குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)

This entry is part 45 of 43 in the series 20110529_Issue

லதா ராமகிருஷ்ணன்


’எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவனாவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று எடுத்துச்சொல்லும் ஒரு திரைப்படப்பாடல். எனில், தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்தால் உருவாக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த உண்மையின் பின்புலத்தில் பார்க்கும்போது குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்கு உள்ள பெரும்பங்கு புலனாகும்.

சமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம்? குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல், வழிவகைகள் இல்லாத நிலை ஒரு பக்கம். அதே சமயம், எத்தனையோ வழிவகைகள் இருந்தாலும் செய்துதரப்பட்டாலும் குழந்தைகள் சரிவர மதிக்கப்படவில்லையானால், அதனால் அவர்களுடைய அக,புற வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும், மேற்கண்ட வழிவகைகள், வசதிவாய்ப்புகள் நேரிய பயனளிக்காது போய்விடும் என்பதே உண்மை.

குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், அன்புகாட்டப்படவேண்டியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மதிக்கப்படவேண்டும் என்பது…?

ஆம். குழந்தைகள் கண்டிப்பாக மதிக்கப்படவேண்டும். இதுதான் உலகப் புகழ் பெற்ற மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் அடிப்படையான பார்வை என்கிறார் ஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திருமதி பத்மினி கோபாலன். அவரும், அவருடைய நட்பினரும் சேர்ந்து 1999ஆம் ஆண்டு ஸ்ரீராமசரண் அறக்கட்டளையை உருவாக்கினார்கள். மைக்ரோ க்ரெடிட் எனப்படும் கடனுதவி மூலம் தகுதிவாய்ந்த ஏழை மாணவர்களுக்குப் படிப்பில் உதவிசெய்து வருவதோடு பொதுவாக வசதிபடைத்த குழந்தைகளுக்கே கிடைத்துவருவதான மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் பயன்(இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்றே தெரியவில்லை. மாண்டிசோரி அம்மையார் இந்தக் கல்வித்திட்டத்தை உருவாக்கியபோது இதனை எதிர்பார்த்திருக்கவே மாட்டார் – பத்மினி கோபாலன்) சமுதாயத்தின் அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்று விழைந்ததன் விளைவாய் உரிய அரசு அதிகாரிகளை அணுகி, தங்கள் நோக்கத்தை எடுத்துரைத்து பெற்றோர்-ஆசிரியர் கூட்டமைப்பின் மூலம் சென்னை மாநகராட்சிப்பள்ளிகள் ஒன்றிரண்டில் ஒரு பரிசோதனை முயற்சியாய் இந்த அமைப்பால் மழலைகள் வகுப்பில் அறிமுகப் படுத்தப்பட்டது மாண்டிசோரி கல்வித்திட்டம். குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் பாடத்திட்டம் இன்று ஸ்ரீராம் சரண் அமைப்பினர் மூலம் ஏறத்தாழ 20 மாநகராட்சிப் பள்ளிகளில் சீரிய முறையில் நடைபெற்றுவருகிறது. ஸ்ரீராம் சரண் அமைப்பு நியமனம் செய்யும் மாண்டிசோரி கல்வித்திட்டப் பயிற்சி பெற்ற ஆசிரியைகள் அந்தந்த மாநகராட்சிப் பள்ளிகளின் நிர்வாகிகள் – ஆசிரியைகளின் ஒத்துழைப்போடு மழலையர் வகுப்புகளில் மாண்டிசோரிக் கல்வித்திட்டத்தின் பயனை குழந்தைகளுக்கு அளித்துவருகிறார்கள்.

ஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திருமதி பத்மினி கோபாலன்
“மாண்டிசோரி கல்வித் திட்டத்தில் குழந்தைகளுக்கு ஒரு சுய ஆளுமை, சுதந்திர உணர்வு வரவாகும். நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுங்கமைவு கூடிய நடத்தை, பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல், வாயை மூடிக்கொண்டு தும்முதல், எப்பொழுதும் சுத்தமாக இருத்தல், தோழமையோடு பழகுதல், போன்ற பல நற்குணங்கள் இந்தக் கல்வித்திட்டத்தின் மூலம் குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ளார்ந்து இடம்பெற்றுவிடுகின்றன. இந்தக் கல்வியில் கத்திரிக்கோல், கத்தி முதலியவற்றைக்கூட குழந்தைகள் நேர்த்தியாகக் கையாள – காய்களை வெட்டவும், காகிதத்தைக் கத்தரிக்கவும் அன்னபிற ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்யவும்) கற்றுத்தரப்படுகிறது. எது வினியோகிக்கப்பட்டாலும் ஆலாய்ப் பறக்காமல், ஒருவரையொருவர் மோதித்தள்ளி பறித்துக்கொள்ள முயலாமல் பொறுமையாய் தங்கள் முறை வருவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் பொறுமையும், பக்குவமும், பகிர்ந்துண்ணலும், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலும் இயல்பாகவே குழதைகளிடம் இடம்பெற்று விடுகின்றன”, என்று மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் முக்கியத்துவத்தை சுருக்கமாக எனில் தெளிவாக எடுத்துரைக்கிறார் பத்மினி.
உளவியலாளர்கள் குழந்தைகள் ஐந்து வயது நிறைவதற்குள் பெறுகின்ற அனுபவங்கள் அவர்களுடைய வாழ்நாளுக்கும் அவர்களிடத்தில் தாக்கம் செலுத்துவதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே, இந்த வயதுக் குழந்தைகளை நாம் மிகவும் கவனத்துடன் நடத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால், நிறைய பள்ளிகளில் சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல் என்பன போன்ற இயற்கை உபாதைகளுக்குக் கூட குழந்தைகளை குற்றவாளிகளாக உணரச்செய்யும் அவலப்போக்கைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை தன்னையும் மீறி வகுப்பிலேயே சிறுநீர் கழித்துவிட்டால் உடனே அதன் தலையில் நறுக்கென்று குட்டுவது, முதுகில் பேயறை அறைவது, “வெட்கமில்லே உனக்கு, சனியனே” என்று ஆங்காரமாக வசைபாடுவது இவையெல்லாம் அந்தக் குழந்தையை மிகவும் கடுமையாக உளவியல்ரீதியாய் பாதிக்கும். தேவையான கல்வி உபகரணங்கள் இல்லாத நிலை ஒரு குறைபாடு என்பது உண்மை. ஆனால், அதை விட முக்கியம் இந்த மழலைச் செல்வங்களின் பொறுப்பாளர்களாக உள்ள பெற்றோர்கள், பெரியவர்கள், பள்ளி ஆசிரியைகள், ஆயாக்கள் குழந்தைகளை அலட்சியமாகவோ, முரட்டுத்தனமாகவோ, மதிப்பழிப் பதாகவோ நடத்தாமலிருக்கவேண்டும். இதற்கான sensitization programmes, விழிப்புணர்வுப் பயிற்சிகள், இயக்கங்கள் தொடர்ந்த ரீதியில் துறைசார்ந்தவர்களிடமும், பொதுமக்கள் மத்தியிலும் நடத்தப்பட வேண்டும். குழந்தைகள் நம்மை அண்டியிருப்பவர்கள், அவர்களை நாம் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற மனோபாவம் பெரியவர்களிடம் இருக்கலாகாது. அன்பின் காரணமாகவே தன் மகனுக்கு சூடு போடும் தாயையும் பார்க்க முடிகிறது. இந்தப் பிள்ளைகளினால் தான் நமக்கு வேலை என்ற உண்மையை உள்வாங்கிக்கொள்ளாமல் அவர்களைத் தொந்தரவாகப் பார்க்கும் ஊழியர்களையும் பார்க்க முடிகிறது. ஒரே நாளில் நாம் விரும்பும் புரிதலை எல்லோரிடமும் கொண்டுவர முடியாது. ஆனால், அதற்காகத் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். அதைத் தான் எங்கள் ஆசிரியர்களும், அமைப்பும் செய்துகொண்டிருக்கிறது”, என்று நிதானமாக எடுத்துரைக்கிறார் பத்மினி.

ஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்கள்
பழகுவதற்கு இனிமையானவர். ‘பந்தா’ இல்லாதவர். மென்தொனியில் பேசுபவர், எனில் தெளிவான பார்வையும், திடமான சித்தமும் கொண்டவர். நல்ல இலக்கியப் பரிச்சயம் கொண்டவர் பத்மினி கோபாலன். ”எந்தவொரு விஷயத்தையும் நுனிப்புல் மேய்வதாகப் பேசவே பலர் விரும்புகிறார்கள். அப்படியில்லாமல் அகல்விரிவாய் பேசும்போது நாம் எது குறித்தும் ஏளனம் செய்யவோ, பெருமைபீற்றிக்கொள்ளவோ வழியில்லை என்ற உண்மை நமக்குப் புரியும்”, என்கிறார்.

