காவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

நா.இரா.குழலினி.


உலகில் பாம்புகள் குறித்த ஆய்வுகள் பல்வேறு தகவல்களை நமக்கு தந்திருக்கின்றன. இந்தியாவின் பாம்புகளில் நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கோதுமை விரியன், சுருட்டை விரியன் போன்ற பாம்பினங்களும் அமெரிக்காவின் கிலுகிலுப்பை பாம்பு, ஆப்பிரிக்காவின் கருப்பு மாம்பா போன்ற பாம்பினங்கள் குறித்து விரிவாக செய்திகள் இருக்கின்றன. இவைபோன்ற விஷப்பாம்புகள் தவிர்த்து சாரைப்பாம்பு, கொம்பேறிமூக்கன், பச்சைப்பாம்பு, தண்ணீர்பாம்பு போன்ற விஷமற்றவையும் நம்முன் இருக்கின்றன.

ஏதேனும் ஒருமுறை பாம்பை அருகிருந்து கவனித்திருக்கிறீர்களா ? உடல் முழுவதும் சிறுகோடுபோல் மினுக்கும். அதன் மேனி மினுமினுப்பும் நகர்ந்து செல்கையில் வளைந்தும், நெளுந்தும் விரைந்தோடும் அதன் நேர்த்தியும், தேர்ந்த ஒரு தடகள வீரனின் செயல்திறன் போன்றது. ஒரு விரைவோட்டக்காரனின் நெற்றியிலும் உடம்பிலும் தெறித்துப் பாயும் வியர்வை சரடுகளில் ஊடாடித் தெறிக்கும் வெயிலின் நிறப்பிரிகைபோல் இந்தப் பாம்புகள் நகரும்போது நிழலின் ஊடாகப் பாயும் வெளிச்ச ரேகைகள் பட்டு மினுமினுக்கும் அதன் தோல். ஒவ்வொரு முறையும் தோல் தேயும்போது தோலுரித்துக்கொள்ளும் அழகைப் பார்த்திருக்கிறீர்களா ? ஆனால் பாம்பின் நோக்கம் தன்னை அழகுபடுத்திக்கொள்வதன்று. அதன் விஷம் வேறுவகைக்கன்று. இரையை கவர்வதற்கும் தன் வயிற்றை நிரப்புவதற்கும் அது தன் பல்வேறு குணங்களையும் பயன்படுத்துகின்றது.

அமெரிக்காவின் கிலுகிலுப்பை பாம்பு தன் இரையை நோக்கி நகர்ந்து தன் வால்பகுதியை ஆட்டுவதன் மூலம் கிலுகிலுப்பை போன்று சப்தம் எழுப்பும். இரையின் கவனம் சப்தம் வரும் திக்கில் திரும்பும்போது இரையை கொன்று தின்னும். ஆப்ரிக்காவின் கருப்புமாம்பா மற்ற அனைத்தையும் விட ஒரு தனிவகை. பொதுவாக பாம்புகள் ஒருமுறை கடித்தபின் விஷப்பை நிரம்பும்வரை அடுத்தடுத்த கடிகளில் யாருக்கும் விஷம் ஏறுவதில்லை. ஆனால் கருப்புமாம்பா நாலைந்து முறை தொடர்ந்து கடித்தாலும் ஒவ்வொரு கடியும் விஷம் தோய்ந்ததே. மேலே சொன்ன பாம்பினங்கள் அனைத்திலும் இல்லாத ஒரு தனிவகைப் பாம்பு இருக்கிறது. அது ராஜநாகம். மற்றவை இரைதேடி வேறினத்தைக் கொல்ல நினைத்தால் ராஜநாகம் இரைக்காக தன்னினத்தையே கொல்லும்.

பாம்பின் கதை விளையாட்டுப்போல், ஒரு தகவலைப் போல் நம்முன் இருந்தாலும் இத்தகவலுக்குள்ளும் ஒரு செய்தி இருக்கிறது. இந்தியாவின் காஞ்சி சங்கராச்சாரி தன்னை கருப்புமாம்பாவிலிருந்து ராஜநாகமாக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார் என்பதே அச்செய்தி.

