முனைவர். மு. பழனியப்பன்,
இந்தியாவில் தோன்றிய, இந்தியாவை வந்தடைந்த பெரும்பாலான சமயங்களின் கொள்கைகள் தமிழிலக்கியங்களில், தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமணத்திற்கு கவுந்தியடிகளையும், பௌத்தத்திற்கு மணிமேகலையும், வைணவத்திற்கு சீதையையும், சைவத்திற்கு திலகவதியாரையும், கிற்த்துவத்திற்கு மரியாளையும், இஸ்லாத்திற்கு கதீஜாவையும் எடுத்துக்காட்டும் வரிசையில் சாங்கிய மதத்திற்குப் பெருங்கதையின் சாங்கியத்தாய் பாத்திரத்தை எடுத்துரைக்க முடிகின்றது. குறிப்பாக பெண்பாத்திரங்கள் சமயவழி மீறாத, தவறாத அளவில் படைக்கப்பெற்றிருப்பதால் அவை, தான் சார்ந்த சமயத்தின் சிறந்த குறியீடுகளாக நிற்கின்றன.
சாங்கியமதம்
சாங்கியம் , என்ற சொல்லுக்குப் பொருள் பூரண (முழுமையான) அறிவு (கி.லட்சுமணன்,இந்தியத்தத்துவஞானம், ப.184). முலப்பொருள் பற்றி முழுமையான அறிவைத்தரும் மதம் சாங்கிய மதமாகும். அறிவே சொருபமான பொருள் எதுவோ அது மாற்றமடையாது என்ற இதன் கொள்கையால், முலப்பொருள் மாற்றமடையாத ஒன்று என இம்மதம் முடிவு கொள்ளுகின்றது. இம்மதத்தினைத் தோற்றுவித்தவர் கபிலமுனிவர் ஆவார். இவருக்குப்பின் இவரது சீடர்களான அசூரி, பஞ்சசீசர் முதலானோர் நூல்கள் படைத்து இச்சமயம் வளரஉதவினர்.
கி. பி. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சாங்கியக் காரிகை என்னும் நூல் சாங்கிய கொள்கைகளை தெளிவுபடவுரைத்தது. இந்நூலின் ஆசிரியர் ஈஸ்வரகிருஷ்ணர் ஆவார். இதனைத் தொடர்ந்து கி. பி 6ம் நூற்றாண்டில் `யுக்திதீபிகை’ என்னும் நூல் இயற்றப் பெற்றது. இதன் பின் சாங்கியப்பிரவசன சூத்திரம் வெளிவந்தது (சத்காரி முகர்ஜி கீழை மேலை மெய்ப்பொருள் வரலாறுதொகுதி 1: ப.415) . இவ்வாறு தொடர்ந்து சாங்கியமதம் நின்று நிலவி வந்துள்ளது.
இச்சமயம் கடவுள் என்ற கருத்துருவை ஏற்பதில்லை. உலகம் பிரகிருதி, புருடன் ஆகிய இருபொருட்களால் ஆனது. பிரகிருதி என்ற பொருள் அநித்தியமானது, வியாபகமானது, சடஉலகம் ஒடுங்குவது அதில் தான். மீண்டும் தோன்றுவது அதிலிருந்துதான்: புருடன் மாற்றமடையாத பொருள் அல்லது முலப்பொருள் என்ற கொள்கைகளை இச்சமயம் முன்வைத்தது.
சாங்கியத்தாய்
பெருங்கதைப் பாத்திரங்களுள் குறிப்பிடத்தக்க இடம் பெறுவது இப்பாத்திரமாகும். கதைத்தலைவியருள் ஒருவரான வாசவதத்தையின் செவிலித்தாயாகவும், உதயணனுக்குத் தக்கநேரத்தில் உதவுகின்றவளாகவும், யூகிக்கு அறிவு கொளுத்துகின்றவளாகவும் இப்பாத்திரம் விளக்குகின்றது.
