காஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் புளுடோனிய வெப்பமின் கலனுக்கு எதிர்ப்புகள்! [Protest against Plutonium Powered Cassini Spaceship]

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


‘சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி ‘

வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

‘வெள்ளி-பூமியின் துரித ஈர்ப்புச் சுற்று வீச்சில் [Gravitational Swingby Orbit] காஸ்ஸினி விண்கப்பல் வேகம் மிகையாகிப் பூமிக்கு மீளும் போது, எதிர்பாராமல் வாயு மண்டத்தில் உராய்ந்து 15,000 C உஷ்ணத்தில் எரிந்து போனால், விண்கப்பலில் உள்ள புளுடோனிய வெப்பமின் பேழைகள் ஆவியாகி [Plutonium Thermoelectric Batteries], வாயு மண்டலச் சூழ்வெளி நாசமாகி, மாந்தர் புளுடோனிய நஞ்சை சுவாசித்துப் புற்று நோயுற வாய்ப்புள்ளது! ‘

பெளதிகப் பேராசிரியர் ராபர்ட் பார்க் [Prof Dr. Robert Park, Director, American Physical Society]

முன்னுரை: 1997 அக்டோபரில் பிளாரிடா கென்னடி ஏவுதளத்திலிருந்து சனிக்கோளை நோக்கிப் பயணம் செய்யும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பலுக்கு எதிராக உலகின் சூழ்வெளிக் காவலர்கள் [Environmentalists] கிளம்பிய நிகழ்ச்சி இது! காரணம் விண்கப்பலில் மின்சக்தி பரிமாற 75 பவுண்டு கதிர்வீசும் கடும் நஞ்சான புளுடோனியம்-238 [Pu-238] பயன்படுத்தப் பட்டது! சூரியக் கலன்களுக்குப் பதிலாக, விண்கப்பலில் புளுடோனியம் ஆக்ஸைடு [PuO2] பல்லாண்டுகளுக்குச் சக்தி யூட்ட வெப்பமின் ஜனனியில் இடப் பட்டது.

காஸ்ஸினி விண்கப்பலைத் தூக்கிச் செல்லும் டிடான்-IV செறிவு ராக்கெட் [Booster Rocket Titan-IV] ஏவு தளத்திலே சிதைந்து போனால், புளுடோனியத் தூள்கள் பிளாரிடா மாநிலத்தில் பரவலாம்! சற்று உச்சியை அடைந்ததும், அடுத்து மற்ற கிளை ராக்கெட்டுகள் பழுதடைந்து எரிந்து போனால், புளுடோனியத் தூசிகள் ஆஃப்ரிக்கா, மடகாஸ்கர் தீவு, அடுத்து ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் [32%-34%] தெளிக்கப் படலாம் என்று நாசா [National Aeronautical & Space Administration (NASA)] தனது காஸ்ஸினிப் பயண அபாய எதிர்பார்ப்பு [Risk Assessment of Cassini Flight] அறிக்கையில் முதலிலே வெளியிட்டிருந்தது!

மேலும் காஸ்ஸினி பூமியின் கவர்ச்சி மண்டலத்தைத் தாண்டிப் போன பின், வெள்ளிக் கோளை [Planet Venus] முதலில் ஒரு முறைச் சுற்றி, அடுத்து ஒரு பெரும் நீள்வட்டப் பாதையில் மறுபடியும் பூமியை 725 மைல் உயரத்தில் ‘துரித ஈர்ப்புச் சுற்று வீச்சில் ‘ [Gravitational Swingby Orbit] நெருங்கி, மீண்டும் வெள்ளியை வலம் வருகிறது! வெள்ளி-பூமி இரண்டையும் சுற்றி வரும்போது, காஸ்ஸினியின் வேகம், கோள்களின் ஈர்ப்பு விசைகளால் அதிகரித்து சனிக் கோளை விரைவில் அடைய விஞ்ஞானிகள் பூமியிலிருந்து வழி வகுத்தனர். அவ்விதம் இரண்டாம் முறையாகப் பூமியை நெருங்கும் போது, பூகோள வாயு மண்டலத்தில் விண்கப்பல் சிக்கி எரிந்து, புளுடோனியத்தைத் தூவி விட மற்றுமொரு வாய்ப்பிருந்தது!

காஸ்ஸினியை நிறுத்த அமெரிக்க வயோதிக மாதர்கள் அணிவகுப்பு!