மாநகராட்சிப் பள்ளியொன்றில் குழந்தைகள்!

அடித்தட்டுக் குழந்தைகளுக்கு மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் பயன் எட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இயங்கிவரும் பத்மினி கோபாலன் இந்த ஆசிரியப் பயிற்சி நிறையப் பெண்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதிலும் முனைப்பாக இருக்கிறார். அதற்காக ‘ஒத்த கருத்துடையவர்’களிடமிருந்து ஆதரவையும், நிதியுதவியையும் வேண்டிநிற்கிறார்.

“நன்கொடையாளர்கள் பலவிதம். நோக்கத்தின் நேர்மையைப் புரிந்துகொண்டு, செயல்திட்டத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து தாமாகவே முன்வந்து நன்கொடை தருபவர்களும் உண்டு. அதிகாரம் செய்வதற்கும், அடிபணியச் செய்வதற்கும் நன்கொடை தர முன்வருபவர்களும் உண்டு. எனில், நானும், எங்கள் அமைப்பினரும் அடிப்படை நேயத்தோடும், நம்பிக்கையோடும் தான் சக-மனிதர்களை அணுகுகிறோம். மேலும், இந்தக் கல்வித்திட்டத்தின் பயன் அடித்தட்டு மக்களுடைய குழந்தைகளைச் சென்றடையவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்பதை பெற்றவர்களும்,

அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் ஆசிரியை அருள்செல்வி,

மற்றவர்களும் உணர்ந்துகொண்டு எங்களுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் தரவேண்டும்; தருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. தந்துகொண்டுமிருக்கிறார்கள்”, என்று புன்சிரிப்போடு கூறுகிறார் பத்மினி கோபாலன். மாண்டிசோரி கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வமான மாற்றங்களை மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் எடுத்துரைக்கும் குறுந்தகடு ஒன்றையும் பார்க்கக் கிடைத்தது. அதில், அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவரான திருமதி சுந்தரி ஜெயராமன் தங்களுடைய அமைப்பின் நோக்கம் குறித்தும், அதில் அவர்கள் சென்றடைந்திருக்கும் தூரம் குறித்தும், மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் பயனைத் தங்கள் குழந்தைகளிடம் கண்கூடாகப் பார்க்கும் பெற்றோர்கள் அதுகுறித்து உரைக்கும் கருத்துகள் பற்றியும் கனிவோடு நிதானமாக எடுத்துரைக்கிறார்.

மாண்டிசோரி திட்டத்தின் கீழ் கல்வி பயிலுவதை மகிழ்ச்சிகரமான அனுபவமாக்க உதவும் கல்வி/பயிற்சி உபகரணங்கள்

குழந்தைகளின் முழுநிறைவான வளர்ச்சியை, அவர்களுடைய சுதந்திரவுணர்வை, சுய ஆளுமையை வளர்ப்பதே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மாண்டிசோரி மழலையர் கல்வித் திட்டம் பல வரலாற்ருச் சிறப்புமிக்க தலைவர்களை உருவாக்கிய ஒன்று. குழந்தைகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செம்மைப்படுத்தும் பயிற்சித்திட்டம் இது. இந்த அருமையான கல்வித்திட்டத்தின் பயனை ஏழைக் குழந்தைகளுக்கும் எட்டச் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ள ஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் பணி போற்றப்படவேண்டியது. இந்த முயற்சி மேலும் சிறக்க உதவ முடிந்தவர்கள் கண்டிப்பாக முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் திருமதி பத்மினி கோபாலன்.

இந்த கல்விப்பணி குறித்த மேலதிக விவரங்களையும், ஸ்ரீராம சரண் அறக்கட்டளை குறித்த மேலதிகத் தகவல்களையும் கீழ்க்கண்ட இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெறலாம்.

Email id:sriramacharan@sriramacharan.org / sriramacharan@yahoo.com
Website: www.sriramacharan.com
Mr. Padmini Gopalan’s Mobile number: 9840969940

0

Series Navigation<< யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்பலூன் >>