சாமியேய். ..

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

மாது


அன்று சனிக்கிழமை.

தொலைக் காட்சியில் உள்ள எல்லா சானல்களையும் எவ்வளவு வேகமாக மாற்ற முடியும் என்ற போட்டியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். தொலைபேசி என் போட்டிக்கு எதிராக மணி அடித்துச் சதி செய்து கொண்டிருந்தது. முதல் தடவை பொருட்படுத்தவில்லை. இரண்டாம் தடவை ‘போன் பக்கத்திலேயே உக்காந்துகிட்டு போன எடுக்காம அப்படி என்ன முக்கிய வேலையோ ‘ என்ற என் வீட்டுக் காரியின் செல்லக் குரலுக்கு பணிந்து தொலைபேசியைக் கையில் எடுத்தேன்.

‘சாமி சரணம் ‘ மறுமுனையில் ஆண் குரல்.

வணக்கம், குட் மார்னிங், ஹல்லோ என்ற விளிப்புகளுக்கே பழக்கப் பட்டிருந்த எனக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை.

‘யாரு குமாரா…. ‘ என்று இழுத்தேன்.

‘ஆமாப்பா குமார்தான். நாளைக்கு என்ன பண்ற ? ‘

கைவசம் தயாராக பொய் ஒன்றும் இல்லாததால் ‘விஷேசமா ஒன்னுமில்ல…வீட்லதான் இருக்கப் போறேன் ‘ என்றேன்.

‘ஒன்னுமில்ல, மால போட்டுருக்கேன். நாளைக்கு எங்க காலனில ஒரு கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம். வரமுடியுமா ? ‘

ஐயப்ப சாமி எல்லோரையும் சாமியாக்கும் சோஷலிஸ சாமி என்பதாலும், வெட்டி முறிக்கும் வேலை எதுவும் இல்லையென்பதாலும், ‘சரி ‘ என்று ஒப்புக் கொண்டேன்.

‘உம்ம்…நாளைக்கு நாயித்துக் கிழம, என் டிரைவர் வர மாட்டார், பரவால்ல கால் டாக்ஸி வச்சுக்கிட்டு வந்துடறேன் ‘

‘எதுக்கு. நான் கார் அனுப்பறேன். அஞ்சு அஞ்சரைக்கு வந்து பிக்கப் பண்ண சொல்றேன். பாப்போம். சாமி சரணம் ‘

‘சாமி சரணம் ‘

‘இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன், நீ மாத்திரம் தனியா வா. சாமி சரணம் ‘.

* * *

ஞாயிற்றுக் கிழமை. சொன்னபடியே ஐந்தரை மணிக்கு கார் வந்தது.

காரில் ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டிருந்தார் யாரோ ஒரு பாடகர். பதினெட்டு படியும் ஏறி முடிப்பதற்குள் குமார் வீடு இருக்கும் காலனிக்குச் வந்து சேர்ந்து விட்டோம்.

‘ஐயா உங்கள நேரா மூசிக் நடக்கற இடத்துக்கே கூட்டிக்கிட்டு வரச் சொன்னார் ‘ என்றார் டிரைவர்.

நான்கு சந்துக்கள் கூடும் இடத்தில் ஒரு மேடை அமைத்திருந்தார்கள். எங்கு திரும்பினாலும் சாமிகளின் கூட்டம். மேடையில் டிரம்ஸ், கீபோர்ட் போன்ற இசைக்கருவிகளுக்கு பின்னால் நீல வேட்டி சட்டை அணிந்திருந்த இளவயது சாமிகள் நின்று கொண்டிருந்தார்கள். மேடையின் மேல் குந்திக்கொண்டிருந்த மின்விளக்கு ஹரிஹரசுதனின் கையிலிருந்து எலெக்ட்ரிக் அருள் பொங்கி வழிந்துகொண்டிருந்தது.

‘சாமி சரணம் ‘

குமார் சாமி.

‘என்ன சாமி கச்சேரின்னீங்க ‘

‘ஆமா, லைட் ம்யூசிக். எங்க காலனி ஆர்கெஸ்ட்ரா ரொம்ப ஃபேமஸ். வருஷா வருஷம் எங்க காலனிலேர்ந்து நாப்பது பேர் மலைக்கு போறோம். நல்ல கட்டுப்பாடோட பூஜையெல்லாம் நடத்துறோம். லைட் ம்யூசிக்கு கூட லேடி வாய்ஸ் குடுக்கறது ஆம்பள சாமிதான் ‘ என்று பேசியவாறு எனக்கு பின்னால் பார்த்து ‘சாமி சரணம் ‘ என்றார்.

திரும்பினேன். என் டிரைவர் சாமி.

‘கச்சேரி ‘ ஆரம்பித்து விட்டிருந்தது. முதல் பாடல் – பிள்ளையாருக்கும் ஐயப்பனுக்கும் உள்ள உறவை வைத்து யாரோ ஒருவர் பாடிக் கொண்டிருந்தார். தொடர்ந்த பாடல்கள் நல்ல தாளக் கோப்போடு இருந்தன. நிறைய சாமிகள் எழுந்து ஆடிக் கொண்டிருந்தார்கள்.

இருபது நிமிடம் சென்றது. கூட்டத்தில் சிறு சல சலப்பு. ஆறடி உள்ள ஆஜானுபாகுவான சாமி ஒருவர் மேடையில் ஏறினார். கூட்டம் கை தட்டி ஆர்ப்பரித்தது. ஆறடி சாமி ‘உம்ம்ம்ம் ‘ என்று இழுத்து சுருதி சேர்த்தார் கே.பி. சுந்தராம்பாள் மூக்கால் பாடுவது போல் இருந்தது. கணீரென்று பாட ஆரம்பித்தார்.

‘ஐயப்ப ராசா, ஐயப்ப ராசா, ராசா ராசா ஐயப்ப ராசா…. ‘

ஆடிக் கொண்டிருந்த ஓரிரண்டு சாமிகள் குதிக்க ஆரம்பித்தார்கள். மற்ற சாமிகள் அவர்களை அழுத்தி பிடித்துக் கொள்ள ஓடினார்கள்.

‘சாமி வந்திரிச்சு…சாமி வந்திரிச்சு, சூடத்த கொண்டா ‘

என் மனது, காடு மேடுகளில் கல்லையும் முள்ளையும் பொருட்படுத்தாமல் நடிகையை – யார் ச்சாயா சிங்தானே ? – துரத்திக் கொண்டிருந்தது.

oooo

tamilmaadhoo@yahoo.com

Series Navigation

மாது

மாது