கூந்தலை முன்புறம் போடாதே!..

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

கவிமாமணி மதிவண்ணன்


வியர்த்த நெஞ்ச வெளிக்குள் ளேஒரு

..விசிறியைச் சுழற்றிய(து) உன்விழிகள்!-அடா,

உயிர்த்தன ஆயிரம் கற்பனைகள்!-நீ

..உரைத்ததோ என்னிடம் சிலமொழிகள்!

..

அரும்புகள் நொடிக்குள் அவிழ்ந்ததைப் போலவே-(உன்)

..அதரம் மீதிலோர் புன்சிரிப்பு!

இரும்பை இளகிய பாகாய் இயற்றிட

..இளமை கற்றதோ தனிப்படிப்பு!

..

இடையில் குறைந்த சதைதான் இரண்டு

.. எழுச்சிக் குடமாய் மிகுந்ததுவா ?

படையே இல்லா என்மேல் அம்புப்

..பார்வைநீ எய்வதும் தகுந்ததுவா ?

..

கந்தகச் சந்தனக் கன்னியே! உன்னால்

..கனலில்,குளிரில் இணைகின்றேன்!

சிந்தனைத் தூரிகை, சித்திரம் வரைகையில்

..சிறகுகள் இன்றிப் பறக்கின்றேன்!

..

கூந்தலை முன்புறம் போடாதே! அதில்

..குற்றுயி ராய்நான் தொங்குகிறேன்;

ஏந்திழை யே!எனை ஏற்றுக்கொள்!என்

..இதய இருக்கையில் வீற்றுக்கொள்!

..

வாழ்ந்திடும் காலம் கொஞ்சம்தான்!அதில்

..வசந்த காலம் மஞ்சம்தான்!

வீழ்ந்தேன் உன்அடி தஞ்சம்தான்!- இனி

..வீணை இசைக்கும் நெஞ்சம்தான்!( கவிமாமணி மதிவண்ணன்)
***

saktha@eth.net வழியாக

Series Navigation

கவிமாமணி மதிவண்ணன்

கவிமாமணி மதிவண்ணன்