சிவாஜி முதல் சிவாஜி வரை

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

சித்ரா ரமேஷ்


சிவாஜி வருகிறார். வருகிறார். வந்து கொண்டிருக்கிறார். இதோ வந்தே விட்டார். உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை உய்விக்க வந்து விட்டார். அப்பாடா கட்டியங் கூறி வரவேற்தாகி விட்டது. ரொம்ப கஷ்டப்படாமல் வெளியான முதல் மூன்று நாட்களுக்குள் (இங்கே சிங்கப்பூரில்) கொஞ்சம் பெரிய வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி வசதியாகப் பார்த்தாகி விட்டது. சிவாஜி மாதிரி கூல் கூல் என்று சொல்ல வேண்டாமா? முதல் காட்சியிலேயே சிறையில் இருக்கும் சிவாஜியைப் பார்த்து என்ன தப்பு செஞ்சு உள்ளே வந்தே என்று எல்லாக் குற்றங்களையும் அடுக்கும் போது, ஒண்ணுமில்லெ நான் நல்லது பண்ணனும்னு நினச்சேன் என்று சிவாஜி பதில் சொன்னதும் அப்ப சரி! என்று சொன்னதும் வழக்கமான சங்கர் படத்தில் ரஜினி என்ன செய்யப் போகிறார் என்ற ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது. 200கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு வெளிநாட்டிலிருந்து வரும் சிவாஜி தன் தாய் நாட்டில் ஏழை எளிய மக்களுக்காக கல்லூரி, மருத்துவமனை, பெரிய பல்கலைக் கழகம் கட்ட நினைக்கிறார். ஆனால் அதற்கு நேர்மையான வழியில் போக முடியாமல் அரசியல்வாதிகள், ரௌடிகள், அரசாங்க அதிகாரிகள் என்று பெரிய தெய்வங்களிலிருந்து குட்டி தேவதைகள் வரை இடைமறிக்கின்றனர். பெட்டி பெட்டியாக பணம், நகை, பெண் என்று கொடுத்து எல்லோரையும் சரிகட்டி நிமிறும் போது ஆட்சி மாறுகிறது. சென்ற ஆட்சியில் கொடுத்ததெல்லாம் இப்போது செல்லாது என்று மீண்டும் அதே இடையூறுகள். சிவாஜி எப்போதும் சாதாரண மனிதனாக இருக்க முடியுமா? சீறி எழுகிறார். கையில் ஒரு பைசா இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறார். மீண்டும் நாற்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் (பன்னிரண்டு சைபர்!!)கொண்டு வந்து செய்ய நினைத்த நல்ல செயல்களையெல்லாம் செய்து முடிக்கிறார்.பூவா தலையா போட்டுப் பார்த்து பூ விழுந்தா பூவழி தலை விழுந்தா சிங்க வழி என்று நாமும் அவரும் எதிர்பார்த்தது போலவே தலை விழுகிறது.

இடையில் அசல் தமிழ்ப்பெண்ணைத் தேடி அலைந்து ஸ்ரேயாவைக் கண்டுபிடிக்கிறார். முன்ன பின்ன பழகாத உங்களை எப்படி கல்யாணம் செஞ்சுக்கறது என்று ஸ்ரேயா கேட்டதும் சரிதான் என்று பழக வந்திருக்கிறோம் என்று குடும்ப சகிதம் ஸ்ரேயா வீட்டுக்கே போய் அவர்களைக் கலாய்த்து, விதமான உடைகளில் பாட்டுப் பாடி கவர்கிறார். பளிங்கு சிலை போலிருக்கிறார் ஸ்ரேயா. அவர் பக்கத்தில் என்னதான் இளமையாக தன்னைக் காட்டிக் கொண்டு துள்ளிக் குதித்தாலும் ஹ¥ம்! கதைப் படியே ரஜினிக்கு நாப்பது வயதுக்கு மேல்தான்! ஒரு காட்சியில் நான் இருபது வருஷமா கஷ்டப்பட்டு சம்பாதிச்சதெல்லாம் என் நாட்டுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு கொண்டு வந்தேன் என்று கூறுவார். எனவே தலைவர் தன் வயதுக்குத் தகுந்த மாதிரி தான் தோன்றுகிறார். விவேக் ரஜினியின் ‘மாமா’. நான் உனக்கு மாமாவா என்று அவரே ரஜினியிடம் சந்தேகம் கேட்கிறார். ரஜினி, விவேக் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகளெல்லாம் சூப்பர்தான்! பஞ்ச் டயலாக்கெல்லாம் இப்போ எல்லோரும் பேசிடாறாங்க! அதனாலே நானே உனக்கு பஞ்ச் டயலாக் பேசி விடுகிறேன் என்று படம் முழுக்க விவேக் பஞ்ச்தான்!

