ்ரீராமன் ஜன்மஸ்தலம் எனத் தாம் நம்பும் இடத்தில் வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என அயோத்தி நவாப் வாஜித் அலி ஷாவிடம் கோரிக்கை விடுத்து, பாபர் நினைவு மண்டபத்தையொட்டி ஹிந்துக்கள் தங்கள் வழிபாட்டைத் தொடங்கவே வீம்புக்காகவும் அந்த இடத்தின் மீது தங்களுக்கு உள்ள சொத்துரிமையை நிலை நாட்டவும் முகமதியர் பாபர் நினைவு மண்டபத்தினுள் தொழுகை செய்யத் தொடங்கினார்கள் என்பதுதான் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட உண்மை. பாபர் நினைவு மண்டபம் தகர்க்கப்பட்ட போது உண்மையில் அது குழந்தை ராமனின் கோவிலாகத்தான் இருந்தது. மசூதியாக இருக்கவில்லை. வி பி சிங்கிற்கு முன் பிரதமராக இருந்த இந்திரா காங்கிரஸ்காரரான ராஜீவ் காந்தியே தனது பாட்டனார் பிரதமர் நேருவின் செயலுக்குப் பிராயச் சித்தம் தேடுவதுபோல பூட்டிவைக்கப்பட்டிருந்த ஸ்ரீராமன் சந்நதியின் பூட்டை உடைக்க உத்தரவிட்டு, ராமனுக்குக் குறைவற பூஜைகள் நடைபெற வழிசெய்திருந்தார். 1949 ல் பாபர் நினைவு மண்டபத்தில் ஸ்ரீராம் லல்லாவின் (குழந்தை ஸ்ரீராமன்) பிரதிமையை ஹிந்துக்கள் பிரதிஷ்டை செய்தபோது அந்த அறையைப் பூட்டி வைக்கச் சொன்னவர் அன்றைய பிரதமர் நேரு! ஆமாம், வளர்ப்புமுறையில் கடைப்பிடிக்கும் கலாசாரத்தால் நான் முகமதியன், சிந்தனைப் போக்கால் நான் ஐரோப்பியன், பிறப்பினால் மட்டுமே நான் ஒரு ஹிந்து என்று பெருமைப்பட்டுக்கொண்ட நேருஜிதான்!

அயோத்தியில் மட்டுமின்றி லட்சுமண புரியிலும் ஏன், முகமதியர் மிகப் பெரும் பான்மையினராக உள்ள மொரதாபாதிலுங்கூட அரசியலுக்கு அப்பாற்பட்ட முகமதியர் ஸ்ரீராமனை மர்யாதா புருஷோத்தம் என்றே மரியாதையுடன் விளிப்பார்கள். அந்தரங்கமாகப் பேசுகையில் ஜன்மஸ்தானத்தில் மர்யாதா புருஷோத்தம் ராமச் சந்திரப் பிரபுவுக்கு ஆலயம் எழுப்புவதே நியாயம் என்பார்கள். ரியல் எஸ்டேட் மதிப்புப் போடுபவர்கள் மட்டுமே ஹிந்துக்களின் உணர்வை மதியாமல் பாபர் நினைவு மண்டபத்தை பாப்ரி மஸ்ஜித் என்று சாதிப்பார்கள்!

மூன்றாவது பானிபட் போரில் அந்நியனான பாபர் எதிர்த்துத் தோற்கடித்தது இப்ராஹிம் லோடி என்கிற ஹிந்துஸ்தானத்து முகமதிய சுல்தானைத்தான். மேலும் நியாயப்படி அந்த வெற்றிக்கான நினைவு மண்டபம் பானிபட் டிலாவது தில்லியிலாவதுதான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாபரின் தளகர்த்தன் ஹிந்துக்களின் சுய கவுரவத்தை பங்கம் செய்ய வேண்டும் என்கிற தங்களின் சம்பிரதாயப்படி ஹிந்துக்கள் ஸ்ரீராமனின் திரு அவதாரத்திற்கு முன்பிலிருந்தே தமது ஏழு புனிதத் தலங்களுள் ஒன்றாகக் கருதி வரும் அயோத்தி நகரத்தில் ஸ்ரீராமனின் ஜன்மஸ்தலம் என நம்பும் இடத்தில் தன் எஜமானனின் நினைவாக ஒரு மண்டபத்தைக் கட்டி வைத்தான். எனவே நியாயப்படி ஹிந்துஸ்தானத்து முகமதியரும் பாபர் நினைவு மண்டபத்தை தேசிய அவமானச் சின்னமாகக் கருதி அதனை அப்புறப்படுத்துவதை ஆதரித்திருக்க வேண்டும்.