கும்பகோணம் மகாமகத்தில் குளிக்கச் சென்ற ஜெயேந்திரர் வி.எச்.பி நடத்திய மாநாட்டில் பங்கேற்று பேசும்போது மதத்தை விட அரசியல் மதம் பெரிதாகிவிட்டது என்று கூறினார். அதே கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.எச்.பி தலைவர் அசோக்சிங்கால் அவர்கள் திருப்பதி கோயில் நிர்வாகத்தை ஜெயேந்திரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார். திருப்பதிக்கும் ஜெயேந்திரருக்கும் வி.எச்.பி-க்கும் உள்ள உறவு நிலை வகைப்பாடுகளை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

குமுதம் ரிப்போர்ட்டர் 21-03-04 தேதியிட்ட இதழில் திருப்பதி கோவில் யாருக்குச் சொந்தம் என்ற கட்டுரை கீழ்வருமாறு துவங்குகிறது.

‘சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்த ஜெயேந்திரர், ‘ஸ்ரீ த்ரிதண்டி ஸ்ரீமத் நாராயணஐயர், மடாதிபதியே அல்ல; அவர் மதபோதகர் மட்டுமே. திருமலையைப் பொறுத்தவரையில் அவர் ஒரு வழிப்போக்கர். ராமானுஜருக்கும் திருமலைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் கூறுவதெல்லாம் அவர்களே எழுதிக்கொண்ட கதைகள் தான். திருமலையில், சங்கரர்தான் யந்திரத்தை ப்ரதிஷ்டை செய்தார். அதனால் தான் இவ்வளவு கூட்டமும் பணமும் வருகிறது. நாங்கள் விஷ்ணுவையும் வணங்குவதால் எங்களுக்குத்தான் திருமலைக்கோயிலில் உரிமை உண்டு. நாங்களே நேராகத் திருவேங்கடவனைப் பூஜை செய்ய உரிமை பெற்றவர்கள். கோயிலில், வைகாநஸ முறைப்படி பூஜைகள் நடப்பதால், இக்கோயிலில் வைணவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே, ஸ்ரீவைஷ்ணவரான ஸ்ரீமத் நாராயண ராமானுஜ ஐயர் வைகாநஸக் கோயிலான திருக்கோயிலின் நிர்வாகங்களில் தலையிடக்கூடாது ‘ என்று கருத்துக் கூறியிருக்கிறார்.

அதோடு, ‘திருமலைக்கோயிலில் ஏராளமான பணம் உள்ளது. அங்குள்ள பணத்தை எடுத்துக் கொள்ளவே, கோயிலில் பங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்! ‘ என்றும் ஜெயேந்திரர் சொல்ல, ஒட்டுமொத்த ஐயர்களும் ஜெயேந்திரருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். ‘

குறிப்பாக திருப்பதி திருமலையையும் அதன் ஐயரையும் குறிவைத்து ஜெயேந்திரர் நகரும் போக்கில் ஒரு செய்தி இருக்கிறது. இராமானுஜரின் வழிவந்த இந்த வைணவ மடம் தற்போது ‘இந்து ‘ என்கிற பொது அடையாளமத்தில் வெளிப்பட்டாலும் இராமானுஜரின் காலத்தில் தான் ஒடுக்கப்பட்டவர்களின் கோயில் நுழைவு என்பது சனாதன மனுதர்ம இந்தியாவில் முதன் முதலில் மைசூர், மேலக்கோட்டையில் நடத்தப்பட்டது. அது இன்றுவரை தொடர்ந்து வரமுடியவில்லை என்பது வேறு விஷயம். சைவத்திலே கூட தலித்தான நந்தனார் சோதி வடிவத்தில் தான் சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய முடிந்தது. வைணவத்திலே திருப்பாணாழ்வாரை தோளிலே தூக்கிக்கொண்டு ஒருவர் திருவரங்கம் கோயிலுக்குள் நுழைய முடிந்தது. இதில் அடங்கியிருக்கிறது அந்த வித்தியாசம். தமிழகத்தின் 3 வகை பிராமணர்களான சிவபிராமணர், வைணவ பிராமணர், ஸ்மார்த்த பிராமணர் ஆகியோரில் ஆதிசங்கரரின் வழிவந்த அத்வைதம் பேசும் ஸ்மார்த்த பிராமணர்கள், கோயிலுக்கு போவது என்பது ஒரு ஸ்மார்த்தர் என்ற முறையில் தானே தவிர ஒரு கடவுளை நம்புகிறவர் என்ற முறையினால் அல்ல. ஸ்மார்த்தர்களின் குருவான சங்கராச்சாரிகளைப் பொருத்தமட்டில் ‘தானே கடவுளாக, கடவுளே தானாக ‘ இருப்பதுதான் அவர்களுடைய தத்துவம். அகம் பிரம்மாஸ்மி, தத்துவம் அசி என்று சொல்வதெல்லாம் இவைகுறித்தனவே. இதன் காரணமாகவே சங்கராச்சாரியார் திருநீறு பூசுவார். ஆனால் சைவ மடாதிபதிகளைஸ் போலவோ, கோவில் அருச்சகரைப் போலவோ, திருநீற்றை எடுத்து அடுத்தவர்களுக்கு கொடுக்க மாட்டார். அவர் கையெழுத்துப் போடுவது ‘நாராயண ஸ்மிருதி ‘ என்றுதான். ஆனால் பெருமாள் கோவிலுக்குச் சாதாரணமாகப் போவது கிடையாது. இப்பொழுது வேறு நோக்கத்திற்காகப் போகிறார். இந்த அளவிலேதான் கோயில்களுக்கு அவரோடு சம்பந்தம். கோயில்கள் ஆகம விதிப்படி நடப்பன. கோயில் வழிபாடும் சங்கராச்சாரியாரைப் பொருத்த மட்டிலே ஆன்மீக ரீதியாக மரியாதைக்குரிய விஷயமல்ல. அவருக்கும் ஒரு அருச்சகரைப் போல சிவபூசை செய்யவோ வைணவ ஆராதனை செய்யவோ சடங்கியல் தகுதி கிடையாது. ஸ்மிருதியைச் சொல்வதுதான் அவர்களுக்கு கடவுள் போன்றது. காஞ்சியின் காமாட்சியம்மன் கோயிலிலும் அவர் பூசை செய்வது கிடையாது, 1839 ல் நடந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அந்தக் கோயில் மடத்தின் சார்பில் கைப்பற்றப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

காஞ்சிமடம் ‘இந்து ‘ என்கிற பெயரில் எல்லாவற்றையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தான் திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகளை நடத்தத் தொடங்கியது. உண்மையிலேயே அவர்கள் பூசை செய்கின்ற நேரத்தில் தமிழிலே பேசக்கூடக்கூடாது என்ற கொள்கை உடையவர்கள் திருப்பாவையையும் திருவெம்பாவையையும் பாடுவார்களா ? பாடமாட்டார்கள் ஏனெனில் தமிழ் அவர்களுக்கு தீட்டான மொழி. சமஸ்கிருதம் மட்டுமே தேவ மொழி. ஆனால் இன்றளவும் திருப்பதியிலே நாள்தோறும் தமிழின் திருப்பாவை ஓதப்படுகிறது.

ஆச்சாரிய ?ிருதயம் எனும் 13-ம் நூற்றாண்டு வைணவ தத்துவநூல் ‘வர்ணதர்மிகள் தாசவிருத்திகள் என்று துறை வேறு இடுவித்தது ‘ என்ற நூற்பாவின் விளக்கம் ‘வர்ணாசிரம தருமத்தை மேற்கொள்ளும் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் குளிக்கும் துறையில் கூட வைணவர்கள் குளிக்கமாட்டார்கள் ‘ என்பது தான். பொதுவாக வைணவத்துள்ளே சாதி அமைப்பிற்கு எதிராகவும் வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும் ஒரு கலகக் குரல் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் குரல் பலவீனமாக இருக்கிறது. இன்றைக்கு இராமானுஜரின் சாதி எதிர்ப்புக் குரல் வைணவத்தில்ி அநேகமாகத் தோற்றுவிட்டது என்பது வேறு விஷயம்.