இப்பாத்திரம் அந்தணவகுப்பைச் சார்ந்ததாகும். உதயணனின் தந்தை அவையில், அலுவல் பார்த்து வந்த அந்தணர் ஒருவரை மணம்புரிந்து இப்பாத்திரம் வாழந்துவரும் நாளில், அவ்வந்தணன் மீண்டுவரா அளவில் யாத்திரை மேற்கொண்டதால் தனக்குரிய கற்பொழுக்கத்திலிருந்துச் சற்று சரிந்தது. இதுகுறித்து அனைவரும், இப்பாத்திரத்திற்கான தண்டனை யாதென ஆலோசிக்கின்றனர். செங்கற்பொடியை உடல் முழுதும் தூவி, ஊர்க்கு இவளின் இவ்விழிநிலையை பறையறிவித்துத் தெரிவித்துப்பின், குடங்களைக் கட்டி ஆற்றுநீரில் இறக்கிவிட முடிவெடுக்கப்படுகின்றது. உயிர்போகும் அளவு தண்டிக்கப்பட்ட இத்தண்டனையை அறிந்த உதயணன் அதனைத் தடுத்து நிறுத்திட வேண்டுகின்றான். இளவரசனின் ஆணைகேட்டு: படகில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படவிருந்த அவள் தடுக்கப்படுகிறாள். அப்போது நிகழ்ந்த அவசரச்செயல்களால், துடுப்பின் பகுதி இவள் நெற்றியில் பட, வடுப்பெறுகிறாள். இவளின் உடல் வடுவையும், மனவடுவையும் கண்ட உதயணன் இவளுக்கு, அறம் தவறியோர்க்கான தேசயாத்திரைத் தண்டனையை வழங்குகிறான். இதன்முலம் உயிர்க்கொலையிலிருந்து விடுதலைபெற்ற இவள் வடதிசைநோக்கிச் செல்கிறாள். அங்கு சாங்கிய குழுவினருடன் இணைந்து ஈராண்டு வாழ்கிறாள். இவளின் அந்தணச்சாதி மாற்றப்படவில்லை. மாறாக இவளின் மதக்கொள்கை மட்டும் மாற்றப்படுகின்றது. உடல்வடு, மனவடு நீங்கி, மாற்றம் பெறுகிறாள்.
சாங்கியம் காட்டிய `பிரகிருதி’ தத்துவம் இவள் வாழ்வில் புது மலர்வை உண்டாக்கியிருக்க வேண்டும். புருடன் என்னும் ஆன்மாவை உடைய இவள் இவ்வாறு மாறியதற்கான காரணம் `பிரகிருதி’ என்னும் உலகச்சூழலே ஆகும். அது முதல் இவளின் இயற்பெயர் மறைந்து, அந்தணி என்றும் சாங்கியத்தாய் என்றும் அழைக்கப்பெறுகிறாள்.
சாங்கியர்களின் புறத்தோற்றம்
இவள் தான் இணைந்த சாங்கியமதத்தாரைப் பற்றிக் குறிப்பிடும் இடத்து, அவர்களின் உருவநலன் தெரியவருகின்றது.
“பூதியும், மண்ணும், பொத்தகக்கட்டும்
மானுரி மடியும் மந்திரக் கலப்பையும்
கானொடு மனையும் கட்டுறுதியாத்த
கூறை வெள்ளுறிக் குண்டிகைக்காவினர்”
(சாங்கியத்தாய் உரை: 225228)
விபூதி அணிந்த நெற்றியனர், முனைமழுங்கிய புத்தக்கட்டுகள் வைத்திருப்பர், மான்தோலாடை அணிந்திருப்பர். மந்திரக்கலங்களைப் பைக்குள் இட்டுத் தோளில் அணிந்திருப்பர், அமர்வதற்கான மனை தாங்கியிருப்பர், கமண்டலம் கைக்கொண்டிருப்பர். வெள்ளைத்துணியைக் காவடியாகக் கொண்டு பொருள்கள் சுமந்து நடப்பவர்கள் என்று சாங்கியமதத்தாரின் காட்சி பெருங்கதை வழி தெரியவருகின்றது. இப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருத்தியாகச் சாங்கியத் தாய் இருந்தாள். இவர்களுக்குக் குருவாக சாறயர் முனிவர் என்பவர் இருந்துள்ளதாகக் கருதலாம். அவர்
“தரும தருக்கர் தற்புறஞ் சூழப்
பரிபு மெலிந்த படிவப் பண்டிதன்
சாங்கிய நுணித்தவோர் சாரயர் முனிவனை”
(சாங்கியத்தாய் உரை: 230232)
எனக்காட்சிதருகிறார். அம்முனிவரைச் சுற்றிலும் தருக்கவாதிகள் இருந்தனர். அவர் பரிவுடையவராக, மெலிந்தவராக, பண்டிதப் படிவமுடையவராக, சாங்கிய அறிவு தெளிந்தவராகத் திகழ்ந்தார் எனப் பெருங்கதை காட்டுவது அதன் சமயப்பொதுமைக்குச் சான்றாகின்றது.
