சத்தியின் கவிக்கட்டு 15

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

சத்தி சக்திதாசன்


அம்மாவை நினைக்காத

அம்மா ! சொல்லும்போதே
நாவிலே தேனூறும் இனிமை
நெஞ்சிலே குளிரூற்றும் உணர்வு
தெய்வம் பிறந்தது எப்போ ?
அறிந்தவரில்லை ; நானறிவேன்
ஆம் என் அம்மா பிறந்த தினம்
எனக்கோர் புனித தினம் !

தெய்வத்தன்மை எது என்று
அறிஞர்கள் ஆராயும் போதினிலே
அம்மாவென்றொரு குழந்தையின்
அழுகுரல் ; அறிவித்தது
தாய்மையே தெய்வம் என்று !

உன் வயிற்றிலே நானுதித்தபோது
அறியேன் அம்மா
அன்புக்கு மறுபெயர் நீதானென்று
உனை நான் இழந்த தினம்
அறிந்தேனம்மா
அதற்கு ஈடு உலகில்
இல்லை என்று !

நானழுதால்
நீயழுதாய் தாயே !
நான் சிரித்தால்
நீ சிரித்தாய்
அளவின்றி அள்ளிக்
கொடுக்க புவியில் ஏதுமில்லை
என்றிருந்தேன்
தாயன்பை தாராளமாய்
தாரை வார்த்தாய்
தாயே நீ பிறந்ததினம்
எனக்கோர் புனித தினமே !

இல்லை என்றோர் வார்த்தை
தமிழில்
இல்லை என்றே என்னை
நம்ப வைத்தாய்
இப்போ நீ இல்லை எனும் போதுதான்
அதன் அர்த்தமே
புரிந்தேனம்மா !

நான் பிறக்கும்போது
நடுநிசியாமே ! அம்மா
தந்தை சொல்லக் கேட்டதுண்டு
விடியல் தேடி என்னை
உலகில் விழுத்தினாயா அம்மா ?

உனை இழந்த நாள் முதலாய்
நான் தேடிக்கொண்டே !
அன்பைத்தேடி ; புனிதத்தைத் தேடி
என் தாய்மண்ணைத் தேடி
தேடித் தேடிக் களைத்து இப்போ
தேய்ந்துபோன பாதத்துடன் உன்
நினைவுகளைத் தாங்கிக் கொண்டு
இந்தப் புனிதத் தினத்தில்
விரதம் காத்து நின்றேன்.

0000

வைரத்திற்கோர் விழா

பெய்யெனப் பெய்யும் மழையென
நீ பெய்த கவிமழையின்
ஈரம் இன்னும் காயவில்லை !

ஜம்பத்திஓராண்டுகள் இப்புவியில்
நீ மலர்ந்த நிகழ்வதற்கு
விழா எடுத்துக் களிப்புறும்
தமிழர் நெஞ்சம் கொண்டாடுதே

வைரத்தின் ஜொலிப்போடு
முத்துத் தந்த வெண்சிரிப்பெடுத்து
வைரமுத்தாக நீ கவியுலகில்
வலம் வரும் காலத்தை
பொற்காலமெனக் கொண்டாட
செம்மொழியின் காவலர்கள்
திருச்சியிலே ஆயிரமாய்
திரண்டு வந்தார்

உலகத் தமிழர் வதனமெங்கும்
உள்ளம் பொங்கும் ஒர் மலர்ச்சி
எங்கள் கவித்தலைவன்
தமிழ்ப்புதல்வன் ; தஞ்சையில்
பூத்த மலர்
தரணியில் இன்று தமிழர்களால்
வாழ்த்தப்படும் ஓர் வளமிக்க
கவிஞனின் புகழ்பாட ஓர்
பொற்தினம் கிடைத்தது எனும்
மகிழ்வே !

நீ வாழ்க ! நின் புகழ் வாழ்க !
நீ படைக்கும் கவி வாழ்க
நீ வளர்க்கும் கலை வாழ்க
வாழ்க வாழ்கவென வாழ்த்தும்
இந்தத் தம்பியுள்ளம்.
—-

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்