இந்தியாவில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான பொருளாதாரத்துக்கு இணையாக கறுப்புப் பொருளாதாரம் இருக்கிறது. இது மிகப் பழைய செய்தி. இதை வைத்து நாட்டில் இருக்கும் அத்தனை கறுப்புப் பண முதலைகளை அடையாளம் கண்டு அவர்களின் ரகசியங்களை அவர்கள் ஆடிட்டர், கார் டிரைவர் மூலம் தெரிந்து கொண்டு கோடிக் கணக்கில் கறுப்புப்பணத்தை திருடி அதை எப்படி வெள்ளையாக்குகிறார் என்பதில் சங்கர், சுஜாதாவின் புத்திசாலித்தனம் தெரிகிறது. கடைசியில் இந்தியப் பணத்தை சரியான கணக்கு காட்டாமல் ஹாவாலா வழியில் வெள்ளையாக்கியது தவறுதான் என்று ஒப்புக் கொண்டு அவரே சிறைக்குச் சென்று விட்டு ஜென்டில் மேனாகத் திரும்புகிறார். பின்னால் ஒரு ரௌடி கூட்டம் சிவாஜிக்கு துணை நிற்கும் போது சிவாஜியா பாட்ஷாவா? பெல்பாட்டம், பெரிய காலர், பூப்போட்ட சட்டையெல்லாம் போட்டுக் கொண்டு ‘என்றென்றும் ஆனந்தமே’ என்று பாடி வலம் வந்த சுமனா இது? மூக்கு மட்டும் தான் அவ்வப்போது காட்டிக் கொடுக்கிறது. வாவ்! தமிழ் திரையுலகத்திற்கு ஒரு அருமையான வில்லன் தயார். டாக்டர் பக்கத்திலேயே இருந்து மின்சாரம் தாக்கி ஷாக் அடித்தப் பையனுக்கு CPR செய்து இதயத்தை இயங்க வைத்தது சரிதான். ஆனால் ரஜினி சிறையில் ஷாக் அடித்து பிற்கு அவரை ஒரு தனியிடத்துக்கு கூட்டிக் கொண்டு போய் பிழைக்க வைப்பது???இப்படியெல்லாம் சிவாஜியை பிழைக்க வைக்கவில்லையென்றால் சிவாஜி படத்தில் எம் ஜி ஆர் எப்படி வருவாராம்? பாஸ் (bachelor of social service) மொட்டை பாஸ் ஆக வந்து நான் சிவாஜி இல்லே எம் ஜி ஆர், எம் ஜி ரவிச்சந்திரன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

சஹானா சாரல் போல் பாடல் காட்சிகள். பணத்தை வாரி இறைத்து படமாக்கியிருப்பது தெரிகிறது. கண்ணாடி மாளிகையில் சஹானா சாரல் பாடல், ஆம்பல் பாடலில் தாமரையாக ஸ்ரேயா! ரஜினி படத்தில் தலை காட்டியதேப் புண்ணியம் என்பது போல் சாலமன் பாப்பையா, ராஜா எல்லோரும் வந்திருக்கிறார்கள். வத்தல் என்ன சொல்றாரு? நம்ம வீட்டுக்கு வாங்க பேசலாம் பழகலாம் என்று சாலமன் பாப்பையா பட்டி மன்றத்தில் ஜாவை வாருவது போலவே வாருகிறார். இந்தியாவில் ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்றால், யாராவது நல்லது செய்ய வேண்டுமென்றால் அதற்கு நேர் வழி கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திகொண்டேயிருக்கின்றனர். ஆனாலும் மக்களும் சளைக்காமல் ஆட்சி மாற்றி மாற்றி போட்டு ஆடிப் பார்க்கிறார்கள். முதலில் ஆட்சி செய்தவர்கள் செய்தது எல்லாமே தவறு என்று பழையக் குப்பைகளைக் கிளறி புழுதி பறக்க கஜானாவைக் காலி செய்து, விட்டுப் போன வருடங்களுக்கும் சேர்த்து சொத்து சேர்த்து இப்படியே போய்க் கொண்டிருந்தால் சிவாஜி மாதிரி யாராவது வந்து சொந்தமாக ஒரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டுதான் போகட்டுமே!

சித்ரா ரமேஷ்

chitra.kjramesh@gmail.com

Series Navigation