1997 அக்டோபர் 4 ஆம் தேதி பிளாரிடா கனாவெரல் முனை [Cape Canaveral, Florida] வாயிலுக்கு முன்பாக காஸ்ஸினியின் பயணத்தை நிறுத்த 1000 வயோதிக மாதர்கள் கூடி நின்று கூச்சலிட்டனர்! அவர்கள் யாவரும் அணுத்துறை எதிர்க்கும் [Anti-Nuclear Activists] ‘அமைதி நாடும் அகில நாட்டுப் பாட்டிமார் ‘ [Grandmothers for Peace International (GFP)] குழுவின் உறுப்பினர்! அக்குழுவின் ஆணைத் தளபதி பார்பரா வைட்னரின் [Director, Barbara Wiedner] பேத்தியும் பாட்டியின் அணுத்துறை எதிர்ப்பில் வேட்கை மிகுந்து, ‘அமைதி நாடும் இளம் மாதர்கள் ‘ குழுவை ஒரு கிளைச் சங்கமாக ஏற்படுத்தினார். எதிர்ப்புக் கிளர்ச்சியில் பார்பரா வைட்னர் உள்பட 15 மாதர் கைதி செய்யப் பட்டனர்!

அடுத்து 1999 ஆகஸ்டு 18 ஆம் தேதி காஸ்ஸினி பூமிக்குத் ‘துரித ஈர்ப்புச் சுற்று வீச்சுக்கு ‘ மீளும் போது, மறுபடியும் அமைதி நாடும் பாட்டிமார் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூடினார்கள்! நல்ல வேளையாக எதிர்ப்பாளிகள் எதிர்பார்த்த அந்த புளுடோனிய வெடிப்பு நேரவும் இல்லை! அஞ்சியது போல் சூழ்வெளிப் பாதிப்புகள் நிகழவும் வில்லை! ஆனால் நாசா விஞ்ஞானிகள் அண்டவெளித் தேடல்களில் முனைந்து பணி புரியும் போது, பொதுநபர் எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும் மாட்டிக் கொள்வது எதிர்பாராத நிகழ்ச்சிகள் அல்ல! இனி வரும் விண்வெளிப் பணிகளில், கதிர்வீசும் சாதனங்களைப் பயன்படுத்தும் போது மக்களின் எதிர்ப்புக்குள்ளாகி, அவற்றிலிருந்து விடுபடுவது சிரமம் என்று நாசா மிக்கக் கவலை அடைந்தது!

காஸ்ஸினி விண்கப்பல் புளுடோனிய எதிர்ப்புக்கும், மாத்தர் விமானப்படைத் தளத்திலிருந்து [Mather Air Force Base] அணுக்கருப் போராயுதங்களை [Nuclear Weapons] அகற்றியதற்கும், டெக்ஸஸ், காலிஃபோர்னியா ஆகிய மாநிலங்களில் கதிர்வீச்சுக் கழிவுகளுக்குப் புதைப்பகங்களைத் தேர்ந்தெடுக்க உதவியதற்கும் 1997 ஆண்டில் பார்பரா வைட்னர் ‘தேசீய அமைதி அமைப்பகத்தின் ‘ [National Peace Foundation] விருதைப் பெற்றுப் பாராட்டப் பட்டார்!

சனிக் கோளை நோக்கி காஸ்ஸினி விண்கப்பலின் பத்தாண்டுப் பயணம்

இதுவரை வெள்ளி, செவ்வாய், வியாழன் கோள்களை நெருங்கி வெற்றிகரமாகச் சாதித்த ‘வைக்கிங் ‘, ‘வாயேஜர் ‘, ‘காலிலியோ ‘ விண்கப்பல் [Viking, Voyager, Galileo Spaceships] பயணங்களை விடப் பேரளவு வேட்கையில் காஸ்ஸினியின் சனி மண்டலத் தேடற் பணி மகத்தான முறையில் திட்டமிடப் பட்டது! 1997-2007 ஆண்டுகளில், காஸ்ஸினி விண்கப்பல் 2.2 பில்லியன் மைல்களுக்கும் மேலாக அண்ட வெளியில் பயணம் செய்யும்! 2004 ஆண்டில் சனிக் கோளைக் காஸ்ஸினி விண்சிமிழ் நெருங்கி வட்டமிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்து காஸ்ஸினிக் கப்பலிலிருந்து, ஹியூஜென்ஸ் உளவி சனியின் சந்திரன் டிடானுக்கு [Titan Satellite] இறங்கி, நான்கு ஆண்டுகளுக்குச் [2008 வரை] செய்திகளைக் காஸ்ஸினி பூமிக்கு அனுப்பவும் திட்டமிடப் பட்டுள்ளது.