இவர் அக்காலத்து திகழ்ந்த அறுவகைச் சமயங்கள் குறித்த அறிவு பெற்றவராக இருந்தார். அவர்முலம் சாங்கியத் தாய் அறுவகை சமய அறிவைப் பெற்றாள். மேலும் இக்கூட்டத்தார் இமயம் முதல் குமரிவரை தம்சமயம் பரப்பும் எண்ணமுடையவராகவும் இருந்துள்ளனர்.
“அத்தவப் பட்டாங்கு அவகைச்சமயமும்
கட்டுரை நுனித்த காட்சியே னாகி
இமயப் பொருப்பத்து ஈராண்டுரைந்தவின
குமரித்தீர்த்தம் மரீஇய வேட்கையின்
அருந்தவ நுனித்த அறவாசிரியன்
தரும வாத்திரையெனத் தக்கனம் போந்துழி”
(சாங்கியத்தாய் உரை: 233238)
என்ற பாடலடிகள் முலம் மேலுணர்த்திய செய்தி தெரியவருகின்றது.
தென்னாட்டில் சாங்கிய மதவெற்றி
ஒரு சமயம், ஒரு நாட்டு அரசனால் பின்பற்றப் பெறும் பொழுது, அது அதிக செல்வாக்கை மக்களிடம் பெற்றுவிடுகின்றது. அரச செல்வாக்கால் இது நடைபெறுகிறது என்றாலும், அம்மதத்திற்கு அது சிறந்த வெற்றியேயாகும்.
சாங்கியர் தென்னாட்டு வருகையின் போது, அவந்தி நாட்டரசன் பிரச்சோதனன் ஒரு சமயவிவாதத்திற்கு அழைப்பு விடுகின்றான். அதில் ஐவகை சமயங்களும் கலந்து கொள்ளுகின்றன. இவ்விவாதத்திற்கு ஏற்பாடு செய்தவர் `காள சமணன்’ என்பார் ஆவார். அதனால் சமணசமயம் விவாதத்திற்கு அப்பாற்பட்டு, அரசனின் முதல் மரியாதைக்குரிய திகழ்ந்தது என்பதைக் குறிப்பால் உணரமுடிகின்றது. இரண்டாம் நிலையில் அரச மரியாதை பெற விரும்புகிற ஐவகை சமயங்களே போட்டி போட்டன என்பது தெளிவு
“கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்
தாழாப் பெரும்புகழ்க் காளக் கடவுள்முன்
பாலக னென்னும் பண்ணவர் படிவத்து
காள சமணன் காட்சி நிறுப்ப
ஐம்பெரும் சமயமும் மறந்தோற் றனவென
வேந்தன் நுதலிய வேதா சிரியரும்
தாந்தம் மருங்கிற்று ஆழங் காட்டி
சாங்கிய சமயந் தாங்கிய பின்னர்
நல்வினை நுனித்தோன் நம்மொடு வாழ்கவென”
(சாங்கியத்தாய் உரை :245253)
இங்கு இடம் பெற்றுள்ள `நம்மொடுவாழ்க’ என்பதால் சமணமும் சாங்கியமும் அங்கு அரச சமயங்களாயின என முடியலாம்.
