சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

சேதுபதி அருணாசலம்


கர்ட் வானகட் (Kurt Vonnegut) அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். “கசாப்புக்கூடம்-5” (Slaughterhouse 5) “கால அதிர்ச்சி” (Time Quake) போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதியவர். அறிவியல் புனைகதைகளுக்காக அறியப்பட்டாலும், இவரை ஒரு குறுகிய எழுத்து வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது. மனித வாழ்க்கையின் சின்னஞ்சிறு விஷயங்களை உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்து தனக்கே உரிய மெல்லிய நகைச்சுவை கலந்து எழுதுவதில் தேர்ந்தவர். இவருடைய சிறுகதைகள் படிப்பதற்கு மிகவும் எளிதானவை. சுற்றிவளைக்காமல் நேரடியாகத் தான் சொல்ல வரும் விஷயத்தை பட்டென்று சொல்லிவிடுகிறார். இதனாலேயே இலக்கியவாதிகள் இவரைப் புறக்கணித்தும் விடுகிறார்கள் எனக் கருதப்படுகிறது.

“தெளிவாக, நேரடியாக எழுதுவது இன்றைய இலக்கிய விமர்சகர்களைப் பொறுத்தவரை சோம்பேறித்தனம், சிறுபிள்ளைத்தனம்! நேரடியாகப் புரிந்துகொள்ளப்படக்கூடிய எந்த விஷயமும் இவர்களைப் பொறுத்தவரை காலம் காலமாக இவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த விஷயம்!” என்று தன்னுடைய “பாம் சண்டே” (Palm Sunday) என்ற கட்டுரைத்தொகுப்பில் வருத்தம் தொனிக்கக் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படிப் படிப்பதற்கு எளிமையாக எழுதும் முக்கியமான இந்திய எழுத்தாளர்கள் R.K.நாரயணன், ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) ஆகியோரும் பெரும்பாலும் இலக்கிய விவாதங்களில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (“எளிமையாக எழுதுவதுதான் உலகில் மிகக்கடினமான விஷயம். எழுதிப் பாருங்கள் – தெரியும்” – “முஸெளரிக்குச் செல்லும் சாலைகள்” (Roads to Mussoorie) என்ற கட்டுரைத்தொகுப்பில் ரஸ்கின் பாண்ட்).

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தபோது ஜெர்மனியர்களிடம் மாட்டிக்கொண்ட வானகட், ஒரு நிலத்தடி பதுங்குகுழியில் பல நாட்கள் கைதியாக சிறை வைக்கப்பட்டவர். பின்னர் போர் முடிந்து ஜெர்மனியர்கள் தோற்றவுடன் அங்கிருந்து வெளியேறி அமெரிக்கப் படைகளுடன் இணைந்து ஜெர்மனியிலிருந்து வெளியேறினார். இந்தப் போர்க்கைதி அனுபவம் இவருடைய “கசாப்புக் கூடம் – 5” நாவலிலும், இன்ன பிற சிறுகதைகளிலும் முக்கிய அம்சமாக இருக்கிறது.

எதேச்சையாக என் வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் ஒரு நூல்நிலையத்தில் வானகட்டின் “பாகோம்போ பொடிச் சிமிழ்” (Bagombo snuff box) என்ற சிறுகதைத்தொகுப்பு கிடைத்தது. படிப்பதற்கு மிகச் சுவையான, அதே சமயம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அற்புதமான சிறுகதைகளைக் கொண்டிருக்கும் புத்தகம் இது. அந்தப் புத்தகத்தில் சிறுகதைகளைப் பற்றியும், அவற்றை எழுதும் விதம் பற்றியும் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார் வானகட்! ஒரு தாத்தா தன் வாழ்வனுபவங்களை பேரக்குழந்தைகளுக்கு சொல்லும் வாஞ்சையுடன் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். (வானகட்டுக்கு இப்போது வயது 83.) சிறுகதை எழுத விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய இந்தக்கட்டுரையை இங்கே தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்.

வானகட்டின் கதைகள் அவற்றின் கட்டமைப்பு, பன்முகத்தன்மை, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றின் காரணமாக தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதைகளை ஒத்திருக்கின்றன. சுஜாதாவின் ஸ்ரீீரங்கத்து தேவதைகள், நகரம், ஒரே ஒரு மாலை போன்ற முக்கியமான சிறுகதைகளை நினைவுபடுத்துகின்றன இத்தொகுப்பிலுள்ள சில சிறுகதைகள். வானகட்டும் இந்தச் சிறுகதைகளை சுஜாதாவைப் போல வெகுஜனப் பத்திரிக்கைகளுக்காக எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர்கள் பாலகுமாரன், சுப்ரமணியராஜு அவர்களுக்கு சுஜாதா சிறுகதை எப்படி எழுதுவது என்று விளக்கியதை பாலகுமாரனின் கட்டுரையாக படித்த ஞாபகம்.