3.4 பில்லியன் டாலர் [1995 நாணய மதிப்பு] செலவில் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப் பட்ட காஸ்ஸினி விண்கப்பல் ‘சுற்றும் சிமிழ் ‘ [Orbiter] ஒன்றும், ‘இறங்கு சிமிழ் ‘ [Lander] ஒன்றும் கொண்டது. சுற்றும் சிமிழ் சனிக் கோள், அதன் பிரம்மாண்டமான ஒளி வளையங்கள், சனியின் 18 சந்திரன்கள் ஆகியவற்றைக் கண்ணோக்கித் தகவல்களைப் பூமிக்கு அனுப்பும். இறங்கு சிமிழ் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக் கோளான ‘டிடானில் ‘ [Titan Satellite] இறங்கி ஆராய்ச்சிகள் நடத்தும். இறங்கு சிமிழில் உள்ள ‘ஹியூஜென்ஸ் உளவி ‘ [Huygens Probe] டிடானில் தங்கித் தானே அதன் சூழ்வெளியை ஆய்வு செய்யும்.

விண்கப்பல் ஏவுவதில் ஏற்படவிருந்த புளுடோனிய அபாயம்!

பரிதிக்குப் பல மில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் சனிக் கோளை நான்கு ஆண்டுகள் சுற்றிப் பத்தாண்டுகளுக்கு மேல் பணி புரியப் போகும் காஸ்ஸினி விண்கப்பலுக்கு ‘சூரிய இதழ்கள் ‘ [Solar Panels] மட்டும் தொடர்ந்து மின்சக்தியும், வெப்பசக்தியும் அளிக்க முடியாது! காரணம், விண்கப்பல் சூரியனுக்கு அப்பால் செல்லச் செல்ல, அதற்குப் பரிதியின் வெப்பமும், ஒளியும் குன்றி மின்சக்தி பற்றாமல் போகிறது. பரிதிக்கு ஒரு பில்லியன் மைல் தூரத்தில் உள்ளது, சனிக் கோள். அதலால் கதிர்வீசும் புளுடோனியம் தூண்டும் வெப்பமின் ஜனனிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு சிறப்பாகச் செய்யப் பட்டன. அவை போன்ற கதிர்வீசும் மின்கலன்கள் முன்பு, நாசாவின் விண்வெளிப் பயணங்களுக்கு விபத்தின்றிப் பயன்படுத்தப் பட்டு வெற்றிகரமாக இயங்கின! தற்போது வியாழக் கோளைச் சுற்றிவரும் காலிலியோ விண்கப்பலில் இதே புளுடோனிய வெப்பமின் கலன்கள் அமைக்கப் பட்டுப் பழுதேற்படாமல் பணி புரிந்து வருகின்றன.

இருபது பயணங்களில் விண்கப்பலைச் செங்குத்தாகத் தூக்கிச் சென்ற டிடான்-IVB சென்ட்டார் ராக்கெட் [Titan-IVB Centaur Rocket] ஒரே ஒரு தரம் பழுதடைந்து [5% Failure Rate] கீழே விழுந்தது! அதை மனதில் வைத்துக் கொண்டு, அணுத்துறை எதிர்ப்பாளிகள் [Anti-nuclear Activists], ராக்கெட் ஏவப்படும் சமயம், புளுடோனிய வெப்பமின் ஜனனிகள் [Plutonium Thermoelectric Generators] பேரளவு உஷ்ணம், அழுத்தம், வேகம் ஆகியவற்றால் வீசி எறியப்பட்டுத் துணுக்குகளாய்ச் சிதறி நீர்வளம், நிலவளம், மனித இனம் மீது பரவி நாசமடையலாம் என்று பயந்தார்கள்!