இவ்வரசன் சபையில் சாங்கியர் வாழ, அரச மாதேவிக்குத் தோழியாக சாங்கியத்தாய் ஏறக்குறைய 11 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றாள். அப்பொழுது, வாசவதத்தையும் பிறந்ததால், இவள் அவளுக்குச் செவித்தாயாகவும் விளங்குகின்றாள். இவ்வாறு சாங்கிய மதம் அரசமரியாதை பெற்றுத்திகழ்ந்தது.
மதக்கொள்கைகளும், சாங்கியத்தாயின் மொழிகளும்
(அ) யூகிக்கான மொழிகள்
உதயணனை நல்வழிப்படுத்திய பின் அவன் வாசவதத்தையுடன் கூடி இன்பம் நுகருதலையே தலைமையாகக் கொண்டடொழுகினான். அவனைத் திருத்த யாதுசெய்வது என அவனின் நண்பன் யூகி எண்ணிய போது, அவனுக்கு நல்நெறி காட்டுகின்றாள் சாங்கியத்தாய் அதில் அவளின் சமயம் சார்ந்த உரைகள் அடங்கியுள்ளன. இதன் முலம் சாங்கியமதக் கொள்கைகளையும் அறிய முடிகின்றது.
இனியவர் கடமை குறித்த அவள் கூறும் மொழிகள் பின்வருமாறு.
“அற்றம் காத்தலின் ஆண்மை போவும்
குற்றம் காத்தலிற் குரவர் போலவும்
ஒன்றி யொழுகலின் உயிரே போலவும்
நன்றி யன்றிக் கன்றியது கடிதற்குத்
தகவில செய்தலிற் பகைவர் போலவும்
இனைய பிறவும் இனியோர்க் கியன்ற
படுகடன் ஆதியிற் பட்டது …” (யூகி சாக்காடு: 220226)
அழிவுகாத்தலுக்கு வாய்மை போலவும், குற்றம் நீக்கி அணைந்து கொள்வதற்குப் பெற்றோர் போலவும், உடலோடு வேறான உயிர் அதனோடு ஒன்றி நிற்றல் போலவும், தகவில செய்கின்றபோது அதனை கேலிசெய்யும் பகைவர் போலவும் இனியவர்கள், தம் நண்பர்களுடன் பழகவேண்டியது கடமையாகும் என்ற சாங்கியத் தாயின் கூற்று, அவள் சார்ந்த மதக்கருத்துக்களின் வெளிப்பாடாக விளங்குகின்றது.
“ஒன்றியொழுகலின் உயிரே போலவும்” என்ற வரி சாங்கியத் தத்துவத்தின் உயிர்க்கருத்தினை அறிவிப்பதாக உள்ளது. உடலிருந்து உயிர் தோன்றியது, உயிரிலிருந்து உயிர் தோன்றியது எனப் பற்பல சமயங்கள் கொள்கை கொண்டன. ஆனால் சாங்கியமதம் “சித்தும், சடமும் ஒன்றிலிருந்து மற்றது உற்பத்தியாகா வெவ்வேறான இரு முலப் பொருள்கள். உலகப் பொருள்கள் அனுபவிப்பதற்குரியவை. அவற்றை அனுவிப்பவனும் உளன் என்பது புலனாகின்றது. இதுவே ஆன்மா உண்டு (கி.லட்சுமணன்,இந்தியத்தத்துவஞானம், ப. 203)” எனக் கருதுகின்றது. இக்கருத்தின் வெளிப்பாடே மேற்காட்டிய வரியாகும். வேறுவேறான இவை ஒன்றும் போது இதுவேறு அதுவேறு எனச் சொல்லமுடியாத அளவிற்கு ஒன்றாகின்றன. அதுபோல இனியவர்கள் இருக்க வேண்டும் எனக் கருதும் கருத்து சாக்கிய மத கொள்கையின் கருத்தே ஆகும். எனவே நண்பனைத் திருத்த பகைவர் போல ஒழுகுக எனக் கூறி, வாசவதத்தையை மறைத்து இன்பமொழிக்க வழிகாட்டுகிறாள் சாங்கியத்தாய்.