இவை போதாதா ? திருப்பதியை எதிர்க்க.

இதேபோன்றுதான் ‘ஞானபீடம் ‘ என்ற நாடகம் நடத்திய மாலி என்பவர் காஞ்சி சங்கராச்சாரியால் மிரட்டப்பட்டார். நாடகத்திற்குள் இருந்த செய்தி ஒரு தலித்தும் மட அதிபதியாக மாறலாம் என்பதேயாகும். அதேபோலத்தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு அமைப்பில் அனைத்துப் பெண்களும் கருவறை வரை சென்று வழிபடலாம் என்பதை ஒத்துக்கொள்ளாமல் தான் திரு. பங்காரு அவர்களை கடைசிவரை அலட்சியப்படுத்தி காஞ்சி சங்கராச்சாரி நடந்து வருகிறார்.

விதவைப் பெண்கள் தரிசு நிலம், வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள், தலித்துகள் குளித்துச் சுத்தமாய் இருப்பதில்லை எனவே அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்ற இவரின் முன்னாள் பேச்சுகள் நமக்கு நினைவிருக்கும். அவற்றிற்கும் மேலுள்ள செய்திகளுக்கும் உள்ள தொடர்பினை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

சரி. உண்மையிலேயே காஞ்சி காமகோடி மடம் என்பது இந்தியாவின் ஆன்மீகத் தலைமைக்கு உகந்தது தானா ? என்ற கேள்வியை நாம் எழுப்புவோமாயின் அதற்கு அவர்கள் சொல்கிறார்கள். சங்கராச்சாரியார் உருவாக்கிய கிழக்கு மடம், பூர்வ ஆம்னாய மடம் இதுதான் என்பதுதான் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பதில். ஆனால், ‘காஞ்சி காமகோடி பீடம் ஒரு கட்டுக்கதை ‘ என்று வாரணாசி ராஜகோபால சர்மா என்று ஒருவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். சங்கராச்சாரியாருடைய வரலாறு பற்றி குடுமியாமலை சங்கரன் என்பவரால் எழுதப்பட்ட இன்னொரு புத்தகம் வந்துள்ளது. இந்த மூன்று புத்தகங்களையும் எழுதியவர்கள் பிராமணர்கள். சிருங்கேரி மடம்தான் இவர்களுடைய மூலமடம். சிருங்கேரி மடத்தின் கிளையொன்று கும்பகோணத்திலே இருந்தது. அந்த மடத்தை இவர்கள் நிர்வகித்து வந்தார்கள். 17-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரசியல் அமைதியின்மை காரணமாக, இவர்கள் கும்பகோணத்திலிருந்து காஞ்சிக்கு வருகிறார்கள். அதாவது சிருங்கேரி மடத்தின் கிளை மடம் காஞ்சிபுரத்திற்கு வருகிறது. பின்னாளிலே இவர்கள் காமாட்சியம்மன் கோவிலை கையகப்படுத்திக் கொள்கிறார்கள். காமக்கோட்டம் என்பது காமாட்சியம்மன் கோவிலின் பெயர். சங்கராச்சாரியார் குறித்த பழைய சமஸ்கிருத நூல்களிலே காமக்கோட்டத்தைப் பற்றி குறிப்புகள் கிடையாது. காமக்கோட்டம் கோயிலைக் கைப்பற்றிக் கொண்டதினாலே தங்கள் மடத்தை இவர்கள் ‘காமகோடி பீடம் ‘ என்று சொல்கிறார்கள். ஆனால் ‘காம கோடி மடம் ‘ என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் காமகோடி பீடம் என்று சொல்கிறார்கள். மேலே சொன்ன மூன்று புத்தகங்களையும் பார்த்தாலே காஞ்சி மடம் ஆதி சங்கராச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்ட மடம் அல்ல என்பது தெரியும். அது மட்டுமல்ல. இப்பொழுதுள்ள சங்கராச்சாரியாரைத் தவிர கிளை மடத்தின் மடாதிபதிகள் எல்லாருமே ஒன்று தெலுங்கு அல்லது கன்னடம் பேசுகிறவர்களாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் சிருங்கேரி மடம், இவ்விரண்டு மொழி பேசுகிறவர்களை–தான் மடாதிபதிகளாக ஏற்றுக்கொள்ளும். பூரி சங்கராச்சாரியாரைக் கேட்டால் காஞ்சிமடத்தை ஆதி சங்கரர் நிறுவனார் என்பதை ஒத்துக்கொள்ளமாட்டார். 19-ம் நூற்றாண்டு ஆவணங்களில் கூட காஞ்சி மடாதிபதியை ‘சிக்க உடையார் ‘ (சின்ன சாமிகள்) என்றுதான் குறித்திருக்கிறார்கள். பெரிய சாமிகள் (தொட்ட உடையார்) என்பவர் சிருங்கேரி சங்கரமடத்தின் தலைவர் தான். இந்த மடத்தின் தோற்றமே ரொம்ப சிக்கலுக்குள்ளான ஒரு விஷயம்.