1979 ஆண்டு முதல் 23 விண்வெளிப் பயணங்களில் இவை போன்ற கதிர்வீசும் வெப்பமின் ஜனனிகள், பழுதடையாமல் வெற்றிகரமாகப் பயன்பட்டு வந்துள்ளன! சந்திரனுக்கு ஏகிய நாசாவின் ஆறு ‘அப்பொல்லோ குறிப்பணிகள் ‘ [Lunar Apollo Missions], வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய தூரக் கோள்களை ஆராய்ந்த ‘வாயேஜர் குறிப்பணிகள் ‘ [Voyager Missions] ஆகியவற்றில் இவை போன்ற வெப்பமின் ஜனனிகள் சிதைவு அடையாமல் செம்மையாக இயங்கி வந்துள்ளன! அந்த 23 குறிப்பணிகளில் மூன்று பயணங்கள், ஜனனிகள் சம்பந்தம் இல்லாத வேறு சில சாதனங்களால் சிக்கலுற்றுத் தோல்வி அடைந்தன! பழுதுபட்ட அந்த மூன்று பணிகளில் கூட, புளுடோனிய ஜனனிப் பேழைகள் சிதைவில்லாமல் முழுமையாக மீட்கப்பட்டன!

ராக்கெட் ஏவலின் போது, வெடி விபத்து நேர்ந்து மாந்தர் புளுடோனியத்தால் பாதிக்கப்படும் அபாய எதிர்பார்ப்பு மதிப்பீடு மில்லியனில் ஒன்று [Probablity of a mishap is one in million] என்று விண்வெளி விஞ்ஞானிகள் அழுத்தமான கருத்தில் இருந்தனர்! அப்படி ஓர் அபாயம் ராக்கெட் ஏறும் போது நிகழ்ந்தாலும், கதிர்வீச்சுத் தீண்டலின் விளைவுகள், மனிதருக்குச் சொற்ப மானவை என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்!

Gravitational Swingby Orbit near Earth

புளுடோனியம் புற்று நோய் உண்டாக்கும் மனித நஞ்சு!

கதிர்வீசும் புளுடோனியம்-238 ஓர் ஆல்ஃபா எழுப்பி [Alpha Emitter]. இயற்கையாகத் தேயும் புளுடோனியம்-238 இன் நிறை பாதியாகும், அரை ஆயுள் 88 ஆண்டுகள் [Half Life: 88 years]! அதாவது காஸ்ஸினி விண்கப்பலில் வைக்கப்பட்டுள்ள 40 கிலோ கிராம் புளுடோனியம் ஆக்ஸைடு [PuO2] 88 ஆண்டுகளுக்குப் பிறகு 20 கிலோ கிராம் நிறையாகக் குறையும்! அவ்விதம் தேயும் போது, தொடர்ந்து வெப்பசக்தி உண்டாகிறது! ஆல்ஃபா துகள் புளுடோனியக் கதிரியக்கத் தேய்வின் போது உண்டாகும் ஒரு ஹீலிய அணுக்கரு [Helium Nucleus]. அவ்விதம் தேயும் போது எழும் வெப்பசக்தியை வெப்பமின் ஜனனி, நேராக வெப்பசக்தியை மின்சக்தியாக [Direct Conversion] மாற்றுகிறது. ஆல்ஃபாத் துகளை ஒரு தாள் நிறுத்திவிடும். ஆனால் அது வாய் வழியாகவோ, மூக்கு மூலமாகவோ மனித உடலுக்குள்ளே நுழைந்து விட்டால், அவை செய்யும் பாதகங்கள் மிகையானவை! மூக்கின் வழியாக நுழைந்து சுவாச உறுப்புகளான புப்புசங்களில் ஆல்ஃபா துகள்கள் சிக்கிக் கொண்டால், அவை பல ஆண்டுகள் மரபணுக்களைத் துண்டித்துப் [Gene Mutations] புற்று நோயை உண்டாக்கும்!

காஸ்ஸினியின் ‘கதிர் ஏகமூல வெப்பமின் ஜனனி ‘ [Radioisotope Thermal Generators (RTG)] 1.5 அடி விட்டம், 4 அடி நீளம் கொண்டு, 855 வாட்ஸ் சக்தி உண்டாக்க வல்லது. விண்கப்பல் 2004 ஆம் ஆண்டு சனிக்கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதன் பிறகு காஸ்ஸினித் தாய்க் கப்பலிலிருந்து ஹியூஜென்ஸ் உளவி [Huygens Probe] சனிக்கோளின் பெரும் துணைக் கோளான டிடானில் இறங்கி நான்கு ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தும். கதிர் வெப்பமின் ஜனனி குறைந்தது 11 ஆண்டுகளுக்கு [1997-2008] விண்கப்பலுக்கு மின்னாற்றல் அளிக்க வேண்டும். ஒவ்வொன்றும் 25 பவுண்டு புளுடோனிய ஆக்ஸைடு கொண்ட மூன்று ஜனனிகள் அமைக்கப் பட்டிருந்தன. ஆக 75 பவுண்டு புளுடோனியத்தில் சுமார் 402,000 கியூரி கதிரியக்கம் உள்ளடங்கிக் கிடந்தது!