(“ ‘நாலு நாள் பட்டினி கிடந்து கும்பி காஞ்சா கதை தானா வரும் ‘ ‘கதைங்கறது ஆத்மாவிலேருந்து வர்ற விஷயம். சொன்னா புரியாது ‘ என்றெல்லாம் தத்துவார்த்தமாகப் பேசிப் பிற எழுத்தாளர்கள் புறக்கணித்த போது, சிறுகதை என்றால் என்னவென்று அழகாக சொல்லித் தந்தார் சுஜாதா” – பாலகுமாரன்).

சிறுகதை எழுதுவதை ஒரேயடியாகப் பாடமுறையாகச் சொல்லித்தந்துவிட முடியாதென்றாலும், அதற்கென்று சில உத்திகளும், கட்டமைப்புகளும் இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது. இப்படிப்பட்ட உத்திகளும், கட்டமைப்புகளும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வேறுபட நேரிடலாம். இருந்தாலும் தன்னுடைய எழுத்துக் கட்டமைப்புகளையும், முறைகளையும் எல்லா எழுத்தாளர்களும் பிறரிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அப்படியில்லாமல் தன்னுடைய கதைகளின் உத்திகளை வெளிப்படையாக சொல்லித்தந்திருக்கும் வானகட் கொஞ்சம் வியப்பூட்டுபவராய் இருக்கிறார்.

“கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராகட்டும் கனவான் ரோஸ்வாட்டர்” (God Bless you Mr.Rosewater) என்ற புத்தகத்தை எழுதிய வானகட்டைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ஏ.ஓ.ஸ்காட் (A.0.Scott) ஒரு கட்டுரை எழுதினார். அக்கட்டுரையின் தலைப்பை இங்கே குறிப்பிடுவது எனக்குப் பொருத்தமானதாகப் படுகிறது.

“கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராகட்டும் கனவான் வானகட் – God Bless you Mr.Vonnegut!”

சிறுகதை தியானங்கள்

( ‘பாகோம்போ பொடிச் சிமிழ்” (Bagombo snuff box) என்ற சிறுகதைத்தொகுப்பிற்கு கர்ட் வானகட் எழுதிய முன்னுரை)

என்னுடைய நீண்ட நாளைய நண்பரும், விமர்சகருமான மினஸோட்டா பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் பீட்டர் ரீட் (Peter Reed), என்னுடைய பழைய சிறுகதைகளைத் தேடிக்கண்டுபிடிப்பதை தன்னுடைய வேலையாக வைத்திருந்தார். இல்லையென்றால் அவை இந்த உலகத்தை இன்னொருமுறை பார்க்கவே நேரிட்டிருக்காது! நானே என்னுடைய படைப்புகளின் ஒரு காகிதத்துண்டைக்கூட பாதுகாத்து வைத்தது கிடையாது! அவற்றுக்கு அவ்வளவு பெரிய முக்கியத்துவம் இருக்கப்போவதில்லை என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது. என்னுடைய எண்ணமெல்லாம் சிறுகதைகள் மூலம் வரும் வருமானத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், அவ்வளவே!

சிறுகதைகள் சில சமயம் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். என்னுடைய பள்ளிப்பருவத்திலேயே சில சிறுகதைகள் என்னை மிகவும் பாதித்திருந்தன. ஹெமிங்வேயின் “ஃப்ரான்ஸிஸ் மகோம்பெரின் மகிழ்ச்சிகரமான குறுகிய வாழ்க்கை”(The short happy life of Francis Macomber), சகி(Saki)யின் “திறந்த ஜன்னல்” (The open window), ஓ.ஹென்றியின் (O.Henri) “மாயாவியின் பரிசு” (The gift of Magi), ஆம்ப்ரோஸ் பியர்ஸின் (Ambrose Bierce) “ஆந்தைத் துணைநதிப் பாலத்தில் ஒரு நிகழ்வு” (An occurrence at Owl Creek Bridge) ஆகியவை இப்போதும் என் நினைவுக்கு வருகின்றன.

