சிசு வதைப் படலம்!

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

சி. ஜெயபாரதன், கனடா


[சென்ற வாரத் திண்ணையில் ‘பெண்சிசு வதையில் ‘ பாதிப் பாபத்தை மட்டும் காட்டிப் ‘பெண்களை நம்பாதே ‘ என்னும் ஒரு புதுக் கவிதையைச் சாத்தூர் நண்பர் மீ. வசந்த் எழுதி யிருந்தார்! அவர் எழுத மறந்த மீதிப் பாபத்தைக் காட்ட எழுகிறது, இந்தக் கவிதை!]

கற்கால வானர மனிதன் முதல்
தற்கால வாலறிவுப்
பட்டதாரிகள் வரை
ஏகாதிபத்திய வாதிகளாய்
படமெடுத் தாடிய
ஆடவர் ஆணவத்தை
மகுடி ஊதிக்
கூடைக்குள் மூடிய
மாடப் புறாக்கள் எத்தனை ? எத்தனை ?
அப்பாவிப் பேதைகளை
சந்தையில் வாங்கி
அடிமையாய், விலங்குகளாய்,
அறிவற்ற பிறவிகளாய்,
அந்தப்புரத்தில்
அடக்கிப் பூட்டிய
பித்தர் புராணம்
எத்தனை! எத்தனை!

கன்னிப் பெண்ணைக் கடத்தி
திருவிளையாடல் புரிந்து
கற்பழித்து
கர்ப்பவதி யாக்கி
புறக்கணித்து ஓடி
தப்பிக் கொள்ளும் தம்பிரான்கள் யார் ?
வயிற்றில் வளரும் பெண்கருவை
உடனே கலைக்க
வற்புறுத்தி, பயமுறுத்தி
உத்தரவிடும்
சர்வாதிகாரி யார் ?
மருத்துவ மனைக்கு
பெண்சிசுவை அழிக்க விரையும்
கர்ப்பப் பெண்ணை
ஓடி நிறுத்தாமல்
ஊமைக் கணவன்
உத்தமன்
உயிரோடு
செத்தா போனான் ?
சிசுவைக் கொல்பவள் குற்றவாளி
என்றால்
உடந்தையான புருசன் மட்டும்
நிரபராதியா!

வாலிப சங்கத்தின்
வாடிக்கையான
நல்ல மனிதர்கள்
கண்களை மூடித் தியானத்தில்
வேடிக்கை பார்ப்பார்!
உத்தமிகள் இல்லா
மாதர் சங்க கூட்டம்
போராடும் போதில்
தடியுடன் எதிர்க்கும் குண்டர்கள் யார் ?
பெண் சிசுவை விதைத்த பிரம்மாக்கள்!
தொப்புள் கொடி அறுக்காத
சிசுவைச்
துணியில் சுருட்டி
நள்ளிராப் பொழுதில் கள்ளனைப் போல
நடுங்கிய வண்னம்
குப்பைத் தொட்டில்
இட்டவன் யார் அறிவீரா ?
அப்பன் என்னும் அரக்கன்

வேசியின் இதழ்களை
நாவில் தொடாத
ஆழ்வார் புராணம் எங்கே உள்ளது ?
வறுமையில் புழுவாய்த் துடிக்கும் நங்கையர்
வயிற்றுக்காக
உடலைச் சில நிமிடம்
விற்பது மட்டும்
அற்ப பாபம் ஆகாது!
செவ்விளக்கு சந்தைப் பொந்துகளில்
சிக்கிய ஏழைப் பெண்டிர்
வேசியாய் மாறி
வேதனைப் படுவதை
பம்பாய் நகரில் பாரீர்!
அந்த வருவாயில் தொந்தி பெருக்கும்
ஆணவக் குண்டர் அனைவரும்
ஆடவர்! ஆடவர்! ஆடவர்!
வாடகைப் பணத்தை வாரிக் கொடுத்து
மாடப் புறாக்களை
நாடுபவன் மட்டும் நல்லவன் இனமா ?
கற்பை விற்பவள் பாதகி என்றால்
கற்பை வாங்கி
கற்பை இழக்கும் ஆணும்
அற்பனே!

மதுரை மாநகரில்
வஞ்சகக் கொல்லன் தெருவில்
வாழ்ந்தோர்
கூரைகள் யாவினும்
தீயினை வைத்தவள்
தீப்பெட்டி தொடாத
அப்பாவி
கண்ணகியா ?
தப்பாக ஒரு பேதை மீது
சுமத்தும் பழியது!
வெகுண்டு வெள்ளமாய் எழுந்த வீதி ஆடவர்
புகுத்திய தீ
தெருக்களில் எரிந்தது!
திரைகடல் ஓடித்
திரவியம் தேடும் சில
பிறவிகள் மற்ற
உறவு மங்கையர் மடியில்
உறங்கி வருவதும்
வரலாறு ஏடுகளில்
வடிக்கப்பட வேண்டும்!

அன்னை தெரேசா இந்திய மண்ணில்
என்ன செய்தார் ?
ஆடவர் துரத்திய அபலைப் பெண்டிர்!
வேடர்கள் சுவைத்த பின்
விரட்டிய
வேசிப் பெண்டிர்!
பிறந்த ஊரிலே ஒதுக்கப் பட்ட
அகதிப் பெண்டிர்!
செத்தும் சாவாத அனாதிப் பெண்டிர்!
அத்தனை பலி ஆடுகளுக்கும்
அடைக்கலம் தந்தார்!
அன்னை தெரேசாவை மட்டும்
பெண்ணாய் மதித்து
மற்ற பெண்டிரை மண்ணாய் மிதித்து
முற்றிலும் நம்பாமல்
குற்றவாளி ஆண்களை விடுதலை செய்யும்
மனு நீதிபதிச் சோழன்
போதிப்பதை மட்டும்
வேதமாய்
ஏற்றுக் கொள்ள
வேண்டுமா ?

***
jayabar@bmts.com

Series Navigation