பூமிக்கு விண்கப்பல் மீளும் போது புளுடோனியம் சிதறல் எதிர்பார்ப்பு!

1997 அக்டோபர் 6 ஆம் தேதி பூமியை விட்டு வெளியேறிய காஸ்ஸினி 1998 எப்ரல் 21 இல் வெள்ளியை ஒரு முறைத் ‘துரிதச் சுற்று வீச்சில் ‘ [Swingby Orbit] வலம் வந்து, அடுத்துப் பரிதியை வட்டமிட்டது. மறுபடியும் 1999 ஜூன் 20 ஆம் தேதி வெள்ளிக் கோளைத் துரிதச் சுற்று வீச்சில் [Swingby Orbit] நெருங்கி, 1999 ஆகஸ்டு 16 ஆம் தேதி மீண்டும் பூமியை 725 மைல் உயரத்தில் துரிதச் சுற்று வீச்சில், விண்கப்பலின் வேகம் பன்மடங்கு பெருகி, வியாழனை நோக்கிப் பாய்ந்தது! காஸ்ஸினி இருமுறை புரிந்த வெள்ளி-பூமியின் துரிதச் சுற்று வீச்சால், நீண்ட நீள்வட்டப் பாதை [Long Elliptical Orbit] பூமியிலிருந்து முடுக்கப்பட்டு, விண்கப்பலின் வேகம் மிகுந்திடக் கோள்களின் ஈர்ப்பு விசைகள் உதவின!

அவ்விதம் மணிக்கு 41,000 வேகத்தில் பறக்கும் காஸ்ஸினி 1999 ஆகஸ்டு மாத மீட்சியின் போது, பூமண்டலத்தின் வாயுக் கோளத்தில் அகப்பட்டு, 15,000 C உஷ்ண மடைந்து புளுடோனிய வெப்பமின் பேழை எரிந்து ஆவியாகி வாயுக் கோளத்தை நாசமாக்கி விடலாம் என்று ஓர் அச்சத்தை எதிர்ப்பாளிகள் இடையே உண்டாக்கியது!

தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க வானியல் குழுவின், அண்டக்கோள் விஞ்ஞான நிபுணர்கள் [Division for Planetary Sciences of the American Astronomical Society] மதிப்பீடு செய்து கூறுவது: ‘விண்வெளிக் கப்பலை வழிப்புகுத்தும் முறைகளில் [Celestial Navigation] தற்போது நாசா விஞ்ஞானிகளின் நுணுக்கமும், துல்லியமும் மிக்க உறுதிப்பாடு உடையவை! கடந்த 23 வருடங்களாக நாசா திறமையோடு 65 ‘துரித ஈர்ப்புச் சுற்று வீச்சுக்களைப் ‘ [Gravitational Swingby Orbits] வெற்றிகரமாகப் புரிந்து, விண்வெளிக் கப்பல்கள் சூரிய மண்டலக் கோள்களையும், அவற்றின் துணைக் கோள்களையும் திட்டமிட்ட வீதிகளைத் துல்லியமாகத் தொட்டு வட்ட மிட்டுள்ளன! ஆதலால் எதிர்ப்பாளிகள் அஞ்சியது போல், காஸ்ஸினி பூமி வாயு மண்டலத்தில் சிக்கி எரிந்து ஆவியாகக் போவது மில்லியனில் ஒன்றாக நேரும், ஓர் அபூர்வ விபத்தே! ‘

காஸ்ஸினி விண்கப்பலின் பயணம் பற்றி மற்ற விஞ்ஞானிகள் கருத்து.

‘காஸ்ஸினி விண்கப்பல் வெள்ளி, பூமியின் ஈர்ப்பு விசைகளால் துரிதச் சுற்று வீச்சில் [Gravitational Swingby Orbit] வேகம் மிகையாகிப் பூமிக்கு மீளும் போது, எதிர்பாராமல் வாயு மண்டத்தில் உராய்ந்து 15,000 C உஷ்ணத்தில் எரிந்து போனால், விண்கப்பலில் உள்ள புளுடோனிய வெப்பமின் பேழைகள் ஆவியாகி, வாயுச் சூழ்வெளி நாசமாகி மாந்தர் புளுடோனிய நஞ்சை சுவாசித்துப் புற்று நோயுற வாய்ப்புள்ளது ‘ என்று பெளதிகப் பேராசிரியர் டாக்டர் ராபர்ட் பார்க் [Prof Dr. Robert Park, Director, American Physical Society] எச்சரிக்கை செய்தார்!

