சில மாற்றுச் சிந்தனைகள்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

நா.இரா. குழலினி


‘மழை இம்முறையும் பொய்த்துப் போனது. இன்னும் சில பத்து நாட்களுக்குத் தண்ணீர் இருந்தால் போதும் இம்முறையாவது பயிரைக் காப்பாற்றி விடலாமே ‘. காவிரியின் இருகரை ஓரத்திலுமான பாசனப் பகுதி விவசாயிகளின் ஓலத்தின் ஒரு பகுதி நான் மேலே குறிப்பிட்டது.

வரும் மே மாதம் மீண்டும் தொடரலாம் எலிக்கறி தின்னும் அவலக் காட்சிகளின் கோரப் புகைப்படங்கள். இந்த முறையும் விவசாய இடுபொருட்களுக்காக வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்த முடியாமல் நிறைய தற்கொலைச் சாவுகள் நடக்கலாம். அரசின் பார்வையில் இவை சாராயச் சாவுகளாக மறுவடிவம் எடுக்கலாம். அடுத்த வேளை உணவுக்காக கையேந்திடும் சிறுமிகளின் துருத்திய விலா எலும்புகளைஸ் புகைப்படம் எடுத்து சோமாலியாவுக்கு அடுத்து இதுதான் என யாரேனும் சர்வதேசப் புகைப்படக் கண்காட்சியில் பரிசுகள் வாங்கலாம்.

நம் நாட்டு இளைய தலைமுறை நாளை தமது பாட நூல்களில் குறுவையும் சம்பாவும் தஞ்சையில் முன்பு இருவிதமான போகங்களாக இருந்தன எனப் படிக்க நேரிடலாம். காவிரியின் முழு உடைமைதாரர்கள் யாரென்பதில் கேள்விகள் எழுந்து அனைத்து இதழ்களிலும் அட்டைப்படக் கட்டுரையாகலாம் விவாதங்கள். அணை திறக்க முற்படுவதாக சிலர் கிளஹ்பும்போதெல்லாம் இம்முறையும் குறுக்கே விழுந்து சிலர் தம்மை மாய்த்திட விழையலாம். ஒவ்வொரு புறத்திலும் கொம்பு சீவிக் குலவையிட்டு வழியனுப்பக் காத்திருப்பர் சிலர். ஒரு சிலருக்கு மெரீனாவில் உண்ணாநோன்பு வேறு சிலருக்கோ இருதரப்புப் பேச்சுவார்த்தை. நீ யார் நான் யார் என்ற அடையாள அரசியலை மார் தட்டித் துவங்கலாம் சிலர் வேறு சிலரோ ஒரு கோடியில் துவங்கி தெருக் கோடிவரை பாய்ச்சல் காட்டலாம். இவற்றுக்கு நடுவில் ஊசலாடும், பல லட்சம் மக்களின் வாழ்வு குறித்த நம்பிக்கைகள்.

ஒரு போதும் மாற்றுச் சிந்தனைக்கு இடந்தராமல் மீண்டும் மீண்டும் செக்கு மாட்டைப் போல சுற்றிச் சுழலும் இந்தப் போக்கினை விட்டு எப்போது மீளப்ஸ் போகிறோம். காவிரியின் நீர்ப் பங்கீடு குறித்து அரசு தனியே குழு அமைத்து அந்தக் குழுவின் வாயிலாக தமிழகத்தின் நீராதார உரிமை மறுப்பிற்கு எதிராகப் போராடலாம், நடுவர் மன்றங்களிலும் நீதி மன்றங்களிலும் சட்ட மற்றும் பாராளுமன்றங்களிலும் வெகு தீவிரமாகப் போரடலாம் ஒட்டு மொத்த மக்கள் எழுச்சியினைக் காட்ட அரசே பல்வேறு போராட்டங்களை அறிவிக்கலாம். அது ஒரு முக்கிய சுற்று. ஆனால் அவற்றினூடாக விரும்பும் நீதி கிடைக்கும் வரையில் அந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளையும் அவர்களின் குடும்பங்களையும் என்ன செய்யப் போகிறோம்.

இவற்றுக்கூடாக அதிக நீராதாரம் தேவைப்படாத, சுற்றுச் சூழல் சிக்கல் இல்லாத, வாழ்வாதாரங்களைஷ சூறையிடாத, மாற்று முறைகளைப்ஸ் பற்றி நாம் எப்போது சிந்திக்கப் போகிறோம். பணப் பயிர்களைஸ் பயிரிட வேண்டும் என்று கடந்த ஆண்டுச் சிக்கலின் போது அரசு அறிவித்திருந்தது. ஆனால் இவை போன்ற பயிர்த் தொழில் குறித்த தொழில் நுட்பங்களில் விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் திறம் ஆகியவை குறித்த சிக்கல்களும், தேவைப்படும் தொழில்நுட்ப மூலதனமும் மேற்குறிப்பிட்ட பணப்பயிர் விவசாயத்தை நினைக்கவொட்டாமல் செய்தது.