பல காலம் அமைதியான முறையில் வேண்டுகோள் விடுத்துக் காத்திருந்தும் பலனின்றிப் போனதால் இனியும் பொறுமையாகக் காத்திருப்பதில் பொருள் இல்லை என்றான நிலையில் அந்த பாபர் மண்டபம் இடிக்கப் பட்ட பிறகு, மும்பை முகமதியரிடையே ஏதோ முகமதியரின் வழிபாட்டில் இருந்து வந்த மசூதிதான் இடிக்கப்பட்டதுபோல பிரசாரம் செய்யப்பட்டு அவர்கள் கலவரம் செய்யத் தூண்டப்பட்டனர். அதற்கு சிவ சேனை பதிலடி கொடுத்தது. கலவரம் தொடங்கிய முகமதியர் அனைவரும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து குடியேறியவர்தாம். வெளி நாடுகளான பங்களா தேஷ், பாகிஸ்தான் ஆகியவற்றிலிருந்து கள்ளத்தனமாகக் குடியேறியவர்களும் அதில் அடக்கம். பாகிஸ்தானிலிரு ன்து சுற்றுலாப் பயணிக்கான விசா எடுத்துக் கொண்டு வருபவர்கள் திரும்பிச் செல்வதே இல்லை. அவர்களை அடையாளம் காண்பதும் இயலாத காரியம். இவ்வாறு வந்து மும்பையில் புகுந்துவிட்ட பாகிஸ்தானியர் ஏராளம். வெளியிலிருந்து வந்ததுதான் வந்தார்கள், வாலைச் சுருட்ட்டிக்கொண்டு இருக்காமல் விஷமம் செய்வதா என்று மராட்டிய மாநிலக் கட்சியான சிவ சேனை சீற்றம் அடைந்தால் அதில் குறை காண இயலாது. தமிழ் நாட்டுக்கு வெளி மாநிலங்களிலிரு ந்து வந்து குடியேறியவர்கள் ஏதேனும் கலவரத்தில் இறங்கினால் இங்குள்ள மாநிலக் கட்சிகள் எப்படி நடந்து கொள்ளும் என யோசிக்க வேண்டும்.

மும்பை முகமதியர் வெள்ளிக் கிழமை தோறும் மதியம் சாலை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு தொழுகை நடத்துவதும், அச்சமயம் அந்தச் சாலையில் வசிப்பவர்களைக்கூட உள்ளே நுழையவிடாமல் தடுப்பதுமாக இருந்தனர். ஒரு சமயம் கவிஞரும் எழுத்தாளருமான டாம் மொரேஸ் உள்ளே செல்ல முனைந்து உதைபட்டுத் திரும்பினார். பின்னர் பொதுச் சாலை இவ்வாறு அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுவதைக் கண்டித்துக் கட்டுரையும் எழுதினார். மும்பை முகமதியரின் இந்த சாலை மறிப்புத் தொழுகையை நிறுத்த சிவ சேனைதான் மஹா ஆரத்தி என எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆகவே முதலில் பிரச்சினையைக் கிளப்புவது சிவசேனை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று சிவசேனை ஈழத்து விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரிக்கிறது. இதிலிருந்தே அதற்குத் தமிழர்கள் மீது எவ்விதத் துவேஷமும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையி லுள்ள தமிழ் பேசும் முகமதியர் தங்களைத் தமிழர்களாக அல்லாமல் தாம் சார்ந்த மதத்தின் அடிப்படையிலேயே அடையாளம் காட்டிக்கொள்வதையும் சிவசேனை கண்டிக்கிறது. தேசியம் வேறு, மதம் என்பது வேறு என்று அது சுட்டிக்காட்டுகிறது.

ஏறத் தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன் மும்பையில் சிவ சேனை தலையெடுக்கத் தொடங்கியிருந்த சமயம், எவரும் வெகு எளிதில் சந்திக்கக் கூடியவராக பால் தாக்கரே இருந்தபோது அவரை நான் சந்தித்தேன். தாராவி மராட்டிய மாநிலத்திற்கே அவமானம் தேடித்தரும் கள்ளக் கடத்தல் தொழிலின் அடியுரமாக இருப்பதைத்தான் அப்போது அவர் அதிகம் பேசினார். தாராவியின் தமிழ் பேசும் தொழிலாளர் துணை இல்லாவிட்டால் பின்னணியில் பங்களாக்களில் சொகுசாக வாழும் கள்ளக் கடத்தல் முதலைகள் காணாமல்போய் விடும் என்றார். கள்ளக் கடத்தலில் ஈடுபட்டுள்ள முகமதியர் மதச் சார்புடன் சமூக சேவை என்ற முக மூடி தரித்து இயங்குவதால் அதற்கு மாற்றாகக் கள்ளக் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஹிந்து மதத்தவரை ஆதரிக்க வேண்டியதுதான் என்றும் வாதிட்டார்.

கள்ளக் கடத்தல் என்பது சமூகத்தைப் பாதிக்கும் ஒரு பொதுத்தன்மையான பொருளாதாரக் குற்றம். இதனை மொத்தமாக எதிர்ப்பதற்கு மாறாக மத அடிப்படையில் ஒரு சாராரை ஆதரிப்பது எப்படி சரியாகும் என்று கேட்டபோது, கள்ளக் கடத்தல் என்பது இப்போது ஒரு தொழில். அதில் மதத்தை நுழைப்பது முகமதியர்தான். அவர்களை நிறுத்தச் சொல், நானும் நிறுத்துகிறேன் என்று அன்றைக்கே நாயகன் திரைப்பட கமல ஹாசன் பாணியில் சொன்னார்.

வழ வழ, பள பள பத்திரிகைகளின் தேவைக்கு ஏற்ப ஸ்ரீதேவியைப் பேட்டி கண்டு சுவாரசியமான கட்டுரை எழுத முற்பட்ட வாஸந்தி அதில்தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாறாகச் சிவசேனை சம்பந்தப்பட்ட மும்பை அரசியலையும் தொட்டுத் தனது முற்போக்கு மதச் சார்பற்ற நிலைப்பாட்டை நிறுவ அவர் முற்படுவதாயிருந்தால் சிவ சேனையின் பால் தாக்கரேயையும் பிறரையும் சந்தித்துச் சரியான விவரங்களைச் சேகரித்துச் சேர்த்திருக்க வேண்டும் (ஐராவதம் மஹாதேவன் தினமணி ஆசிரியராக இருந்தபோது இந்தியா டுடேயைத் தமிழில் கொண்டு வரும் திட்டத்துடன் அவரிடம் ஆலோசனை கேட்ட அருண் புரியிடம் எனது பெயரை ஐராவதம் பிரஸ்தாபித்தார். அதன்பேரில் அருண் புரியும் பிரபு சாவ்லாவும் என்னைச் சந்திக்க விரும்பினர். சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ் சாலையில் உள்ள தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் அவர்களைச் சந்தித்தேன். தமிழ் நாட்டு அரசியலைப் பிரதானமாய்க் கொண்டு பத்திரிகையை நடத்தும் முழுப் பொறுப்பையும் ஃப்ரான்சைசி முறையில் ஒப்படைப்பதாக இருந்தால் ஏற்பதாகச் சொன்னேன். அதற்குச் சம்மதம் இல்லாததால் தங்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்ய ஒப்புக்கொள்ளும் நபரை அவர்கள் தேட முனைந்தார்கள் என்ற விவரத்தையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்).

கடைசியாக ஒரு விஷயம்:

ஒன்றே குலம், ஒருவன் தேவன் என்பதும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும் வஸுதைவ குடும்பகம் என்பதும் ஸர்வ ஜனோ ஸுகினோ பவந்து என்பதுமே ஹிந்து மதத்தின் அடிப்படையான வாதம். எனவே ஹிந்து மத அடிப்படைவாதி என்று ஒருவரைச் சொல்வது மிகவும் பெருமைப் படுத்துவதேயாகும்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்