(ஆ) வாசவதத்தைக்கான மொழிகள்
வாசவதத்தையை யானையிலேற்றித் தக்க இடம் கொணர்ந்த உதயணனை வாழ்த்தச் சாங்கியத்தாய் செல்கிறாள். அவளைக் கண்டு, வாசவதத்தை கலங்க, பெற்றோரைக் காண முடியாத அவளின் ஏக்கத்தைத் துடைக்கச் சாங்கியத்தாய் முயலுகின்றாள்.
“நாகாய் காண்கூன் பெருமான் நன்னகர்
உந்தத் திசையது என்றொன்றப் பிறவும்”
(யூகிக்கு விலாவித்தது: 7273)
சாங்கியத்தாய், வாசவதத்தையை ஒருமலையின் மீதேற்றி “அதோபார், உன் தந்தை ஆளும் நல்ல நகர் தெரிகின்றது. பின் ஏன் கலங்குகின்றாய். என்றும் அவனை நீ சென்று காணலாம்” என்று தேற்றும் குறிப்பின் முலம் “புருடன்(அ) ஆன்மா கலங்கும் கலக்கத்தை நீக்க, பிரகிருதியின் இயல்பு இது எனக்காட்ட முயலும் குரு சிஷ்ய சாங்கிய மத உறவு இங்கு செயல்பட்டுள்ளது ”என்பது தெளிவு.
இவ்வாறாக சாங்கியம் என்னும் சமயம், பெருங்கதையால் எடுத்தாளப் பெற்றுள்ளது. அந்தணப்பெண் ஒருத்திக்கு ஏற்பட்ட அவச்சொல்லை மாற்றி, அவள் சொல்லைக் கேட்டு மற்றவர்கள் நடக்கும் படி, பெருமையடையும் படி அவளைச் சாங்கியமதம் மாற்றியுள்ளது. அம்மதக் கொள்கைகளை ஏற்று சமுதாயத்தை வழி நடத்துபவளாகவும் அவள் விளங்கியுள்ளாள் என்பது மேலும் சிறப்பாகும்.
—
M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com
முனைவர். மு. பழனியப்பன்,
தமிழ்விரிவுரையாளர்,
மா. மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை.
- கோ.கண்ணனின் கவிதைகள்
- தேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா
- கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு
- நல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- ஜெயபாரதன் தொடர்கள்
- ” புறத்தில் பெருந்திணை “
- BAR1 invites you to attend its first Salon/open studio Bar 1/4 as part of its INDIA- INDIA residency.
- வரவேற்போம், முகம்மது அமீனை.
- ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- நன்றி, மலர் மன்னன்
- screening of the documentary film Out of Thin Air
- காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….
- இரண்டு கவிதைகள்
- வேத வனம் – விருட்சம் 44
- ஒலி மிகைத்த மழை
- இயலாமை
- பறவையின் இறப்பு
- இறகுப்பந்துவிடு தூது!
- தோற்கப் பழகு!
- மொட்டை மாடி
- நிழலின் ஒளி
- மூன்று கவிதைகள்
- மெளன கோபுரம்
- ஊகங்களும் ஊடகங்களும்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு
- காணாமல் போனவர்களின் மணல்வெளி
- சாகசம்
- பூமி என்னும் வண்ணக்கலவை
- வலியறிதல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு
- கண்டனத்துக்குரிய சில…
- சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.
- பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு
- இது பின்நவீனத்துமல்ல
- ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
- உயிர் தேடும் வண்ணங்கள்
- மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்
- வெட்கமற்றது
- ஆசை
- இயக்கம்..
- மரணத்தைத் தவிர வேறில்லை
- ஆகவே சொல்கிறேன்
- மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை
- மூன்று கவிதைகள்