சமீபத்தில் உலகின் மிகப் பெரிய பாலைவனமான சகாராப் பாலைவனத்தின் தென்பகுதியை ஒட்டிய மேற்கு ஆப்பிரிக்காவின் நாடான மாலியின் சூழலைக் குறித்துப் படிக்க நேர்ந்தது. அவர்கள் தங்களின் மிகக் குறைந்த விளைச்சல் தரும் நிலங்களைச் சுற்றி அமைத்துள்ள உயிர்வேலி மரங்கள் தரும் அற்புதப் பயன்பாட்டினை அறியும் போது நாம் ஏனதை மாற்று முறைகளுள் ஒன்றாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்று தோன்றியது எனக்கு.

ஜட்ரோஃபா கர்கஸ் (Jatropha curcas) எனும் வகைப்பட்ட இந்த குறுமரங்களின் வித்திலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் அவர்களுக்குத் தரும் பொருளாதாரப் பயன்பாடே நமக்கு முக்கியம். எண்ணை என்றால் உணவுக்குப் பயன்படாத ஒரு சில மருத்துவ குணங்களுக்கென்றே பயன்தருவதாக நினைக்கப் பட்ட அந்த எண்ணை இன்று டாசல் எரிபொருளுக்கு மாற்றாகவும் டாசலுடன் இணைந்தும் ி பயன்படுத்தப் படுகிறது.

ஜட்ரோஃபா இனத்தின் 175 உள்ளின வகைகளில் 15 வகைகளுக்கு மேல் இந்தியாவில் காணப்படுகின்றன. வெப்ப நாடுகளில் வரட்சி தாங்கி வளரக்கூடிய இந்தவகை குறுமரம் அதிகத் தண்ணீர் இல்லாத தமிழ்நாடு போன்ற பகுதிகளில் முழுமையாகப் பயன்தர ஏற்றது. பாலைவனமாதலைத் தவிர்த்து நீர்ப்பிடிப்பை அதிகரித்து மண்சரிவைத் தவிர்க்கவும் செய்வது சூழலுக்கு இது தரும் கூடுதல் நலம். வாகனங்களில் இருந்து வெளுப்படும் மாசு அளவு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நெறிமுறைகள் கூறுகின்றனவோ அதைவிடக் குறைவாகவே இந்த வகை எரிபொருள் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது என்கின்ற ஆய்வுகள்.

ஒரு ஹெக்டேருக்கு 5000 கிலோவுக்கு மேல் வித்துக்கள் கிடைக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். இதிலிருந்து 1500 கிலோ கச்சா எண்ணையும் 3500 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும். புண்ணாக்கு மிகச் சிறந்த உரமாகவும் சற்றே சுத்திகரிக்கப் பட்டால் கால்நடைகளுக்கான தீவனமாகவும் பயன்படுத்தப் படும் என்கிற போது ஒரு ஆக்கச் சுழல் அங்கு உருவாக்கப் படுகிறது.

1995 ஆம் ஆண்டில் இந்தியா செய்த கச்சா எண்ணை மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான இறக்குமதிச் செலவு 5928 மில்லியன் அமெரிக்க டாலர் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஒவ்வொரு வருடமும் பெட்ரோலிய இறக்குமதிக்காக இந்தியா அந்நியச் செலாவணியைச் செலுத்துகிறது. தற்போது மேலும் நாற்பது சதம் வரை இந்தச் செலவினம் அதிகரித்திருக்கலாம்.

பெட்ரோலியப் பொருட்களில் நாம் அதிகம் பயன்படுத்துவது இன்றைய சூழலில் டாசல் மட்டுமே. குறைந்தபட்சமாக 20 சத பெட்ரோலியச் செலாவணி உள் நாட்டில் புழக்கத்தில் வரும் என்று நாம் கணக்கில் கொண்டாலே ஏறக்குறைய ஆறாயிரத்தில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் தொகை அதிகரிக்கும். இந்தக் கூடுதல் உபரிப் புழக்கம் மக்களின் வாங்கும் திறனை உயர்த்துவதால் அதனை ஒட்டிய உற்பத்தி அதிகரிப்பும் ஒட்டுமொத்த தேசிய உற்பத்தி அளவீடும் உயரும் என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.

சமீபத்தில் இந்திய ரயில்வே நாடெங்கும் பரவிச் செல்லும் தனது தண்டவாளங்களுக்கு அருகில் ஜட்ரோஃபா மரங்களை வளர்த்து அதன் மூலமாகக் கிடைக்கும் தாவர டாசலை தனது டாசலால் இயங்கும் புகைவண்டிகளில் 10 சதவிகிதத்திற்குப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்திய எண்ணை Gறுவனமான(IOC) உடன் இந்திய ரயில்வே இது குறித்து முன் ஒப்புகை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிவியலடிப்படையில் என்றுமே சாத்தியாமகாத மூலிகைப் பெட்ரோல் வடிவமைத்த ராமரை தமது கையில் கோர்த்துக் கொண்ட ஆர் எஸ் எஸ் போன்ற அடிப்படைவாத அமைப்புகள் உடனடியாக அவரின் ‘கண்டுபிடிப்புக்கு ‘ காப்புரிமை வாங்கித் தந்ததைப் போல்(பார்க்க கீழுள்ள பின்னிணைப்பு) அல்லாமல் 2002 இல் தென்னாப்பிரிக்காவின் ஜேகன்னஸ்பர்க் நகரில் நடந்த உலக அளவிலான நீடித்த வளர்ச்சிக்கான மாநாட்டில், முழுவதுமே ஜட்ரோஃபா எண்ணையால் இயக்கப் படும் டாசல் இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கிக் காட்டியுள்ளனர் அறிவியலாளர்களும் சூழலியலாளர்களும்.

இந்திய வேளாண்மைத் துறையின் எண்ணை வித்துக்கள் இயக்குனரகம் பல்வேறு வேளாண்மைப் பல்கலைக் கழகங்களுடனும் டாட்டா எரிசக்தி ஆய்வுமையத்துடனும் இணைந்து ஜட்ரோஃபா வளர்ப்புக் குறித்த பயிற்சிகளை வழங்கத் துவங்கியிருக்கிறார்கள்.

மேற்சொன்ன, மக்களுடன் என்றுமே இயங்காத, பல்கலைக் கழகங்கள் மற்றும் டாட்டா நிறுவனங்களின் பிடியிலிருந்து இந்தத் தொழில் நுட்பத்தினை மீட்டெடுத்து, மக்களுடன் இணைந்து பணியாற்றும் தமிழக உழவர் தொழில் நுட்பக் கழகம் போன்ற வேளாண்மை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் இவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

அது மாத்திரமன்றி அரசு தற்போதைய தரிசுநில மேம்பாட்டுத் திட்டத்தின்படி பெரு நிறுவனங்களுக்கு நில ஆதாரங்களைத் தாரை வார்ப்பதைத் தவிர்த்து நாடெங்கிலுமான மகளிர் சுய உதவிக் குழுக்களின் வசமும் தலீத்துகள் மற்றும் பழங்குடியினக் குழுக்களின் மத்தியிலும் அந்த நில ஆதாரங்களை ஒப்படைத்து அவற்றில் இந்த வகை எண்ணை உற்பத்திக்கான வழிகளை மேற்கொள்ளலாம். மேலும் தற்போதைய விளை நிலங்களிலும் இந்த வகை மரங்களை உயிர்வேலியாக அமைத்து கூடுதல் பயன்பாட்டைப் பெறவும் முயற்சிக்கலாம். ஒவ்வொரு குழுவிற்கும் எண்ணை ஆட்டும் இயந்திரங்களை நிறுவுவதன் வாயிலாக கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறு சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவதன் மூலமாக நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். இதனுடைய உப உற்பத்திப் பொருளாகக் கிடைக்கும் கிளிசரால் பல்வேறு பொருட்களின் உற்பத்திக்கு மூலப் பொருளாகவும் விளங்கக்கூடியது.மரம் விளைச்சல் தரத் துவங்கும் ஒரு வருடம் வரை வட்டியில்லா எளிதான கடன்களை இந்தக் குழுக்களுக்கு வழங்குவதன் மூலம் இவர்களின் வாழ்வாதார நம்பிக்கைளை மேம்படுத்தலாம். செய்யுமா அரசு ?

இவற்றை நடைமுறைப்படுத்த இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய பெட்ரோல் லாபி எந்தளவிற்கு இந்த நடவடிக்கைகளை தவிர்க்க முயற்சிக்கும் என்பதும் தற்போதே களத்தில் இறங்கிவிட்ட டாட்டா போன்ற நிறுவனங்கள் எந்த அளவு இந்த மாற்று வடிவங்களை தமது சொந்தச் சொத்துக்களாக மாற்றப் போகின்றன என்பவையும் மீண்டும் கேள்விக்கு உரியன.

பின்னிணைப்பு:

இந்த அங்கீகாரம் வழங்கல் முறையில் உள்ள சிக்கல்கள் தனி விரிவான விவாதம் தேவைப்படும் விஷயம். 1996 செப்டம்பர் 16 அன்று நடத்தப்பட்ட சோதனையில் ஐஐடி நிறுவனத்தால் முழுவதுமான மோசடி எனவும் உள்ளீடுக்கும் வெளுப்பாட்டிற்குமான சமன்பாட்டில் சிக்கல் இருக்கிறது எனவும் உள்ளிடு நிறையைவிட வெளுயீட்டு நிறை அதிகரிக்கிறது எனவே இந்த தயாரிப்பு முறை மோசடியானது எனவும் குற்றம் சாட்டப்பட்டு அவரின் ‘கண்டுபிடிப்பு ‘ நிராகரிக்கப்பட்டு சிபிஐ விசாரணை வரை நிகழ்ந்த இந்த தயாரிப்பு முறை பின் எப்படி அதே நிறுவனத்தால் எரிபொருள்தான் என்று சான்றளிக்கப்பட்டது என்பது முதற் கேள்வி. அந்த அங்கீகாரத்திற்குப் பின் இந்திய எண்ணை நிறுவனம்(IOC) அதை அங்கீகரித்து இந்தியக் காப்பீட்டு உரிமை உடனடியாக வழங்கப்பட்டது எவ்வாறு ? ஆர் எஸ் எஸ் தலைவர் திரு சுதர்ஸனும் இந்திய மனித வள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அதிகாரி திரு திவாரி அவர்களும் இந்த அங்கீகாரத்திற்கு முன் திரு ராமர் அவர்களைச் சந்தித்துச் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன ? முதலில் ஒப்புக்கொள்ள மறுத்து அடுத்து உடனடியாக அங்கீகரித்த நிறுவனங்களின் அங்கீகார முறையில் உள்ள நேர்மையின்மையின் அரசியல் என்ன ? இந்தியக் காப்புரிமை பெற்ற பின் அந்தக் காப்புரிமையின் அடிப்படையில் அனைத்துலகக் காப்புரிமை ஒப்பந்த அமைப்பில்(International Patent cooperation treaty) 21/1/2002 அன்று சர்வதேச காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டு 22/7/2002 அன்று WO01/53436 Al என்கிற எண்ணுடைய காப்புரிமை ஜெரோசின் என்கிற பெயரில் ஹைட்ரோ கார்பன் எரிபொருள் என்கிற உள்வகையில் வழங்கப்பட்டுள்ளது. இடையில் நாக்பூரைச் சேர்ந்த திரு ஸ்ரீராம் ஜோதி மற்றும் திரு ராம்பேக்கர் போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமைக்கழக ‘விஞ்ஞானிகள் ‘ செய்த உதவிகள் என்னென்ன ? இந்தக் காப்புரிமைகளை உடனடியாக வாங்கமுடிந்தவர்களால் இந்தியாவின் பாசுமதியும் மஞ்சளும் வேம்பும் கொள்ளை போகிறது என்று ஆர்எஸ்எஸ் அரசியல் மேடைகளில ிகூப்பாடு போடாமல் உடனடியாக ஏன் அவற்றுக்கு காப்புரிமை பெற முடியவில்லை ?

முழுவதுமாக ஆர்எஸ்எஸ் நிறுவனத்தின் பின்புலத்தில்தான் இந்தச் செயல் நிகழ்ந்தது என்று திரு ராமர் தமது பேட்டிகளில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். மக்களுக்காகவே உழைப்பதாக அதிலும் குறிப்பாக இந்து மக்களுக்காகவே உழைப்பதாக எப்போதும் மார்தட்டிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ் நிறுவனம் இந்த எரிபொருள் விற்பனையில் கிடைக்கும் முழு இலாபத்தையும் இந்து மக்களுக்குச் சொந்தமானதாக ஏன் அறிவிக்கக் கூடாது ? ஒரு தனி நபரை மிகப் பெரிய செல்வந்தராக்குவதில் ஏன் ஆர்எஸ்எஸ் நிறுவனத்திற்கு இந்த அளவு தன்முனைப்பு. இந்த ஒரு செயல் மட்டுமே போதும் இந்தியாவின் இவை போன்ற அறிவியல் சார்ந்த நிறுவனங்களின் அணுகுமுறையின் அரசியலும் அலங்கோலமும்.

அன்புடன்

நா.இரா. குழலினி

(kuzhalini@rediffmail.com)

Series Navigation

நா.இரா. குழலினி

நா.இரா. குழலினி