தொலைக்காட்சிகளுக்கு முந்தைய நாட்களில், ஒரு எழுத்தாளன் வெகுஜன மக்களுக்காகச் சிறுகதைகள் எழுதி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன் குடும்பத்தை நடத்துமளவுக்கு பணம் சம்பாதிக்க முடிந்தது. அதன் மூலம் கிடைக்கும் ஓய்வு நேரத்தை, கருத்துச் செறிவான நாவல்கள் எழுதுவதற்குச் செலவிட முடிந்தது. 1950-களில் நான் ஒரு முழுநேர எழுத்தாளன் ஆனபோது அதில் கிடைத்துவந்த வருமானத்தால் என் வாழ்நாள் முழுதும் அதை மட்டுமே செய்யப்போகிறேன் என்று எதிர்பார்த்திருந்தேன்.

அந்நாட்களில் என்னைப்போலவே வேறு சில ஜாம்பவான்களும் பத்திரிக்கைகளுக்காக எழுதி வந்தார்கள். ஹெமிங்வே “எஸ்கொயர்” (Esquire)-லும், ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் (F.Scott Fitzgerald) “சண்டே ஈவினிங் போஸ்ட்” (Sunday Evening Post) -இலும், வில்லியம் ஃபாக்னர் “கோலியர்” (Collier)-இலும், ஸ்டைய்ன்பெக்(Steinbeck) “தி வுமன்ஸ் ஹோம் கம்பேனியன்” (The Woman ‘s Home Companion) பத்திரிக்கையிலும் எழுதி வந்தார்கள்.

நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள், ஆனால் நான் இதுவரை ““தி வுமன்ஸ் ஹோம் கம்பேனியன்” பத்திரிக்கைக்காக எழுதியது கிடையாது. ஆனால் அதில் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன். கணவன் மேலும் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் தனியே அமர்ந்திருப்பதால் மட்டுமே ஒரு பெண் சிந்தனை வளம் குறைந்தவள் என்று அர்த்தம் கிடையாது! அப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்காக எழுத வாய்ப்பு கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்.

சிறுகதைகள் மூலம் கிடைக்கும் பயன்பாடு தொலைக்காட்சி, நாடகங்களால் அளிக்க முடியாத வித்தியாசமான ஒன்று.

நான் சொல்ல வருவதை புரிந்து கொள்ள வேண்டுமானால், முந்தைய பொருளாதாரச் சரிவுக் காலத்தில் இண்டியானாபொலிஸ் நகரில் என் வீட்டில் அமர்ந்திருக்கும் சிறுவனாக என்னைக் கற்பனை செய்துகொள்ள வேண்டும். இந்தப் பொருளாதார வீழ்ச்சி, 1929 அக்டோபர் 24-ஆம் தேதி (அமெரிக்கப்) பங்குச்சந்தை சரிந்ததில் தொடங்கி, ஜப்பானியர்கள் டிசம்பர் 7, 1941-இல் பேர்ல் துறைமுகத்தில் குண்டு போட்ட நாள் வரை நம்மை வாட்டி எடுத்தது. ஜப்பானியர்களும் நம்மைப் போலவே பொருளாதாரச் சரிவால் நொடிந்துபோய் கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்தார்கள்.

அப்படிப்பட்ட காலத்தில் 1938-ஆம் வருடத்தில், எனக்கு வயது 16. பள்ளியில் மகா மோசமான இன்னொரு நாளை வேண்டா வெறுப்பாகக் கழித்துவிட்டு வேகமாக ஓடி வருகிறேன். வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு எப்போதும் வெளியே சென்றிராத என் அம்மா “ஸாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” பத்திரிகை மேசை மீதிருப்பதாக சொல்கிறாள். ஆனால் ஒரு புத்தகத்தை தொலைக்காட்சிப் பெட்டியைப்போல் “ஸ்விட்ச் ஆன்” செய்ய முடியாது. நான் அதை மெனக்கெட்டு கையில் எடுத்துப் படிக்கவேண்டும். இல்லையென்றால் அது நாள் பூராவும் அங்கேயேதான் கிடக்கும்!

நான் அதை கையில் எடுத்தபின், சதை மற்றும் எலும்பாலான 160 பவுண்ட் எடை கொண்ட என் உடம்பை ஏதேனும் ஈஸி சேரில் வசதியாக சாய்க்கவேண்டும். அதன்பின் விரல்களால் புத்தகத்தின் பக்கங்களைத் திருப்ப வேண்டும். அப்போது என் கண்கள் ஏதேனும் கண்ணைக்கவரும் படம் கொண்ட கதையைத் தேடும்.

அந்தக் காலம் அமெரிக்காவில் கதைகளுக்கு படம் வரையும் ஓவியர்களின் பொற்காலம். அவர்கள் தாங்கள் படம் வரையும் கதைகளின் எழுத்தாளர்கள் அளவுக்கு சம்பாதித்து வந்தார்கள்; எழுத்தாளர்களை விடப் பிரபலமானவர்களாகக்கூட இருந்தார்கள். பிரபல பத்திரிக்கை ஓவியர் நார்மன் ராக்வெல் (Norman Rockwell) அவர்களுள் மைக்கேல் ஏஞ்செலோ போலத் திகழ்ந்தார்.

என் கண்கள் கதையைத் தேடிக்கொண்டிருக்கும் போதே, அவை சிகரெட்டுகள், வாகனங்கள் போன்றவற்றின் பல்வேறு விளம்பரங்களையும் மேய்ந்து கொண்டிருக்கும். உண்மையில் விளம்பரதாரர்களே இது போன்ற கண்ணைக்கவரும் விளம்பரங்களுக்கு செலவு செய்து வந்தார்களே தவிர, வாசகர்கள் அல்ல. அதற்காக கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பாராகட்டும்! ஆனால் நான் செய்யும் இந்த நம்ப முடியாத ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். இப்படி பக்கங்களை மேயும் போது நான் என் மூளையைத் திறக்கிறேன்.

நான் என் மூளையை இயக்கிக்கொண்டிருக்கும் பொழுது, உங்களால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாத இன்னொரு விஷயத்தையும் செய்கிறேன். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும், வரியாக வரியாக அடுக்கப்பட்ட 26 எழுத்துக்கள், 8 நிறுத்தற்புள்ளிகள், காற்புள்ளிகள், 10 அரேபிய எண்களைக் கொண்ட பதப்படுத்தப்பட்ட மரக்கூழாகக் கற்பனை செய்து பார்க்கிறேன்.

மொத்தத்தில், நான் படிக்க ஆரம்பிக்கும்போது என் சுவாசமும், நாடித்துடிப்பும் நிதானமடைகின்றன. என்னுடைய பள்ளிக்கவலைகள் தூரப்போகின்றன. நான் தூக்கத்திற்கும், ஓய்விற்கும் இடைப்பட்டதொரு ஏகாந்த நிலையை அடைகிறேன்.

பிறகு ?

பத்து நிமிடங்கள் செலவு செய்து ஒரு சிறுகதையைப் படித்தபின் என் இருக்கையிலிருந்து எழுந்து கொள்கிறேன். புத்தகத்தை மீண்டும் மேசை மீது மற்றவர்கள் படிப்பதற்காக வைத்துவிடுகிறேன்.

கட்டிடத் திட்ட வரைவாளரான (Architect) என் அப்பா வேலையிலிருந்தோ, ஆனால் பெரும்பாலும் எந்த வேலையும் இல்லாமலோ திரும்பி வருகிறார். (ஏனென்றால் ஜப்பானியர்கள் இன்னும் பேர்ல் துறைமுகத்தில் குண்டு போடவில்லை!). அவரிடம் நான் ஸாட்டர்டே ஈவினிங் போஸ்ட்-இல், அவருக்கு ஒருவேளை பிடித்தமானதாய் இருக்கக்கூடிய கதை வந்திருப்பதாகச் சொல்கிறேன். அவரை சாய்வு நாற்காலியில் அமரச் சொல்கிறேன். அது இன்னும் நான் உட்கார்ந்ததால் ஏற்பட்ட பள்ளத்துடனும், பிருஷ்டக் கதகதப்புடனும் இருக்கிறது.

அப்பா அமர்கிறார். நான் புத்தகத்தைப் பிரித்து அந்தக் கதை இருக்கும் பக்கத்தைத் திறந்து தருகிறேன். அப்பா படிக்கத் தொடங்குகிறார். அவருடைய சுவாசமும், நாடித்துடிப்பும் நிதானமடைகின்றன. அவருடைய கவலைகள் பறந்து போகின்றன.

ஆம்! என் பேரன்பிற்குரிய வாசகரே! 1930-களின் சூழ்நிலைகளில் எங்கள் வீட்டிலிருந்த ஊக்க மருந்து எதை நிரூபிக்கிறது ? ஒரு சிறுகதை, அது ஏற்படுத்தும் உடல்சார்ந்த மற்றும் மனம்சார்ந்த விளைவுகளால், புத்தத் துறவிகள் போதிக்கும் தியானத்திற்கு சமமானது என்பதை நிரூபிக்கிறது!

ஆனால் ஒரு கடினமான, பொருள் செறிவான ‘போரும் அமைதியும் ‘ (War and Peace) போன்ற நாவலைப் படிப்பது தியானம் போலாகாது! அது மிகவும் நீளமானது. அது அன்னியரும், நம்மிடம் அக்கறையுமில்லாத ஒருவரை மணந்து கொண்டு, காலம் முழுவதும் குப்பை கொட்டுவதற்கு சமமானது! கண்டிப்பாகப் புத்துணர்ச்சியைத் தராது!

தொலைக்காட்சிப் பெட்டிகள் வருவதற்கு முன்னால் பிரபலமாக இருந்த வானொலிப் பெட்டிகள் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்றுதானே நீங்கள் கேட்கிறீர்கள் ? வானொலிப் பெட்டிகள் நம் கவனத்தை முழுமையாக கட்டுப்படுத்தி வைப்பதில்லை. (போர்க்காலங்களில் தவிர!) அவை நம்மை ஓரிடத்தில் உட்கார வைப்பதில்லை. தொலைக்காட்சிப் பெட்டிகளாவது இங்கே அங்கே அலைந்து கொண்டிருக்கும் நம் கண்களை இழுத்துப் பிடித்து ஓரிடத்தில் நிறுத்தி வைக்கின்றன. இவை அதையும் செய்வதில்லை.

நான் இரண்டாம் உலகப்போரில் ஒரு ராணுவ வீரனாகப் பணியாற்றி, 22 வயதில் வீடு திரும்பியபோது, கண்டிப்பாக ஒரு நாவல், சிறுகதைகள் எழுதும் புதின எழுத்தாளராக விரும்பவில்லை. இப்போது சொர்க்கத்திலிருக்கும் என் சிறு வயதுக் காதலி ஜேன் மரி காக்ஸை (Jane Marie Cox) மணந்து கொண்டு, சிகாகோ பல்கலைக்கழகத்தின் மானுடவியல் (Anthropology) மாணவனாகப் பதிவு செய்துகொண்டேன். அதற்காக மானுடவியல் வல்லுநராக விரும்பினேன் என்று அர்த்தமில்லை. மனிதர்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவே ஆசைப்பட்டேன். ஏனென்றால் நான் ஆக விரும்பியது, பத்திரிக்கையாளனாக!

அதற்காக நான் போலீஸ் செய்திகளை சேகரித்துத் தரும், சிகாகோ நகர செய்தி நிறுவனத்தில் (Chicago City News Bureau) வேலைக்குச் சேர்ந்தேன். அந்த செய்தி நிறுவனம் சிகாகோவின் பிரபலமான நான்கு பத்திரிக்கைகளுக்குப் பரபரப்பான தகவல்கள் தரும் மையமாக இருந்தது. மேலும் இப்பத்திரிக்கைகளுக்குள் நிருபராக நுழைய, இந்த செய்தி நிறுவனம் சிறந்த இடமாக இருக்கக்கூடும் என்பது என் எண்ணம்.

ஆனால் இப்பத்திரிக்கைகளில் எந்த இடமும் சில வருடங்களுக்குக் காலியாவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. நிருபர்கள் போர் முடிந்து தங்கள் வேலைகளுக்கு திரும்பி வந்திருந்தார்கள். அவர்களைத் தற்காலிகமாக இடநிரப்பு செய்திருந்த பெண்களும் வேலையை விடுவதாகத் தெரியவில்லை. அவர்கள் அந்த வேலையை விடவும் கூடாது. பெண்கள் தம் வேலைகளில் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள்!

இதற்கிடையே சிகாகோ பல்கலைக்கழகம், என்னுடைய M.A ஆய்வுக்கட்டுரையை நிராகரித்து விட்டிருந்தது! விஷயம் போதாது என்று காரணம் சொன்னார்கள்!

உலகப்போரில் என் உயிரைப் பறிக்காமல் விட்ட விதி, என்னுடைய 47-வது வயது வரை படாத பாடு படவைத்து என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு எழுத்தாளனாக மாற்றியது! அதற்கு முன் நான் நியூயார்க்கில் “ஜெனரல் எலக்ட்ரிக்” (ஜி.ஈ -General Electric) கம்பெனியின் விளம்பரப் பிரதிநிதியாக வேலை பார்க்க வேண்டியிருந்தது!

அப்போது ஜி.ஈ-யில் ரானால்ட் ரீகன் (Ronald Reagan) என்ற அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாத நடிகரும் வேலை பார்த்து வந்தார். அவர் ஊரெல்லாம் சுற்றி வணிக அமைப்புகளிடமும், வேறு பல நிறுவனங்களிடமும் சோஷலிஸத்திற்கெதிராக போதித்து வந்தார். நாங்கள் கடைசி வரை சந்தித்துக்கொள்ளவே இல்லை. என்னுடைய சோஷலிஸத்திற்கும் எந்த பங்கமும் வரவில்லை.

1950-களில் என்னுடைய எதிர்காலக் குடியரசுத்தலைவர் (ரானால்ட் ரீகன் இரண்டு முறை அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) தன்னுடைய பிரசங்கங்களில் மூழ்கியிருந்தபோது நான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். பெரும்பாலும் இரவு நேரங்களிலும், வார இறுதியிலும் எழுதினேன். அப்போது எனக்கு இரண்டு குழந்தைகள் வேறு ஆகிவிட்டிருந்தன. மேலும் எனக்குச் சுய மரியாதையும் அந்த நாட்களில் தேவையாக இருந்தது.

அந்நாட்களில் சிறுகதைகளுக்கு ஊரெங்கும் ஏகப்பட்ட கிராக்கியாக இருந்தது. மூன்று-நான்கு வார இதழ்களும், ஆறு மாதப்பத்திரிக்கைகளும் அப்போது சிறுகதைகளைப் பிரசுரித்து வந்தன.

எனக்கென்று ஒரு ஏஜெண்டை நியமித்துக்கொண்டேன். ஒரு வேளை என்னுடைய கதைகள் வாசகர்களுக்குப் பிடிக்காமல் போகலாம் என்று ஏஜண்டுக்குத் தோன்றினால், அதை எப்படி சரி செய்வது என்று அவர் கூறுவார். அந்தக்கால பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும், ஏஜண்டுகளுக்கும் ஒரு கதையை இங்கே அங்கே மாற்றி அதை எப்படி ‘சரி செய்வது ‘ என்ற வித்தை தெரிந்திருந்தது. (ஏதோ அவர்கள் மெக்கானிக்குகள் போலவும், கதைகள் விரைவுப்பந்தய கார்கள் போலவும்!). இப்படியாக நான் மூன்று சிறுகதைகளை விற்றிருந்தேன். அது ஜி.ஈ -யில் எனக்குக் கிடைத்து வந்த ஒரு வருட சம்பளத்தை விட அதிகமாக இருந்தது!

பின்னர் நான் ஜி.ஈ வேலையை விட்டு விட்டு என் முதல் நாவல் “ப்ளேயர் ப்யானோ” (Player Piano) -வை எழுத ஆரம்பித்தேன். அது ஜி.ஈ-யைக் கிண்டல் செய்து எழுதப்பட்டது.

பின்னர் நான் என் குடும்பத்தை கேப் காட்-டிற்கு (Cape Cod) மாற்றினேன். அங்கே நார்மன் மெயிலரை (Norman Mailer) சந்தித்தேன். அவரும் என்னைப் போலவே கல்லூரிப் படிப்பை முடித்திருந்த ராணுவ வீரர். ஆனால் அப்போது அவர் தன்னுடைய முதல் நாவல் காரணமாக மிகப் பிரபலமானவராகவும் இருந்தார். அவர் மீது எனக்கு மிகப்பெரும் மரியாதை இருந்தது. இப்போதும் இருக்கிறது.

கொஞ்ச நாட்களில், விளம்பரதாரர்கள் பத்திரிக்கைகளுக்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை சிறிது சிறிதாகக் குறைக்க ஆரம்பித்தார்கள். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் எழுதும் ‘பெளத்த தியானங்களுக்கு ‘ மதிப்பு குறைய ஆரம்பித்தது.

ஒரு காலத்தில் என்னுடைய கதைகளை ஏராளமாக வாங்கி வந்த “காஸ்மோபாலிட்டன்” (Cosmopolitan) மாதப்பத்திரிக்கை இப்போது சகிக்க முடியாத விஷயங்களை எழுதி வரும் செக்ஸ் வழிகாட்டியாகி விட்டது.

1953-இல் நான் மூன்று குழந்தைகளுக்கு தகப்பனாகியிருந்தேன். அதற்கு மேலும் சிறுகதை வருமானத்தை நம்பிக்கொண்டிராமல், உள்ளூர்ப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்க்க ஆரம்பித்தேன். பின்னர் பாஸ்டன் நகரைச் (`Boston) சேர்ந்த ஒரு நிறுவனத்திற்காக விளம்பரங்கள் எழுத ஆரம்பித்தேன். இரண்டு நாவல்களையும் எழுதினேன். ஆனால் அவற்றை எவரும் சீண்டவில்லை. என் சிறுகதைகளுக்கு என்ன காசு கிடைத்ததோ அவ்வளவுதான் என் நாவல்களுக்கும் கிடைத்தது.

கொஞ்ச நாட்கள் அமெரிக்காவிற்குப் புதிதாக வந்திருந்த ‘சாப் கார்களை ‘யும் (Saab Autombiles) விற்க முயற்சி செய்தேன். (Saab என்பது ஸ்வீடனைச் சேர்ந்த கார் கம்பெனி) அவற்றின் கதவுகள் காற்றில் தானாகத் திறந்து கொண்டன. ஒவ்வொரு முறை அதற்கு பெட்ரோல் விடும்போதும் மறக்காமல் ஆயிலையும் கலந்து விட வேண்டும். இல்லையென்றால் என்ஜின் அதன் கனிம வடிவதற்குத் திரும்பி விடும். என்னுடைய வாடிக்கையாளர் ஒரு முறை அப்படிச் செய்ய மறந்துவிட, ஆப்பு, சுத்தியல் கொண்டு நான் வெளியே எடுத்த என்ஜின், கரேலென்று எதோ விண்கல் போல இருந்தது!

அதன்பின்னர் நான் இலக்கியப் படைப்பு முறையைச் (Creative Writing) சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். முதலில் அயோவா பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஹார்வார்ட், நியூ யார்க் ‘சிடி காலேஜ் ‘ (City college) ஆகியவற்றிலும் இலக்கியப் படைப்பு முறையைச் சொல்லிக்கொடுத்தேன். ‘கேட்ச் – 22 ‘ (Catch 22) எழுதிய ஜோசஃப் ஹெல்லர் (Joseph Heller) அப்போது சிடி காலேஜில் வேலை பார்த்து வந்தார். ஜோசஃப் ஹெல்லர் என்னிடம் போர் வராமலிருந்திருந்தால் சலவையாளர் வேலைக்குப் போயிருப்பேன் என்று சொன்னார். போர் மட்டும் வராமலிருந்திருந்தால் நான் “இண்டியானாபொலிஸ் ஸ்டார்” (The Indianapolis Star) பத்திரிக்கையின் ஆசிரியராகியிருப்பேன் என்று பதில் சொன்னேன்!

இப்போது சிறுகதைப் படைப்பின் ரகசியங்களைச் சொல்லப் போகிறேன். உங்கள் காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்:

1) உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!

2) கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.

3) ஒவ்வொரு கதாபாத்திரமும் எதையாவது ஒன்றை விரும்ப வேண்டும் – குறைந்தபட்சம் ஒரு கோப்பைத் தண்ணீரையாவது!

4) ஒவ்வொரு வாக்கியமும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் – பாத்திரத்தை வெளிப்படுத்துதல், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல்!

5) முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!

6) குரூர மனப்பான்மை கொண்டவராக இருங்கள். உங்கள் கதாபாத்திரங்கள் எவ்வளவு இனிமையான அப்பாவிகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாழ்வில் மிக மோசமான விஷயங்கள் நடைபெறட்டும்!

7) ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!

8) உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள். சஸ்பென்ஸைத் தூக்கிக் குப்பையில் போடவும்! கதையைத் தாங்களே முடிக்குமளவிற்கு வாசகர்களுக்கு என்ன, எங்கே, எப்படி நடந்ததென்று கதை புரிந்திருக்க வேண்டும். கடைசிப் பக்கங்களை கரையான்கள் தின்னட்டும்!

என் தலைமுறையின் அமெரிக்காவின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஃப்ளானெரி ஓ-கானர் (Flannery O ‘Connor 1925-1964) என்னுடைய முதல் விதியைத் தவிர்த்து மற்ற அத்தனை விதிகளையும் உடைத்தெறிந்தார். மிகச்சிறந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருமே அப்படிச் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஓ-கானர் என்னுடைய ஏழாவது விதியை (ஒருவருக்காக மட்டும் எழுதுங்கள்) மீறினாரா என்று தெரியவில்லை. அதைக் கண்டுபிடிப்பதற்கான வழி எதுவும் தெரியவில்லை. ஒருவேளை சொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அங்கே ஓ-கானர் இருந்தால், நாம் அங்கே அவரைச் சந்திக்க நேர்ந்தால் அவரையே நேரடியாகக் கேட்பதுதான் ஒரே வழி!

ஆனாலும் அவர் ஏழாவது விதியை மீறவில்லை என்பதில் நான் கிட்டத்தட்ட முடிவாக இருக்கிறேன். மனநிலை சிதைந்து போன நிறைய எழுத்தாளர்களைக் குணப்படுத்திய மனநல மருத்துவர் முனைவர் எட்மண்ட் பெர்க்லர் (Dr.Edmund Bergler) “ஒரு எழுத்தாளரும் மனநல ஆராய்வும்” (The Writer and Psychoanalysis) என்ற புத்தகத்தை எழுதினார். அதில் எல்லா எழுத்தாளர்களுமே, தெரிந்தோ, தெரியாமலோ தனக்கு நன்றாகத் தெரிந்த ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமான விஷயமெல்லாம் இல்லை இது. பொதுவான மனித இயல்பு என்றே எனக்குப் படுகிறது.

மேலும் யாருக்காக ஒரு எழுத்தாளர் எழுதுகிறார் என்பதைக் கண்டுபிடிக்க “மனநல ஆராய்வு” (Psychoanalysis) தேவையாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். அதைப் படித்தபின் நான் யாருக்காக எழுதி வருகிறேன் என்று சில நிமிடங்கள் யோசித்தேன். அது என் தங்கை ஆலி (Allie) என்று எனக்குத் தெரிந்தது. அவளுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கும் எந்தப் பகுதியையும் கதையிலிருந்து நீக்கியிருக்கிறேன்.

ஆலி இப்போது என் முதல் மனைவி ஜேன், ஓ-கானர், Dr.எட்மண்ட் ஆகியோருடன் சொர்க்கத்தில் இருக்கிறாள். இருந்தாலும் இப்போதும் நான் அவளுக்காக எழுதுகிறேன். ஆலி நிஜ வாழ்க்கையில் குறும்புக்காரி. அது நான் என் கதையை குறும்பாகவும், நகைச்சுவையாகவும் எழுத அனுமதியளிக்கிறது. நானும், ஆலியும் மிக நெருக்கமானவர்கள்.

என்னுடைய கருத்துப்படி, ஒருவருக்காக எழுதப்படும் கதை, வாசகரைக் கதையில் நடைபெறுவதில் பங்குள்ள ஒருவராக நினைக்க வைக்கிறது. இது வாசகரைத் தனக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, ஹோட்டலில் அடுத்த மேசையில் இருவருக்கிடையே நடைபெறும் சுவாரசியமான உரையாடலை ஒட்டுக்கேட்பதுபோல் நினைக்க வைக்கிறது.

ஒருவருக்காக எழுதப்பட்ட கதை பல வாசகர்களை மகிழ்விப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஒருவருக்காக எழுதப்பட்ட கதைக்கென்று விளையாட்டு மைதானம் போல சில எல்லைக்கோடுகள் இருக்கின்றன. கதை தன் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது. இது வாசகருக்கு எழுத்தாளரின் விளையாட்டை பக்கவாட்டிலிருந்து பார்ப்பது போல ஒரு உணர்வைத் தருகிறது. அடுத்து கதை எங்கே செல்லப் போகிறது ? எங்கே செல்ல வேண்டும் ? ஐயோ… அது நடக்கக் கூடாது! என்றெல்லாம் ஒரு விளையாட்டைப் பார்ப்பது போல வாசகரை நினைக்க வைக்கிறது!

என்னுடைய எட்டாவது விதி ஞாபகம் இருக்கிறதா ? “உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள்”. இந்த விதி வாசகரும் நம்முடன் சேர்ந்து விளையாட உதவுகிறது. மெத்தப் படித்த மேதாவிகளைத் தவிர, வேறு யாருக்கு வாசகரும் சேர்ந்து விளையாட முடியாத, நிறைய தகவல்களைக் கோர்த்துப் படிக்க வேண்டிய கதையைப் பிடிக்கும் ?

என்னுடைய கதைகளின் ஆடுகளத்தின் எல்லைகள், என்னுடைய ஒரே தங்கையின் ஆத்மாவின் எல்லைகளாக இருந்தன. இந்த விதியின் வழியாக இப்போதும் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஆமென்.

Series Navigation