இதற்கு முன் நெல்லைக் கோயிலிலும் பழனி கோயிலிலும் கரூர் குடமுழுக்கிலும் முழு வெறியுடன் தன் விஷப் பற்களைக் காட்டி பாம்பு கோரத்தாண்டவம் ஆடியது நமக்கு நினைவிருக்கலாம். 8/2/2004 அன்று ஜெயேந்திரரின் தலைமையில் டாக்டர் அம்பேட்கர் மக்கள் இயக்கம் என்பதை இவர்கள் துவங்கி வைத்திருப்பதையும் நாம் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏதோ இன்றுதான் ஜெயேந்திரர் தலைமையிலான காஞ்சிமடம் இந்தியாவின் ஒட்டுமொத்தத் தலைமைப் பொறுப்பை அடையத் துடிக்கிறது என்று நீங்கள் யாரும் எண்ணிவிட வேண்டாம். கீழிருக்கும் ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டிருக்கும் டாக்டர் ே ?ட்கேவார் கடிதங்கள் என்னும் நூலின் பின்வரும் பகுதிகளைஸ் படித்துப் பாருங்கள்.

‘1962-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி பொதுவாக பாரத நாட்டு வரலாற்றிலும் சிறப்பாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். ஏனெனில் அன்று பரம பூஜனீய டாக்டர்ஜியின் நினைவுக்கோயில் அவரது தபோபூமியான ரேசம்பாக் சங்கஸ்தானத்தில் திறக்கப்பட்டது. ‘பாரத நாட்டின் சனாதனமான பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமென்ற சமாஜத்தை ஸ்தாபித்து பெரும் உபகாரத்தைச் செய்துள்ள ஸ்ரீ சேகவ பலிராம ெ ?ட்கேவார் அவர்களுக்கு நினைவுச் சின்னமாக நாகபுரியில் அந்த சங்கத்தின் நிர்வாகிகளான ஸ்ரீ கோல்வல்கர் அவர்களும் மற்றவர்களும் ஒரு கோயில் நிர்மாணித்து அதன் திறப்பு விழா அண்மையில் நடக்கவிருக்கிறது என்று அறிந்து பெருமகிழ்வடைந்தோம். இந்தக் கோயில் ஸ்ரீ ெ ?ட்கேவார் அவர்களின் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுகிய சிறப்புத் தன்மை வாய்ந்த, தியாகமான, ராஷ்ட்ர முன்னேற்றத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட வாழ்க்கையை நினைவுபடுத்தி எல்லா பாரதீயர்களையும் அந்தப் பாதையைப் பின்பற்றிச் செல்ல ஊக்குவிக்கட்டும் ‘ என்ற புனித வாழ்த்துச் செய்தி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளிடமிருந்து வந்தது. அத்துடன் ஆச்சாரிய சுவாமிகள் மங்கள அட்சதையும், விபூதி, குங்கும பிரசாதமும் அனுப்பியிருந்தார்கள். அந்த அட்சதையைத் தூவி, விபூதி குங்குமத்தால் திலகமிட்டு நினைவுக் கோயிலை பரம பூஜனீய ஸ்ரீ குருஜி அவர்கள் ஸ்ரீ ஆச்சாரிய சுவாமிகளின் சார்பாகத் திறந்து வைத்தார்கள் ‘

– ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள டாக்டர் ே ?ட்கேவார் கடிதங்கள் புத்தகத்தின் பக்கம் 133

‘மாலை ஆறரை மணிக்கு பரம பூஜனீய ஸ்ரீ குருஜி சங்கஸ்தானத்துக்கு வந்துவிட்டார். கோஷ வாத்ய முழக்கத்துடன் சரசங்கசாலக்ப்ரணாம் கொடுக்கப்பட்டது. பிறகு அவர் சமாதிக்கும் சிலைக்கும் மலர்மாலை சூட்டி ஸ்ரீ ஆசார்ய சுவாமிகள் விஷேசமாக அனுப்பிய அட்சதையைத் தூவி நினைவுக் கோயில் திறக்கப்பட்டு விட்டதாக அறிவித்தார். திரையை விலக்கியோ, நாடாவைக் கத்தரித்தோ நடத்தும் திறப்பு விழாவாக இது அமையாமல் புதிய ரீதியில் அமைந்தது. திறப்பு விழாவுக்குப் பிறகு ‘ஆத்யசர்சங்க சாலக் ப்ரணாம் ‘ கொடுக்கப்பட்டது. சத்ரபதி சிவாஜியின் பரம்பரையினரான ராஜேபகதூர் ஸ்ரீ பத்தே சிங் ராவ் பகதூர் அவர்களும் சிலைக்கு மாலையிட்டார். பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்கார்யவா ? ஸ்ரீ பையாஜி தாணியும் நாகபுரி சங்கசாலக் ஸ்ரீ பாபசாகேப் கடாடே அவர்களும் திலகமிட்டனர்.பிறகு அனைவரும் மேடைக்குச் சென்றனர். கொடியேற்றப்பட்டு ஐம்பது அறுபதாயிரம் குரல்கள் பிரார்த்தனை முழக்கின. பிறகு பிரபல இசை அமைப்பாளரான ஸ்ரீ சுதீர்பட்கே அவர்கள் ‘லோ சிரத்தாஞ்சலி ‘ என்ற பாட்டை உள்ளமுருக்கும் வகையில் பாடினார். ஆசார்ய சுவாமிகளின் செய்தியைப் படித்த பிறகு சங்கேசுவர் பீடத்தின் ஸ்ரீ சங்கராச்சாரியர் விசிஷ்டாத்வைத மதத்தின் ஆசாரியர் ஸ்ரீ ராகவாசாரியர், காசியிலிருந்த ஸ்ரீ ராஜராஜேசுவர சாஸ்திரி த்ரவிட், லோகநாயக பாபுஜி அணே, சுவாதந்திர வீர தாத்யாராவ் சாவர்க்கர், அன்றை மகாராஷ்ட்ர முதன் மந்திரி ஸ்ரீ யசுவந்தராவ் சவாண் ஆகியோரின் செய்திகளைஸ் படித்த பின்னர் அனைவரையும் ஒருங்கே உயர்த்துகிற ரீதியில் பரம பூஜனீய ஸ்ரீ குருஜி அவர்களின் சொற்பொழிவு நிகழ்ந்தது. சொற்பொழிவுக்குப் பின்னர் த்வஜப்ரணாம் செய்து கொடியிறக்கப்பட்டது. விழா முடிந்தது. விழாவுக்குப் பின்னர் அனைவரும் நினைவுக் கோயிலைக் கண்ணாரக் கண்டு களித்தனர். ‘

– ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள டாக்டர் ே ?ட்கேவார் கடிதங்கள் புத்தகத்தின் பக்கம் 135-135

இந்த செய்திக்குள்ளூடாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. ஏறக்குறைய இதே காலத்தில் வி.எச்.பி என்னும் விஸ்வஇந்து பரிஷத் துவங்குவதற்கு காரணமான சுவாமி சின்மயானந்தா, மேலே குறிப்பிட்ட அவர்களின் செய்தியில் உள்ள பல்வேறு மடத் தலைவர்கள் நாடெங்கும் பரவியிருக்கும் அவர்களின் வலைப்பின்னலில் உள்ள பல்வேறு மடத்தலைவர்கள் அனைவரையும் விடுத்து காஞ்சி சங்கராச்சாரியை முன்னிலைப்படுத்துவதின் நோக்கம் எது ? அந்த காஞ்சி சங்கராச்சாரி இன்றைய ஜெயேந்திரர் அல்ல. மாறாக, ஏதொன்றும் பெரிய அளவில் தொல்லையில்லாததாக ஊடகங்களால் நம்ப வைக்க முயற்சிக்கப்பட்ட ‘தெய்வத்தின் குரல் ‘ சந்திரசேகர சரஸ்வதி. மேலே குறிப்பிடப்பட்ட அவர்களின் செய்தியிலுள்ள சுவாதந்திர வீர தாத்யாராவ் சாவர்க்கர் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட பின் ஆதாரங்கள் போதாததால் சந்தேகத்தின் பேரில் விடுவிக்கப்பட்ட அதே இந்துமகாசபை சாவர்கக்கர் தான். அன்று சப்தமின்றி நிகழ்ந்தது இன்று சப்தமாகவும் வெளிச்சமாகவும் நிகழ்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். நாம் நுணுக்கமாக ஆய்வு செய்யவேண்டியது ஒன்று இருக்கிறது. அது ‘கள்ளமடம் ‘ என்று அழைக்கப்பட்ட காஞ்சி சங்கர மடத்திற்கும் அந்த மடத்திற்கு முதல் முன்னுரிமை வழங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் அதன் சங்கப்பரிவாரங்களின் தொடர்புக்கும் உள்ள தத்துவ மற்றும் செயல்தந்திர பின்னணிகள்.

ஒருபுறம் சங்கபரிவாரங்கள் ஆதிவாசிகள் மத்தியில் வேலை பார்க்கின்றனர். கிராம பூசாரிகள் பேரவை என்ற அமைப்பைத் துவங்கி மேலிருந்து கீழாக சமஸ்கிருதமயமாக்கலைத் தொடர்கிறார்கள். மறுபுறம் ஜெயேந்திர வகையறாக்களின் தூய்மைவாதம். அங்கே பிறப்பின் அடிப்படையில் இனஒடுக்கல் தவறு என்றும் இந்துக்கள் அனைவரும் சமம் என்றும் ஆர்.எஸ்.எஸ். முழங்கும். இங்கே உயர்சாதி இந்து. அதிலும் குறிப்பாக உயர்சாதி ஆண் இந்துக்களுக்காக ஜெயேந்திர வகையறாக்களின் இயங்குமுறையில் அமைந்த செயல்களுக்காக காஞ்சி மடத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் கொடுக்கப்படும் அதிதீவிர முக்கியத்துவம்.

சாதீயத்தையும் வருண தர்மத்தையும் எதிர்த்த சமணத்தையும் பெளத்த மதத்தையும் தின்று தீர்த்து ஏப்பமிட்டுச் சீரணித்தபின் அவர்களுக்கு முன் இன்று இருக்கும் சவால் சாதிகளை ஏற்றுக் கொண்டாலும் பார்ப்பனத் தலைமையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் கிறித்துவ மதத்தையும் ஆதிக்கச் சாதியத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இசுலாத்தையும் எப்படி வேரறுப்பது என்பதே ஆகும். இருக்கவே இருக்கிறது வந்தேறிகள் தத்துவம். இந்து இந்திய கலாச்சார தேசியம் முன்னிருத்தப்படுகிறது. அதற்கு எதிரான சிறுபான்மையினர் தேச பக்தி இல்லாதவர்களாகவும் தேசிய உணர்வில்லாதவர்கள் எனவும் ஊடகங்களின் வாயிலான கருதுகோள்கள் கட்டவிழ்க்கப்படுகின்றன. ‘சிறுபான்மையினரின் தீவிரவாதம் ‘ என்ற கருத்து வெகுவேகமாக ஊடகங்களின் வாயிலாக பரப்பப்படுகின்றது. அதற்கு ஈடு கொடுக்க இந்து இந்திய கலாச்சார தேசிய ஒற்றுமையின் பேரில் சமஸ்கிருத மேலாண்மையை ஏற்றுக் கொண்ட தத்தம் ‘கடமைகளை மட்டும ‘ி தேச வளர்ச்சியை முன்னிட்டு செய்யவேண்டிய சாதிய அமைப்பு, அதிலும் குறிப்பாகத் தத்தம் சாதியம் குறித்த சாதியப் பெருமையுடனான கட்டமைகப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. உலகின் வரலாற்றில் எந்தவொரு பாசிச இயக்கமும் இது போன்று 79 ஆண்டுகளுக்கும் மேலாக தம் வேலைத்திட்டத்தை செயல்படுத்தி வந்ததில்லை. சிறிது சிறிதாக அதிகாரம் கைமாறி வருகிறது. இன்றைக்கு இந்துத்துவ பாசிசம் இந்திய அரசியலின் மையப்புள்ளிக்கு வந்து விட்டது.

இந்தச் சூழல் குறித்து தலித் அமைப்புகளும் சிறுபான்மையினரும் அவர்தம் அமைப்புகளும் பின்நவீனத்துவ நவீனத்துவ சமயச் சார்பற்ற சிந்தனையாளர்களும் இடதுசாரி அமைப்புகளும் தத்தம் வழியில் சிந்திக்கவும் குறைந்தபட்ச தேவைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து இயங்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. எனக்கு ஒரு காட்சி தோன்றுகிறது. தன் சின்ன முகமெங்கும் புன்னகையுடன் சின்னஞ்சிறு சிறகுகளின் அசைவில் தெறிக்கும் வண்ணங்களின் சிதறலுடன் தன் பிஞ்சுக் கரங்களை நட்புடன் ஆட்டி என்னை நோக்கி நகர்ந்து வரும் அந்தச் சிறு தேவதை. எனக்குச் சூழலின் கடும் வெம்மையையும் மீறி ஒரு குளிர்வு காத்திருப்பதாகவே தெரிகிறது. காத்திருக்கிறேன் அந்த வருடலின் மென்மையையும் இதத்தையும் எதிர்நோக்கி.

அன்புடன்

நா.இரா.குழலினி.

kuzhalini@ rediffmail.com

(கட்டுரையை அனைத்து இந்துத்துவ எதிர்ப்பு அமைப்புகளும் பயன்படுத்திக்கொள்ளலாம்)

உசாத்துணை நூல்கள்

1. நான் இந்துவல்ல நீங்கள் – யாதுமாகி பதிப்பகம்

2. இதுதான் பார்ப்பனீயம் – சிவக்குமார்

3. பிராமணமதம் – பணிக்கர்

4. தீம்தரிகிட இதழ் ஜனவரி 2004

5. குமுதம் ரிப்போர்ட்டர் 21-03-04

6. தலித் முரசு இதழ் மார்ச் 2004

7. ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள டாக்டர் ஹேட்கேவார் கடிதங்கள் தொகுப்பு

Series Navigation