‘புளுடோனிய ஆவி வாயுவற்றதால், அது விரைவில் பூமண்டலத்தின் 7 மைல் உயரத்திலிருந்து கீழிறங்கி, இரண்டு வாரத்திற்குள் மழை நீரில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, தரை மட்டத்தில் படிந்து விடும்! சில இடங்களில் பரவலாகப் பரவி, மற்றும் சில இடங்களில் கதிர்வீச்சுத் துணுக்குகள் கொட்டிக் கிடக்கலாம்! ‘ என்று போல்டர், கொலராடோவின் தேசீயச் சூழ்மண்டல ஆய்வு மையத்தின் விஞ்ஞானி, ஜான் ஃபிரார் [John Firor, National Center for Atmospheric Research] சுட்டிக் காட்டினார்!

நாசாவின் புளுடோனிய அபாய எதிர்பார்ப்புகளின் மதிப்பீடு

புளுடோனியச் சிதைவு நேர்ந்தால் புற்று நோய் ஏற்படும் அபாய எதிர்பார்ப்பு மதிப்பீடு கீழான எண்ணிலிருந்து உயர் எண்ணிக்கை வரை அகண்டு போனது. 1995 ஜூலையில் நாசா வெளியிட்ட ‘சூழ்வெளிப் பாதிப்பு இறுதி அறிக்கையில் ‘ [Final Environmental Impact Statement] 2300 உடல்நலப் பாதிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறி யிருக்கிறது! அடுத்து 1997 ஜூனில் வெளியிட்ட உபரி அறிக்கையில் நாசா முழுக் காரணத்தைக் காட்டாமல் 120 பாதிப்புகளாகக் குறைத்துக் கூறியது!

1994 இல் புளுடோனிய வெப்பமின் ஜனனிகளை ஆக்கிய அமெரிக்க எரிசக்தி ஆணையகம் [U.S. Dept of Energy] 65,000 புற்று நோய் மரணங்கள் ஏற்படலாம் என்று மதிப்பீடு செய்தது! காஸ்ஸினிப் பயணத்தின் பரம எதிரி, நியூ யார்க் பல்கலைக் கழகத்தின் பெளதிகப் பேராசிரியர், மிச்சியோ காக்கு [Michio Kaku] மதிப்பிடுவது 200,000 புற்று நோய் மரணங்கள்! மிகக் குறைந்த புற்று நோய் மரண எண்ணிக்கை 120, மிகக் கூடிய எண்ணிக்கை 200,000 ஆகிய இரண்டு மதிப்பீடுகளும் 40 கிலோ கிராம் புளுடோனியச் சிதைவால் நேரலாம் என்று குறிப்பிடுவது ஒப்ப முடியாதவாறு மிக விரிந்துள்ளன!

காஸ்ஸினி எதிர்ப்பாளிகள் இரண்டு முறை அஞ்சியது போல் புளுடோனியச் சிதைவு அபாயம் நிகழவில்லை! நாசா அம்மாதிரி விபத்துகள் நேரும் எதிர்பார்ப்பு மில்லியனில் ஒன்று என்று உறுதியாகக் கூறினாலும், விண்வெளிக் கப்பல் ‘சாலஞ்சர் ‘ [Space Shuttle Challenger] 1986 ஜனவரியில் ஏவு தளத்திலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் வெடித்து விண்வெளி விமானிகள் 7 பேர் இறந்ததும், விண்வெளிக் கப்பல் கொலம்பியா [Space Shuttle Columbia] 2003 பிப்ரவரியில் இறங்கும் போது சிதைந்து 7 பேர் மாண்டதும் உலக மக்கள் மனதிலிருந்து எப்போதும் நீங்கப் போவதில்லை!

தகவல்:

1. Stop Cassini Flight: NASA ‘S Deadly Plutonium Probe [1997-1999]

2. Grand Illusion: The Risks of Cassini, IEEE Spectrum, Institute of Electrical & Electronic Engineers [March 1998]

3. CNN – The Cassini Mission, Last of the Mega-missions [1997]

4. Grandmothers for Peace International [Archives 1997]

***********************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா